உ.வே.சாமிநாதையர் ஆக்கங்கள் அச்சுருவான அச்சகங்கள்

(1878 திருநெல்வேலி, முத்தமிழாகர அச்சுக்கூடம், 1883 சென்னை, மிமோரியல் அச்சுக்கூடம்)

invitationஇளம் வயதில் செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் பாடம் கேட்டிருந்த காலத்தில் உ.வே. சாமிநாதையருக்கு அச்சுநூல்கள் மீதிருந்த பார்வை என்ன என்பதைக் கீழ்வரும் குறிப்புப் புலப்படுத்துகின்றது.

அவ்வப்போது படித்து வந்த நூல்களில் திருக்குறளும் ஒன்று. திருக்குறளை எப்போதும் கையில் வைத்துப் படிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. ரெட்டியாரிடம் இருந்த புஸ்தகத்தைப் படித்து வந்தேன். எனக்குச் சொந்தமாக ஒரு புஸ்தகமிருந்தால் எங்கே போனாலும் வைத்துக்கொண்டு படிக்கலாம் என்று நினைத்தேன். அச்சுப் புஸ்தகத்தைத் தேடிச் சென்று பணம் கொடுத்து வாங்க இயலாதவனாக இருந்தேன் (என் சரித்திரம், ப. 148).

அச்சு நூலைத் தேடிச் சென்று பணம் கொடுத்து வாங்கிப் படிக்க முடியாத நிலையிலிருந்த சாமிநாதையர்தான் பின்னாளில் பழந்தமிழ் நூல்கள் பலவற்றை ஊர் ஊராகத் தேடிச்சென்று பருழைப்பைச் செலுத்தி அச்சிட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்தார் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

திருவாவடுதுறை மடத்தில் வித்துவானாக இருந்த காலத்தில்தான் சாமிநாதையருக்கு அச்சகத்துடனான தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

திருவாவடுதுறை மடத்தில் வித்துவானாக இருந்து விளங்கிய ஒரு காலப்பகுதியில் மடத்தின் ஆதீன கர்த்தராக இருந்து விளங்கிய சுப்பிரமணிய தேசிகர் பல ஊர்களுக்கு யாத்திரை செல்லும் சூழல் ஏற்பட்டிருந்தது. யாத்திரையின் இடையில் ஒருநாள், பாண்டி நாட்டை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களின் அதிகாரியாக இருந்த செவந்தியப்ப நாயக்கரென்பவரால் திருவாவடுதுறை மடத்திற்குத் தானமாக விடப்பட்ட கிராமங்கள் எட்டுள் ஒன்றான செவந்திபுரத்திற்கு வந்து, அங்குள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான மடத்தில் தேசிகர் தங்கியிருக்கிறார்.

செவந்திபுர மடத்தில் அப்போது வித்துவானாக இருந்து விளங்கிய வேணுவனலிங்கத் தம்பிரான் என்பவர் ‘சுப்பிரமணிய தேசிக விலாசம்’ என்ற பெயரில் மடாலயம் ஒன்றை அப்போது அங்குக் கட்டி முடித்திருந்தார்.

வேணுவனலிங்கத் தம்பிரான், அவ்விலாசத்தில் சுப்பிரமணிய தேசிகருடைய திருவுருவம் ஒன்றை அமைத்துப் பிரதிஷ்டை செய்து பூசை செய்யும்படி ஏற்பாடும் செய்திருந்தார்.

செவந்திபுரத்திற்கு வந்திருந்த தேசிகர் அங்குக் கட்டிமுடிக்கப்பட்டிருந்த ‘சுப்பிரமணிய தேசிக விலாச’த்தைத் திறந்துவைத்துச் சிறப்பித்திருக்கிறார். சுப்பிரமணிய தேசிகர் அங்கு வருகைபுரிவதையட்டி மடாலயத்தைச் சிறப்பித்து வித்துவான்கள் பலர் செய்யுட்களை இயற்றியிருந்தனர்.

அச்செய்யுட்கள் அனைத்தும் அங்கு வந்திருந்த சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. தேசிகருடன் யாத்திரை வந்திருந்த சாமிநாதையர்தான் செய்யுட்களையெல்லாம் தேசிகர் முன்னிலையில் படித்து அரங்கேற்றியிருக்கிறார்.

ஆறுமுக சுவாமிகள், சாமிநாதையர் இருவரும் இணைந்து அந்தச் செய்யுட்களையெல்லாம் தொகுத்துத் திருநெல்வேலி முத்தமிழாகர அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றனர். ஆதீனம் பெரியகாறுபாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு எனும் பெயரில் அந்நூல் 1878இல் வெளியிடப்பட்டது.

