ambed 450பறவைக்கு இறக்கை எப்படி இன்றியமையாததோ அது போல் மக்கள் தலைவனுக்கு என ஏடு இருக்க வேண்டும் என்று மேதை அம்பேத்கர் கருதினார்.

அம்பேத்கர் மராத்தி மொழியில் தொடங்கிய முதலாவது ஏட்டின் பெயர் “மூக் நாயக்” என்பதாகும். இதற்கு ‘ஊமை களின் தலைவன்’ என்று பொருள். 1920 சனவரி 31 அன்று மூக்நாயக்கின் முதல் இதழ் வெளிவந்தது. மாதம் இருமுறை இதழாக வெளி வந்தது. 2020 சனவரியுடன் மூக்நாயக் இதழ் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகின்றன.

அம்பேத்கர் எத்தகைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் மூக்நாயக் இதழைத் தொடங்கினார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 1913-1917 காலத்தில் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் எம்.ஏ., பி.எச்டி., பட்டங்களைப் பெற்றபின், இலண்டனில் உள்ள பொருளாதாரக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற் கொண்டார். அந்நிலையில் அம்பேத்கருக்குப் பரோடா சிற்றரசு அளித்துவந்த கல்வி உதவித் தொகை பார்ப்ப னர்களின் சூழ்ச்சியால் நிறுத்தப்பட்டது. அதனால் அந்த ஆய்வைப் பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.

மீண்டும் இலண்டன் சென்று தன் ஆய்வை முடிப்பதற்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்காகப் பம்பாயில் சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரத் துறை யில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1918-19-ஆம் ஆண்டுகளில் சவுத்பரோ குழு இந்தியாவில் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தது. 27-1-1919 அன்று அம்பேத்கர் சவுத் பரோ குழுவினரிடம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனி வாக்காளர் தொகுதி வேண்டும் என்கிற கோரிக் கையை முன்வைத்தார். அப்போது செய்தி ஏடுகள் அவருக்கு உரிய இடமளிக்கவில்லை. அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனியாக ஏடு தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இதை அறிந்த கோல்காப்பூரின் சிற்றரசர் சத்திரபதி சாகு அம்பேத்கரின் இல்லத்துக்கு வந்து ரூ.2500 நன்கொடை வழங்கினார்.

மூக்நாயக் இதழ் தொடங்கப்பட்ட போது. பாலகங் காதர திலகரின் ‘கேசரி’ ஏட்டிற்கு மூன்று உருபா பணம் அனுப்பி விளம்பரம் வெளியிடுமாறு அம்பேத்கர் கேட்டார். மூக்நாயக் இதழ் பற்றி விளம்பரம் செய்ய மறுத்து, பணத்தைத் திருப்பி அனுப்பியது ‘கேசரி’. நிதி நெருக்கடியும் மேல்சாதியினரின் புறக்கணிப்பும் இருந்த போதிலும் அம்பேத்கர் மனம் தளராமல் 1920 சனவரி 31 அன்று மூக்நாயக் முதல் இதழை வெளியிட்டார். அம்முதல் இதழில் அம்பேத்கர் எழுதிய ஆசிரியவுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

“இந்திய சமூகத்தை ஆய்வு செய்யும் எவருக்கும் அதன் கட்டமைப்பில் திட்டவட்டமான-தனித்தன்மையான ஏற்றத் தாழ்வுகள் இருப்பது புலனாகும். இத்த கைய ஏற்றத்தாழ்வு களில் மிகவும் நாணத்தக்கதாக இருப்பது பொருளியல் வாழ்நிலையில் உள்ள கடுமையான ஏற்றத்தாழ்வே ஆகும்.

