அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ஜாதி வெறி, இப்போது தனது உருவத்தை மாற்றிக் கொண்டு நுட்பமாக செயல்படுவதைப் படம் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டு கிறது. நெல்லை மாவட்டம் புளியங்குளம் கிராமம் கதைக்களம். புளியங்குளத்து மக்கள் என்றாலே, அவர்கள், ‘தலித் மக்கள் தான்’ என்று ஊரை வைத்தே ஜாதி அடையாளம் போர்த்தப்படுகிறது. அப்பகுதியில் 2005ஆம் ஆண்டு நிலவிய ஜாதியப் படிநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை இயல்பாகக் கண் முன் கொண்டு வந்து நிறுத்து கிறார்கள், ஒளிப்பதிவாளரும், இயக்குனரும்.
திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பு அரசு ஆணைப்படி கட்டாயமாகக் காட்டப் படும் காட்சிகளான “புகைப் பிடிப்பது - உயிருக்கு ஆபத்து; புற்று நோயை உருவாக்கும்; மது குடிப்பது - உடலுக்குக் கேடானது” என்ற விளம்பரத்தைத் தொடர்ந்து, “ஜாதியும் மதமும் - மனிதநேயத்தைக் கொல்லும்” என்ற அறிவிப்புடன் படம் தொடங்குகிறது.
கதையின் நாயகன், உயிருக்கு உயிராக நேசிக்கும் அவனது வேட்டை நாய் ‘கருப்பியை’ உள்ளூர் ஜாதி இளைஞர்கள், இரயில் தண்டவாளத்தில் கட்டிப் போட்டு, இரயிலில் சாகடிக்கும் அதிர்ச்சியான காட்சியோடு படம் தொடங்குகிறது. உள்ளூர் ஜாதி வெறி இளைஞர்களிடம் மோதலுக்குத் தயாராகாமல், தன்னை விலக்கிக் கொண்டு தனது கல்வியில் கவனம் செலுத்த விரும்பும் ஒரு தலித் இளைஞனை சாதியச் சமூகம் எப்படி ஒரு கலவரக்காரனாக மாற்றுகிறது என்பது கதை. வன்முறையாளர்களாக சமூகத்தில் சித்தரிக்கப் படும் தலித் இளைஞர்களுக்குப் பின்னால் ஜாதிய சமூகம், அவர்கள் மீது நிகழ்த்தும் வன்மமும், அவமதிப்பும், வெறுப்புமே அடிநாதமாக இருப்பதை இயக்குனர் சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டு, அதற்கு வாழப் பழகிக் கொண்டது கடந்தகால தலைமுறை. கல்வி வாய்ப்பு, இடஒதுக்கீடு உரிமை, சட்டப் பாதுகாப்புகள் வந்த பிறகு இதைப் பயன்படுத்தி முன்னேறத் துடிக்கும் தலித் இளைய சமூகத்தை மேலே எழ முடியாதவாறு சட்டங்களின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாமலே சூழ்ச்சித் தந்திரங்களால் அடிமைப்படுத்த நினைக்கிறது நவீன ஜாதி வெறி.
வழக்கறிஞராகி, தனது சமூகத்துக்கு உதவிட வேண்டும் என்று சட்டம் படிக்க வரும் மாணவனிடம், கல்லூரி முதல்வர் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி விட்டு படித்து முடித்து என்னவாகப் போகிறாய் என்று கேட்கும்போது டாக்டராகப் போகிறேன் என்று பதில் கூறுகிறார், கதாநாயகன் பரியேறும் பெருமாள். சட்டம் படித்துவிட்டு டாக்டராக முடியாது; வழக்கறிஞராகத்தான் முடியும் என்று முதல்வர் திருத்துகிறார். பெருமாளிடமிருந்து இதற்கு வரும் பதில், “நான் ஊசிப் போடும் டாக்டரைக் கூறவில்லை; டாக்டர் அம்பேத்கரைக் கூறினேன்” என்று கூறியபோது அரங்கமே கைதட்டலால் அதிருகிறது.
