cauvery 347

வாராத மாமணியாய்
வந்துவிட்டது
உச்சநீதி மன்றத்தின்
காவிரித் தீர்ப்பு!

இது அச்சு அசலான
மனு தர்ம வார்ப்பு!
கருநாடகத்தின்
ஆனந்த ஆர்ப்பு!

பொதுவில்
வடக்கு என்றாலே
தெற்குக்கு வம்புதான்
நாட்பட்ட நமது
தமிழர் உரிமைகளை
நாடாளு மன்றத்
தூண்களும் சிதைக்கும்
உச்சநீதிமன்றம்
கடைக்காலில் புதைக்கும்

காவிரிச் செய்தியில்
இந்தத் தீர்ப்பு
நமக்குச் சொல்லும்
சேதி என்னா?
"உள்ளதும் போச்சுடா
நொள்ளைக் கண்ணா!"

தலைமை நீதிபதி
தீபக் மிஸ்ரா
காவிரிப் படுகையைக்
காய வைத்துக்
கர்நாடகத்துக்குக்
கறி சோறு போடுவார்
மொத்தமாய்த் தமிழ்நாடு
மொட்டையாய்ப் போக
மோடி அதற்கு
விசிறி வீசுவார்

இருக்கும் நீரையும்
இங்கிருந்து பறித்துக்
கன்னடர்க்குத் தரக் கரிசனம்!
பெருநகர மாகும்
பெங்களூரு மீது
பேரார்வம் கொள்ளும்
உள்மனம்!

தமிழ்நாட்டின் பங்கைத்
தட்டிப் பறிக்கிறார்
ஏனெனில்,
நிலத்தடி நீர்மட்டம் இங்கே
தாராளம் என்கிறார்.
கொடுவாள் கொண்டு
தாயின் மார்பகம்
கூறுபோடும் கொடியவன்
செயல் இது!

ஓடும் எந்த நதிநீரிலும்
மாநிலங் களுக்கு
உரிமை இல்லையாம்
நீட்டி முழக்கும்
நிதிமன்றப் பொய் இது

தவழும் காவிரி
தமிழரின் உரிமை
தடைபோடும் எவனும்
தடித்தோல் எருமை!

உச்சநீதி மன்றம்
நடுவண் அரசு
இரண்டின் எண்ணமும்
என்ன?
‘தமிழகம் நீரின்றிச்
சாக வேண்டும்!’
தமிழர்கள்
மொத்தமாய் மாறவேண்டும்

இப்போதே
தண்ணீர் இன்றித்
தஞ்சையே பாலையாய்!
ஒவ்வொரு நாளும்
உழவர்கள் தற்கொலை!
மேலும் அவர்கள்
குரல்வளை மிதிபட
மீத்தேன், நியூட்ரினோ
எரிவளித் திட்டங்கள்
ஒட்டச் சுரண்ட
வளங்கள் முழுமையும்
வரிசையாய்ப் பல
வல்லூறுகள்!

கதிரா மங்கலங்கள்
சுடுகாடாகக்
காத்திருக்கும் சில
பன்னாட்டுக் கழுகுகள்

இவற்றோடு இங்கே
எப்போதும் ஒத்தூத
உச்சிக்குடுமி
உச்சநீதி மன்றம்
ஒருக்காலும் நாங்கள்
ஒருப்படோம்!

உச்சநீதி மன்றத்
தீர்ப்பைக் கொளுத்துவோம்!
உரிமைத் தமிழ்த்தேசம்
என்றே முழக்குவோம்!

- தமிழேந்தி

Pin It