அவர் அரசியல்வாதி அல்லர் ஆதலால் அவருக்கு அதிகாரப் பித்துமில்லை, ஆணவமும் இல்லை! அவர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பட்டதாரியுமல்லர், ஆனால் உலகமெனும் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்; பட்டறிவால் பேரறிவு பெற்றவர். மேலை நாட்டுச் சிந்தனையாளரையும் விஞ்சிய ஒப்பற்றச் சிறந்த சிந்தனை யாளர்; பகுத்தறிவாளர், பண்பாளர்.
மக்களிடம் மண்டிக்கிடக்கும் மூடப்பழக்க வழக்கங் களுக்குப் பகையானவர்; எதிரானவர்; அவற்றைக் களைந்திட அல்லும் பகலும் பாடுபட்டவர். மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவர். சமூகத்தில் நிலவிடும் கேடுகளை, மேடுபள்ளங்களை, ஏற்றத்தாழ்வுகளை அழித்தொழித்திடும் சமூக சீர்திருத்தவாதி இல்லை! இல்லை! அழிவு வேலைக்காரன் அவர்.
அவரைப் பெரியார் என்று மக்கள் அன்புடனும் பெருமையுடனும் அழைத்தனர். அந்தப் பெருமகன்; சோம்பலை அறியாதவர்; கேளிக்கைகளில் விருப்ப மில்லாதவர்; உணர்ச்சி வயப்படுபவரும் அல்லர்; வீண் தற்பெருமை கொள்பவரும் அல்லர். அவர் 95 ஆண்டுகள் இந்த மண் மீதும், மக்கள் நெஞ்சகத்தும் வாழ்ந்து வருகின்றார். மனிதநேயமிக்க மாமனிதர், மக்கள் சமுதாய வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அரசியல், கடவுள், மதம், சாதி ஆதிக்கங்களை எதிர்த்துப் போராடினார்; இவர் போல் வேறு யார் உளர் எனப் போற்றி அவர், வழிமக்கள் நின்றனர்; நிற்கின்றனர்; என்றும் நிற்பர்! 95 வயது வாழ்ந்த அந்த மாமனிதர், செல்வச் சீமானாகப் பிறந்தார், ஆனால் தெருவோரத்தில் வாழ்ந்த மக்களுக்காகவே வாழ்ந்தார். அவர் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் ஈரோட்டில் செல்வப்பெருந்தகை திரு.வெங்க டப்ப நாயக்கர்-சின்னத்தாயம்மாள் இணையருக்கு நான்காவது மகவாகவும், இரண்டாவது மகனாகவும் பிறந்தார்.அவரது தந்தை ஏழைக்குடியில் பிறந்தார். உழைப்பை உறுதியாக நம்பிக் கடுமையாக உழைத்தார்; செல்வந்த ராக உயர்ந்தார். வாழ்வின் உச்சம் தொட்டதற்குத் தன்நல்வினைப் பயன் என்றே கருதினார். மற்ற மக்களும் உறவினர்களும் அவரின் செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் அதிருஷ்டம் காரணமென்றனர்; உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பதற்கேற்ப உழைப்பால் உயர்ந்தவர் என்பதை மறந்து! ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர். என்ற குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார் வெங்கடப்ப நாயக்கர்.
மரம் பழுத்தால் அம்மரம் நோக்கி காக்கை குருவிகள், வெளவால் எனப் பறவைகள் வந்து குவியும் என்ப அவ்வாறே பண்டிதர்களும், பாகவதர்களும் அவரைத் தேடிவரத் தலைப்பட்டனர்.
அவரின் இல்லத்தில் தினம் தினம் சைவ, வைணவ பண்டிதர்கள் வருவர்; அவர்களால் கதாகாலட்சேபங்கள் நடைபெறுவதுண்டு. சிறுவன் இராமசாமி விருப்போடு கேட்பான். அவனுள் எழும் ஐயங்களைப் புராணச் சொற்பொழிவாளர்களிடம் கேட்பதுண்டு. அவர்கள் பதிலேதும் கூற இயலாமல் விழிப்பதும் உண்டு.
இவ்வண்ணம் அவர், சின்னஞ் சிறுவயதிலிருந்தே கடவுள், சாதி, மதம் ஆகியவை குறித்த நம்பிக்கை யற்றவராகவே இருந்தார். எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் நாத்திகனாகவே இருந்தேன். கடவுள் பற்றிய கவலையற்றவனாகவே இருந்தேன் என்று பின்னாளில் அவர் கூறினார்.
தந்தையார் வெங்கடப்பநாயக்கர் வைணவ நெறி களைத் தவறாது கடைப்பிடிப்பவர், ஆச்சாரசீலர், ஆதலின் அவரின் இல்லத்தில் நிதம் நிதம் கதாகாலட்சேபங்கள் நடப்பது உண்டு. பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் இராமசாமியின் பள்ளிப்படிப்பு அகவை பத்து ஆகும்போது நிறுத்தப்பட்டது! ஏன்?
