மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை.திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது.

பெரியாரிடம் கருத்து மாறுபாடுகளை யும் கடந்த பெருந்தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை.

நான் 1939 இல் பெரியார் அவர்களுடன் சென்னை சிறைச்சாலையிலே இருந்தேன். நான் இருந்த அறைக்கு வலப்பக்கத்து அறையிலே அவர்கள் இருந்தார்கள். இடப் பக்கத்து அறையிலே திரு. அண்ணாதுரை இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையிலே அவரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சிறையை விட்டு நாங்கள் வெளிவந்த பிறகு பெரியார் என்னை ஈரோட்டுக்கு அழைத்திருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றிந்தேன். நான்கு திங்கள்அவர் வீட்டிலேயே இருந்தேன். பெரியார் சிறைச்சாலையில் இருந்தபொழுது பல முறை அவர் ஊன் உண்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், பெரியார் வீட்டில் நான் இருந்த நான்கு திங்களிலும் அவர் ஊன் சாப்பிடாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

அதனால் நான் ஒரு நாள் அவர் வீட்டில் சமையல் செய்து வந்த சென்னியம்மாளை அழைத்து, “ஐயா அவர்கள் ஊன் சாப்பிடுவது எனக்குத் தெரியும். சிறைச்சாலையில் அவர்கள் பலமுறை ஊன் சாப்பிட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு நீங்கள் சைவமாகச் சமைத்துப் போடுவது சரிதான். ஆனால், ஐயாவுக்கு நீங்க ஊன் சமைத்துப் போடலாமே. அதில் எனக்கு ஒன்றும் தடையில்லையே என்று சொன்னேன்.

உடனே அந்த அம்மாள், ‘ஐயா, நீங்கள் வருகிறதுக்கு முன்னாள் இரவு ஐயா (பெரியார்) என்னைக் கூப்பிட்டு, ‘மறைச்சாமி, (என்னைப் பெரியார் மறைச்சாமி என்று சொல்வது வழக்கம்) வருகிறார்; நாளைக்கு அவர் இங்கே இருப்பார், அவர் நிரம்ப சைவம்; கடுமையான சைவம். ஆகையினால், அவர் இந்த வீட்டிலிருக்கும் வரைக்கும் நீ ஊன் (மாம்சம்) சமைக்கக் கூடாது என்று எனக்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதனால் நான் ஊன் சமைத்து அவருக்குப் போட முடியாது’ என்று சொன்னார். அதைக் கேட்டுப் பெரிதும் தான் வியந்தேன்.

‘எவ்வளவு உயர்ந்த பண்பாடு’ என்று எண்ணி மகிழ்ந்தேன். இதுபோல் பெரியாரைப் பற்றிய பல செய்திகள் நினைந்து பாராட்டுதற்குரியனவாக உள்ளன.

கா.சு.பிள்ளைக்கு உதவியது

அங்கு (ஈரோட்டில்) பெரியார் அவர்களோடு இருந்தபொழுது, கா.சு. பிள்ளையவர்கள் (உங்களுக்குத் தெரியும் கா.சு. பிள்ளை அவர்கள் கா.சுப்பிரமணியம் (பிள்ளை) என்பது அவர் முழுப் பெயர்.

