சென்னையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொழிலாளர் இயக்கம் உருப்பெறாது என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் பார்ப்பனர்களும் அரசியல் பிழைப்புக்காரர்களும் அதைக் கைப்பற்றி தங்கள் சுயநலத்திற்கு உபயோகித்துக் கொள்ளுகின்றார்கள். தொழிலாளர்கள் இயக்கம் சென்னையில் தோன்றிய காலம் தொட்டே நாம் இந்த அபிப்பிராயம் சொல்லி வருகின்றோம்.

periyar with cadresஸ்ரீமதி பெசண்டம்மைக்கும், ஸ்ரீ சீனிவாசய்யங்காருக்கும், சிவராவுக்கும், சத்தியமூர்த்திக்கும், வரதராஜுலுக்கும் மற்றும் இவர்கள் போன்றோருக்கும் தொழிலாளர் சம்மந்தமோ தலைமை ஸ்தானமோ இருக்க வேண்டிய அவசியமென்ன என்று கேட்கின்றோம் இவர்கள் தொழிலாளர்களா? அல்லது தொழில்திரம் அறிந்தவர்களா? அல்லது தொழிலாளி போன்ற ஏழ்மை வாழ்க்கை வாழ்கின்றவர்களா? தேச மக்களை ஏமாற்றி தங்கள் தங்கள் யோக்கியதைக்குமேல் சம்பாதித்துக் கொண்டும் தங்கள் தேவைக்கும் அனுபோகத்திற்கும் மேலான வாழ்க்கை வாழ்ந்து கொண்டும் பாமர மக்களை பலிகொடுத்து வாழும் இழிதுறையான அரசியல் வாழ்வில் இருந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எப்படி ஏழைகளும் வாயில்லாப் பூச்சிகளுமான தொழிலாளர்களின் கஷ்டத்தை அறியக் கூடியவர்களாவார்கள்? எனவே இவர்களைத் தலைமையாகக் கொண்டு நடைபெற்றுவரும் தொழிலாளர் இயக்கங்களில் கலந்துள்ள தொழிலாள சகோதரர்கள் ஒன்று அறியாதவர்களாயிருக்க வேண்டும் அல்லது யோக்கியப் பொறுப்பற்றவர்களாயிருக்க வேண்டும் என்பதே நமதபிப்பிராயம்.

எம்.எஸ்.எம். தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காரை அத்தொழிலாள சங்கத்தார் ஏற்றுக் கொண்டதாக பத்திரிகைகளில் பார்த்தோம். அவரைப் பொதுத் தலைவராகக் கொண்ட தொழிலாளர் சங்கம் யோக்கியமானதாக இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். ஸ்ரீசீனிவாசய்யங்காருக்கும் எம். எஸ். எம். தொழிலாளர் சங்கத்திற்கும் என்ன சம்மந்தம் அல்லது என்ன கவலை என்பதை பொதுமக்கள் யோசித்துப் பார்த்தால் தொழிலாளர்களின் சக்தியும் யோக்கியதையும் யாருக்கும் விளங்காமல் போகாது.

வேலையில்லாத் தொழிலாளர் மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு கூட்டி அம்மகாநாட்டுக்கு ஸ்ரீமான் வரதராஜூலு தலைமை வகித்தாராம். வேலையில்லாதவர்களுக்கும் ஸ்ரீ வரதராஜுலுக்கும் என்ன சம்மந்தம். வேலையில்லாத மக்கள் பெரும்பான்மையும் பார்ப்பனரல்லாதாராகவே இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீவரதராஜுலுவின் ஆதிக்கத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகை ஆபீசிலோ ஒருவன் இடறி விழுந்தால் பார்ப்பனர் மீதுதான் விழவேண்டும் என்கின்ற மாதிரியில் அவ்வளவு அதிகமாகப் பார்ப்பனர்களாகவே நியமித்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீமதி பெசண்டம்மைக்கும் தொழிலாளர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? நாட்டில் நூற்றுக்கு தொண்ணூறு பெயர்கள் தொழிலாளர்களாயிருக்கின்றார்கள். ஸ்ரீமதி பெசண்டம்மையார் தயாரித்து இருக்கும் சுயராஜ்யத் திட்டத்தில் பொறுப்புள்ள ஸ்தானங்களுக்கெல்லாம் மிகுந்த பணக்காரருக்கும் பெரிய படிப்பாளிகளுக்கும் ஓட்டு இருக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறார்களே ஒழிய தொழிலாளிக்கு ஓட்டோ பிரதிநிதித்துவமோ இருக்கும்படி எழுதவே இல்லை. தவிர ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் ஆகியவர்கள் தயாரித்த சுயராஜ்ஜியத் திட்டத்திலும் படிப்பாளிகளுக்கு ஓட்டுரிமை அதிகமாயிருக்கின்றதே தவிர வரி செலுத்துவோருக்கு ஓட்டுரிமை சரியானபடி இல்லவே இல்லை. அதிலும் தொழிலாளிகளுக்கு பிரதிநிதித்துவமும் இல்லை. இவற்றை அவரவர்கள் வெளியாக்கி இருக்கும் மசோதா புஸ்தகத்தைப் பார்த்தால் தெரியவரும். இவைகளையெல்லாம் அனேக தொழிலாள பிரமுகர்கள் அறிந்திருந்தும் வேண்டுமென்றே சில தனிப்பட்ட தொழிலாள நபரின் சுயநலத்திற்காக இம்மாதிரி ஆசாமிகளிடம் தங்கள் தங்கள் இயக்கங்களையும் ஸ்தாபனங்களையும் அடிமைப்படுத்தி விட்டால் இம்மாதிரி தொழிலாளர் பொதுஜனங்களின் அனுதாபத்தை எப்படி எதிர்பார்க்க முடியும் என்று கேட்கின்றோம்.

எனவே தொழிலாள சகோதரர்கள் இனியாவது இம்மாதிரி பொறுப்பற்ற தலைவர்கள் கையில் சிக்கிக் கொண்டு பொதுஜனங்கள் அனுதாபத்தை இழக்காமலும் முதலாளிகள் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்த இப்பொறுப்பற்ற தலைவர்களின் நடவடிக்கைகளை ஒரு சாக்காகச் சொல்லுவதற்கில்லாமலும் இருக்கத்தக்க வண்ணம் நடக்க முயற்சித்து தொழிலாளர்கள் இயக்கம் வெற்றி பெறச் செய்வார்களா?

(குடி அரசு - கட்டுரை - 15.01.1928)

Pin It