தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை நான் எழுத முயற்சிப்பதாக முதன்முதலாக 22.11.1975இல் சிந்தனையாளன் ஏட்டில் எழுதினேன். இன்று 35ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பெரியார் வரலாற்று நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் அவர் வெளியிட்ட ஏடுகளிலேயே சான்றுகள் போதிய அளவில் உள்ளன. ஆயினும் அவ் ஏடுகள் எல்லாவற்றையும் நான் பெற்றிருக்கவில்லை. பெற்றுள்ள சில ஏடுகளும் போதமாட்டா. எல்லா ஏடுகளும் உள்ள இடத்துக்கு நான் சென்று அவற்றைப் பயன்படுத்தவும் வாய்ப்பில்லை இது பெரிய குறைபாடு.

பெரியாரும் திராவிட இயக்கத்தினரும் வெளியிட்ட ஏடுகளை அன்னியில் மற்றவர்கள் வெளியிட்ட நாளேடுகள், கிழமை ஏடுகள், திங்களிதழ்கள், நூல்கள், இவற்றிலும் அரசு ஆவணங்களிலும் பல செய்திகள் - வாழ்க்கை வரலாற்றுக்கான குறிப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றைத் தேடுவதும், பெறுவதும், படிப்பதும், குறிப்பு எடுப்பதும் மிகவும் துன்பமானவை.

இன்று என் 86ஆவது அகவையில் காசநோய் பற்றியுள்ளது; எடை குறைந்துவிட்டது; சுறுசுறுப்புப் போதிய அளவில் இல்லை. இயக்கப்பணிகள், ஏடுகளை வெளியிடும் பணி, பெரியார் - நாகம்மை அறக்கட்டளைப் பணிகள் இவற்றுக்கு என்னாலான பங்களிப்பை நான் ஆற்ற வேண்டியுள்ளது. இவற்றுக்கு ஊடேதான், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மிக விரிவானதாக - தக்க சான்றுகளை உள்ளடக்கியதாக - ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கூடியாதாக - நிறை குறை இரண்டையும் அடக்கிக்கொண்டதாக - முதன்மையான படங்களுடன்கூடியதாக 2012இல் வெளியிட்டுவிட வேண்டுமென விரும்புகிறேன். அத்திசையை நோக்கி முயற்சிக்கிறேன்.

என் இந்தத் துன்பமான முயற்சி வெற்றியாக்கக் கைகூடிட, பெரியார் அன்பர்களும், பெரியார் கொள்கை ஆய்வாளர்களும் அவரவரால் இயன்ற வாய்ச்சொல் துணை, முயற்சித் துணை, தரவுகளைத் திரட்டித் தரும் துணை, இவற்றை மனமுவந்து நல்கிடவேண்டுகிறேன்.

Pin It