அரசியலில் வேலையற்றதினால் பாமர மக்களுக்கு தம் மீது ஏற்பட்ட சலிப்பையும், வெறுப்பையும் தீர்த்துக் கொள்ளுவதற்காக சமூகத் துறையில் ஏதோ பெரியதொரு சீர்திருத்தம் செய்வதாக வெளிப்பட்டு, அவ்வெறுப்பை மாற்றிக் கொள்ளலாம் என்று கருதிய தோழர் காந்தியவர்கள் “பிள்ளையார் செய்யப் போய் குரங்காய் முடிந்தது” என்ற பழமொழிப்படி மக்களின் அதிகமான வெறுப்புக்கு ஆளாக நேரிட்டு, இப்போது அதிலிருந்தும் தப்பு வதற்கு ஒரு பெரிய குட்டிக் கரணம் போடவேண்டியதாய் ஏற்பட்டு விட்டது.

அதென்னவெனில் தோழர் காந்தி, இர்வின் பிரபுவிடம் செய்து கொண்ட ராஜியின் பயனாய் இந்திய ஏழை மக்களின் மீது பணக்காரர்கள் ஆட்சியையும், முதலாளி ஆட்சியையும் இந்திய மகாராஜாக்கள் ஆட்சியையும் எப்படி நிரந்தரமாய் இருக்கச் செய்து விட்டாரோ அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று கள்ளிக்கோட்டை சாமூதிரினிடமும், சாஸ்திரிகளிடமும் செய்து கொள்ளும் ராஜியானது தீண்டப்படாத மக்களுக்கு தீண்டாமை என்பது என்றும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடு செய்து தீர வேண்டிய நிலைமைக்கு வந்து சேர்ந்து விட்டது. இதுபார்ப்பன தேசீயவாதிகளுக்கு ஓர் பெரிய வெற்றியேயானாலும் பார்ப்பனரல்லாத “தேசீயவாதிகள்” இதற்கு என்ன பதில் சொல்லுவார்களோ தெரியவில்லை. என்றாலும் எப்படியோ தமிழ்நாடு பத்திரிகையும், தோழர் வரதராஜலுவும், ஜஸ்டிஸ் பத்திரிகையும் ஒரு வழியில் தைரியமாய் இதன் இரகசியத்தை வெளியாக்கி விட்டன. என்றாலும் மற்றவர்கள் என்ன சொல்வார்களென தெரியவில்லை. என்னவோ சொல்லிக் கொள்ளட்டும். தேசீயம் என்பது அழியும் வரையோ, அல்லது தேசீய வாதிகள் என்பவர்கள் வாழ வேறு மார்க்கம் கண்டு பிடிக்கும் வரையோ இப்படிப்பட்ட விஷயங்களில் அவர்கள் தைரியமாய் உண்மை சொல்ல முடியாதாதலால் காந்தியாருக்கும், அவரது பார்ப்பன வலக்கை களுக்கும் பின் தாளம் போட்டுத்தானாக வேண்டும். அவர்களைப்பற்றி இப்போது நாம் கவலைப்படவில்லை. ஆனால் தீண்டப்படாதார் என்ற மக்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகவே இருக்கின்றது.

மக்களுக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி என்பது இல்லாத காரணத்தால் தான் உலகில் அரசனும், குருவும், பணக்காரனும் மேல் ஜாதிக்காரனும் ஏற்பட இடமுண்டாயிற்று என்பதோடு, ஏழையும் தொழி லாளியும் கூலியும் “சூத்திரனும்” (அடிமையும்) “சண்டாளனும்” ஏற்பட இடமுண்டாயிற்று என்றும் தைரியமாய் கூறுவோம்.periyar with krishnamoorthyஇந்த காரணத்தால்தான் இன்று நமது “தெய்வத்தன்மை” பொருந்திய “ஞானபூமி” யாகிய இந்தியாவில் 16 கோடி “சூத்திரர்” (அடிமை) என்பவர் களும். 7 கோடி “தீண்டாதார்கள்” “சண்டாளர்கள்” என்பவர்களும் பல ஆயிரக்கணக்கான வருடங்களாய் இருந்து வருவதுடன் இவற்றை இன்றும், என்றும் நிலை நிருக்க வென்று சங்கராச்சாரி “லோக குருக்களும்” “மகாத்மாக்களும்” இருந்து வருவதுடன் இவர்களுக்கு இடமும், ஆக்கமும் அளிக்க “ஜாதி மத நடுநிலைமை” வகிக்கும் “மகா காருண்யம் நிறைந்த” சக்கரவர்த்திகள், மகாராஜாக்கள் ஆட்சிகளும் இருந்து வருகின்றன.

