சென்ற பத்து வருஷத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஜன கணித கணக்குப் படி இந்திய ஜனத்தொகை சுமார் 32 கோடியாகும். இப்பொழுது அதாவது 1931ல் எடுத்த ஜனக்கணிதப்படி இந்திய ஜனத்தொகை சுமார் 351/4 கோடியாகும், இவர்களில் 100க்கு 11 பெயர்களே பட்டணங்களில் வசிக்கின்ற வர்கள். பாக்கி 89 பெயர்கள் கிராமவாசிகள். 100க்கு 67பேர்கள் விவசாய ஜீவிதக்காரர்கள். பாக்கி 100 க்கு 33 பேர்கள் கூலி தொழிலும் மற்றும் பல வகை உத்தியோகம் முதலிய ஜீவிதங்களிலும் வாழ்கின்றவர்கள். ஜன சங்கையும், அவர்களது வாழ்க்கையும், ஜீவனமும் இந்நிலையில் இருக்க இனி இவர்கள் கல்வி நிலையைப் பற்றி சற்று விசாரிப்போம்.

கல்வி விகிதம்

மேல்கண்ட 1931ம் வருஷத்திய ஜன கணிதப்படி மொத்த ஜனத் தொகையில் பகுதி சமூகமாகிய ஆண் சமூகத்தில் 100க்கு 151/2 பேரும், மொத்த ஜனத்தொகையில் மற்றப்பகுதி பேர்களாகிய பெண் சமூகத்தில் 100க்கு 23/4 இரண்டே முக்கால் பேர்களுமே எழுதப் படிக்க கற்று இருக்கிறார்கள் என்று மேற்படி கணக்கு புள்ளி விபரத்தில் இருந்து தெரிகின்றது, “வாசித்திருக் கிறார்கள்” என்றால் பி.ஏ., எம்.ஏ., வாசித்தவர்கள் என்றோ, அல்லது தமிழ் முதலிய தம் தம் தாய் பாஷைகளையா தமிழாவது நன்றாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்கிறார்கள் என்றோ கருதி விடுவது ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகும். எனவே மேல் கண்ட புள்ளி விபரமானது தங்கள் தங்கள் பெயர்களை எழுதுவதற்கே, அதற்குள்ள எழுத்துக்களை வேறு ஒருவர் எழுதிக் காட்டினாலொழிய எழுத முடியாத விற்பன்னர்களையும் சேர்த்துக் கூட்டிக்கணக்கெடுத்த புள்ளி விபரமே ஆகும்.

ஆண் பெண் அடங்க மேல் கண்ட 35 1/4 கோடி ஜனங்களிலும் மேல் கண்ட மாதிரி கையெழுத்துப் போடக்கூடியவர்களையும் சேர்த்து கணக்குப் போட்டு மொத்த ஜனத்தொகை விகிதாசாரம் பார்த்தோமானால் 100க்கு 91/4 பேர்வழிகள் தான் மேற்கண்டவாறு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்னும் கணக்குக்கு வரக்கூடும்.periyar with mr radhaஆகவே இந்திய மக்களின் கல்வியறிவு 100-க்கு 91/4 பேர்வழிகள் தான் மேற்கண்டவாறு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகிறார்கள்.

இதற்குத் தான், அதாவது இந்த மக்களைக் கொண்ட நாட்டுக்கு தான் ஞானபூமி என்றும், கம்பன் காளிதாசன் வள்ளுவர் ஒளவை பிறந்த பூமி என்றும் பேசி இந்தியாவின் கல்வி ஞானத்தைப் பற்றி சதா புகழ் மாலை பாடிக் கொள்ளப்படுகின்றது.