இந்தியர்களுக்கிடையே பலவகையான வேறுபாடு கள் உள்ளன. ஆயினும், உடல் தோற்றம் அல்லது அறிவு நிலையிலான வேறுபாடுகளைவிட மதம் சார்ந்த வேறுபாடுகள் கொடிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. மதம் அடிப்படையிலான வேறுபாடுகள் பல சமயங்களில் குருதி சிந்தும் மோதல் நடவடிக்கைகளாக உருவெடுக்கின்றன. இந்துக்கள், பார்சிகள், யூதர்கள், முசுலீம்கள், கிறித்தவர்கள் மற்றும் பிற மதப் பிரிவினர் ஆகியோர்க்கு இடையிலான வேறுபாடுகள் பல வடிவங்களில் இருக் கின்றன. ஆனால் இந்து மதத்திற்குள் உள்ள பிரிவுகளுக் கிடையே உள்ள வேறுபாடுகள் நம்ப முடியாத அளவுக்குக் கொடுமையானவையாகவும் கண்டனத்துக்குரியதாகவும் இருக்கின்றன.

எந்தவொரு அய்ரோப்பியனையும் நோக்கி ‘நீ யார்?’ என்று கேட்டால்-மொழி அடிப்படையிலான தன்னுடைய நாட்டைக் குறிக்கும் வகையில் - ஆங்கிலேயன் அல்லது செருமானியன் அல்லது பிரெஞ்சுக்காரன் அல்லது இத்தாலியன் என்று விடை கூறுவான். அதுவே நிறைவான விடையாக அமைந்து விடுகிறது. ஆனால் இந்துக்களைப் பொறுத்த வரையில், “நான் ஒரு இந்து” என்று சொல்லுவது மட்டுமே போதுமான விடையாக இருப்பதில்லை. எந்தவொரு இந்துவுக்கும் தன்னுடைய திட்டவட்டமான அடையாளமாக உள்ள சாதியைச் சொன்னால்தான் முழுமையான விடையாக அமையும்.

இந்துச் சமூகம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சாதிகள் மேல்-கீழ் என்கிற படிநிலை அமைப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்துச் சமூகம் ஒரு கோபுரம் போன்றது. அதன் ஒவ்வொரு அடுக்கும் ஒரு சாதிக்கென ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்னவெனில், இந்த கோபுரத்தில் படிக் கட்டுகளே இல்லை என்பதாகும். அதனால் ஒரு அடுக்கிலிருந்து இன்னொரு அடுக்கிற்கு ஏறவோ அல்லது இறங்கவோ முடியாது. ஒருவன் எந்த அடுக்கில் உள்ள சாதியில் பிறக் கிறானோ அதிலேயே மடிய வேண்டியதுதான். கீழ் அடுக்கில் உள்ள ஒருவர் எவ்வளவு தகுதி படைத்தவராக இருப்பினும் அவர் மேல் அடுக்கிற்குச் செல்வதற்கான வாய்ப்பே இல்லை. அதேபோல் எந்தவொரு தகுதியும் இல்லாமல் மேல் அடுக்கில் இருக்கும் ஒருவரை கீழ் அடுக்கிற்கு அனுப்புவதற்கான வழியும் இல்லை.

hindi 600 copyசாதிகளுக்கிடையிலான உறவு என்பது தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவில்லை. மேல்சாதியில் உள்ள ஒருவர் எவ்வளவு தகுதியற்றவராக இருப்பினும் அவருடைய சமூகத் தகுதியின் உயர்வு அப்படியே நீடிக்கும். அதேபோன்று, கீழ்ச்சாதியைச் சேர்ந்த ஒருவர் சிறந்த தகுதி பெற்றிருப்பினும் தன்னுடைய தாழ்நிலையிலிருந்து விடுபட்டு மேலே செல்லவும் முடியாது.

மேல்சாதி - கீழ்ச்சாதியினருக்கிடையே சேர்ந்து உண்ணல், கலப்பு மணம் செய்தல் ஆகியவற்றுக்குக் கடுமையான சாத்திரத் தடைகள் இருக்கின்றன. அதனால் முன்பே தனிமைப் படுத்தப்பட்ட சாதிகள் தொடர்ந்து தனித்தனியே நீடிக்கின்றன. சாதியச் சட்டங்களை மீறி சாதிகளுக்கிடையே உறவு ஏற்படுவதைத் தடுக்க தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது.

