aakavi 350அகவி ஒரு நல்ல கவிஞர்.  ‘சும்மாடு’ என்னும் தொகுப்பு மூலம் கவிதை உலகில் சிறு அதிர்வை ஏற்படுத்தியவர்.  ஆய்விலும் ஈடுபட்டு வருபவர்.  அவரின் இரண்டாம் தொகுப்பாக வந்துள்ள ‘தொப்புள் புள்ளி.’

மனிதர் இருக்கும் போது மதிப்பதில்லை.  இல்லாத போது எண்ணாமல் இருப்பதில்லை.  மனிதர் இயல்பே இதுவாகவே உள்ளது.

காலத்திற்கேற்ப அன்பும்

அன்புக்கேற்ற காலமும்

மனுசர் பல பேருக்கு வாய்ப்பதே இல்லை

ஒரு வாழ்க்கைத் தத்துவத்தைக் கவிஞர் உணர்த்தியுள்ளார்.  காலத்தில் ஒழுங்காக இல்லா தவர்களைக் கவிஞர் ‘காலத்தைக் கைவிட்டவர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு வீட்டில் பல உறவுகள் இருந்தாலும் அம்மா போல் எந்த உறவும் இருப்பதில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழில் புரிந்தாலும் ‘அம்மா மட்டும் தான்’ அம்மாவாக இருக்கிறார் என்று அம்மாவின் அவசியத்தைப் புரியச் செய் துள்ளார்.  அம்மா என்பவள் வீட்டின் மையப் புள்ளி என்பதை மறுக்க முடியாது.  ‘மகளும் அப்பாவும்’ கவிதை மனதைத் தொட்டது.

அப்பாவும் நானும் அலாதியான

பிரியம் கொண்டவர்கள்

அம்மா பொருட்டில்லை எனக்கு

மகளுக்கும் அப்பாவுக்குமான உறவு எத்தகைய நெகிழ்ச்சியானது என்று தெரிவித்துள்ளார்.  அப்பா மகளுக்காக அயல்நாட்டு வாழ்க்கையையே விட்டு வந்திருப்பது தந்தையின் பாசத்திற்கு நிகரில்லை என்கிறது.  மகளுக்காக அப்பா உழைக்கிறார்.  அப்பாவிற்காக மகள் உருகுகிறார்.  முந்தையதி லிருந்து முரண்பட்டாலும் முன்னிற்கிறது.

‘உச்சி வெயில் கிராமம்’ கவிதையில் கிராமத்து மனிதர்களைக் காட்டியுள்ளார்.  கிராமத்து மனிதர்களின் வியர்வை உறிஞ்சப்படுகிறது என்கிறார்.  ‘தமிழ் வணக்கம்’ தனித்திருக்கிறது.  தொகுப்பில் அன்னியமாக இருக்கிறது.  தமிழறிஞர் மொழி ஞாயிறு தேவநேய பாவாணரைப் போற்றியு முள்ளார்.

மரங்களை நட்டான் அசோகன்.  மரங்களை வெட்டுகிறான் அயோக்கியன்.  ‘மனிதர் தழைக்க’ மரம் நட வேண்டும் என்கிறார் கவிஞர்.  மரம் நடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

நெடுஞ்சாலை மரங்கள்

போன நூற்றாண்டுகளின்

பொக்கிசங்கள்

என்னும் வரிகள் எடுத்துக்காட்டுக்குரியது.

மக்கள் உழைத்துச் சம்பாதிக்கிறார்கள்.  உண்டது போக சேமித்து வைக்கிறார்கள்.  ஆனால் திருடர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்.  திருட்டு ஒரு முக்கிய தொழிலாகி விட்டது.  திருடர்களிட மிருந்து தப்பிக்க வழியில்லை.  புகார் கொடுத்தாலும் காவல்துறை கண்டு கொள்வதில்லை.  கவிஞர் ‘திருடும் திருடும், கவிதையில் திருடர்களை அரசே திருடி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

மனிதர்களுக்கு உறவு முக்கியம். சிறிய வயதினரைவிட முதிய வயதினருக்கு உறவுகள் தேவைப்படுகிறது.  உறவு இல்லாவிடினும் உறவு சொல்லி அழைப்பது வழக்கம்.  அவ்வாறு அழைப் பதில் அவர்களுக்கு அளவில்லாத மகிழ்வு.

