thikasi- ungal noolaagam ap copy2014 மார்ச் 26ஆம் தேதி காலையில் தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்ட தோழர் செந்தில் நாதன், தோழர் தி.க.சி. (தி.க.சிவசங்கரன்) அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற எதிர்பாராத சேதியைக் கேட்டு மலைத்துப் போனேன். மிகவும் உறுதியான மனநிலை கொண்ட அந்த மனிதனை ‘மரணம்’ எனும் இயற்கை நியதி வெற்றிகண்டு அவரை ஆட்கொண்டு விட்டிருக்கிறது. தி.க.சி. பற்றி நினைவுபடுத்திக் கொண்ட போது, சென்னையில் இளம் வழக்குரைஞனாக சுமார் ஆறு ஆண்டுகாலத்துக்கும் அதிகமாகத் தோழர் தி.க.சியுடன் ஒரே அறையில் வாழ்ந்ததும், நானும் தோழர் செந்தில்நாதனும் தி.க.சி.யும் நானும் சம்பந்தப்பட்ட மக்கள் எழுத்தாளர் சங்கம் உருவாகிச் செயல்பட்டதும் நினைவுக்கு வந்தது.

நான் சென்னை, மாம்பலத்தில் தோழர் தி.க.சி.யுடன் சக அறைத் தோழனாகச் சேர்ந்ததே ஒரு விசித்திர சம்பவம் எனலாம். அப்போது நான் எனது சட்டப்படிப்பை முடித்துவிட்டு, இளம் வழக்குரைஞராக மூத்த வழக்கறிஞர் வே.வெங்கட்ராமன் அவர்களின் சேம்பரில் சேர்ந்திருந்தேன். அவரது வீடும் வக்கீல் அலுவலகமும் மாம்பலத்தில் ரெங்கநாதன் தெருவில் இருந்தது. மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் இரவு பத்துப் பன்னிரண்டு மணி வரையில் பணி இருக்கும்.

எனவே எனது வேலைக்குத் தோதான வகையில் எனது சட்டக் கல்லூரி சக மாணவனும், எங்களோடு மாணவர் சங்கத்தைக் கட்டி வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியவரும் எனது சக தோழருமான தோழர் ஏ.எம்.கோதண்டராமன் (வழக்குரைஞர்) அவர்களுடன் மாம்பலத்தில் எனது சீனியர் வீடு இருந்ததற்கடுத்த தெருவில் குடியிருந்தேன். கோதண்டராமன் வழக்குரைஞர் தொழில் போக மீந்த நேரங்களில் தொழிற்சங்கங்களைப் பெரும்பாலும் அம்பத்தூர் பகுதியில் தொழிலாளர் அமைப்பினைக் கட்டி வளர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். நானும் ஓய்வு நேரங்களில் சென்னை நகர பழைய மேயர் திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து தொழிற்சங்கப் பணிகளைச் செய்து வரலாயினேன்.

இப்படிப்பட்டச் சூழலில் தோழர் கோதண்ட ராமனுக்கு நக்சலைட் இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டது. பிற்காலத்தில் தோழர் கோதண்டராமன் முழுநேர தொழிற்சங்க ஊழியராகிப் பிறகு நக்ஸலைட் தலைவரானது வேறு கதை. தோழர் கோதண்டராமன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த போதும், நக்ஸலைட்கள் தொடர்பு ஏற்பட்டதும் ஆந்திர மாநிலத்திலிருந்து, தலைமறைவு வாழ்க்கை நடத்திய நக்ஸலைட் தலைவர்கள் ரகசியமாக கோதண்டராம னையும் அதுபோன்ற தோழர்களையும் சந்திக்கலானார்கள்.

