தொ.மு.சி.ரகுநாதன் தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழமான தளத்துக்குக் கொண்டு சென்று, இலக்கிய ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தியவர்.

‘சிறுகதை மன்னன்’ புதுமைப்பித்தனுடைய புரட்சிகர ஆளுமையைத் துலக்கி, வளர்த்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழிகாட்டும் வகையில் வடிவமைத்தவர். மக்கள் இலக்கியத்தை வளர்க்க ‘இலக்கியப் பேராசான்’ ஜீவாவின் வழியில் மக்கள் திரளைச் சார்ந்து, இலக்கிய அமைப்புகளின் வழியே தொண்டாற்றியவர். நவீனத் தமிழ் இலக்கிய விமர்சனத்தை வளர்த்தெடுத்தவர். இலக்கியத்தையே வாழ்வாகக் கொண்டவர். இலக்கிய மாகவே வாழ்ந்தவர். சோசலிச யதார்த்தப் படைப்பு முறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

சிறுகதையாளராக, நாவலாசிரியராக, கவிஞராக, இலக்கியக் கோட்பாட்டாளராக, இளங்கோவடிகள், பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைப் பற்றி ஆய்வுப் பூர்வமாக அறுதியிட்டுப் பேசும் தகுதியுடையவராக, விளங்கியவர் தொ. மு. சி. ரகுநாதன்.

ரகுநாதன் இலக்கிய அமைப்புகளைப் புறக்கணிக் காதவர், இலக்கியத்தை விவாதத்துக்குள்ளாக்குவதை விரும்பியவர். கூட்டுச் சிந்தனையின் வலிமையை உணர்ந்தவர். இலக்கியத்தைச் சமூகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமையை மதித்தவர்.  சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையில் இருக்க வேண்டிய  நல்லுறவின் முக்கியத்துவத்தைப் புரிந்தவர். சமூகத்தைத் தூண்டும் இலக்கியப் பேராற்றலை அறிந்தவர்.

இருபதாம் நூற்றாண்டு மக்கள் இலக்கியச் சாதனையாளர்களில் ஒருவர். கவியரங்கக் கவிதைக்கு இலக்கிய அங்கீகாரம் ஏற்படுத்திய மக்கள் கவிஞர். போராடும் தொழிலாளர்களை முதன் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் கதாநாயகனாக்கிய புரட்சிகர எழுத் தாளர். புதிய சமூக உண்மைகளைக் கண்டடைந்த சாதனையாளர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த இலக்கியப் போராளி. இத்துனை சிறப்புக்குரியவர் ‘நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி’ அவர்தாம் தொ.மு.சி. ரகுநாதன்!

திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா- முத்தம்மாள் வாழ்விணையருக்கு 20-10-1923 ஆம் நாள் பிறந்தார் ரகுநாதன்.

ரகுநாதன் தமது ஆரம்பக்கல்வியை ஷாப்டர் பள்ளியில் படித்தார். உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி வழியில் பாடங்களைப் படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் 1939 ஆம் ஆண்டு இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்து பயின்றார்.

ரகுநாதன்  தமது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஜவஹர் வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கண்டித்து பிரசுரங்களை வெளியிட்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1942 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று, நெல்லை அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார். ஊர்வலத்தில் அணி வகுத்துச் சென்ற மாணவர்கள் மீது பிரிட்டிஷ் அரசின் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அப்போது காவல்துறையினரால் ரகுநாதன் கடுமையாக தாக்கப் பட்டார்.

நெல்லையில் 1947 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ‘கலைஞர் கழகம்’ என்னும் இலக்கிய அமைப்புத் தொடங்கப்பட்டது. அதன் தலைவராக ரகுநாதன், செயலாளராக தி.க.சி, நா.வானமாமலை, என்.டி. வானமாமலை, சீனிவாசன், கணபதியப்பன், ஜெகநாதன் முதலியவர்கள் பொறுப்பாளர்களாக விளங்கினர். கலைஞர் கழகத்தில் ஜீவாவை அழைத்து உரையாற்ற வைத்தனர்.