சாதாரணமாக ஆட்சி என்பது மக்களுக்கு சமதர்ம நீதி செலுத்தவே ஒழிய, அதாவது எளியோரை வலியோர் வஞ்சித்து வதைக்காமல் இருப்பதற்கே ஒழிய பூனைக்கு குரங்கு மத்தியஸ்தமாய் இருந்த கதைபோல் “எப்படியோ வலிமை பெற்ற அயோக்கிய மூர்க்கர்களுக்கும், அவர்களால் வலிமையற்ற சாதுக்களுக்கும் நடுநிலைமை வகிப்பதற்கு” அல்ல என்பதை உலகில் எந்த அரசாட்சியும் இதுவரை உணர்ந்து நடந்ததாக தெரியவில்லை. என்றாலும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய தீண்டாதார் என்னும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி கடுகளவாவது இருக்குமானால் அவர்கள் ஒருநாளும் உதைத்த காலுக்கு முத்தமிடுவது போல் இந்த கோவில் நுழைவு சூட்சிக்கு ஆளாகி இருக்கவே மாட்டார்கள்.

ஏனெனில் இன்றைய கோவில் நுழைவு கிளர்ச்சியில் “கடவுளை நம்புகிறவன் தான் கோயிலுக்குள் போக இஷ்டப்பட வேண்டும்“ என்றும் இன்றைய கோயில் பிரவேசக் கிளர்ச்சி “ கடவுளை நம்புகிறவர்களைப் பற்றியது தான்” என்றும் நன்றாய் விளக்கமாய் பறையடிக்கப் பட்டிருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் “ இந்துக்கள் தான் இந்துக் கோவில்களுக்குச் செல்ல ஆசைப்படலாம்” என்றும் “இந்துக்கள் தான் கோயில் பிரவேச முயற்சியில் கலந்துகொள்ளலாம்” என்னும் நிபந்தனைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆகவே, கடவுளைப்பற்றிய நம்பிக்கை இல்லாதவனுக்கும், தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்ள இஷ்டப்படாதவனுக்கும் இந்த கோவில் நுழைவு கிளர்ச்சியில் கலந்து கொள்ளவோ, கோவிலுக்குள் போக ஆசைப்படவோ செய்வது நியாயமாகாது என்பது வெளிப்படை அத னாலேயே அப்படிப்பட்ட அனேகர் அதில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் இருக்கலாம்.

இவை ஒரு புறமிருக்க உண்மையிலேயே கடவுள் அதாவது “சகலத்தையும் படைத்து, காத்து, நடத்தும் சர்வ சக்தியுள்ள” ஒரு கடவு ளையும், முன் பின் ஜன்மம் உள்ள இந்து மதத்தையும் நம்புகின்ற, ஒப்புக் கொள்ளுகின்ற ஒரு இந்து தீண்டாதவன் என்கின்றவன் கோவிலுக்குள் பிரவேசிக்க முயலுவது அறிவுடைமையா? அல்லது சுயமரியாதை உடமையா? என்று பார்த்தால் இரண்டுமற்ற தன்மை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒரு ஆஸ்திக இந்து சர்வ சக்தி உள்ள கடவுளால் தான், முன் ஜன்ம கர்மத்தால் தான், தான் பிறந்ததாக கருதியாக வேண்டும். அன்றியும் தான் தீண்டப்படாதானாய் பிறந்ததற்கும் அல்லது கருதப்படுவதற்கும் அந்த கடவுள்தான் காரணம் என்பதையும் உணர்ந்தாக வேண்டும். ஆகவே தன்னை இந்த நிலை ஆக்கிய ஒரு கடவுளை-அதாவது தீண்டத்தகாதவனாய் ஆக்கிய ஒரு கடவுளை - தீண்டத்தகாதவன் என்று சொல்லும்படி செய்த ஒரு கடவுளைப் போய், அதன் இருப்பிடம் சென்று தரிசிப்பது, பூஜிப்பது, பிரார்த்திப்பது, வணங்குவது என்பவைகளான காரியங்கள் அணுவளவாவது சுயமரியா தைக்கு ஏற்றதா? என்று கேள்க்கின்றோம். இந்தப் படியான சுயமரியாதை அற்ற மக்களைக் கொண்ட நாட்டுக்கு “தேசீயம்”“ வேண்டும், “சுயராஜ்ஜி யம்” வேண்டும் என்று சொல்லிக் கொள்வதில்-அதற்காக பாடுபடுகின்றோம் என்று சொல்லப்படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா என்றும் கேள்க்கின்றோம்.

