பழ. கருப்பையாவின் கட்டுரைக்கு பதில்

‘தினமணி’ 7.10.2009 வெளிவந்த ‘காலாவதி ஆகிவிட்ட இயக்கங்களின் திரிபுகள்’ என்ற கட்டுரையில் பழ. கருப்பையா, “பெரியாரின் தன்மான இயக்கம் தமிழர்களை சூத்திர நிலைகளிலிருந்து விடுவித்தது. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று பன்னூறு ஆண்டுகளாய் நிலவி வந்த இழிநிலை, பெரியாருடைய பிறப்பையே அர்ப்பணித்த ஓய்வறியாத் தொண்டால் ஒழிந்தது! இந்த அரிய பணியோடு திராவிடர் கழகத்தின் வரலாறு பணி நிறைவுற்றது” என்று எழுதியுள்ளார். பெரியாருடைய பெரும் பணியால் சாதிக் கொடுமைகள் பெருமளவு குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இன்றும் திண்ணியத்தில் சாதியின் கொடிய கரங்கள் மனிதனின் வாய்க்குள் மலத்தைத் திணிக்கிறது. பஞ்சாயத்து தலைவராக இருப்பதைப் பொறுக்காத சாதிவெறி மேலவளவில் படுகொலை செய்கிறது. கிராமத்து தேனீர் கடைகளில் இரட்டை தம்ளர் வடிவில் சாதி இருந்துகொண்டுதான் இருக்கிறது. கோவில்களில் நுழையக் கூட அனுமதிக்க சாதி தடுக்கிறது. கோவில் உள்ளே நுழைகிற தமிழனும், கர்ப்பகிரகத்திற்குள் நுழைய முடியாமல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக விடாமல் சூத்திரத் தன்மை தமிழனுடன் இன்னும் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

இவையெல்லாம் இப்படி இருந்துவிட்டுப் போகட்டும் என்று கருப்பையா விரும்புகிறாரா? நாயினும் கேடாய் தமிழன் சாதி இழிவை சுமந்து திரியட்டும் என்பதுதான் கருப்பையாவின் நோக்கமா? இந்து மதத்தின் சாதி வேறுபாடுகள் - மனிதப் பிரிவினை சகல இடங்களிலும் பரவிக் கிடப்பதை செய்தித் தாள்கள் வெளியிடுகிறதே, பழ. கருப்பையா படித்ததில்லையா? அல்லது வேறு ஏதோ மயக்கத்தில் மோன நிலையில் இருக்கிறாரா? தெரியவில்லை. பெரியாரின் தலையாய நோக்கமே சாதி ஒழிய வேண்டும் என்பதுதான். அதையொட்டியே அவரது கருத்துகளும் இயக்கமும் கடைசிவரை இருந்தது. பெரியார் இயக்கத்தின் தேவை என்பது மனிதன் சமூகத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும், அறிவிலும், மான அவமானத்திலும் சமநிலை அடையும் வரை இருந்து கொண்டே இருக்கும். மேல்மட்ட ஆதிக்க சாதி கருப்பையாவுக்கு வேண்டுமானால் இதன் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அடிமட்டத்தில் சாதி இழிவில் புழுங்கித் தவிக்கும் கருப்பனுக்கு பெரியார் இயக்கத்தின் பணி தேவைப்படுகிறது.

அது மட்டுமல்ல, தந்தை பெரியாரின் இலட்சிய இலக்கு, “திராவிட சமுதாயத்தை உலகிலுள்ள மற்ற சமுதாயத்தைப் போல மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதுதான்”. உலகிலுள்ள மற்ற சமுதாயங்களைப் போல, இனங்களைப் போல தமிழினம் முன்னேறி விட்டதா? மானமும் அறிவும் உள்ள இனமாக மாறிவிட்டதா? இல்லையே. சீக்கிய மதத்தின் இருவேறு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வெளிநாட்டில் ஒரு சீக்கிய மதத் தலைவர் கொல்லப்படுகிறார். இங்கு பஞ்சாப் மாநிலமே பற்றி எரிகிறது. ஆயிரம் கோடி அரசுப் பொருட்கள் கொளுத்தப்படுகிறது. பிரச்சினையை தீர்க்க பிரதமரே நேரடியாக தலையிட்டு பேசுகிறார். மும்பையில் பீகாரி ஒருவன் பேருந்தில் ஏறிக் கொண்டு கண்டபடி சுட்டுக் கொண்டு செல்கிறான். அவனை பிடிக்க முயன்ற மும்பை காவல் துறையினர் சுட்டு, அவன் இறந்து விடுகிறான். பீகாரி ஒருவனின் கொலைக்காக பீகார் மாநிலத்தின் அனைத்து தலைவர்களும், மக்களும் மகாராஷ்டிராவுக்கு எதிராக உடனே திரண்டெழுந்து போராடுகிறார்கள். சீக்கியருக்கு உள்ள மான உணர்ச்சி, பீகாரிக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு வந்துவிட்டதா? பழ. கருப்பையா பதில் சொல்ல வேண்டும்.

