இஸ்க்கான்'(ISKCON)என்ற இந்து மத அமைப்பின் நிறுவனரும் தலைவருமான ஏ.சி. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா என்பவர் வெளியிட்ட பகவத் கீதையின் ரஷ்ய மொழிப் பதிப்பில் – ஆட்சேபத்திற்குரிய மத தீவிரவாதக் கருத்துகள் அடங்கியுள்ளதாகக் கூறி – அந்நூலைத் தடை செய்யக் கோரும் மனுவை சூன் 2011 இல் ரஷ்யாவின் சைபீரிய மாகாணத்தின் டோம்ஸ்க் நகரின் அரசு வழக்குரைஞர் அந்நகரின் நீதிமன்றத்தில் அளித்தார். வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவ்வழக்கு பற்றிய செய்தி 17.12. 2011 அன்று "இந்தோ – ஆசியன் நியூஸ் சர்வீஸ்' என்ற செய்தி ஊடகத்தின் மூலம் தெரிய வந்ததும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் ஊழிக்காலம் வந்துவிட்டதைப் போல பதறித் துடித்தன.
அனைத்து அரசியல் கட்சிகளும் பகவத் கீதைக்காக குரல் கொடுத்தன. பகவத் கீதையைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக சுஷ்மா ஸ்வராஜ், பிருந்தா காரத் என கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் இந்திய அரசைக் குற்றம் சாட்டினர். டிசம்பர் 19 அன்று காங்கிரஸ்,பா.ஜ.க.,இடதுசாரிகள் என அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசிற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை டிசம்பர் 21 அன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், தடையை தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தால் தடை செய்யப்படாத நிலையில் அதை மறைத்து "பகவத் கீதைக்குத் தடை' என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நாடெங்கும் தொடர் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் மற்றும் அரசதிகாரிகள் ரஷ்யாவுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தனர். மேற்கண்ட மனு டிசம்பர் 28 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
உலகில் ஏதோ ஒரு மூலையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட – இந்தியாவில் ஒரு சதவிகிதத்தினர் கூட முழுவதுமாகப் படித்திடாத – ஒரு மதநூல் அதுவும் வேறொரு நாட்டின் நீதிமன்றத்தால் தடை செய்யப்படலாம் என்ற நிலையில் மதச்சார்பற்ற இந்நாட்டின்"கூட்டு மனசாட்சி' கள் கொதித்தெழுந்தன. டிசம்பர் 17 முதல் 27 வரையிலான பத்தே நாட்களில் அவை அதில் வெற்றியும் பெற்றன.அவர்கள் அதோடு நின்றுவிடவில்லை.மேல் முறையீடு 21.03. 2012 அன்று தள்ளுபடி செய்யப்பட்டும், இதற்கு எதிராக மேலமை நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படாது என ரஷ்ய அரசின் குற்றவியல் வழக்குரைஞர் 29.05.2012 அன்று அறிக்கை வெளியிட்ட பிறகுதான் "கூட்டு மனசாட்சி' கள் ஓய்ந்தன.
ஆனால் இந்நாட்டு மக்கள் சுகாதாரத்துடன் வாழ மிகக் கொடூரமான பணிச் சூழலில் சிக்கி தங்களின் வாழ்நாளை அழித்துக் கொண்டிருக்கும் – தோட்டி, பாங்கி, வால்மீகி, மஜ்ஜாபி, சூடா, மசாபி என்றெல்லாம் அழைக்கப்படும் – இந்தியாவின் மலமள்ளும் தொழிலாளர்கள் குறித்து "கூட்டு மனசாட்சி'கள் இன்று வரை கள்ள மவுனம் காக்கின்றன.
இக்கூட்டு மனசாட்சிகளின் கள்ள மவுனத்தை அம்பலப்படுத்தும் வகையில் மலமள்ளும் தொழிலாளர்கள் குறித்து பாஷாசிங் என்ற பத்திரிகையாளர் எழுதிய நூல் "தவிர்க்கப்பட்டவர்கள்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள மலமள்ளும் தொழிலாளர்களின் வாக்குமூலங்கள் ஜாதிய சமூகத்தின் மனசாட்சியை உலுக்குகின்றன.
காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த போதும் டெண்டுல்கர் அடித்த சதத்தைப் பற்றி சிலாகித்து எழுதத் தெரிந்த ஊடகத்தின் கண்களுக்கு – தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நோய்த் தொற்று வரும் எனத் தெரிந்தும் இந்த வேலையை செய்ய நேர்ந்து அதனால் ஊனமுற்ற குழந்தையைப் பெற்றெடுத்த – மீனாவின் வலி தெரியாமல் போனதில் வியப் பொன்றும் இல்லை.