இவை ஒரு புறம் இருக்க, தீண்டாதார் சமூகம் என்பதாக ஒரு சமூகம் இந்த நாட்டில் நிரந்தரமாய் இருப்பதற்காக இந்த கோவில் நுழைவு என்னும் பேரால் ஒரு புதிய சூக்ஷி செய்யப்படுவதாய்த் தெரின்றது. அதென்ன வென்றால் இப்பொழுது தீண்டாதாராய்க் கருதும் ஒரு சமூகத்திற்கு ஹரி ஜனங்கள் என்று புதிதாக ஒரு பெயரை இட்டு அதை அவர்களையே ஒப்புக் கொள்ளச் செய்தாய் விட்டது,

இதனால் இந்த ஹரிஜனங்கள் என்கின்ற பெயர் உலகில் உள்ளவரை தீண்டாதவர்கள் என்பவர்கள் இருந்தே தீருவார்கள் என்பது திண்ணம். அதுபோலவே இப்போது தோழர் காந்தியார் ஜாமொரினிடமும், சாஸ்திரி களிடமும் செய்து கொள்ளும் ராஜி ஒப்பந்தப்படி தீண்டப்படாதார் கோவிலுக்கு போக என்று ஒரு தனி நேரம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு இந்தக் கோவில்கள் உள்ள வரையிலும் தீண்டாதார் என்கின்ற கூட்டம் இருந்தேதான் தீரும்.

தீண்டாதார் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்குப் போய் வணங்கிவிட்டு வருவதும் அவர்கள் வெளியே வந்தவுடன் அக்கோவிலுக்கு சுத்தி (சம்ரோட்சணை) செய்வதுமான காரியங்கள் அத்தீண்டப்படாதார் என்பவர்களை தினம்தினம் எவ்வளவு இழிவுபடுத்தி அவ்விழிவை நிலைக்கச் செய்கின்றது என்பதை நினைத்துப் பாருங்கள்.

இன்றைய தினம் தீண்டாதாருக்கு யாராவது உண்மையான-பயன் தரும்படியான - அவர்களது இழிவு நிரந்தரமாய் நீங்கும் படியான நன்மை செய்கின்றவர்கள் இந்நாட்டில் உண்டு என்றால் அதில் தோழர் டி. ஆர். ராமச் சந்திர அய்யர் என்பவரே முதன்மையாவார் என்று சொல்லுவோம். ஏனெ னில் அவர்தான் உண்மையை தைரியமாய்ச் சொல்லுகின்றார். அதாவது “தீண்டாதார் என்பவர்கள் இந்துக்கள் அல்ல” என்கின்றார்கள். அதையே தான் நாமும் சொல்லுகின்றோம். வெகுகாலமாகவே சொல்லியும் வந்திருக்கின்றோம். மற்றும் அவர் சொல்லுகிறபடி அரசாங்க சட்டமும் ஏற்பட்டு விடுமானால் (அந்தப்படி ஏற்படுவதை தோழர் காந்தியே கெடுத்தார்) அன்றே இந்தியாவைப் பிடித்த தீண்டாமைக் கொடுமை மாத்திரமல்லாமல், அடிமைத் தன்மைக் கொடுமையும் ஜாதி ஆணவமும் ஒழிந்தது! ஒழிந்தது!! ஒழிந்தது!!! என்றே சொல்லுவோம். எப்படி என்பது இந்துக்கள் அல்லாத கிறிஸ்து வரை யாவது மகமதியரையாவது மற்ற எவரையாவது தீண்டாதவர்கள் என்று சொன்னால் என்னபலன் கிடைக்கும் என்று பார்த்தால் விளங்கி விடும். ஆகவே இன்று தோழர் டி. ஆர். ராமச்சந்திர அய்யரைக் குற்றம் சொல்லு பவர்களை நாம் தீண்டாதாரின் எதிரிகளென்றே சொல்லுவோம். தீண்டாதவர்கள் இந்துக்கள் அல்லவானால் அவர்களை பின்னையார் என்று சொல்லுவது என்று சிலர் கேள்க்கக் கூடும். அவர்கள் யாராயிருந்தாலும் நமக்குக் கவலை இல்லை. கழுதைகள் என்று அழைத்தாலும் சரி, நாய்கள் என்று அழைத்தாலும் சரி நாம் அதைப் பற்றி இவ்வளவு கவலைப் படுவதில்லை. ஏனெனில் இன்று தீண்டாதாரை தீண்டாதார் என்று கருதும் மக்கள் நாய்களையும், கழுதைகளையும் தீண்டாதார் என்று கருதுவதுமில்லை அவற்றைத் தீண்டாமல் இருப்பதுமில்லை. தீண்டினால் குளிப்பதுமில்லை. மற்ற விஷயங்களிலும் கழுதை களுக்கும் நாய்களுக்கும் உள்ள சுதந்தரங்களை தீண்டாதார்களுக்கு அளிக்கவும் அவர்கள் சம்மதிப்பதுமில்லை.