முல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ் அதிகாரிகளை அடித்து உதைத்தான் மலையாளி. அணையில் நீர் மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் கூறியதற்குப் பின்னாலும் புதிய அணை கட்டும் முயற்சியில் இருக்கும் கேரளா ஒரு பக்கம். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை விட மாட்டோம் என்றும், உரிமை கேட்டால் கர்நாடகத்தில் தமிழர்களை குடும்பத்தோடு கொளுத்திப் போட்டு, அவர்களின் சொத்துக்களை சூறையாடும் கர்நாடகா மறுபக்கம். கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக் கொடுத்ததால் மீன்பிடிக்க செல்லும் 500க்கும் மேற்பட்ட மீனவர்களை கொன்று குவித்து வருகிறது சிங்கள இனவெறி இராணுவம் இன்னொரு பக்கம். இப்படி தமிழ்நாட்டுத் தமிழர்கள் திரும்பும் பக்கமெல்லாம் தாக்கப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறான்.

இந்தக் கொடுமைகள் எல்லாம் போதாதென்று, வரலாறே கண்டிராத மனிதப் பேரவலமாக தமிழீழத்தில் தமிழ் இனத்தையே அடியோடு ஒழிக்கும் தமிழினப் படுகொலை இந்தியாவின் பக்க பலத்தோடு நடந்தேறியது. ஒரே நாளில் 50 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து கடந்த ஆறுமாத காலமாக மூன்று இலட்சம் தமிழர்கள்முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டு, சித்ரவதைக்கு உள்ளாகி மரண வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணவில்லை. இளைஞர்களின் கதியோ அதோ கதியான அவலம் தொடர்கிறது. தமிழச்சிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். வரலாற்று பக்கங்களில் இதுவரை இல்லாத இனவெறியை ராஜபக்சே தனது கொடூரங்களால் நிரப்பி வருகிறான். தன் சொந்த சகோதர உறவுகள் தினம் தினம் சித்ரவதைக்கு உள்ளாகி கசக்கி எறியப்படுவதை, செத்து மடிவதை கேட்டுக் கொண்டும், படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இன்னும் அமைதியாகவே தமிழன் இருந்து கொண்டு இருக்கிறானே? இவனுக்கு மான உணர்ச்சி வரவில்லையே! மற்ற இனங்களைப் போல இன உணர்ச்சி பொங்கவில்லையே! களிமண்ணைப் போல இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அப்படியே கிடக்கிறானே!

உரிமைக்காக, உறவுக்காக, உதவாத கட்சிகளையும், மதங்களையும், சாதிகளையும் தூக்கி எறிந்துவிட்டு தமிழனாக இவன் தலைநிமிர வேண்டாமா? தமிழ் இனத்தை தொட்டுப் பார்க்க நினைப்பவனை இவன் சுட்டெரிக்க வேண்டாமா? தமிழன் கிளர்ச்சி எழும் வரை தந்தை பெரியார் இயக்கம் தேவைப்படுகிறது. காலங்காலமாக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் தன்நிலை மறந்து, தன்னை இந்து என்றும், இந்தியன் என்றும் நம்பி, சீரழிந்து போனான். தமிழ்ச் சமூகத்தின் இழிநிலையை அடியோடு மாற்ற வந்த பெரியார் இயக்கத்தின் பணி நிறைவுற்றது என்று எழுதும் பழ. கருப்பையா, அந்தக் கட்டுரையில் சங் பரிவார் கூட்டங்களான பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ மதவெறி அமைப்புகளைப் பற்றி எழுதாது ஏன்? அவர்களின் மதவெறியாட்டங்கள் இந்நாட்டில் தொடரட்டும் என்று நினைக்கிறாரா? விடுதலைக்குப் பின் காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னார் என்பதற்காக அனைத்து இயக்கங்களையும் காலாவதி ஆகிவிட்டதா என்று எழுதும் கருப்பையா அவர்களே, காந்தி இது மட்டுமா சொன்னார், அவர் சொன்னதை எல்லாம் நீங்கள் எழுதத் தயாரா?