தமிழ்நாட்டிலே மறைமலையடிகளைப்போல பேரும் புகழும் சிறப்பும் வாய்ந்த பேரறிஞர். அதோடு சட்டத் துறையிலே பெரும் வல்லவர். அவருக்கிணையான சட்ட அறிஞர் அக்காலத்தில் ஒருவரும் இல்லையாம். ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ என்ற பட்டமும், அதற்காகப் பதினாயிரம் உரூபா பரிசும் பெற்றவர். அந்தக் காலத்திலே, தென் கிழக்காசிய நாட்டிலே குற்றவியல் சட்டப் பொத்தகத்தை எழுதி, அதிலே முதல் பரிசு பெற்றவர். தமிழில் நூற்றிருபது நூற்களுக்கு மேல் எழுதியவர். பேரறிஞர், ஆனால், அவர் கடைசிக் காலத்திலே, அஃதாவது நான் ஈரோட்டில் இருந்த பொழுது, கா.சு. பிள்ளை அவர்கள் (அவரை எம்.எல். பிள்ளையென்றும் சொல்வார்கள். ஏனென்றால், அந்தக் காலத்திலேயே எம்.ஏ., எம்.எல். படித்தவர் அவர். தாகூர் சட்டக் கல்லூரியிலேயே பேராசிரியராகவிருந்தவர்) அவர்கள் தம் கடைசிக் காலத்திலே ஆதரிப்பாரின்றி. நோயுற்றுத் திருநெல்வேலியிலே, வாடி, வதங்கிக் கிடந்தார். பெரியார் ஐயா அவர்களுடன் ஒருநாள் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது கா.சு. பிள்ளை அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘சாமி, மறைச்சாமி, நம். கா.சு. பிள்ளை ஐயா அவர்கள் இவ்வளவு நோயுற்று தளர்ந்து கிடக்கிறாராம். என்ன கொடுமை! இவ்வளவு பெரிய தமிழறிஞரை நம் தமிழர்கள் இப்படி மறந்து விட்டார்களே! ஐயோ’ என்று மிகவும் வருத்தப்பட்டுக் கண் கலங்கச் சொல்லி, அவர்களுக்கு நான் இன்று ஓர் ஐம்பது உரூபா அனுப்பி யுள்ளேன்; இனிமேல் மாதந்தோறும் உரூபா ஐம்பது அனுப்புவேன்” என்றும் கூறினார்.

அப்போது நான் நினைத்தேன்; கா.சு. பிள்ளைக்கு வேறொரு பெயர் ‘பூசைப் பிள்ளை’ என்பது. கடைசி மூச்சு நிற்கிற வரைக்கும் நாள்தோறும் சிவபூசையை மணிக் கணக்காகச் செய்தவர். ஆழ்ந்த சிவபத்தர். உயர்ந்த சிவநெறியாளர். சிறந்த சைவர். அப்படிப்பட்ட இறை நம்பிக்கையுடையவர் (ஆத்திகர்) இடத்திலே, இறை நம்பிக்கையற்றவர் (நாத்திகர்) என்று சொல்லப்படுகின்ற நம் பெரியார், அந்தக் கருத்து வேற்றுமையைப் பாராட்டாது, தமிழர்களில் ஒரு பெரிய அறிவாளி, இப்படி ஆதரிப்பார் அற்றுக் கிடப்பதா என்று எண்ணி, அன்பு வைத்து, வருந்தி, இரங்கி மாதந்தோறும் (நான் அங்கிருந்த நான்கு மாதமுதம் தவறாமல் அனுப்பியதை நேரிலேயே பார்த்தேன்.) அவருக்கு ஐம்பது உருவா அனுப்பி வந்த பெருந்தன்மையை என்னென்பது! அப்பொழுது நான் வேறொன்றையும் எண்ணி வருந்தினேன். ‘எவ்வளவோ சைவ மடாதிபதிகள் எவ்வளவு சைவச் செல்வர்களாக இருக்கிறார்களே! அவர்களுக்கெல்லாம் இந்த அன்பில்லையே, இவர் ‘இறை மறுப்புக் கொள்கையுடையவராயிருந்தும் தமிழர் என்ற ஓர் உணர்ச்சிக்காக இப்படி பெருங்கொடை வழங்குகின்றாரே என்றும் எண்ணினேன். (அப்போது ஐம்பது உருபா என்றால், இப்போது எண்ணிப் பார்த்தால் ஐநூறு உருபா (1987இல்)).

(‘இனி இன்னும் அவர் எளிமையைப் பற்றி நான் எண்ணிக்கூறும் போது, என்னுடைய பெருமையைக் கூறுவதாகவும் கருதப் பட்டு விடுமோ என்று நான் சிலவற்றைக் கூறவே கூசுகின்றேன். ஆனாலும், அவற்றிலே அப்பெருந் தலைவரின் சிறந்த பண்புகளே விளங்கித் தோன்றுவதால், என்னைப் பற்றிய இடையீட்டுக்கு அன்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிக் கொள் கின்றேன்’ என்னும் பீடிகையோடு, கீழே வரும் ஓரிரண்டு நிகழ்ச்சிகளையும் உயர் திரு. மறை. திருநாவுக்கரசு அவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.)

