பொது மக்களுக்கு :

கடந்த 30 ஆண்டுகளாக நான் உங்களுடைய அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறேன். நான் உங்களுக்காக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் தனித்தொகுதி பெற்றுக் கொடுத்திருக்கிறேன். நான் உங்களுடைய குழந்தை களுக்கு கல்விக்கான முறையான சலுகைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்றைக்கு நாம் முன்னேற முடியும். இன்றைக்கு சமூகத்தில் நிலவு கின்ற கல்வி, பொருளாதார, சமூக அநீதிகளைக்களையப் போராட வேண்டியது, உங்களுடைய கடமை. இதற்காக எந்தத் தியாகத்திற்கும் - ஏன் உங்கள் இரத்தத்தைச் சிந்துவதற்கும்கூட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

தலைவர்களுக்கு :

சிலபேர் தங்கள் மாளிகைக்கு உங்களை வரவழைப்பார்கள். நீங்களும் விருப்பமாகச் செல்வீர்கள். உங்கள் சொந்த வீட்டையே நெருப்பில் எரித்துவிட்டு நீங்கள் அங்கு போகக்கூடாது. சில நாள்களில் உங்களி டத்தில் சச்சரவு வந்து உங்களை பங்களாவிலிருந்து அந்த அரசன் துரத்திவிடுவான். பிறகு நீங்கள் எங்கே போவீர்கள்? உங்களை நீங்களே அழித்துக் கொள்ள வேண்டும் என்றால் அங்கே போங்கள். அதற்காக சமூகத்திற்காக இருக்கின்ற இயக்கத்தை அழிக்காதீர்கள். எனக்கு மற்றவர்களிடமிருந்து எந்த அபாயமும் இல்லை. நம் மக்களிடம் இருந்தே எனக்கு ஆபத்து என்று எண்ணும் போதுதான் நான் வருந்துகிறேன்.

நிலமற்ற உழைப்பாளர்களுக்கு :

கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற உழைப்பாளர்களைப் பற்றி நான் பெரிதும் கவலைப்படுகிறேன். என்னால் அவர்களுக்கு அதிகமாக ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் படும் துன்பங்களையும் இடுக்கண்களையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் துன்பங்களுக்கு முதன்மை யான காரணம் அவர்கள் நிலமற்றவர்களாக இருப்பதேயாகும்.

இதனால்தான் அவர்கள் இழிவு களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள். அவர்களுக்கு என்று நிலம் இருந்தால் ஒழிய, அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள முடியாது. இந்த விடுதலைக்காக நான் போராடுவேன். இதற்கு அரசு ஏதேனும் தடைகளை உண்டாக்குமானால் இம்மக்களுக்கு நான் தலைமை தாங்குவேன். சட்டரீதியான போராட்டத்தை மேற்கொள் வேன். அவர்களுக்கு நிலம் கிடைக்கச் செய்வேன்.

தொண்டர்களுக்கு :

விரைவில் நான் புத்தர் கொள்கையைத் தழுவவுள்ளேன். புத்தம் ஒரு முற்போக்கான சமயம். புத்தம் சமத்துவம், சுதந்தரம், சகோதரத்துவம் என்கிற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இதைப் பல்லாண்டுகள் ஆழ்ந்து ஆய்வு செய்ததன் மூலம் அறிந்து கொண்டேன். மிக விரைவில் புத்த சமயத்தவனாக மாறுவேன். அப்படி மாறியபின் ஒரு தீண்டத்தகாதவனாக உங்களோடு நான் இருக்கமாட்டேன்.

ஆனால் ஓர் உண்மையான பௌத்தனாக இருந்து உங்கள் நலன்களுக்காகத் தொடர்ந்து போராடுவேன். கண்மூடித் தனமான தொண்டர்களைப் பெற்றிருப்பதை நான் விரும்பவில்லை. இந்த மாபெரும் மதத்தில் அடைக் கலம் புகவிரும்புகிறவர்கள் மட்டும் புத்த சமயத்தைத் தழுவலாம். அப்படிப்பட்ட உறுதிப்பாடுகள் மூலம் இந்த மதத்தில் இவர்கள் நீடிக்கலாம்; பௌத்தக் கோட்பாடு களைப் பின்பற்றலாம்.

பௌத்த பிக்குகளுக்கு :

பௌத்தம் ஒரு சிறந்த சமயம். இச்சமயத்தை நிறுவிய விடுதலை வீரர் புத்தர், இச்சமயத்தைப் பிரச்சாரம் செய்தார். இதன் கொள்கைகளின் சிறப்பு இயல்புகளால் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பௌத்தம் பரவிற்று.

பௌத்தம் புகழின் உச்சியை அடைந்த பிறகு கி.பி.1213இல் பௌத்தம் இந்தியாவி லிருந்து அடியோடு மறைந்தது; இதற்குப் பல கார ணங்கள் உள்ளன. பௌத்தபிக்குகள் மிக ஆடம்பர மான சுகபோகமான வாழ்க்கைக்கு ஆளாகிவிட்டமை இக்காரணங்களுள் ஒன்று.

