கீற்றில் தேட...

பொருளாதாரம் இயங்குவதற்கு  முதன்மையான சில பொருளாதார அமைப்புகள் எல்லா நாடுகளிலும் பெரும் பங்காற்றி வருகின்றன. வங்கிகளை மேலாண்மைச் செய்வதற்கும் நாட்டினுடைய வங்கிக் கொள்கையைச் சீராய்வு செய்வதற்கும் பண மதிப்பை நிலைநிறுத்துவதற்கும் ஒவ்வொரு நாட்டினுடைய தலைமை வங்கி  பெரும் பணிகளைச் செய்கிறது. இந்தத் தலைமை வங்கியைப் பல நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். அமெரிக்கா சுவிட்சர் லாந்து கனடா ஆஸ்  திரேலியா போன்ற நாடுகளில் கூட்டரசு தலைமை வங்கி என அழைக்கிறார்கள். இத்தகைய தலைமை வங்கிகள் தன்னாட்சியுடன் அரசியல் குறுக்கீடுகளின்றிச் செயல்படுகின்றன.

Modi and Amit Shahஅமெரிக்கப் பொருளாதாரம்  கடந்த 70 ஆண்டுகளாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும்  அமெரிக்காவின் நாணயமான டாலரின் மதிப்பில்தான் உலகின் 90 விழுக்காடு ஏற்றுமதி இறக்குமதிகள் செய்யப்படுகின்றன. இதற்குப் பல அரசியல் காரணங்கள் இருந் தாலும் முதன்மையான காரணம் அமெரிக்க டாலரின் மதிப்பைத் தனித்த பாங்கோடு அமெரிக்காவினுடைய  கூட்டரசு தலைமை வங்கி சிறப்பாக மேலாண்மைச் செய்வதே காரணமாகச் சுட்டப்படுகிறது. அவ்வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்பவர் சிறந்த கல்வியாளராகவும் பொருளாதார நிபுணராகவும் வங்கியியல் அறிஞராகவும் இருக்க வேண்டும். பல அமெரிக்கப் பொருளாதார அறிஞர்கள் இவ்வங்கியில் பணியாற்றிய பெருமைக்குரியவர்கள்.

இந்தியாவில் இந்தியமைய வங்கி சுயாட்சித் தன்மையுடன் செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டது. இந்திய மைய வங்கி தனியார் வங்கியாக பிரித்தானிய ஆட்சியில்  1935ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு 1949ஆம் ஆண்டு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியாக இம் மைய வங்கி மாற்றப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவுப் பிரிவின்  தலைவர் அண்ணல் அம்பேத்கர் எனப் போற்றப் படுகிறார். ஆனால் அண்ணல் அம்பேத்கர் மாபெரும்  பொருளாதார அறிஞர் என்பதைப் பலர் அறிந்திருந்தாலும் இந்திய மைய வங்கி சிறப்பாகச் செயல்படு வதற்கு அவர்தான் காரணமானவர் என்பதைப் பலர் மறைத்து விட்டனர். இலண்டன் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் இந்திய ரூபாய் மதிப்பு  என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்பேத்கர் ஆய்ந்து எடுத்து முடிவுகள் அவர் போற்றிய இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரப் பேரறிஞர் ராபர்ட்சன் கருத்துகளுக்கு எதிரானதாக அமைந்தது. இருப்பினும் அண்ணல் அம்பேத்கர் அவரது ஆய்வுக்கட்டுரையை  நூலாக வெளியிட்ட போது ராபர்ட்சன்னிடம்தான் அணிந்துரைப் பெற்றார்.