சாதி அடுக்கில் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் பெரிய சாதியாக தங்கள் சாதியை நினைத்துக் கொண்டி ருந்த பெற்றோர்களுக்குத், தம்மகன் இராமசாமி தாழ்ந்த சாதி மக்களுடன் மிகஇயல்பாகப் பழகுவதும் அவர்கள் வீட்டில் உண்பதும் ஏற்புடையதாக இல்லை. தந்தை மகனைக் கண்டித்தார். ஆனால் இராமசாமி தன் நிலையிலிருந்து மாறவில்லை. பள்ளியிலும் இராமசாமி குறும்பும், வம்புதும்பும் செய்கின்றார் என்று ஆசிரியர்கள் குற்றம் சுமத்தினர். ஆகவே பத்து வயதோடு அவருடைய பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 12 வயதில் தந்தையின் வணிகத்தில் பங்கேற்று சிறப்புற பணியாற்றினார். 19ஆம் வயதில் 13 வயது நிரம்பிய நாகம்மையைத் திருமணம் செய்துகொண்டார்.
இருபத்தொன்றாம் வயதில் தன்னுடைய மண்டிக் கடையில் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் பங்களித்தார்.
இருபத்து மூன்றாம் வயதில் சாதி ஒழிப்பு எண்ணங் கொண்டு அனைத்துச் சாதியினரும் மதத்தினரும் இணைந்து சமபந்தி போஜனம் செய்தனர்.
தனது இருபத்து ஐந்தாம் வயதில், தனது தந்தையார் கண்டித்தார் என்று கோபமுற்று வீட்டைவிட்டு வெளி யேறினார். துறவிவேடம் பூண்டு பெஜவாடா, கல்கத்தா என்று பல இடங்களில் சுற்றித் திரிந்து புண்ணிய க்ஷேத்திரம் காசி வந்து சேர்ந்தார். காசியில் அன்ன சத்திரங்கள் நிறைய இருந்தன; தன்னுடைய இரு பிராமண நண்பர்களுடன் சத்திரத்தில் உணவு உண்ணப் போனார். ஆனால், காவலர் இருபிராமணர்களை மட்டுமே அனுமதித்தார். அன்ன சத்திரங்கள் ஆயிரம் இருந்தாலும் அவை பிராமணர்களுக்கு மட்டுமே அன்னதானம் செய்தன.
இந்தப் பயணத்தில் புரோகிதப் பார்ப்பனரின் சுயநலம், கயமை, வைதீகத்தின் பொய்மை ஆகியவற்றை நேரில் அனுபவத்தில் கண்டு உணர்ந்தார். பின்னர் அவர் நெல்லூர் வந்தார். அதன் பின் அவர் தந்தை நெல்லூரி லிருந்து, ஈரோட்டிற்கு அழைத்துச் சென்றார்.
1907 ஆம் ஆண்டு, தமது இருபத்து எட்டாம் வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் நாட்டங்கொண்டு மாநாடுகளுக்குச் செல்லத் தொடங்கினார் பெரியார்.
பொதுப்பணிகளில் ஈடுபாடு கொண்டார். பொது வாழ்க்கையில் தன்னலமற்றவராகவும், நேர்மையும் உண்மையும் கொண்டவராகவும் இருந்தார். எந்தச் செயலையும் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் செய்வதில் இவர் வல்லவர். திருக்கோயில் ஆட்சிக் குழுவில் தலைவராகப் பழுதின்றிச் சிறப்புறப் பணியாற்றி கோயில் வருமானத்தைப் பெருக்கினார்.
பொது வாழ்க்கையில் இவர் எப்போதும் மக்களுக்கு நன்மை தரும் செயல்களையே செய்து வந்தார். தனக்கு எவ்வகைத் துன்பம் நேரிட்டாலும் மக்கள்தம் நன்மை யைக் கருத்தில் கொண்டு செயல்படுவார்.
அந்தக் காலத்தில் ஈரோட்டில் உயிர்க் கொல்லியான பிளேக் என்னும் கொடியதொற்று நோய் பரவியது.அது போழ்து மக்கள் அச்சமுற்று ஈரோட்டிலிருந்து வெளியேறினர். மீட்புப் பணிகளில், ஈ.வெ.இராமசாமி தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உயிரற்ற உடல்களைத் தன் தோள்களில் சுமந்து அப்புறப்படுத்தி அரும் பணியாற்றினார்.
ஈரோடுநகர் மன்றத் தலைவராக 1917இல் தேர்ந் தெடுக்கப்பட்டபோது, சில பார்ப்பனக் கெடுமதியாளர்கள், இவர் ஈரோடு நகர் மன்றத் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் முரடர், பொறுப்பற்றவர், என்றும் அரசினரிடம் மனு அளித்தனர். ஆனால் இவருடைய செல்வாக்கையும், தன்னலமற்றச் சேவையையும் அறிந்த ஆட்சியாளர் அந்தப் பொய் மனுக்களைத் தள்ளுபடி செய்து ஈ.வெ.இராமசாமி அவர்களையே நகரசபைத் தலைவர் என்று அறிவித்தனர். அவர் அந்த நாள்களில் 29 பொது நிறுவனங்களில் மதிப்புறு பதவிகளில் சிறப்புற பணி யாற்றி வந்தார்.
ஈரோடு நகர மன்றத் தலைவராகப் பெரியார் இருந்த போது முதன்முதலாக குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தார். சுகாதார வசதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றினார்.