“கோவில்கள் விபச்சாரக் கூடங்கள்” என்றார் காந்தி. எனவே கோவில்கள் இந்நாட்டில் தேவையில்லை என்பது தானே காந்தீயக் கருத்து. அதைப் பற்றி எழுதலாமே? அவர் சொன்னபடி கோவில்களில் விபச்சாரங்கள் நடக்கிறது என்பதை சமீபத்தில் “ஜூனியர் விகடன்” படங்களுடன் வெளியிட்டு நிரூபித்து இருந்தது. கோவில் கருவறைக்குள் குருக்களே பெண்களுடன் கூடிக் குலாவி காமக் களியாட்டம் செய்வதை விளக்கமாக வெளியிட்டு இருந்ததே! இதைப் பற்றியெல்லாம் கருப்பையா அவர்கள் எழுதியிருந்தால் அவரது அரசியல் நேர்மையைப் பாராட்டலாம். அதை விடுத்து, “பெரியாரும் அண்ணாவும், காந்தி ஒழிக என்று சொல்லிக் கொண்டே வெட்கமில்லாமல் காந்தியிடம் கற்றுக் கொண்ட போராட்ட முறைகள் அல்லவா இவை” என்கிறார். தந்தை பெரியார் என்றுமே வன்முறைக்கு துணையாகவோ, ஆதரவாகவோ இருந்தது இல்லை. எத்தனையோ போராட்டங்கள் நடத்திய போதும், எதிலுமே வன்முறையை அவர் பயன்படுத்தியதில்லை. இதுதான் பெரியாரின் போராட்ட வழிமுறை.

பழ. கருப்பையா சொல்வதைப் பார்த்தால், பெரியார் இயக்கங்கள் இந்துத்துவ வெறியர்களைப் போல வன்முறையை செய்திருக்க வேண்டும் அல்லது இனியாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரா? அல்லது மத வெறியர்களைப் போல மனிதர்களை கொன்று குவிக்கும் செயலுக்குத்தான் ஆதரவளிப்பாரா? அதையொட்டித்தான் இந்துத்துவா அமைப்புகளின் செயற்பாட்டைப் பற்றி எழுதாமல் தந்திரமாக மறைத்து விட்டாரா? காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற உளவுத் துறையின் அறிக்கையை அலட்சியப்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் படுகொலைக்கு துணை போன அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு புகழ் பாடி இருக்கிறாரா? நேருவும் பட்டேலும் காந்தியின் நெறி சார்ந்த அரசியலை விட்டு அணுவளவும் மாறவில்லை என்று எழுதும் கருப்பையா அவர்களே, பட்டேலின் பணியால் என்ன நேர்ந்தது என்பதை அறிந்தோம்.

நேருவிற்கு பின்தான் காங்கிரஸ் குடும்ப கட்சியாகிவிட்டது என்கிறீர்கள். நேருவின் நெறி சார்ந்த அரசியல் என்ன? நேரு பிரதமராக இருந்த போதே நேருவின் ஆதரவுடனே இந்திரா காந்திக்கு மகுடம் சூட்டி, பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. நேருவே தனது மகளை வாரிசாக வழிநடத்தி, பயிற்சி கொடுத்து, குடும்ப அரசியலுக்கு, வாரிசு அரசியலுக்கு பாதை போட்டுக் கொடுத்தார். இதையெல்லாம் சாமர்த்தியமாக மறைக்கிறார் பழ. கருப்பையா. உண்மையை மறைத்து, தனக்கு சாதகமானவற்றை மட்டுமே வெட்கமில்லாமல், நேர்மையில்லாமல் எழுதும் பழ. கருப்பையா அவர்களுக்கு பெரியாரைப் பற்றியும், அவரது இயக்கத்தின் தேவை பற்றியும் புரிந்து கொள்ள முடியாது. அதற்கான யோக்கியதையும் அவருக்கு கிடையாது. பழ. கருப்பையாவின் நோக்கம், இலக்கு எதுவென்று எங்களுக்குப் புரிகிறது. யாரை குறி வைத்து அம்பு எய்துகிறார் என்பதும் புரிகிறது. எனவே, அவர் தன்னடைய இலக்கு யாரோ, அவரைப் பற்றி துணிந்து நேரடியாக எழுதட்டும். மாறாக போகிற போக்கில் பெரியார் இயக்கத்தைப் பற்றி எழுதுவது கண்மூடித்தனமானது, கண்டிக்கத்தக்கது.

- கா.கருமலையப்பன்

Pin It