மிழ் இலக்கியப் பெரும் பரப்பில், வரலாற்றுப் புனைவெழுத்துக்களில், கல்கி, சாண்டில்யன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் படைப்புக்கள் வாசகப் பரப்பில் இன்னும் சாவா மூவாப் படைப்புகளாகக் கோலோச்சி வருகின்றன. என்றாலும், அவைகள் மாட்சிமை தாங்கிய அரசர்கள், அரசாணிகள், இளவரசர்கள், அழகு ததும்பி வழியும் இளவரசிகள், மதியூக மந்திரிகள், படைத்தளபதிகள், போர்த் தந்திரங்கள், வீரம், காதல், கொடை என்று அரச அதிகார மாந்தர்களின் பாத்திரப் படைப்புகளே விதந்தோற்றப்பட்டு எழுதப்பட்ட புனைவெழுத்துக்களாகவே நீள்கின்றன.

            puliyur murugesan novelகாலைச் சூரிய உதயமென்றாலும் சரி, புரவி மீதேறிப் பவனி வரும் காட்சிகள் என்றாலும் சரி, அவைகள் ஒரு பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு வர்ணிப்பை மேற் கொள்ளும் எழுத்தாடல்களாகவே நின்று விடுகின்றன. அவைகள் வாசிப்பு ஆர்வத்தையும், அழகையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும், வெறும் வாசிப்புக் கவர்ச்சியாகவே மீந்து விடுகின்றன.

            ஆனால், ஒரு சமூகம், அதன் குழுக்கள், நிலம், உற்பத்தி, அவைகளுக்கிடையேயான உற்பத்தி உறவுகள், பண்பாட்டு விழுமியங்கள், அவற்றுக்கிடையேயான சிக்கல்கள், மகிழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், துன்பங்கள், துயரங்கள், வலிகள், வேதனைகள், உறவுச் சிக்கல்கள் போன்ற அடிப்படைக் குணாம்சங்களைக் கொண்ட வரலாற்றுப் புனைவெழுத்துக்கள் அரிதினும் அரிதென்றே சொல்லிவிடலாம். ஓரிரண்டு ஆங்காங்கே தலைகாட்டினாலும் நீட்டினாலும் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற செல்வாக்கு மிக்க புனைவுகளுக்கு, அதன் வாசக வரவேற்பு பெரும் பரப்பிற்கு இணையாக வாசக வரவேற்பினைப் பெறவில்லை என்பதே நிதர்சனம்.

            உண்மையில் வரலாறு என்பது மன்னர்களின் வாழ்வு, சாவு, போர்கள் பற்றியது மட்டுமன்று. ஒரு சமூகத்தின், மக்கள் குழுக்களின், இனத்தின் அவற்றைச் சுற்றிச் சூழ்ந்துள்ள பிற உலகினோடு அவை கொண்டுள்ள உறவுகள் பற்றியதுமாகும்.

            வரலாறு என்பதே கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்திற்குமான ஓர் உரையாடல்தான். பொதுவாக வரலாறு என்பதே எழுதப்படுவதுதான். இந்த வரலாற்றை எழுதுதல் என்பது, வரலாற்றை எழுதுபவனின் வர்க்கம், இனம், சாதி, மொழி போன்றவைகளை உட்கிடையாகக் கொண்டுதான் தொழிற்படும்.

            அதிலும் இலக்கியப் பனுவல்கள் என்றாலே புனைவுகள்தான் அதன் அடித்தளம். அதன் மீதுதான் எந்த ஒரு இலக்கியப் பனுவலும் கட்டப்படும். இந்தப் புனைவு இடைவெளிக்குள்தான் சாமர்த்தியமாக தமது ஆதிக்க கருத்தியல்களை, ஆண்ட பரம்பரைப் பெருமிதங்களை, ஆண்டான் அடிமை, அடங்கி இரு, அடிபணிந்து தாழ் பணிந்து ஏற்றுக் கொள், உருத்து வந்து ஊட்டும் ஊழ்வினை, தலையெழுத்து என்பதுபோன்ற உள் நுழைத்தல்கள் சாத்தியப்பட்டு விடுகின்றன இவர்களுக்கு.

            ஆக, ஒரு புறம் பார்ப்பன வரலாற்றெழுதிகள், வெள்ளாள உயர் சாதிய ஆய்வெழுதிகள், மேலை நாட்டினரின் ஆய்வுகள், தமிழ்ச் சமூகத்தின் முன் விரிந்து பரப்பப்படும் நவீன விஞ்ஞான ஊடகங்கள் வழியிலான செய்திகள் என எல்லாமுமே தத்தமது வர்க்கச் சார்புடையதாய், தங்கள் நலன் தொடர்புடையதாய் உள்ளிட்டுக் கொடுக்கப்படுவதே வரலாறுகளாகின்றன.