தாழ்த்தப்பட்டார் விகிதம்

இது ஒரு புறமிருக்க இக்கல்வியின் பிரிவினையைப் பற்றி சற்று விவரித்துப் பார்ப்போம். இந்திய மக்களில் சராசரி 100க்கு 91/4 பேர்தான் கையெழுத்துப் போடத்தெரியும் என்ற கல்வி கற்றிருக்கின்றார்கள் என்றாலும் இதில் எல்லா சாதியிலும் எல்லா சமூகத்திலும் எல்லாப் பிரிவிலும் இந்த சராசரி 100க்கு 91/4 பேர் என்கின்ற கணக்கு விகிதமாவது இருக்கின்றதா என்று பார்த்தால் அந்தப்படி பார்ப்பது என்பதே ஒரு பெரிய வகுப்பு வாதமாகவும் வகுப்பு துவேஷமாகவும் தான் முடியும். அதோடுமாத்திரமல்லாமல் சற்று அழுத்திப் பேச ஆரம்பித்து விட்டோமேயானால் பிறகு அது ஒரு பெரிய தேசத்துரோகமாகவும் முடிந்து விடும். பிறகு இந்த தேசத்துரோகம் என்ற தீர்ப்புக்கு தோழர் காந்தியின் மேலொப்பமும் ஏற்பட்டு விடும். ஆனால் நாம் அதற்கு பயப்படப் போகின்றோமா? தலைக்கு மேல் போகும் வெள்ளம் ஜாண் போனா லென்ன? முழம் போனாலென்ன? ஆகவே பிரித்து கணக்குப் பார்த்தால் இந்தியாவில் உள்ள அநேக வகுப்புகளில் 100க்கு 100 பேர் தற்குறிகளாகவும் சில வகுப்புகளில் 100-க்கு 100 பேர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாய் மாத்திரமல்லாமல் பி.ஏ., எம்.ஏ., முதலிய பட்டம் பெற்ற பண்டிதர்களையும் கொண்ட வகுப்பினர்களாகவும் சமூகமாய் இருக்கிறார்கள்.

உதாரணமாக சில ஊர்களில் பார்ப்பனர்களை எடுத்துக்கொண்டால் 100-க்கு 100பேர் படித்து இருக்கிறார்கள். பல ஊர்களில் பரையர்களை எடுத்துக் கொண்டால், பள்ளர்களை எடுத்துக் கொண்டால், சக்கிலியர்களை எடுத்துக் கொண்டால் மற்றும் இது போன்ற பல தாழ்த்தப்பட்ட வகுப்புகளை எடுத்துக் கொண்டால் 100-க்கு 100-பேர் எழுத்து என்றால் ரூபாய்க்கு எத்தனை படி என்று கேட்க்கக்கூடிய தற்குறிகளாகவே இருக்கிறார்கள்.

பெண்கள்

பெண்கள் சமூகமும் அப்படியே சில சமூகத்தில் பார்ப்பனர் சமூகத்தில் சில இடங்களில் 100-க்கு நூறு பெண்கள் படித்தவர்களாகவும் அவர்கள் அல்லாத மற்ற அனேக சமூகத்தில் 100-க்கு 100 பெண்கள் எழுத்து வாசனை அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவற்றைப் பற்றி யாராவது கேட்டால் அதாவது “பார்ப்பனர் மாத்திரம் ஆணும், பெண்ணும் 100-க்கு 100 பேர் எப்படி படித்தார்கள்? பரையர்கள், பள்ளர்கள் முதலிய வகுப்பார் மாத்திரம் 100-க்கு 100பேர் ஏன் தற்குரிகளாய் இருக்கிறார்கள்” என்று கேட்டால் இதற்கு பதில் இது வகுப்பு துவேஷம் அல்லது வகுப்புவாதம் என்று சொல்லுவதைத் தவிர வேறு சமாதானம் இல்லவே இல்லை.

கொடுமை! கொடுமை!!

பார்ப்பானும், பாப்பாத்தியும் கோவணம் கட்டிக்கொண்டு பாடுபட்டு, மண்வெட்டி, தண்ணீர் பாய்ச்சி தெருவில் கல் உடைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்து படித்தார்களா? மற்றபடி பறையனும், பள்ளனும், பஞ்ச கச்சம் போட்டு பட்டு வேஷ்டி உடுத்திக்கொண்டு, மூன்று வேளை குளித்து முழுகி நகத்தில் அழுக்குப்படாமல் தெருத்திண்ணையில் உட்கார்ந்து வண்ணமே ஊரானிடமெல்லாம் கும்பிடும் காணிக்கையும் பெற்று, சாம்பலையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்து படித்தார்களா என்று யோசித்துப் பாருங்கள். பாடுபட்ட கூட்டமெல்லாம் பட்டினியாய் கிடப்பதோடு, தற்குறிகளாக இருக்கவும், பாடுபடாத கூட்டமெல்லாம் தின்று கொழுக்கவும், பி.ஏ., எம். ஏ., படித்து மாதம் 1000, 10000 கணக்காய் சம்பாதித்து, கெம்பு வைரத்தோடும், பனார்ஸ் பெங்களூர் புடவையும், பீச்சுரோட் மோட்டார் சவாரி உல்லாசமாக யிருக்கவும் எப்படி ஏற்பட்டது? என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டிய விஷயமாகும். எனவே இதைப் பற்றி பேசப் போனால் இதை சோஷியலிச மென்றோ போல்ஷவிசமென்றோ, கம்யூனிசமென்றோ சொல்லி விட்டால் போதுமா? இது கம்யூனிசமாய் இருந்தால் என்ன, அவர்கள் பாட்டனிசமான கொள்ளை கொலைகாரிசமாய் இருந்தால் என்ன? மேற்கண்டபடி நடக் கின்றதா இல்லையா என்பதும் இந்த நிலை திருத்தப்பாடடைய வேண்டுமா வேண்டாமா என்பதும் தான் இங்கு நமது கவலை.

