பஞ்சமனுக்கும் சூத்திரனுக்கும் எதைக் கொடுத்தாலும் படிப்பைக் கொடுத்துவிடாதே என்பதுதான் காலங்காலமாக இந்நாட்டில் பின்பற்றப் பட்டுவரும் அரசநீதி. இந்து மன்னர்கள், சேர,சோழ, பாண்டியர்கள், இசுலாமியர்கள் பிற அயல் மொழிப் படையெடுப்பாளர்கள் காலத்தில் மட்டுமல்ல வெள்ளையர் இங்கு ஆளவந்த போதும் இது தான் நிலைமை. ஏனெனில் எல்லாக் காலங்களிலும் அரசச் சட்டமாய் இருந்தது-மனுநீதியுடன் ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் வருணாசிரம தருமந்தான்.

ஆனால் இந்தியா குடியரசான 60 ஆண்டுகளுக்குப் பின்னும் எழுத்தறிவு பெறாத மக்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு. 5ஆம் வகுப்பைத் தேறாதவர்கள் 60ரூ, எட்டாம் வகுப்பு தேறாதவர்கள் 80ரூ; 10ஆம் வகுப்பில் தோற்பவர் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். நாளை பொழுது பற்றிய நம்பிக்கையற்ற வாழ்க்கை அவர்களைக் கொண்டு வந்து தெருவில் நிறுத்துகிறது.

நேரு குடும்பத்தினர் ஆட்சியே நீண்ட காலம் இந்தியாவில் நடந்ததும் இதுதான் இன்றைய நிலைமை. கபில் சிபல் என்கிற கடைந்தெடுத்த மக்கள் நலக் கேடர்தான் இப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

1.4.2010 முதல் இந்திய அளவிற்கு 6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வருவதாக மானம் வெட்கமின்றி நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

இந்தக் கல்விச் செல்வத்தைப் பட்டியல் இன - பழங்குடி - ஒடுக்கப்பட்ட உழைப்புச்சாதி மக்களிடமிருந்து பறித்துக் கொண்டவர்கள் இக்கயவர்கள்.

தாராளமய, தனியார் மய, உலகமயச் சூழலில் இன்று குடிக்கும் தண்ணீரே வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. இந்நிலையில் கல்வியும் கடைச் சரக்காவதில் வியப்பேதும் இல்லையே!

ஒரு பக்கம் அனைவர்க்கும் கட்டாய இலவசக் கல்வி என்னும் மோசடித்திட்டம். இன்னொரு பக்கம் அந்நியக் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கு 3.5.2010 இல் நாடாளுமன்றத்தில் சட்ட வரைவு முன்மொழியப்படுதல். எள்ளளவு நேர்மையெனும் இந்திய ஆட்சியாளர்களிடம் இல்லை.

நாட்டு மக்களிடையே நால்வருணம் பிரிந்து அய்ந்தாம் வருணமாகப் பஞ்சமர்களை வைத்து இழிவுசெய்தது பார்ப்பனிய இந்து மதம். இதே போல் ஏட்டுக் கல்வியிலும் எத்தனை எத்தனையோ பிரிவினைகள், வேறுபாடுகள். நேற்றுவரை தமிழ்நாடில் 10 ஆம் வகுப்பில் பயின்ற நம் மாணவர்கள் மாநில அரசுக் கல்வி முறை, சி.பி.எஸ்.இ. கல்விமுறை, மெட்ரிக் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை, ஓரியண்டல் கல்விமுறை என்று பல்வேறு பிரிவுகளில் தேர்வெழுதிக் கொண்டிருந்தனர்.

தமிழக அரசு எல்லாக் கல்வி முறைகளுக்கும் பொதுவாகச் சமச்சீர் கல்வி முறை ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்னும் நோக்கில் 8.9.2006 அன்று டாக்டர். ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவினர் தமிழகத்தின் பல்வேறு தரப்பு அறிஞர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்து, கருத்தறிந்து அவற்றின் அடிப்படையில் 4.7.2007 அன்று தன் பரிந்துரைகளை அரசிற்கு வழங்கியது.

இந்த நாட்டில் சாராயத் தொழிலை விட அதிக வருவாய் தரும் தொழிலாக கல்விக் கடை நடத்தும் தொழில் விளங்குவதால், கல்வி வணிகர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்திற்குத் தொடக்கம் முதலே கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தக் கல்வித் திட்டம் நடைமுறைக்கு வந்தால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து போகும். அகில இந்தியப் போட்டிக்குத் தேர்வுகளுக்குச் செல்லும் தகுதியை அவர்கள் இழந்து விடுகிறார்கள் என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். ஆனாலும் தமிழக அரசு எப்படியோ சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது.

எனினும் தனியார் பள்ளிகள் மீதான அச்சம் அரசுக்கு முற்றிலுமாய் நீங்கவில்லை. மத்தியிலும் மாநிலத்திலும் அமைச்சர்களாய் உள்ள பலபேரும், பல சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றிக் கல்விக்கடை நடத்திக் காசு பண்ணுவதே இதற்கு முதன்மையான காரணமாகும்.

