இந்தியாவின் பரம எதிரியாக உருவம் பெற்றுள்ள நாடு பாகிஸ்தான். இந்த இருநாடுகளுக்கும் இடையில் ‘சிந்து, ஜீலம், ராவி, செனாப்’ உள்ளிட்ட ஆறுகள் எந்தப் பிரச்சினைகளுமின்றி பாய்ந்து கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் அங்கமான தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே ஓடும் காவிரி ஆறு, குருதிப் பலிகளைப் ஏற்படுத்திய ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாயும் ஆறுகள் நிறைய உள்ளன. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, மகாநதி, கிருஷ்ணா நதி போன்ற இந்தியாவின் பெரும் ஆறுகள் பலவும், பல்வேறு மாநிலங்களில் சச்சரவுகளற்றுப் பயணிக்கின்றன. ஆனால் காவிரிக்கு மட்டும் அது சாத்தியமாவதே கிடையாது. காவிரி நதியின் இந்த முரண் ஒரு நூற்றாண்டு காலப் பின்னணி கொண்டது.

cauvery 413கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தின் தலைக்காவிரிப் பகுதியில்தான் பொன்னி நதியெனும் காவிரி பிறப்பெடுக்கிறது. அதனால் காவிரி மீது கர்நாடகம் பெரும்பான்மை உரிமையைக் கேட்கிறது. மேலும் தங்களுக்கே நீர் இல்லாதபோது, நாங்கள் எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பது என்கிற நியாயப் பூர்வமான வாதத்தையும் கர்நாடகம் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டுள்ளது. தமிழகம், காவிரி நீரை முறையாகத் தேக்கி வைக்காமல் வீணாகக் கடலில் கலக்க வைத்துவிடுகிறது என்கிற குற்றச்சாட்டையும் கர்நாடகா தவறாமல் சுட்டிக் காட்டுகிறது.

ஒவ்வொரு முறையும் காவிரி டெல்லிப் பயணமாகி உச்ச நீதிமன்றத்தை அடையும்போதெல்லாம், கர்நாடகா இவைகளைத்தான் தன் பக்க நியாயங்களாக எடுத்துரைக்கின்றது. இதனோடு 1924ஆம் ஆண்டைய ஒப்பந்தம் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்டது என்பதாலும், அது 1974ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது என்கிற காரணத்தாலும், காவிரி மீது தமிழகம் கோரும் உரிமைகள் முறையானதல்ல என்பதையும் சேர்த்தே சொல்லி வருகின்றன, கர்நாடக அரசுகள். ஆனால் தமிழகம் காவிரிக்காக கர்நாடகத்திடம் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சண்டையென்பது உண்மையில் சண்டையல்ல, அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியிருக்கும் உரிமையின் வாதம்.

1892ஆம் ஆண்டு முதன் முதலில் காவிரி நதி தனது பிரச்சினையின் முகப்பைச் சந்தித்தது. திப்பு சுல்தானின் ஆட்சி வரை காவிரியின் வரலாற்றில் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே எவ்வித முரண்களும் உண்டாகவில்லை. ஆனால் அதற்கடுத்த அரசுகளின் குறுகிய மனோபாவத்தால் காவிரி நதி மெல்ல, மெல்ல பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கி, 1892ஆம் ஆண்டு இரு அரசுகளும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலையை அடைந்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிய அணைகளைக் கட்டுதல், பாசனப் பகுதிகளை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை, சென்னை மாகாணத்தின் அனுமதியில்லாமல் செய்யக்கூடாது என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் மைசூர் அரசோ அதனை மிகக் குறுகிய காலத்திலேயே அவமதிப்புச் செய்து, ‘கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவோம்’ என காவிரிப் பிரச்சினையின் வேரை உருவாக்கியது.

பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் அப்போது இந்தியா இருந்ததினால், மைசூர் மற்றும் சென்னை ராஜ்ஜியங்களுக்கு இடையேயான இந்த அணைப் பிரச்சினையானது இங்கிலாந்து வரை சென்றுவிட்டது. இதனைப் பிரிட்டிஷ் அரசு கையிலெடுத்ததின் விளைவாகத்தான், ’1924ஆம் ஆண்டு ஒப்பந்தம்’ உருவானது. காவிரி விவகாரத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக இன்றளவும் இந்த ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டுள்ளது. கர்நாடகம் இதனைக் காலாவதி ஒப்பந்தம் எனவும், தமிழகம் அதை மறுத்து அது காலாவதி ஆகவில்லை என்றும் கூறிக்கொண்டுள்ளன.

“மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர் அணையையும், மெட்ராஸ் அரசு மேட்டூர் அணையையும் கட்டிக் கொள்ளலாம்” என்கிற தீர்ப்பை இங்கிலாந்து அளித்தைத் தொடர்ந்து, 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் உருவானது. அதன்படி இரு அரசுகளும் ஆளுக்கொரு அணைகளைக் கட்டிக் கொள்வதென்றும், வரும் காலங்களில் மைசூர் அரசு புதிய அணைகளைக் கட்டவோ, பாசனப் பகுதிகளை விரிவுபடுத்தவோ சென்னையின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும், மேலும் இந்த ஒப்பந்தம் 50ஆண்டுகள் கழித்து புதுப்பித்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்தபோது, கர்நாடக மாநிலமாக மாறிய மைசூர் அரசு 1970-களில் மீண்டும் பிரச்சினையைக் கிளப்பியது. ஒப்பந்தத்தை மீறிப் பேசத் தொடங்கியது.

1969-ஆம் ஆண்டு காவிரியின் துணை ஆறுகளான கபினி, ஹேமாவதி ஆகியவற்றிற்கு புதிதாக அணைகள் கட்டுவோம் என அறிவிப்புச் செய்துவிட்டு, தமிழகத்தின் அனுமதிக்காக காத்திராமல் அணையைக் கட்டும் வேலையைத் துவக்கியது கர்நாடகம். இந்த அநீதியான செயலால் ஆத்திரமடைந்த தமிழகம், கர்நாடகத்துடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் கால கட்டங்களில்தான், ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்க வேண்டும் என்று 1971ஆம் ஆண்டு மத்திய அரசிற்கு புதிய கோரிக்கையை வைத்தார் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி.

ஆனால் பிரதமர் இந்திராகாந்தி நடுவர் மன்றத்தை அமைக்காமல், மீண்டும் இரு மாநிலங்களையும் பேசிப் பார்க்குமாறு பணிந்தார். பிரதமரின் ஆலோசனைப்படி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. மூன்றாண்டுகள் தொடர் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துகொண்டிருந்த சூழலில், கர்நாடகம் புதிதாக ஒரு வாதத்தை எடுத்து வைத்தது. 1924-ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, எனவே நாங்கள் புதிதாக அணைகளைக் கட்ட தமிழகம் தலையீடு செய்ய முடியாது என்று பிரச்சினையை பூதாகரப்படுத்தியது கர்நாடக அரசு. கூடவே தமிழகத்திற்கு இனி தண்ணீரும் தர முடியாது என்று சட்டம் பேசியது. எனவே காவிரி உச்சநீதிமன்றம் நோக்கி பாய்ந்தது.

உச்சநீதிமன்றமோ ‘ஐம்பதாண்டுகள் கழித்து புதுப்பித்துக் கொள்ளத்தான் ஒப்பந்தத்தில் கூறப்படுள்ளதே தவிர, ஐம்பதாண்டுகளோடு ஒப்பந்தம் காலாவதியாகிவிடும் என்று எழுதப்படவே இல்லை’ என்று கர்நாடகத்தின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் பிரிட்டிஷ் அரசின்போது போடப்பட்ட ஒப்பந்தம் என்பதால் இது செல்லாது என்கிற கர்நாடகத்தின் கூற்றையும், உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் நிராகரித்துவிட்டது.

அதன்படி கர்நாடகம் புது அணைகளைக் கட்ட இயலாது எனவும், தமிழகத்திற்கு முறையாகத் தண்ணீர் தர வேண்டுமென்றும் சட்டக் கட்டளை உருவாகியது. ஆனால் கர்நாடகமோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், தனது பழைய வாதங்களையே அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வந்தது. இப்படித்தான் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை புறக்கணித்து தனது எதேச்சதிகாரப் போக்கோடு செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்றம் கேட்ட தி.மு.க ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகி, தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க அரசு தொடங்கியது.

அ.தி.மு.க.வின் ஆட்சியில் காவிரி விவகாரம் ‘மெளனித்துக் கிடந்த’ சூழலில், 1983ஆம் ஆண்டு தமிழக விவசாயிகள் சங்கம் ஒன்று, உச்சநீதிமன்றத்தில் ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்க வேண்டி மனு செய்தது. அந்த மனு மீதான பரிசீலனைகள் தொடர்ந்து கொண்டிருந்த சூழலில், 1989இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க விவசாயிகளின் பரிசீலனை மனுவிற்கு ஆதரவளித்து, நடுவர் மன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தது. அதேபோல் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அதில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் இந்த ஒருமித்த முடிவு அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்று சேர்ந்தது.

பிரதமர் வி.பி.சிங் அனைத்துக் கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டாலும், தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படி தமிழக சட்டமன்றத்தில் 24-04-1990 அன்று ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைத்திட வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் நீட்சியில், 02-06-1990இல் “காவிரி நடுவர் மன்றம்” மத்திய அரசால் அமைக்கப்பட்ட வரலாறு நிகழ்ந்தது.

காவிரி நடுவர் மன்றம் அமைந்தவுடன் 1991-ஆம் ஆண்டு, நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கி, அதன்மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முறையாக கர்நாடகம் வழங்கிட வழிசெய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கையை வைத்தது. ஆனால் இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் உரிமை நடுவர் மன்றத்திற்கு கிடையாது என்று நடுவர் மன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. இடைக்காலத் தீர்ப்பை அளிக்கும் அதிகாரமும், உரிமையும் நடுவர் மன்றத்திற்கு உண்டு என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி, உருவெடுத்தது நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு.

கர்நாடகா ஆண்டிற்கு 205 டி.எம்.சி காவிரி நீரை தமிழ் நாட்டிற்கு அளிக்க வேண்டுமென தனது இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. காவிரி நடுவர் மன்றம். 1991 ஜீன் மாதத்தில் வெளியான இத்தீர்ப்பில் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீர் வழங்கபட வேண்டும் என்பதுகூட நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல், கர்நாடகாவிடம் உள்ள 11.2 இலட்ச நீர்ப்பாசன நிலங்களை அதற்குமேல் அதிகரிக்கக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பில் வரையறை செய்யப்பட்டது. இவைகளை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகும்வரை கர்நாடகம் பின்பற்ற வேண்டுமென நடுவர் மன்றம் அழுத்தமாகக்கூறி எச்சரித்தது. ஆனால் கர்நாடக அரசு, நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு விரைந்தது.

நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படியான 205 டி.எம்.சி தண்ணீர் என்பது, தமிழகத்தின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யக்கூடியது அல்ல. இன்னொருபுறம் 252 டி.எம்.சி தண்ணீர் முன்னரே நீர்வளத் துறையால் தமிழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு, அது சில காலம் கர்நாடகத்திலிருந்து பெறப்பட்டதை ‘நடுவர் மன்றம்’ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல், சர்வதேச நதி நீர் பங்கீட்டை வரையறுக்கும் 1966ஆம் ஆண்டின் ஹெல்சிங்கி விதியையும் பெருமளவு நடுவர் மன்றம் பின்பற்றவில்லை. இதுபோன்ற குறைபாடுகள் இதில் உள்ளபோதும், தமிழகம் அத்தீர்ப்பிற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்டது. ஆனால் பெருமளவு கர்நாடகாவிற்கே சாதகமான அத்தீர்ப்பைக்கூட கர்நாடக அரசு ஜீரணித்துக்கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

கர்நாடகாவின் வழக்கை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், டிசம்பர் 11,1991 அன்று தனது தீர்ப்பை அளித்தது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பு செல்லுமென்றும், இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டுமென்றும் மீண்டும் கர்நாடகாவிற்கு சாட்டையடி கொடுத்தது உச்சநீதிமன்றம். ஆனால் கர்நாடகா வழக்கம் போல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனப்படுத்தியது. கர்நாடகத்தின் அன்றைய முதலமைச்சரான பங்காரப்பா ‘தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது’ எனக்கூறி வெளிப்படையாகவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தார். அத்தோடு நில்லாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கெதிராக முழு பந்த் ஒன்றையும் பங்காரப்பாவே அறிவிப்பு செய்து, அதன்மூலம் நிகழ்ந்த கோரங்களுக்கு அவரே தலைமையும் தாங்கினார். இதன் தொடர்ச்சியாய் உருவான பெங்களூர் கலவரம் தமிழர்களின் வாழ்வை இரணத்தில் மூழ்க வைத்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அடுத்த தினத்தில், அதாவது 12-12-1991 அன்று கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் தாக்குதலுக்கு ஆளாகினார்கள். தமிழர்களின் சொத்துக்கள் பலகோடி அளவில் சேதமாக்கப்பட்டது. தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக 18-பேர் அப்போது கன்னடத்தவர்களின் வெறி ஆட்டத்திற்கு பலியானதாக அரசின் தகவல் கூறுகிறது. மேலும் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து, தமிழ் நாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்ட இடப்பெயர்வுத் துயரமும் அப்போது நடந்தது. கர்நாடக அரசின் துணையோடு நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதம், டிசம்பர் 13ஆம் தேதியும் தொடர்ந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் கர்நாடகத்தில் வசிக்கும் அடித்தட்டு தமிழர்கள் வாங்கிய அடிகளும், பெற்ற வலிகளும் எளிதில் மறந்துவிட இயலாதது ஆகும்.

கன்னடத்தவர்களின் தாக்குதல்களைக் கண்டு அப்போது தமிழகம் கொதித்தெழுந்தது என்றாலும், தமிழகத்தில் வாழும் கர்நாடகத்தினர்மீது தமிழர்கள் தாக்குதல்கள் எதுவும் நடத்தவில்லை. மாறாக தமிழகம் அப்போதுகூட சட்ட வழியிலேயேதான் நீதியைத் தேட முனைந்தது. அதேசமயம், கர்நாடகம் இத்தாக்குதல்களின் வழியாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை சிறிது காலம் எல்லோரும் மறைக்கும்படி செய்துவிட்டது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ஆம் ஆண்டு வெளியாகும்வரை நிலைமை இப்படித்தான் நீண்டது. இதற்கிடையில்தான் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டி, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததும்; நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் தலைமையில் தமிழகம், கர்நாடகம் கேரளம் பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகக்கொண்டு ’காவிரி ஆணையம்’ ஒன்று உருவாக்கியதும் நடந்தன.

அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்ணாவிரப் போராட்டத்தால் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியானது. 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘காவிரி ஆணையம்’ எவ்வித அதிகாரங்களுமற்ற ஒன்றாக இருந்ததால், அதனால் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை.

இச்சூலலில்தான், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. இது காவிரியின் மொத்த அளவை 740 டி.எம்.சி ஆகக் கணக்கிட்டு, அதில் 419 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு ஒதுக்கி தீர்ப்பளித்தது. இந்த 419 டி.எம்.சி.யில் கர்நாடக எல்லையான பில்லிக்குண்டுலிருந்து பூம்புகார் வரையிலான 227 டி.எம்.சி நீரை கழித்துவிட்டு, மீதமுள்ள 192 டி.எம்.சி.யை கர்நாடகம் கொடுக்க வேண்டும் என அதில் வரையறுக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா வழக்கம்போல் இத்தீர்ப்பையும் நிராகரித்து, உச்சநீதிமன்றம் சென்றது.

இவைகளின் நீட்சியாய்தான், இப்போது மறுபடியும் காவிரி தலைவிரித்தாடிக் கொண்டுள்ளது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மீதான வாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கம்போலவே ‘தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுங்கள்’ என கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா வழக்கத்திற்கு மாறாக, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்தது. அதையும் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா ‘மிகுந்த மனவேதனையுடன்தான்’ தான் இதனைச் செய்வதாக சொல்லிக் காட்டினார். ஆனால் சித்தாரமையாவின் அறிவிப்பை அடுத்து, மீண்டும் 1991ஆம் ஆண்டைப் போன்ற ஒரு கோரத் தாண்டவம் தமிழர்களின்மீது இன்று கர்நாடகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

வழக்கம்போல் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அவர்களின் இருப்பிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள், பலவந்தமாக இடப்பெயர்வு செய்யப்பட்டனர். இந்த எல்லாவற்றின் உச்சமாக தமிழர் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட காணொளியும், பேருந்து ஓட்டுநரான வயது முதிர்ந்த நபர் தமிழர் என்கிற ஒரே காரணத்துக்காக கர்நாடக இனவெறிக் கும்பலால் கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வும் தமிழகத்தை கொந்தளிக்க வைத்தது.

கன்னடத்தினரின் இந்தப் போக்குகள் தமிழ் உணர்வாளர்களையெல்லாம் தட்டியெழுப்பியது. விளைவு, நாம் தமிழர் கட்சி சென்னையில் நடத்திய பேரணியொன்றில் ‘விக்னேஷ்’ என்ற இளைஞர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்திக்கொண்டு இறந்துபோனான். காவிரிக்கு நீதி வேண்டி தமிழன் உயிர்த் தியாகம் செய்தான் என்கிற வரலாற்றைத் தவிர, விக்னேஷின் மரணத்தால் தமிழகத்திற்கு வேறொன்றும் கிடைத்துவிடவில்லை. வேறுவிதமாகச் சொன்னால், 1991இல் கன்னடர்கள் தமிழர்களைக் கொன்றனர், இன்று தமிழன் தன்னைத் தானே கொளுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான்.

இந்தக் கொதிநிலையில்தான் உச்சநீதிமன்றம் 2016 செப்டம்பரில், ‘வரும் செப்டம்பர் 27ம் தேதி வரை தமிழகத்திற்கு நாளொன்றிற்கு 6000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அத்தோடு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பரிந்துரை செய்த ‘காவிரி மேலாண்மை வாரியத்தை’ இன்னும் ஏன் மத்திய அரசு அமைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி, இன்னும் நான்கு வாரங்களுக்குள் ‘மேலாண்மை வாரியம்’ அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கெடு விதித்தது.

இது தமிழகத்திற்கு கிடைத்த இன்னொரு முக்கியமான வரலாற்று வெற்றியாகும். ஆனால் கர்நாடகா தனக்கே உரித்தான பாணியில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையும் ஏற்க மறுத்ததோடு, இந்தியாவின் ஜனநாயகத் தன்மையையே கொலை செய்யும்விதமாக புதிய காரியத்தை துணிந்து செய்தது.

தினமும் 6000 கன அடி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று கர்நாடகா தனது ‘சட்டமன்றத்திலேயே’ தீர்மானம் நிறைவேற்றியது, இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனே உச்சநீதிமன்றம் கர்நாடகத்தின் இந்தப் போக்கைக் கண்டித்து, மீண்டும் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டது. ஆனால் சலசலப்புகளைக் கண்டு அஞ்சாத அரசாயிற்றே கர்நாடகா. அதனால் உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையையும் அது காற்றில்தான் பறக்கவிட்டது.

இப்படியாகத் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு ஆணையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என அறிக்கை அளித்துள்ளது. ஆனால் இந்த அறிக்கை வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரை, மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்துக்கொண்டுள்ளோம் என்றுதான் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். மத்திய அரசின் கட்சிக்காரர்கள் அனைவரும் தொலைக்காட்சி விவாதங்களில் நீர்வளத்துறை அமைச்சரின் அறிக்கைகளையே குறிப்பிட்டு வாதிட்டு வந்தனர். ஆனால் மத்திய அரசு திடீரென பல்டி அடித்துவிட்டது.

தண்ணீர் தர மறுத்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றும் கர்நாடகத்தின் ஆளும் அரசிற்கு ஒரு அரசியல் உள்ளதுபோல், மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது எனக்கூறும் மத்தியில் ஆளும் அரசிற்கும் ஒரு அரசியல் உள்ளது. இரண்டு அரசியலும், 2017இல் வரவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் என்கிற புள்ளியில் சங்கமித்துவிடுகின்றன.

1991இல் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும், இப்போது தமிழர்கள் கர்நாடகவில் தாக்கப்பட்டதற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. அன்று நடந்தது இனவெறித் தாக்குதல், இன்று நடந்தது ‘காவி வெறித்’ தாக்குதல் என்கிற உண்மை பெரும்பான்மை கருத்தாக உருவெடுத்துள்ளது. எப்படியும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்கிற ஒரே நோக்கில் பாரதிய ஜனதா கட்சியினர், கர்நாடகத்தில் வெளிப்படையாகவே வன்முறையில் ஈடுபட்டனர். அதன் அரசியல் வடிவமாகத்தான் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது. ஆனால் இதே மத்திய அரசுதான் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்தபோது, ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மீறமுடியாது’ எனக்கூறியதை நாம் மறந்துவிடக் கூடாது.

அதேபோல் கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசிற்கும், தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கமே பிரதானமாக இருப்பதால், சித்தாரமையாவும் மோடியின் பார்முலாவையே பின்பற்றுகிறார். தமிழகத்தின் பா.ஜ.க.வினரோ, ஏதோ கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்தான் சரியில்லை என்பது போலவும், அதனால் அந்த அரசை கலைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துக்கொண்டுள்ளனர். தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை என்ன செய்வது?

தீர்ப்பளித்து, ஆணையிட்டு, கெடு விதித்து என எல்லாவற்றிலும் தோற்றுப்போன உச்சநீதிமன்றம் இப்போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மீதான தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துவிட்டது. ஆனால் கர்நாடகவை ஒரு சம்பிரதாயத்திற்காக, ‘தீர்ப்பு வரும்வரை தமிழகத்திற்கு 2000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்’ என ஆணையிட்டுள்ளது. இதில் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படியான 205 டி.எம்.சி என்ன ஆனது? இதற்குச் சற்று முன்னர் உச்சநீதிமன்றமே கூறிய 6000 கன அடி நீர் என்கிற தீர்ப்பு எங்கு சென்றது? என்பதற்கெல்லாம் இங்கு விடையே கிடைக்காது.

எல்லாவிதமான அதிகாரங்களும் உள்ள உச்சநீதிமன்றம், காவிரி விவகாரத்தில் வரலாறு முழுக்க கர்நாடகத்திற்கு அடிபணிந்து செல்வது அவலமானதாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒரு மாநில அரசு கட்டுப்படவில்லையெனில், எந்ததெந்த துறைகளில் அது கட்டுப்படவில்லையோ அத்துறைகளை ‘இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 356-ன் படி’ குடியரசுத் தலைவர் கையிலெடுத்துக் கொள்ளவேண்டும். ஆனாலும் கர்நாடகத்தின்மீது இப்படியான எந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ இதுநாள்வரை எடுத்ததில்லை. அதுதான் சட்டமன்றத்திலேயே ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது’ என தீர்மானம் நிறைவேற்றும் எல்லைக்கு கர்நாடகாவை துணிவு கொள்ளச்செய்திருக்கிறது.

இப்போதும் குடியரசுத் தலைவர் நினைத்தால், சம்பந்தப்பட்ட துறைகளை மட்டுமல்ல, கர்நாடக அரசையே கலைக்க இயலும். ஆனாலும் மத்திய அரசு செய்யாது. அப்படி மத்திய அரசு செய்ய முற்பட்டால், மேலாண்மை வாரியம் விடயத்தில் மத்திய அரசு நீதிமன்றப் புறக்கணிப்பு செய்தது விவாதமாகும். ஆக மத்திய பா.ஜ.க அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசோடு கைகுலுக்கும் அரிய காலமிது.

தமிழகமோ எல்லாவிதத்திலும் தன் பக்கம் நியாயத்தை வைத்துக்கொண்டு, காவிரி நீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய இடத்திலுள்ள ஆளும் அ.தி.மு.க. அரசோ, அப்பல்லோ வாசலில் அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டுள்ளது. காய்ச்சல் என்று சொல்லிச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22, 2016இல் சிகிச்சைக்குச் சென்ற முதல்வரை இன்றளவும் (நவம்பர் 22, 2016) யாராலும் பார்க்க இயலவில்லை. அவ்வப்போது அப்பல்லோ வெளியிடும் அறிக்கைகளின் வழியாக மட்டுமே, முதலமைச்சர் ஜெயலலிதா நலத்துடன் இருப்பதாக அறிய முடிகிறது. என்னதான் முதலமைச்சரின் துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைத்தாலும், ஜெயலலிதா பணிக்குத் திரும்பும்வரை தமிழகத்தில் ஆட்சியென்பது நிச்சயம் நடைபெறாது என்பது யாவரும் அறிந்ததே.

தமிழகம் இப்போது நிர்கதியான நிலையில் தவித்துக்கொண்டுள்ளது. தமிழர்கள் வழக்கம்போல் வீதிகளில் ‘காவிரி நீர் வேண்டி’ முழக்கமிட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தின் பலமிக்க எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டதால் எவ்விதமான பலன் கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, கூட்டத்தை தி.மு.க நடத்துகிறது என்கிற ஒரே காரணத்திற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சில கட்சிகள் நிராகரிப்பதாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதுதான் தமிழகத்தின் நிலை. ஆனால் கர்நாடகத்திலோ, காவிரி என்றாலே அனைத்துக் கட்சியினரும் ஓரணியில் திரண்டுவிடுகின்றனர்.

நாம் இப்போது நமக்கான நீதியை எப்படிப் பெறுவதென்பது குறித்தும், காவிரியின் நூற்றாண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டியது பற்றியும் ஒரு தெளிவை அடைய வேண்டிய காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ‘நடந்தாய் வாழி காவேரி’ என்கிற வரிகளைப் போல, காவிரி நடந்து கொண்டேதான் உள்ளது. ஆனால் நதியாக அல்ல நீதிமன்றங்களில் வழக்குகளாக. இனியும் அது நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருக்கும். நாம் இவைகளுக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம்? பிரச்சினையைப் பேசும் நாம் அதற்கான தீர்வுகளை நோக்கி நகர்வது எப்போது? காவிரி நீர் பொய்த்துப் போகும் சூழலில், நாம் எதைக்கொண்டு நமது நீராதாரத்தை சரி செய்யப்போகிறோம்? என்கிற சுயவிமரிசனக் கேள்விகளை நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கட்டம் உருவாகியிருக்கிறது.

ஆண்டுக்கு 192 டி.எம்.சி காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டாலும், நமக்கான தேவையை அது முழுமையாக பூர்த்தி செய்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. நாம் மாற்று வழிகளைத் தேட வேண்டும். மணல் கொள்ளைகளைத் தடுக்க கரம் கோர்க்க வேண்டும். மணல் மாபியாக்களுக்கு எதிரான வலுவான போராட்டத்தை நாம் முன்னெடுப்பது அவசியம். வீணாக கடலில் கலக்கும் நீரை தேக்கி வைக்கும்படியான, நமது வடிகால் வசதிகளை முறைப்படுத்த அரசிற்கு நாம் அழுத்தம் தந்தாக வேண்டும்.

ஆனால் அழுத்தம் கொடுக்க வேண்டிய நாம், அரசியல் சதுரங்கத்தில் மிக எளிதாகப் பலியாக்கப்பட்டுவிடுகிறோம். காவிரி உரிமைப் பிரச்சினை எரிமலையாய் வெடித்துக் கிளம்பியுள்ள சூழலைத் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் ‘இடைத்தேர்தல்’ அறிவிப்பு.  காவிரி நீருக்காகக் களம் கண்டவர்கள் எல்லோரும், தேர்தல் பரபரப்பில் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்டனர். தேதி குறிப்பிடாமால், ‘தஞ்சாவூர், அரவக்குறிச்சி’ தேர்தல்களைத் தள்ளிவைத்த தேர்தல் ஆணையம், திடீரென இந்தச் சூழலில் தேர்தலை அறிவித்ததில் எவ்வித திசை திருப்பும் அரசியலும் இல்லையென நாம் அப்பட்டமாக நம்பித்தான் ஆக வேண்டும் போல.

இடைத்தேர்தல் இன்று நடந்து முடிந்துவிட்ட சூழலில்கூட, நம்மால் காவிரியை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத அளவிற்கு பிரச்சினைகளின் பட்டியல் நம் மூளையை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இடைத்தேர்தலில் காவிரியை மறந்த நாம், இன்று 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற நெஞ்சடைப்பில் ஓடிக்கொண்டிருக்கோம். இதைவிடக்கொடுமை என்னவென்றால், 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் ஒழிப்பால், பிரதமர் மோடி ‘கருப்புப் பணத்தை’ ஒழித்துவிட்டார் என்று அப்பாவியாக நம்பும் மக்களாக நாம் மாற்றப்பட்டிருப்பதுதான். கார்ப்பரேட்டுகளால் உருவாக்கப்பட்ட மோடி, கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகச் செயல்படுவார் என்று நம்பும் நம்முடைய அறியாமை ஒன்று போதாதா, நாம் அரசியல் அரங்கில் வீழ்த்தப்படுவதற்கு?   

காவிரிப் பிரச்சினையில் முதலில் நாம், நம் கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பதே முதல் வெற்றியாகும். தூர் வாராமல் கிடக்கும் நீர் நிலையங்களையும், கட்டிடங்களாக மாற்றப்படும் நீர் நிலையங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு போராடினால்தான், நாம் நமது நீராதாரத்தையும், நமது விவசாயத்தையும் காக்க முடியும். வெறுமனே உணர்வுத் தளத்திலிருந்து கர்நாடகவை எதிர்ப்பதால், நாம் நமக்கானவற்றை முழுமையாக அடைந்துவிட முடியாது.

1924இல் 15.19 இலட்சம் ஏக்கர் நீர்பாசனப் பகுதியை தமிழகமும், 3.44 இலட்சம் ஏக்கர் நீர்பாசனப் பகுதியை கர்நாடகமும் கொண்டிருந்ததாக ‘காவிரி நடுவர் மன்றம்’ தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நடுவர் மன்றத்தின் 1991ஆம் ஆண்டின் இடைக்காலத் தீர்ப்பில் ’11.2 இலட்சம் ஏக்கர் நீர்பாசனப் பகுதியை’ கர்நாடகம் கொண்டிருப்பதாக தகவல் உள்ளது. இப்போது கர்நாடகம் 15 இலட்சம் ஏக்கர் வரை தனது நீர்பாசனப் பரப்பை அதிகரித்து, தண்ணீரை வீணாகமல் சேகரிக்க பல துணை அணைகளையும் கட்டி உள்ளது.

ஆனால் நம் தமிழகம் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக’ நீர் பாசனப் பகுதிகளை அதிகரிக்கும் முயற்சிகளைக் மேற்கொள்ளாமல், இருப்பவற்றை தக்க வைத்துக் கொள்ளவும் தவறவிட்டுள்ளது. இவற்றையெல்லாம் நாம் கண்கொண்டு பார்த்து, அரசை நோக்கி விழிப்புணர்வுக் கேள்விகளைக் கேட்டால்தான், நாம் நமது ஜீவாதாரத்தை நிலை நாட்ட முடியும். அதேசமயம் கர்நாடகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாம் வேறு போராட்டங்களையும் வலிமையாக முன்னெடுக்க வேண்டும்.

நம்முடைய உரிமையை நமக்கு அளிக்காத கர்நாடகத்திற்கு, நாம் ஏன் மின்சாரம் அளிக்க வேண்டும் என்கிற கேள்வியை நம்மில் பலர் எழுப்பியிருப்போம். ஆனால் அதற்கு எப்போது சட்ட அளுத்தம் கொடுத்துள்ளோம்?

கூடன்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் பாதிப்பு குறித்தும், அதனைச் செயலிழக்க வைக்க வேண்டும் எனவும் மிகப்பெரும் மக்கள் போராட்டம் இன்றளவும் நடந்துகொண்டுள்ள சூழலில்தான், பிரிக்ஸ் மாநாட்டில் மத்திய அரசு மேலும் இரண்டு அணு உலைகளை கூடன்குளத்தில் உருவாக்க ஆணை கொடுத்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான இடமே இல்லை எனக்கூறி எய்ம்ஸ் மருத்துவமனையை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்கிறது.

காவிரியை மறுக்கும் அரசு, எய்ம்ஸ் மருத்துவமனையை வேறுபக்கம் கொண்டு செல்லும் அரசு, அணுமின் நிலையத்தையும், மீத்தேனையும் மட்டும் நம்மீது சுமத்துகிறது. ஆனால் நாம் கட்சிக்கொரு நீதி பேசி பிரிந்து நிற்கிறோம்.

உண்மையில் காவிரியின் மீதான முழு உரிமை நமக்குத்தான் உள்ளது. ஆனால் நம் தமிழக அரசியலாளர்களின் தவறான அணுகுமுறையால், காவிரி இன்று கர்நாடகத்தின் பிடியில் சிக்கியுள்ளது. காவிரி, குடகு பகுதியில் உற்பத்தியாகி, தமிழகத்தின் பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் குடகு, ஹாசன், மைசூர், பெங்களூர், சாம்ரஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக 320 கிலோ மீட்டர்வரை பயணப்படும் காவிரி, தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை என இத்தனை மாவட்டங்களில் சுமார் 416 கிலோ மீட்டர் பாய்ந்து, பூம்புகாரில் கடலில் சங்கமிக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் காவிரி நதி 64 கிலோ மீட்டர் ஓடுகிறது. இப்படி நீண்டு ஓடும் காவிரியின் மொத்த தூரம் 800 கிலோ மீட்டர் ஆகும். இதன் மொத்த தூரத்தில் தமிழகத்தின் பங்கே அதிகமானது என்பதைவிட, காவிரி பிறப்பெடுக்கும் குடகுப் பகுதி தமிழகத்திற்கு உண்டானது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. ஆனால் அதுதான் வரலாற்று உண்மை.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் தனிமாநிலமாக துளு மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவானது. பின்னர் 1957இல் குடகு மக்கள் தங்களை யூனியன் பகுதியாக இந்தியா இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நேரு, யூனியனாக உங்களை இணைக்க முடியாது, வேண்டுமெனில் ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.

நேருவின் ஆலோசனைப்படி குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழக அரசியலாளர்கள், அதனை நிராகரித்துவிட்டார்கள். அப்போது தந்தை பெரியார் ஒருவர்தான், குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். விடுதலைப் பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார். இருந்தும் அவரின் குரலை அலட்சியம் செய்ததின் விளைவைத்தான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

தமிழகம் குடகை நிராகரித்தைப் போன்றே, கர்நாடகமும் முதலில் நிராகரிக்கவே செய்தது. ஆனால் ‘மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா’ எனும் அறியப்பட்ட பொறியியல் விஞ்ஞானியின் கருத்தினால், கர்நாடகம் குடகை ஏற்றுக்கொண்டது. கர்நாடகம் ஒரு அறிவியல் அறிஞரின் குரலுக்கு செவி சாய்த்ததிலும், தமிழகம் சமூகவியல் அறிஞரான பெரியாரின் குரலை அலட்சியம் செய்ததிலும் இருக்கிறது காவிரி மீது பறிபோன நமது உரிமை.

தமிழகத்தில் தயாரிக்கும் மின்சாரங்களை கர்நாடகத்திற்கு அளிக்கக்கூடாது என்கிற நமது கோரிக்கையோடு, குடகை மீட்கும் கோரிக்கையும் நாம் இன்று கையிலெடுக்க வேண்டும். உத்திகளால்தான் இனி கர்நாடகத்தை அடிபணிய வைக்க முடியுமே தவிர, வெறுமனே நீதிமன்றங்களினால் அது ஒருபோதும் சாத்தியப்படாது. காவிரி நீர் மட்டுமல்ல, காவிரி நதியே நமது உரிமைதான்.

பழனி ஷஹான்

Pin It