கொடுங்கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத கையால் மலமள்ளும் கொடுமையினை ஜாதி நோய் பீடித்த சமூகம் பல நூற்றாண்டுகளாக வெட்கமோ, குற்றவுணர்வோ இன்றி ஒரு குறிப்பிட்ட தலித் மக்கள் பிரிவின் மீது சுமத்தி வருகிறது. தான் பிறந்த பிறப்பின் காரணமாக இத்தொழிலில் தள்ளப்பட்டுள்ள இம்மக்களுக்கு இச்சாதிய சமூகம் அளித்திருப்பது அவமானம், வெறுப்பு, இயலாமை, வறுமை மற்றும் பிணி மட்டுமே.
அதிகாரம் பொங்கி வழியும் தலைநகர் டெல்லியில் வசிக்கும் இளம்பெண் மீனாவிற்கும்; ஜே.பி. இயக்கம் தோன்றிய பீகாரின் பாட்னாவில் வசிக்கும் குசுமிக்கும்; இந்துக்களின் நலன் பற்றி வாய் கிழியப் பேசும் மோடியின் மாநிலமான குஜராத்தின் பலியாத் கிராமத்தில் வசிக்கும் பல்லவி பென்னிற்கும்; "காம்ரேட்டுகள்' புரட்சி செய்த மேற்கு வங்காளத்தின் சிந்தாவிற்கும்; செந்தமிழ்நாட்டின் மலகொண்டையாவிற்கும்; ஆந்திராவின் நாராயணம்மாவிற்கும் இந்தத் "தொழில்' தேர்வு அல்ல; இவர்களுடைய பிறப்பின் காரணமாக இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
மொழி, பண்பாடு, இனம், மதம், புவியியல் அமைப்பு, தட்ப வெப்பநிலை போன்ற பல்வேறு காரணிகளால் பிரிந்திருந்தாலும் – காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை – இந்நாட்டு குடிமக்கள் அனைவரும் தப்பாமல் "ஜாதிமான்' களாக இருப்பதே இந்த மனிதத் தன்மையற்ற தொழில் இன்றளவும் நடைமுறையில் இருப்பதற்குக் காரணம்.
இந்தியாவின் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களால் கடந்த 69 ஆண்டுகளாக காஷ்மீரில் நடைபெற்றுவரும் விடுதலைப் போராட்டம் அனைத்து காஷ்மீரிகளையும் ஒன்றிணைத்து விடவில்லை என்பதை இந்நூல் உணர்த்துகிறது. விடுதலைக்கான குரல் காஷ்மீரெங்கும் ஒலிக்கிறது. பள்ளிச் சிறுவர்களும் கூட இந்திய எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர். ஆனால் பள்ளியில் மலமள்ளும் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டும் ஜாதிரீதியாக விலக்கியே வைக்கப்படுகின்றனர்.
இது"வாட்டல்'குழந்தை, இது "மோச்சி' குழந்தை என்ற பாகுபாடுகள் விடுதலை முழக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன. இம்மலமள்ளும் தொழிலாளர்களான மண்ணின் மாந்தர்களிடம் சக காஷ்மீரிகள் திருமண உறவு கொள்வதில்லை. இந்த இளைஞர்கள் மேற்கு வங்கம் சென்று திருமணம் முடித்து வருகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விட ஆபத்தானது எல்லை தாண்ட நிர்பந்திக்கும் இந்த ஜாதிய பயங்கரவாதம். தேசிய விடுதலைக்கான தேவை மட்டுமே ஜாதியை ஒழித்துவிடுவதில்லை என்பதே காஷ்மீர் நமக்குச் சொல்லும் பாடம். தமிழ்த் தேசியம் முகிழ்த்தெழும் போது ஜாதி தானாகவே மறைந்து போகும் என முழங்குபவர்கள் ஒரு முறையேனும் இந்நூலை வாசிக்க வேண்டும்.
அமெரிக்க, அய்ரோப்பிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அடுத்த நொடியே இந்தியாவில் கால் பதிக்கின்றன. ஆனால் மேற்கத்திய உலகம் கழிவறை என்றால் என்னவென்றே அறியாதிருந்த 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கழிவறைகள் கட்டி, அவற்றைக் கழிவுநீர்க் கால்வாயுடன் இணைத்த தொழில் நுட்பம் (சிந்து சமவெளி நாகரிகம்) இங்கு வெகு வேகமாக பின்னோக்கிச் சென்று கையால் மலமள்ளும் அவலத்தை அடைந்துள்ளது.
