கல்வி மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்கு வர வேண்டும் !

100 விழுக்காட்டையும் நான்கு வகுப்புகளுக்கும் பிரித்துத்தரப்பட அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் !

National Eligibility cum Entrance Test (NEET) தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு

மேற்கண்ட தொடரில் உள்ள எல்லாமே சிந்தனைக்கு உரியவை. ``இந்திய தேசம்’’ என்ற ஒன்று வெள்ளையர் வருவதற்கு முன்பு இல்லை. தகுதி, திறமை என்கிற சொற் கோவைகள் ஏமாற்றுத்தனமானவை. ``தேசியத்தகுதி’’ என்பது அதைவிட மோசடியானது. ஏன்?

இந்தியச் சமூகத்தில் வெகுமக்களாக இருக்கிற சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் தொடர்ந்து 2000 ஆண்டுகளாகக் கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டார்கள்.

பார்ப்பனர், சத்திரியர், வைசியர் மற்றும் சற்சூத்திரர் என்கிற மேல்சாதி சூத்திரர்கள் உள்ளிட்ட 17 விழுக்காடு மக்களே கல்வி உரிமை பெற்றிருந்தனர். மீதி 83 விழுக்காடு மக்கள் கல்வி மறுக்கப்பட்ட நிலையில், 17 விழுக்காடு மேல்சாதி மாணவர்கள் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்கள் மட்டுமே இத்தேசத்தில் தகுதி பெற்றவர்கள் - திறமையானவர்கள் என்று இந்திய அரசு முடிவெடுப்பது வெகு மக்களுக்கு எதிரானதாகும்.

இந்தியக் கிறித்தவர்களும், இந்திய இசுலாமியர்களும் இந்நாட்டுக்கு அந்நியர்கள் அல்லர். இந்து மதத்தில் கீழ்ச்சாதியாக இருந்து துன்பப்படாமலிருக்க வேண்டி மதமாற்றம் பெற்றவர்களே ஆவர்.

தென்னாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்கள் - தகுதி, திறமை என்கிற பேரால் மாகாண அரசின் வேலைகளிலும், மாகாண அரசின் உயர் படிப்பிலும் 1920 வரை பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுக் கிடந்தார்கள். 1927க்குப் பிறகுதான் தந்தை பெரியார், முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எஸ்.முத்தைய முதலியார் ஆகியோரின் முயற்சியால், 1928 முதல் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இசுலாமியர், கிறித்துவர், ஆதித் திராவிடர் ஆகிய 5 வகுப்புகளுக்கும் மாகாண அரசின் வேலையில் பங்கீடு தரப்பட்டது. 1940 முதல் கல்வியிலும் இந்த 5 வகுப்புகளுக்கும் இடப்பங்கீடு தரப்பட்டது.

கடந்த 90 ஆண்டுகளாகத்தான் பழைய சென்னை மாகாணப் பார்ப்பனரல்லாதாரின் நிலை இந்த இரண்டு துறைகளிலும் சொல்லும்படியான நிலையில் ஓரளவு முன்னேறி உள்ளது. இதற்கு ஒரே காரணம் நுழைவுத்தேர்வு என்கிற பேரால் தகுதி, திறமை பார்த்து மாணவர்களையும் அலுவலர்களையும் தேர்ந்தெடுக்காமல், வகுப்பு வாரியாகத் தேர்ந் தெடுத்ததுதான். வடநாட்டுப் பார்ப்பனரல்லாதார் அல்லது பிற்படுத்தப்பட்டோரின் நிலை மிகவும் பின்தங்கி இருப்பதற்குக் காரணம், வெள்ளையன் வெளியேறிய பிறகும்,  இந்திய அரசமைப்புச் சட்டம் 1950இல் நடப்புக்கு வந்த பிறகும், 1978 வரை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு கூட வழங்கப்படாததே ஆகும்.

இந்தியா முழுவதிலும் உள்ள பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் அரசியல் சட்டப்படி 1950இல்தான் வேலையில் இடஒதுக்கீடு தரப்பட்டது. இருப்பினும் மொத்தம் 25.5 விழுக்காடு மக்கள் தொகையுள்ள பட்டியல் வகுப்பினரும் பழங்குடியினரும் முதல்நிலைப் பதவிகளில், 2017இல், 17.4 விழுக்காட்டுக்கு மேல் இத்தனை ஆண்டுகளாக இன்னமும் பங்குபெற முடியவில்லை. அதேபோல் பிற்படுத்தப்பட்டவர்கள் மய்ய அரசின் கல்வியிலும் வேலையிலும் 1994 இல்தான் இடஒதுக்கீடு பெற்றனர். எல்லா மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப் பட்டோரும் 2017இல் 5.4 விழுக்காடு அளவுக்கே மய்ய அரசின் முதல்நிலைப் பதவிகளில் பங்கு பெற்று உள்ளனர். ஆனால், அவர்களின் மக்கள் தொகை 57 விழுக்காடு ஆகும்.

அதாவது, கல்வியில் சமத்துவம் அற்ற நிலை, வேலை வாய்ப்பில் சமத்துவம் அற்ற - சமச்சீர் அற்ற சமூக நிலை இன்று வரை இங்கு நிலவுகிறது. சமூகத்தில் சமத்துவமும், கல்வியில் சமத்துவ நிலையும் அடையாத வெகுமக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடியின மக்களையும், சிற்றூர்ப்புற ஏழை மக்களையும் தகுதியற்றவர்களாக ஆக்கிட ஒரு கருவியாகத்தான் நீட் தேர்வு உள்ளது என்பதை நாம் எல்லோரும் உணரவேண்டும். இதை அடியோடு ஒழிக்காமல் தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு நடத்துவது அரசமைப்புச் சட்டத்துக்கும் சமூக நீதிக்கும் வேண்டுமென்றே இந்திய அரசு இழைக்கும் அநீதியாகும். எனவே, நீட் நுழைவுத்தேர்வு ஒழிக் கப்பட வேண்டும்.