அப்போது சேலத்தில் சி.இராசகோபாலாச்சாரியார் நகரமன்றத் தலைவராக இருந்தார். சி.இராசகோபாலாச் சாரியார் பெரியாரின் நெருங்கிய நண்பர். டாக்டர். வரதராசலுநாயுடும், திருவிகவும் வ,உ.சியும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அந்த மூன்று நண்பர்களும் பெரியாரின் வெகு சிறப்பான பொதுப்பணிகளையறிந்து பாராட்டினார்கள். காங்கிரசு பேரியக்கத்தில் சேர்வதன் மூலம் பொது நலச் சேவைகள் புரிய அதிக வாய்ப்புகள் கிட்டும் என்று கூறினார்கள்; காங்கிரசு பேரியக்கத்தில் சேருமாறு வற்புறுத்தினார்கள். காங்கிரஸில் உறுப்பினர் ஆவது குறித்து ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டார். அதன் பின், சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் காங்கிரசில் சேர்வதற்குத் தடையில்லை என்று கூறினார். அதன்பின் நிபந்தனைகளைப் பட்டியலிட்டார்: 1.காங்கிரசு சமூக சீர்திருத்ததிற்கு பாடுபடவேண்டும். 2.வகுப்புரிமைக் கொள்கையைக் காங்கிரசு ஏற்றுக் கொண்டு பதவி, வேலை வாய்ப்புகளில் 50 சதவிகிதம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கி அளிக்க வேண்டும், 3. தேர்தல் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடக்கூடாது என்பன நிபந்தனைகள். பெரியாரின் நெருங்கிய நண்பர்கள். சி.இராசகோபாலாச்சாரியார் டாக்டர். வரதராசலு நாயுடு, திரு.வி.க. ஆகிய மூவரும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு உறுதியும் அளித்தனர்.
அப்பொழுது காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து, 1915, சனவரி 9ஆம்நாள் தாயகம் வந்து சேர்ந்தார். காந்தியடிகளிடம் அளப்பரிய அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார் பெரியார். அதற்குக் காரணம் காந்தி யடிகள் தென்னாப்பிரிக்காவில் மேற்கொண்ட சுயமரியாதைப் போர்களே! அறவழிப் போராட்டங்களே!!
தென்னாப்பிரிக்காவில்
தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப் பாகுபாடும் மிகுந்து இருந்தன. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது, தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவர் ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக உதவின..
அங்குள்ள நேட்டால் மாகாணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச் சென்ற காந்தியிடம், அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ தலைப்பாகை அணிதல் என் உரிமை, தலைப்பாகையை விலக்க முடியாது என்று சுயமரியாதை உணர்வுடன் எதிர்த்துக் கூறிவிட்டு, நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார்.
பிறகொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடர் வண்டியில் முதல்வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார் காந்தி. நேட்டாலின் தலை நகரான மாரிட்ஸ்பர்க் தொடர்வண்டி நிலையத்தில் வெள்ளைக்காரப் பயணி ஒருவராலும், நிலைய ஆங்கிலேய அதிகாரி ஒருவராலும், காந்தி வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, தொடர் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த நிகழ்வும் காந்தியின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக அமைந்தது. வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார். இந்தக்கொடுமைகளை எதிர்த்துப் போராட நெஞ்சத்தில் உறுதி கொண்டார்.
தென்னாப்பிரிக்க இந்தியர்கள் உரிமைகளின்றி அடிமைகளாக வாழ்வதைப் பொறுக்க முடியாத காந்தி, அந்தமக்களை ஒன்றுபடுத்தி 1906ஆம் ஆண்டில் ஜோகன்ஸ்பேக் நகரில் அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைகளைப் பெற்றிடும் முயற்சியில் வெற்றிகண்ட காந்தி 1915ஆம் ஆண்டு சனவரி 9ஆம் நாள் தாயகம் திரும்பினார்.
பெரியார், காந்தியிடம் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக, நண்பர்களின் விருப்பத்தை ஏற்றுக் காங்கிரசு பேரியக்கத்தில் இணைந்தார்.
அதற்குமுன் தான் வகித்த மதிப்புறு பதவிகளிலிருந்து விலகினார்; ஈரோடு நகர்மன்ற தலைவர் பதவியிலிருந் தும் விலக ஒப்புதல் கடிதத்தை அரசினரிடம் வழங்கினார். இதனையறிந்த அவரின் நண்பர், சர்.பி.இராசகோபாலாச் சாரியார், என்ன நாயக்கரே, அவசரப்பட்டு விட்டீர்களே? சர்க்கார் தங்களுடைய பொதுச் சேவையைப் பாராட்டி 'இராவ்பகதூர் பட்டம்' வழங்க உள்ளது" என்றார்.
அதற்குபெரியார், "நான் எந்தப் பட்டத்தையும் விரும்பி யவன் அல்லன்.காங்கிரசில் காந்தியுடன் இணைந்து சேவைபுரியவே ஆவலாயுள்ளேன்," என்று கூறினார். ஆண்டு ஒன்றுக்கு உரூபாய் 20,000க்கு மேல் வருமானம் தந்து கொண்டிருந்த வணிக மையத்தையும் நிறுத்தி விட்டார்.
காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்த பின்னர் பெரியார் தீவிரமாகக் காங்கிரசு இயக்கத்தைத் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் கொண்டு சேர்த்தார் .இவ்விதம் நாடு முழுவதிலும் பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் 3 மணிநேரம் மக்கள் விரும்பிக் கேட்கும் வகையில் பேசுவார்.பேசி முடித்த பின்னர் உணவு உண்ண பெரிய உணவகங்களுக்குச் செல்லமாட்டார். தெரு ஓரத்தில் விதவைகள் நடத்தும் இட்லி கடையில் சாப்பிடுவார். அதற்கு அவர் கூறும் விளக்கம், விலை குறைவு, சுவை நிறைய எனக்கூறிச் சிரிப்பார். கணவனை இழந்தவர்களுக்கு இட்லிகடை தான் தாசில் உத்தியோகம் என்றும் கூறுவார்.