            இவைகள்தான் வரலாறுகள் என்றால், உண்மைகள் என்றால், வரலாற்றுக்குள்ளிருந்து வரலாற்றையும், உண்மைகளுக்குள்ளிருந்து உண்மைகளையும், தோண்டி எடுத்து வெளிக் கொணர வேண்டியது மக்கள் விடுதலைக்கான ஆய்வாளர்களின் பணி ஆகும். மக்கள் விடுதலைக்கான இலக்கிய கர்த்தாக்களின் பணியாகும். இலக்கியப் புனைவெழுத்துக்களின் பணியாகும். அப்படியானதொரு மக்கள் விடுதலைக்கான எழுத்தாடல்களில் சிறந்த குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புனைவெழுத்தாக 'படுகைத் தழல்' என்கிற புதினம் வழியாகக் களமாடியுள்ளார் எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்கள்.

            இதுவரை நம்முன் விரித்து வைக்கப்பட்டுள்ள வரலாறுகளை மறு வாசிப்புச் செய்து, கட்டுடைத்து, உண்மைகளை வெளிக் கொண்டு வந்ததோடு பெருங்கதையாடல்களை இனம்கண்டு, அதனடியில் அமிழ்ந்து போயிருக்கும் உண்மைகளையும் ஆழ, அகல வெளிக் கொணர்ந்திருக்கிறார் எழுத்தாளர் புலியூர் முருகேசன்.

            ஆயிரம் ஆண்டுகால அதிசயம் என்று வான் நோக்கி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவில், மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த சோழ வள நாடு, சுற்றிச் சுழித்துப் பொங்கிப் பிரவாகமெடுக்கும் காவிரி, கடல் கடந்து போர் நடத்தி சோழச் சாம்ராஜ்யத்தை விரிவாக்கி நிலை நாட்டிய ராஜ ராஜ சோழன் என பொதுவில் ஒரு பொற்கால ஆட்சிக் கனாப் பிரதிமைகள் கட்டியெழுப்பப்பட்ட புனைவெழுத்தாடல்களில், பெருமிதச் சொல்லாடல்களின் வழி, விரித்து வைக்கப்பட்டுள்ள வரலாறுகளை மறு வாசிப்புச் செய்து, அதனுள் சாணக்கியத் தனமாய்க் கட்டமைக்கப்பட்ட பெருங்கதையாடல்களை இனம்கண்டு, இல்லை இல்லை இது எல்லாக் குடிகளுக்குமான பொற்கால ஆட்சியில்லை. ஆயிரமாயிரம் பச்சைப் பசேல் நிலங்கள் யாருடையவை? யாருக்கானவை? அந்த நிலக் குவியல்கள் குவிந்த தந்திரோபாயங்கள், அதன் மீதான வரிகள், தீர்வைகள், தண்டல்கள்...

            ஆண்டுக்கு ஒரு லட்சத்து பதினைந்து ஆயிரம் கலம் நெல்லும், முந்நூறு கழஞ்சுப் பொன்னும், இரண்டாயிரம் காசுகளும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு வருவாயாக வந்த விதமும், அதே காலகட்டத்தில் வெறும் முப்பதே முப்பது காசுகளை கடனாக வாங்கியதை அடைக்கக் கூட வழியின்றி, தங்களைத் தாங்களே அடிமையாக அந்த தஞ்சைப் பெருவுடையாருக்கு விற்றுக் கொண்ட தாய், அங்காடி மகள் பெரங்காடி போன்ற பெண்டிர்களின் ஆற்றொணா அழுகையும், உதிரங் காணி, உவச்சக் காணி என்பதன் குறியீடாய் வரும் உதிரனின், உவச்சனின் துன்பங்கள், துயரங்கள், வலிகள், வேதனைகள்...

            ஜாக்சன் துரையின் வம்சா வழியைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஜில்லாக் கலெக்டரின் வரித் தண்டல் பொழுதுகளில் சதைகள் பிய்ந்து தொங்கும் கசையடி முறையும், அந்தக் கலெக்டருக்கு தன் மெய் தீண்டா புத்தம் புது மனைவி தரும் பெரு விருந்து மூலம் எழுபத்தைந்து வேலி நிலம் குவித்துக் கொண்ட அகரத்து ஹரியும்...

