மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய காப்பிய நூல் மணிமேகலையாகும். இது 30 காதைகளைக் கொண்டது. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை இல்லறத்தைத் துறந்து துறவறத்தை மேற்கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ள காப்பிய நூல் மணிமேகலை ஆகும். இது சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்றும் கூறுவர்.

அரசனே காதல் கொண்டாலும் கணிகைக்குலத்தில் பிறந்தவளுக்கு இல்லற வாழ்வு இல்லை என்பதை வலியுறுத்திப் படைக்கப்பட்ட காப்பியமே மணிமேகலை. பழந்தமிழ் இலக்கியங்களில் பல பெயர்களில் திருனரை (மூன்றாம் பாலினத்தை) குறித்துள்ளனர். பால்மருள் சொற்களை“அண்ணகன், அண்ணாளன், அல்லி, அலி, அழிதூஉ, ஆண்பெண்ணல்லாதவன், ஆணலி, இடபி, இப்பந்தி, கிலிபம், கிலீபம், கிலீவம், கோஷா, சண்டம், சண்டன், சிகண்டி, தூவரன், நபுங்கிஷம், நபுஞ்சகம், நபுஞ்சகன், நபுஞ்சம், நபும்ஸகம், நாமர்தா, பண்டகன், பெட்டையன், பெண்டகம், பெண்டகர், பெண்டகன், பெண்டர், பெண்டு, பெண்ணலி, பெண்ணைவாயன், பேடர், பேடர்கள்,  பேடன், பேடி, பேடியர், பேடு, பேடுகள், பேதை, மகண்மா, மருள், வசங்கெட்டவன், வண்டரன், வருடவரன், வறடன்” (அன்னிதாமசு, 2004: 117) முதலிய பெயர்கள் திருனரைக் குறிக்கும் பெயர்களாகும்.

பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப் பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சி யில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி.

பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், 1956: 7) என்று கழகப்பதிப்பின் குறிப்புரை கூறுகின்றது, ஆண்மை திரிந்த பெயராவது பேடி. அச்சத்தில் ஆண்மையிற் திரிந்தாரைப் பேடி யென்பவாகலான். தெய்வ சிலையார் அலி மூவகைப்படும் என்கிறார்.

ஈண்டு அப்பெயர் பெற்றது அலியென்று கொள்க. அலி மூவகைப்படும்: Òஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை இழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றி பெண்டன்மை இழந்ததூஉம், பெண்பிறப்பிற் தோன்றிப் பெண்ணுறுப் பின்றித் தாடிதோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வ சிலையார், 1929: 11).

“பெண் தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மையை அதிகம் பெற்றவர்களை அலி என்ற சொல் குறிக்கிறது’’ (முனிஷ், 2013: 60) என்று கூறும் முனிஷின் கருத்தை  ஏற்கமுடியாது.

ஏன் எனில் அலி என்பவன், பெண்ணிலும் ஆணிலும் சேராத உறுப்பை உடையவன். இது ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும். ஆணுருவம் இருந்தால் ஆணலி எனவும், பெண்ணுருவம் இருந்தால் பெண்ணலி என்றும் சொல்வதுண்டு ((sambasivampillai, 1931: 125). மேற்கண்டவற்றின் அடிப்படையில், பெண்தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மை அதிகம் பெற்றவர்களையே அலி என்று கூறும் முனிஷின் கருத்து சரியானவையாகத் தோன்றவில்லை. அவர்களை ஆணலி என்று கூறுவதே சரியானதாகும். முன் சொல்லப்பட்ட அலி, பேடுக்கான விளக்கங்கள் அடிப்படையில் அலி, பேடு சொற்கள் ஒரே பொருண் மையைக் குறிப்பதாகவே உள்ளதைக் காணமுடிகிறது.

இவர்கள் தற்காலத்தில் அரவாணி, திருநங்கை என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.  இப்பெயர்களும் மாறி தற்போது ஆணாய்ப் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ளவரை திருநங்கை(பேடி)என்றும், பெண்ணாய்ப் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ளவரை திருநம்பி (பேடன்) என்றும் அழைக்கின்றனர். இத்தகையோர் திருனர்(பேடு, அலி) என்ற ஒரே சொல்லால் குறிப் பிடப்படுகின்றனர்.

திருநங்கை, திருநம்பி இருவரையும் குறிக்கும் ஒரே சொல்லாக திருனர் என்னும் சொல் பயன் படுத்தப்படுகிறது. “திருனர்/ /Transgender  என்பவர்கள் தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். திருநங்கை/ /Male To Female Transgender (MTF) என்பவர்கள் பிறப்பால் ஆண்பாலும், மன அளவில் பெண்பாலாகவும் அடை யாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருனரில் ஒரு பிரிவு.

