1982 சூலை 5, 6, 7 மூன்று நாள்களிலும் - தங்கவயல் வாழ் தமிழர்களை கருநாடகக் காவல்துறை வேட்டையாடியது. அதற்குக் காரணம் காவிரி நீர்ப்பங்கீடு அல்ல.
“தங்கள் தாய்மொழியான தமிழை, முதல் மொழி யாகக் கற்றிட உரிமை வேண்டும்” என்று தங்கவயல் தமிழின மாணவர்களும், தமிழ்ப் பெரியவர்களும் இணைந்து கோரிக்கை ஊர்வலம் நடத்தினார்கள். அதற்காகக் கொடுமையாகத் தமிழர்கள் தாக்கப்பட் டார்கள்; தமிழர் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 30 நாள் அங்கு சுடுகாட்டு அமைதி நிலவியது.
1. அவரவர் தாய்மொழியே கல்வியில் முதல் மொழி.
2. கன்னடம் எல்லோருக்கும் கட்டாயப் பாடம்.
என்பது, 30.4.1982இல் கருநாடக அரசு வெளி யிட்ட ஆணை. அதைத் தமிழர் ஏற்றனர்; எல்லா மொழியினரும் ஏற்றனர்.
“இது கூடாது-கன்னடமே எல்லா மொழி மக்களுக் கும் முதல் மொழியாக இருக்க வேண்டும்” என்பது கன்னடரின் கோரிக்கை. இது, கோகாக் ஆய்வுக்குழு செய்த பரிந்துரை. இதை முன்னின்று நடத்தியவர் நாடறிந்த நடிகர் ராஜகுமார்.
தமிழக ஆய்வரண் நிறுவன உறுப்பினர் தோழர் குணா (எ) குணசீலனும், நானும் 13.8.1982 பிற் பகலிலும், 14.8.1982 முழுவதும் தங்கவயலில் வீடு தோறும் சென்று, கருநாடக அரசு செய்த அழிம்புகளை நேரில் கண்டோம். 28.8.1982 நாளிட்ட “சிந்தனை யாளன்” இதழில் 12 பக்கங்களில் தங்கவயல் கோரக் காட்சிகளைப் பதிவு செய்தேன். அதை இப்போது படித் தாலும் தங்கவயலுக்கு என் நெஞ்சம் போய்விடுகிறது.
இது, தமிழர்க்கு எதிரான முதலாவது பெருங்கலவரம்.
அடுத்து 1991 திசம்பர் 13, 14இல் காவிரி நீர்ப் பங்கீட்டை ஒட்டி, கன்னட மொழி வெறிக்கும் - தமிழர் பேரிலான வெறுப்புக்கும் ஆளாகி, அன்றைய கருநாடக முதலமைச்சர் பங்காரப்பாவும், அவரது அமைச்சரவை யில் ஓர் அமைச்சராக இருந்த ரமேஷ் அய்யங்காரும் சதி செய்து கன்னடக் காலிகளையும், வாட்டாள் நாகராஜ் போன்ற கலகக்காரர்களையும், காவல் துறையையும் பயன்படுத்தி, அந்த அய்யங்கார் 12.12.1991இல் அடையாளம் காட்டிய எல்லாத் தமிழர் பகுதிகளையும் எரித் தும், சுவர்களை இடித்தும், வீடுகளில் புகுந்து கொள்ளை அடித்தும், பெண்களை வன்புணர்ச்சி செய்தும், தொழிற் சாலைகளைத் தீயிட்டுக் கொளுத்தியும் இலட்சக்கணக் கான தமிழர்களைத் தமிழகத்துக்குத் துரத்திய பெரு நாசம் விளைவித்த கலவரம் அது. இதைப் பார்த்த பிறகு அன்று மதிய உணவு ஓக்காளித்தது.
11.1.1992இல் பெங்களூரை அடைந்த நான், 12.1.1992 காலை 10 மணிமுதல், புலவர் மறைந்த வெ.கிழார் அவர்கள் துணையுடன் இரவு 7 மணி வரை, 90 பங்கு இடங்களைப் பார்த்தேன்.