சாமிநாதையருக்கு அப்போது வயது 23. அது முதல் தம் இறுதிக்காலம் வரையில் பல அச்சகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் சாமிநாதையர். முதல் அச்சுப் பதிப்பு அனுபவம் குறித்துப் பின்னாளில் இப்படி எழுதி மகிழ்ந்தார் உ.வே. சாமிநாதையர்.

‘சுப்பிரமணிய தேசிக விலாசம்’ எனும் மடாலயத்தைப் பற்றி பலர் பாடிய பாடல்களையெல்லாம் அச்சிட வேண்டுமென்று வேணுவனலிங்கத் தம்பிரான் விரும்பினார். அப்படியே செய்ய ஏற்பாடு நடைபெற்றபோது திருவாவடுதுறையில் உள்ள வேணுவனலிங்க விலாசத்தைச் சிறப்பித்த செய்யுட்களையும் சேர்த்து வெளியிடலாமென்று பலர் கூறினர்.

அவ்வாறே அவ்விரண்டுவகைப் பாடல்களும் வேறு சில பாடல்களும் சேர்த்துத் திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக் கூடத்தில் ஒரு புஸ்தகமாகப் பதிப்பிக்க பெற்றன. அந்தப் புஸ்தகத்தைப் ஒழுங்குபடுத்தி எழுதிக் கொடுத்தவன் நானே. பிற்காலத்தில் எவ்வளவோ புஸ்தகங்களைப் பரிசோதித்து வெளியிடும் வேலையில் ஈடுபட்ட நான், முதன் முதலாகப் பதிப்பித்தது அந்தப் பாடல் திரட்டே. அக்காலத்தில் பதிப்புமுறை சிறிதும் எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் பரிசோதித்து வெளியிட்ட முதல் புஸ்தகமென்ற நினைவினால் அதனிடத்தில் எனக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வருகிறது... அந்தப் புஸ்தகம் அச்சிட்டு வந்த காலத்தில் நானும் பிறரும் அதை வைத்து அழகு பார்த்துக் கொண்டேயிருந்தோம்.

சம்பிரதாயத்திற்காக ஆறுமுகத் தம்பிரான் பெயரையும் சேர்த்துப் பதிப்பித்திருந்தாலும் அவர் என்னிடமே ஒப்பித்துவிட்டமையால் நான்தான் முற்றும் கவனித்துப் பார்த்தவன். ஆதலின் எனக்கு அப்புஸ்தகத்தைப் பார்த்தபோதெல்லாம் ஆனந்தம் பொங்கியது (என் சரித்திரம், பக். 449-451).

வேணுவனலிங்க விலாசச் சிறப்பு அச்சுப் பதிப்பு வெளிவந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சாமிநாதையருக்குக் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

தியாகராச செட்டியாரால் ஏற்பட்ட பணி வாய்ப்புடன், சேலம் இராமசாமி முதலியாரால் சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்கும் வாய்ப்பும் சாமிநாதையருக்குக் கிடைக்கப்பெற்றது.

சீவகசிந்தாமணி பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருக்குடந்தைப் புராணத்தைத் தியாகராச செட்டியாருடன் இணைந்து அச்சிட்டு வெளியிடும் பணியைச் சாமிநாதையர் செய்திருக்கிறார். 1883இல் செட்டியாருடன் இணைந்து திருக்குடந்தைப் புராணத்தை அச்சிட்டு வெளியிட்டார்.

சென்னையிலிருந்த மெமோரியல் அச்சுக்கூடத்தில் அந்நூல் அச்சாகியது. அதன் பின்னர், சாமிநாதையரவர்களின் ஏழாண்டுகால உழைப்பின் பலனாக 1887இல் சீவகசிந்தாமணி மூலமும், நச்சினார்க்கினியர் உரையும் அச்சுருவாகி வெளிவந்தது. சென்னையிலிருந்த த. கோவிந்த ஆசாரியாரது திராவிடரத்நாகர அச்சுக்கூடத்தில் சிந்தாமணி அச்சிடப்பட்டது.

இந்த அச்சுக்கூடத்தில் 1888இல் கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது நூலின் முதல் பதிப்பையும், 1889இல் பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் முதல் பதிப்பையும் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.