திருநம்பி/ /Female To Male Transgender (FTM என்பவர் பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறு பாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள்.

இவர்கள் திருனரில் இன்னொரு பிரிவு’’ என்று ஓரினம் என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள இயலுகிறது. மற்றும் விக்கி பீடியா, சிருஷ்டி மதுரை ஆகிய இணைய பக்கங்களும் திருனரைப் பற்றிப் பேசுகின்றன. இத்தகைய மூன்றாம் பாலாக உள்ள திருனரைப்(அலி, பேடு) பற்றி மணி மேகலைக் காப்பியம் பதிவுசெய்துள்ள  பாங்கினைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் இடை நிலையில் வாழும் திருநங்கையரைப் பற்றிய பதிவுகளும் மணிமேகலையில் காணப்படுகிறது. திருநங்கையரைக் குறிக்கும் ‘பேடி’ என்னும் சொல் மூலம் மணிமேகலை  திருநங்கையரை பதிவு செய்திருக்கிறது.

மணிமேகலை காப்பியத்தில் பேடி என்ற சொல் மலர்வனம் புக்க காதையில் 25வது வரியிலும், 125வது வரியிலும், 146வது வரியிலும் ஆகிய மூன்று இடங்களில் வருகின்றது.

மேலும் மணிமேகலை பாத்திரமே மறுபிறப்பில் ஆணாய் மாறுவதாக  இக்காப்பியம் பதிவு செய்துள்ளது. ஆக மொத்தத்தில் பெண் ஆணாவதையும், ஆண் பெண்ணாவதையும் முதன் முதலில் இக்காப்பியமே  பதிவு செய்துள்ளது எனலாம்.

மணிமேகலையின் அழகை சுதமதி கூறுகின்ற பொழுது திருநங்கையர் பேசப்படுகின்றனர். மணி மேகலை என்பவள் மிகவும் அழகானவளாகயிருக்கிறாள். இவளது அழகைக் காணும் ஆண்கள் மயங்கிவிடுவர். அவ்வாறு மயங்காது இருப்பவர்கள் பேடியர் மட்டுமே எனக் கூறுகிறாள்.

“மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்

அணி திகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய

கடைமணி உகு நீர் கண்டனன் ஆயின்

படை இட்டு நடுங்கும்  காமன் பாவையை

ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?

பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?”

(மணிமேகலை, 3: 20-25)

எனப் பேடியர்கள் ஆண்தன்மை குறைந்து பெண் தன்மை மிகுந்த பெண்களாக மாறிவிடுவதால், பெண் களை அவர்கள் ரசிக்க மாட்டார்கள். இங்ஙனம் பேடி யரைப் பெண்ணாகப் பதிவு செய்யாமல், பேடியர் எனத் தனிப்பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

கொல்லிப்பாவை போல் விளங்கும் இவளைக் கண்ட ஆடவர் அகன்று செல்லவும் வல்லரோ? அவ்வாறு இவளது எழிலை நோக்காதவராய் நிற்பவர் பேடியர்களே ஆவர் (இராமசுப்பிரமணியம்: 2010: 43).

கொல்லிப்பாவை போன்ற இவளை ஆடவர் கண்டன ரானால் இவளை விட்டு நீங்கிப் போதலும் உளதாகுமோ? தம் உள்ளத்தை இவள்பாற் போகவிட்டுத் தளராமல் தம் தகுதியுடன் ஆடவருள் எவரேனும் நின்றனராயின் அவர்கள் பேடியர்களே அல்லரோ (புலியூர் கேசிகன்: 2005: 40). பாவையை ஆடவர் காணின் அவளை விட்டுப் பிரிவாரோ? அவள் அழகைக் கண்டும் அவளை விரும்பாது நிற்பரேல் அவரெல்லாம் பெண்ணின்பம் துய்க்கத் தகுதியற்ற பேடியர் அல்லவோ? (தண்டபாணி: 2005: 19). பாவை போன்ற மணிமேகலையை ஆண்கள் கண்டால் இவளை விட்டு போய் விடுவார்களா? தம் மனதை இவளிடம் போகவிட்டுத் தளராமல் இருப் பாரானால் அவர்கள் பேடிகளாகத்தான் இருப்பார்கள் (கோதண்டம்: 2010: 27).

