marx ungalnoolagamapr141932ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட மார்க்ஸின் கட்டுரைகள் சில (‘பாரிஸ் கையெழுத்துப் படிகள்' என அழைக்கப்படுபவை) இராபர்ட் மில்லிகன் என்பவரால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அமெரிக்காவிலுள்ள ‘இண்டர்நேஷனல் பப்ளிஷிங் ஹவுஸாலும், மாஸ்கோவிலிருந்த புரொக்ரெஸ் பப்ளிஷராலும் முதன்முதலாக ‘1844ஆம் ஆண்டு பொருளாதார, தத்துவக் கையெழுத்துப்படிகள்' (Economic and Philosophic Manuscripts of 1844 என்னும் தலைப்பில் 1959இல் வெளியிடப்பட்டன. இராபர்ட் மில்லிகனின் மொழியாக்கம் பின்னர் ஹாலந்தைச் சேர்ந்த மார்க்ஸிய அறிஞர் டர்க் ஸ்ட்ரூயிக்கால் திருத்தம் செய்யப்பட்டு பல பதிப்புகளாக மாஸ்கோவிலும் அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டது.

லெனினுக்கும்கூடப் படிக்கக் கிடைத்திராத அந்தக் கட்டுரைகள் (மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதியவற்றில் லெனினுக்குக் கிடைக்காமல் போனவைகளில், மார்க்ஸிய வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட் பாட்டுக்கான அடிப்படைகளை வழங்கிய ‘ஜெர்மன் கருத்துநிலை' (German Ideology) என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டு முதன்முதலில் 1935இல் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பும் அடங்கும். இதுபோன்று இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம்.

‘பாரிஸ் கையெழுத்துப்படிகள்' (ஜெர்மன் மூலப் படைப்புகள்) 1932இல் வெளியிடப்பட்ட நாள் தொட்டே, மார்க்ஸின் இளமைக்கால எழுத்துகளில் இருப்பதாகச் சொல்லப்படும் ‘மனிதத்துவத்துக்கும்', (Humanism) என்று இந்த விவாதங்களில் சொல்லப் படுவது ‘மனிதநேயம்' அல்ல; இப்படிப் பொருள் கொண்டால் மார்க்ஸிடமோ, மார்க்ஸியத்திடமோ ‘மனிதநேயம்' இல்லை என்னும் முடிவுக்கு வர வேண்டும் - மார்க்ஸின் ‘மனிதநேயம்' வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ‘மனிதநேயம்' அல்ல என்னும் போதிலும்).

அவரது பிற்காலப் படைப்புகளில் இருப்பதாகச் சொல்லப்படும் ‘விஞ்ஞானபூர்வமான', ‘மனிதத்துவத்தைக் களைந்துவிட்ட' படைப்புகளுக்கு மிடையே வேறுபாடுகள் இருப்பதாகப் பல்வேறு தரப்பினர் வாதங்களை முன்வைக்கத் தொடங்கினர். இப்போது வரலாறாகிவிட்ட ‘சோசலிச' நாடுகளில் ஆட்சி அதிகாரத்திலிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த அரசியல், தத்துவ வியாக்கியானகர்த்தாக்களில் ஒருசிலரைத் தவிர மிகப் பெரும்பாலோருக்கு மார்க்ஸின் கையெழுத்துப்படிகளில் உள்ள சில கருத்துகள் உவப்பானவையாக இருக்கவில்லை. அந்த சோசலிச சமுதாயங்களிலும் ‘அந்நியமாதல்' என்னும் நிகழ்வுப் போக்கு இருந்தமையே அதற்குக் காரணம்.

‘இளம் மார்க்ஸ்', ‘முதிர்ந்த மார்க்ஸ்' என்று மார்க்ஸின் சிந்தனை வளர்ச்சியைப் பிளவுபடுத்திப் பார்க்கும் போக்கு மார்க்ஸிய வட்டாரங்களிலும் மார்க்ஸியரல்லாத, மார்க்ஸிய-விரோத வட்டாரங் களிலும் தொடர்ந்து நிலவிவந்தது, நிலவிவந்து கொண் டிருக்கின்றது. மிக அண்மைக்காலத்திய மார்க்ஸிய விவாதங்களில், இந்தப் போக்கின் முக்கியப் பிரதிநிதியாக இருந்தவர் பிரெஞ்சு அமைப்பியல்-மார்க்ஸியத் தத்துவவாதியான லூயி அல்துஸ்ஸெ. அவர்தான் ‘இளம் மார்க்ஸ§க்கும் முதிர்ந்த (அல்லது முதிய) மார்க்ஸ§க்கு மிடையே ஓர் ‘அறிவுத்தோற்றவியல் முறிவு' ஏற்பட்டிருந்தது என்னும் ‘புகழ்பெற்ற' வாதத்தை முன்வைத்தவர்.