‘மின்னல்’ என்னும் கையெழுத்து இதழை 1940 ஆம் ஆண்டு நடத்தினார். ‘பிரசன்ட விகடன் ’ முதலிய சிற்றிதழ்களில் அவரது படைப்புகள் வெளிவந்தன.

சென்னைக்குச் சென்று ‘தினமணி’ நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், ‘முல்லை’ என்னும் இலக்கிய மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ என்னும்

இலக்கிய இதழில் கு.அழகிரிசாமியுடன் இணைந்து துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

‘சாந்தி’ என்னும் இலக்கிய மாத இதழை 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையிலிருந்து வெளி யிட்டார். அந்த இதழின் ஆசிரியராக விளங்கினார்.  ‘சாந்தி’ இதழில் கவிஞர் தமிழ்ஒளி, சுந்தர ராமசாமி, அகிலன், சி.வி.எஸ். ஆறுமுகம், டி.செல்வராஜ்,

கு. அழகிரிசாமி, நா.வானமாமலை, சாமி சிதம்பரனார், கமில் சுவலபில், எஸ்.இராமகிருஷ்ணன், வையாபுரி பிள்ளை, ஆ.நடராசன், வை.கோவிந்தன், தி.க.சி., துறைவன், கே.சி. எஸ்.அருணாசலம் முதலிய இலக்கிய ஆளுமைகளை எழுத வைத்தார்.

நிதி நெருக்கடியின் காரணமாக 1956 ஏப்ரல் மாதம் ‘சாந்தி’ இதழ் நின்று போனது. சென்னையிலிருந்து வெளிவந்த ‘சோவியத் நாடு’ இதழில் 1967 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

ரகுநாதன் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போதே கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டார். ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற பெயரில் கவிதைகள் படைத்து அளித்தார்.

அன்றைய தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில்,

சென்னை வானொலியில் ‘நம்ம சர்க்கார்’ என்னும் தலைப்பில் ‘யாருக்கு சுதந்திரம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு கவிதை பாடினார்.

Òஇருப்பில் உணவிருக்க இருட்டில் பதுக்கி வச்சி

கருப்புக் கடை நடத்தி காசுதனைச் சேர்த்தோன்

உருப்படியாய் நம்முன்னே உலா வந்து போவதையும்Ó

என்று தொடங்கி, யாருக்கெல்லாம் இன்று சுதந்திரம் இருக்கிறது என அன்றைய அரசியல் சமூக நிலை மையைக் கடுமையாகத் தமது கவிதையில் விமர்சித்தார் ரகுநாதன்.

Òஅப்போதுதான் நமது நாடு விடுதலை பெற்றது. தமிழ்நாட்டில் மிகக் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவியது. பதுக்கலும், லஞ்சமும் தலைவிரித்தாடின. பதுக்கல் எடுப்புப் போரில் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம் அது.

இந்தக் கவிதையை வானொலியில் கேட்ட அறிஞர் அண்ணா, தமது ‘திராவிட நாடு’ இதழில் மூன்று பக்கத்தில் ஒரு மதிப்புரையை எழுதி வெளி யிட்டார். ‘நம்ம சர்க்கார்’ என்னும் இக்கவிதை ரகுநாதனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.

ரகுநாதனின் கவிதைகள், விருத்தத்தின் மிக நெகிழ்ந்த வடிவம், நாட்டுப்புற மரபின் சாயல் கொண்டது. இலக்கண வரம்பிலிருந்து விலகாதது. வழக்கில் உள்ள சொற்கள், சொற்றொடர்கள் கலந்து கேட்போரை வசப்படுத்துவது என இலக்கிய ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

பாரதி ரகுநாதன் மீது கொண்ட அளவற்ற பற்றால், பாரதி விழா மேடைகளில் பாரதியைப் பற்றி கவிதை முழக்கங்கள் செய்தார்.

