இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர் என எந்த மதமாக இருந்தாலும், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற எந்தத் தத்துவமாக இருந்தாலும் - அந்த மதங்களையும், தத்துவங்களையும் பரப்பும் அமைப்புகள், இயக்கங்களாக இருந்தாலும் அவை பற்றி காலந்தோறும் விமர்சிப்பதையும், விவாதிப்பதையும் சமுதாய வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் வரவேற்கவே செய்வார்கள். விமர்சனங்களை ஏற்காத மதங்களும், அமைப்புகளும் காலப்போக்கில் அழிந்துவிடும். இது வரலாறு.

periyar 668சிறுபான்மையினரோடு நமது அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு, தோழர் பெரியாரின் அணுகுமுறைகளைத் தெரிந்து கொள்வது நல்லது. புத்தமதம் குறித்த விமர்சனங்களை புத்த மதச் சங்கத்தினர் அளித்த வரவேற்புக் கூட்டத்திலேயே முன்வைத்தார். சமரச சன்மார்க்க சங்கத்தையும் கூட அந்தச் சன்மார்க்க சங்கத்தினர் அளித்த பாராட்டு விழாவிலேயே கடுமையாக விமர்சித்துள்ளார். ‘இராமலிங்க சாமிகள் பாடல் திரட்டு’ என்று தனது குடி அரசு சார்பிலேயே நூல் வெளியிட்ட காலத்திலேயே, சன்மார்க்க சங்கத்தின் மீதான கடும் விமர்சனங்களையும் வைக்கிறார். அதுபோல, இஸ்லாம் மார்க்கத்தைப் பாராட்டும் விழாவிலேயே விமர்சனங்களையும் வைக்கிறார்.

“நான் இந்து மதத்தைப் பற்றியோ இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரிட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை.

பொதுவாகவே மதத்தின் தன்மையை ஏட்டில் என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில் பயனில்லை. அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள்? மக்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள்? அதனால் அந்தச் சமூகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக விஷயங்களில் இந்து மதத்தைவிட (கொள்கைகளைவிட) இஸ்லாம் மதமே (கொள்கைகளே) மேன்மையானதென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

...ஒரு மனிதன்தான் மாலை 5-00 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5-30 மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆட்சேபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை.”

என்று இஸ்லாம் மதத்தினைப் பாராட்டுகிறார். இன இழிவு நீங்க இஸ்லாமுக்கு மாறுங்கள் என்று அறிவிக்கிறார். அந்த இடத்திலேயே, அதே உரையிலேயே, இஸ்லாம் பற்றிய விமர்சனங்களையும் முன்வைக்கிறார்.

நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க்கின்றோம்.

சமாது வணக்கம், பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல விசேஷங்களும்’ சந்தனக்கூடு தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட்சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி.

ஒரு சமயம் களை முளைத்தது போல் புதிதாக தோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்டவைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவைகள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கைகள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும்.

என்று, இஸ்லாமியர்களின் முக்கியமான விழாவிலேயே, அவர்களிடமே விமர்சனத்தையும் வைத்தார். இதில் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் செய்தி என்னவென்றால், அப்படி, பெரியார் விமர்சித்தபோது, அவர் இஸ்லாமியர்களை எதிர்க்கிறார் என்றோ, இஸ்லாமியர்களுக்கு எதிரி என்றோ, திராவிடர் இயக்க - சிறுபான்மையினர் ஒருங்கிணைப்பைக் குலைக்கிறார் என்றோ எவரும் குற்றம் சாட்டவில்லை. இஸ்லாமியர்கள் எவரும் அப்படிக் கருதவில்லை. அவரது விமர்சனங்களை ஏற்றுத் தங்களைத் திருத்திக் கொண்டுள்ளார்கள் என்பதற்கும் பெரியாரின் உரையே சான்று.

“ஆனால் ஒரு விசேஷம், சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமிப் பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு முஸ்லீம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப்பட்டார்கள். அதன் பயன் இந்த வருஷம் அடியோடு அந்தப் பண்டிகை அங்கு நின்றுவிட்டது எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டிருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள்.”