பெரியார் கூட்டங்களில் நிதி பெறுவார்; ஆனால் அந்த நிதி முழுதும் கட்சியின் கணக்கில் சேர்த்து விடுவார் பெரியார். இது பெரியாரிடமும் காந்தியடிகளிடமும் இருந்த பொது பண்பாகும். பெரியாரும் காந்தியடிகளும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இருவரும் தொடர்வண்டியில் 3ஆம் வகுப்பிலேயே பயணிப்பர்.
ஒருமுறை உ.வே.சாமிநாத ஐயர் ஈரோட்டில் பெரியாரைக் கண்டு உரையாடிவிட்டு, வெகுமதியும் பெற்றுச் சென்றார். இரண்டு கிழமைகள் கடந்த பின்னர் பெரியார் ஈரோட்டில் தொடர் வண்டியில் 3ஆம் வகுப்பில் பயணியாக அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வண்டியில் உ.வே.சா. ஏறினார். பெரியாரைக் கண்டு சஞ்சலம் கொண்டார். செல்வந்தராய் இருந்தவர் 3ஆம் வகுப்பில் பயணிக்கிறாரே என்று வருந்தினார். பெரியார் அருகில் சென்று அமர்ந்து நலன் விசாரித்தார். “வியாபாரம் நொடித்து விட்டதா? 3ஆம் வகுப்பில் பயணிப்பது ஏன்?” என்று, கேட்டார். “ஐயா நான் நலம். என் வியாபாரமும் நலம். நான் எப்போதும் 3ஆம் வகுப்பில் தான் பயணிப்பேன்,” என்று பெரியார் கூறிய பின்னர் தான் சமாதானம் அடைந்தார் உ.வே.சா.
*1920இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார் காந்தி அடிகள். அரசின் அலுவல்களைப் புறக்கணிக்க வேண்டும்; நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும்; பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும்; அந்நியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்பன ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாடுகள் ஆகும்.
பெரியார் இந்தப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் தன்னுடைய குடும்பத்திற்கு வரவேண்டிய உரூபாய் 50,000த்தை இழந்தார். இதில் உரூபாய் 28,000 மதிப்புள்ள பத்திரம் ஒன்று இருந்தது. அதனைத் தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி சேலம் வழக்கறிஞர் சி. விசயராக வாச்சாரியார் பெரியாரிடம் கேட்டார். தான் நீதிமன்றத்தில் வழக்காடி வசூல் செய்து தருவதாகச் சொன்னார்.
பெரியார் மறுத்து விட்டார்.“நானே வழக்குத் தொடுத்தாலும், என்சார்பில் வழக்குத் தொடுத்தாலும் ஒன்றே. ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிரான செயலாகும். நான் கொள்கைப்பற்றாளன் பணம் எனக்கு பெரிது இல்லை” என்று கூறினார். அந்த அளவிற்கு காந்தியடிகளின் கொள்கைகளில் பெரியார் ஈடுபாடு கொண்டிருந்தார்.
கள்ளுக்கடை மறியல் போராட்டம்
1921 இல் காந்தியடிகள் மதுவிலக்கை காங்கிரசின் திட்டங்களில் ஒன்றாகப் பரப்புரை செய்தார். மதுவிலக் கிற்கு ஆதரவாக கள் தரும் மரங்களை வெட்டிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். காந்தி அடிகளின் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருந்த பெரியார், சேலம் தாதம் பட்டியில் கள் இறக்க குத்தகைக்கு விடப்பட்டிருந்த தமது தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
கள்ளுக்கடை மறியல். திட்டத்தை, ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் காந்தி அடிகள் இருந்தபோது வெளியிட்டார். வழக்கம் போல் பெரியார் கள்ளுக்கடை மறியலில் தீவிரமாக ஈடுபட்டு 15-11-1921இல் கைதாகி ஒருமாதம் தண்டனை பெற்று கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அன்னை நாகம்மையாரும் தங்கை கண்ணம்மாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் 144 தடையை மீறி மறியலில் ஈடுபட்டனர். கள்ளுக்கடை மறியல் வீறுடன் தொடர்ந்தது.
அரசிற்கும் காங்கிரசுக்கும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக ஒப்பந்தப் பேச்சு நடைபெற்றது. இது தொடர்பாக பம்பாயில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு தொடங்கு முன்னர், திரு.மதன்மோகன் மாளவியாவும், திரு.சங்கரன் நாயரும், கள்ளுக்கடை மறியலை நிறுத்திவிட்டு வேறு நடவடிக்கையில் ஈடுபடலாம், என்று காந்தியடிகளைக் கேட்டுக்கொண்ட போது, காந்தியடிகள், “கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது” என்று நாகம்மையாரையும் கண்ணம்மாளையும் குறிப்பிட்டார். (19.1.1922 இந்து இதழ்)
இந்தியாவிலேயே முதன்முதல், தம் வீட்டுப் பெண்களை, பொதுவாழ்வில் ஈடுபடுத்தி, மறியலில் கலந்து கொள்ளச் செய்தவர் பெரியார் ஒருவரே! காந்தியின் நிர்மாணத் திட்டத்தை ஏற்று கதர் ஆடையையே உடுத்தினார். தன் குடும்பத்தினர் அனைவரையும் கதர் துணிகளை அணியச் செய்தார். கதர்த் துணி மூட்டையைத் தன் தோளிலேயே சுமந்து ஊர்ஊராகச் சென்று விற்பனைச் செய்தார். திருச்செங்கோட்டில் கதர் ஆசிரமத்தைத் திறந்து வைத்தார்.
