பெண்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்துகிறது மனுதர்மம் என்றும் ஜாதி ஒழிப்பே ஆரோக்கியமான சமூகம் என்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத் துணை வேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் கூறியுள்ளர்.

மானுடவியல் என்பது அறிவியல் பூர்வமானது. நமது கடவுள்களின் ஆதிமூலத்தை தேடிப் பார்த்தால், எந்த ஒரு கடவுளுமே பிராமணர் கிடையாது என்பது தெரிய வரும். சிவபெருமான் ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். பாம்புடன் சுடுகாட்டில் அமர்ந்திருப்பவர்தான் சிவபெருமான். சிவபெருமானுக்கு ஆடை என்பது குறைவுதான். பிராமணர்கள் சுடுகாட்டில் அமருவார்கள் என நான் நினைக்கவில்லை.

கடவுளர்களின் மானுடவியலை பார்த்தால் உயர்சாதி என்பதில் இருந்து எந்தக் கடவுளும் வந்தது இல்லை. லட்சுமி, சக்தி என அத்தனை கடவுள்களுமே உயர்சாதி இல்லை. ஜெகநாதரை எடுத்துக் கொண்டால் அவரும் பழங்குடியாகவே இருக்க வேண்டும். இப்படியான நிலையில் ஏன் நாம் பாகுபாட்டுடன் இருக்கிறோம்? இது மனிதநேயமற்றது. மனுஸ்மிருதியானது அனைத்து பெண்களையும் சூத்திரர்கள் என்கிறது. மனுஸ்மிருதி என்பது மிக மிக பிற்போக்கானது. மனுஸ்மிருதியின் அடிப்படையில் ஒரு பெண் தன்னை பிராமணர் என்றோ அல்லது வேறு எதன் பெயரிலோ உரிமை கொண்டாடி விட முடியாது. உங்களை சூத்திரர் என்கிறது மனுஸ்மிருதி. அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டால் கணவரின் சாதி அல்லது அப்பாவின் சாதிதான் உங்களுடையதாகிறது. இது மிகவும் பிற்போக்கானது.

பிறப்பின் அடிப்படையிலானது சாதி அல்ல என பலரும் கூறுகின்றனர். ஆனால் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில்தான் சாதி தீர்மானிக்கப்படுகிறது. பிராமணரோ அல்லது வேறு ஒரு சாதியை சேர்ந்தவரோ தலித் ஆக முடியுமா? அண்மையில் இராஜஸ்தானில் 9 வயது தலித் சிறுவன், குடிநீர் பானையை தொட்ட ஒரே காரணத்துக்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த குடிநீரை குடிக்கக்கூட இல்லை. நம்முடைய மனிதாபிமானம் எங்கே நிற்கிறது என யோசித்துப் பாருங்கள்? சக மனிதனை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இந்தியச் சமூகமானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமானால் சாதி ஒழிப்பு என்பது அதிமுக்கியமானதாகும். சாதி என்ற செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்றின் பெயரால் சக மனிதனைக் கொலை செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். இந்திய நாகரிகத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதை பவுத்தம் காட்டுகிறது. கருத்து வேறுபாடு, பன்முகத் தன்மை மற்றும் வேறுபாட்டை இந்திய நாகரிகம் ஏற்றுக் கொள்கிறது என்பதை நிரூபிப்பதால், பவுத்தம் மிகப் பெரிய மதங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். புத்த மதம், பிராமண இந்துயிசத்துக்கு எதிரானது. புத்தர் இந்திய வரலாற்றில் முதல் பகுத்தறிவாளர். அதற்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புத்துயிர் ஊட்டினார். இவ்வாறு சாந்திஸ்ரீ பண்டிட் பேசியுள்ளார்.