சிறைச் சாலையில்...

பெரியார் அவர்கள் சிறையிலிருந்தபொழுது வயிற்று வலி அடிக்கடி அவருக்கு வந்திடும். அப்பொழுதெல்லாம் மருத்துவர்கள் அவரை அக்கறையுடன் விரைந்து வந்து பார்ப்பார்கள். இதற்குக் காரணம், அவருக்குச் சிறைச்சாலை உணவு ஒத்துவராததே என்பதை நான் உணர்ந்தேன். அதனால் பெரியார் அவர்களிடம், ‘இங்கே, சிறைச்சாலைத் தலைமை அதிகாரிகளிடத்தில், நான் உங்களுக்காகச் சமையல் செய்து தருவதாக வேண்டிக் கொள்கிறேன். அதற்கு அவர்கள் இசைந்தால் உங்களுக்கு நான் சமையல் பண்ணிப் போடுகிறேன். எனக்கு நன்றாகச் சமையல் செய்யத் தெரியும்’ என்று சொன்னேன். பெரியார் அவர்களும் இசைந்தார்கள். அதன் பின் அதிகாரிகளிடமும் இதுபற்றிக் கூறி இசைவு பெற்று, பெரியார்க்குச் சமையல் செய்து, ஏதாகினும் கறி பண்ணிக் கொடுத்து வந்தேன்.

அப்பொழுது பெரியார் நடந்து கொண்ட முறை மிகவும் அன்பு கனிந்ததாகவிருந்தது. அவர்கள் நாள்தோறும் உண்ணுவதற்கு முன் அவர்கள் உண்ணும் அலமினியத் தட்டுடன் என்னுடைய தட்டையும் சேர்த்துக் கழுவிக் கொண்டு வந்து மேசையின்மேல் வைப்பார்கள். (நான் அப்பொழுது சரியாக முப்பது அகவை யுடையவன். அவர்களுக்கு அப்பொழுது சரியாக அறுபது அகவை யிருக்கலாம்) அவர்களுடைய அன்பு, பண்பு, உயர்ந்த அறிவு அளவற்ற தொண்டு இவற்றையெல்லாம் எண்ணி அப்பொழுது அவர்களிடத்தில் நான் அளவற்ற மதிப்பு வைத்திருந்தேன். ஒரு சைவத் தலைவரிடத்தில் வைத்திருக்கின்ற மதிப்பை விடவும் அவர்களிடம் அதிக மதிப்பு வைத்திருக்கின்றேன். காரணம் அவர்க்கிருந்த உயர்ந்த பண்பாடுதான்.

எனவே அக்கால் அவர்களிடத்தில் நான், ‘ஐயா, என் தட்டை நான் கழுவிக் கொள்வேன். அதைத் தாங்கள் கழுவ வேண்டாம்’ என்று சொல்வேன்! அதற்கு அவர், ‘ஏன், கழுவினால் என்னாவாம்? இதில் என்ன உயர்வு தாழ்வு’ என்று சொல்வார்கள். அப்பொழுது தான் அவர்களிடம் சொல்வேன், ‘நான் ஐயாவின் மகன் போல் இருக்கின்றேன். என்னால் இதைச் செய்ய முடியும். எனவே, நீங்கள் இதைச் செய்ய வேண்டாம்’ என்று இதுபோல் எத்தனையோ நாள் எத்தனையோ முறை நான் கேட்டுக் கொண்டும் அது பயனில்லாமல் போயிற்று. கட்டாயம் அவர்கள்தாம் இரு தட்டுகளையும் நாள்தோறும், இரண்டு வேலைகளும் கழுவிவைத்துக் கொண்டு வந்து வைப்பார்கள். அதை நான் நினைக்கும் பொழுது, அவருடைய அன்பையும் பெருமையையும் எண்ணி வியக்கின்றேன்.