அண்ணல் அம்பேத்கர் அளித்த வங்கியியல் தொடர்பான நெறிமுறைகளும் வரையறைகளும்தான் இந்திய மையவங்கி உருவாவதற்கு அடிப்படைக் காரணங்களாகும். இத்தகைய செயற்கரிய பங்களிப்பை இந்திய மைய வங்கி 2017அம் ஆண்டு தனது 82ஆம் ஆண்டு நிறுவன நாளில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தோடு வெளியிட்டு நினைவுக் கூர்ந்து பெருமைப்படுத்தியது. அவ்வறிவிப்பில் இந்திய மைய வங்கி அண்ணல் அம்பேத்கர் ஆய்வுக் கட்டுரையில் கருத்துருவாக்கம் செய்த நெறிகளின்படிதான் அதன் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.. இந்நாளில் பொருளாதாரப் பேரறிஞர் என்ற முறையிலும் மானுட உரிமைகளின் போராளி என்ற முறையிலும் இவ்வங்கி உருவாக்கத்திற்கு அயராது பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறது என்று மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அம்பேத்கர் வலியுறுத்திய இட ஒதுக்கீடு கொள்கையையும் அரசமைப்புச் சட்ட நெறிகளையும் ஒரு பக்கத்தில் காலில் போட்டு மிதித்து மறு பக்கத்தில் அறிஞர் அம்பேத்கருக்கு இங்கிலாந்தில் நினைவுச் சின்னம் என்று அறிவித்து பிரதமர் மோடியும் அவரின் எடுபிடிகளும் அண்ணல் அம்பேத்கரைப் போற்றுவது பார்ப்பன ஏமாற்று நரித் தந்திரமாகும் என எல்லாரும் உணர வேண்டும். இன்றைய பா.ச.க அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உயர் நெறிகளை எப்படிச் சீரழித்து வருகிறதோ அவ்வகையிலேயே தன்னாட்சி யுடைய  மைய வங்கியின் உயர் நெறிகளையும் தன் னாட்சி அதிகாரங்களையும் சிதைத்து வருகிறது.

பாசக அரசு இந்திய மைய வங்கியின் நெறிகளுக்கு ஏற்ப பணியாற்றிய ரகுராம் ராஜனைப் பதவியில் நீட்டிக்கச் செய்யாமல் பல  இடையுறுகளைச் செய்து வெளியேற்றியது. அதற்கு முதன்மையான காரணம் பொதுத் துறை வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெற்ற பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பல இலட்சங் கோடி ரூபாய்களைச் சூறையாடியதைத் தடுப்பதற்கு ரகுராம் ராஜன் எடுத்து நடவடிக்கைகளே காரணம் எனச் சுட்டப்படுகிறது.

மேலும் ரூ.1000 ரூ.500 பணத்தாள்களை மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக இரகுராம் ராஜன் பல கருத்துகளை அளித்ததால் அவருக்குப் பதவி நீடிப்பு அளிக்காமல் குசராத்திய அம்பானிக்கு உறவின ரான உர்ஜித் பட்டேலை இந்திய மைய வங்கியின் ஆளுநராக  நியமித்தது குசராத்திய மோடி அரசு. பணமதிப்பிழப்பு நடவடிக்கை படுதோல்வியடைந்து இந்தியப் பொருளாதாரம்  சரிவை நோக்கிப் பயணிக்கிற நேரத்தில் இந்திய மைய வங்கியிலிருந்து  ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை  இந்திய அரசு அழுத்தம் அளித்துப் பெற்றது. இது தொடர்பான பல விமர்சனங்கள் வெளி வந்தன. தொடர்ந்து இந்திய மையவங்கியின் தன்னாட்சியைப் பறிக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டதால் உர்ஜித் பட்டேலே தனது பதவியைத் துறந்தார்.

மேற்கூறிய தொகையைப் பெறுவதற்காகவே பொருளாதாரமே படிக்காத வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்ற வங்கியியல் தொடர்பாக எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாத இந்திய ஆட்சிப் பணித்துறை யைச் சேர்ந்த சக்திகாந்த தாசை இந்திய மைய வங்கியின் ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்தது. இவர்தான் இந்தப் பெரும் தொகையை ஒன்றிய அரசிற்கு தாரை வார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதார நிதி கட்டமைப்பிற்குப் பெரும் துணையாக இருப்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமாகும். தற்போது இதன் நிதி சொத்து மதிப்பு 31 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேலாகும். இந்திய வாழ்நாள் கழகம் 1956ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது நாட்டுடமையாக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டுக்கு முன் பல தனியார் நிறுவனங்கள் இத் துறையில் இயங்கி வந்தன. நாட்டுடமையாக்கப்பட்ட பிறகு இந்திய வாழ்நாள் காப்பீட்டுக் கழகம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

2019ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இக்கழகத்தில் 29 கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து அளித்து வருகிறார்கள். குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் காப்பீட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி அவர்களது வாழ்நாள் காலத் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.  நடுத்தர வர்க்கத்தினர் அரசு பொதுத் துறை தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நம்பிக்கையுடன் தங்களுடைய ஆண்டு மாத தொகைகளைச் செலுத்தி வருகின்றனர். இந்திய வாழ்நாள் காப்பீட்டுக் கழகம் ஒன்றிய மாநில அரசுகளின் பல திட்டங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களைக் குறைந்த வட்டியில் அளித்து  நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார வளர்ச்சியில் பங்காற்றி வருகிறது.