- 28.07.1931 ம் நாள் திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோழர் பெரியார் தலைமையேற்று ஆற்றிய உரை. குடி அரசு - 02.08.1931

மேற்கண்ட உரையிலிருந்தும், இஸ்லாம், கிறிஸ்தவம், பெளத்தம் போன்ற மதங்களைக் குறித்து, தோழர் பெரியார் முன்வைத்த விமர்சனங்களிலிருந்தும், தோழமை நிறைந்த அணுகுமுறைகளிலிருந்தும் - அவற்றை அந்தந்த மதத்தினர் எதிர்கொண்ட முறைகளில் இருந்தும் நமது தலைமுறை பாடம் கற்க வேண்டும். திராவிடர் இயக்கத் தோழர்களும், இஸ்லாமிய அமைப்புத் தோழர்களும் நமது கடந்த கால வரலாற்றை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

பெரியாரின் ஏடுகளில் இஸ்லாமிய எழுத்தாளர்கள்

சுயமரியாதை இயக்கத்திலும், திராவிடர் கழகத்திலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், (இஸ்லாமிலிருந்து வெளியேறிவர்கள்) பணியாற்றியுள்ளனர். தோழர் பெரியாரின் குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு ஏடுகளில் ஏராளமான இஸ்லாமிய எழுத்தாளர்கள் இஸ்லாம் மதம் குறித்த கடுமையான மாற்றுக் கருத்துக்களை எழுதியுள்ளனர். இஸ்லாம் மதத்தில் நடக்க வேண்டிய மாற்றங்களைப் பற்றி மட்டுமல்லாமல், இந்து, கிறிஸ்தவ மதங்களையும் பற்றியும் கடும் விமர்சனங்களை இஸ்லாமிய எழுத்தாளர்கள் பெரியாரின் ஏடுகளில் எழுதியுள்ளனர்.

 • அ.மு.முகமத் காசிம் எழுதிய ‘கர்ப்பத் தடையும் நபிகள் நாயகமும்’ புரட்சி 24.12.34,
 • கா.அப்துல் ஹமீத் எழுதிய, ‘உண்மை சமத்துவம் எது?’ புரட்சி 31.12.33,
 • காதர் எழுதிய, ‘மதக்கொடுமை’ புரட்சி 7.1.34,
 • கொழும்பு டி.எம்.இப்ராஹிம் எழுதிய, மதவெறியால் சீரழியும் மனித சமூகம்’ புரட்சி 14.1.34,
 • ‘கொலை, களவு, விபச்சாரம், தற்கொலை நிகழ்வது ஏன்?’ புரட்சி 1.4.30,
 • ‘கடவுளும் பகுத்தறிவும்’ புரட்சி 22.4.34,
 • அலி அக்பர் எழுதிய, ‘கடவுளும், மதவாதிகளும்’ புரட்சி 14.1.34,
 • சு.பா.கு.மொஹிய்தீன் எழுதிய, ‘இஸ்லாமும் ஏழை முஸ்லீம்களின் துயரமும்’ புரட்சி 4.2.34,
 • கொழும்பு ஏ.எல்.முகமத்தமீம் எழுதிய, ‘மனித சமூக ஒற்றுமைக்கு மதம் முட்டுக்கட்டை’ புரட்சி 11.2.34,
 • ‘மதம், மதம், இஸ்லாம் மதம்’ புரட்சி 13.5.34, ‘ புரட்சியின் மூலமே இரட்சிப்பு’ புரட்சி 20.5.34,
 • எஸ்.சையது அகமது எழுதிய, ‘ ரூசோவின் சரித்திரம்’, புரட்சி 18.2.34,
 • அ.இ.ரஹ்மான் எழுதிய, ‘இஸ்லாமும் சமதர்மமும்’ புரட்சி 4.3.34,
 • எஸ்.சையது அகமது எழுதிய, ‘நாஸ்திக நாட்டு ஒழுக்கம்’ புரட்சி 18.3.34,
 • கொழும்பு எம்.கே.எம்.காதர் எழுதிய, ‘சமதர்ம உலகைக்காண யுவர்காள் வம்மின்’ புரட்சி 8.4.34,
 • ‘சமதர்மத்திற்குப் பெண்கள் விடுதலை அவசியம்’ புரட்சி 15.4.34,
 • கே.அப்துல் ஜப்பார் எழுதிய, ‘மனிதனின் பெருமையும், வறுமையும்’ புரட்சி 13.5.34,
 • ஈரோடு அப்துல்லா எழுதிய, ‘கோஷா முறை’ புரட்சி 25.3.34,
 • டி.அப்துல் சுபஹான் எழுதிய ‘நாகம்மாள் பாட்டு’

போன்ற இஸ்லாமிய எழுத்தாளர்களையும், அவர்கள் எழுதிய கட்டுரைகளையும் சான்றாகக் கூறுகிறோம்.