வைக்கம் போர்
கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் மகாதேவர் கோயிலுக்குச் செல்லும் ஒரு வீதியில் அரசு நிறுவனங்கள் நீதிமன்றம் ஆகிய அலுவலகங்கள் இருந்தன. அந்தத் தெருவில், ஈழவர், தீயர், புலையர் ஆகியோர் நடமாடக் கூடாது என்று சமூகவிதி அமுலில் இருந்தது.
இந்தச் சமூக விதியை எதிர்த்துக் கேரள காங்கிரசு தலைவர்கள், வக்கீல் மாதவன், பாரிஸ்டர் கேசவமேனன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசஃப் முதலியோர் 30-3-1924 இல் போராடினார்கள். ஒருவர் பின் ஒருவராகக் கேரளத் தலைவர்கள் கைது ஆனார்கள். போராட்டத்தில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டது. மதுரை வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்ட நம்பூதிரி,பாரிஸ்டர் கேசவ மேனன் என்ற மூன்று தலைவர்கள் பெரியாருக்குக் கடிதம் எழுதி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்படி வேண்டினர்.
பெரியார் அப்போது மதுரையில் பண்ணைபுரத்தில் பரப்புரை செய்து கொண்டிருந்தார். கடிதம் கிடைத்ததும் வைக்கம் சென்றார். பெரியார் வைக்கம் வந்த செய்தி அறிந்த திருவாங்கூர் மன்னர், பெரியாரை வரவேற்க தம்முடைய திவானையும் காவல்துறை ஆணையாளர் பிட் அவர்களையும் அனுப்பினார். அவர்கள் இருவரும் பெரியாரைச் சந்தித்து, மன்னர் தங்களுக்கு வசதிகள் செய்து தருமாறு ஆணையிட்டுள்ளார்கள், என்று கூறினார்கள். மன்னிக்கவும், நான் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட வந்துள்ளேன், விருந்தாளியாக வரவில்லை, என்றார். பின்னர் பெரியார் தீவிரமாகப் போராட்டத்தில் பங்கேற்றார். 22-4-1924இல் ஒரு மாதம் தண்டனை பெற்று அருவிக்குத்தி சிறையில் தண்டனை அனுபவித்தார். உடன் ஈரோட்டிலிருந்து நாகம்மை யாரும் தோழர் இராமநாதனும் வைக்கம் சென்றார்கள்; போராட்டத்தினைத் தீவிரப்படுத்தினார்கள்; கேரளப் பெண்களும், தமிழகப் பெண்களும் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒரு மாதம் சிறையில் இருந்த பெரியார் விடுதலை யானார், திருவாங்கூர் எல்லைக்குள் வரக்கூடாது என்ற தடை ஆணையுடன் வெளியில் வந்த பெரியார் தடையை மீறி வைக்கம் சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்; ஆறுமாத கடுங்காவல் தண்டனை பெற்று திருவாங்கூர் சிறையில டைக்கப்பட்டார். தொடர்ந்து நாகம்மையார், கண்ணம்மாள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
பெரியார் சிறையில் இருக்கும் போது, அரண்மனை யில், சத்ருக்களை அழிக்க யாகம் செய்தனர் கெடுமதி யாளர்கள். யாகம் நடக்கும் போதே மன்னர் திருநாடு (இறப்பு) சென்றுவிட்டார். அதனால் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். வைக்கம் செல்லத் தடையுடன் பெரி யாரும் விடுதலையானார்.
அரசி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார். போராட்டத்திற்கு முடிவுகட்ட விரும்பினார்; திவான் இராகவையா அவர்களுடன் ஆலோசனயில் ஈடுபட்டு போராளிகளுடன் சமரசம் செய்து கொள்ள உடன்பட்டார்.
திவான் இராகவையா சமரசம் செய்துவைக்க இராசாசியை அழைத்தார். இராசாசி காந்தியடிகள் முன்னிலையில் உடன்பாடு செய்ய விரும்பி காந்தியடிகளை அழைத்தார்கள்; அவர்முன் இராணி தீண்டாதார் கோவில் உள்ளத் தெருவில் நடமாடத் தடையில்லை, ஆனால் பெரியார் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்பாரே என்று ஐயத்தை எழுப்பினார். அதன்பின் காந்தியாரும் இராசாசியும் பெரியாரைச் சந்தித்துப் பேசினார்கள்.
அரசியார் தீண்டப்படாதார் கோவில் உள்ளத் தெருவில் நடமாட ஒப்புதல் ஆணை வழங்கியுள்ளார், ஆதலால் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று பெரியாரிடம் காந்தியார் சொன்னார். பெரியார் போராட்டத்தைக் கைவிட்டார்.
அதற்குப்பின், காந்தியார் கே.பி.கேசவமேனனுக்குக் கடிதம் எழுதினார். இரண்டு பிராமணர்கள், அந்த வீதி பிராமணர்களுக்குச் சொந்தமானது என்று கூறியுள்ளனர், ஆகவே உங்கள் போராட்டம் கண்டிக்கத்தக்கது, என்று எழுதினார். கே.பி. கேசவமேனன் பதிலுரை, அந்தத் தெரு அரசுக்குச் சொந்தமானது. எந்தப் பார்ப்பனருக்கும் அல்லது எந்தத் தனியாருக்கும் சொந்தமில்லை, காந்தியாரால் ஏதும் பேச இயலவில்லை.