அந்த ‘அறிவுத் தோற்றவியல் முறிவு' ஏற்பட்ட ஆண்டு எது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுவதில் அவருக்குத் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்ததால், அவரது வாதத்தின்படி மார்க்ஸின் படைப்புகள் பெரும்பாலானவற்றை (‘மூலதனம்' நூலின் முதல் பாகத்திலுள்ள பல பகுதிகள் உள்பட) ஹெகலிய-ஃபயர்பாஹிய சிந்தனைத் தாக்கத்தின் கீழ் எழுதப் பட்டவை என்று அவர் வரையறுக்க வேண்டியதாயிற்று. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யிலும் கூட பூர்ஷ்வாப் பொருளாதார அறிஞர் டேவிட் ரிக்கார்டோ, கற்பனாவாத சோசலிஸ்டுகளான ஸேன் -ஸிமோன், ஃபூரியெ, இராபர்ட் ஓவன் ஆகியோரின் சிந்தனைத் தாக்கத்தின் கீழ் எழுதப்பட்டுள்ள சில கருத்துகள் உள்ளன. அப்படியானால், அந்த ‘அறிக்கை'யையும் ‘விஞ்ஞானபூர்வமான சோசலிச'த்துக்கு எதிரானது என்று நிராகரித்துவிடலாமா?

மார்க்ஸின் ‘பாரிஸ் கையெழுத்துப்படிகள்' பற்றிய நல்ல அறிமுகத்தை எஸ். தோதாத்ரி வழங்குவார் என்று எதிர்பார்ப்பவர்களுக்குக் கிடைப்பது வெறும் பெயர் உதிர்ப்புகளும் அரைவேக்காட்டுத்தனமான தகவல்களும் மட்டுமே. சோவியத் யூனியனில் வெளியிடப்பட்ட ‘Economic and Philosophical Manuscripts 1844' என்னும் நூல், மார்க்ஸின் மூன்று கையெழுத்துப்படிகளையும் எங்கெல்ஸின் ‘அரசியல் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனப் பகுப்பாய்வுக்கான முன்வரைவுகள்' (Outlines of a Critique of Political Economy) என்னும் கட்டுரையைப் பின்னிணைப்பாகவும் உள்ளடக்கியுள்ளது. மார்க்ஸின் கையெழுத்துப்படிகள், தோதாத்ரி கூறுவது போல, ‘பொருளாதாரக் கையெழுத்துப்படிகள்' என்றும் ‘தத்துவக் கையெழுத்துப்படிகள்' என்றும் மேற்சொன்ன நூலில் வகைப்படுத்தப்படவில்லை. அவை வகைப் படுத்தப்பட்டுள்ள விதம் பின்வருமாறு:

First Manuscript: Wages of Labour, 1.Capital, 2.Profits of Capital, 3.The Rule of Capital Over Labour and the Motives of the Capitalist, 4.The Accumulation of Capital and the Competition Amongst the Capitalists; Rent of Land, Estranged Labour.

Second Manuscript: Antithesis of Capital and Labour, Landed Property and Capitalist.

Third Manuscript: Private Property and Labour, Political Economy as a Product of the Movement of Private Property, Private Property and Communism, Human Requirements under the Rule of Private Property and Under Socialism.Division of Labour in Bourgeois Society, The Power of Money in Bourgeois Society, Critique of the Hegleian Dialectic and Philosophy as a Whole.

‘ஒட்டுமொத்தமான ஹெகலிய இயங்கியல் மற்றும் தத்துவம் பற்றிய விமர்சனப்-பகுப்பாய்வி'லும்கூடப் பொருளாதாரக் கருத்துகள் உள்ளன.

மார்க்ஸைப் பொருத்தவரை, ‘மானுட விஞ்ஞானத்தை' பொருளாதாரம், அரசியல், தத்துவம், அறவியல் என்று பிரித்துப் பார்ப்பதுகூட அந்நியமாதலின் ஒரு வடிவமே. ‘பொருளாதாரவாதி' என்னும் முறையில் ஒரு குரலிலும் அறவியலாளர் என்னும் முறையில் இன்னொரு குரலிலும் ஆடம் ஸ்மித், ரிகார்டோ ஆகியோர் பேசுவதை இதற்கோர் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் மார்க்ஸ்.