கருநாடகம்வாழ் தமிழர் பேரில் கழிபேரிரக்கமும், தமிழகத் தறுதலைத் தலைவர்கள் பேரில் கடுஞ் சினமும் கொண்டேன். ஏன்?
இதுபற்றி, 1992 சனவரி “சிந்தனையாளன்” இதழில், 10 பக்கக் கட்டுரையில் தெளிவாக எழுதியுள்ளேன்.
இனி, அண்மையில் தமிழ்நாட்டு அரசினர், உச்ச நீதிமன்றத்தை அணுகி, மேட்டூர் அணைக்கு 64 டி.எம்.சி. அளவு தண்ணீரை, கருநாடக அணைகளி லிருந்து திறந்துவிட வேண்டுமெனக் கோரி, 2.9.2016 இல் வழக்குத் தொடுத்ததின் பேரில், 5.9.2016இல் உச்சநீதிமன்றம், கருநாடக அரசுக்கு இட்ட கட்டளையை ஏற்று, அதன்படி, விநாடி ஒன்றுக்கு 15,000 கனஅடி அளவு தண்ணீரை, 10 நாள்களுக்குத் தொடர்ந்து மேட்டூர் அணைக்குத் திறந்துவிட கருநாடக அரசு முன்வந்தது. (15,000 கனஅடி என்பது, 4,24,755 லிட்டர் அளவு தண்ணீர் ஆகும். ஒரு கியூசெக் = 28,317 லிட்டர்).
கருநாடக அரசு ஒத்துக்கொண்டாலும், கருநாடக அதிகாரிகள் 6.9.2016 செவ்வாய் இரவு 10,000 கனஅடி அளவு தண்ணீரே திறந்துவிட்டனர். இந்த 10,000 கனஅடி கிருஷ்ணராஜ் சாகரிலிருந்தும் மற்றும் 5,000 கனஅடி கபினி அணையிலிருந்தும் திறந்து விடப்பட்டதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப்பின், முதல்வர் சீத்தராமையா அறிவித்தார்.
அவ்வளவு தான்!
கருநாடகம் வாழ் தமிழர்கள் குறிவைத்துத் தாக்கப் பட்டார்கள். “காவிரி நீர் கருநாடகத்துக்கே!” என்பது, கன்னடியர் ஒவ்வொருவரின் முழக்கம் ஆனது.
இங்கு நாம் ஆற, அமர சில செய்திகளைப் பார்க்க வேண்டும்.
கருநாடகத்தில் உள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104 டி.எம்.சி. இப்போது நான்கு அணை களிலும் இருப்பு உள்ள நீரளவு 46 டி.எம்.சி.
இந்த நிலையில் தமிழகம் கோருகிறபடி, இப்போது, எப்படி 64 டி.எம்.சி. தண்ணீரைக் கொடுக்க முடியும் என்பது ஒரு கேள்வி.
அது சரியான கேள்வி ஆகாது. பின்னர் எது சரி? அவ்வப்போது கருநாடகத்தில் நான்கு அணைகளிலு முள்ள மொத்த நீரில், காவிரி ஆணையத் தீர்ப்பின்படி, அவ்வப்போது சரிசம விகிதாசாரப் பங்குநீரைத் ((Prorata) தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும். இதைக் கரு நாடக அரசு சட்டப்படி செய்யவில்லை. அதை அப்படிச் செய்யச் சொல்வதற்கு அதிகாரம் படைத்த -
1. காவிரி நீர் மேலாண்மை வாரியம்;
2. காவிரி நீர் ஒழுங்கு முறை ஆணையம்
இரண்டையும் இந்திய அரசு உடனே உருவாக்க வேண்டும்.
அடுத்து, கிருஷ்ணராஜசாகர் என்கிற கண்ணம்பாடி அணை 1926 முதல் பாசனத்துக்குப் பயன்பட்டது. அதைக் கட்டியவர்கள் தமிழகத்திலிருந்து கூலிகளாகப் போன தமிழர்களே.