புத்த பிக்குகள் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து பௌத்தக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்குப் பதிலாக பௌத்த மடங்களில் ஓய்வாக இருந்து கொண்டு அரசர்களைப் புகழ்ந்து நூல்களை எழுதுவதில் மூழ்கிவிட்டார்கள்.

இப்போது பௌத்தத்தைப் புனரமைப்புச் செய்வ தற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். இப்போது உள்ள பிக்குகளின் எண்ணிக் கை மிகவும் கொஞ்சம். ஆகையால் நல்லெண்ணங் கொண்ட பொது மக்கள் பௌத்தத்தைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்; அதன் ஆசாரங்களைப் பின்பற்ற வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு :

நம்முடைய சமூகத்தில் படிப்பில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. படிப்பு கிடைத்த தால் நம்மில் சிலர் உயர்ந்த நிலைக்குச் சென் றுள்ளனர். ஆனால் இந்தப் படித்தவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். அவர்கள் படித்து உயர்ந்த நிலைக்குச் சென்ற பிறகு சமூகத்திற்கு ஏதாவது தொண்டு செய்வார்கள் என்று எதிர் பார்த்தேன்.

ஆனால், நான் என்ன காண்கிறேன் என்றால், பெரும்பாலானவர்கள் சிறிய பதவியில் உள்ளவர்களாக இருந்தாலும், பெரிய பதவியில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒன்றுசேர்ந்து கொண்டு தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வதிலேயே குறியாக உள்ளார்கள். அரசு வேலைகளில் உள்ளவர்களின் கடமை என்னவென்றால், அவர்களாகவே முன்வந்து ஊதியத்தில் 20இல் ஒரு பங்கை சமூக வளர்ச் சிக்கு அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகம் முன்னேறும். இல்லையென்றால், வேலை யில் உள்ளவர்களின் குடும்பங்கள் மட்டும்தான் முன்னேறும்.

கிராமத்தில் ஒருவன் படித்திருக்கிறான் என்றால், அவனிடத்தில், இந்த சமூகம் நிறைய உழைப்பை எதிர்பார்க்கிறது. ஒரு படித்த பொது நல ஊழியர் அதை நிரூபிக்கும் வகையில் செயல் பட வேண்டும்.

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் :

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் என்னு டைய வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் படிப்பை முடித்தபின் அரசு வேலைக்குச் செல்வதை விட அவரவர்கள் கிராமத்தில் (அ) பகுதியில் அநீதி யைக் களையப் போராட வேண்டும். அதன்மூலம் அறியாமையை அகற்றப் பாடுபட வேண்டும். உன்னு டைய அடிமைத்தளையை அறித்தெறிவது என்பது சமூகத்தின் ஒட்டுமொத்த  அடிமைத் தளையை அறித் தெறிவதில்தான் உள்ளது என்பதை உணர வேண்டும்.

இன்றைக்கு என்னுடைய நிலை எப்படி இருக்கிறது என்றால், ஒரு பெரிய கொட்டகையைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு கொம்பின் நிலைபோல் உள்ளது. எப்பொழுது இந்தக் கொம்பு இல்லாமல் போய்விடுமோ என்று நான் வருத்தப்படுகிறேன். என்னால் என் உடல்நிலையைச் சரியாக வைத்துக் கொள்ள முடிய வில்லை. நான் எப்பொழுது உங்களை விட்டுப் போவேன் என்று எனக்குத் தெரியாது.

இந்த ஆதரவற்ற அனாதை மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய எந்த இளைஞ னையும் காணவில்லை. நான் நினைத்துப் பார்க் கிறேன் - நான் எவ்வளவோ உயர்ந்த படிப்புப் படித்தும் கூட சாதாரண சமையல் செய்து பாத்திரம் தேய்க்கும் பார்ப்பான்கூட என்னைத் தீண்டப்படாதவனாகவே கருதுகிறான். அப்படியிருக்கும்போது, கோடிக்கணக் கான என் சகோதரர்களுக்கு என்ன நேரும்? யாராவது சில இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து (என் னுடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டால்) நான் மனநிம்மதியோடு சாவேன்.

கடைசியாக உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது : கற்றுக்கொள்; பிறகு, நன்மையில் நம்பிக்கையுள்ளவர்களை ஒன்றுதிரட்டி, அதன் பிறகு உங்களுடைய உரிமைகளுக்காகப் போராடு! இந்த ஒரு வழியில்தான் உன்னுடைய அடிமைத் தளை அறுத்தலும் எதிர்கால விடுதலையும் நல்வாழ்வும் அடங்கி உள்ளது.

(1956 மார்ச்சு 18இல் டாக்டர் அம்பேத்கர் ஆக்ராவில் பேசியது. “தலித்வாய்ஸ்”, ஆகஸ்ட் 1-15, 1990)

தமிழாக்கம் : வாலாசா வல்லவன்

Pin It