            விதைக்கோட்டை கட்டி, நெல்மணி விதைகளைக் கட்டிக் காப்பாற்றி அடுத்த வம்சாவளிகளுக்குக் கையளித்துப் போகும், ஏதேதோ வைத்தியம் பார்த்தும் தீரா அடி வயிற்று வலியுடன் அவதியுறும் கலியமூர்த்தி...

            எழுத்தாடலின் அடிச்சரடாய், ஊடு பாவாகத் தொடர்பறாது தொடர்ந்து இழையோடும் நிலம் என இதுவரை நம்முன் விரித்து வைக்கப்பட்டுள்ள வரலாறுகளை மறு வாசிப்புச் செய்து, கட்டுடைத்து, உண்மைகளை வெளிக் கொண்டு வருவதோடு பெருங்கதையாடல்களை இனம்கண்டு, அதனடியில் அமிழ்ந்து போயிருக்கும் உண்மைகளையும் ஆழ வெளிக் கொணர்ந்து, ஆதித் தோற்றுவாய் தொடர்ந்து, நேற்று... இன்று... என கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்திற்குமான ஓர் புனைவு உரையாடலே எழுத்தாடலே எழுத்தாளர் புலியூர் முருகேசனின் படுகைத் தழல்.

            வரலாற்றுப் புனைவெழுத்துக்களில் இதுவரை வெளிக் கொணரப்படாத அடித்தட்டு விளிம்பு நிலை மாந்தர்களை வெளிக் கொண்டு வந்தது மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையை, வாழ் நிலையை, ரத்தமும் சதையுமாக வார்த்தெடுத்ததுதான், வடித்தெடுத்ததுதான் இப் புதினத்தின் பெரும் பணி. இந்தப் பெரும் பணியே புகழத்தக்க, மெச்சத்தக்க, போற்றத்தக்க பணியாய் ஆகிறது.   இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தை 'குடி மக்கள் காப்பியம்' என்று பொதுப்பரப்பில் சொல்லப்படும். அப்படிச் சொல்வது என்பது அடிப்படையில் பிழையான கருத்து. அது குடி மக்கள் காப்பியம் அல்ல. 'வணிகக் குடிக் காப்பியம்'. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமானால், படுகைத் தழல் காப்பியமல்ல. புதின வகையென்றாலும் இதை 'குடிமக்கள் புதினம்' என்றே நாம் வரையறுக்கலாம்.

     ஏனென்றால் அரசர் ஆட்சி, ஆளுகை, சிம்மாசனம் என்று மேலிருந்து கட்டப்படுவதற்கு மாறாக, அடிப்படையில் நிலம், அதன் மீதான உழுகுடிகள், அதிலிருந்து எழும் பிற குடிகள், அவற்றை நிர்வகிக்கும் வரி, தண்டல் முறைகள், அதற்குமேலே அரசன், தெய்வம், கோவில் என மேலாதிக்க, மேலதிகார அமைப்புகள் என கீழிருந்து கட்டமைக்கப்பட்ட ஒரு சமூக வரலாற்றை வரலாறாகவே தந்த குடிமக்கள் புதினம்தான் படுகைத் தழல் என்று நாம் வரையறுக்கலாம்.

            மயக்கும் மொழிப் பிரயோகம், கிளரச் செய்யும் புனைவுக் காட்சிகள், குறிப்பாக ஒவ்வொரு அத்தியாயங்களுக்கும் கொடுத்திருக்கும் வித்தியாசமான அதே சமயத்தில் ஆற்றலான குறியீடாய் மாறும் அத்தியாயத் தலைப்புகள் என அருமையாய் சிறப்பாய் எழுத்தாடியிருக்கிறார் புதின ஆசிரியர்.

            கோயில்களில் நந்தா விளக்கெரிக்க ஆணையிடுவது, உத்தரவிடுவது என்பது மிக எளிது. ஆனால், அந்த நந்தா விளக்கெரிக்க, நெய் உருவாக்க, கொடுக்கப்பட்ட சாவா மூவா மாடுகளைச் சமன் செய்ய இடையர் குடிகள் படும் பாடு, சைவ சமண இருத்தலுக்கான சண்டைகள், அனல் வாத புனல் வாத ஏடுகளின் தொழில்நுட்ப வெற்றிச் சூக்குமங்கள், உயிர் கொல்லும், பலி வாங்கும் கழுமரங்கள், இவற்றினூடே ஈசான சிவபண்டிதரின் ஆரிய உள்நுழைவுக் கும்பல்களின் குயுத்தித் தந்திரங்களைப் போட்டுடைக்கும் கங்கைராயன், அவருடன் ஏகப்பட்ட கேள்விகளோடும், அடக்கப்படும் ஒடுக்கப்படும் காரணங்களுக்கான அடிஉண்மைகளை அறியத் தொடர்ந்து வினாக்கள் எழுப்பியபடியே பயணப்படும் வேம்பன் என வரலாற்று வகை மாந்தர்களை வலுவாய்க் கட்டியெழுப்பி, உண்மைகளைப் வாசகப் பெருமனங்களில் படீரென்று போட்டுடைக்கும் வல்லமை மிக்க வலுவானதொரு படைப்பாகும் படுகைத் தழல்.