“கரியல் தாடி மருள் படு பூங்குழல்

பவளச் செவ்வாய் தவளவாள் நகை

ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண்தோட்டு

கருங்கொடிப் புருவத்து மருங்கு வளைபிறை நுதல்

காந்தள் அம் செங்கை ஏந்து இள வன முலை

அகன்ற அல்குல் அம்நுண் மருங்குதல்

இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து

வாணன் பேர்ஊர் மறுகிடைத் தோன்றி

நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய

பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்”

(மணிமேகலை, 3: 116-125)

சுருள் சுருளான தாடியும், கரிய அழகிய கூந்தலும், பவளம் போன்ற சிவந்த வாயும் வெண்மையான ஒளி பொருந்திய பற்களும், ஒளிரும் செவ்வரி படர்ந்த நீண்ட கண்களும், வெண்சங்கால் செய்த காதணியும், கரிய கொடி போன்ற வளைந்த புருவங்களின் மேல் வளைந்த பிறை போன்ற நெற்றியும், செங்காந்தள் மலர்போல் அழகிய சிவந்த கையும், ஏந்திய வனப்புடைய இளங் கொங்கைகளும், அகன்ற அல்குலும், அழகமைந்த நுண்ணிய இடையும், கணுக்கால் வரை இல்லாமல் முழங்கால் வரை உடுக்கப்படும் வட்டவடிவான உடையும், தோள், முலை முதலியவற்றில் எழுதப்பட்ட வரிக்கீற்று உடைய கோலத்தோடு திருநங்கையர் பேடிக்கூத்து ஆடுகின்றனர் என்கிறது. பண்டைய காலத்தில் திருநங்கைகளுக்கு இருந்த உருவ அழகு இங்குக் கூறப்பட்டுள்ளது.

காமன் என்ற தெய்வத்திற்குச் சொந்தமான கூத்தை அரவாணிகள் ஆடுவதாக மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சங்க இலக்கியப் பாடலும், சங்கம் மருவிய இலக்கியப் பாடலும் அரவாணிகள் ஆடிய கூத்தை எந்தவொரு தெய்வத்தோடும் ஒப்பிட்டுக் கூறவில்லை. திருநங்கை களால் ஆடப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான கூத்து ஒன்று இருந்திருப்பதை மட்டுமே கூறுகின்றன. காப்பியக் கதைகளும், புராணக்கதைகளும் பேடிக்கூத்தினைக் கடவுளோடு சார்புபடுத்தியிருக்கிறது. எனவே, பேடிக் கூத்து திருநங்கைகளுக்குரிய கூத்தாகும் (முனிஷ் : 2010 : 125- 126).

தோலிலும் மார்பிலும் தொய்யில் எழுதப்பெற்ற வண்ணமும் கொண்டு வானாசுரனின் நகரில் நின்ற திருமாலின் மகனான மன்மதன் அன்று ஆடிய பேடிக் கோலத்தைக் கொண்டு விளங்குவோர் ஆடும் பேடு என்னும், கூத்தினைக் கண்டு வீதியிடையே பரவி மகிழ்ந்தார்கள் (இராமசுப்பிரமணியம்: 2010: 51). வாணன் என்னும் அசுரனது சோ என்னும் நகரிலே நின்று, நெடிதான நிலவுலகை அளந்த திருமாலின் மகனாகிய காமன் என்பான். முன்னர் ஆடிய பேடிக் கோலத்தினைக் கொண்டு விளங்குகின்ற ‘பேடு’ என்னும் கூத்தினைக் கண்டு இன்புற்றிருப்பவரும்  (புலியூர்க் கேசிகன்: 2005: 49).

ஒரு பேடி கூத்தாடுகிறான். சுருள் சுருளான தாடியும், கரிய அழகிய கூந்தலும், பவளம் போன்ற சிவந்த வாயும், வெண்மையான ஒளிபொருந்திய பற்களும், ஒளிரும் செவ்வரி படர்ந்த நீண்ட கண்களும், வெண்சங்கால் செய்த காதணியும், கரியகொடி போன்ற வளைந்த புருவங்களின் மேல் வளைந்த பிறை போன்ற நெற்றியும், செங்காந்தள் மலர்போல் அழகிய சிவந்த கையும் ஏந்திய வனப்புடைய இளங் கொங்கைகளும், அகன்ற அல்குலும், அழகமைந்த நுண்ணிய இடையும், கணுக்கால் வரை இல்லாமல் முழங்கால் வரை உடுக்கப்படும் வட்ட வடிவிலான உடையும், தோல், முலை முதலியவற்றில் எழுதப்பட்ட வரிக் கீற்று உடைய கோலத்தோடு பேடி விளங்கினான்.