சாலையில் ஒரு குப்பை லாரி சென்றாலே தன் மூக்கைப் பொத்திக்கொண்டு தள்ளிச் செல்லும் மக்கள், அதே குப்பை லாரியின் பின்னால் வெறும் கால்சட்டையுடன் அமர்ந்து பயணிக்கும் ஒரு துப்புரவுத் தொழிலாளியையோ, அரை நிர்வாணக் கோலத்தில் மலக்குழியில் இறங்கும் மனிதனையோ ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை. "இந்த வேலையை நான் செய்ய வேண்டியதில்லை; இதைச் செய்வதற்கு குறிப்பிட்ட ஜாதி உள்ளது' என எவ்விதக் குற்றவுணர்வு மின்றி இச்சமூகத்தில் நிலைப்பெற்றிருக்கும் ஜாதியச் சிந்தனையே இதற்குக் காரணம்.
இதே சிந்தனைதான் " மகாத்மா' காந்தியை பின்வருமாறு சொல்ல வைத்தது: ""நான் விரும்பும் பாங்கி எப்படியிருக்க வேண்டும் என்றால், அவர் நாள்தோறும் தன் தொழிலை (மலம் அள்ளுவது) செவ்வனே செய்து முடிப்பதுடன் மக்கள் மலம் கழிக்கும் இடத்திற்குச் சென்று மலத்தையும் சிறுநீரையும் உற்று நோக்கி சம்பந்தப்பட்டவருக்கு என்ன நோய் இருக்கிறது என தக்க சமயத்தில் சொல்லி எச்சரிக்கை செய்ய வேண்டும்.'' உலர் கழிவறைகளை உடைத்தெறிந்த நாராயணம்மாவிடமிருந்து காந்திக்கு ஆவேசமாகப் பதில் வருகிறது: ""ஒருமுறையேனும் மலக்கூடையைச் சுமக்காதவரிடமிருந்துதான் இத்தகைய பேச்சுகள் வரும்.''
இச்சிந்தனை, "வர்க்கப் புரட்சியாளர்'களையும் விட்டு வைக்கவில்லை. இந்திய ரயில்வே துறையின் ஒப்பந்த மற்றும் நிரந்தரப்பணியாளர்கள் இன்றும் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ரயில் நிலையங்கள் மற்றும் இருப்புப்பாதைகளில் உள்ள மலத்தை அப்புறப்படுத்துகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்னக ரயில்வே தொழிலாளர் அமைப்பான டி.ஆர்.இ.யு. வால் இவர்களுக்கு தகுந்த நிவாரணத்தை எளிதில் பெற்றுத்தர முடியும்.ஆனால் இதை இவர்கள் செய்வதில்லை. ஊதிய உயர்வு, பணி மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட எண்ணற்ற காரணங்களுக்காக டி.ஆர்.இ.யு. பல்வேறு போராட்டங்களை நடத்துகிறது. ஆனால், ரயில்வேயில் கையால் மலமள்ளும் முறையை ஒழிக்கக் கோரி வலுவான போராட்டத்தை இவ்வமைப்பு நடத்தவில்லை. குறைந்தபட்சம் நீதிமன்றத்தில் கூட முறையிடவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 "வாழ்வதற்கான உரிமை' யை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் "வாழ்வதற்கான உரிமை என்பது கண்ணியத்தோடு வாழ்வதற்கான உரிமையையும் உள்ளடக்கியது' என தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் இந்தியா விடுதலை பெற்று 48 ஆண்டுகள் கழிந்த பின்னரே, அதுவும் இம்மக்களின் கடும் போராட்டங்களால் – மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடை செய்யும் சட்டம் – 1993 ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டம் தமிழகத்தில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று வெளியான அரசாணை மூலமே நடை முறைக்கு வந்தது. ஆக, 1993 இல் இயற்றப்பட்ட சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாணை வெளியிடவே திராவிடக் கட்சிகளுக்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது என்பது வெட்கக்கேடானது.
