14-2-2020 வெள்ளிக்கிழமை அன்று கோதை ஜோதிலட்சுமி அவர்கள் ‘மனுதர்மமும் சில மாயைகளும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை தினமணியில் வெளியாகி இருந்தது. அக்கட்டுரையில், ‘பொதுவாக இரு பெருங்குற்றச்சாட்டுகள் மனுவின் மீது வைக்கப்படுகின்றன. வர்ணக் கட்டமைப்பை உருவாக்கிச் சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குவது; மற்றொன்று, பெண்களை இழிவுபடுத்தும் நூல் என்ற குற்றச்சாட்டு’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். அது குறித்து இங்கே உருவாக்கப் பட்டிருக்கும் மாயையைப் புரிந்து கொள்ளச் சொல்கிறார்.

brahmin 290மனுநூல் முழுக்கப் படித்தால், அவ்விரண்டு குற்றச் சாட்டுகளும் உண்மையே என்பது புலனாகும். இவ்வுலகம் பிராமணர்களுக்காகவே படைக்கப்பட்டது போன்ற எண்ணத்தை அந்நூல் உருவாக்குகிறது. மனு கூறுவதை இங்கே எடுத்துக் காட்டுகிறேன் : “புருச தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது. மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும் வேதங்களைப் பெற்றிருப்பதனாலும் முதலில் தோன்றின மையினாலும் படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். பிறவி மேன்மையினாலும் முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும் படைப்புலகில் காணப்படா நின்ற சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக விளங்குகிறான். எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும் அவனுடைமையை அவன் பெறுவதாகவும், ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்வோராயு மிருக்கிறார்கள்.

ஏவலரான மக்கள் (நாலாம் வருணத்தார்) மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும், ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டெ”ன்றும், பணித்தார் (மனு : அத்தியாயம் 1, சுலோகம் 91, 92, 93, 100, 101).

மேலும் மனு கூறுகிறார் : “இது (இந்நூல்) இந்தச் சாத்திரத்தின் பயனறியவல்ல பிராம்மணனாலே ஓதத் தக்கது. தனது சீடர்களுக்கு முறைப்படி ஓதுவிக்கத் தக்கது. ஏனையோர் ஓதுதல் கூடாது” (மனு. அத்.1 சுலோ.103). வேதமே சுருதியென்றும், அறத்துணிபுகளே சுமிருதியென்றும் உணர்க. தார்க்கீக உலகியல் அறிவைக் கொண்டு இவற்றைச் சோதித்தறிய முயல்வது கூடாது. ஏனெனில் சீவர்க்குக் கடமைகள் என்பதே இல்லை.

இவ்விரண்டையும் தனது நூலறிவினாலும் தர்க்கவாதத் திறமையினாலும் சோதித்துச் சோதித்து அவமதிப்போன் யாராயினும் அவன் நாத்திகனாகவும் சமூகத்திலிருந்து விலக்கப்பட வேண்டியவனாகவும் ஆகிறான் (மனு.2 : சுலோ.10, 11).

மேற்கண்ட மனுநூல் கூற்றை ஆய்ந்த பெரியார், மனுநூல் சமூகத்தில் வர்ணக் கட்டமைப்பு, ஏற்றத்தாழ் வை உண்டாக்குவது எனக் குற்றஞ்சாட்டியது தவறா? பெரியார், வேதங்களையும் சுமிருதிகளையும் ஆய்ந்து மனுநூலின் சமூக முரண்களையும் சாதிப் பாகுபாட்டு முரண்களையும் எடுத்துக்காட்டினார் என்றால் அவர் நாத்திகரா? அவரைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டுமா? அவர் நாத்திகராகவே ஆனார். ஏன் என்பதை அறிந்து கொள்வீரா? ஆண்டாண்டுக் காலமாக மிதிபட்டு, அடிபட்டுக் கிடந்த நாலாம் சாதியின் அவமான அவலத்தைக் கண்டுணர்ந்து ஆத்திக்கத்தின் மேலாண்மையை வெறுத்து நாத்திகராக வெகுண்டெழுந்தார். அதனால்தான் நாலாம் சாதி விழித்தது. முன்னேற்ற விடியல் கண்டது.

அடுத்து, மனுநூல் பெண்களைப் போற்றுகிறது என்று அக்கட்டுரையாளர் கூறுகிறார். அதை நானும் படித்திருக்கிறேன். அதே நூல் பெண்களை இழிவுபடுத்தியுள்ளதையும் கட்டுரையாளர் அறிந்து கொள்ள வேண்டும்.