Òசாதிபேதமெனும்  களக்கறுத்து மானிடமாம்

நீதி ஒன்றே தர்மம் என நிலை நாட்டும் சமுதாயம்

மானிடர்கள் எல்லோரும் வள வாழ்க்கை தனைப்பெற்று

வானுறையும் தெய்வம் போல் வாழவைக்கும் சமுதாயம்

அத்தகைய சமுதாயம் அதனைத்தான் நம் கவிஞன்

இத்தரையில் ஒப்பில்லாச் சமுதாயம் என்றுரைத்தான்Ó-

என்று பாரதி தமது கவிதைகளின் உயிராக நிலை நிறுத்திய ஒப்பில்லாச் சமுதாயம் என்னும் கருத்துக்கு மானுட நீதியை அடிப்படையாக்கித் தமது கவிதை மூலம் விளக்கம் தருகிறார்.

தமிழில் ஏலாதா என்னும் பொருள் பற்றி ரகுநாதன் பாடிய கவிதை தமிழர்களை சிந்திக்கத் தூண்டுகிறது.

Òதாய்மொழியை தாயகத்தைத் தள்ளி

                       வைத்து வெள்ளையர்க்கு

நாயடிமை செய்தவர்கள் நாத்தடித்துப் போனதனால்,

தன் பலத்தைத் தானறியா யானையைப்

                       போல் ஆங்கிலத்தின்

பின் பலத்தை நம்புகின்ற  பேடியர்கள் உள்ளதால்

கற்றுவிட்ட ஆங்கிலத்தைக் கைகழுவ மனமின்றிப்

பெற்றுவிட்ட தாய்மொழிக்கே

                பிணக்குழியைத் தோண்டுவார்.

இடமில்லை ! தாய் மொழியை

                  இழித்துப் பழிப்பவர்க்கிங்கிடமில்லை!

தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ்  மொழி ஆட்சி செய்ய வேண்டும். குறிப்பாகப் பயிற்று மொழி தமிழாகத்தான்  இருக்க வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார் ரகுநாதன்.

ரகுநாதன் கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், காவியப் பரிசு, தமிழால் ஏலாதா ? முதலிய கவிதை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

அண்ணனும்  தம்பியும், பெண்ணாய்ப் பிறந்தால், மோகினி, மருது பாண்டியர், சிலை பேசிற்று, வலி, அத்தான் வந்தார், பஞ்சப்பாட்டு முதலிய சமூக நாடகங் களை படைத்தளித்துள்ளார்.

‘புதுமைப்பித்தன் வரலாறு’ என்ற நூலின் மூலம் புதுமைப்பித்தனின் விரிவான வரலாற்றை தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

‘சமுதாய இலக்கியம்’ என்ற நூலின் மூலம் இலக்கியம் சமுதாய மாற்றத்திற்கு எவ்வாறு பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

‘இலக்கிய விமர்சனம்’ என்னும் நூலை தமது இருபத்தைந்தாவது வயதில் எழுதி வெளியிட்டார்.  விமர்சனக் கலை பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல் ஆகும்.

முதலிரவு, கன்னிகா, பஞ்சும் பசியும். புயல் முதலிய நாவல்களை தொ.மு.சி. ரகுநாதன் எழுதி யுள்ளார்.

நீயும் நானும், சேற்றிலே மலர்ந்த செந்தாமரை, ரகுநாதன் கதைகள், சஷணப்பித்தம் முதலிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார்.

அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும், இளங்கோவடிகள் யார்? முற்போக்கு இலக்கிய இயக்கங்கள், புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் முதலிய ஆய்வு நூல்களை எழுதி அளித்துள்ளார்.