மிகப் பெரியதும், மிகப் பழமையதுமான சீவகசிந்தாமணியை அச்சிடுவதற்குச் சாமிநாதையர் சந்தித்த சவால்கள் பலவாகும். சிந்தாமணி அச்சுப் பதிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் வேண்டிய பொருள் வசதியுமின்றி, அதைத் திரட்டுவதற்குரிய வழியும் அறியாது சாமிநாதையர் எத்தனைத் துன்பப்பட்டுள்ளார் என்பதை என் சரித்திரத்தில் உள்ள ஒரு குறிப்பு புலப்படுத்துகிறது.

சிந்தாமணியைச் சேர்ந்த முகவுரை, கதைச் சுருக்கம் முதலியன அச்சிட்டு நிறைவேறின. அச்சுக்கூடத்தில் புத்தகத்தைப் பைண்டு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு இல்லை. விசாரித்ததில் முருகேசமுதலியார் என்பவர் திறமை உடையவரென்றும் நாணயமாக நடப்பவரென்றும் தெரிந்தமையால் அச்சிட்ட பாரங்களையெல்லாம் அவரிடம் அச்சுக்கூடத்தாரைக் கொண்டு ஒப்பிக்க நினைத்தேன்.

அச்சுக்கூடத்திற்கு அப்போது பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்துவிட்டே பாரங்களைப் பைண்டரிடம் ஒப்பிக்கச் செய்வதுதான் நலம் என்று தெரிந்தது. ஆனால், கையிற் பணமில்லாமையால் திருவல்லிக்கேணி சென்று, என் நண்பரும் நார்ட்டன் துரை குமாஸ்தாவுமான விசுவநாத சாஸ்திரிகளைக் கண்டு ரூபாய் முந்நூறு கடனாக வேண்டுமென்றும் சில வாரங்களில் வட்டியுடன் செலுத்தி விடுவேன் என்றும் விஷயத்தைச் சொல்லித் தெரிவித்தேன்.

அவர் அங்ஙனமே அந்தத் தொகையைக் கொடுத்து உதவினார். உடனே அச்சுக்கூடத் தலைவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன். அவர் அச்சிட்ட பாரங்களையெல்லாம் பைண்டரிடம் ஒப்பித்து விட்டார்... அன்று சனிக்கிழமையாதலால் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாள் தரிசனம் செய்து கொண்டு ஜாகைக்குப்போய் மனக்கவலையின்றித் துயின்றேன்... அச்சிட்ட சிந்தாமணிப்பிரதிகள் ஐந்நூறு. அவற்றிலும் ஏறக்குறைய நூறு பிரதிகள் அச்சுக்கூடத்தாருடைய கவனக்குறைவால் வீணாகிவிட்டன... மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பைண்டர் மாதிரிக்காக ஒரு பிரதியைப் பைண்டு செய்து கொடுத்தார்.

அதைக் கையில் எடுத்துக்கொண்டு இராமசுவாமி முதலியாரிடம் சென்றேன்... அவரிடம் புஸ்தகத்தைக் காட்டினபோது அவர் அடைந்த ஆனந்தம் இவ்வளவென்று சொல்லி முடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு நிறைவேற்றி விட்டீர்கள். இனி, சிலப்பதிகாரம் முதலியவற்றையும் இப்படியே அச்சிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று சொன்னார்... “எல்லாம் செய்யலாம், எல்லாவற்றிற்கும் பணம் வேண்டியிருக்கிறதே, அதற்கு நான் எங்கே போவேன்! நேற்று நான் விசுவநாத சாஸ்திரிகளிடம் முந்நூறு ரூபாய் கடன் வாங்கிச் சிந்தாமணிப் பிரதிகளை அச்சுக்கூடத்திலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது” என்று முதல் நாள் நிகழ்ச்சிகளை விரிவாகச் சொன்னேன்....முதலியார் மிகவும் வருந்தி, “கையப்பமிட்ட கனவான்களிடம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கடனுக்கு ஈடுசெய்து விடலாமே” என்றார் (என் சரித்திரம், பக். 614-615).

இராமசாமி முதலியார், பூண்டி அரங்கநாத முதலியாரைச் சென்று சந்தியுங்கள்; அவர் வேண்டிய வசதியைச் செய்து தருவார் என்று கூறவே, பைண்டான ஒரு சிந்தாமணி அச்சுப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு முதலியாரைச் சந்திக்கச் சாமிநாதையர் சென்றிருக்கிறார்.

வேறொரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்த அரங்கநாத முதலியார் இன்று சந்திக்க நேரமில்லை; நாளை வந்தால் சந்திக்கலாம் என்று சொல்லிவிடவே, சந்திக்கமுடியாத வேதனையோடு திரும்பிவந்து, நடந்தவற்றை இராமசாமி முதலியாரிடம் விவரித்துச் சொல்லிவிட்டு கும்பகோணம் சென்றடைந்திருக்கிறார்.