            எழுத்தாளர் புலியூர் முருகேசனின் படுகைத் தழல் புதின வரலாற்றுப் பரப்பில் தவிர்க்க முடியாததொரு வலிய படைப்பு என்பதே நமது மறுதலிக்க முடியாத மதிப்பீடு. 

            ஆயினும் சிற்சில கூறுகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் கனதியாய் அமைந்திருக்கும் என்பதே நமது எண்ணம்.

            அதிலொன்று பாத்திரங்களுக்கிடையான உரையாடல் தன்மை. சங்க காலம், சங்க மருவிய காலம் என்பதிலேயே 'கொடுந் தமிழ்' என்கிற வழக்கு இருந்திருக்கிறது. அதாவது, புலவர்கள் மற்றும் தங்களை மேல் நிலையாக்கம் செய்து கொண்டவர்களின் பேச்சு வழக்கு என்பது செந்தமிழ் வழக்காகவும், அடிநிலை மாந்தர்தம் வழக்கு கொடுந்தமிழ் வழக்காவும் இருந்திருக்கிறது. குறை கூறப்பட்டிருக்கிறது என்பது சங்க, சங்க மருவிய இலக்கியங்களிலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், புதினத்தில் வரும் அடி நிலை மாந்தர் தம் பேச்சு வழக்கு என்பது, செழுந்தமிழாய், செந்தமிழ் வழக்காய் இருக்கிறது. மாறாக, நூலாசிரியர் இன்னும் தமது மொழியாடற் திறனை யூகித்து, காலப் பொருத்தமான கொடுந்தமிழ் வழக்காய்த் தந்திருந்தால், அது வரலாற்றுக் காலத்திற்கு இன்னும் அருகாமையில் வாசிப்பாளனைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும்.

            அடுத்து ஆதி மூதாய் கால வரலாற்றுப் போக்கு ஒன்று புதினத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. (எமது சிறுகதையான 'தொல்வலி'யின் சித்தரிப்புகள், காட்சிகள் நினைவிற்கு வந்து போகிறது) அதிலொரு பெருத்த முரண்பாடு. பழையோள், ஆதி மூதன், அந்த இனக்குழுவின் நகர்வுகளின் படி நிலையில் 'மழை வேண்டிய மந்திர நடனம்' என்கிற நகர்வு பொருந்தா நகர்வாகும். ஏனென்றால், அவர்களுக்கு மழை தேவையில்லை. மாறாக, மழையின்போது இறங்கும் இடியும் மின்னலும் அவர்களுக்குப் பேரச்சத்தையும் பெருந் தடையும் கொடுக்க வல்லது. அந்த இடியும் மின்னலும் தங்களின் மேல் ஏவிவிட்ட துர் நிமித்தங்களாக, துர் நடவடிக்கையாகவே அவர்கள் உணர்ந்தனர். அதற்கெதிராக மந்திரங்களையும், மந்திர நடனங்களையும் மேற் கொண்டார்கள் என்பதுதான் சமூக படி நிலை நகர்வுகளின் இயங்கியல் விதி. அங்கு போய் மழை வேண்டிய மந்திர நடனம் என்று நூலாசிரியர் கதையாடியிருப்பது பிழை. மாறாக, வேட்டைச் சமூகம், சேகரிப்புச் சமூகம் என்பதிலிருந்து இடம் பெயரும் விவசாய சமூகம், அதிலிருந்து மேம்பட்ட இடம் பெயரா நிலை நின்ற விவசாய சமூகத்தில்தான் மழை தேவை. அச்சமூகத்தில்தான் வான் பொய்க்கும் போது, மழை வேண்டிய மந்திரச் சடங்குகளும் நடனங்களும் தேவைப்பட்டன என்பதே சமூக படி நிலை நகர்வுகளின் இயங்கியல் விதி.