அரசாக்ஷி யோக்கியதை

உலகத்திலேயே நாகரீக அரசாட்சி என்று பேர் வாங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து 150 வருஷ காலம் ஆன பிறகும் பார்ப்பான் 150க்கு 150 பேர் படித்திருக்கவும், பறையன் 150க்கு 150 பேர் தற்குறியாயிருக்கவும் காரணம் என்ன என்பதற்கு என்ன பதில் சொல்லக்கூடும். இப்படிக் கேட்பதை அராஜகம் என்றோ போல்ஷவிசம் என்றோ சொல்லி இனியும் ஏமாற்றவோ மிரட்டவோ முடியுமா? என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர் முதலிய “உயர்ந்த” ஜாதியார் என்பவர்கள் செய்யும் வேலையையும் அதனால் ஏற்படும் பலனையும், பறையன் முதலான ‘தாழ்ந்த’ ஜாதியார்கள் என்பவர்கள் படும்பாட்டையும் அதனால் ஏற்படும் பயனையும் சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். சோம்பேரிகள் - ஊரார் உழைப்பில் பயன் அடைபவர்கள், கொள்ளை கொள்ளையாய் சம்பாதிக்கவும் பொருள் சேர்க்கவும், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாய் வயிற்றிலிருந்து வரும்போதே புஸ்தகத்துடன் வரவும் தலைமுறை தலை முறையாய் படிக்கவும் தலைமுறை தலைமுறையாய் மாதம் 400, 500, 1000, 5000 வீதம் சம்பாதிக்கவும், பாடுபடுகின்றவன் கஷ்டப் பட்டு உழைப்பவன் ஏழையாகவே இருக்கவும் அவன் பிள்ளை குட்டிகள் வயிற்றிலிருந்து வரும்போதே ஏர், மண்வெட்டி, சம்மட்டியுடன் வரவும் தலைமுறை தலைமுறையாய் தற்குறியாகவே யிருக்கவும் தலைமுறை தலைமுறையாய் இருக்க இடமில்லாமல் ஒண்ட நிழல் இல்லாமல் பட்டினியினால் நோயினால் மடியவு மான நிலைமைக்கு யார் காரணம்? யார் காரணமாயிருந்தாலும் அக் காரணங்களும் காரணஸ்தர்களும் அடியோடு அழிய வேண்டாமா? அழியா விட்டாலும் ஒழிய வேண்டாமா? ஒழியாவிட்டாலும் மாற வேண்டாமா என்று கேட்கின்றோம்.

இம்மாதிரியாகக் கல்வித் துறையில் உள்ள அக்கிரமம், கொடுமை, கொலை பாதகத் தன்மை மற்றெதிலும் இல்லை என்று தைரியமாய்ச் சொல்லு வோம். பச்சையாய்ச் சொல்ல வேண்டுமானால் மாடு மேய்க்கத் தெரியாதவர்கள் எல்லாம் படிப்பு என்னும் சாக்கால் மந்திரியாகி - சட்டமெம்பராகி மாதம் 5000, 6000 ரூபாய் வீதம் சம்பளம் வாங்கிக் குடித்துக் கூத்தாடிக் கொண்டு இருப்பதும், மண் வெட்டி கூலி வேலை செய்து பயிர் செய்து அரண்மனை கட்டி கோட்டை கட்டி அரசனைக் காப்பாற்றுகின்றவர்கள் எல்லாம் படிப்பில்லை என்னும் காரணத்தால் இடுப்புக்குத் துணி போராமல் வயிற்றுக் கஞ்சி போராமல் வதைக்கப்படுவது என்பது நியாயமா? இந்நிலை அடியோடு அழிய வேண்டாததா என்று மறுபடியும் கேட்கின்றோம்.