1924இல் பிரிட்டிஷார் காலத்தில் மைசூர் சுதேச அரசும், சென்னை மாகாண அரசும், செய்து கொண்ட ஒப்பந்தப்படி - மேற்கு கருநாடகப் பகுதியில் புதிய அணைகட்ட வேண்டுமானால் மய்ய அரசின் ஒப்பு தலையும் (approval) தமிழ்நாட்டு அரசின் - கீழ்மடைப் பகுதியின் (Riparian State) சம்மதத்தையும் (consent) பெறவேண்டும். ஆனால் அவர்கள் அப்படிப் பெறவில்லை.
I. சென்னை மாகாண ஆட்சியை 1946 முதல் 1967 வரை 21 ஆண்டுக்காலம் காங்கிரசுக் கட்சிதான் நடத்தியது. மத்தியிலும் காங்கிரசு அரசு - மாகாணத்திலும் காங்கிரசு அரசு.
காவிரியை மறித்து, கருநாடக அரசு
1. கபினி அணையை 1959இல் கட்டியது.
2. ஏரங்கி அணையை 1964இல் கட்டியது.
3. சுவர்ணவதி அணையை 1965இல் கட்டியது.
இந்த 3 அணைகளையும் கட்ட, மத்திய அரசிடம் ஒப்புதலும், தமிழக அரசிடம் சம்மதமும் கருநாடக அரசு பெற்றதா? இல்லை. அப்படிப் பெறவேண்டும் என்பதை இந்திய அரசிடம் - பிரகாசம், ஓமந்தூரார், குமாரசாமி ராசா, இராசாசி, காமராசர், பக்தவத்சலம் ஆகியோர் ஏன் மத்திய அரசிடமும், கருநாடக அரசிட மும் வற்புறுத்தவில்லை.
இது பொறுப்பற்றத்தனம் அல்லவா?
II. 6.3.1967 முதல் 31.01.1976 வரை தி.மு.க. தமிழகத்தை ஆட்சி செய்தது.
1. அப்போது 1968இல் தான் ஏமாவதி அணை கட்டப்பட்டது. அதை ஏன் தி.மு.க. ஆட்சி தடுக்கவில்லை?
2. 1974இல் 1924 பழைய ஒப்பந்தம் பற்றிய - பேச்சுவார்த்தையின்போது, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல் பற்றியும் பேச்சு நடந்தது.
1930 முதல் 1970 வரை சராசரியாக, மேட்டூர் அணைக்கு கார்நாடகாவின் நான்கு அணைகளி லிருந்தும் 378.4 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது; பிறகு சராசரியாக 361 டி.எம்.சி. நீர்வந்துள்ளது.
பின்னதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, “ஏற் கெனவே சராசரியாக வந்த நீர் அளவில் 100 டி.எம்.சி. யைக் குறைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு 270 டி.எம்.சி. தர நாங்கள் சம்மதிக்கிறோம்” என கருநாடக அரசு முன்வந்த போது, அதை, ஏன் அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஒத்துக்கொள்ள வில்லை?
நேருவின் மகள் இந்திராகாந்தி சினங்கொள்வார் என்பதாலா? 1972இல் தனிக்கட்சி வைத்த எம்.ஜி.ஆர். அதை எதிர்த்து, தேர்தலில் சிக்கல் செய்வார் என்பதாலா? ஏன்? ஏன்? ஏன்?
III. அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977-1979இல் தமிழக முதல்வராக இருந்தார்.
தி.மு.க. முதல்வர் ஏற்கெனவே கையெழுத்துப் போடத் தவறிய அதே ஒப்பந்தத்தை-அதே வாசகத் துடன் கருநாடக அரசு எம்.ஜி.ஆரிடம் நீட்டியது.
அவர் என்ன செய்தார்? தம்முடன் காவிரி நீர்ப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற - பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சி.மணவாளனிடம் தந்து, “நீங்கள் கையொப்பம் போடுங்கள்” என்றார்.