பாரதியும், ஷெல்லியும், கங்கையும் காவிரியும் (தாகூரும், பாரதியும்) முதலிய ஒப்பிலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

பாரதி-சில பார்வைகள், பாரதி காலமும் கருத்தும், பாரதியும் புரட்சி இயக்கமும், பாஞ்சாலி சபதம் - உறை பொருளும் மறை பொருளும் முதலிய பாரதி ஆய்வு நூல்களை தமிழிலக்கிய உலகிற்கு எழுதி வழங்கியுள்ளார்.

புதுமைப்பித்தன் கதைகள், காந்திமதி கலித்துறை அந்தாதி முதலிய நூல்களை பதிப்பித்துள்ளார்.

தொ.மு.சி. ரகுநாதன், ‘மருது பாண்டியர்’ என்னும் தமது நாடகத்தில்,  ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை நிலைப்படுத்திக் கொள்ள , நமது நாட்டு மக்களிடையே சாதிப் பகைமையைத் தூண்டி, மோதலை ஏற்படுத்திய வஞ்சகத்தைப் புறந்தள்ளி, மக்கள் ஒன்றுபட்டு நின்ற கதையை, மையமாக வைத்துப் படைத்துள்ளார்.

இவரது ‘இலக்கிய விமர்சனம்’ என்னும் நூல், தமிழில் வெளிவந்த முதல் இலக்கிய விமர்சன நூலாகும். இந்நூல் தமிழிலக்கிய உலகத்தை மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடையச் செய்தது.  அழகியலைத் தமிழுக்கு அறிமுகம் செய்த முதல் நூலாகவும் இது அமைந்தது. Òஇலக்கிய விமர்சனத்தை விஞ்ஞானப்பூர்வமாக மாற்றும் முயற்சி இந்நூல்Ó என மதிப்பீடு செய்துள்ளார் மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி கா.சிவத்தம்பி.

ரகுநாதன் ‘முதலிரவு’ என்னும் நாவலை 1949 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். அந்நாவல் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது. நாவல் வெளிவந்த சில மாதங்களிலேயே பல பதிப்பு களைக் கண்டது. பொறாமை கொண்ட சில நூல் வெளியீட்டாளர்கள், அந்த நாவல் ஆபாசமானது என்று கூறி அரசாங்கத்துக்குப் புகார் செய்தனர். அப்போது தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார், நாவலில் ஓரினச் சேர்க்கை, முறை பிறழ்ந்த ஈரினச் சேர்க்கை, காந்தியப் பாலியல் நிலைக்கு எதிர்ப்பு எனக் கூறி, புத்தகத்தைத் தடை செய்து ஆணை பிறப்பித்தார்.

இந்தத் தடையாணையை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வாதாடினார். பலனில்லை, கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் விதித்த அபாராதத் தொகையைக் கட்டி மீண்டார்.

அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெருந்தொழிலாக விளங்கியது கைத்தறி நெசவு, அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையினால், கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த மக்கள் மிகுந்த வறுமையில் வாடிக்கொண்டிருந்த காலம் அது. பசியும் பஞ்சமும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் கஞ்சிக்கு வழியின்றி செத்து மடிந்தனர். குடி தண்ணீருக்குக் கூட கடுமையான பஞ்சம் நிலவியது. தெரு முனைகளில் அரசு திறந்திருந்த கஞ்சித் தொட்டி களைச் சுற்றி ஏழை மக்கள் ஈ, எறும்புகளாக மொய்த்துக் கிடந்தார்கள். இச்சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து ‘பஞ்சும் பசியும்’ என்னும் நாவலை எழுதினார் ரகுநாதன்.