மேற்கண்ட எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக, குடி அரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு ஆகிய பெரியாரின் அனைத்து ஏடுகளிலும் எழுதியுள்ளனர். தோழர் வீரமணி அவர்களின் பொறுப்பில் வெளியான விடுதலை, உண்மை ஆகிய ஏடுகளிலும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். மாடர்ன் ரேசனலிஸ்ட் ஏட்டில் 1972ம் ஆண்டு ஜனவரி இதழில், மாடர்ன் ரேசனலிஸ்ட் ஏட்டின் ஆசிரியர் தோழர் வீரமணி அவர்கள், ‘வெல்ல முடியாத எல்லாம் வல்லவன்’ என்ற தலைப்பில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த, யாஹியாகானின் பக்தி குறித்து தலையங்கம் தீட்டியுள்ளார்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய ‘ரிவோல்ட்’ ஆங்கில ஏடு குறித்து, அதன் சமகாலத்தில் வெளியான மற்றொரு ஏடான ‘The Young Liberator’ என்ற ஏடு எழுதியள்ள குறிப்பைப் பாருங்கள்.

நாத்திகக் கொள்கையின் சார்பாகவும், புரோகிதத் தன்மைக்கும், ‘முல்லாவியலுக்கும் எதிராகவும், ஆற்றல் நிரம்பிய கருத்துப் பரப்பலில் ரிவோல்ட் ஈடுபட்டுள்ளது.

இஸ்லாம் குறித்து பெரியார் விமர்சனங்களை முன்வைத்த காலத்தில், ஜியாசத்’, ‘அல் ஜமயத் போன்ற உருது மொழியில் வெளியான இஸ்லாமிய ஏடுகள், பெரியாரின் சமுதாயப் புரட்சிப் பணிகளைப் பாராட்டி கட்டுரைகளை வெளியிட்டன.

சிறுபான்மையினரின் எதிர்வினைகள்

இஸ்லாம் மதம் மீது திராவிடர் இயக்கம் முன்வைத்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், அவற்றை ஆரோக்கியமான முறையில் எதிர்கொண்ட இஸ்லாமிய அமைப்புகளையும் வரலாற்றில் காணலாம். சில நேரங்களில் சிறுபான்மை மக்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகளும் வந்துள்ளன.

அன்னை நாகம்மையார் மறைந்த நேரத்தில், மலேசியா நாட்டின் கெடா (கடாரம்) மாநிலத்தில் உள்ள சுங்கை படானியில் வாழ்ந்து வந்த தமிழர்கள் சார்பில், டி அப்துல் சுபஹான் என்ற சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த தோழர், ஒரு இரங்கல் கவிதை எழுதி அதை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் கவிதையை அச்சிட்டு, விநியோகிக்கக்கூடாது என்று கூறி, சுங்கை படானியில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் நீதிமன்றத்திலும், காவல்துறையிலும் வழக்குப் பதிவு செய்தனர். அதை எதிர்த்து வாதாடி மீண்டும் நாகம்மையாரின் இரங்கல் கவிதை மக்களிடையே பரப்பப்பட்டது.

தனது ஆயுதங்களான குடி அரசு, புரட்சி போன்ற ஏடுகளுக்குத் தடை வந்தது பற்றி, ‘பகுத்தறிவு’ இதழில், ‘மதம் ஏன் ஒழிய வேண்டும்?’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார் தோழர் பெரியார்.

“கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்காகக் ‘குடி அரசு’ பத்திரிக்கை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காகப் ‘ புரட்சி’ பத்திரிக்கை நிறுத்தப்பட்டுப் போயிற்று. இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காகத் தினந்தோறும், நிமிஷந்தோறும் அடைந்து வரும் தொல்லை கணக்கில் அடங்காது”. - பகுத்தறிவு 9.9.1934

ஆம், பெரியாரின் ஆயுதங்களான ‘குடி அரசு’, ‘புரட்சி’ ஆகிய இரண்டு ஏடுகளுக்கும் தடை வந்ததே இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை விமர்சித்து எழுதியதால் தான். அப்படி இருந்தும் பெரியார் ஒருபோதும் இஸ்லாமியர்களுக்காகவோ, கிறிஸ்தவர்களுக்காகவோ போராடுவதில் சிறிதும் பின்வாங்கவில்லை. அதேசமயம் இரண்டு மதங்களின் மூடநம்பிக்கைகளையும், அறிவுக்குப் பொருந்தாத பண்பாடுகளையும் விமர்சிப்பதை நிறுத்தவும் இல்லை.

மலேசியாவில் பெரியாரும் இஸ்லாமியர்களும்

பெரியார் 1929லும், 1954லும் மலேசியா சென்று, அங்குள்ள மக்களுக்காகப் பாடுபட்டுள்ளார். இரண்டு முறையும் கடும் எதிர்ப்புகளுக்கிடையே அவரை வரவேற்று, கிராமம் கிராமமாகப் பரப்புரை செய்ய அழைத்துச் சென்றவர்கள் மலேசியா வாழ் இஸ்லாமியத் தலைவர்கள் ஆவர்.

ரிவோல்ட் ஏடு 1928லேயே தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக இஸ்லாம் பற்றிய மாற்றுக்கருத்துக்கள் எழுதப்பட்டு வந்தன. இந்து மதம் குறித்து 90 சதவீத எதிர்வினைகள் இருந்தால், கிறிஸ்தவம், இஸ்லாம் குறித்து 10 சதமாவது தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது. அப்படி எழுதிக் கொண்டிருந்த காலத்தில் 1929 - 1930ல் பெரியார் முதன்முறையாக மலேசியா செல்கிறார்.

அங்கிருந்த முக்கியப் பார்ப்பன ஏடான ‘தமிழ்நேசன்’ பெரியாரின் வருகைக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களையும், சட்டரீதியான எதிர் நடவடிகைகளையும் மேற்கொண்டு வந்தது. அங்கிருந்த இந்து மத வெறியர்கள் பினாங்கு துறைமுகத்தில் பெரியார் கால்வைத்த உடனேயே, அவரைக் கொல்லவும் பலரை ஏற்பாடு செய்திருந்தனர். இந்து, கிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் இருந்த மத வெறியர்கள் அனைவரும் ஒன்று போலவே எதிர்த்தனர்.

ஆனால், பினாங்கு துறைமுகத்திற்குப் பெரியார் சென்றடைந்தபோது, அவரை வரவேற்று நாடெங்கும் அழைத்துச் சென்ற குழுவில் முக்கியமானவர்கள் இஸ்லாமியர்கள் தான். மலேசிய அய்க்கிய இந்திய அசோசியேசனின் தலைவர் ஹானரபிள் அப்துல் காதர், மிகப்பெரும் தொழிலதிபர் ஜனாப் மகமது ராவுத்தர், ஜனாப் ஆர்.கி.மகம்மது காசிம், இஸ்லாமிய சமூக அமைப்பின் தலைவர் சீனிராவுத்தர் ஆகியோர் அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.

1940க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் பெரியாரின் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட்டுள்ளன. அவற்றைத் தலைமை தாங்கி நடத்துபவர்களில் இஸ்லாமியர்கள் முன்னின்றனர். சான்றாக, 22.9.1940ல் பினாங்கில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்தவர், பினாங்கு மாநில அரசின் இந்தியப் பிரதிநிதியாக, மிக உயர்ந்த பதவியில் இருந்த, ஹானரபிள் ஹெச்.ஹெச். அப்துல்காதிர் ஆவார்.

