பெ. சென்றாயப்பெருமாள் எழுதிய “...ன்னா செத்த பாம்பு கூட கொத்த வருமாம் - ஒரு ஆட்டக்கலைஞனின் பயணம்” எனும் தன் வரலாறு ஓர் அருந்ததிய நாட்டுப்புற ஆட்டக் கலைஞனின் வாழ்வைப் பதிவு செய்துள்ளது.

na setha pambukuda kotha varumamமதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சூலப்புரம் எனும் மலையடிவாரக் கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர் சென்றாயப்பெருமாள். தாத்தா கந்தன் உட்பட பலரும் நாட்டுப்புறக் கலைஞர்கள். தந்தை பெருமாள் நாதஸ்வர, பெண் வேடக் கலைஞர். அண்ணன்கள் மகாலிங்கம், பிலாவடி, பாண்டி ஆகிய எல்லோரும் நாட்டுப்புற ஆட்ட, நடிப்புக் கலைஞர்களே.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அருந்ததியக் குழுவினர் இவர்கள். தேவர், நாயக்கர், நாடார் போன்ற இடைநிலைச் சாதிகளும் பள்ளர், பறையர் போன்ற அடித்தளச் சாதிகளும் ஆதிக்கம் செலுத்தும் ஒடுக்கப்பட்டவர்களாக இவர்கள் வாழ்கின்றனர். சிறு சிறு வேளாண் வேலைகள் தவிர்த்து, நாட்டுப்புறக் கலைஞர்களாக இவர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளனர்.

ஒரு காலத்தில் குறவன் - குறத்தி ஆட்டம் என வழங்கப்பட்ட நிகழ்த்துக்கலை, குறிப்பிட்ட பிரிவினரின் ‘சாதிச் சுட்டல்’ எதிர்ப்பு காரணமாக சட்டரீதியாகவும் தடை செய்யப்படுகிறது. அதன் மருவிய பெயராக ‘ராஜா – ராணி’ ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது. தென் தமிழ்நாட்டில் திருவிழாக்களில் சிறிய அளவில் இந்நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன. பெருமளவு இறப்பு - துக்க வீடுகளில் ‘மட்டை வேலை’யாக இந்த நிகழ்த்துதல் நடைபெறுகிறது. இரவு, பகல் பாராது தொடர்ச்சியாக நடத்த வேண்டும். பயணம் செல்லுதல், உணவு, வேடமிடுதல் போன்றவற்றில் எவ்வித வசதியும் இன்றி சாதி இழிவும் ஆதிக்கத்தனங்களும் நடந்தேறுகின்றன.

சென்றாயன் குடும்பச்சூழலின் காரணமாக சிறு வயதிலேயே ஆட்டக்காரராகி விடுகிறார். 1991 - 1992இல் தான் ஏழாவது படிக்கும் போது தன் சுற்றத்துச் சிறுவர்களுடன் தன் தந்தையிடம் ஆறு மாதங்கள் ஆட்டக்கலையைப் பயின்றதாகச் சொல்கிறார். அப்போது அவருக்கு 11 - 12 வயது.

தொடர்ந்து, அண்ணன்களுடன் ஆட்டக் கலைஞராகச் செல்லத் தொடங்குகிறார். தன் அப்பாவைப் போலவே சிவப்பாகவும், அழகாகவும் இருந்ததால் பெண் வேடமிடத் தொடங்குகிறார். ஊரில் இருந்த இந்து நாடார் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கிறார். பின்னர் எம். கல்லுப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்கிறார். அந்த ஆண்டு சென்றாயன் ஒருவரே ஆறாம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். ஊர்விட்டு ஊர் செல்வது, வசதியற்ற பாதை எல்லாவற்றையும் தாண்டி படிப்பு ஈர்ப்பு தந்தது. 1996ஆம் ஆண்டில் அப்பா மாரடைப்பில் இறந்து போகிறார். படிப்பு தடைபடுகிறது. தான் படித்தப் பள்ளியையும், கூடப்படித்த நண்பர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஒருவித வேட்கை இவருக்கு உருவாகிக்கொண்டே இருக்கிறது. இடை நின்றாலும், படிப்பைத் தொடர ஆசைப்படுகிறார். தான் பயின்ற பள்ளி ஆசிரியர் திரு. பிச்சை என்பவர் ‘எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எட்டாம் வகுப்பு நேரடியாக எழுதலாம்’ என வழிகாட்டுகிறார். அப்போது குமுதம் பத்திரிகையில் சென்னை, ரத்னா கல்வி நிலையம் விளம்பரமும் வருகிறது.

எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்து, படிக்கிறார். தேர்வுக் காலங்களிலும் இரவு வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறுகிறார். என்றாலும், சூழல் ஒத்துழைக்கவில்லை. ஆட்டத்துக்குப் போய்விட்டுப் படிக்கவும் முடியாத நிலை. பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அறிமுக நிலை கோர்சில் தேர்ச்சி பெறுகிறார். பின்னர் பி.ஏ., எம்.ஏ. படித்து, எம்.ஃபில். வரலாறு பேராசிரியர் அய்யனாரிடம் முடிக்கிறார். பின்னர் கலை - வரலாற்றுத் துறையில் டாக்டர் சேதுராமனிடம் முனைவர் பட்டம் சேர்கிறார்.

 1992இல் ஆட்டம் பழகத் தொடங்கி, பெண் வேடக் கலைஞராக உருவாகி 2008இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் சேர்வது வரையான பதினைந்து, பதினாறு வருட வாழ்க்கை அனுபவங்களையே இத் தன்வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்.

தன் ஊரான சூலப்புரம் ஊர் குறித்த தகவல்கள், நிலவியல், சமூகப் பகுப்புகள், படிநிலைகள், தொழில்களைப் பற்றியெல்லாம் போகிற போக்கில் சொல்கிறது நூல். தன் இனக்குழுவினர், முன்னோர்கள், அவர்களின் தொழில்கள், நிகழ் வாழ்வு ஆகியவற்றைப் பற்றிய சித்திரங்களைத் தருகிறது.

ஆட்டக் கலைப் பயில்தல், வேடமிடுதல், வகைமைகள், சடங்கு சார்ந்தவை, தொழில் சார்ந்தவை, கலைப் புழங்குபொருள்கள், போன்ற கலைசார் கூறுகள் ஆங்காங்கே பதிவாகி உள்ளன.

பொருளியல் அடிப்படையிலான வேறுபாடுகளைத் தாண்டி சாதி அடிப்படையிலான தீண்டாமை, ஒதுக்கம், ஒடுக்குதல் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை நுட்பமாக இப்பிரதி எடுத்துக்காட்டுகிறது. ஆதிக்கச் சாதிகள் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதிகளும் சாதி ஏற்றத்தாழ்வை நிகழ்த்துவது சுட்டப்படுகிறது.

ஒடுக்கப்பட்டோர், ராஜா - ராணி வேடமிடுதல், ஆதிக்கச் சாதியினரின் முன் ஆடிப் பாடுதல் என்பவை எதிர்ப்புணர்வின் வடிவங்கள் எனக் கொள்ள முடியுமா என்பது அய்யமே. சாதி ஆதிக்கம், பெண்ணடிமை, முதலாளியம் போன்றவை குறித்த பகடிகள், எள்ளல்கள் கலை நிகழ்வில் இடம்பெறுவதும் நோக்கத்தக்கது.

கலை என்பது ஓரு தொழில் என்ற நிலை உருவாகாமல் இந்த நிலைமைகளில் மாற்றம் வர வாய்ப்பில்லை. சாதி சார்ந்த தொழிலாக, சம்பளமற்ற அல்லது குறைந்த சம்பளத்துடன், உரிய மதிப்பற்ற பொழுதுப்போக்காக நீடிக்கும் வரை மாற்றம் நிகழ முடியாது.

சென்றாயன் தன் தலைமுறையில் படிப்பை இடைவிட்டாலும், மீண்டும் முறை சாராமல் கற்றாவது தன்னை ஓர் ஆய்வாளராக, முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியராக நிலைநிறுத்திக் கொண்டிருப்பதே இந்த தன் வரலாறு சொல்லும் சேதி எனலம். குடிமைச் சமூகத்தில் தொழில் அடிப்படைச் சாதிகள் அவற்றிலிருந்து விடுபடுவதும் இடப்பெயர்வும், உயர்கல்வி, மாற்று வேலை ஆகியனவுமே சாதி விடுதலைக்கானத் தீர்வுகளாக அமையும் என்பதை உணர்த்தி நிற்கிறது.

 நூலின் இறுதிப் பகுதியில் ஓர் ஆய்வாளராகக் கூறும் செய்திகள் நாட்டுப்புறக் கலையியல் சார்ந்தவையாக அமைகின்றன. நூல் முழுவதும் பேச்சு வழக்கும், இடுகுறி சார்ந்த தெலுங்கு வடிவமும் விரவி வருகிறது. நாட்டுப்புறக் கலைக்குழு இயங்குதல், பயணம், அனுபவங்கள் நாட்குறிப்பு இலக்கியம் போல இத் தன்வரலாற்றில் பதிவாகி உள்ளது. இது தமிழ்ச் சூழலில் புதிது.