“நான் போடக்கூடாது” என, சி. மணவாளன் மறுத்துவிட்டார். இச்செய்தியை அவரே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் என்னிடமும் எங்கள் தோழர்களிட மும் அவருடைய வீட்டில் சொன்னார்.
எம்.ஜி.ஆர்., இந்திராவுக்குப் பயந்தாரா? கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சினாரா? ஏன்? ஏன்? ஏன்?
தமிழகத் தமிழர்களே! இப்போது நினையுங்கள் - திராவிடக் கட்சிகளின் தந்நல-கட்சிநலக் கோழைத் தனத்தை எப்படி நாம் செரிப்பது?
கருநாடகத்தில் காவிரி நீர் சிக்கல் என்றால் - அந் நாள், முன்னாள் முதல்வர்கள் நிஜலிங்கப்பா, அனுமந் தய்யா, ஹெக்டே, தேவகவுடா எல்லோரும்; இன்று சித்தராமையா, தேவகவுடா, குமாரசாமி எல்லோரும் ஒன்று சேர்ந்து பேசினார்கள்; பேசுகிறார்கள். ஒரே நேரத் தில் ஒரே வானூர்தியில் தில்லிக்குப் பறந்து போய், பிரதமரைப் பார்த்துப் பேசி அழுத்தம் தருகிறார்கள்.
கேரளாவில் தேங்காய் நார் பாய் ஏற்றுமதி குறைந்து விட்டது-முல்லைப் பெரியாறு அணை சிக்கல் என்றால் கருணாகரன், அந்தோணி, ஈ.கே. நாயனார் என்னும் எதிரும் புதிரும் ஆனவர்கள்-தில்லிக்கு ஒன்றாக ஓடோடிச் சென்று, கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டிக்கொண்டு நாடாளுமன்றம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்; மத்திய அரசுக்கு அழுத்தம் தருகிறார்கள்.
1969க்குப் பிறகு 6 ஆண்டுகள், 1989க்குப் பிறகு பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த கலைஞர் எதற்காவது-எப்போதாவது காமராசரை, பக்தவத்சலத்தை, எம்.ஜி.ஆரை அழைத்துக் கலந்து பேசினாரா? அவர் களை அழைத்துக் கொண்டு தில்லிக்குப் போய் - 57 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு - காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஈழச் சிக்கல் பற்றி மய்ய அரசுக்கு அழுத்தம் தந்தாரா? ஏன் எப்போதுமே இதில் நாட்டங்கொள்ளவில்லை?
அதேபோல், எம்.ஜி.ஆர். 1987 வரையில் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அவரும் அப்படிச் செய்யவில்லை. ஏன்?
ஜெயலலிதா நல்ல அகம்பாவி; ஒரு ஏமாற்றுக் காரர். அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார். ஆனால் இப்போது அவர் செய்ய வேண்டும்.
தெரிந்தோ, தெரியாமலோ கருநாடகம் வாழ் தமிழர்கள் 1972 முதல் தி.மு.க., அ.தி.மு.க. எனப் பிரிந்து கிடக்கிறார்கள்.
எதிர்பாராமல் 6.9.2016 இரவு முதல் இன்று 25.9.2016 வரை - 20 நாள்களாக கருநாடகத்தில் பெங்களூரில், மாண்டியாவில்; மைசூரில் கன்னட மொழி-இன வெறியர்களும், இளைஞர்களும் காலிகளும், வாட்டாள் நாகராஜ் என்ற தெலுங்கரும் எத்தனை எத்தனை கொடுமைகளை கருநாடகத் தமிழருக்கு இழைத்துவிட்டனர்!
கே.பி.என். என்கிற தமிழகத் தனியார் குழுமத் துக்கு, நூற்றுக்கணக்கான சொகுசுப் பேருந்துகளும், சரக்கு உந்துகளும் உள்ளன.