அந்த விழாவில், பெரியார் மலேசியா மக்களுக்கு ஆற்றிய பணிகள் பற்றி விளக்கவுரை நிகழ்த்தியவர் பனைகுளம் தமிழ்ப்பண்டிதர் எம். அப்துல் மஜீத் ஆவார். பெரியார், 1954ல் மீண்டும் பினாங்கு சென்ற போதும், மலாக்காவில் ஒரு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைச் செயல்படுத்தியவர் ஹாஜி எம்.என்.எம்.பிச்சை ஜே.பி ஆவார். பினாங்கு பகுதியில், இன்றைய 2017 காலகட்டத்திலும், மலேசியாவில் பெரியார் கருத்துக்களுக்கு ஆதரவாகவும், அதைப் பரப்பும் பணியிலும் முன்னணியில் இருப்பவர்கள் இஸ்லாமியர்களே ஆவர்.

உறவுப்பாலம்

இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்துச் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக, உறுதியாகக் குரல் கொடுத்தவர் பெரியார். அவரது சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் அப்படித்தான் இயங்கின. ஆகவே, பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் வெளியிட்ட இஸ்லாமிய மத எதிர்ப்புக் கருத்துக்களை இஸ்லாமியர்கள் ஆரோக்கியமாக எதிர்கொண்டனர். பெரியார் நம்முடைய தலைவர், அவரது இயக்கம் நம்முடைய இயக்கம் என்ற மனநிலை இஸ்லாமியர்களிடம் இருந்தது.

பெரியார் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் இந்து மதவெறி அமைப்புகளின் வளர்ச்சியானது, சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களையும், எதிர்கால வாழ்வையும் கேள்விக்குறியாக்கியது. அந்தச் சூழலில், சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக, திராவிடர் இயக்கத்தினரும், பொதுவுடைமை இயக்கத்தினரும் துணை நின்றனர். ஆனாலும் இந்த இயக்கங்களின் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை இல்லாததால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் உருவாகின.

திராவிடர் இயக்கங்களும், பொதுவுடைமை இயக்கங்களும் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவாகக் குரல் கொடுப்பதிலும், பாடுபடுவதிலும், அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் சிறிது பின்தங்கினாலும், அந்த மதச்சிறுபான்மையினரை எந்தச் சூழலிலும், எந்த இடத்திலும் எதிர்க்க வேண்டாம், அவர்களது மதங்களைக் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்ற இணக்கமான நிலையைக் கடைபிடித்தனர்.

எந்த இன, மத, வர்க்கத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்களின் உரிமைகளுக்காக சமரசமின்றிக் குரல் கொடுப்பதும் - அவர்களின் விடுதலைக்குத் தடையாக அவர்களது மத உணர்வுகள், மன உணர்வுகள் எவை வந்தாலும் அவற்றையும் எதிர்த்து நிற்பது என்ற நிலைப்பாட்டிலும் பெரியார் தெளிவாக இருந்தார்.

ஆனால், நாம் தலைகீழான நிலைப்பாடு எடுத்தோம். எந்த மக்களாக இருந்தாலும் அவர்களுக்காக அடையாளப் போராட்டங்களை மட்டும் நடத்தினோம். அவர்களின் மத, மன உணர்வுகளைக் காயப்படுத்தி விடக் கூடாது என்ற தோழமை உணர்வில், அவர்களை இறுக்கமான மதவாதிகளாகவே தொடரச் செய்து விட்டோம்.

இஸ்லாம் மட்டுமல்ல...

‘இஸ்லாம் மதத்தை மட்டுமல்ல, எந்த மதத்தையும், எந்த முற்போக்கு அமைப்பையும், எந்தப் பண்பாட்டையும், எந்த நடைமுறையையும், பழக்க வழக்கத்தையும் கேள்வி கேட்க வேண்டாம். சமுதாயம் ஓடும் திசையில் நாமும் ஓடிவிடலாம். சமுதாயம் ஓட வேண்டிய திசையைப் பற்றி நாம் அறிவுறுத்த வேண்டாம்’ என்ற நிலையை முற்போக்கு அமைப்புகள் கடைபிடிக்கின்றன.