சாமிநாதையர் கும்பகோணம் சென்றடைந்த ஒரு வாரத்துக்குள் அச்சான சிந்தாமணி பிரதிகள் அவருக்கு சென்று சேர்ந்துள்ளன.

சாமிநாதையரின் வரலாற்றையும், அவர் அச்சிட்டு வெளியிட்ட நூல்களின் முகவுரைகளையும், எழுதி வெளியிட்ட கட்டுரைகளையும் படித்தாராய்ந்து பார்க்கையில் அச்சகத்தோடு அவருக்கிருந்த தொடர்புகள் புலப்படுகின்றன.

ஒருசமயம், திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர், சாமிநாதையர் நூல்களை அச்சிடுவதற்குப் பல அச்சகங்களுக்குச் சென்று தொல்லைப்பட்டு வருவதை அறிந்து சாமிநாதையருக்கு அச்சக வகையில் ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று கருதியிருக்கிறார்.

ஒருமுறை சாமிநாதையர் திருவாவடுதுறைக்குச் சென்றிருந்தபோது சொந்தமாக அச்சகம் வைத்துக்கொள்ள உதவியாக மடத்திலிருந்தும் வேறு நண்பர்களிடத்திலிருந்தும் சேர்த்து ரூபாய் ஐந்தாயிரத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். தேசிகரின் அன்பை உணர்ந்துகொண்ட சாமிநாதையர் இவ்வாறு பதில் அளித்துவிட்டு வந்திருக்கிறார்.

“சந்நிதானத்திற்கு என்னிடம் இருக்கும் பேரன்பை நன்றாக உணர்கிறேன். நான் படும் தொல்லைகளை இந்த அளவு தெரிந்து கொண்டவர்கள் மிகக் குறைவு. அச்சகம் இருந்தால் விரைவாக நூல்களை அச்சிடலாம் என்பது உண்மைதான். ஆனால் இன்று புத்தகத்திற்கு வேண்டிய காகிதம், பைண்டுச் சாதனங்கள் ஆகியவற்றை மட்டும் வாங்கித் தருவதற்குத்தான் நான் கவலைப்பட வேண்டியதாக இருக்கிறது. ஓர் அச்சகத்தை வைத்து நடத்த வேண்டிய வேலையும் எனக்கு ஏற்பட்டுவிடுமானால் ஆட்களை வைத்து சம்பளம் கொடுத்து நிர்வாகம் செய்ய வேண்டிய பொறுப்பும் ஏற்பட்டுவிடுமே! அப்படியானால் நூல் ஆராய்ச்சிக்கு நேரம் கிடைக்குமா என்று அஞ்சுகிறேன்.

சந்நிதானம் சொல்வதை நான் மறுப்பதாக எண்ணக்கூடாது. என்னுடைய வேலை சிரமமின்றி, வேகமாக நடக்க வேண்டுமென்ற திருவுள்ளத்துடன்தான் சந்நிதானம் இப்படி உத்தரவிடுகிறது என்பதை அறிந்து கொண்டுள்ளேன். ஆனால் அச்சகத்தால் உண்டாகின்ற தொல்லைகளைப் பற்றியும் சந்நிதானம் சிந்திக்கவேண்டும். எனக்கு அநுபவத்தில் அது நன்றாகத் தெரியும்.

வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்குவது எளிய காரியம் அன்று. ஆகவே இப்போது உள்ளபடியே நடந்துவரச் சந்நிதானம் சம்மதிக்க வேண்டும்‘’ (என் ஆசிரியப்பிரான், ப. 82, 83).

சாமிநாதையர் வாழ்நாளின் இறுதியாக 1941ஆம் ஆண்டு எட்டுத்தொகையில் நான்காவதாகிய பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் மூன்றாம் பதிப்பைச் சென்னை, லிபர்ட்டி அச்சுக்கூடத்தில் அச்சிட்டிருக்கிறார்.

அதே ஆண்டு எல்லப்ப நாவலர் இயற்றிய திருவாரூர்க் கோவை, பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய திருமாலிருஞ்சோலைமலை, அழகர் கிள்ளைவிடுதூது ஆகிய இரு நூல்களைக் கேஸரி அச்சுக்கூடத்தில் அச்சிட்டிருக்கிறார்.