தமிழகத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது ‘பஞ்சும் பசியும்’ நாவல். இந்நாவலால் பெரிதும் ஈர்க்கப்பட்ட செக் நாட்டுத் தமிழ்ப் பேரறிஞர் கமில் சுவலபில், அந்நாவலை செக் மொழியில் மொழிபெயர்த்து வெளி யிட்டார்.  தமிழ் மொழியிலிருந்து ஒரு அய்ரோப்பிய மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட முதல் நாவல் என்னும் பெருமையை ‘பஞ்சும் பசியும்’ நாவல் பெற்றது.  மலையாளம், தெலுங்கு, வங்காளம், இந்தி, ஹங்கேரியன், ஜெர்மன், ரஷ்யன், ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் ‘பஞ்சும் பசியும்’ நாவல் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த படைப்பாளர் களும், ஆய்வாளர்களும், கோவையில் கூடி 1961 ஆம் ஆண்டு மே மாதம் ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம்’ என்னும் பேரமைப்பை எற்படுத்தினார்கள். இதில் இலக்கியப் பேராசான் ஜீவாவுடன் இணைந்து முக்கியப் பங்காற்றினார் ரகுநாதன்.

தமிழகத்தில் மக்கள் இலக்கிய வளர்ச்சி, நாட்டுப்புற இலக்கிய ஆய்வு, நாட்டுப்புறக் கலை வளர்ச்சி, மக்கள் நிலையிலிருந்து வரலாற்றுப் பார்வை, சமூக அடித் தளத்தின் மீது நின்று இலக்கியத்தைப் பார்க்கும் ஆய்வு முறை, அடித்தள மக்கள் ஆய்வுகள் முதலியவற்றுக் கெல்லாம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமே அடித்தளம் இட்டது.

மதுரையில் 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் ரகுநாதன் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ரகுநாதனின் பெரும்பான்மையான மொழி பெயர்ப்புகள் சமூக வாழ்வை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட ரஷ்யப் பேரிலக்கியங்களாகும்.

டால்ஸ்டாயின் ‘அக்கினிப் பரிட்சை’, இலியா இஷேன்பர்க்கின் ‘வசந்தமே வருக’, மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ , ‘தந்தையின் காதலி’, ‘பிரமச்சாரியின் டைரி’ ‘மூன்று தலைமுறைகள்’ முதலிய நாவல்கள், ‘சந்திப்பு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, மைக்கல் ஷோலாகோவின் ‘இதயத்தின் கட்டளை’, ஆர். எல். ஸ்டிவன்சனின் ‘ நான் இருவர்’, மாயக்கோவ்ஸ்கியின் ‘லெனின் கவிதாஞ்சலி’ மார்க்ஸ் - ஏங்கல்ஸ் மதத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள், ‘நவசீனக் கதைகள்’ சோவியத் நாட்டுக் கவிதைகள் என முக்கியமான உலகப் படைப்புகள் பலவற்றை தமிழில் மொழி பெயர்த்து அளித்துள்ளார்.

Òஒரு மொழியிலுள்ள கலாசிருஷ்டியை இன்னொரு மொழியில் மீண்டும்  சிருஷ்டிப்பதே அவனது (மொழி பெயர்ப்பாளரின்) கடமை. அவ்வாறு சிருஷ்டிக்கும் போது, மூல நூலில் உள்ள விசயங்களுக்கு மாறுபடாமல், திரிபுகள் ஏற்படாமல், அவற்றிலுள்ள பாத்திரங்கள், உணர்ச்சிகள், கருத்துகள் முதலியவற்றைச் சிறிதும் சிதைவுறாதபடி திரும்பவும் சிருஷ்டிக்கவே அவன் முயல வேண்டும். அதாவது ஒரு இலக்கிய கலாசிருஷ்டியின் மொழி பெயர்ப்பும், ஒரு கலாசிருஷ்டியாகத்தான் இருக்க வேண்டும்.  ஒரு நூலை மொழிபெயர்க்கும் போது, முதலில் அதனை உயிருள்ள மொழியில், மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு முரணாகாத முறையில் மொழிபெயர்க்க முயல வேண்டும். அவனது வார்த்தைப் பிரயோகங்களும் நடை அமைதியும் மூல நூலில் உள்ள பொருளை நேர்மையுணர்ச்சியுடன் உணர்த்துவதாக இருக்க வேண்டும்Ó என ரகுநாதன் மொழிபெயர்ப்புக்கான இலக்கணத்தை வரையறுத் துள்ளார்.