எந்த நபரையும்

பிள்ளையாக

உறவினர்களாக

சகோதரர்களாக

அடையாளப்படுத்திக் கொள்ள

முடிந்து விடுகிறது.

வயதான மனிதர்களுக்கு...

ஒரு வயதான மனிதரின் ‘அடையாளப் பேருணர்வை’ வெளிப்படுத்தியுள்ளார்.  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வோர் அடையாளம் வெளிப்படும்.  முதியவர்களின் அடையாளம் அன்பை வெளிப்படுத்தும்.

பிள்ளைகள் பெறுவது பெறுபவரின் விருப்பம்.  அளவான குடும்பமே வளமான வாழ்வு என்பர்.  அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விசமாகும்.  இன்றைய சூழலில் ஒன்றிரண்டு பிள்ளைகளே போதும் என்பாரும் உண்டு.  போதுமான பொரு ளாதாரம் இருந்தாலும் பிள்ளைகள் பெறுவதில் கட்டுப்பாடுடன் இருப்பாரும் உண்டு.  மக்கள் தொகைப் பெருக்கத்தால் வீடும் தடுமாறுகிறது. 

நாடும் தடுமாறுகிறது.  அளவிற்கு அதிகமாக பிள்ளை பெறுபவரை ‘நிகழ் கதை’யில் கவிஞர் காட்டியுள்ளார்.  ஒரு பிள்ளை பிறப்பதால் பள்ளிக்குச் செல்லும் பிள்ளை நிறுத்தப்படுகிறது என்பது சோகம்.

இலங்கையில் இனஅழிப்பு முயற்சியில் தமிழ் இனம் அழிக்கப்பட்டது.  கவிஞர் உலக சபை மீதும் ஐ.நா.சபை மீதும் கோபப்பட்டுள்ளார்.  ‘போருக்கு முன் அமைதி’யில் 

புலிகள் புறப்படும் பயம் 

எந்தத் துப்பாக்கியாலும் தடுக்க முடியாது 

என்று புலிகளின் தாக்கத்தைத் தெரிவித்துள்ளார்.  சிங்களவனின் அடி மனதில் புலிகளின் பயம் இன்னும் இருக்கவே செய்கிறது என்கிறார்.

இலங்கையில் நடந்தது இனவெறி என்றால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிகழ்த்தப் படுவது சாதி வெறி.  ஆதிக்கச் சாதியினரின் சாதி வெறியால் நடத்தப்படும் கொலைகளைக் கவிஞர் ‘ஆணவக் கொலைகள்’ என்று அடையாளப் படுத்தியுள்ளார்.  சாதி வெறிகளே சாதி ஆணவக் கொலைகளுக்குச் சாட்சிகள் என்கிறார்.  ஆதிக்கச் சாதியின் சாட்சியை அழிப்பதில் ஆற்றல் படைத்த வர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.  தாழ்த்தப் பட்ட மக்களுக்காக கவிஞர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.  கவிஞர் அகவியிடம் ஒரு தலித்திய குரல் எப்போதும் ஓங்கியே இருக்கும்.  இத்தொகுப்பிலும் ஒலிக்கச் செய்துள்ளார்.

சாதித் திமிரெல்லாம் 

சல்லிகளாய் உடைக்கும் 

வேதிவினை புரிகின்ற 

வேலைகளில் அலைபவன் நான் 

என்கிறது ‘நானின் நான்’ கவிதை.  அவருக் குள்ளிருக்கும் அவன் ஆதிக்க எதிர்ப்பாளனாக உள்ளான் என்பதற்குச் சான்றாக உள்ளது.  ‘உங்களால் முடியுமா?’ என்னும் கவிதையில் கவிஞர் அதிக மாகவே கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  நிலத்தை இழந்து கூலியாக உழைக்க முடியுமா, அவமரியாதை பொறுத்து வாழ முடியுமா, சுடு காட்டில் இருக்க முடியுமா, சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய முடியுமா என்றெல்லாம் கேள்வி களை எழுப்பி தலித்துகளின் நிலையைத் தெரிவித்து கவிதையின் இறுதியில்,

