இந்திய அரசியலை சமூகப் பதற்ற அரசியலாக பரபரப்பு அரசியலாக மாற்றுவதில் பெரும் முனைப்பு காட்டுகிறது, பிஜேபி சங்பரிவார் கூட்டம் அதிலும் மத்திய அதிகாரத்தை கைப்பற்றிய சூழலில் அவர்களின் பாசிஸ முகம் ஆர்ப்பட்டமாகத் தெரிகிறது.
நாடுகளுக்கு நாடு எல்லைப் பிரச்சனை இயல்பான ஒன்றுதான். அதனை பதற்றமாக்கி, யுத்தச் சூழலை உருவாக்கி வருகிறது பிஜேபி அரசு.
அதே போல்தான் முத்தலாக்.
இந்தியாவில் முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும், முஸ்லீம் பெண்கள் அடிமை வாழ்வு வாழ்கிறார்கள், அவர்கள் சுதந்தர வெளியில் நடமாட முடியவில்லை. இதற்கு முடிவு கட்டினால் தான் தேசிய ஒருமைப்பாடு நிலைபெறும் என்று சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையே உருவாக்கி விட்டார்கள்.
இந்தியாவில் அரசும், ஆட்சியாளரும் எதிர்கொள்ள வேண்டிய உண்மையான பிரச்சனை வேலையின்மை. ஏழை பணக்காரர்கள் இடைவெளி, அழிந்துவரும் தற்சார்புத் தொழில், மாநிலங்களின் உரிமை, கல்வி, உணவு, சுகாதாரம் எனும் வாழ்வியல் முறைமை என ஏராளமாக உண்டு. இதற்கு கொள்கைப் பூர்வமாக தீர்வுகாண முடியாத பிஜேபி பொது சிவில் சட்டம் எனக் கூறி நாட்டை திசை திருப்புகிறது.
முஸ்லீம் தனிச்சட்டங்களால் மட்டுமல்ல எந்த மதத்தின் தனிச்சட்டங்களால் பெண்கள் பாதிக்கக் கூடாது என்பது நமது நிலை. சமூக அறிவியலுக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் பொருந்தாதவைகளை முற்போக்கு உலகம் எதிர்த்தே வந்துள்ளது. ஆனால் திடீரென பிஜேபி பேசும் பெண்ணுரிமை தான் வியப்பளிக்கிறது. பெமினிசம் மிஞ்சும் பெமினிசம் பேசுகிறது பிஜேபி. பெண்கள் இல்லாத விண்ணும் மண்ணும் சொர்க்கமல்ல என பெண்ணிய பழமொழிகளை விஞ்சுகிறது பிஜேபி. லத்தின் மொழியில் பெனிமா என மூலச்சொல்லிருந்து தான் பெமினிசம் தோன்றியதாக ஆய்வுகள் கூறுகிறது. பெமினிசம் என்பது பெண்ணியம் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழில் பெண்ணியத்திற்காக பெண் விடுதலைக்காக பெரியார், அம்பேத்கர், இடதுசாரிகள் என கருத்தோட்டங்கள் துவக்கி போராடி வருகின்றனர்.
கிளார ஜெட்கின் துவங்கி, இன்று வரை பெண் உரிமைப் போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் இந்து அடிப்படைவாதிகளின் பங்கு என்ன? இன்றல்ல 1829ம் ஆண்டு இந்து விதவைகளை எரிப்பது, புதைப்பது, குழந்தைகளை பலிகொடுப்பது என்ற காட்டுமிராண்டிச் செயல்களைத் தடுக்க, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்ததும் இந்து அடிப்படைவாதிகள் தான். நாடு விடுதலை பெற்ற சூழலில் 1947ல் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இந்து சிவில் சட்டம் சம்மந்தமாகப் பரிந்துரைத்தார். இதில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் புரியலாம். சட்ட உரிமை அது. திருமணம் ஆன பெண், கணவனை விவாகரத்து செய்யலாம். இந்துப் பெண் தான் விரும்பும் பிறமத ஆடவரை மணக்கும் உரிமை. அது சட்ட உரிமை. பெண்களுக்கு சொத்தில் பங்கு. தாங்கள் விரும்பும் வழிபாட்டு தளங்களுக்குச் செல்லும் உரிமை இவ்வாறு அம்பேத்கர் பரிந்துரைத்த போது அதனை எதிர்த்ததோடு இந்து சட்டம் என்பதனை முன் மொழிந்து இந்து சட்டத்தில் எவரும் தலையிடக்கூடாது என பெரும் நிர்பந்தங்கள் செய்தவர்கள் கீழ்க் காணும் இந்துமதப் பண்டிதர்கள்,
1, கிஷண் ஜின் நியங்கர். 2, ராம் கோம் நியங்கர். 3, பாரிஷ பிதியா பங்கர். 4, சாளிசங்கர் பித்யா. 5, ஜெய்ராம் கோரி. 6, கிஷன். 7, சியாம்சுந்தர் அனைவரும் பிரபலமான பண்டிதர்கள். இதனை மனதில் கொண்டுதான் பெரியாரிடம் ஒருமுறை அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்,
“நான் பேனாவைப் பிடித்திருந்தது உண்மைதான். ஆனால் அதனை நகர்த்தியது பிராமணர்கள்” என்றார்.