முன்னர் வாணன் என்ற அசுரனின் மகளான உழையினிடத்துக் கொண்ட காதலால் வாணனால் சிறை வைக்கப்பட்ட தன் மகன் அநிருத்தனை சிறை மீட்கும் பொருட்டு வாணனின் பெரிய நகரத்தின் நீள் வீதியில் நின்று உலகளந்த திருமாலின் மகனாகிய காமன் ஆடிய பேடிக் கூத்தை நடுத்தெருவில் நின்று பேடி ஆட அதனைக் கண்டு பலர் நின்றனர் (தண்டபாணி: 2005: 25-26).

வாணன் என்ற அரக்கனுடைய சோ என்ற பெருநகர வீதியில்  நின்று திருமாலின் மகனான காமன் என்பவன்போல் ஆடிய பேடு என்ற கூத்தினைக் கண்டு சிலர் நின்றனர். ஆண்மை நீங்கிய பெண்மைக் கோலத்தை அரவானி நிலை (கோதண்டம்: 2010: 35-36) என்று இவ்வுரையாசிரியர் கூறுகிறார். இவ்வாறு மணிமேகலையில் வரும் பேடி என்னும் சொல்லுக்கு பேடிக்கூத்து என்ற ஒரு பொருளும், பெண் போன்ற அழகு பேடிக்கு உள்ளதையும் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன. கோதண்டம் தன் உரையில் தற்காலச் சொல்லான அரவானி நிலை என்கிறார்.

mamimegalai thirunar 600பண்டைக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட கூத்துக்களில் திருநங்கை ஆடக்கூடிய கூத்தும் இருந்திருக்கிறது. அக்கூத்தினை மக்கள் மத்தியில் நிகழ்த்தித் தங்களை தனியரு இனமாக அடையாளப்படுத்திக் கொண்டனர். பழங்காலத்தில் திருநங்கைகளைப் ‘பேடி’ என்ற பெயர்ச்சொல்லாலேயே அழைத்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் பேடிகள் ஆடிய கூத்து ‘பேடிக்கூத்து’ என்று பெயர் பெற்றிருக்கிறது. காமன் ஆடிய கூத்தை திருநங்கை ஆடவில்லை. திருநங்கைகள் பழங்காலத்தி லிருந்து ஆடி வந்த கூத்தைத்தான் காமன் ஆடியிருக் கிறான். எனவே, வரலாற்றில் கலையுணர்வோடும், சிறந்த கலைஞர்களாகவும் திருநங்கைகள் வாழ்ந்துள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

“விராடன் பேரூர் விசயனாம் பேடியைக்

காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்

மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி”

(மணிமேகலை, 3: 146-148)

விராடனது பெரிய நகரத்தின் கண்ணே சென்று கொண்டிருந்த அர்ச்சுனனாகிய பேடியைக் காண் பதற்காக வந்து சூழ்ந்து கொண்ட, ஆரவாரங் கொண்ட மக்களைப் போலத் திரண்டு வந்து, மணிமேகலையைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டனர். மக்கள் கூட்டத்திற்கு உதாரணம் கூறும் அளவிற்கு பாரதத்தின் அர்ச்சுனனின் பேடி (திருநங்கை) வடிவம் திகழ்ந்துள்ளது. அதை மணிமேகலைக் காப்பியத்தில் மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எடுத்தாண்டுள்ளதைக் காண முடிகிறது.

இக்காப்பியத்தில் மணிமேகலை என்கின்ற பாத்திரத்தின் மூலம் மறுபிறப்பு உணர்த்தப்படுகிறது. அம்மறுபிறப்பில் சமூக நன்மைக்காக மணிமேகலை திருநம்பியாக மாறுகிறார். அனைத்து சமயங்களிலும் ஆண் பெண்ணாவதும், பெண் ஆணாவதும் (உருவ மாற்றம்) நன்மை பயப்பதற்காகவே காட்டப் பட்டிருக்கிறது.

“உத்திர - மகதத்து உறுபிறப்பு எல்லாம்

ஆண்பிறப்பு ஆகி, அருளறம் ஒழியாய்”

(மணிமேகலை,  21 : 175-176)

என்றும்,

“கல்லாக் கயவன் கார் இருள் - தான்வர

நல்லாய்! ஆண் உரு நான்கொண் டிருந்தேன்”

(மணிமேகலை, 23: 94-95)

என்றும் மறுபிறப்புக் கொள்கையிலும், நன்மை பயக்கும் அவதாரக் கொள்கையிலும், மன்னர்களின் அரவணைப் பிலும் திருநங்கைகள் இருந்திருப்பதை மணிமேகலை தெளிவுபடுத்துகிறது. ஒருவரை உயர்த்திப் பிடிக்க மற்றவரைத் தாழ்த்திக் கூறுவதுதான் காப்பியத்தின் தலையாயப் பண்பாக உள்ளது. இதில் மணிமேகலையின் அழகை உயர்த்திக்கூற திருநங்கையரைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி உள்ளனர் (முகிலை இராச பாண்டியன்: 2013: 360) என்று போ. ஜெயச்சந்திரன் தனது கட்டுரையில் கூறும் கருத்தும் சிந்திக்கத்தக்கன.

