இந்து கோயில்களில் நுழைவதற்கே ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ அனைவருக்கும் பார்ப்பனர்கள் தடை போட்ட காலம் ஒன்று இருந்தது. அதுவே ‘ஆகம விதி’ - அதுவே தெய்வீக நடைமுறை என்று இறுமாப்பு பேசினர்.
இந்த ‘ஆகமம்’, ‘அய்தீக’ பூச்சாண்டிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தான் பெண்கள் உள்பட அனைத்துப் பிரிவினரும் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடவும் கோயில் ‘திருக்குளங்களில்’ நீராடவும் உரிமை வழங்கப்பட்டது.
அதுதான் 1947ஆம் ஆண்டின் 5ஆவது சட்டமாகிய ‘ஆலய பிரவேச உரிமை’ சட்டம். ‘ஆகமம்’, ‘அய்தீகத்துக்கு’ எதிராக அப்படி ஒரு சட்டம் வராதிருக்குமானால், இப்போது கும்பகோணம் ‘மகாமகத்தில்’ முழுக்குப் போடும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். சைவ மடாதிபதிகளுக்கே கூட அந்த உரிமை கிடைத்திருக்காது.
கோயில் நுழைவு உரிமை கிடைத்தாலும்கூட கோயில் ‘கருவறை’க்குள் கடவுளை நேரடியாக வணங்குவதற்கோ அல்லது உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கோ ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ மற்றும் பெண்களுக்கு உரிமை கிடையாது என்று கூறி, பார்ப்பனர்கள் தங்கள் சமூக மேலாதிக்கத்தை விட்டுத் தர மறுக்கிறார்கள். அதற்கு உச்சநீதிமன்றங்களும் அரசியல் சட்டங்களின் உணர்வுகளுக்கு எதிராக அண்மையில் தீர்ப்புகளை வழங்கின.
ஆனாலும், பார்ப்பனியம் திணிக்கும் பாகுபாடுகளுக்கு எதிரான இந்தப் போராட்டம் ஓய்ந்து விடாது; தொடரவே செய்யும் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களைத் தொடர்ந்து சமூகத்தின் சரி பகுதி எண்ணிக்கையாக உள்ள பெண்கள், தங்கள் மவுனத்தைக் கலைத்து போர்க்கொடியை உயர்த்தத் தொடங்கிவிட்டார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வரையிலான பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மி°ரா, பி.ஜி. கோஸ், என்.வி.இரமணா ஆகியோரடங்கிய அமர்வு, இந்த வழக்கு விசாரணையின் போது, திருவாங்கூர் தேவஸ்தான போர்டு வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
• ‘ஆன்மிகம்’ ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா?
• பெண்கள் ‘ஆன்மிக’ எல்லையை எட்டுவதற்கு அருகதையற்றவர்களா?
• வேதம், உபநிடதம், கீதை, ஸ்மிருதிகள் - பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை வலியுறுத்துகிறதா?
- என்ற கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். இந்த வினாக்களையும் கடந்து உச்சநீதிமன்றம், முன் வைத்துள்ள சில கருத்துகள் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
“சனாதன தர்மம்” என்பது புனிதமானது; அந்த ‘தர்மத்தில்’ ஜாதி பாகுபாடுகளுக்கோ, பெண், ஆண் பாகுபாடுகளுக்கோ இடமில்லை. ‘சனாதன தர்மம்’ அனைவருக்கும் பொதுவானது. கோயில்கள், பொதுச் சொத்துக்களாக கருதப்பட வேண்டியவை. எனவே அரசியல் சட்டங்கள் வகுத்துள்ள சட்டகத்துக்குள்ளேயே அது செயல்பட முடியும் .
கோயில் நிர்வாகம் தொடர்பாக விதிகளை நீங்கள் உருவாக்கலாம். (அதாவது, கோயில் திறக்கப்படும் நேரம் போன்றவை) ஆனால், விதிகள் பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும். இந்த விதிகளில் பெண்களுக்கு பாகுபாடு காட்டலாமா என்பதே இப்போது நடக்கும் விவாதம்.