முடியாதென்றால்

எல்லாவற்றையும் பொத்திக் கொண்டு போ

இது எங்கள்

அப்பன் அறிவால் வாங்கித் தந்த

சன நாயக விடுதலை

என்கிறார்.  ஆதிக்கத்திற்கு எதிராக வாழத் தொடங்கி யுள்ளதைத் தெரிவித்துள்ளார். ‘பெயருக்குப் பின்னால் சாதி’ கவிதையில் பெயருக்குப் பின்னால் சாதி என்பது அவப் பெயர் என்கிறார்.  சாதி மனிதர்களைச் சாடியுள்ளார்.

இந்திய ஆட்சிப் பணியில் இருந்தாலும் தலித் மக்களுக்காகத் தொடர்ந்து உழைத்துக் கொண் டிருப்பவர் கிருத்துதாஸ் காந்தி.  அவரின் ஒரு கட்டுரையை வைத்து ஒரு கவிதையாக்கியுள்ளார்.  தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன் படுத்தப் படாமல் வீணாவது குறித்து பேசி யுள்ளது கட்டுரை.  திட்டங்கள் நிறைவேற்றப் படாதது பற்றியும் விமரிசிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் இனத்தவர்

பலமுடன் சேர்ந்தால்

எட்டும் உயரத்தை

எட்டிப் பிடிக்கலாம்

என்று நம்பிக்கை ஊட்டியுள்ளார்.  இந்திய ஆட்சிப் பணியின் எஞ்சிய காலத்தை தலித் மக்களுக்காக உழைப்பதற்காக உதறிய சிவகாமி அவர்களையும் போற்றியுள்ளார்.

என் கவியரங்கத் துளிச் சிதறலில் கவிஞரின் சொல்லாடல் திறனைக் காண முடிகிறது.  சொற் களின் மூச்சில் மரணத்தோடு முடிந்து விடுவ தில்லை மரணத்தின் சொற்கள் என்கிறார்.  ஒரு கவிஞனின் மரணத்திற்குப் பின்னும் சொற்கள் கவிதைகளாக இருந்து கொண்டே இருக்கும்.  தொப்புள் புள்ளி, தொலைத்தல் நிமித்தங்கள் போன்ற கவிதைகள் தொகுப்பில் குறிப்பிடும் படியுள்ளன.  கவிஞர் அகவியின் கவி எழுதும் பாணி அலாதியானது.  தனித்துவமானது. 

கிராமத்து மனிதர்களையும் அவர்தம் பிரச்சினைகளையும் கவிதையில் தெரிவித்துள்ளார்.  சும்மாடு தொகுப்பிற்கும் தொப்புள் புள்ளி தொகுப்பிற்கும் பதினொரு ஆண்டுகள் இடைவெளி.  சும்மாடுவின் அடர்த்தி தொப்புள் புள்ளியில் குறைவாகவே உள்ளது.  எனினும் அவர் முயற்சி பாராட்டத்தக்கது.  தலித்திய குரல் தற்போதும் ஓங்கியே ஒலித்துள்ளது. 

“ஒவ்வொரு மனிதனும் இந்தச் சமூகத்தில் முழு வடிவம் பெறுவதில் எத்தனை சிரமங்கள், தடைகள், இன்னல்கள் ஏற்பட்டாலும் எதிர் நீச்சல் போட்டாவது தன்னை ஒவ்வொருவரும் நிறுவ வேண்டும் என்பதே என் ஆசை” என்று கவிஞர் முன்னுரையில் குறிப்பிட்டது போல சிரமங்கள்,  தடைகள், இன்னல்கள் தாண்டி தன்னை நிறுவியுள்ளார் என்பதற்குச் சான்றாகவே தொகுப்பு உள்ளது.  தொப்புள் புள்ளியில் அகவியின் அடையாளம் மீண்டும் தெரிகிறது.

அகவி
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,
41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர்,
சென்னை - 600 011
விலை: ரூ. 80.00

Pin It