தனியார் பள்ளிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் முறைபற்றி ஆராய தமிழ்நாடு அரசு நீதிபதி கோவிந்தராசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. உண்மையில் அக்குழு பெற்றோர்களையும், பொதுமக்களையும் அவர்களின் இருப்பிடங்களுக்கே போய் அணுகி குறைகளை அறிந்து நியாயம் வழங்கி இருக்கவேண்டும். ஆனால் அக்குழு அப்படிச் செயல்படவில்லை.

வேலிக்கு ஒணானையே சாட்சியாக வைப்பது போல் தனியார் பள்ளி நிர்வாகிகளைத் தன் இருப்பிடத்திற்கே அழைத்துக் கருத்துக் கேட்டது. மிகப்பெரிய கல்வித் தொண்டும், சமூகச் சேவையும் செய்வதாகக் கள்ளத்தனம் செய்யும் அந்தக் காசு வணிகர்கள் கூற்றுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு நீதிபதி கோவிந்தராசன் குழு தன் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது.

அக்குழுவின் பரிந்துரைகளின்படி சிற்றூர்ப் புறங்களில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.3,500, பிற தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5,000, நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.8,000, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.9,000, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11,000 என அதிகபட்சமாகக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் எனச் சொல்லப்பட்டது.

ஆனால் பன்னெடுங்காலமாகக் கேள்வி முறையின்றிப் பகற்கொள்ளை அடித்து வந்த இக்கேடர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்கமுடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களுக்கு ஓடிப்போய் வழக்குத் தொடர்ந்தனர். இறுதியில் அவர்களுக்கு விஞ்சியது ஏமாற்றமே.

என்றாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை சட்டை செய்யவில்லை. அவர்கள் தம் மனப்போன போக்கில் மாணவர்களிடம் வசூல் கொள்ளையில் இறங்கினார்கள்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குக் கடந்த ஆண்டு ரூ.44 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. ஆனால் அதே பள்ளியில் இவ்வாண்டு ரூ.60 ஆயரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தம் பிள்ளைகளைச் சேர்க்க வரும் பெற்றோர்களிடம் “என் விருப்பத்தின் பேரில்தான் இந்தக் கட்டணத்தை செலுத்துகிறேன்” என்கிற உறுதிமொழி பெற்றுக் கொண்டு தான் மாணவர்கள் சேர்க்கப் படுகின்றனர்.

கொள்ளையர்களில் பகாசூரக் கொள்ளையர் இருப்பது போல் ஈரோடு, சேலம், நாமக்கல், இராசிபுரம், பகுதிகளில் இவர்களின் காசுவேட்டை அமர்க்களப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் 11, 12 வகுப்புகள் மட்டுமே கொண்ட பல பள்ளிகளுக்கு அரசே அங்கீகாரம் வழங்குகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் 11ஆம் வகுப்பு பாடங்களே நடத்தப்படுவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 12ஆம் வகுப்புப் பாடங்களையே நடத்தி மனப்பாடம் செய்ய வைக்கின்றனர். அவை கல்விக்கூடங்களே அல்ல. சிறைச்சாலைகள். விடுப்பு கிடையாது. பெறோர்களைப் பார்க்க முடியாது. இரண்டு ஆண்டுக்கு வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்கவும் முடியாது.

மேலும் 10ஆம் வகுப்பில் 460 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர் களுக்குத்தான் இங்கு சேர்க்கையே நடைபெறுகிறது.

தன் மகளோ, மகனோ மனிதப் பண்போடு வளர வேண்டும் என்கிற அக்கறையற்று ஒரு பொறியாளராக மருத்துவராக வரவேண்டும் என்கிற பேராசையால் உந்தப்படும் பெற்றோர்கள், செம்மறியாடுகள் போல் மந்தை மந்தையாய் இப்பாழுங்கிணறுகளில் போய்த் தம் பிள்ளைகளைத் தள்ளிவிடுகிறார்கள்.

இந்திய மக்கள் தொகையான 110 கோடிப்பேரில் 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளில் எண்ணிக்கை 22 கோடி இவர்களில் 4.6 சதவிகிதம் குழந்தைகள் அதாவது 92 இலட்சம் பேர் பள்ளிக்கூட வாயிலையே பார்த்தறியாதவர்கள். இது அரசே தரும் புள்ளிவிவரம் உண்மையில் 2 கோடிக் குழந்தைகளுக்கு இந்த நாட்டில் பள்ளிக்கூடம் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் இவர்களைப் பற்றியெல்லாம் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கோ அரசியல்வாதிகளுக்கோ கவலை இல்லை.

அரசு அதிகாரிகளோ அல்ல அரசியல்வாதிகளோ தம் பிள்ளைகளை அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் படிக்க வைப்பதில்லை. ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கில்லை. இவர்கள் படிக்க வைப்பதெல்லாம் ஆங்கில வழியில், தனியார் பள்ளிகளில். இதில் வெட்கப்பட வேண்டிய இன்னொரு செய்தி இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துக் கொண்டு தம் குழந்தைகளைத் தமிழை ஒரு பாடமொழியாகக் கூட எடுத்துப் படிக்க வைப்பதில்லை.