சில சாதிகள், சாதியக் கட்டமைப்புக்குள் இருந்த வாறே முன்நோக்கி இயங்குவதற்கு அனுமதிக்கப்படு கின்றன. சில சாதிகள், “தீட்டானவை” என்று முத்திரை குத்தப்பட்டு, அவற்றுக்கு முன்நோக்கி இயங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இவர்கள் தீண்டப்படாத சாதியினர். இவர்களுடைய ‘தீட்டு’ எல்லாச் சாதி இந்துக்களையும் தொற்றிக் கொள்ளும் என்று எண்ணுகிறார்கள்.

சாதியப் படிநிலை அமைப்பின் உச்சியில் பார்ப்பனர்கள் உள்ளனர். இவர்கள் தங்களைப் பூதேவர்களாகக் கருதிக் கொள்கின்றனர். மற்ற சாதிகளில் உள்ள எல்லா ஆண்களும் பெண்களும் தங்களுக்குப் பணி செய்வதற்காகவே படைக்கப் பட்டிருப்பதாக நம்புகின்றனர். இந்துக்களின் புனித சாத்திரங்களைப் படைத்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் பிறசாதியினர் தங்களுக்கு ஏவல் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்கிற உரிமையைப் பெற்றிருப்பதாகப் பார்ப்பனர்கள் கருதுகின்றனர். இந்து மத சாத்திரங்களும் புராணங்களும் அறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கைகளையே பரப்புகின்றன.

மறுபுறத்தில், போதிய சொத்துடைமையும் கல்வி உரிமையும் மறுக்கப்பட்டதால் பார்ப்பனர் அல்லாதார் பின்தங்கிய நிலையில் உள்ளனர். ஆயினும் சொத் துரிமை முழுமையாக மறுக்கப்படுவதால் ஏற்படும் கொடிய நிலை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்படுவதில்லை. ஏனெனில் பார்ப்பனரல்லாதார் வேளாண்மை, பொருளுற்பத்தித் தொழில்கள், வணிகம், பிற வேலை வாய்ப்புகள் மூலம் வாழ்வாதாரங்களைப் பெறுகின்றனர். சாதியப் பாகுபாட்டால் தாழ்த்தப்பட்டவர்களே கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் கொடிய வறுமையில் உழல்கின்றனர். வலிமையற்றவர்களாக - தன்னம்பிக்கை யற்றவர்களாக வாழ்கின்றனர்.

எனவே இவர்களின் இரங்கத்தக்க வாழ்நிலையை எடுத்துரைப்பது முதன்மையாக இருக்கிறது. இவர்கள் உய்வதற்கான ஒரே வழி, தங்களைப் பிணைத்திருக்கும் தளைகளைத் தகர்த்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுப்பதே ஆகும். இதற்கான நடவடிக்கை மகிழ்ச்சியுடன் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

தீண்டப்படாதவர்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற சிக்கல்களை அஞ்சாமல், வெளிப்படையாக, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எடுத்துரைப்பதற்கான அமைப்போ, செய்தி ஊடகமோ இல்லை என்பது வருந்தத்தக்க நிலையாகும். ஆயினும் சில நாளேடுகளும் பருவ இதழ்களும் தீண்டப்படாதவர்களின் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்று எழுதுகின்றன என்பது உண்மையே! ஆனால் இவற்றில் எதுவும் தீண்டப்படாதவர்களின் உரிமைகள் குறித்து மட்டும் கவனம் செலுத்துவதில்லை. எனவே இந்த இடைவெளியை இட்டு நிரப்பும் நோக்கத்துடன் மூக்நாயக் இதழை வெளியிடுவதெனத் திட்டமிடப்பட்டு, இப்போது வெளியிடப் பட்டுள்ளது.”