மேலும், 3.1.1977இல் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி, பொதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விரைவில் மாநில அதிகாரப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இது அரசியல் சட்டத் திருத்தப்பாடு வழியேதான் முடியக் கூடியதாகும்.

இந்தப் புரிதலுடன்தான், நாம் எல்லோரும் கருத்து வேறுபாடுகளை மறந்து தேசியத் தகுதி காண் நுழைவுத் தேர்வுத் திட்டத்தை முழுமூச்சுடன் எதிர்த்து ஒழிக்க வேண்டும். இதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்; எல்லாக் கட்சிகளும் நீட் நுழைவுத்தேர்வுத் திட்டத்தை ஒழிக்கப் போராடுவதிலும், கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்க்கக் கோருவதிலும் ஒன்றுபட்டே செயல்பட வேண்டும். நிற்க.

அரசமைப்புச் சட்டம் விதி 15(4) மற்றும் 16(4) இவற்றில் கையாளப்பட்டுள்ள சொற்கோவைகளை நாம் கவனமாக ஆய்வு செய்து, பின்கண்ட கோரிக்கைகளை இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும்  வைக்க வேண்டும்.

விதி 16(4), 1950இலேயே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது. அதில்  உள்ள சொற்கோவை யான “கசடிஅ அயமiபே யலே யீசடிஎளைiடிn” அரசு, அரசின் வேலையில் இடஒதுக்கீடு தர ``எந்த ஏற்பாட்டையும் செய்யலாம்’’ என்று உள்ளது. ``எந்த ஏற்பாடு’’ என்பதற்கு மக்கள் தொகை விகிதாசாரம் என்பதே பொருள் என்ற அடிப்படையில்தான் பட்டியல் வகுப்பினருக்கும் பழங்குடியினருக்கும் மய்ய அரசின் வேலையிலும் மாநில அரசின் வேலையிலும் விகிதாசாரப் பங்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், தந்தை பெரியாரின் 1950ஆம் ஆண்டையப் போராட்டத்தால், சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும், பட்டியல் வகுப்புகளுக்கும், பழங்குடிகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில், 2.6.1951இல், விதி 15(4) என்பது சேர்க்கப்பட்டது. அதில் உள்ள சொற் கோவையான “கசடிஅ அயமiபே யலே யீசடிஎளைiடிn” என்பது, அரசின் உயர்கல்வியில் இடஒதுக்கீடு செய்ய ``எந்தச் சிறப்பு ஏற்பாட்டையும்’’ செய்யலாம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதுவும் விகிதா சார இடப்பங்கீடு பெற வழியைக் கொண்டிருப்பதே ஆகும். எனவே, விதிகள் 15(4), 16(4), 29(2) ஆகியவற்றை - எல்லா மதங்களையும் சார்ந்த முற்பட்டோர், எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங் குடியினர் ஆகிய நான்கு வகுப்பினருக்கும் அரசுக் கல்வியிலும், வேலையிலும் அவரவர் மக்கள்தொகை விகிதாசாரப்படி இட ஒதுக்கீடு தர ஏற்றபடி திருத்தம் செய்ய வேண்டும். இது நிறை வேறிட ஏற்ற எல்லா முயற்சிகளும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும்.

அத்துடன், இந்த அரசமைப்புச் சட்டம் எழுதப்படு வதற்கு முன்னமேயே, 1946இல் பட்டியல் வகுப்பினருக்கு மட்டும் 12.5 விழுக்காடு விகிதாசாரப்படி மத்திய அரசு வேலையில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெற்றுத்தந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்து-பிற்படுத்தப்பட்டோருக்கு, சென்னை மாகாணத்தில், பெரியாரின் கோரிக்கையை ஏற்று 1947 நவம்பரில் 14 விழுக்காடு இடஒதுக்கீடு கல்வியிலும் வேலையிலும் ஓமாந்தூரார் அரசு அளித்தது. அந்த விழுக்காட்டை 1954இல் கு.காமராசர் எல்லா மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோருக்குமாக 25 விழுக்காடாக உயர்த்தினார்.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் தந்தை பெரியாரின் கோரிக் கையை ஏற்று எல்லா மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட் டோருக்கு 31 விழுக்காடாக கலைஞர் மு.கருணாநிதி உயர்த்தினார்.

தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க ஆட்சியிடம் 19.8.1979இல் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட் டோருக்கு உள்ள இடஒதுக்கீட்டினை 60 விழுக்காடாக உயர்த்திடக் கோரிக்கை வைத்து, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பெரியார் சமஉரிமைக் கழகமும் (மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடை மைக் கட்சி), அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் முயன்று, 1.2.1980இல் 50 விழுக்காடு பெற்றன. அதாவது, சென்னை மாகாணத்தில், அல்லது தமிழ்நாட்டில் 1928 முதல் 1979 வரை போராடித்தான்-இன்று உள்ள நிலையை- அதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடும், பட்டியல் வகுப்பினருக்கு 18 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக் காடும் பெற முடிந்தது. இது காங்கிரசு, தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சி களின் ஆட்சியைக் கருவியாகக் கொண்டு பெறப்பட்ட சாதனையாகும்.

இப்படி ஒரு இயக்கம், மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சியின் தலைமையில் 1978இல் தொடங்கி 1991 வரையில் அனைத்திந்திய அளவில் செயல்பட்டது போல், நீட் எதிர்ப்பு இயக்கமும், விகிதாசார இடஒதுக்கீடு போராட்டமும் அனைத்திந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என விரும்பு கிறோம்.

Pin It