தமிழ்வழிக் கல்வியைத் தரமாக அளிப்பதன் மூலம் மக்களுக்கு ஆங்கில வழிக்கல்வியின் மீதுள்ள மோகத்தைக் கட்டுப்படுத்தலாம். அதைவிடுத்து அரசே ஆங்கிலவழிப் பாடப் பிரிவுகளை அதிகமாக உருவாக்குவதும், மழலையர் பள்ளிகளை அதிகமாகத் திறப்பதும் தீர்வாகாது.

மக்களுக்குத் தரமான கல்வியைத் தருவது அரசின் நீங்காக் கடமையாகும். அப்படித் தரப்படும் கல்வி எல்லா நிலையிலும் தாய்மொழியில்தான் அமைய வேண்டும் தமிழ்வழியில் படித்தவர்க்கு மட்டும்தான் அரசுவேலை என்பதை கட்டாய மாக்க வேண்டும்.

ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தேர்வுகளை எழுதுகிறார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தில் தரமான கட்டமைப்போடு இயங்கும் அரசாங்க மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி இடங்களைத் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்துவிட்டு வரும் மாணவர்களே பறித்துக் கொள்கிறார்கள்.

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இங்கே வகுப்புவாரி இடஒதுக்கீடு இருப்பதுபோலவே தொழிற்கல்வி படிப்புகளுக்கும் புதியதாக இடஒதுக்கீடு முறையைக் கொண்டுவர வேண்டும். முதல்வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் வழியில் அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்குத்தான் பெரும்பான்மையான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும். சிற்றூர்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு முன்பு சிறப்பு ஒதுக்கீடு முறை இருந்தது. அதனை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

கல்வியை மாநில அரசின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசே பிடுங்கிக் கொண்டதும், இப்போது இந்திய அளவில் எல்லா நிலை மாணவர்க்கும் பொதுவான பாடத்திட்டம் என்று அறிவித்திருப்பதும் அடித்தட்டு மக்களை மேலும் படுகுழியில் தள்ளும் பயங்கரவாதச் செயலாகும்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலிடம் இந்தியாவுக்கான மூளை இருப்பதாய்த் தெரியவில்லை. அவர் கற்றது அமெரிக்காவின் ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தின் அடிமைக்கல்வியை அல்லவா? எனவேதான் எப்போதும் மக்கள் நலனுக்குக் கேடாகவே சிந்திக்கிறார். நாடு முழுமைக்கும் மருத்துவப் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அறிவிக்கையை நடுவண் அரசு வெளியிட அணியமாக இருந்த நிலையில் தமிழ்நாட்டு நாடாளுடன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கடும் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவுசெய்துள்ளது. தமிழக முதல்வரும் உரியநேரத்தில் தலையீட்டு இந்தியத் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதியதைப் பாராட்டலாம்.

அதே நேரத்தில் நடுவண் அரசின் மூலம் தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஆபத்தும் நெருங்கி வருகிறது. நடுவண் அரசு செயல்படுத்த உள்ள அனைவர்க்கும் இடைநிலைக் கல்வி என்கிற திட்டத்தின்கீழ் மாநிலங்களின் அனைத்துப் பின்தங்கிய பகுதிகளிலும் 6 முதல் 12 வகுப்பு வரையான மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. நடப்புக் கல்வியாண்டிலேயே கல்வியில் பின்தங்கியுள்ளதால் 18 ஒன்றியங்கள் கணக்கிடப்பட்டு இங்கே 18 சமநிலைப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. இம்மாதிரிக் பள்ளிகள் அனைத்திலும் ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கும். நாளாவட்டத்தில் இந்திய ஒற்றுமை என்ற பெயரில் இந்தி மொழியும் நுழைக்கப்படலாம். ஏற்கெனவே இராஜிவ் காந்தி ஆட்சியின் போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இதுபோன்ற ‘மேட்டுக்குடிவாசிகளை’ உருவாக்கும் மாதிரிப் பள்ளிகள் என்கிற திட்டத்தை இங்கே நுழைக்கப் பார்த்தது.

கோவை செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்துள்ள தமிழக அரசு, தமிழை ஆட்சிமொழி, கல்விமொழி, நீதிமொழி, நிர்வாக மொழியாக்கக்கூடிய திட்டங்களை மளமளவெனக் கொண்டுவந்து செய்து முடிக்கவேண்டும் சமச்சீர் கல்வித்திட்டத்தில் தாய் மொழியிலான பொதுக்கல்வியை எல்லா நிலையிலும் இலவசமாக, போர்க்கால முனைப்புடன் செயற்படுத்த வேண்டும். தடைகள் உடைத்துப் பாயும் கல்வி வெள்ளம் நம் செந்தமிழ் மண்ணைச் செழிப்பாக்கும் என்பது உறுதி!

Pin It