மேலும், Òமொழிபெயர்ப்புகளால் மொழி வளமும், இலக்கிய வளமும் மேம்படுகின்றன. தேவையை முன்னிட்டுப் புதிய சொல்லாட்சியும், சொற் சேர்க்கை களும் பிறக்கின்றன. பிற மொழியின் துணை கொண்டு புரிந்து வந்த ஒரு விசயத்தைத் தன் மொழியில் கொண்டு வரும் முயற்சியால், மொழி வளர்ச்சியில் புதிய பாதைகள் திறக்கின்றன. தனது  மொழியின் கூடியபட்ச வலுவைப் புலப்படுத்தும் சோதனைகள் தோன்றுகின்றன.  பிற மொழி இலக்கியங்களின் உருவம், உள்ளடக்கம், கருத்துச் செறிவு, தத்துவ விசாரம் முதலியன புதியதொரு மொழியில் இறக்குமதி செய்யப்படுவதால், புதிய இலக்கியப் பரம்பரை மட்டுமல்லாமல், மக்களிடையே புதிய எண்ணங்கள் தோன்றவும் வழி ஏற்படுகிறது. இதன் மூலம் பிறநாடுகளுக்கு நமக்கும் இதயப் பரிவர்த்தனை எற்படுவதுடன், ஒரு நாட்டினரை இன்னோரு நாட்டினர் புரிந்து கொள்ளவும் முடிகிறது.Ó என மொழிபெயர்ப்பினால் ஏற்படும் நன்மைகளை எடுத்தியம்புகிறார் ரகுநாதன்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர், அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர், அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர், சாகித்திய அக்காதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் நடுவர் குழு உறுப்பினர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், பாரதி அறக்கட்டளை உறுப்பினர் முதலிய பதவிகளை வகித்தார்.

பாரதி விழா நிகழ்ச்சிகளிலும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்காக 1956 ஆம் ஆண்டு ரகுநாதன் இலங்கைக்குச் சென்று வந்தார். மீண்டும் 1983 ஆம் ஆண்டு, டாக்டர்.எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் ஆகியோருடன் இலங்கைக்குச் சென்று பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

தொ.மு.சி.ரகுநாதன் தமது இல்லத்தில் மிகப் பெரும் நூலகத்தை உருவாக்கினார்.  தமது இறுதிக் காலத்தில், பாரதி மீதுள்ள பற்றால், எட்டையபுரம் பாரதி நூலகத்துக்கு  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல்களை வழங்கினார்.

Òஎந்த ஒரு எழுத்தாளனுக்கும் ஒரு தத்துவ தரிசனம் இருக்கத்தான் வேண்டும். அதனைத் தேர்ந்து, தெளிந்து உருவாக்கிக் கொள்வது அவனது பொறுப்பு. எந்தவொரு தத்துவமும் ஒரு வழிகாட்டிதான்; விலங்கல்ல. தத்துவத்தின் மீது குருட்டு பக்தி கொண்டு, அதனை விலங்காகத் தரித்துக் கொண்டு, அதற்கு அடிமை யாவதைப் போன்ற கொடுமை வேறு கிடையாது.  அவ்வாறு அடிமைப்பட்டுவிட்டால், பிறகு வாய்ப் பாட்டுச் சூத்திரங்களை வைத்துக் கொண்டு, எதையும் அளந்து பார்த்து ஏமாறும் நிலைதான் ஏற்படும். அப்போது அந்தத் தத்துவம் படைப்பாளிக்குத் தேக்க நிலையைத்தான் உண்டாக்கும்.  மாறாக, அவன் அதைக் காலில் கட்டிய விலங்காக்கிக் கொள்ளாமல், கடலில் மிதக்கும் கட்டுமரமாக மாற்றிக் கொண்டு விட்டால், காற்றின் திசையறிந்து அதைச் செலுத்தவும் கற்றுக் கொண்டு விட்டால், பின்னர், அது அவனுக்குப்  பேராக்கத்தை அளிக்கும்.  எந்தக் கடலிலும் அவனால் முன்னேறிச் செல்ல முடியும்Ó எனத் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டு இலக்கியவாதி எப்படி செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் ரகுநாதன்.