அவர்கள் பெங்களூரில், டிசௌஸா நகரில், தங்க ளுடைய வண்டி நிறுத்த வளாகத்தில் நிறுத்தியிருந்த 56 பேருந்துகளை 12.9.2016 திங்கட்கிழமை தீயிட்டுக் கொளுத்திவிட்டார்களே! ஒவ்வொன்றும் ரூபா 4 கோடி பெறுமானம் என்றால், 225 கோடி ரூபா பெறு மான சொத்தை இழந்துவிட்டார்களே! இரண்டு ஆண்டு களுக்குமுன் அங்கு பிழைக்க வந்த 22 வயது கன்னடப் பெண் தீ வைத்த கும்பலுக்குத் தொடர்ந்து உதவி யிருக்கிறாரே!
நூற்றுக்கணக்கான தமிழக ஓட்டுநர்கள் அடி, உதை, அம்மண அவமானம் தாங்க முடியாமல் அங் கேயே ஒளிந்திருந்து கால்நடையாகவே அவரவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே!
குலதெய்வத்தைக் கும்பிட்டுவிட்டு, பிறந்த ஊரில் திருமணம் செய்துகொள்ள விரும்பிய தமிழ் மணமக்க ளும் உறவினர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓசூர் வரை நடந்தே வந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுப் பதிவு எண் தாங்கிய மகிழுந்துகள், சரக்கு உந்துகள் 100க்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப் பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து, அன்றாடம் 5,000 சரக்கு உந்துகள் கருநாடகத்துக்குச் செல்லும். அவையெல்லாம் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கருநாடகத்திலிருந்து தமிழகத்துக்கு அன்றாடம் 1,000 சரக்கு உந்துகள் வரும். அவையெல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன.
தமிழரின் உணவுக் கடைகள், பெட்டிக் கடைகள், துணிக்கடைகளை அடையாளம் கண்டு அவை அடித்து நொறுக்கப்பட்டன.
உச்சநீதிமன்றம் விநாடிக்கு 15,000 கனஅடி என் பதை 12,000 கனஅடி என்று மறு ஆணை பிறப்பித்த பிறகும், அழிம்பு வேலையை கன்னடர்கள் நிறுத்த வில்லை.
விநாடிக்கு 3000 கனஅடி விடவேண்டும் என இரண்டாந்தடவை உச்சநீதிமன்றம் ஆணையிட்ட போது, “அந்த ஆணையை மீறுவது - தமிழகத்துக்குத் தண்ணீர்விட முடியாது” என, அமைச்சரவையையும் எல்லாக் கட்சித் தலைவர்களையும் கூட்டி, கருநாடக அரசு முடிவு செய்தது.
கருநாடகாவில் நடந்த வன்முறையால், கன்னட நாட்டுக்கு ரூபா 25,000 கோடி இழப்பு ஏற்பட்டுவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.
தமிழ்நாட்டில் பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பினர் 10 பேர், மயிலாப்பூரிலுள்ள நியூ உட் லண்ட்ஸ் ஓட்டலுக்குள் 13.9.2016 காலை 3.45 மணிக்கு நுழைந்து பெட்ரோல் குண்டு வீசியதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கோயம்பேட்டில் கருநாடகப் பதிவெண் தாங்கிய தனியார் பேருந்து தாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு அரசு, கருநாடகத்தார் வணிக நிறுவனங்களுக்குத் தக்க பாதுகாப்பு அளித்திருக்கிறது.
முதலாவதாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பை, கருநாடக அரசு ஏற்றுக்கொண்ட பிறகும் தன்னிச்சை யாக கன்னடக் காலிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுப் பேரழிம்பைத் தமிழர்களுக்கு விளைவித்து விட்டார்கள்.
முழுக் கடையடைப்பை ஒருநாள் நடத்தி கன்னட மக்களை உசுப்பிவிட்டிருக்கிறார்கள்.
இனி, தமிழக மக்களும், தமிழக அரசும் செய்ய வேண்டியது என்ன?
1. இப்போது உடனடியாக, தமிழ்நாட்டு முதலமைச் சர் தம் தலைமையில் எல்லாக் கட்சிகளின் தலைவர்களையும் தமிழக அமைச்சர்கள் எல்லோ ரையும்-தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கள் 57 பேர்களையும் ஒரு குழுவாக அழைத்துக் கொண்டு போய், தில்லியில் நாடாளுமன்றத் தின்முன் காவிரி நீரில் - அவ்வப்போது உள்ள மொத்த இருப்பில் - தமிழர்க்குரிய சரிசம விகிதா சாரப் பங்கைப் பெற ஆவன செய்ய வேண்டும். அதாவது காவிரி நீர் மேலாண்மைக்குழுவையும், காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் இந்தியப் பிரதமர் உடனே அமைத்திட ஆவன செய்ய வேண்டும்.
2. இந்த காவிரிச் சிக்கலின் பக்கம் வேளாண் மக்களின் கவனத்தைத் திருப்புவதோடு நில்லாமல், தமிழகத் தில் உள்ள 41,000 சிறிய பெரிய ஏரிகளில் 10,000 பெரிய ஏரிகளைத் தெரிவு செய்து, 2020-க் குள் அவற்றின் முழுக் கொள்ளளவும் மழை நீரைத் தேக்க - இயந்திரங்களைக் கொண்டு, போர்க்கால விசையில் தூர் வார வேண்டும். நீர்வரத்து, போக்கு வாய்க்கால் ஆக்கிரமிப்புகளையும், ஏரி உள்வாயில் உள்ள வேளாண் ஆக்கிரமிப்பு களையும் கட்டாயமாக அகற்றியே தீரவேண்டும்.
இதில் கையூட்டு இல்லாமல் கண்காணிக்க வேண்டும்.
இவற்றை எவ்வளவு விரைவில் தமிழக அரசு சாதிக்கிறதோ அதுதான் நிரந்தரத் தீர்வாக - நீண்டகாலத் தீர்வாக இருக்க முடியும்.
3. கருநாடகத்தார் கன்னட மொழியைத் தமிழரும் மற்றோரும் கல்வியில் முதல் மொழியாகக் கற்க வேண்டும் என்பதிலும், காவிரியில் கீழ்மடையி லுள்ள தமிழகத்துக்கு உலக நீர்ப்பங்கீடு சட்டங் களின்படி முதலாவது உரிமை உண்டு என்பதை ஏற்காமல்-கருநாடக நலனே முதன்மை எனக் கொண்டும், இதுவரையில் பகைத்தார்கள்.
அண்மைக்காலமாகத் தகவல் தொழில்நுட்பத்துறை அலுவலகங்களில் பெங்களூரிலும் மைசூரிலும் தமிழ்நாட்டாரே ஆதிக்கம் வகிக்கின்றனர் என்கிற பொச்சரிப்பும் வெறுப்பும் ஒரு புதிய காரணியாகச் சேர்ந்துகொண்டது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
4. தமிழகத் தமிழர் எதில் எடுத்தாலும் கட்சி வழி மட்டுமே நின்று - அ.தி.மு.க. - தி.மு.க. என்கிற செம்மறிக் கூடாரங்களில் அடைபட்டு, அந்த அடிப் படையில் தமிழர்க்கான பொதுச் சிக்கல்களை நோக்குவது என்கிற ஈனத்தனத்தை அடியோடு விட்டுவிட வேண்டும்.
5. அதேபோல் கருநாடகம் வாழ் தமிழர்களும் சாதி, கட்சி அடிப்படையில் பிரிந்து நின்று - தாய்மொழி - காவிரி - ஈழச்சிக்கலை நோக்குவதை விட்டுவிட வேண்டும். தமிழ்மொழி உரிமையைக் காப்பதற்கு மட்டும் ஆர்ப்பாட்டம், அமைதியான கிளர்ச்சி செய்யுங்கள்.
கருநாடகம் வாழ் தமிழின ஆடவரும் பெண்டிரும் சிலம்பம், கராத்தே முதலான உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு, உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து நேரும் போது, தங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள இப்போதே ஆயத்தம் ஆகவேண்டும்.
தமிழர் ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு உண்டு.