தமிழில் சமண மதத்தைப் பரப்புவதற்காக எழுந்த இலக்கியங்களே அதிகம். பௌத்த சமயத்தைப் பரப்பு வதற்காக எழுந்த இலக்கியங்கள் சமணத்தைவிட குறை வானவைகளே ஆகும். அதிலும் காப்பிய நூல்கள் மிகக் குறைவானவைகளாகும். பௌத்த சமயக் கொள்கையை முழுக்கவும் தாங்கி மணிமேகலை, குண்டலகேசி காப்பி யங்கள் படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மணிமேகலை காப்பியத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மறுபிறப்புக் கொள்கையில் திருநம்பிகளும் பேசப்பட்டுள்ளனர். அத்தோடு திருநங்கை வாழ்வியல் சார்ந்த செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பௌத்த சமயத்தைத் தழுவிய மன்னர்கள் தங்கள் அரண்மனைகளில் திருநங்கைகளை அங்கீகரித்து உள்ளனர்.

பௌத்த மதத்தில் மற்றொரு முக்கியமான கொள்கை தன்னுயிர் போல் மண்ணுயிர்களை நேசித்தலாகும். இக்கொள்கையின்படி திருநங்கையர் புறக்கணிக்கப்படாமல் பௌத்தர்களால் அரவணைக்கப்பட்டுள்ளனர்.

ஆண் மட்டுமே பெண்ணாக மாறும் நிலையில்லை. பெண்களும் ஆணாக மாறும் நிலையை காப்பியத்தில் முதலில் பதிவு செய்தது மணிமேகலை எனலாம். பௌத்த மதம் கடவுள் என்பதற்கு முக்கியத்துவம் தராமல் தனிமனித சமூகம் நல்வழிப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது. ஆகையால்தான் மனித சமூகத்தில் ஓர் அங்கத்தினராக இருக்கும் திருனரை அங்கீகரித்திருக்கிறது.

உதவிய நூல்கள்

அன்னிதாமசு., 2004, சமூகத்திலும் இலக்கியத்திலும் ஊனமுற்றோர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

இராமசுப்பிரமணியம், வ.த.  2010, மணிமேகலை, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

கோதண்டம், டாக்டர் கொ.மா. (உரையாசிரியர்), 2010, மணிமேகலை, கங்கை புத்தக நிலையம், சென்னை.

தண்டபாணி, துரை.  (உரையாசிரியர்), 2005, மணிமேகலை, உமா பதிப்பகம், சென்னை.

தொல்காப்பியம், சொல்லதிகாரம் - சேனாவரையம், 1956, கழக வெளியீடு, சென்னை.

தொல்காப்பியம், சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை, 1929, கரந்தை தமிழ்ச்சங்க பதிப்பு, கரந்தை.

புலியூர்க்கேசிகன் (தெளிவுரை), 2005, மணிமேகலை, பாரி நிலையம், சென்னை.

முகிலை இராசபாண்டியன்(மற்றும் நால்வர்), 2013, சமூக வரலாற்றில் அரவாணிகள், விசாலட்சுமி பதிப்பகம், விழுப்புரம்

முனிஷ், வெ. 2010, அரவாணிகளின் பன்முக அடை யாளங்கள், ஜெயம் பதிப்பகம், கொல்ல வீரம்பட்டி, மதுரை மாவட்டம்.

முனிஷ்.வெ., 2013, காலந்தோறும் தமிழ் இலக்கணங் களில் மூன்றாம் பாலினம், சொல்லங்காடி, சென்னை.

வேங்கடசாமி நாட்டார் ந.மு., ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, 1955, மணிமேகலை, கழக வெளியீடு, சென்னை.

http://orinam.net/ta/resources-ta/family-and-friends-ta/ terminology ta/#sthash.PcU60GeK.dpuf

https://ta.wikipedia.org/s/1due

Sambasivampillai, T.v., 1931, Tamil- English Dictionary, The Research Institute of Siddhar’s Institute of Science, Chennai.

Pin It