சென்ற 10 வருஷத்திற்கு முந்தின ஜன கணிதத்தில் 100க்கு 7 பேர்கள் தான் படித்தவர்கள் இருந்தார்கள் என்று கூப்பாடு போட்டது இந்த “காருண்ய சர்க்கார் நாகரீக சர்க்கார்” காதுக்குக் கேட்கவில்லை என்று சொல்லி விட முடி யுமா? அல்லது இந்த “பொது ஜன தலைவர்கள் மகாத்மாக்கள்” காதுகளுக்கு கேட்கவில்லை என்று சொல்லிவிட முடியுமா? 10, 12 வருஷ காலமாக ஒத்துழையாமை, சுயராஜ்யக் கிளர்ச்சி, உப்பு சத்தியாக்கிரகம், பரதேசி மறியல், ஹரிஜன சேவை ஆகிய காரியங்கள் எவ்வளவு நடந்தன? எத்தனை கோடி ரூபாய்கள் இந்தக் காரியங்களுக்காக என்று வசூல் செய்து ஊரிலுள்ள சோம்பேரி கூட்டம் பெண்டு பிள்ளைகளுடன் கொள்ளை கொண்டன. ஆனால் இந்த மாதிரியான கல்வி நிலையைப் பற்றி ஏதாவது மூச்சுப் பேச்சு உண்டா என்று கேழ்க்கின்றோம்.

அது போல காருண்ய நாகரிக சர்க்காருக்கும் நல் அரசாட்சி செய்ய வேண்டும் என்ற ஆசையால் இந்திய மக்களை காப்பாற்ற தங்களால் அல்லாமல் மற்றவர்களால் முடியவே முடியாது என்ற முடிவால் செலுத்தி வந்த தர்ம நீதி ஆட்சியால் இந்த 10 வருஷ காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட கல்வி அறிவுஞானம் எவ்வளவு? என்பதை ஒரு கடுகளவு அறிவுள்ள நடுநிலைமை ஞானமுள்ள ஒரு மனிதன் கவனித்தால் இதைவிட கொடுங்கோலாட்சியும் இந்தத் தலைவர்கள் மகாத்மாக்கள் என்பவர்களை விட ஏழை மக்கள் துரோகிகளும் உலகத்தில் வேறெங்காவது இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேள்க்கின்றோம்.

அர்த்தமற்ற உப்பு சத்தியாக்கிரகத்திலும் சூட்சி நிறைந்த கோவில் நுழைவிலும் தான் கவலை இருக்கின்றதே தவிர அதைப் பற்றிய விளம்பரங்களே விஷத்தைப் போல் மக்கள் மனத்தில் புகுத்தப்படுகின்றதே தவிர இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவைப் பற்றி பேசப்படுகின்றதா? அதற்காக ஒரு கடுகளவு கவலை கொள்ளப்படுகின்றதா என்று பாருங்கள். இதன் கருத்தென்ன? எந்தக் காரணத்தாலாவது உலகில் 100க்கு 90 மூடர்கள் எழுத்து வாசனை அற்ற பாமரர்கள் இருந்தால் தான் 100க்கு 10 வீதமாவது அயோக்கியர்கள், சோம்பேரிகள், பேராசைக்காரர்கள், ஊரார் உழைப்பில் வயிர் வளர்ப்பவர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், சக்ரவர்த்திகள், ஜமீன்தாரர்கள், மகாத்மாக்கள், சங்கராச்சாரிகள், பண்டார சன்னதிகள், புரோகிதர்கள், குருமார்கள் முதலாகிய பகல் கொள்ளைக் கூட்டம் வாழ முடியும் என்பதேயாகும். ஆதலால் இந்நிலையில் மக்களுடைய கல்வியைப் பற்றியோ, அறிவைப் பற்றியோ, பகுத்தறியும் ஞானத்தைப் பற்றியோ பேசுவது என்பது அரசாங்கங்களுக்கும் தேசியத்திற்குமே விறோதமான காரியமாகி விடும். ஆகவே சுயமரியாதை சமதர்மக் கட்சியார் என்பவர்கள் அரசியலில் பிரவேசித்து சட்டசபைகளுக்கு போவதானால் அவர்கள் அடுத்த மூன்று வருஷக் காலத்திற்குள் கல்வித் துறையில் தாழ்த்தப்பட்டவர்களில் 100-க்கு இத்தனை வீதம் உள்ள மக்களுக்கு நன்றாய் எழுதப் படிக்க கற்றுக் கொடுப்பது என்பதாக ஒரு மூன்று வருஷத் திட்டம் போட்டு அதில் பெரும்பாலும் உழைப்பதாகவும் உறுதி செய்து கொள்ள வேண்டும். கள்ளுக்கடை மறியலும், பரதேசி துணி மறியலும், கோவில் நுழைவும் பார்ப்பன காங்கிரசுக்கும் வயிற்றுப் பிழைப்பு தேசீயத்திற்கும் விட்டுவிட வேண்டியதே ஒழிய அவைகள் இந்தக் கல்விக் கொடுமையைவிட பிரமாதமான காரியமல்ல. ஆகையால் இவ்விஷயத்திற்கு இப் போதே ஒரு திட்டம் வகித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.01.1933)

Pin It