நாடுகளில் பொது சிவில் சட்டம் புதிதல்ல. இது அமெரிக்காவிலும் பேசப்பட்டது. பழங்குடி செவ்விந்தியர்களுக்கும், பிரிட்டிஷ் அமெரிக்கர்களுக்கும் ஓரே முறையிலான பொது சிவில் சட்டம் பொருந்துமா? என்ற பெரும் சட்ட உரையாடலில் அது கைவிடப்பட்டது.
இந்தியாவில் மதச்சட்டங்கள் இருப்பினும் சட்டத்தின் ஆட்சி முறைதானே, நீதிமன்றத் தீர்ப்புகள் தானே? நாடாளுமன்ற ஆட்சிமுறைதானே? மத தனிச்சட்டங்கள் இதனை மீறமுடியுமா என்ன? இந்திய அரசமைப்பு சட்டத்தையே இஸ்லாம் தனிச்சட்டம் மீறுவதுபோல் பிஜேபி பேசுவது நேர்மை அற்ற முறை அல்லவா? இப்படி நாம் கூறினால் தலாக் முறைகளை நீங்கள் ஆதரிக்கிறிர்களா என்கிறார்கள். தலாக் அல்ல, எம்மதத்தையும் எந்தக் கடவுளையும் நாங்கள் ஏற்கவில்லை, ஆதரிக்கவும் இல்லை.
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம், சமூகப் பதற்றம் குறித்த அச்சம். எனவே சிறுபான்மையைப் பாதுகாப்பது பகுத்தறிவின் கடமை.
சரி பொதுசிவில் சட்டம் என்றால் மலைவாழ் மக்கள், மொழிச் சிறுபான்மை மக்கள், மதச் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் பொருந்துமா?
அவரவர் பழக்கம், பண்பாடு, தனித்தன்மைகள் வேறுபடாதா?
பல்வேறு கலாச்சார, பண்புக் கூறுகள் கொண்ட பெரும் வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைக்கும் பொதுசிவில் சட்டம் சரியாகுமா?
இந்து மதத்திலேயே வைணவர், ஸ்மார்த்தர்கள், லிங்காய்த்துகள், சைனர்கள், சைவர்கள், பழக்க வழக்கம் சாஸ்திரங்கள் வேறுபடவில்லையா? அனைவருக்கும் ஒரே கடவுள் உண்டா? அனைவருக்கும் ஒரே சிவில் பொருந்துமா?
இந்துப் பெண் முறைகளில் ஒருபக்கம் தெய்வமாக பெண்ணைப் போற்றுவது, மறுபக்கம் தாழ்விலும் தாழ்வாக இழிப்பது, பெற்று வளர்த்த பெண் விதவையானால் எங்கோ காட்டில் ஊர் பெயர் தெரியாத இடத்தில் விட்டு விட்டு ஓடும் மதம் என்ன, மதம்? இங்கு துவக்கலாமா பொதுசிவில் சட்டத்தை?
இந்து மதத்தில் தலித் பெண்களுக்கு என்ன இடம்? தலித்களுக்கு என்ன இடம்? ஒட்டு மொத்த சமூகத்தில் தான் இவர்களுக்கு என்ன இடம்? இங்கு பொது சிவில் சட்டம் துவக்கலாமா? சரி யார் இந்து? இந்து ஏன்றால் என்ன? இதற்காவது ஒரு பொது பதில் உண்டா? அம்பேத்கர் கூறுவது போல் ஜெரால்டர்களை பின்பிற்றுவோர் பார்சிகள், ஏசுநாதரை ஏற்பவர் கிருஸ்துவர், இஸ்லாம் மதத்தை ஏற்பவர் முஸ்லிம்கள். எதை வைத்து இந்து என்பது? இதற்கு ஒரே கடவுள் உண்டா? ஒரே கோட்பாடோ, சித்தாந்தமோ உண்டா?
இப்படி நாம் பேசினால் முஸ்லீம் மக்களுக்காக முஸ்லீம்களை தாஜா செய்வதாக கூறுகிறார்கள் இந்தமத வெறியர்கள். வரலாறு நெடுகிலும் பதற்றங்கள் கலவரங்களில் சிறுபான்மை மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சிறுபான்மை பக்கம் நின்று சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதுதான் அறிவுடமை, உயர்பண்பு. லெனின் ரஷ்யாவில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிறுபான்மை லாத்வியர், ஏஸ்துதோனியர் பக்கம் நின்றார். இனச்சண்டையில் அவர் பெரும்பான்மை ரஷ்யர் பக்கம் நிற்கவில்லை. காந்தி இந்து முஸ்லிம் கலவரத்தில் பெரும்பான்மை இந்துக்கள் பக்கம் நிற்கவில்லை, சிறுபான்மை முஸ்லீம் பக்கம் நின்றார்; மசூதி சென்றார்; முழங்காலிட்டார்; தொழுதார். சிறுபபன்மை மக்களை அணைப்பதும் காப்பதும்தான் அரசியல் நற்செயல், அரசியல் நேர்மையாகும்.
- மூ.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி