மருத்துவப் படிப்புக்கான தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடை பெறல் குறித்து என். இராமநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுத் தார். அவருடைய விண்ணப்பத்தில், பொது நுழைவுத் தேர்வு முடிவில் கண்டுள்ள மதிப்பெண் தரவரிசை யின்படி ஒற்றைச் சாரள அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, தமிழ்நாட்டு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கண்காணிப்பின்கீழ் நடத் தப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று என். இராமநாதன் கோரியிருந் தார்.
மேலும், தற்போது ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் மாணவர்கள் தனித்தனியே விண்ணப்பித்து வரு கின்றனர். ஒருங்கிணைந்த தன்மையில் இதை ஒழுங்குபடுத்துவதற்கான - முறை யான எந்தவொரு நடைமுறையும் வகுக் கப்படவில்லை. அதனால் மாணவர் சேர்க்கையின் வெளிப்படைத் தன்மை வினாக்குறியாக நிற்கிறது என்று என். இராம நாதன் தன்னுடைய விண்ணப் பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு, 19.9.2016 அன்று இந்த வழக்கைத் தள்ளு படி செய்தது. பொதுநல வழக்கைத் தொடுத்த என். இராமநாதன், தான் தெரிவித்துள்ள கருத்துக்கு ஆதார மாகத் திட்டவட்டமான சான்று எiதையும் அளிக்க வில்லை. வெறும் ஊகத்தின் அடிப்படையிலேயே தன் கருத்தை முன்வைத்துள்ளார். இவர் மருத்துவக் கல்வி சார்ந்த வல்லுநரோ அல்லது பாதிக்கப்பட்டவரோ அல்ல. இவர் தொடுத்த வழக்கு பொய்யானது மட்டு மல்லாமல், விளம்பரம் தேடும் வகையில் பாற்பட்ட தாகவும் இருக்கிறது என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கான காரணங்களாகக் கூறியுள்ளனர். இதில், நீதிபதிகள் பொறுப்பற்ற தன்மை யில் கருத்துரைத்துள்ளனர் என்றே கருத வேண்டி யுள்ளது.
ஏனெனில், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முறையை முற்றிலுமாக நீக்கிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர் ஈ. சுரேஷ் என்பவர் பொது நுழைவுத் தேர்வை நீக்கிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர். தவே, யு.யு. லலித், எல். நாகேசுவரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 9.9.2016 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நுழைவுத் தேர்வுக்கு எதிராக வந்துள்ள மற்ற விண்ணப்பங்களுடன் இது சேர்த்து விசாரிக்கப்படும் என்றும், இந்திய மருத்துவக் கவுன்சில், நடுவண் அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை இதற்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அறிவிக்கை அனுப்புமாறும் ஆணை யிட்டனர்.
உச்சநீதிமன்றம் இதற்குமுன் வழங்கிய தீர்ப்புகள் சிலவற்றில் பொதுமக்களின் உணர்வுகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என். இராமநாதன் வழக்கைத் தள்ளுபடி செய்யுமுன், சமூகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை என்று நாம் கூறுகிறோம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பற்ற தன்மையில் ஒற்றைச் சாரள முறையில் மாநில அரசின் கண்காணிப்பின்கீழ் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தனர் என்கிற கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் 21.9.2016 அன்று உச்சநீதிமன்றம் ஓர் ஆணையை பிறப்பித் துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளே கலந்தாய்வை (counselling) நடத்தி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்தின. இதை எதிர்த்து மத்தியப் பிரதேச மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. உச்சநீதி மன்ற நீதிபதிகள் அனில் ஆர். தவே, ஏ.கே. சிக்ரி, ஆர்.கே. அகர்வால், ஆதர்ஷ்குமார் கோயல், ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அரசமைப்புச்சட்ட அமர்வு இதை விசாரித்தது. இந்த அமர்வின் தலைவர் அனில் ஆர். தவே, “எந்தவொரு தனியார் மருத்துவக் கல்லூரி யிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன்மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் அவை அனைத்தையும் இரத்து செய்கிறோம்.
மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை இந்தக் கல்வி ஆண்டே நடத்தவேண்டும் என்று நாங்கள் ஆணையிட்ட போது, மாநில அரசுகளின் கண்காணிப் பின்கீழ் ஒற்றைச் சாரள முறையிலான கலந்தாய்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தோம். எனவே மத்தியப் பிரதேசத்தில் மாநில அரசின் கலந் தாய்வின் மூலம் செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் மாண வர் சேர்க்கையை முடிக்க வேண்டும்” என்று ஆணை யிட்டார்.
மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வின் முடிவு 16.8.2016 அன்று வெளியானதும் கேரள மாநில முதலமைச்சர் பிரணாய் விசயன், கேரளத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குப் பொது நுழைவுத் தேர்வின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் ஒற்றைச் சாரள முறையில் கலந்தாய்வு மூலம் மாநில அரசு மாணவர் சேர்க்கையை நடத்தும் என்கிற ஆணையைப் பிறப்பித்தார். பஞ்சாப் மாநில முதலமைச்சரும் இவ்வாறு அறிவித்தார். ஆனால் கேரளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல் லூரிகளின் சங்கம், கேரள அரசின் ஆணையை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
கேரள உயர்நீதிமன்றம், “மாநில அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங் களுக்கு ஒற்றைச் சாரள முறையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதை நடுவண் அரசு நிபந்தனையாக விதிக்கவில்லை” என்று தனியார் கல்லூரிகளில் வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, அரசின் ஆணையை இரத்து செய்தது.
பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, இவ்வளவு குழப்பம் இருப்பதற்கு காரணம் நடுவண் அரசோ, உச்சநீதி மன்றமோ இதுகுறித்து ஒரு திட்டவட்டமான நெறிமுறையை வகுக்காததே ஆகும்.
நடுவண் அரசு, மாநில அரசுகளின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என் பதைத் தன்னுடைய அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்து விடவேண்டும் என்கிற ஏகாதிபத்திய எண்ணத்தால் எப்படியும் பொது நுழைவுத் தேர்வை இந்தக் கல்வி ஆண்டே நடத்திட வேண்டும் என்று துடியாய்த் துடித்தது. அதனால்தான் இந்தக் கல்வி ஆண்டே பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று பார்ப்பன - மேல்சாதி ஆதிக்க வர்க்கத்தின் “சங்கல்பம்” என்கிற தொண்டு நிறுவனம் தொடுத்த வழக்கின் விசாரணை, 27.4.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, நடுவண் அரசின் வழக்குரைஞர், இந்திய மருத்துவக் கல்விக் குழுவின் (MCI) வழக்குரைஞர், நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) வழக்குரைஞர் மூவரும் இந்தக் கல்வி ஆண்டிலேயே (2016-17) மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத் தேர்வை நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் அணிய மாக இருப்பதாக உறுதி கூறினர். அப்போதுகூட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்துவது என்பதற்கான வழிமுறையைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.
நுழைவுத்தேர்வு குறித்த அட்டவணையை நடு வண் அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்தது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் 28.4.2016 அன்று இந்தக் கல்வி ஆண்டே மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி 1985 முதல் மாநிலங்களிடமிருந்து நடுவண் அரசு பறித்துக் கொண்ட 15 விழுக்காடு இடங்களுக்கு 1.5.2016 அன்று நுழைவுத் தேர்வு நடக்கும். மீதி 85 விழுக்காடு இடங்களுக்கு 24.7.2016 அன்று நுழைவுத் தேர்வு நடக்கும். இவ்விரு கட்ட நுழைவுத் தேர்வின் முடிவுகள் 17.8.2016க்குள் வெளியிடப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை 30.9.2016க்குள் முடிக்கப்படட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு வெளியான பின், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு கூடாது; மாணவர் சேர்க்கை அதிகாரம் மாநிலங் களிடமே இருக்க வேண்டும் என்று கூறிப் பல மாநில அரசுகள் எதிர்த்தன. எனவே இந்தக் கல்வி ஆண்டிற்கு மட்டும் பொது நுழைவுத் தேர்விலிருந்து மாநில அரசு களின் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை நடுவண் அரசு 20.5.2016 அன்று பிறப் பித்தது. அதன்படி தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப் பின் மதிப்பெண் தரவரிசைப்படி மாநில அரசின் மருத்து வக் கல்லூரி இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு ஒப்படைத்த இடங்களுக்கும் ஒற்றைச் சாரளக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது.
19.7.2016 அன்று மக்களவையில் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படவும், அடுத்த ஆண்டு முதல் மாநில அரசுகளின்கீழ் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சேர்த்து தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படவும் சட்டத் திருத்தம் நிறைவேறியது. மாநிலங்கள் அவை யில் 1.8.2016 அன்று இச்சட்டங்கள் நிறை வேறின. பொது நுழைவுத் தேர்வு குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்னும் நடந்து கொண்டி ருக்கிறது. இதன்மீது உச்சநீதிமன்றம் இறுதியான தீர்ப்பு வழங்காத நிலையில், எப்படி நடுவண் அரசு இதற்கான சட்டங்களை நிறைவேற்றலாம்? மாநில உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்கிற அதிகார வெறிதானே இதற் குக் காரணம்!
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நுழைவுத் தேர்வில் 7,31,223 பேர் தேர்வு எழுதினர். இவர் களில், 4,09,477 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதியைப் பெற்றிருப்ப தாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் மதிப்பெண் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் மொத்தம் 412 மருத்துவக் கல்லூரி கள் உள்ளன. 190 அரசுக் கல்லூரிகளில் 25,880 இடங்கள்; 222 தனியார் கல்லூரிகளில் 26835 இடங்கள் என மொத்தம் 52715 இடங்கள் உள்ளன.
நுழைவுத் தேர்வின் முடிவு வெளியாவதற்கு ஒரு கிழமைக்குமுன் 9.8.2016 அன்று நடுவண் அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சகத்திலிருந்து மாநில மக்கள் நலவாழ்வுத் துறையின் செயலாளருக்கு ஒரு மடல் அனுப்பப்பட்டது. அதில், மாநில அரசுகள் விரும்பி னால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் நடத்திக் கொள்ள லாம் என்று கூறப்பட்டிருந்தது. திட்டவட்டமான நெறி முறையாக எதையும் கூறவில்லை. மேலும் பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு அணியமாக இருப்ப தாக உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த நடுவண் அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சகமோ, இந்திய மருத்துவக் கல்விக் கழகமோ (MCI), மத்திய இடைநிலைக் கல்வி வாரியமோ தத்தம் இணைய தளத்தில் மாணவர் சேர்க்கை குறித்த வழிமுறையை வெளியிடவில்லை.
ஆனால் மாநிலங்களிலிருந்து பறித்த 15 விழுக் காடான - 3521 இடங்களுக்கு மட்டும் நடுவண் அரசு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தியது. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் எஞ்சியிருந்த 85 விழுக்காடு இடங்களுக்கு - அதாவது 26,500 இடங்களுக்கு மாணவர் சேர்க் கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று திட்டவட்ட மான தன்மையில் அறிவிக்காமல் விட்டது வேண்டு மென்றே செய்த அயோக்கியத்தனமாகும். அப்போது தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மருத்துவப் படிப்புக்கான இடங்களை ஏலத்தில் விட்டு பெருங் கொள்ளையடிக்க முடியும் அல்லவா!
அதனால், தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாண வர்களுக்கான சேர்க்கை நடத்த தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களுக்கு இந்திய மருத்துவக் கல்விக் குழு (MCI) அனு மதி வழங்கியுள்ளதாகவும், மாணவர்களே தாங்கள் படிக்க விரும்பும் மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் செய்திகள் நாளேடுகளில் (தி இந்து, 22.8.2016) வெளிவந்தன. தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் இதே தன்மையில் விளம்பரங்கள் செய்தன.
அதேசமயம் மருத்துவப் படிப்புச் சந்தையில் இடங் களின் விலை மிகவும் உயர்ந்தது. கடந்த ஆண்டு கல்விக் கட்டணம் உருபா நான்கு அல்லது ஐந்து இலட்சம் என்று இருந்தது. இவ்வாண்டு நுழைவுத் தேர்வின் முடிவுக்குப்பின் இது ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை என்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கோடி உருபாவுக்கு மேல் செலவிடக்கூடிய பெரும் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும். தமிழ்நாட்டில் ரூ.15 இலட்சம், ரூ.20 இலட்சம் என ஆண்டுக்கட்டணம் செலுத்தி மாண வர்கள் சேர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் நன்கொடை என்ற பெயரில் ஒரே தடவையாக ரூ.50 இலட்சம் முதல் 70 இலட்சம் என்று தொடக்கத்திலேயே வாங்கியதை இப்போது கல்விக் கட்டணம் என்ற பெயரில் அய்ந்தரை ஆண்டுகளில் பிரித்து வாங்கப் போகிறார்கள். கல்விக் கட்டணம் தவிர, வேறு பெயர் களில் மேலும் சில இலட்சம் வாங்கப்படும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தனக்குள்ள அதிகார வாய்ப்பைப் பயன் படுத்துவது பற்றியோ, கல்விக் கட்டணக் கொள்ளை பற்றியோ தமிழ்நாடு அரசு அக்கறை ஏதும் காட்ட வில்லை. மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனியார் கல்லூரிகளே நடத்திக் கொண்ட கலந்தாய்வு மூலம் நடந்துள்ள மாணவர் சேர்க்கை செல்லாது என்றும், செப்டம்பர் 30க்குள், ஒற்றைச் சாளர முறையில், நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், கலந்தாய்வு மூலம் மாநில அரசு தனியார் மருத் துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 22.9.2016 அன்று பிறப்பித்த ஆணை தமிழ்நாட்டு அரசுக்கும், மற்ற மாநில அரசுகளுக்கும் பொருந்துமா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரே வகையில் பலர் பாதிக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றத்தை நாடி நீதி பெறுவோர்க்கு மட்டுமே அது பொருந்தும் என்று கூறப்படுகிறது. இதனால்தான் மத்தியப் பிரதேச வழக்கில் பிறப்பித்த ஆணையில் உச்சநீதிமன்றம் எல்லா மாநிலங்களும் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தவில்லையோ என்று எண்ண வேண்டியுள்ளது.
எனவே நடுவண் அரசு, இப்போது உச்சநீதி மன்றம் மத்தியப் பிரதேச மாநிலத்துக்குப் பிறப்பித்துள்ள ஆணையின் அடிப்படையில், எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும்படியான வழிகாட்டு நெறியை அறிவிக்க வேண்டும். 30.9.2016க்குள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தவர்களை மாணவர்களாகச் சேர்த்து முடித்தபின், இதில் ஏதும் செய்ய முடியாது. அந்நிலையில் உச்சநீதிமன்றம் தானே முன்வந்து இத்தகைய மாணவர் சேர்க்கையை இரத்து செய்யுமா?
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒளிவுமறைவின்றி நடைபெறுவதில்லை; பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன; குறைவான மதிப் பெண் பெற்ற மாணவர்கள், அதிக அளவில் பணம் கொடுத்து சேர்ந்துவிடுகின்றனர் என்று கூறி நடுவண் அரசும், உச்சநீதிமன்றமும், தகுதி-திறமையை நிலை நாட்டிட தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு வேண் டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு வாதிட்டன. இதற் கான சட்டத்தை மக்களவையில் முன்மொழிந்தபோது, நடுவண் அரசின் மக்கள் நலவாழ்வு அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டாவும் இக்கருத்தை வலியுறுத்தினார். ஆனால் 9.8.2016 அன்று மாநில அரசுகள் விரும்பி னால், கலந்தாய்வின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று பட்டும்படாமல் கூறித் தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துக் கொண்டது நடுவண் அரசு. நடுவண் அரசின் முதன்மையான நோக்கம் அரசு மருத்துவக் கல்லூரி களில் மாணவர்களைச் சேர்க்கும் அதிகாரம் மாநிலங் களிடம் இருப்பதைப் பறித்தே ஆக வேண்டும் என்பதே ஆகும் என்பது அம்பலமாகிவிட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒற்றைச் சாரள முறையில் கலந்தாய்வு மூலம் நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு நடுவண் அரசு முறைப்படி வழங்கும் நிலை ஏற்பட் டாலும்கூட, பொது நுழைவுத் தேர்வு என்பது கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய நிலைப் பாடாகும்.
முதலில், இந்திய அளவில் தகுதி-திறமை என்பதை நிர்ணயிப்பது என்பதே ஒரு மோசடியாகும். இருபதாம் நூற்றாண்டு நெடுகிலும் தகுதி-திறமை கூப்பாடு என்பது பார்ப்பன - மேல்சாதி ஆதிக்க வர்க்கத்தின் தன்னலமே என்பதை வரலாறு காட்டுகிறது.
2013 சூலை 18 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, “மருத்துவப் படிப்பு களுக்கான சேர்க்கைக்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான பொதுத் தேர்வை நடத்துவது மாநில அரசுகளின் கல்வி உரிமையில் தலையிடுவதாகும்” என்று கூறியது. இதுவே சரியான நிலைப்பாடாகும். எனவே 1976இல் இந்திரா காந்தி நெருக்கடி நிலை காலத்தில் மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை பொது அதிகாரப் பட்டியலுக்கு மாற்றிய பெருங்கேட் டைச் செய்தார். கல்வி மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றிட எல்லா மாநில அரசுகளும் மக்களும் குரல் கொடுக்க வேண்டும்; போராட வேண் டும். அது ஒன்றே கல்வியில் நடுவண் அரசின் ஆதிக்கத் தையும், கல்வி காவிமயமாவதையும் தடுப்பதற்கான வழியாகும்.
நுழைவுத் தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்திய அள வில் 70 விழுக்காடு மாணவர்கள் மேனிலைப் பள்ளிக் கல்வியை அவரவர் தாய்மொழி வழியில் கற்கின்ற னர். அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் இந்தி, சமற்கிருதம் (மக்கள் பேச்சு வழக் கில் இது ஒரு செத்த மொழியாகவே இருக்கிறது) தவிர்த்த மற்ற 20 தேசிய மொழிகளின் வாயிலாகப் படிக்கும் மாணவர்களின் உரிமையைப் பொது நுழை வுத் தேர்வு பறிக்கிறது. அம்மொழிகளைப் பேசும் தேசிய இன மக்களின் தாய்மொழி உரிமையை நசுக்குகிறது.
நடுவண் அரசின்கீழ் உள்ள நான்கு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பொது நுழைவுத் தேர்வின்கீழ் இடம்பெறாததுடன், அவை தனித்தனியே நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களைச் சேர்ப்பதை எந்த வகையில் ஞாயப்படுத்த முடியும்?
தமிழ்நாட்டில் 2006ஆம் ஆண்டு வரையில் மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத் தேர்வு முறை இருந்தது. 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களும் மருத்துவப் படிப்பில் சேரப் பெருமளவில் கணக்கில் கொள்ளப்பட்டன. ஆயினும் நகர்புறத்தைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அதிகக் கட்டணம் செலுத்தி சிறந்த தனிப்பயிற்சி நிறுவனங்களில் பயின்று, அதிக இடங்களைக் கைப்பற்றினர். தமிழ்நாட்டில் 2007 முதல் பனிரெண்டாம் வகுப்பின் மதிப்பெண் தரவரி சைப்படி மாணவர் சேர்க்கை நடப்பதால், ஊரகப் பகுதி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் சேருவதற் கான சம வாய்ப்பு இருந்தது.
அடுத்த கல்வி ஆண்டில் (2017-2018) மருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் தகுதிகாண் நுழைவுத் தேர்வு நடைபெற்றால், வெளியிடப்படும் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் முதலிடப் பகுதியில் இடம் பெற்றுள்ள பிற மாநில - பிற மொழி பேசும் மாணவர் கள் தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் சேர விரும்பி னால் அதைத் தடுக்க முடியாது! அந்நிலையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.
தமிழ்நாட்டு அரசுக் கல்லூரிகளில் பெரும் எண்ணிக்கையில் பயிலும் பிறமொழி மாணவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்யாமல், அவர்களின் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்க முடியுமா? பிற மாநில மாணவர்கள் மருத்துவப் பட்டம் பெறுவதற்கு, தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணம் செலவிடப்பட வேண்டுமா?
இதற்கிடையில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான தனிப்பயிற்சி நிறுவனங்கள் இப்போதே புற்றீசல் போல் முளைத்துக் கொண்டிருக்கின்றன. நுழைவுத் தேர்வின் மதிப்பெண் மட்டுமே சேர்க்கைக்கான அடிப்படை என்பதால், மாணவர்கள் விட்டில் பூச்சிகள் போல் இதில் விழுவார்கள். அவர்கள் ஒட்டச் சுரண்டப்படு வார்கள். மேலும் நுழைவுத் தேர்வால் மாணவர்களும் பெற்றோர்களும் அலைக்கழிப்புக்கும் மனஉளைச் சலுக்கும் ஆளாவார்கள்.
மேலும் நுழைவுத் தேர்வு மத்திய இடைநிலைக் கல்விப் பாடத்திட்டத்தின்படி (CBSE) இருப்பதால் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களின் வாய்ப்பும் உரிமையும் பறிக்கப்படுகின்றன. பல்வேறு மொழிகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் உள்ள மக்களுக்கு ஒரே மாதிரியான பாடத் திட்டம் என்பதும் ஒரே மாதிரியான தேர்வு என்பதும் பணக்கார - பார்ப்பன - மேல்சாதியினரின் வீட்டுப் பிள்ளைகளுக்கு எல்லா வகையிலும் ஆக்கம் சேர்ப்பதாக இருக்கும்.
கீழ்ச்சாதி-ஏழை எளிய, ஊரகப்பகுதி மாணவர் களின் நலன்களுக்கு எதிரான, தேசிய இனங்களின் தாய்மொழி உரிமையைப் பறிக்கின்ற, மாநிலங்களின் உரிமையை மறுக்கின்ற, தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை முழுமூச்சுடன் எதிர்த்து வீழ்த்திடுவோம்.