முல்லைப் பெரியாறு, காவிரி, மது ஒழிப்பு என சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தலித் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இது தொடர்பாக மற்ற கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் தலித் மக்கள் பங்கெடுக்கின்றனர். பொதுப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளும் தலித் இயக்கங்களும் மனிதக்கழிவை மனிதனை வைத்து அகற்றுவதை ஒழிக்கக் கோரி இதுவரை ஒரு போராட்டத்தைக்கூட முன்னெடுக்கவில்லை. ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததியர் இயக்கங்கள் மட்டுமே இப்பிரச்சனையை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் "சூழல் இயல்' குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இயற்கை உணவு, இயற்கை வேளாண்மை, அணுக்கழிவுகள், மீத்தேன் திட்டம் என இவற்றை முன்னிறுத்தும் போராட்டங்கள், மனித இனத்தின் கண்ணியத்தை மாசுபடுத்தும் இத்தொழில் குறித்து மறந்தும் வாய்திறப்பதில்லை. மனிதக்கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட சுகாதார வசதிகளை மேம்படுத்துவது சுற்றுப்புறச்சூழலைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதைச் செய்வதற்கு குறிப்பிட்ட ஒரு ஜாதி இருக்கிறது என்கிற சிந்தனையால்தான் இப்பொதுச்சமூகம் இது குறித்து மயிரளவும் அக்கறை கொள்ள மறுக்கிறது. அணுக்கழிவை மனிதன் கையாள்வது பேரழிவை ஏற்படுத்தும் எனில், மனிதக் கழிவுகளை மனிதனைக் கொண்டு அள்ள வைப்பது பேரிழிவை ஏற்படுத்தவில்லையா?
"இந்த வேலையை நான் செய்யவேண்டியதில்லை. இதைச் செய்வதற்கு குறிப்பிட்ட ஜாதி உள்ளது ' என்ற இதே சிந்தனையால்தான் இந்தியா விடுதலை பெற்ற பொழுது தலித் மக்கள் வெளியேற பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. பிறகு யார் மலமள்ளுவார்கள்? பிரிவினையின் போதான இச்சூழலில் இம்மக்களின் இழிநிலை குறித்தும் இவர்களை மீட்க வேண்டி இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் அம்பேத்கர் பிரதமர் நேருவிற்கு கடிதம் எழுதியுள்ளார்:"பாகிஸ்தான் அரசு அதன் நிலப்பரப்பில் இருந்து பட்டியல் சாதி மக்கள் வெளியேறும் ஒவ்வொரு வழியையும் தடுக்கிறது.
நிலமற்ற தொழிலாளர்களான பட்டியல் சாதியினர், பாகிஸ்தானில் உள்ள நிலவுடைமையாளர்களுக்கு கீழ்நிலைப் பணிகளைச் செய்யவேண்டும் என்பதுதான் இதற்கு பின்னால் உள்ள காரணம் என எனக்கு தெரிகிறது. பாகிஸ்தான் அரசு குறிப்பாக, துப்புரவுப் பணியாளர்களை கைப்பற்றிக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. அவர்களை இன்றியமையாத பணிகளைச் செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்திருக்கிறது. ஒரு மாத கால முன்னறிவிப்பின்றி அவர்களை விடுவிக்க பாகிஸ்தானிய அரசு தயாராக இல்லை'' (18.12.1947).
இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று இம்மக்களை சந்தித்த அனுபவங்கள், மலமள்ளும் தொழில், அதை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்ட இம்மக்களின் சமூக நிலைமை, இயலாமை, வறுமை, வெறுப்பு மேலும் அரசு மற்றும் சமூகத்தின் அலட்சியம், இவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்த விரிவான தகவல்களை பத்திரிகையாளர் பாஷாசிங், இந்நூலில் அளித்திருக்கிறார். மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் இப்பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார் விஜயசாய்.
மனிதத் தன்மையற்ற இத்தொழிலை சாதி அமைப்பு இவர்கள் மீது திணித்த பொழுதும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் இம்மக்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் குறித்த தகவல்களையும் இம்மக்களுக்கிடையேயான உரையாடல்களின் மூலம் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார். இவை எல்லாவற்றையும் விட இம்மக்களுக்கு தங்களின் முன்னேற்றம் குறித்த நம்பிக்கை மற்றும் அதற்காக அவர்கள் நடத்தும் சளைக்காத போராட்டங்கள் குறித்து நூலாசிரியர் செய்துள்ள நேர்மையான பதிவுகள் மிக முக்கியமானவை.
சமூகப் பொறுப்பு சிறிதும் இல்லாத இந்த ஊடகங்களையோ, அரசு மற்றும் ஜாதிய சமூகத்தின் கருணையையோ இவர்கள் நம்பியிருக்கவில்லை. இந்த இழிதொழிலில் இருந்து விடுபட்டு தற்பொழுது ஈ – ரிக்ஷா ஓட்டும் மீனா இதற்கு சான்று.