காந்தியார் ஜார்ஜ் ஜோசப்பிற்கு கடிதம் எழுதினார்கிறித்துவர், சீக்கியர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் இந்த இந்து கோவில் சம்பந்தமான போராட்டத்தில் கலந்து கொண்டது தவறு என்று கண்டித்தார். ஜார்ஜ் ஜோசப் பதிலுரை: இந்தப் போராட்டம் தெருவில் நடப்பதற்காக நடந்தது, இந்து ஆலய நுழைவு போராட்டமன்று, என்று எழுதினார்.
உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமலே, தன்னை ஒரு சனாதன இந்துவாக எண்ணிக்கொண்டு காந்தியார் நடந்து கொண்டதால் பெரியார் அவர் மீது கொண்டிருந்த நன்மதிப்பு கலையலாயிற்று.
வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றது. 1925 நவம்பர் 29இல் வெற்றி விழாக்கூட்டம் நடைபெற்றது. அந்த விழாவில் வைக்கம் வெற்றியைப் பெற்றுத் தந்த தலைவர் பெரியார் என்பதால், அவரை வைக்கம்வீரர் என்று பாராட்டினார் தமிழ்த்தென்றல் திரு.வி.க .
சேரமாதேவி குருகுலப் போராட்டம்
வ.வே.சு.ஐயர் நாடறிந்த காங்கிரசுத் தொண்டர். அவர் திருநெல்வேலி மாவட்டத்தில், சேரமாதேவி என்ற ஊரில் ஒரு தேசிய குருகுலம்-பரத்துவாசர் குருகுலம் என்ற பெயரில் தொடங்கினார். குருகுலத்திற்கு பொது மக்களிடம் நிதி பெற்றார்
அப்போது தமிழ்நாடு காங்கிரசு தலைவர் டாக்டர். வரதரசலு நாயுடு, செயலாளர் பெரியார். காங்கிரசு இயக்கம் உரூபாய் 10,000/ நிதிதர ஒப்புதல் அளித்தது. முதல் தவணையாக 5,000/ ரூபாயை செயலாளர் பெரியார், வ.வே.சு. ஐயரிடம் அளித்தார். குருகுலத்தில் அனைத்து சாதி குழந்தைகளும் தங்கி கல்வி பயின்று வந்தனர். மெத்தப்படித்த வ.வே.சு.ஐயர் குருகுலத்தில் சாதி வேற்றுமையை குழந்தைகளிடையே விதைத்து வந்தார்.
பார்ப்பனப் பிள்ளைகளுக்கு தனி உணவு, தனி உறைவிடம், கல்வி போதனையில் தனிக் கவனிப்பு என்று பாகுபாடுகள் இருந்தன. பார்ப்பனரல்லாத சிறார்களுக்கு வேறு உணவு, வேறு உறைவிடம், கல்வி பயிற்சியில் கவனமின்மை ஆகிய வேறுபாடுகள் இருந்தன. அங்கே சாதிப் பிரிவினை ஆதிக்கம் பெற்று வந்தது. குரு குலத்தின் நோக்கத்துக்கும் தேசிய ஒருமைப் பாட்டிற்கும் இது முரணானது எனப் பலமுறை எடுத்துக் காட்டியும் வ.வே.சு.ஐயர் ஒருப்படவில்லை; ஆதலால் காங்கிரசு கட்சியின் உதவிப் பணத்தை பெரியார் தரச் சம்மதிக்காத போது வேறொரு பார்ப்பனச் செயலரிடமிருந்து நேர்மையற்ற முறையில் வ.வே.சு.ஐயர் அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டார்.
இக் குருகுலத்தில் பயின்று கொண்டிருந்த ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் மகன், பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உள்ள தண்ணீர் பானையிலிருந்து தண்ணீர் குடித்தான் என்பதற்காகத் தண்டிக்கப்பட்டான். இந்த நிகழ்வினை அறிந்த பெரியார் வெகுண்டெழுந்தார்; பச்சைப் பார்ப்பனியம் தலை தூக்கியுள்ள நிலையினைக் கண்டித்து போர் தொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உந்தப்பட்டார். பெரியாரை ஆதரித்து மற்ற பார்ப்பனரல்லாத தலைவர்களும் போர்க்கோலம் கொண்டனர்.
இதனையடுத்து காங்கிரசு காரியக் கமிட்டிக்கூட்டம் நடைபெற்றது. டாக்டர் நாயுடு தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவராகவும், தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் செயலாளராகவும் இருந்துகொண்டு இம்மாதிரி கிளர்ச்சி செய்வது தவறென்றனர். பார்ப்பனத் தலைவர்கள் இவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சித்தார்கள். முதலில் டாக்டர் நாயுடு மேல் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். டாக்டர் இராசன் அவர்களும், தோழர் சி.இராசகோபால ஆச்சாரியாரும் அத்தீர்மானத்தின் மீது பேசினார்கள். தோழர். ஈ.வெ.ரா. அத்தீர்மானத்தை எதிர்த்துப் பேசி தீர்மானத்தைத் தோற்கடித்தார். அதன்பின் டாக்டர் நாயுடு மீது நம்பிக்கை இருக்கிறது என்பதாக திரு.ஈ.வெ.ரா.வால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இவ்விரு தீர்மானங்களிலும் பார்ப்பனர் ஒருபுறமும் பார்ப்பன ரல்லாதார் ஒருபுறமுமாக வாக்களித்தனர். தீண்டாமை ஒழியவேண்டும் என்றும் குருகுலத்தில் சாதிபேதம் காட்டப் பட்டதைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. உடன் பார்ப்பனத் தலைவர்கள், இராசாசி, டி.எஸ்.எஸ்.இராசன், கே.சந்தானம் முதலிய 10 பேர்கள் காங்கிரசு கமிட்டியிலிருந்து விலகிவிட்டார்கள்.