உடனே ஜாதி உணர்வுள்ள முதல்வர், உதவியாளரிடம் கூறுகிறார், “இந்தப் பையன் அம்பேத்கராகப் போகிறேன் என்று கூறியதை அவனது விண்ணப்பத்தில் குறித்து வையுங்கள்; இப்படி ஆர்வக்கோளாறு உள்ள பசங்க, ஏதேனும் தவறு செய்துவிட்டு வருவாங்க. அப்போது பயன்படுத்திக் கெள்ளலாம்” என்று கூறும் காட்சி நுட்பமானது. இடஒதுக்கீட்டை சட்டப்படி அனுமதித்தேயாக வேண்டும் என்ற கட்டாய சூழலில் தலித் மாணவர்களை, பழி வாங்குவதற்கு ஜாதி அதிகாரம் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதை இக்காட்சி வெகு இயல்பாக உணர்த்துகிறது இதே சட்டக் கல்லூரி. முதல்வர் பதவிக்குப் பிறகு ஒரு தலித் பேராசிரியர் வருகிறார்; பரியேறும் பெருமாள் குறித்த புகார்கள் அவரிடம் வரும்போது அவர் சமூகநீதி உணர்வுடனும் பரிவுடனும் பிரச்சினையைக் கையாளுகிறார்.
கதாநாயகன் குடித்துவிட்டு வகுப்புக்கு வந்தான் என்பது குற்றச்சாட்டு. அப்பாவை அழைத்து வரச் சொல்கிறார் தலித் முதல்வர். கூத்தில் பெண் வேடம் கட்டி, பெண்ணிய குரல், பெண்ணிய உடல்வாகுடன் இருக்கும் தனது தந்தையைஅழைத்துவரத் தயங்கி வேறு ஒரு நடிகர் அப்பாவை அழைத்து வருகிறார். அவரே ஒரு குடிகாரர் தான்; பையன் குடித்து விட்டு வந்ததாக முதல்வர் கூறியவுடன், ஆத்திரத்தின் உச்சிக்குப் போய், ‘குடிகாரன் எனக்கு மகனே அல்ல’ என்று அவனை அடித்து நொறுக்கி, தனது நடிப்புத் திறனை அபாரமாக வெளிப்படுத்துகிறார். முதல்வரோ, ‘இப்படி ஒரு நல்ல அப்பாவுக்கு மகனாகப் பிறந்திருக்கிறாயே; உன் அப்பாவுக்காக உன்னை மன்னிக்கிறேன்’ என்று கூறி வகுப்பில் அனுமதிக்கிறார்.
கதாநாயகனைப் பழி வாங்கத் துடிக்கும் ஜாதிவெறி சக மாணவர்கள், பெண்களுக்கான கழிவறைக்குள் திடீரென பிடித்துத் தள்ளி கதவை வெளியே மூட, உள்ளே மாணவிகள் அச்சத்தால் அலற, ஏதோ பெண்கள் கழிவறைக்குள் கதாநாயகன் புகுந்து விட்டதாக ஒரு பொய்மையை உருவாக்கி, அவமதிக்கும் காட்சி; நாயகன் கூனிக் குறுகி, எவரையும் நிமிர்ந்துகூட பார்க்க இயலாத கூச்சத்தோடு வெளியே வரும்போது அபராமாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார். பிரச்சினை முதல்வரிடம் வருகிறது. மீண்டும் அப்பாவை அழைத்துவர ஆணையிடுகிறார். இந்த முறை நாயகன் கிராமத்தில் பெண் வேடமிட்டு கூத்துக் கட்டி ஆடும் உண்மையான அப்பாவை அழைத்து வருகிறார். ‘நான் எதுக்கடா காலேஜிக்கு வரணும்; அம்மாவை அழைத்துப் போ’ என்று தந்தை கூறும் வசனம், தந்தை - தனது துணைவியாருக்கு தரும் அங்கீகாரம், மரியாதையின் வெளிப்பாடு. முதல்வர் அறைக்குள் தனியாக அழைக்கப்படுகிறார் அந்தக் கிராமத்து அப்பா. “நான் என்ன பேசுவது? எவருக்கும் பயப்படாமல் பேசலாம் தானே?” என்று மகனிடம் விளக்கம் கேட்டு முதல்வர் அறைக்குள் நுழைகிறார். சமூகத்தின் முன் பணிந்து பேச வேண்டுமா? துணிந்து பேச வேண்டுமா? என்று தீர்மானிக்க முடியாத உளவியலில் தான் தலித் சமூகத்தின் கடந்தகால தலைமுறை வாழ்ந்து கொண் டிருக்கிறது என்பதின் வெளிப்பாடு அது. கிராமத்தின் ஒடுக்கப்பட்ட சாதிய முகமாய் கபடமற்ற ‘வெள்ளேந்தியாய்’ பேசுகிறார் அப்பா. ‘எதைச் செய்தாலும் என் மகனிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிட்டுச் செய்யுங்க’ என்று கூறும் அப்பாவித் தந்தையைப் பார்த்து மனம் உருகிப் போகிறார், கல்லூரி முதல்வர். தந்தையை அனுப்பிவிட்டு மகனை உள்ளே அழைக்கிறார். அப்போது முதல்வர் அறையில் ‘நெற்றி நாமத்துடன்’ காட்சியளிக்கும் ‘வெள்ளைத் தோல்’ பேராசிரியர், ‘அவனிடம் விளக்கம் கேட்காதீர்கள்; கல்லூரியிலிருந்து உடனே நீக்குங்கள்’ என்று ஆலோசனை கூற, முதல்வர், ‘கோபால் சார், நீங்கள் கொஞ்சம் வெளியே போகிறீர்களா?’ என்று ‘வெள்ளைத் தோல்’ பேர்வழியை வெளியே அனுப்பும்போது, கைதட்டலில் தியேட்டரே அதிருகிறது.
அப்போதுதான் முதல்வர் மனம் திறக் கிறார். “நான் தெருவில் செருப்பு தைத்துக் கொண் டிருந்த ஒரு தந்தைக்கு மகன். எத்தனையோ தடை களைத் தாண்டித்தான் படித்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு படித்ததால் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அப்பாவை மாற்றாதேடா”; “போ, நீ போய் உனக்கு சரி என்று தோன்றும் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறி அனுப்புகிறார். உடனிருக்கும் பெண் பேராசிரியை, “என்ன சார், இப்படி கூறிட்டீங்க. ஏதாவது வன்முறையில் ஈடுபட்டால் என்னாகும்” என்று கேட்கும் போது, “ஏன், அடக்கு முறைக்கும் அவமானத் துக்கும் உள்ளாகி விஷம் குடித்து சாவதைவிட, எதிர்த் துப் போராடி தூக்கில் தொங்கலாம்” என்று முதல்வர் கூறுவது, சமூகத்தின் போராட்டக் குரலாகவே ஒலிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உள்ளக் குமுறல்களின் நியாயமான வெளிப்பாடு இது.
அதிகாரமிக்க பதவியில் அமரும் ஒரு ஜாதியவாதியும், அதே பதவியில் அமரும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முதல்வரும் ஒரே பிரச்சினையை எப்படிக் கையாளு கிறார்கள் என்பதை அற்புதமாக சித்தரிக்கும் காட்சிகள் இவை.
கிராமத்திலிருந்து ஆங்கில மொழி தெரியாமல் நகரத்துக்குப் படிக்க வரும் மாணவர்களிடம் ஆங்கில வழிக் கல்வி உருவாக்கும் பாதிப்புகளை நகைச்சுவை காட்சிகள் வழியாக சிறப்பாக சித்தரிக்கிறார் இயக்குனர். வகுப்பில் நடத்தும் ஆங்கிலப் பாடம் புரியாமல் குறிப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும்போது பாடம் புரியாமல் ‘சுழிகளாக’ போட்டுக் கொண்டிருக் கிறார் கதாநாயகன். குறிப்பேட்டை வாங்கிப் பார்த்த ‘நெற்றிநாம வெள்ளைத்தோல்’ ஆசிரியர், ‘முட்டை போடுகிறது - கோட்டாவில் வந்த கோழிக் குஞ்சு’ என்று கூறியவுடன் பொங்கி எழுகிறான் கதாநாயகன். “எனது குறிப்பேட்டை மட்டுமல்ல; எல்லா மாணவர்களின் குறிப்பேட்டையும் பாருங்கள்” என்று ஓங்கி ஓங்கி முழங்குகிறான். குறிப்பேடு களில் அனைவருமே ஆங்கில வழிப் பாடத்தின் அர்த்தம் புரியாமல் கிறுக்கி வைத்திருந்த உண்மை அம்பலமாகிறது. கோட்டாவின் கீழ் வரும் மாணவர்கள்தான் ‘கல்வித் தகுதி யற்றவர்கள்’ என்ற போலி வாதத்தை இந்தக் காட்சி வழியாக பொடிப் பொடியாக நொறுக்கித் தள்ளுகிறார் இயக்குனர்.