“ஆண் சந்ததியில்லாமல் பெண் குழந்தைகளே ஈன்ற குலத்தில் பெண் எடுக்கலாகாது. தாரகை, மரம், ஆறு, ஈனசாதி, மலை, பறவை, வேலைக்காரன் இவற்றின் பெயருடையவள், பயங்கரமான பெயரினள், இவ் வகைக் கன்னியரையும் மணத்தலாகாது. அழகியும், நற்பெயருடையவளும், அன்னம், பிடிநடையுடைய வளும் மெல்லுடல், மென்பற்கள், மென்கூந்தல் உடையவளும், மென்குரலினளுமான பெண்ணை மணக்கலாகும்” (மனு. அத்.3. சுலோ.7, 9, 10).

நட்சத்திரா (தாரகை) என்றொரு பெயருடைய பெண் (நடிகை) இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா?

மண்டோதரி என்ற பயங்கரமான பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் சேலம் சாரதா கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அவர் கணேசன் என்பவரை மணந்து இல்லறத் தலைவியாக விளங்கினார்.

அழகியும் நற்பெயருடையவளும், அன்னம், பிடிநடையுடையவளும் என்னும் இவ்விலக்கணமுடைய பெண்ணை மணக்கலாகும் என்றால், அவ்விலக்கணமில்லாத பெண்கள் என்ன ஆவார்கள்?

“தனது வருணத்துப் பெண்ணை மணம் புரிவிப்பது நன்று. விரும்பி இரண்டாம் திருமணம் செய்வதாயின் நாலாம் வருணத்தர் தமது சாதியிலும், அந்தணன் நான்கு வருணங்களிலும் பெண் கொள்ளலாம். தாழ் குலத்துப் பெண்ணுடன் ஒரே படுக்கையில் சமமாய்ப் படுக்கும் அந்தணன் நரகம் அடைவான். தாழ்ந்த சாதிப் பெண்ணின் அதர பானமும் அவளது மூச்சுக் காற்று மேலே படுதலும், தனக்கு அவளிடமாகப் பிறந்த குழந்தைக்கும் கழுவாயே இல்லாத பாவங்களாகும்” (மனு.அத்.3, சுலோ.12, 13, 17, 19).

நாலாம் வருணத்தர் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பினாலும் தமது சாதியில் மட்டும்தான் பெண் கொள்ள வேண்டும். மனுநீதி போன்ற நூல்களால் சாதிப் பாகுபட்டுக் கொடுமை இன்றும் வேரூன்றிப் போயிருப்பதால், தாழ்குலத்துப் பெண்ணோ, ஆணோ தன்னைவிட மேல் குலத்து ஆணையோ, பெண்ணையோ காதலித்தாலும், திருமணம் செய்து கொண்டாலும், அந்தப் பெண்ணோ ஆணோ கொல்லப்படுவர் என்ற ஆணவக் கொலைகள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

“ஒரே பாத்திரத்தில் மனைவியுடன் உண்ணுதல் கூடாது. தலையில் சூடிய மலரைத் தானே எடுத்தெறி யலாகாது. எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது. இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் பிள்ளைகள் இவர்கள் காவலின்றிப் பெண்கள் தம்மிச்சையாக இயங்கலாகாது. இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றை உடையவனாயினும் கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக” (மனு. அத்.4, சுலோ.43, 55; அத்.5, சுலோ.147, 148, 154).

மனுநீதி எப்போது எழுதப்பட்டது என்பதற்குச் சான்றுகள் ஏதுமில்லை என்று அக்கட்டுரையாளர் கூறுகிறார். போர்களையும் அதன் வழிமுறைகளையும் விரிவாக மனு பேசுகிறது. அதனால் மனுவின் காலத்தில் போர்கள் நிறைய நடந்திருக்கின்றன. அத்தகைய காலத்தில் பெண் தனித்தியங்குவது பாதுகாப்பற்றது என்பதால், பெண்கள் தனித்து இயங்குவதை மனு மறுக்கிறது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே என்றும் அவ் ஆசிரியர் கூறுகிறார்.