தோதாத்ரியின் அளவுக்கு ஹெர்பர்ட் மார்க்யூஸ் (மார்க்யூஸெ என்றுதான் உச்சரிக்க வேண்டும்) போன்ற அறிஞர்களின் படைப்புகளை நான் படித்ததில்லை. ஆனால், தோதாத்ரியின் பின்வரும் வாசகங்கள் என்னை வியப்பிலாழ்த்துகின்றன:

“டிமன் என்பவர் மார்க்சின் மனிதநேயத்தினை ஏற்றுக்கொண்டு பொருள்முதல்வாதியான மார்க்சை மறுக்கிறார். ‘மூலதனம்' போன்றவற்றில் உள்ள மார்க்ஸ், பொருள்முதல்வாதி என்றும், ‘கையேடுகளில்' உள்ளவர் தான் உண்மையான மார்க்ஸ் என்றும் அவர் கூறுகிறார். எனவே இந்தக் கொள்கைகளைத்தான் நாம் அடிப்படை யாகக் கொள்ளவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ராபர்ட் சி.டக்கர் என்பவர் இதில் உள்ள அந்நியமாதலின் பின்னணியில் மார்க்சை சமய சிந்தனையாளர் என்றே கூறுகிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கால்பஸ் என்பவர் மார்க்சின் கருத்துகள் மதம் பேசும் அந்நியமாதல் என்பவைதான் என்று கூறுகிறார். மனிதன் செய்த முதல் பாவம் (தடை செய்யப்பட்ட மரத்தின் பழத்தை ஆதாமும் ஏவாளும் உண்ணுதல்) காரணமாக மனிதன் கடவுளிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டான். இதில்தான் மத அந்நியமாதல் உள்ளது. எனவே மார்க்சின் அந்நியமாதல் என்பதில் இது அடங்கியுள்ளது. அவர் பொருளாதார ரீதியாக அந்நியமாதல் என்று கூறுவதெல்லாம் இதன் வழியானது ஆகும்.

“இத்தகைய போக்கு தமிழகத்திலும் உள்ளன. கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன், தமிழவன், எஸ்.வி.ராஜதுரை ஆகியோர் இக்கருத்துகளை விளக்கியுள்ளனர். வைணவத்துடன் மார்க்சீயத்தை இணைப்பது, சைவத்துடன் மார்க்சீயத்தை இணைப்பது அந்நியமாதலைப் பரந்த அளவில் காண்பது இதில் அடங்கும்”

அறிவு நேர்மையிலிருந்தும் உண்மை பேசுவதி லிருந்தும் எஸ்.தோதாத்ரி எவ்வளவு தூரம் அந்நியமாகி யுள்ளார் என்பதையே மேற்காணும் வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன. குறைந்தபட்சம், அவர் டிமன், ராபர்ட் சி.டக்கர் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகளையோ, நூல்களையோ குறிப்பிட்டு அவற்றில் எந்தெந்தப் பக்கங்களில் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளனர் என்று தக்க ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியிருக்க வேண்டும். அதேபோல இந்த டிமன், ராபர்ட் சி.டக்கர், கால்பஸ் (இன்னும் 977பேரை தோதாத்ரி ஏன் விட்டுவிட்டார் என்பது தெரிய வில்லை) ஆகியோரின் கருத்துகளை அடியற்றி எஸ்.வி.ராஜதுரை (கோவை ஞானி, எஸ்.என். நாகராஜன், தமிழவன் ஆகியோர் தங்களுக்காகத் தனித்தனியாக வாதாடிக் கொள்ளட்டும்) தோதாத்ரி குறிப்பிடும் அபத்தமான கருத்துகளை எங்கு எழுதியிருக்கிறார் என்பதையாவது சொல்லியிருக்க வேண்டும்.

மார்க்ஸியவாதிகள் எனத் தங்களை அழைத்துக் கொள்பவர்களில் சிலர் தோதாத்ரி போல எழுதி வந்ததெல்லாம் ஏதோ முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்புதான் என நினைப்பவர்கள், டைனோஸார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை அறிந்து கொள்ளட்டும்!

Pin It