ரகுநாதன் மொழிபெயர்த்த ‘தாய்’ நாவலுக்கு 1965 ஆம் ஆண்டு ‘ சோவியத் நாடு நேரு பரிசு’ வழங்கியது.

‘பாரதி - காலமும் கருத்தும்’ என்னும் ஆய்வு நூலுக்கு 1983 ஆம் ஆண்டு ‘இலக்கியச் சிந்தனை பரிசு’ வழங்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டு  அதே நூலுக்காக ‘சாகித்திய அகாதெமி’ விருது அளிக்கப்பட்டது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் படைப் பிலக்கியத்துக்கும் திறனாய்வுக்கும் ரகுநாதன் ஆற்றிய பணிக்காக ‘தமிழன்னை விருது’ வழங்கிச் சிறப்பித்தது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ரகுநாதனின் மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி பாராட்டுப் பத்திரமும், தலைசிறந்த எழுத்தாளருக்கான பாராட்டுக் கேடயமும் வழங்கியது.

தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகப் பாடுபட்ட ரகுநாதன் 31-12-2001 அன்று இயற்கை எய்தினார்.

Òரகுநாதனின் படைப்புகளே அவருக்கான சரியான நினைவுச் சின்னங்கள்Ó என அவரது படைப்புகள் குறித்து புகழ்ந்துரைத்துள்ளார் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன்.

Òலட்சிய தாகமும், வேகமும், அன்பும், அடக்கமும், உலகளாவிய பார்வையும், புரட்சிகர சமுதாய மாற்றங்களில் நாட்டமும், புதிய உலகு, புதிய மனிதன், புதிய கலாச்சாரம் இவற்றைத் தமிழகத்தில் காண வேண்டும் என்னும் ஆர்வமும் நிரம்பியவர் ரகுநாதன்Ó என இலக்கிய விமர்சகர் தி.க.சி. பதிவு செய்துள்ளார்.

Òஇலக்கியப் போலிகளையும், சனாதனிகளையும், நசிவிலக்கியங்களையும் ரகுநாதன் சாடும் பொழுது, அவரது இலக்கிய உணர்ச்சியையும், தர்மாவேசத்தையும் தரிசிக்கலாம். அண்மைக்காலங்களில் அத்தகைய எழுத்துக்கள் மிகக்குறைவே. எனினும், சக்தி, சாந்தி, தாமரை முதலிய ஏடுகளில் காலத்துக்குக் காலம் அவர் எழுதியிருக்கும் மதிப்புரைகளையும், விமர்சனங்களையும் படித்தவர்களுக்கு, அவரின் அப்பழுக்கற்ற ஆளுமையும், அபாரமான இலக்கிய ஆற்றலும் நன்கு பரிச்சயமான வையாய்  இருக்கும்Ó என ஈழத்து மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி. க.கைலாசபதி மதிப்பீடு செய்துள்ளார்.

Òபெரும்புவி இதனில் வறுமையும் துயரும்

பிணிகளும் போரும் இருந்திடும் வரையில்

திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்- இங்கு

தீமைகள் யாவும் வேரற அறுப்பேன்Ó.

என தொ.மு.சி. ரகுநாதன் தமது இலட்சியத் தாகத்தைப் பாடிச் சென்றுள்ளார்.

Pin It