போர் என்பது தொன்றுதொட்டு இன்றுவரையில் நடந்துகொண்டே இருக்கிறது. அதற்கு, என்று முடிவு ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் ஆண்-பெண் காதலுறவு, ஒழுகலாறு அன்றாடம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எக்காலத்திலும் இது நிகழக் கூடியதே. இதற்கு முற்றுப்புள்ளி என்பது எப்போதும் கிடையாது. அதனால் மனு ஐந்தாவது அத்தியாயத்தில் தனிமனித ஒழுகலாறாக - மாதர்க்கு உரியவை என்ற பகுதியில் எந்தப் பருவத்தினளாயினும் எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது. இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலின்றிப் பெண்கள் தம்மிச்சையாக இயங்கலாகாது என்று கூறுகிறார். ஏழாம் அத்தியாயத்தில்தான் அரச நீதி என்னும் பகுதியில் போர் அறம், போர் முறை, தானை, முற்றுகை, போரிடல், வெற்றி கொள்ளல் என்னும் அரசனுக்குரியவற்றை மனு குறிப்பிடுகிறார்.

போர்க்கால நெருக்கடிகள் இருந்தாலும்கூட காதலுறவு, தடைசெய்ய முடியாத (தனிப்பேருணர்வு) கொண்ட தாகும். போர் வீரர்கள், தோல்வியுற்ற நாட்டிலுள்ள பெண்களைச் சிறைப்பிடிப்பது, கணவன் முன்னிலை யிலேயே கூட்டு வன்புணர்வு செய்வதெல்லாம் ஆற்றக் கூடியவர்கள் என்பதை எல்லோரும் அறிவர். அதனால் மனு, பெண்கள் தம் இச்சையாக இயங்கலாகாது எனத் தனிப்பட்ட பெண்ணின் ஒழுகலாறாகவே  வலியுறுத்தி, தந்தை, கணவன், பிள்ளைகள் காவல் கட்டுப்பாட்டைப் பெண்களுக்கு விதிக்கிறார் என்று கொள்க.

மேலும் மனு பெண்களின் இயல்பைக் கூறும் போது நமக்கே நெஞ்சம் கசக்கிறது. “நிறை பிறழ்தலும், நிலையில்லா மனமும் நண்பின்மையும் மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும் அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை. படுக்கை, ஆதளம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார். பொய்யைப் போல் மாசு வடுவினராக மாதர் இயன்றிருக்கின்றனர். பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றைக் கேட்பீராக” (மனு. அத்.9, சுலோ.15, 17, 18, 19).

“பீஜம் (ஆண்குறி) யோநி (பெண்ணுறுப்பு) இவ்வி ரண்டையும் நோக்குமிடத்து, பீஜம் உயர்வு. ஏனெனில் தோன்றும் உயிர் அனைத்தும் அதன் தன்மையைச் சார்ந்திருக்கிறது. சான்றாக விதைக்கும் விதை அதே பயிரை அந்த நிலத்தில் விளைவிக்கிறது அல்லவா? நிலம் சிறப்பில்லை என்று அறிய, எல்லாத் தாவரங்களும் வித்தின் அடையாளமின்றி மண்ணின் அடையாளத்தைக் கொண்டிருப்பதில்லை” (மனு. அத்.9, சுலோ.35, 36, 37).

மேற்கூறிய மனுவின் கருத்துகள் பெண்களைப் பற்றியவை. இக்கருத்துகள் பெண்களை-பெண்மையை இழிவுபடுத்தக் கூடியவையாக இல்லையா? அதுவும் பெண்ணுறுப்பு, காதலுக்கு வழி வைப்பதோடு, குழந் தைகளைப் பிறப்பிக்கும் சிறப்பும் பெற்றதன்றோ? அது உயர்வற்றது என்று கூறுவது பெண்மையையே இழிவு படுத்துவது ஆகாதா?

பெண் விடுதலையை, பெண்ணுரிமையை வலியுறுத்திப் பேசிய பெரியார், மனு நூல் பெண்களை இழிவுபடுத்துவது என்று குற்றம் சாற்றியது தவறா? ஒரு நூலைத் திறனாய்வு செய்யும் போது நடுவு நிலைமை வேண்டும். நிறை குறைந்து அல்லது நிறைந்து காணப்பட்டாலும், குறைகள் அந்த நிறைகளை விழுங்கி விடும் வகையில் காணப்பட்டால் அது குற்றம் தானே?

எனவே மனுநூல் பற்றி இரு பெருங்குற்றச்சாட்டுகள் கூறி மனுவைப் பற்றி மாயைகள் சிலவற்றை, மதம் பரப்ப வந்த வெளிநாட்டாரும், இறைமறுப்புக் கொண்ட உள்நாட்டரும் ஏற்படுத்தி விட்டனர் எனக் கட்டுரை ஆசிரியர் கூறுவதை ஏற்க இயலாது. மாயை என்பதை விடுத்து மெய்ம்மை என்பதை ஏற்பது அறிவுடைமையாகும்.

Pin It