அடுத்து, துப்புரவுப்பணி பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மலமள்ளும் தொழில் துப்புரவுத் தொழிலுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. துப்புரவுப்பணி என்பது வெறுமனே தெருக்கூட்டும் பணியுடன் நின்றுவிடுவதில்லை. துப்புரவுத் தொழிலாளர்களின் பணி என்பது தெருக்களை சுத்தம் செய்வது, பொது நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், மாநாடுகள் ஆகிய தருணங்களிலும் திருவிழா காலங்களிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் சுத்தம் செய்வது, கழிவுநீர் அகற்றுவது, இறந்த பறவைகள், கால்நடைகள், எலி, பூனை போன்ற சிறு பிராணிகள் முதற்கொண்டு சாலையில் அடிபட்டு சாகும் நாய்கள் வரை அனைத்தையும் அகற்றுவது, மருத்துவமனையில் மற்றும் பொது இடங்களில் இறந்த பிணங்கள், கேட்பாரற்று இறந்துவிட்டவர்களின் உடல்கள், சாலை விபத்தில் அடிபட்டு இறந்தவர்களின் உடல்களை அகற்றுவது, காவல் துறையினர் விசாரணைக்காகத் தேவைப்படும் பொழுது இறந்த பிணங்களைத் தோண்டி எடுப்பது, தெருக்களிலும் வீதிகளிலும் பொதுவாகக் காணப்படும் மனிதக்கழிவுகள், கால்நடைகள், செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளின் கழிவுகள், சேனிடரி நாப்கின்கள், அழுகிப் போன உணவுப்பொருட்கள் ஆகியவற்றை அகற்றுவது, மருத்துவமனைகளில் காணப்படும் சிரிஞ்சுகள், அகற்றப்பட்ட மனித திசுக்கள், மருந்துகள், வேதி மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை அகற்றி சுத்தம் செய்வது, கழிவுநீர்க் குழாய்கள், பாதாளச்சாக்கடை மற்றும் வீடுகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்வது போன்ற பணிகளையும் உள்ளடக்கியது. துப்புரவுப் பணியாளர்கள் அரசின் கீழ் நேரடியாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
உலர் கழிப்பறைகள் என்பவை நீரின் மூலம் கழிவுகள் வெளியேற்றப்படாத கழிவறைகள். தற்பொழுது கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள பொதுக்கழிப்பிடங்கள் கழிவுநீர்த் தொட்டியுடன் காணப்பட்டாலும் அவற்றில் முறையான தண்ணீர் வசதிகள் உள்ளவை வெகு குறைவு. இதுபோன்ற கழிப்பறைகளை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளியும் "திறந்தவெளி' கழிப்பிடங்களாக உள்ள வீதி மற்றும் பொது இடங்களையும், கோயில் திருவிழாக்கள், மாநாடுகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும் தற்காலிகக் கழிப்பிடங்களையும் அங்கே திறந்தவெளிகளில் உண்டாகும் மனிதக் கழிவுகளையும் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளியும் மலமள்ளும் தொழிலாளிதான். எனவே "கையால் மலமள்ளுபவர்' என்ற பதத்தை மேற்கண்ட பணி செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தவேண்டிய தேவை உள்ளது.
கணிப்பொறி வல்லுநர்களில் மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்வு சார்ந்த நூல்களை எழுதி கோடி கோடியாய் குவிக்கும்"சேட்டன் பகத்'துகள் உள்ள இந்நாட்டில், வஞ்சிக்கப்பட்ட இம்மக்களை சந்தித்து இந்தியாவெங்கும் அலைந்து திரிந்து முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளார் பாஷாசிங். அதனால் அம்மக்களே இவரை "தோட்டி பத்திரிகையாளர்' என அழைக்கின்றனர். அவருக்கு இதைவிட என்ன சிறப்பு இருக்க முடியும்? இம்மக்களின் துயரங்களைச் சொல்வதன் மூலம் படிக்கும் வாசகனின் கருணையைக் கோருவதாக இல்லாமல் இம்மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்காக வாசகனை உலுக்குவதாக உள்ளது இந்நூல். அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுந்த இச்சாதிய சமூகத்தின் "கூட்டு மனசாட்சி'கள், இந்நூலில் காணப்படும் வாக்குமூலங்களுக்கு என்ன பதிலை வைத்திருக்கின்றன?