அவைகளைப் பொருத்தவரை மாத்திரமல்லாமல் உண்மையைப் பேசப்போனால், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதன் காரணமாம் ‘சூத்திரர்கள்’ என்று அழைக்கப்படுகின்ற 15 கோடி மக்களைக்கூட சூத்திரர் கள் என்ற பெயரை எடுத்துவிட்டு கழுதை என்றோ, நாய்கள் என்றோ பெயரைக் கொடுக்கலாமா என்றால் அதற்கும் நாம் ஆட்சேபிக்க வர மாட்டோம்; முதலில் ஒட்டுக் கொடுப்போம்.

ஏனெனில் “இந்து மத” மனிதசமூகத்திதல் “சூத்திரன்” என்பவ னுக்கு உள்ள மதிப்பு அநேக விஷயங்களில் ஒரு நாயிக்கு உள்ள மதிப்பை விட கீழாகவே இருந்து வருகின்றது. நாய் போகக்கூடிய இடத்தில் “சூத்திரன்” போக முடியாது. பன்றி போகக்கூடிய இடத்தில் “தீண்டாதார்” என்பவர் போக முடியாது என்பதை நினைப்புக்குக் கொண்டு வந்தால் இதன் நியாயம் விளங்கும்.

தீண்டாதாருக்கு தனிக் கிணறு, தீண்டாதாருக்கு தனிப்பள்ளிக்கூடம்- தீண்டாதாருக்கு தனிக் கோவில் எல்லாம் இன்று இருந்துவருவது தவிர, இனி தோழர் காந்தியால் தீண்டாதாருக்கு தனி நேரமும் ஏற்பாடு செய்யபோகின்றது என்றால் இதை அறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள மனித சமூகம் எப்படித்தான் பொருத்துக் கொண்டு இருக்க முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். உண்மையாக சுயமரியாதை ஆட்சி இன்று இருக்குமானால் இப்படிச் செய்கின்றவர்கள் கண்டிப்பாய் தண்டிக்கப்படுவார்கள் என்று தான் சொல்லவேண்டி வருகின்றது.

இன்றைய கோவில் நுழைவு கிளர்ச்சி தீண்டாமை ஒழிப்பு வேலையா? அல்லது தீண்டாமையை என்றைக்கும் நிலை நிறுத்தும் வேலையா? என்று யோசித்துப்பார்த்தால் அதன் உண்மை விளங்கும்.

இதைப்பற்றி தமிழ்நாடு பத்திரிகை எழுதுகையில் இதனால் “தீண்டா தார்” மக்களுடைய இழிவும் மேல் ஜாதியினுடைய உயர்வும் மறுபடியும் உறுதியாக்கப்பட்டதென்றே சொல்லலாம்” என்றும், “இந்த யோசனை ஒப்புக் கொள்ளப்படுமாயின் தீண்டாதாருடைய தாழ்மைக்கு புதிய முத்திரையிட்டது போல் ஏற்படுகின்றது” என்றும் எழுதி இருக்கிறது. சுதேசமித்திரன் முதலிய கலப்பற்ற பார்ப்பனப் பத்திரிகைகளும், சில கலப்புப் பத்திரிகைகளும் வாய் மூடி மௌனம் சாதிக்கின்றன. ஆனால் அவைகள் தீண்டாதார்கள் பெயர்களைச் சொல்லிக் கொண்டு சட்டசபைக்கு போகவும், ஊரைக் கொள்ளை அடிக்கவும் வலை வீசுகின்றவைகளாய் இருப்பதால் இந்தப்படி வஞ்சகமாய் நடந்து கொள்ளவேண்டி இருக்கிறது.

ஆனாலும் இவைகளின் வண்டவாளத்தை சீக்கிரத்தில் மக்கள் உணர்ந்து அவர்கள் ஆசையைக் கனவாகும்படி செய்யப் பொதுமக்களுக்கு யோக்கியதை ஏற்படாமல் போகுமென்று நாம் கருதவில்லை. எவை எப்படியிருந்த போதிலும் தேசிய புரட்டு, கதர் புரட்டு, மறியல் புரட்டு, சத்தியாக் கிரகப் புரட்டு ஆகியவைகளை யெல்லாம் விட இந்த தீண்டாமை விலக்குப் புரட்டு கோவில் நுழைவுப் புரட்டு கொடுமை! கொடுமை!! மகா கொடுமை!!! என்று சொல்லுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 08.01.1933)

Pin It