இருபது ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியார் 1915-இல் இந்தியாவுக்குத் திரும்பினார். 1920-க்குள் இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சியின் ஒப்பற்ற தலை வராக உயர்ந்தார். இந்திய அளவில் பிரித்தானிய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். 1919-இல் மாண்டேகு-செம்ஸ்  போர்டு சீர்திருத்தங்கள் மூலம் மக்களில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளித்து மாகாண சட்டமன்றங்களுக்கும் மத்திய சட்டமன்றத் துக்கும் இந்தியர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. இதனடிப்படையில் 1920-இல் மாகாணங்களிலும் மத்தியிலும் சட்டமன்றங்கள் அமைந்தன. காலங்காலமாக ஆளும் வர்க்கமாக இருந்து வந்த பார்ப்பன - மேல்சாதியினர் நாட்டுக்குச் சுதந்தரம் பெறுதல் என்கிற பெயரால் பிரித்தானியரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிடத் துடித்தனர். இந்தப் பின்னணியில் மூக்நாயக்கின் மற்றொரு இதழில் தொலைநோக்குப் பார்வையுடன் அம்பேத்கர் எழுதியது கீழே தரப்பட்டுள்ளது.

“இந்தியா ஒரு சுதந்தர நாடாக மட்டும் இருந்து விட்டால் போதாது. அதில் எல்லா வகுப்பு மக்களுக்கும் மதம், சமூகம், பொருளாதாரம், அரசியல் தொடர்பான வற்றில் சமஉரிமை என்பது உறுதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வின் படிகளில் உயர்வதற்கான வாய்ப்பும், இவ்வாறு முன்னேறுவதற்கு ஏற்ற நல்ல சூழ்நிலையும் அளிக்கப்பட வேண்டும். பிரித்தானிய அரசின் அநீதியான அதிகாரத்தை எதிர்ப்பது சரி என்று பார்ப்பனர்கள் சொல்வதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறதோ, அதை விட நூறு மடங்கு அளவு நியாயம்-ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயரிடமிருந்து பார்ப்பனர் கைகளுக்கு மாற்றப்படக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் எதிர்ப்பதில் அடங்கி யிருக்கிறது.”

பெரியாரும் அம்பேத்கரும் சுதந்தர இந்தியாவில் ஆட்சி அதிகாரம் என்பது வரலாறு நெடுகிலும் ஆளும் வகுப்பாக இருந்து வந்த பார்ப்பனர் - சத்திரியர் - பனியா ஆகியோரிடம் செல்லக் கூடாது என்று கருதினர். ஆனால் இதை இவர்களால் தடுக்க இயலாது போயிற்று என்பது ஒரு வரலாற்று அவல மாகும். பெரியாரால் 1947 ஆகத்து 15 சுதந்தர நாளைத் துக்க நாள் என்று மட்டுமே அறிவிக்க முடிந்தது. வாழ்நாள் முழுவதும் சுதந்திரத் தமிழ்நாடு வேண்டும் என்று முழங்கினார். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியலிலும் அரசு வேலையிலும்தான் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றதாக அரசமைப்புச் சட்ட அவையிலேயே 25.11.1949-இல் அறிவித்த அம்பேத்கர், 2.9.1953 அன்று மாநிலங்கள் அவையில், “இந்த அரசமைப்புச் சட்டம் யாருக்கும் பயன் தராது. இதை எரிப்பதற்கு முதல் ஆளாக இருப்பேன்” என்று அறிவித்தார்.