இறுதியாக காந்தியடிகள், ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டுமென்று கேட்பதும், தீர்மானம் செய்வதும் குற்றமில்லை; அவ்விதம் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட மறுப்பதும் குற்றமல்ல; அவரவர் விருப்பம், என்றார்.
காந்தியார் இவ்விதம் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக வும். மனுநீதியை அங்கீகரித்தும் கூறியதைப் பெரியாரால் ஏற்க முடியவில்லை. இதுநாள் வரை காந்தியாரிடம் கொண்டிருந்த நம்பிக்கையும் மதிப்பும் கலைந்தன. பெரியார் காங்கிரசைவிட்டு விலகுவது என்று முடிவெடுப் பதற்கு முதல் காரணமாக அமைந்துவிட்டது குருகுல நிகழ்வு.
குருகுலப் போராட்டம் மக்களுக்கு உணர்த்துவது என்ன? பார்ப்பனர்கள் சாதிகளின் ஒற்றுமையை விரும்பு வதில்லை. தாங்கள் என்றென்றும் உயர் சாதியினராகவே இருக்க வேண்டும். மற்ற சாதிக்காரர்கள் கீழானவர் களாகவே இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட பெரியார் பார்ப்பன ரல்லாத மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு கடவுள், மதம், சாதிகளற்ற, பகுத்தறிவு, கொண்ட, சமதர்ம, சுயமரியாதைச் சமூகம் ஏற்படப் பாடுபட்டார்.
பெரியார் காங்கிரஸிலிருந்து விலகல்
1925ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் சென்னை மாகாண காங்கிரசு மாநாடு திரு.வி.க. தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பெரியார் வகுப்புவாரித் தீர்மானம் கொண்டு வந்தார்.
தேசிய முன்னேற்றத்துக்கு இந்து சமூகத்தாருக்குள் பற்பல சாதியாருக்குள் பரஸ்பரம் நம்பிக்கையும் துவேச மின்மையும் ஏற்பட வேண்டுமாகையால் இராஜ்யசபை களிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமண ரல்லாதார், தீண்டாதார் எனக் கருதப்படும், இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக மக்கள்தொகை விழுக் காடுக்கு ஏற்பத் தங்கள் தங்கள் சமூகத்திலிருந்து பிரதி நிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.
வகுப்புவாரித் தீர்மானத்தைக் காங்கிரசு மாநாட்டில் பெரியார் கொண்டு வருவது முதன்முறையன்று. 1920 திருநெல்வேலி மாநாட்டில் கொண்டு வந்திருந்தார். பொதுநலனுக்குக் கேடுபயக்கும் என்று மாநாட்டுத் தலைவர் எஸ்.சீனிவாசய்யங்கார் அனுமதிக்க மறுத்து விட்டார்.
1921 தஞ்சை மாநாட்டின் தலைவர் இராசாசி, கொள்கையாகக் கொள்வோம் தீர்மானம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
1922 திருப்பூர் மாநாட்டிலும் தீர்மானத்தை ஏற்க வில்லை என்றதும், சாதி வேற்றுமையை வலியுறுத்தும் மனுதர்மத்தையும், இராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று ஆவேசப்பட்டார். கலவரம் ஏற்பட்டு, விஜயராகவாச்சாரியார் அடங்கிவிட்டார்.
1923 சேலம் மாநாட்டிலும் கலகமாகும் என்றதும் ஜார்ஜ் ஜோசப்பும், டாக்டர். நாயுடுவும் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.
1924 திருவண்ணாமலை மாநாட்டில் பெரியார் தலைமை என்ற போதும், எஸ்.சீனிவாச ஐயங்கார் போன்ற தலைவர்கள் சென்னையிலிருந்து ஏராளமான உறுப்பினர்களைத் தருவித்துத் தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து விட்டனர்.
காஞ்சிபுரம் மாநாட்டிலும் திரு.வி.க.தலைமையென்ற போதும் தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. பெரியாரின் கோபம் எல்லை மீறியது; காங்கிரசு பிராமணர் நன்மைக்காகச் செயல்படுகிறது. பிராமணர் ஆதிக்கத்திலுள்ளது. இனி பிராமணர் ஆதிக்கத்தையும் காங்கிரசையும் ஒழிப்பதே என் முதல்வேலை என்று கூறிவிட்டுக் காங்கிரசை விட்டு விலகினார். அவருடன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், சர்க்கரைச் செட்டியார், மணப்பாறை ரெ.திருமலைச்சாமி, டி.ஏ. இராமலிங்கச்செட்டியார், எஸ்.இராமநாதன் உள்ளிட்ட பலரும் காங்கிரசை விட்டு விலகினர்.
1926ஆம் ஆண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.