சாமிநாதையருக்கும் அச்சகத்துக்குமான தொடர்பு 1878ஆம் ஆண்டு தொடங்கி 1941ஆம் ஆண்டு வரையில் இருந்திருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக அமையும் பெரும் காலப்பரப்பில் இருபதுக்கும் மேற்பட்ட அச்சகத்தோடு சாமிநாதையர் தொடர்புற்றிருந்திருக்கிறார்.

சாமிநாதையர் ஆக்கங்கள் அச்சகவாரியாக அச்சுருவான நூல்களின் விவரங்கள் இங்குத் தரப்படுகின்றன.

1. கேஸ(ச)ரி அச்சுக்கூடம் (சென்னை)

1. உதயணன் சரித்திரச்சுருக்கம், இரண்டாம் பதிப்பு, 1926
2. சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், அரும்பதவுரையும், மூன்றாம் பதிப்பு, 1927
3. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், இரண்டாம் பதிப்பு, 1927
4. பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு மூலமும் உரையும், மூன்றாம் பதிப்பு, 1927
5. திருவாரூர்த் தியாகராசலீலை, இரண்டாம் பதிப்பு, 1928
6. தக்கயாகப்பரணி மூலமும் உரையும், 1930
7. சிலப்பதிகாரம் ஊர்க்காண்காதை, அடைக்கலக்காதை, 1930
8. ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள், முதல் பதிப்பு, 1939
9. மணிமேகலை மூலமும் உ. வே. சா. அரும்பதவுரையும், மூன்றாம் பதிப்பு, 1931
10. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், மூன்றாம் பதிப்பு, 1931
11. கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது, இரண்டாம் பதிப்பு, 1931
12. பத்துப்பாட்டு மூலம், முதல் பதிப்பு, 1931
13. மதுரைச் சொக்கநாதருலா, முதல் பதிப்பு, 1931
14. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், 1932
15. மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடுதூது, இரண்டாம் பதிப்பு, 1932
16. ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம், முதல் பாகம், முதல் பதிப்பு, 1933
17. ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம், இரண்டாம் பாகம், முதல் பதிப்பு, 1934
18. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், நான்காம் பதிப்பு, 1934
19. விளத்தொட்டிப் புராணம், முதல் பதிப்பு, 1934
20. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும், இரண்டாம் பதிப்பு, 1935
21. பெருங்கதை மூலமும் உ.வே.சா. குறிப்புரையும், இரண்டாம் பதிப்பு, 1935
22. பெருங்கதை இலாவாண காண்டம், 1935
23. ஆற்றூர்ப்புராணம், முதல் பதிப்பு, 1935
24. கோபாலகிருஷ்ணபாரதியார், முதல் பதிப்பு, 1936
25. கனம் கிருஷ்ணையர், முதல் பதிப்பு, 1936
26. மகா வைத்தியநாதையர், முதல் பதிப்பு, 1936
27. புதியதும் பழையதும், முதல் பதிப்பு, 1936
28. நான் கண்டதும் கேட்டதும், முதல் பதிப்பு, 1936
29. குறுந்தொகை மூலமும் உ. வே. சா. உரையும், முதல் பதிப்பு, 1937
30. நான் கண்டதும் கேட்டதும், இரண்டாம் பதிப்பு, 1938
31. திருமாலிருஞ்சோலைமலை அழகர் கிள்ளைவிடுதூது, முதல் பதிப்பு, 1938
32. புதியதும் பழையதும், இரண்டாம் பதிப்பு, 1939
33. திருமாலிருஞ்சோலைமலை அழகர் கிள்ளைவிடுதூது, இரண்டாம் பதிப்பு, 1941
34. திருவாரூர்க் கோவை, முதல் பதிப்பு, 1937; இரண்டாம் பதிப்பு, 1941
35. திருக்கழுக்குன்றத்து உலா, 1938
36. நினைவு மஞ்சரி, முதல் தொகுதி, முதல் பதிப்பு, 1940
37. வில்லைப்புராணம், முதல் பதிப்பு, 1940

2. கமர்ஷியல் அச்சுக்கூடம் (சென்னை)

1. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், இரண்டாம் பதிப்பு, 1918
2. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும், முதல் பதிப்பு, 1918
3. திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், இரண்டாம் பதிப்பு, 1919
4. சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், அரும்பதவுரையும் இரண்டாம் பதிப்பு, 1920
5. பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், இரண்டாம் பதிப்பு, 1920
6. மணிமேகலை மூலமும் உ. வே. சா. அரும்பதவுரையும், இரண்டாம் பதிப்பு, 1921
7. சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும், மூன்றாம் பதிப்பு, 1922
8. புறநானூறு மூலமும் பழைய உரையும், இரண்டாம் பதிப்பு, 1923
9. திருப்பூவணநாதருலா, இரண்டாம் பதிப்பு, 1923
10. உதயணன் சரித்திரச்சுருக்கம், முதல் பதிப்பு, 1924
11. பெருங்கதை மூலமும் உ. வே.சா. குறிப்புரையும், முதல் பதிப்பு, 1924
12. நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயருரையும், முதல் பதிப்பு, 1925
13. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், மூன்றாம் பதிப்பு, 1925
14. திருக்காளத்தி நாதருலா, இரண்டாம் பதிப்பு, 1925
15. தேவையுலா, இரண்டாம் பதிப்பு, 1925
16. பௌத்தமதத்துள் மும்மணிகள் என்று வழங்குகிற புத்தசரித்திரம், பௌத்ததருமம், பௌத்தசங்கம், ஐந்தாம் பதிப்பு, 1925; ஆறாம் பதிப்பு, 1926
17. ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, இரண்டாம் பதிப்பு, 1926
18. திருவாவடுதுறைக்கோவை, இரண்டாம் பதிப்பு, 1926
19. மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடுதூது, முதல் பதிப்பு, 1930
20. திருமயிலைத் திரிபந்தாதி, இரண்டாம் பதிப்பு, 1930

3. லா ஜர்னல் அச்சுக்கூடம் (சென்னை) (இதன் அதிபர் கலைமகள் அதிபர் நாராயணசாமி ஐயர்)

1. ஸ்ரீபத்மகிரிநாதர் தென்றல்விடுதூது, முதல் பதிப்பு, 1932
2. பாசவதைப்பரணி, முதல் பதிப்பு, 1933
3. வலிவலமும்மணிக்கோவை, முதல் பதிப்பு, 1934
4. உதயண குமார காவியம் மூலமும் உ. வே. சா. குறிப்புரையும், முதல் பதிப்பு, 1935
5. நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயருரையும், இரண்டாம் பதிப்பு, 1935
6. புறநானூறு மூலமும் பழைய உரையும், மூன்றாம் பதிப்பு, 1935
7. களக்காட்டுச் சத்தியவாகீசர் இரட்டைமணிமாலை, 1935
8. பழனி இரட்டைமணிமாலை, முதல் பதிப்பு, 1935
9. திருவள்ளுவரும் திருக்குறளும், முதல் பதிப்பு, 1936
10. புறநானூறு மூலம், முதல் பதிப்பு, 1936
11. மான்விடுதூது, முதல் பதிப்பு, 1936
12. திரு இலஞ்சி முருகன் உலா, முதல் பதிப்பு, 1935
13. தமிழ்நெறி விளக்கம் மூலமும் பழைய உரையுடன், முதல் பதிப்பு, 1937
14. திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை, முதல் பதிப்பு, 1938
15. திருமலையாண்டவர் குறவஞ்சி, முதல் பதிப்பு, 1938
16. சிவ சிவ வெண்பா, முதல் பதிப்பு, 1938
17. தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் பாமாலை, முதல் பதிப்பு, 1939
18. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா, முதல் பதிப்பு, 1940
19. வித்துவான் தியாகராச செட்டியார், முதல் பதிப்பு, 1942
20. திருநீலகண்ட நாயனார் சரித்திரமும் இயற்பகை நாயனார் சரித்திரமும், 1944 (உ.வே.சா. மறைவிற்குப் பின்னர் வெளிவந்தவை)

4. வைஜயந்தி அச்சுக்கூடம் (சென்னை, இந்த அச்சுக்கூடம் மவுண்ட் ரோட்டில் இருந்தது)

1. ஐங்குறுநூறு மூலமும் பழையவுரையும், முதல் பதிப்பு, 1903
2. திருவாவடுதுறைக்கோவை, முதல் பதிப்பு, 1903
3. வீரவனப்புராணம், முதல் பதிப்பு, 1903
4. சீகாழிக்கோவை, முதல் பதிப்பு, 1903
5. பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும், 1903
6. திருக்காளத்தி நாதருலா, முதல் பதிப்பு, 1904
7. பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், முதல் பதிப்பு, 1904
8. ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, முதல் பதிப்பு, 1910
9. புறநானூறு (101 125) மூலமும் பழைய உரையும், 1911
10. திருக்காளத்திப்புராணம், முதல் பதிப்பு, 1912
11. பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும், 1912
12. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், இரண்டாம் பதிப்பு, 1915
13. நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும், முதல் பதிப்பு, 1918