1920 சனவரி 31 அன்று தொடங்கப்பட்ட மூக் நாயக் இதழ் 1924 ஏப்பிரல் வரை வெளிவந்தது. அதன் பின் அம்பேத்கர் 3-4-1927 அன்று ‘பகிஷ்கிரித் பாரத்’ (புறக்கணிக்கப்பட்ட இந்தியா) என்கிற ஏட்டைத் தொடங் கினார். இதுவும் 15-11-1929-இல் நின்று போனது. அடுத்த 24-11-1930-இல் ‘ஜனதா’ (மக்கள்) ஏட்டைத் தொடங்கினார். இதுவும் நின்று போனபின் ‘சமதா’ (சமத்துவம்) எனும் இதழை அம்பேத்கர் நடத்தினார்.

பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டை 2-5-1925 அன்று தொடங்கினார். அதற்கு அய்ந்தாண்டுகளுக்கு முன்பே அம்பேத்கர் மூக் நாயக் இதழைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இந்துமதச் சாத்திரங்களின்படி, இரு பிறப்பினர்களான பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் மட்டுமே கல்வி கற்க உரிமை படைத்தவர்களாக இருந்தனர். சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்ததுடன், கல்வி கற்க முயன்றால் கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட்டன. எனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகளைப் பார்ப்பனர்களே பெருமளவில் கைப்பற்றினார். அதனால் நாளேடுகள், பருவ இதழ்கள் ஆகியவற்றில் இவர்களின் ஆதிக்கமே கோலோச்சியது. தமிழ் நாட்டைப் பொறுத்த அளவில் கடந்த நாற்பது ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஊடகத் துறையில் பார்ப்பனர் ஆதிக்கத்தையும் பெருமளவில் தகர்த்துள்ளனர். ஆயினும் இன்னும் பட்டியல் இனத்தவர் இத்துறையில் நுழைய முடியவில்லை.

சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் பெருமுதலாளிகளுக்குச் சொந்தமானவைகளாகவே இருக்கின்றன. அதனால் பொதுவாக இவை ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. சில சமயங்களில் மென்மையாகக் கண்டிக்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றன. 2014-இல் நரேந்திர மோடி தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அரசைக் கண்டிக்கும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

மக்களின் சிந்தனைப் போக்கைக் கட்டமைப்பதில் ஆளும் வர்க்கம் செலுத்தும் ஆதிக்கம் குறித்து காரல் மார்க்சு இவ் வாறு கூறுகிறார்: “ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே ஒவ் வொரு சகாப்தத்திலும் ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன. அதாவது, சமுதாயத்தில் பொருள் வகையில் எந்த வர்க்கம் ஆளும் சக்தியாக உள்ளதோ, அதே வர்க்கம்தான் அதே சமயம் அறிவாற்றல் துறையில் ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள் வகை உற்பத்திச் சாதனங்களைத் தன் கைவசம் வைத்திருக்கும் வர்க்கமே, அக்காரணத்தாலேயே, பொது வாகச் சொல்லப்போனால் சிந்தனைப் படைப்புச் சாதனங் களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. இதனால் சிந்தனைப் படைப்புச் சாதனங்கள் இல்லாதவர்களின் கருத்து கள் ஆளும் வர்க்கத்திற்குக் கட்டுப்பட்ட வையாகின்றன. ஆளும் கருத்துகள் என்பன உண்மையில் ஆதிக்கம் செலுத்தும் பொருள் வகை உறவுகளின் கருத்து வெளிப்பாடேயன்றி வேறல்ல” (‘செருமானியச் சித்தாந்தம்’ - நூல்).

ஆயினும் சிற்றுளி பெரும்பாறையை உடைப்பது போல், அம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ பெரியார் தொடங்கிய ‘குடிஅரசு’ போன்ற ஏடுகள் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்பதிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளன. இத்தகைய புரட்சிகரமான சிற்றேடுகள் இப்போதும் வெளிவருகின்றன. இவற்றை மக்களிடம் பரப்புவதும், மக்களை அணிதிரட்டித் தொடர்ந்து போராடுவதும் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான வழி என்பதை ‘மூக்நாயக்’கின் நூற்றாண்டு நமக்கு உணர்த்துகிறது.

Pin It