            அடுத்து, ஆரியர் வருகை, உள்நுழைவு, வசியபிரு என்கிற சூட்சுமம் கொண்ட ஆரியன், தனது சடங்கு முறை மூலம் ஆதி வேளாண் குடிகளுக்கு அச்சமூட்டி, தமது அதிகாரத்தை அவர்களிடையே நிலை நிறுத்திக் கொள்வது என்பது உள்ளிட்ட சமூக படி நிலை நகர்வுகளின் இயங்கியல் விதிக் கூறுகளில் நமக்கு மாறுபாடுகளிருந்தாலும்... ஆரிய மேலாதிக்கம், அந்த ஆரியக் கருத்தியலுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த ராஜ ராஜ சோழச் சக்கரவர்த்தியும் அவன் குடும்ப வாரீசுகளும், அடிப்படையான நிலம், நிலக் குவிமானம், அதனடியில் மக்கி மாண்டு போன உழுகுடிகள் உள்ளிட்ட துணைக் கருவிக் குடிகள் என ஒரு பொன்னுலகக் கனாவை, பொற்கால ஆட்சிக் கற்பனையை சுக்கு நூறாக அடித்து நொறுக்கி, உடைத்துப் போட்டு, உண்மையை ஊருக்கும் உலகிற்கும் வெளிக் கொணர்ந்த அற்புதப் படைப்பே எழுத்தாளர் புலியூர் முருகேசனின் படுகைத் தழல்.

            இறுதியாக... படுகைத் தழல் நம்முன் விரித்துப் போட்டிருக்கிற புதினப் பெரும்பரப்பின் அடிமூலம் நிலம் என்றால், அதற்கு இணையான மற்றொரு புலம் தஞ்சைப் பெரிய கோவிலின் நிர்மாணம். தமிழ்ச் சமூகத்தின் கட்டிடக் கலையின், கட்டிடத் தொழில்நுட்பத்தின், நிர்மாணத்தின் கட்டியம் கூறுகிற தமிழ் விழுமியங்களில் ஒன்றாக, வானோங்கி உயர்ந்து நிற்கும் அந்தப் பெருவுடையார் கோவில். சுற்றிச் சுற்றி எத்தனைதான் பார்த்தாலும், ஒரு சிறு குன்றினையோ, சிறு பாறையையோ கண்ணுக்கெட்டியவரை காண முடியாத அந்த மருதப் பெரும் பரப்பில், அத்தனை பெரிய கற்காவியம் எப்படி? அருகிலிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் நார்த்தாமலை முதல் திருச்சி பொன்மலை ஈறாக எவ்வளவு காத தூரம்? அங்கிருந்து கல்லுடைத்து, கற்பெருக்கி, அத் தொழிற்பாடுகளில் கை இழந்த, காலிழந்த, உயிரிழந்தவர்கள் எத்தனை எத்தனை பேர்? அவர்களின் உடல் உழைப்பு, கட்டுமானத்தின்போது உயரே நிலைநிறுத்த, நிர்மாணிக்க, இழந்த இன்னுயிர்கள், அவற்றினோடு மூளை உழைப்பான நிர்மாணிப்பின் கட்டுமானத் தொழில்நுட்பம், அதற்கான நிதி மூலதனக் குவிப்பிற்காக, பசிய வயல் வெளிகளில் தங்கள் உழைப்பையும் உதிரத்தையும் சிந்திய உழுகுடிகளின் உழைப்புச் சுரண்டல், அதன் அடியில் கிடக்கும் வலிகள், வேதனைகள், வாதைகள், அப்பப்பா... சொல்ல நிறைய இருக்கிறது. அத்தனையையும் ஒருங்கு திரட்டி படுகைத் தழல் போன்று ஒரு ஆற்றலான அருமையான படைப்பாய்த் தரப் போவது யார்? அதை எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்களே தரலாம் அல்லது வேறு யாரேனும் எழுதலாம். ஆனால், எழுத வேண்டும். தர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தமிழ்ச் சமூகத்தின் எதிர்பார்ப்பு.

படுகைத் தழல்
ஆசிரியர் : புலியூர் முருகேசன்
சிம்ளி வெளியீடு
முதல் பதிப்பு : டிசம்பர் 2018 உயிர்மை
மறு பதிப்பு : அக்டோபர் 2019 சிம்ளி
சிம்ளி வெளியீடு
சோழகன் குடிகாடு
பாப்பா நாடு அஞ்சல்
ஒரத்த நாடு
தஞ்சாவூர் - 614 626.
பக்கங்கள் : 158
விலை : ரூ. 160/-

- பாட்டாளி

Pin It