பெண்களுக்கான அனுமதியை மறுத்து வாதாடுவதற்கு முன் வழக்கறிஞர்களாகிய நீங்கள் ஸ்மிருதி, ஸ்ருதி, உள்ளிட்ட மத சாஸ்திரங்களை படித்து விட்டு வந்து வாதாடுங்கள். இந்த நீதிமன்றம் அரசியல் சட்டம் வகுத்துள்ள விதிகள்; பெண்களுக்கு எதிராக முன் வைக்கப்படும் மத ‘ஆச்சாரங்கள்’ இரண்டையும் சேர்த்து பரிசீலிக்கும்.
ஆனாலும்கூட அரசியல் சட்டம் வகுத்துள்ள சட்டகத்துக்குள் நின்றுதான் தனது தீர்ப்பை வழங்கும்” என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பதோடு, இது குறித்து நீதிமன்றத்துக்கு உதவிட வழக்கறிஞர்கள் குழு ஒன்றையும் (அமிகஸ் க்யூரி) நியமித்துள்ளனர். இராமாயணக் கதையிலேயே ஆர்த்தி மகரிஷியின் மனைவியான அனுசூரியா என்ற பெண், பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் ‘குழந்தை’களாக மாற்றி ‘சாப மிட்டதை’யும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சா°திரங்கள், வேதங்கள் என்ற மத நூல்களின் எல்லைகளுக் குள்ளேயே நின்று, நீதிமன்றம் ‘பாகுபாடு’களுக்கு எதிரான கருத்துகளை முன் வைத்திருக்கிறது. பகுத்தறிவாளர்களோ, பெண்ணுரிமையாளர்களோ, மனித உரிமையாளர்களோ இப்படிப் பேசினால் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள் என்றும், இவர்களுக்கு இந்து மதத்தை விமர்சிக்க உரிமை இல்லை என்றும் கூக்குரல் போடும் பார்ப்பனிய கும்பல், உச்சநீதிமன்றம் மதத்தின் வட்டத்துக்குள்ளேயே நின்று எழுப்பியிருக்கும் இந்த கேள்விகளுக்கு என்ன பதில் கூறப் போகிறது, என்று கேட்கிறோம்.
உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த கேள்விகள் - அர்ச்சகர் நியமனங்களில் “சூத்திரர் - பஞ்சமர் மற்றும் பெண்களுக்கு” எதிரான பாகுபாடுகளுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தி வரக்கூடியதே என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். (அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கில் - ‘பாகுபாடுகளை’ மறைமுகமாக நியாயப்படுத்திடும் குழப்பமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகளடங்கிய அமர்வு வழங்கியது. அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி என்.வி.இரமணா, இந்த அமர்விலும் இடம் பெற்றிருக்கிறார்.)
அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்யும் அரசியல் சட்டம்தான் எல்லாவற்றையும்விட உயர்ந்தது என்கிறார்கள் நீதிபதிகள். இதைத்தான் நாமும் வலியுறுத்துகிறோம்.
ஆனால், பிறவியின் அடிப்படையிலே ‘பாகுபாடு’களை உறுதிப்படுத்திட பின்பற்றப்பட்டு வரும் “பழக்க வழக்கங்களுக்கும்” சட்டத்தில் இடமிருக்கிறது என்று நீதிமன்றம் கூறும்போது தான், நாம், நீதிமன்றத்தின் நேர்மையையே கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.
இப்போது ‘சூத்திரர்-பஞ்சமர்கள்’ மட்டுமின்றி பெண்களும் சுயமரியாதைக் கான உரிமைக் கொடியை தூக்கிவிட்டார்கள். காலத்தின் மாற்றங்களை நீதித் துறை கவனத்தில் கொள்ளுமா? என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
உரிமைப் போருக்கு களமிறங்கிய பெண்களைப் பாராட்டுகிறோம்; பார்ப்பனியத்துக்கு சாவு மணி அடிப்பதை இனியும் தள்ளிப் போட முடியாது; போடவும் கூடாது!