1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு தாராளமயம் தனியார்மயம் உலகமயம் எனும் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்தியாவில் பல தனியார் பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் இயங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் இன்றும் மக்களின்  நம்பிக்கையைப் பெற்ற ஒரே ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இந்திய வாழ்நாள் காப்பீட்டுக் கழகம் உள்ளது. இதன் பங்குகளைத் தனியார்க்கு விற்பது நாட்டு துரோகத்திற்கு இணையானது எனப் பலர் கடுமையான முறையில் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்ற னர். இந்தியக் காங்கிரசு, இடதுசாரி கட்சிகள், திமுக, திரிணாமுல், காங்கிரசு உட்பட பெருமபான்மையானக் கட்சிகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2020-21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகப் பங்குகளைத் தனியார்க்கு விற்பது தொடர்பான தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்குத் தனியார் துறையின் செயல்பாடுகளே ஒரு பெரும் காரணமாக அமைந்து வருகிறது. ஏற்கெனவே பொதுத் துறை வணிக வங்கிகளின் பல இலட்சம் கோடி ரூபாய்களைச் சூறையாடிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பியோடிய பலர் இன்றும் அந்நாடுகளில்  உல்லாசமாக வலம் வருகின்றனர் என்பதை அடிக்கடி ஒளி, அச்சு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இச் சூழலில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வாழ்நாள் காப்பீட்டுக் கழகத்தின் ஆயுளை முடிப்பதற்கு மோடி அரசு முற்படுகிறது எனப் பலர் அச்சத்தோடு தெரிவித்து வருகின்றனர். 3 இலட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை இந்தியப் பொருளாதாரத்திற்கு வழங்கி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்க்கு வேலைவாய்ப்புகளை அளித்துப் பெரும் இலாபத்தில் இயங்கி வரும் இந்தக் காப்பீட்டுக் கழகத்தைத் தனியாரிடம் அடமானம் வைப்பது மேலும் பொருளாதாரச் சிக்கல்களை உரு வாக்கி இந்தியப் பொருளாதாரம் மேலும் விரைவான சரிவைச் சந்திக்கும்.

பல பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இக்காலக்கட்டத்தில் இவற்றை எல்லாம் மூடி மறைத்து இந்தியப் பொருளாதாரம் பல துறைகளில் வெற்றியைக் கண்டு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது 21ஆம் நூற்றாண்டின் பெரும் நகைச்சுவையாகும். 2020-21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முதல்நாள் பெருளாதார ஆய்வு அறிக்கை 2019-20 வெளியிடப்பட்டது. திட்டமிட்டுப் பல கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியில் 10 தலைப்புகளிலும் இரண்டாம் தொகுதியில் 10 தலைப்புகளிலும் பல பொருளாதாரப் புள்ளிவிவரங்களும் கருத்துருக்களும் தரப்பட்டுள்ளன. இதன் முதன்மை நோக்கமே இந்த அறிக்கையை யாரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வருமானம் வேலைவாய்ப்பைப் பெருக்குவது வணிகச் சூழல்களை மேம்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 50ஆம் ஆண்டு நிறைவு அவற்றின் பங்களிப்பு வங்கிகள் அல்லாத நிதி அமைப்புகளில் காணப்படும் நிதிப் பாதுகாப்பற்ற  நிலை தனியார்மய மாக்கலும் செல்வத்தை உருவாக்குதலும் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் காணப்படும் நிலை.

இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் இந்தியப் பொருளாதாரத்தினுடைய ஏற்றத்தாழ்வுகள் நெளிவு சுழிவுகள், நெகிழ்ச்சிகள் வீழ்ச்சிகள் என்ற பிரித்தானிய  ஆங்கில மொழி நடையில் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு தலைப்பிலும் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் மாணவர்கள் போடும் படங்கள் புள்ளிவிவர அட்ட வணைகள் வளைகோடுகள் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் திருவள்ளுவரைத் தமிழில் சுட்டிவிட்டுப் பிறகு அர்த்தசாஸ்திரம், ரிக், வேதம், பகவத் கீதை உட்பட இந்துத்துவா கருத்துகளையும் திறமையான திருட்டுத்தனத்தைப் புகுத்தி இரு தொகுதிகளில் பொருளாதார ஆய்வு அறிக்கை (2019-20) வெளியிடப் பட்டுள்ளது.