மகனுக்காக வெளியே காத்திருக்கும் அந்தத் தெருக்கூத்து - பெண் வேட நடிகரை - ஜாதி வெறி மாணவர்கள் அவரது வேட்டித் துணியை உருவி, அம்மணமாக தெருவில் ஓட விடும் காட்சி, அதிர வைக்கிறது. கையெடுத்துக் கும்பிட்டு, தனது வேட்டியைக் கேட்டு, கண்ணீரோடு அந்தத் தந்தை ஓடிவரும் போது, வீதிகளில் அரசியல் கட்சிகளின் துணிக் கொடிகள் கம்பீரமாகப் பறப்பதுபோல் நுட்பமாகக் காட்சியை அமைத்திருக்கும் இயக்குனருக்கு, ‘சபாஷ்’ போட வேண்டும்.
மருத்துவமனையில் தந்தையைச் சேர்த்துவிட்டு, மனம் கலங்கி நிற்கும் மகன், தந்தையை அவமதித்தவர்களைப் பழிவாங்க, கத்தியைக் கையில் எடுக்கும்போது பதறிப் போன தாய், ‘வேண்டாம்டா, இதெல்லாம் நமக்கு வேண்டாம்’ என்று கத்தியைப் பிடுங்கிக் கொண்டு, “இந்த அவமானமெல்லாம் நமக்குப் புதுசாடா? காலம் முழுதும் இப்படி எத்தனையோ அவமானங்களை உங்க அப்பா சந்திச்சு வந்திருக்காருடா!” என்று கூறுகிறார். மகன், “அப்போதெல்லாம் நான் இல்லையே அம்மா” என்று பதில் கூறுகிறார். அம்மாவோ, “இப்போது நீ மட்டும் தான்டா எங்களுக்கு இருக்கே. நீ காலேஜுக்கே போக வேண்டாம்டா” என்று கூறும் காட்சி நெகிழ வைக்கிறது.
சமூகத்தில் எல்லோருமே ஜாதிவெறி உணர்வுடன் இருப்பதில்லை. ஜாதியைக் கடந்த மனிதநேயம் சமூகத்தில் அற்றுப் போய்விட வில்லை என்பதை படம் சித்தரித்திருப்பது தான் படத்தின் தனிச் சிறப்பு.
கதாநாயகன் நண்பனாக வந்து ஜாதி வெறியர்களின் தாக்குதல் வரும்போதெல்லாம் நண்பனோடு நட்புக்காக உறுதியாக நிற்கும் ஆனந்த் - தலித் அல்லாதவர். ‘உங்களோட ஆளுங்க தானே இப்படி செய்யறாங்க’ என்று ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேதனையை வெளிப்படுத்தும்போது, “நான் ஜாதிப் பாத்தாடா உன்னோடு பழகினேன்?” என்ற நண்பனின் ஒற்றை வரி பதில், ஓராயிரம் உண்மைகளைப் பேசுகிறது. அரங்கமே கைதட்டலால் அதிருகிறது.
கதாநாயகனின் உற்ற நண்பரும் சரி; காதலுக்கும் மேலான உயர்ந்த நட்புடன் நேசிக்கும் அவனது சக மாணவி உயிர்த் தோழி ‘ஜோ’வும் சரி; தலித் சமூகத்தைச் சாராதவர்கள். அன்பையும், நட்பையும் நேசிப்பவர்கள். க்hதல் வயப்படும் நாயகி, ‘நான் எப்போதும் உன்னோடவே இருக்க வேண்டும்’ என்று காதலை வெளிப்படுத்தும்போது, நாயகன் அதைக் கடந்து போகவே முயற்சிக்கிறார்.