தோழமை அமைப்புகள், கூட்டமைப்புகளின் செயல்பாடுகள் ஆகியவற்றில் முகத்தை நேருக்கு நேர் பார்க்க வேண்டுமே என்ற முகத்தாட்சண்யத்திலும் நமது அடையாளங்களை இழந்தோம். தங்களது சொந்த நட்பு, உறவு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது, அதனால் கூட்டுச் செயல்பாடுகள் சிக்கலாகிவிடக்கூடாது என்பவற்றிற்காக ‘கொள்கை ரீதியாகக் கறாரான’ நிலைப்பாடுகளை எடுக்கத் தவறினோம். பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதில் நாம் எவரும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால், பெரியாரின் அணுகுமுறையை நாம் இன்னும் நெருங்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

இஸ்லாமிய அமைப்புகளை அணுகுவதில் மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்ட சமுதாய அமைப்புகள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசிய அமைப்புகள், தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்புகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்புகள், பொதுவுடைமை இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தமிழ்ப் பண்பாடுகள், இந்துப் பண்பாடுகள் என எவற்றோடும் திராவிடர் இயக்கங்களின் அணுகுமுறை மாற வேண்டும்.

இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளையும், கொடுமைகளையும், இந்து மத அமைப்புகளின் பயங்கரவாதங்களையும், எதிர்த்துப் பலமாகப் பரப்புரை செய்கிறோம். அதேசமயம் அந்த மதத்தை அறியாமல், பின்பற்றிவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் சமரசமின்றிப் போராடுகிறோம்.

அதுபோல, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களின் மூடநம்பிக்கைகள் – பெண்ணடிமைத்தனம் - அறிவுக்கும், நடைமுறைக்கும் பொருந்தாத மதக் கோட்பாடுகள், பண்பாடுகள் ஆகியவற்றை எதிர்த்து, தயவு தாட்சண்யமின்றி எதிர்ப்பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களில் உள்ள மக்களின் உரிமைகளுக்காக உண்மையாகப் போராட வேண்டும்.

இழப்புகள் போதும்

இயற்கை உணவுப்பொருட்கள், சுதேசிப் பொருட்கள், ஆர்கானிக் உணவுகள், நாட்டு மாடு, இயற்கை விவசாயம், தடுப்பூசி எதிர்ப்பு, அலோபதி மருத்துவ எதிர்ப்பு, தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடுகள், இந்துப் பண்பாடுகள் என்பவை போன்ற பெயரில் அண்மைக்காலமாக அரங்கேறிவரும் தமிழ், இந்து, சுற்றுச்சூழல் பாசிசப் போக்குகளுக்கு எதிராக வெளிப்படையாக எதிர்வினையாற்ற வேண்டும்.

அப்படிப் பேசுவது தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும், பொதுவுடைமை அமைப்புகளுக்கும் எதிராகப் போய்விடுமோ என்ற மனநிலையைக் கடந்து, தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு இவை சரியா? தவறா? என்ற அடிப்படையில் நாம் எதிர்வினைகளைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மேற்கண்ட கருத்துக்களைப் பேசும் அமைப்புகளும் இறுக்கமாகி, கெட்டி தட்டிப்போய், எதிர்காலத்தில் அவர்களாலும் நாம் சிலரை இழக்க வேண்டிவரும்.

அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக - வெளிப்படையாக பெரியாரியல் அடிப்படையில் நிலைப்பாடுகள் எடுப்பதைத் தவிர்க்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள்கூட இருக்கலாம். ஆனால் அமைப்புகளில் களத்தில் நிற்கும் தோழர்கள் சரியாக நிலைப்பாடு எடுக்க வேண்டிய கட்டாயச்சூழலில் உள்ளனர். இந்தச்சூழல் தான் நாம் பல தோழர்களை இழக்கக் காரணமாகிறது. இழப்பு என்றால் மரணம் மட்டுமல்ல.

நான் எந்த ஒரு அமைப்பையும் குற்றம்சாட்டுவதாக எவரும் கருதிவிட வேண்டாம். அப்படி வேறு யாராவது, எந்த திராவிடர் இயக்கத்தைக் குற்றம் சாட்டினாலும் அந்தக் குற்றத்தில் எனக்கும் பங்குண்டு என்பதைப் புரிந்து கொண்டுதான் எழுதியுள்ளேன். எழுதியபடி நடந்துகொள்ள முதலில், நான் முயற்சிக்கிறேன்.

ஆதாரம்:

 • தோழர் அ.இறையன் அவர்களின் ‘இதழாளர் பெரியார்’ நூல்
 • குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு, ரிவோல்ட் ஏடுகள்

- அதிஅசுரன்

Pin It