அதன் பிறகு, ஒரு நாள், எங்கள் அறைக்கு முன்னால் ஒரு பாயைக் கொண்டு வந்து விரித்தோம். அதில் நானும் பெரியாரும் அமர்ந்தோம். (இப்படி அமர்வது அடிக்கடி வழக்கம். அப்படி அமர்ந்து கொண்டு பல செய்திகளைப் பற்றியும் ஆராய்வது உண்டு) அவர்கள் பேசும்பொபது நான் அமைதியாய்க் கேட்டுக் கொண்டு இருப்பேன். அதுபோலவே, நான் பேசும் போதும் அவர்கள் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதுபோல் பலவாறு கருத்து வேற்றுமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். அப்படி நான் பேசுகிறபொழுது, சில நல்ல இடங்களில் என்னைப் பாராட்டுவார்கள்; ஊக்கப்படுத்துவார்கள். நான் அவர்களிடத்தில் அளவிறந்த பத்திமை வைத்திருந்தேன். அவ்வாறிருந்த பொழுதுதான், ஒரு நாள், ஒரு முறை என் கால் உகிர்(நகங்)களில் ‘சில்’லென்று ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. அஃது என்னவென்று பார்த்தபொழுது. ஐயா அவர்கள் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து, என் கால் உகிர்களில் தண்ணீரைத் தடவினார்கள். சட்டென்று நான் அஞ்சிக் கூச்சத்துடன் காலைப் பின் வாங்கிக் கொண்டு, ‘என்னையா, இது....!’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஏன்? என்னாவாம், உங்கள் காலிலே ‘நகம்’ பெயர்ந்து கொள்ளும், அப்புறம் நானல்ல’ பட்டினி கிடக்க வேணும், என்று நகைச்சுவை ததும்பச் சொன்னார்கள்.

நான் உடனே, ‘ஐயா, அப்படி ஒன்றும் நேராது. மேலும், இந்தக் கால் உகிர்களை எடுத்துக் கொள்ள எனக்குத் தெரியும்! இத்தனை நாட்களும் நானே தான் செய்து கொள்வது வழக்கம். வேறு யாரிடமும் நான் களைந்து கொள்வதில்லை. எனவே நானே களைந்து கொள்கின்றேன்; தாங்கள் அதைச் செய்யக் கூடாது’ என்று கூறி விடாப்பிடியாக மறுத்தேன். அவர்களும் விடாப்பிடியாக, என் இரண்டு கால் உகிர்களையும் மிக அன்போடு மழிதகடு (பிளேடு) கொண்டு களைந்து விட்டார்கள். இதில் எனக்கு என்று எந்தப் பெருமையும் இருப்பதாகக் கருதி விடக் கூடாது. அந்தப் பெருமை முற்றிலும் அவர்களுடையதே ஆகும். அவர்களைவிட எல்லா வகையிலும் தாழ்ந்த வனாகிய என்னிடம், அப்படிப்பட்ட பெரிய தலைவர் மிகப் பெருமையுற்றவர், அன்பின் காரணமாக, இப்படி நடந்து கொண்டது அவர்களுடைய சிறந்த பண்பட்ட தன்மையையே காட்டுவதாகும்.