அவர்கள் பெரும்பாலும் சந்திக்கும் இடம் கோதண்டராமனும் நானும் தங்கியிருந்த அறை. அந்த வாடகை அறை தோழர் கோதண்டராமன் பெயரில் இருந்தது. நான் அந்த அறையில் இருப்பது, நக்ஸலைட்களும் கோதண்டராமனும் சந்திப்பதற்கும் ரகசியக் கூட்டங்கள் போடுவதற்கும் இடைஞ்சலாக இருப்பதால் திடீரென்று ஒருநாள் காலையில் நான் அந்த அறையை விட்டு வெளியேற வேண்டும் என்று பணிக்கப்பட்டேன். இவ்வாறு திடீரென்று நான் தங்கியிருந்த அறையை விட்டு வெளியேற்றப்பட்டேன். மாம்பலத்தில், அதிலும் திருமணமாகாத நபருக்கு வாடகை வீடு கிடைப்பது என்பது கடினம்.

இப்படிப்பட்ட சூழலில்தான் நான், தோழர் தி.க.சி.யைச் சந்தித்து எனக்கு ஏற்பட்ட விபத்தினைச் சொன்னேன். தோழர் தி.க.சி. அப்போது சோவியத்நாடு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தோழர் தி.க.சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உறுப்பினர். நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI M) உறுப்பினர். கடுமையான கொள்கை வேறுபாடுகள், சர்ச்சைகள் நடந்துகொண்டிருந்த நேரம் அது. தங்கியிருந்த அறையை விட்டு வெளியேற்றப்பட்டு, தங்க இடம் தேடி அலையும் நான், தோழர் தி.க.சி. அவர்களைச் சந்தித்து எனது இயலாமையைச் சொன்னதும் எந்த விதமான தயக்கமுமின்றி தனது அறையில் தன்னோடு வந்து தங்கிக்கொள்ளுமாறு சந்தோஷமாகச் சொன்னார். கொள்கை வேறுபாடோ, கோட்பாட்டு வேறுபாடோ தோழர் தி.க.சி.யின் மனிதாபிமான உணர்வை பாதிக்கவில்லை. அப்படித்தான் நான் தோழர் தி.க.சி.யுடன் மாம்பலத்தில் அவர் அறையை பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

thikasi-2 ungalnoolagamapr1தி.க.சியின் அறையில் நான் போய் தங்கலான சில நாட்களில் அந்த அறை வேறு ஒரு முற்போக்கு இலக்கிய முகாமின் கூடாரமாக மாற்றப்பட்டது. தோழர் தி.க.சி. எங்கிருந்தாலும் முற்போக்கு இலக்கியங்களைக் கட்டி வளர்ப்பது, முற்போக்கு எழுத்தாளர்களை உருவாக்குவது, ஊக்குவிப்பது என்பதிலேயே கண்ணும் கருத்தும் கொண்டவராக இருந்தார். அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் மணிக்கொடி எழுத்தாளர்களும், கலை, கலைக்காகவே என்கிற கவிதை எழுத்தாளர்களும் சென்னை மாநகரில் ஊக்கமுடன் செயல்படலாயினர்.

ஜெயகாந்தனைக்கூட அந்த கோஷ்டியுடன் இணைத்துக் கொண்டார். எனவே இவர்களது பிற்போக்கான இலக்கியப்போக்கினை எதிர்கொள்வது என்பது முற்போக்கு இலக்கியவாதிகளின் கடமையும் தேவையுமாக இருந்தது. அப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகவில்லை. எனவே முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் இலட்சியங்களை எடுத்துச் செல்லும் வகையில் 1967ல் தோழர் செந்தில்நாதனை செயலாளராகக் கொண்டு மக்கள் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டவர், தோழர் தி.க.சி. இந்த அமைப்புக்கான அலுவலகம் ஏதும் இல்லாததால், நானும் தோழர் தி.க.சி.யும் இருந்த அறையே அலுவலகமாகப் பயன்பட்டது. செயற்குழுக்கூட்டம் மாம்பலத்தில் உள்ள நடேசன் பூங்கா, பனகல் பூங்கா போன்ற பொதுப் பூங்காக்களில் நடைபெறும்.