5. வெ. நா. ஜூபிலி அச்சுக்கூடம் (சென்னை) (வெள்ளைய நாடார் ஜூபிலி அச்சுக்கூடம் என்பதே வெ.நா. ஜூபிலி அச்சுக்கூடம் ஆகும்; தவசிமுத்து நாடார் இதன் அதிபர்)

1. சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், முதல் பதிப்பு, 1892
2. சிலப்பதிகார அரும்பதவுரை, 1892
3. திருப்பெருந்துறைப் புராணம், முதல் பதிப்பு, 1892
4. புறநானூறு மூலமும் பழைய உரையும், முதல் பதிப்பு, 1894
5. புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், முதல் பதிப்பு, 1895
6. மணிமேகலை மூலமும் உ. வே. சா. அரும்பதவுரையும், முதல் பதிப்பு, 1898
7. மணிமேகலைப் பதிப்பைச் சார்ந்த புத்தசரித்திரம், பௌத்ததருமம், பௌத்தசங்கம், முதல் பதிப்பு, 1898
8. மணிமேகலைப் பதிப்பைச் சார்ந்த மணிமேகலைக் கதைச் சுருக்கம், முதல் பதிப்பு, 1898

6. லிபர்ட்டி அச்சுக்கூடம் (சென்னை)

1. ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம் முதற்பாகம், இரண்டாம் பாகம், இரண்டாம் பதிப்பு, 1938
2. திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, இரண்டாம் பதிப்பு, 1939
3. தணிகாசலப் புராணம், 1939
4. திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், மூன்றாம் பதிப்பு, 1940
5. பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், மூன்றாம் பதிப்பு, 1941

7. தாம்சன் அச்சுக்கூடம் (சென்னை)

1. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், இரண்டாம் பதிப்பு, 1934

8. கார்டியன் அச்சுக்கூடம் (சென்னை)

1. திருவள்ளுவரும் திருக்குறளும், முதல் பதிப்பு, 1936
2. நல்லுரைக்கோவை, முதல் பதிப்பு, பாகம் 1. 1937; பாகம் 2. 1937; பாகம் 3. 1938; பாகம் 4. 1939

9. திராவிடரத்நாகர அச்சுக்கூடம் (சென்னை) (த. கோவிந்தாசாரியார் இதன் அதிபர்; அச்சுக்கூடம் இருந்த இடம் சூளை, அவதானம் பாப்பையர் வீதி)

1. கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது, முதல் பதிப்பு, 1888
2. சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும், முதல் பதிப்பு, 1887
3. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், முதல் பதிப்பு, 1889

10. ப்ரெஸிடென்ஸி/ பிரஸிடென்ஸி அச்சுக்கூடம் (சென்னை)

1. சூரைமாநகர்ப் புராணம், முதல் பதிப்பு, 1904
2. திருப்பூவணநாதருலா, முதல் பதிப்பு, 1904
3. திருவாரூர்த் தியாகராசலீலை, முதல் பதிப்பு, 1905
4. புறப்பொருள் வெண்பாமாலை (முதல் நான்கு படலங்கள்) மூலமும் உரையும், 1905
5. திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், முதல் பதிப்பு, 1906
6. பத்துப்பாட்டு பட்டினப்பாலை மூலமும் உரையும், 1906
7. சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருரையும், இரண்டாம் பதிப்பு, 1907
8. தனியூர்ப்புராணம், முதல் பதிப்பு, 1907
9. மண்ணிப்படிக்கரைப் புராணம், முதல் பதிப்பு, 1907
10. சிலப்பதிகாரம் கொலைக்களக் காதை, 1907
11. புறநானூறு மூலமும் உரையும் (200-266 பாடல்கள்), 1907
12. பத்துப்பாட்டு - பொருநராற்றுப்படை மூலமும் உரையும், 1907
13. திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், முதல் பதிப்பு, 1908
14. புறப்பொருள் வெண்பாமாலை (வாகை, பாடாண்) மூலமும் உரையும், 1903
15. பத்துப்பாட்டு - சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும், 1909
16. புறநானூறு (51 - 100 பாட்டுக்கள்) மூலமும் உரையும், 1909
17. பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு மூலமும் உரையும், இரண்டாம் பதிப்பு, 1910
18. திருப்பெருந்துறைப்புராணம், இரண்டாம் பதிப்பு, 1913

11. கணேச அச்சுக்கூடம் (சென்னை)

1. ஐங்குறுநூறு மூலமும் பழையவுரையும், இரண்டாம் பதிப்பு, 1920

12. ஆனந்தா அச்சுக்கூடம் (கிஸீணீஸீபீணீ றிக்ஷீமீss) (சென்னை) (பி. மாதவராவ் இதன் அதிபர்)

1. சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும், முதல் பதிப்பு, 1929

13. ஜீவரக்ஷ£மிர்த அச்சுக்கூடம் (சென்னை)

1. ஸ்ரீ மத்தியார்ச்சுன மான்மியம், முதல் பதிப்பு, 1885

14. கபீர் அச்சுக்கூடம் (சென்னை)

1. புகையிலைவிடு தூது, 1939
2. நினைவு மஞ்சரி, இரண்டாம் தொகுதி, முதல் பதிப்பு, 1942
3. திருக்கழுக்குன்றக் கோவை, முதல் பதிப்பு, 1943 (உ.வே.சா. மறைவிற்குப் பின்னர் வெளிவந்தது)

15. தமிழ்ச்சங்க முத்திராசாலை (மதுரை)

1. தேவையுலா, முதல் பதிப்பு, 1911
2. திருத்தணிகைத் திருவிருத்தம், முதல் பதிப்பு, 1914
3. திருவாரூருலா, முதல் பதிப்பு, 1905, இரண்டாம் பதிப்பு, 1910, மூன்றாம் பதிப்பு, 1925
4. கடம்பர்கோயில் உலா, 1932
5. மதுரை மும்மணிக்கோவை, முதல் பதிப்பு, 1932
6. சங்கர நயினார் கோயில் அந்தாதி, 1934
7. கலைசைக்கோவை, 1935
8. சிராமலைக்கோவை, 1937
9. பழனிப்பிள்ளைத்தமிழ், 1937

16. சிவநேசன் அச்சியந்திரசாலை (பலவான்குடி)

1. திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, முதல் பதிப்பு, 1933
2. திருமயிலை யமக அந்தாதி, 1936
3. சங்கரநயினார் கோயிற் சங்கரலிங்க உலா, 1933
4. பழமலைக்கோவை, முதல் பதிப்பு, 1935

17. லார்ட் ரிப்பன் அச்சுக்கூடம் (கும்பகோணம்)

1. திருமயிலைத் திரிபந்தாதி, 1888

18. தொண்டை மண்டல அச்சியந்திரசாலை (சென்னை)

1. திருச்சிற்றம்பல வெண்பாவந்தாதி, திருவாரூர் பாதி திருவொற்றியூர் வெண்பாவந்தாதி, திருவாரூர் மருந்து வெண்பாமாலை, 1888

19. எஸ். பி. பிரஸ் (விருதுநகர்)

1. திருவரங்கச் சிலேடை வெண்பா, முதல் பதிப்பு, 1903

20. முத்தமிழாகர அச்சுக்கூடம் (திருநெல்வேலி)

1. சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, 1878

21. மெமோரியல் அச்சுக்கூடம் (சென்னை) சூளை சோமசுந்தர நாய்கர் இதன் அதிபர்

1. திருக்குடந்தைப் புராணம், 1883
2. சிலப்பதிகாரம் நாடுகாண்காதை மூலமும் உரையும், 1894
3. சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்தகாதை, 1897

22. லாங்மன்ஸ், க்ரீன் அண்டு கம்பெனி (சென்னை)

1. செய்யுள் வாசகத் திரட்டு, 1937

23. ஸ்ரீவித்யா அச்சுக்கூடம் (கும்பகோணம்)

1. பத்துப்பாட்டுப் முல்லைப்பாட்டு மூலமும் உரையும், 1903

24. திருப்பதி தேவஸ்தான அச்சுக்கூடம் (திருமலை)

1. செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதம், முதல் பாகம் (முதற்பாகம் முதல் ஒன்பது ஸ்கந்தங்கள்)1949 (உ. வே.சா. மறைவிற்குப் பின்னர் வெளிவந்தது)
2. செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதம், இரண்டாம் பாகம் (10, 11, 12, ஸ்கந்தங்கள்) 1953 (உ. வே.சா. மறைவிற்குப் பின்னர் வெளிவந்தது)

துணைநின்ற நூல்கள்

1. சாமிநாதையர், உ.வே.சா 2008 (ஏழாம் பதிப்பு). என் சரித்திரம். சென்னை: மகாமகோபாத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
2. ஜகந்நாதன், கி.வா. 1983, என் ஆசிரியப்பிரான், சென்னை: மகாமகோபாத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம்.
3. உ.வே. சாமிநாதையரின் ஆக்கங்கள் (1878 1953)

- முனைவர் இரா. வெங்கடேசன்