தனது சகோதரியின் திருமணத்துக்கு கதாநாயகி ‘ஜோ’ தனது ஆருயிர்த் தோழன் பெருமாளுக்கு மட்டுமே அழைப்புத் தருகிறார். ஆனால் திட்டமிட்டு திருமண மண்டபத்தில் ஜாதி வெறியர்களால் அவமதிக்கப்பட்டு ஒரு அறையில் அடைத்து அவரை அடித்து உதைப்ப தோடு, அவரது முகத்தில் சிறுநீரைக் கழிக்கிறது, ஜாதி வெறி இளைஞர் கூட்டம். ‘பத்திரிகை தந்ததால்தானே வந்தேன்?’ என்று கதாநாயகன் கேட்கும்போது, ‘பத்திரிகைக் கொடுத்தால் வந்து விடுவியா’ என்று திருப்பிக் கேட்கிறது.
இந்த சம்பவங்கள், ‘ஜோ’வுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக அவரைத் திட்டமிட்டு அங்கிருந்து ஏதோ ஒரு சாக்குக் கூறி, வெளியே அனுப்பி விடுகிறார்கள். நடந்தது அவளுக்குத் தெரியாது. விரும்பி விரும்பி அழைத்தும் திருமணத்துக்கு வரவில்லையே என்ற ஆதங்கத்தில் பெருமாளிடம் உணர்ச்சியைக் கொட்டுகிறார், ‘ஜோ’. அற்புதமான இயல்பான நடிப்பு. அப்போதும் தனக்கு இழைத்த அவமானத்தைக் கூறாமலே தவிர்த்து விடுகிறார் கதாநாயகன். நாயகனின் இந்த பண்பு அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.
கதாநாயகனை தீர்த்துக் கட்ட ஜாதி வெறியர்கள் திட்டமிடுகிறார்கள். உயிர் தப்பியவன், பெண்ணின் தந்தையிடம் பேசும் வசனம் நெருப்பாய் வந்து விழுகிறது. “உங்களது பெண் என்னை காதலிக்கிறாள் என்பதையும், திருமண வீட்டில் நீங்கள் என்னை அவமதித்ததையும் வெளியே செல்லாமல், உங்கள் ஜாதி மானத்தை நான் தான் காப்பாற்றினேன். காரணம் என்ன தெரியுமா? உங்கள் பெண் எல்லோரையும்விட அப்பா வாகிய உங்கள் மீதுதான் பாசம் அதிகம் வைத்திருந்தார். அது குலைத்துவிடக் கூடாதே என்பதற்காகவே நான் மறைத்தேன்” என்று கூறும்போது நெகிழ வைக்கிறார். காட்சிக்கு ஏற்ற கச்சிதமான நடிப்பு.
பெண்ணின் தந்தை ஜாதி மோதலை விரும்பாதவராகவும் அதே நேரத்தில் ஜாதிய சமூகத்தின் கட்டமைப்பை மீறுவது அவமான மாகவும் கருதக்கூடிய மனநிலையில் இருப்பவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஜாதியை வெறியாக பகிரங்கப்படுத்திய சமூகம், இப்போது புறவெளிகளில் நடித்துக் கொண்டு அகத்தில் ஜாதியத்தில் ஊறிப் போய் நிற்கிறது இந்த அளவில்தான் சமூக மாற்றம் உருவாகியிருக்கிறது என்ற கருத்தை நுட்பமாகப் பார்வையாளரிடம் கடத்தியிருக்கிறது, படம்.