வழிபாடு செய்ய வீட்டில் இடங்கொடுத்தது

ஈரோட்டில், நான் பெரியார் அவர்கள் வீட்டில் நான்கு திங்கள் இருந்ததை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். அப்படி நான் அவர்கள் வீட்டில் தங்கியிருந்ததற்குக் காரணமும் உண்டு. அக்கால் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு என்னை மாநிலப் பொதுச் செயலாளராக ஐயா அவர்கள் அமர்த்தினார்கள். என்னுடைய புகைப்படத்துடன் அப் போதைய குடிஅரசு இதழிலோ விடுதலையிலோ என்னைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து இப்படி இவர் மறைமலை யடிகளாரின் மகனார். இவரை இந்த இந்தி யெதிர்ப்பு இயக்கத்திற்கு மாநிலப் பொதுச் செயலாளராக அமர்த்தி யிருக்கிறேன். என்றெல்லாம் விளம்பரப்படுத்தியிருக் கிறார்கள். மேலும் என்னிடத்தில் அவருக்கு அளவு கடந்த ஈடுபாடும் அன்பும் உண்டு. அப்படிப்பட்ட பெரியார் இறைமறுப்புக் கொள்கையில் நிரம்ப அழுத்தமானவர்கள். அவர் கொள்கையை நான் மதிக்கின்றேன். அவர் கொள்கை அறியாமையால் ஏற்பட்டதன்று. அறிவு முழுமையாகவே இறைவன் உண்டு என்று நினைக்கின்ற என்னைப் போல்வாரும் இருக்கிறார்கள். ஆனால், இருசாரார் கொள்கைகளும் பற்றி நான் எதுவும் இங்கு கூற விரும்பவில்லை. அது தனிப்பட்ட செய்தி. ஆனால் பெரியார் அவர்களுடைய கொள்கையை அவர் மதிப்பது போலவே, பிறர் தங்களுடைய கொள்கைகளை மதிப்பதையும் அவர் எதிர்ப்பதில்லை. அதைக் குறை கூறுவதும் இல்லை. ஆனால், அஃது உண்மையாக இருக்க வேண்டும். போலியாக மட்டும் இருக்கக் கூடாது.

அவர்கள் வீட்டிலே, நான் போவதற்கு முன்னாலேயே, அவர்கள் குடும்பத்திலே, அவர் இறை மறுப்புக் கொள்கையுடையவராகிவிட்ட காரணத்தால், அங்குள்ள பூசை அறையைப் பூட்டி வைத்திருந்தார்கள். ஆனால் நான் போன அன்று, அந்தப் பூசை அறைக் கதவு திறக்கப் பெற்றிருந்தது. அது மட்டுமின்றி அறை முழுவதும் கழுவித் தூய்மை செய்து, சுராலைக்குச்சி (ஊதுவத்தி) கற்றையாகப் புகைய வைத்து, விளக்கும் ஏற்றி வைக்கப் பெற்றிருந்தது. அத்துடன் ஒரு தட்டில் மலர்கள், கற்பூரம், சுராலை (சாம்பிராணி) எல்லாம் வைக்கப் பெற்றிருந்தன. இது பற்றி, ‘என்ன’ என்று அங்கிருந்தவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், நீங்கள் இங்கிருக்கும் வரை, உங்கள் வழக்கப்படியே பூசை - முதலியவற்றையெல்லாம் செய்து கொள்ளுங்கள்; இங்கு இருப்பதனால் உங்கள் பூசை பழக்க வழக்கங்களுக்குக் கெல்லாம் முட்டுப்பாடு கூடாது’ என்று சொன்னார்கள்; நான் மிகவும் வியப்புக் கொண்டேன்; மகிழ்ச்சியும் அடைந்தேன்.

நான் நாள்தோறும் பூசை செய்து நெற்றியில் நீறிட்டுக் கொள்வேன். கழுத்தில் உத்திராக்க மணிகளும் அணிந்து கொண்டிருப்பேன். அப்பொழு தெல்லாம் பெரியார் அவர்கள் என்னிடம் நகைச்சுவையாக, ‘சாமி’ நீங்கள் இப்படி இருக்கும் பொழுது நன்றாயிருக் கிறது. நீங்கள் இப்படியே என்னுடன் இருங்கள். என்னை எல்லாரும் ‘நாத்திகர்’ என்கிறார்கள். நான் உங்களைக் காட்டிக் காட்டி என்னையும் ‘ஆத்திகர்’ என்று கூறிக் கொள்வேன்’ என்பார். இஃது எதைக் காட்டுகிறது என்றால் கருத்து வேற்றுமை, கொள்கை என்பதெல்லாம் எப்படியிருந்தாலும் மாந்தனுக்கு மாந்தன் மதிக்க வேண்டும்; ஒருவன் கருத்தை மற்றவன் மதிக்க வேண்டும்’ என்ற உயர்ந்த பண்பாட்டையே காட்டுகிறது.

இது தொடர்பாக இன்னொரு செய்தி நினைவுக்கு வருகிறது.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It