குடியரசு எனும் வார ஏட்டின் மூலம் பகுத்தறிவுச் சுடர்விடும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வெளி வந்தன. ப. ஜீவானந்தம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, சௌந்திரபாண்டியன், குத்தூசி குருசாமி, பொன்னம் பலனார், சிங்காரவேலர், கைவல்யசாமி, எஸ்.இராம நாதன் போன்ற பலர் பெரியாருக்குத் துணையாக நின்று சுயமரியாதைக் கருத்துகளைச் சூறாவளி வேகத்தில் தமிழகத்தில் பரப்பி வந்தனர்.
1925இல் காங்கிரசை விட்டுப் பெரியார் விலகிய போதும் காந்தியாரின் மீது கொண்டிருந்த உயர்ந்த மதிப்பின் காரணமாக காந்தியாரின் நிர்மானத் திட்டங்களைப் போற்றி நடைமுறைப்படுத்தி வந்துள்ளார்.
காந்தியாரின் அழைப்பின் பேரில் 1927 ஆம் ஆண்டு பெங்களூரில் காந்தியார் தங்கியிருந்த விடுதியில் தோழர் இராசகோபாலாச்சாரியார் அவர்களும், தோழர் தேவதாஸ் காந்தி அவர்களும் பெரியாரை வரவேற்று காந்தியாரிடம் அழைத்துச் சென்றனர். ஆங்கே பெரியார் அவர்கட்கும் காந்தியார்க்கும் இடையே நடந்த உரையாடல் மூலம் காந்தியாரின் எண்ண வோட்டத்தைப் புரிந்து கொண்டார்
நாயக்கருக்குக் காங்கிரசு மீது என்ன கோபம் என்று காந்தியார் வினவினார். இந்தியா விடுதலை பெற வேண்டுமானால் முதலில் காங்கிரசு ஒழிய வேண்டும், இரண்டா வதாகச் சாதியை ஒழிப்பதற்குத் தடையாகவுள்ள இந்து மதத்தை ஒழிக்க வேண்டும், மூன்றவதாக பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும், என்று பெரியார் வலியுறுத்திக் கூறினார். அதற்கு காந்தியார் மழுப்பலாக இவை குறித்து இரண்டு மூன்று முறை நாம் சந்திப்போம் என்றார். இந்த சந்திப்பின் மூலம் காந்தியார் தன்னை பார்ப்பனர் ஆதரவாளராகவும், வர்ணாச்ரம கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டவராகவும் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டார்.
தொடக்கத்தில், தம்மைப் போன்றே சமுதாய சமத்துவ சுயமரியாதை உணர்வுள்ளவராகவும் பார்ப்பனரின் சூழ்ச்சிக்கு ஆட்படாத, பார்ப்பனரல்லாதார் தலைவராகவும் விளங்குவார் என்று காந்தியாரைப் பற்றிப் பெரியார் எண்ணியிருந்தார். பெரியார் காந்தியார் மீது கொண்டிருந்த நம்பிக்கை நீரில் எழுதிய எழுத்தாயிற்று,
வைக்கம் போரின் போதும், சேரமா தேவியில் நடைபெற்ற போரின் போதும் காந்தியார் பிராமணர்களுக்கு ஆதரவான நிலையையே எடுத்திருந்த போதிலும் பெரியார் காந்தியாரை மிகவும் நேசித்தார், காந்தியாரின் எளிய வாழ்க்கையையும், பொதுவாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த ஒழுக்கத்தையும் போற்றினார். எடுத்த காரியத்தை பிடிவாதத்துடன் முடித்திட எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் போற்றவே செய்தார் பெரியார். தன் உள்ளத்தில் உண்மையெனப் பட்டதை எடுத்தியம்பிடவும், அது போல் நடந்து காட்டவும் செய்தார் காந்தியார். இருந்தபோதிலும், ஒரு மாபாவி அவரைக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டான். கொன்று விட்டார்களே உலக உத்தமர் காந்தியாரை இந்துமத வெறியர்கள் என்று இரவு முழுதும் உறங்காது அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் பெரியார். இந்திய விடுதலையின் போது பாகிஸ் தானும் விடுதலை அடைந்தது. அதன் விளைவாக இந்து முஸ்லீம் கலவரம் நிகழ்ந்தது. காந்தியார் வேதனையுற்று கண்ணீர் சிந்தினார். இந்தியக் கொடியையேற்றி, பண்டித நேரு பிரதமராகப் பதவி ஏற்கும்போது அண்ணல் காந்தியார், கலகம் நடக்கும் களத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை வேண்டி உண்ணா நோன்பிருந்தார். பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்திட வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தினார்.. இந்திய விடுதலைக்காகப் போரிட்ட அந்த உலகப் பெருந்தலைவர், விடுதலை பெற்ற நாட்டின் தலைமைப் பதவியினை ஏற்கவில்லை என்ற போதிலும், அந்த மாமனிதரை இந்துமத வெறியர்கள் காவு கொண்டனர் என்பது மிகப்பெரிய அவலம். தன்னை மீறி பெரியார் கண்ணீர் சிந்தினார்.
பின்னர் காந்தியடிகளுக்கு அவரின் சேவையைப் போற்றி நினைவுச் சின்னமாக, இந்திய நாட்டைக் காந்தி தேசம் என்றழைக்க வேண்டும் என்று பெரியார் அறிவுறுத்தினார்.
வாழ்க பெரியார்! வாழ்க காந்தியடிகள்!
- மருத்துவர் சோமாஸ் கந்தன்