ஆணவக் கொலைக் காட்சிகள் எதுவுமே மிகைப்படுத்தப்பட்டதல்ல; உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ் எதிர்கொண்ட மரணங்கள்தான். காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் நிறைவு காட்சிகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
பெண்ணின் தந்தை, கதாநாயகனை மகளுடன் நேரில் சந்தித்து உரையாடுகிறார். அவமானப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவிக்க வந்த காட்சியாக சித்தரிக்கப்படுகிறது. “சமூகம் ஜாதியை இன்னும் விட்டுவிடவில்லை; காலம் மாறும்” என்று பெண்ணின் தந்தை கூறும்போது கதாநாயகன் கூறுகிறார். அதெல்லாம் மாறாது சார்; நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும், நாங்கள் நாய்களாகவே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் காலம் வரை எந்த மாற்றமும் வராது. இதுவே நாயகனின் பதில்.
ஆணவக் கொலைக்கு பதில் மற்றொரு கொலை என்று பழிவாங்கும் உணர்வுகளை நோக்கி நகராமல் சமூகத்தில் ஜாதி வெறிக்கு எதிரான உரையாடலையும் அந்த உரையாடலை கூர்மைப்படுத்தும். இயக்கங்களுக்கான தேவைகளையும் படம் தீர்வாக முன் வைப்பதே - இப்படத்தில் மிகப் பெரும் சிறப்பு.
கதாநாயகனாக வரும் கதிர், கதாநாயகியாக வரும் ஆனந்தி, பாத்திரத்திற் கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நண்பனாக வரும் யோகி பாபுவின் காமெடி காட்சிகள் கதை ஓட்டத் தோடு இணைந்து படத்தை கலகலப்பாக்கி விடுகிறது. எப்போதும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் தரும் சந்தோஷ் நாராயண் இசை, பாடல் வரிகளை சிதைக்காது கூர்மையாக வெளிப்படுத்துகிறது. பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, தூத்துக்குடி கிராமிய ஜாதியக் கலாச்சாரங்களை கண் முன் நிறுத்துகிறது.
ஆவணப் படமாக மாறிவிடாமல் எச்சரிக்கையோடு கதாபாத்திரங்களுக்கும் உரையாடலுக்கும் மெருகேற்றி திரைப்பட மொழியில் அற்புதமாகப் படத்தைச் செதுக்கி யிருக்கிறார் மாரி செல்வராஜ். இது அவரது முதல் படமா என்று நம்பவே முடியவில்லை. ‘சூப்பர் ஸ்டார்’களை வைத்து இயக்கக்கூடிய நிலைக்கு இயக்குநர் இரஞ்சித் உயர்ந்த இடத்தைப் பிடித்தாலும், சமுதாயக் கவலை யிலிருந்து விலகிச் செல்லாதவராகவே தன்னை அடையாளப்படுத்தி, கலைத் துறையை ஜாதிக்கு எதிரான ஆயுதமாக்கும் பணிகளைத் தொடர்ந்து வருகிறார். அவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.
பாலச்சந்திரர்களும், மணிரத்தினங்களும், சங்கர்களும் கொடிகட்டிப் பறந்த திரைப்பட உலகில் இப்போது இரஞ்சித்துகள், கோபி நயினார்கள், சுசீந்திரன்கள், மாரி செல்வராஜ்கள் கரங்களில் வந்து சேர்ந்திருப்பதே சமூக மாற்றத்துக்கான திறவுகோல்தான்.
ஆயிரம் கூட்டங்களும், போராட்டங் களும் உருவாக்க முடியாத ஜாதிய எதிர்ப்பை இந்தப் படம் ஆழமாக சமூகத்தில் கடத்தியிருக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ பி.ஏ.பி.எல்., மேலே ஒரு கோடு என்று இந்தத் திரைப்படம் ஒரு குறியீட்டை முன் வைக்கிறது. வழக்கறிஞராக வேண்டும் என்ற இலட்சியக் குறியீடு. இந்தக் குறியீடு ‘ஜாதி ஒழிக’ மேலே ஒரு கோடு என்ற இலட்சியத்தை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்.
கைகளால் கழிவு அள்ளுவோர் 20 ஆயிரம் பேர்!
நாட்டில் 20 ஆயிரத்து500 பேர் கைகளால் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 6,126 பேரு, மகாராஷ்டிராவில் 5,269பேரும் கைகளால் கழிவுகளை அள்ளுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது 18 மாநிலங்களின் கணக்குதான்.