மக்கள் எழுத்தாளர் சங்கம் முழுக்க முழுக்க தோழர் தி.க.சி.யின் ஆலோசனையின் பேரில் இயக்கப்பட்ட போதும், தோழர் தி.க.சி. இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருந்ததாலும், நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்ததாலும், எங்கள் இரண்டு பேரின் பெயர்களும் செயற்குழுவில் வேண்டுமென்றே இடம்பெறவில்லை. சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள எஸ்.எஸ்.ஏ. ஹாலில் நடைபெறும். கூட்டத்தில் உறுப்பினர்களுக்காக கவிதையும், சிறுகதை ஒன்றும் வாசிக்கப்படும்.

பிரபல படைப்பாளியின் படைப்பு ஒன்றும் விமர்சிக்கப்படும். மட்டுமல்லாது அந்த மாதம் வெளியான இலக்கிய ஏடுகள், அவற்றில் வெளியாகிய கட்டுரைகள், கதைகள், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும். மாதாந்திர கூட்டம் நடைபெறும் எஸ்.எஸ்.ஏ.ஹால், எழுத்தாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். மணிக்கொடி எழுத்தாளர்களும், கலை கலைக்காகவே என்கிற எழுத்தாளர்களும், மக்கள் எழுத்தாளர் சங்கத்தினரின் விமர்சனத்தைக் கண்டு பயந்தனர். இளைஞர்களுக்குரிய தர்ம ஆவேசத்துடன் இலக்கியப் படைப்புக்கள் விமர்சனம் செய்யப்படும்.

எழுத்தாளர், படைப்பாளி, கவிஞருமான திரு.என்.ஆர்.தாசன், கவிஞர் இன்குலாப், கவிஞர் நா.காமராசன், விமர்சகரும் படைப்பாளியுமான இளவேனில், கவிஞரும் விமர்சகரும் பின்னாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக உருவான கவிஞர் கந்தர்வன், கண்ணதாசன் இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.இராம.கண்ணப்பன், கவிஞர் பச்சையப்பன் ஆகியோர் இந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட இலக்கியவாதிகள். ஹிந்து (The Hindu) ஆங்கில ஏட்டின் ஆசிரியராக இருந்த திரு.என்.ராம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி சந்துரு, மாதர்சங்கத் தலைவர்களில் ஒருவரும் சிறந்த ஆங்கில விமர்சகருமான தோழர் மைதிலி சிவராமன் ஆகியோர் இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமல்ல, பங்களிப்பாளர்களுமாவர்.

ஒவ்வொரு கூட்டமும் முடிந்தபின்பும், பஸ் ஏறிப் போகாமல், கூட்டத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தவண்ணம் அண்ணாசாலை எஸ்.எஸ்.ஏ.ஹால் கட்டடத்திலிருந்து, மாம்பலத்தில் ரெங்கநாதன் தெருவில் இருக்கும் எங்கள் அறை வரை சோர்வடையாமல் ஒரு இளைஞனைப் போல் உற்சாகமாக நடந்து வரும் தோழர் தி.க.சி. இன்றும் என் கண்முன் தெரிகிறார். மக்கள் எழுத்தாளர் சங்கத்தில் இருப்பது பற்றி தி.க.சி மீது விமர்சனங்கள் வந்தபோதும் தக்க பதிலைச் சொல்லிவிட்டு அந்த அமைப்பைக் கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்.

இலக்கியப் படைப்புகளை ஒரு தாயைப்போல் விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாது, முற்போக்கு இலக்கிய இயக்கங்களைக் கட்டிக்காத்து வளர்ப்பதோடு மட்டுமல்லாது, இலக்கியகர்த்தாக்களைப் பாதுகாப்ப திலும் தி.க.சி. தனித்தன்மை கொண்டவராக இருந்தார். அவர் ஒரு செயல் வீரர்.

Pin It