இதைக் குறிப்பிடுவதற்கு முதற்காரணம் இந்த ஆய்வறிக்கையில் சுட்டப்படும் எல்லாப் புள்ளிவிவரங்களும் இந்தியாவின் புள்ளிவிவர அமைப்புகளான  மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், தேசிய புள்ளிவிவர அமைப்பு ஒன்றிய அரசின் புள்ளிவிவர நிறுவனம் நாட்டினுடைய குற்றவியல் நடவடிக்கை அறிக்கை போன்ற பல புள்ளிவிவரங்களைச் சேகரித்து சீரமைக்கும்  நிறுவனங்களில் மோடி அரசு பல தில்லுமுல்லுகளைச் செய்து வருகிறது என்பதை 2020 பிப்ரவரி  பொருளாதார அரசியல் வார இதழில் ஒன்றிய அரசின் புள்ளிவிவர ஆணையத்தின் முன்னாள் தலைவரும் தேசிய புள்ளிவிவர குழுவின் முன்னாள் தலைவருமான பிரணாப் சென் ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளார். இந்தக் கட்டுரையில் இந்தியப் பொருளாதாரத்தின் பல தரவுகளை ஆளுங்கட்சிக்குச் சார்பாக மாற்றி புள்ளிவிவரங்களை உயர்த்தி மதிப்பீடு செய்து பெரும் குழப்பங்களை ஒன்றிய அரசு செய்து வருகிறது என்பதைப் பல ஆதாரங்களுடன் சுட்டியுள்ளார். புள்ளிவிவரத் துறைகளின் தன்னாட்சி எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதையும் சிறந்த புள்ளிவிவர நிபுணர்களின் கருத்துகள் புறந்தள்ளப்படுகின்றன என்பதையும் குறித்துள்ளார். இத்துறையிலும் ஒன்றிய அரசு பொய்யான தரவுகளையும் தகவல்களையும் மக்களுக்கு அளித்துச் செயல்படுகிறது. இதற்கெல்லாம் முதன்மையான காரணம் என்ன? இந்தியப் பொருளா தாரம் சரிவிலிருந்து வெகு விரைவில் மீட்டெடுக்கப் படும் என்ற நம்பிக்கை எல்லாத் தரப்பு மக்களிடமும் சிதைந்து வருகிறது.

சான்றாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் சரக்குச் சேவை வரி விதிப்பு முறையும் இந்தியப் பொருளாதாரத் தையும் மாநிலங்களின் தன்னுரிமையையும் வெட்டி வீழ்த்தியது. அப்போது அதைத் திசைத் திருப்ப காஷ்மீர் மாநில சிறப்பு அரசமைப்புச் சட்ட 370வது பிரிவை நீக்கி காஷ்மீர் அரசியல் தலைவர்களைக் கைது செய்து மக்களைப் பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கியது. ஊடகங்கள் இந்தத் திசைத் திருப்பல் நாடகத்திற்குத் துணை போயின. மக்களாட்சியின் மாண்புகள் சிதைக்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக மோடி பிரதமர் பதவி ஏற்ற பிறகு மற்றொரு திசைத் திருப்பும்  நாடகம் அரங்கேற்றப்படுகிறது. 2019ஆம் ஆண்டில் மட்டும் 70 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.

15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநிலங் களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத்தொகையையும் சரக்குச் சேவை வரி இழப்பைச் சரிகட்ட மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதித்தொகையையும் அளிக்க முடியாமல் ஒன்றிய அரசு தள்ளாடி வருகிறது. ஏழ்மையும் ஏற்றத்தாழ்வுகளும்தான் இந்தியாவின் பொருளாதார அடையாளங்களாக  இன்று உள்ளன.

இந்த உண்மைகைளை மறைப்பதற்கு தற்போது இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமை பதிவேடு தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, என்ற பெயரில் இசுலாமியர்க்கு எதிராகவும் இலங்கைத் தமிழர்க்கு எதிராகவும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வீழ்ந்து வரும் பொருளாதாரத்தை மக்கள் உணராமல் திசை திருப்பும் மக்கள் விரோத சனநாயக விரோத அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகளை உச்ச நீதிமன்றமும் கண்டும் காணாமலும் இருப்பது நீதித் துறையின் மாண்புகளும் சீரழிந்து வருகின்றனவா? என்ற பேரச்சம் எழுந்துள்ளது. இதுதான் இந்திய ஆட்சியியலின் முதன்மை நோக்கமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் முதன்மையான பொருளாதார சமூக அரசியல் கட்டமைப்பு நிறுவனங்களையும் அவற்றின்  தன்னாட்சிக் கூறுகளையும்  சிதைத்து வருவது இந்தியாவைப் பிளவுப்படுத்தும் நோக்கமா? என்ற கேள்வியும் எழுகிறது.