சாதி ஒதுக்கம்: அனுபவங்கள்

வாழும் சூழலில் தீண்டாமை எப்படியெல்லாம் நிலவுகிறது என்பதை பல இடங்களில் இந்நூல் பதிவு செய்கிறது. பள்ளியில் வகுப்பறையில் உட்காருவதில் கூட சாதிப் பிள்ளைகள் முன்னரும் இவர்கள் பின்னரும் தான் அமர வேண்டும். சாதியினர் வாழும் தெருக்களில் காலில் செருப்புப் போட்டு நடக்கக்கூடாது. இவற்றை,

"ஒரு நா நாயக்கரு பயன ஸ்கூல்ல விடுறதுக்கு அந்தப் பையனோடு அப்பா வந்திருந்தாரு - மாதிய போடுளுகூட கூண்டாகான தள்ளிகூண்டி பாடுறான்னு சொல்லிட்டுப் போனாரு அத வாத்தியாரு கண்டுக்கிறாம இருந்தாரு.

ஸ்கூலுக்கு மேக்கே தெருவுல பூராவும் நாயக்கரு வீடுக அந்தப் பக்கமா எங்க ஆளுக செருப்பு போட்டு நடந்து போகக்கூடாது அப்படியே செருப்பு போட்டு வந்தா அந்த தெருவுக்குள்ள வரும்போது கையில செருப்பை கழட்டிக்கிட்டு வரணும் சரியான வெயில் எங்கோ போயிட்டு கிறுகிறுத்துப்போயி எங்க தாத்தா கந்தன் வந்தாரு மதிய சாப்பாட்டுக்குப் பசங்களோட விளையாடிக்கிட்டிருந்தேன் இந்த தெருவுக்குள்ள வரும்போது கையில இருக்கிற துண்டை ஒரு கையில வச்சிக்கிட்டு இன்னொரு கையில செருப்ப தூக்கிக்கிட்டு வந்தாரு அந்த தெருவ விட்டு தள்ளி துண்டை தோள்ல போட்டுக்கிட்டு கால்ல செருப்ப மாட்டுனாரு அப்ப ஏன் தாத்தா இப்படின்னு கேட்டேன் அதுக்கு -சம்சாரிகி மரியாத இய்யவாள ரேதுத்த அப்போடுளு கண்ணு மூக்கு தெலகானா மொத்துத்துரு-. நானும் தாத்தாவும் வீட்டுக்கு வந்துக்கிட்டுருந்தோம் அப்ப எதித்தாப்பல இன்னொரு தாத்தாசுப்பன் வந்தாரு அவரும் கையில ரெண்டு ஜோடி செருப்ப தூக்கிட்டு வந்தாரு. அந்த சமயத்தில் தாத்தா,

"கந்தே

ஒரே சுப்பா ஏ சாமி வூரு செப்புலு

அப்ப சுப்ப தாத்தா

ஏரா கந்தா மெளனமய்ய செப்புலு

வாரு தெகி போயே தாத்தே செம பண்ணி

கொத்த வாரு வேசி கொண்ணி

போயேன்னு சொன்னார் (ப.16-17)"

எனப் பதிவு செய்கிறார். தன் தாத்தா தெலுங்கில் உரையாடுவதையும் சுட்டுகிறார். இது ஒரு வகையில் தெலுங்கை அறியாத அந்த சாதியினரிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், தங்களுக்குள் குழுவுக்குறியாக இது அமைவதையும் காணலாம். பின்னர் பல இடங்களிலும் இப்படி உள்ளது.

உணவும் சூழலும்

செத்த மாட்டை உரித்து சமைத்து சாப்பிடுவது, கறியைப் பங்கிடுவது, மாட்டுக் கொழுப்பைக் காய்ச்சி அதை ரொட்டி போடுதல், செருப்பு தைத்தல் போன்றவற்றிற்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றைப் பேச்சு மொழியில் சென்றாயன் பதிவு செய்கிறார். இது தமது உணவும், வாழ்வும், தொழிலும் இழிவான ஒன்று அல்ல. வாழ்வோடு ஒன்றிய இயல்பானது என்பதை வெளிப்படுத்துகிறது:

எங்க தெருவுக்குள்ள வூடு தவறாம செத்த மாட்டை தூக்கிட்டு வந்து உரிச்சு சாப்பிட்ட மிச்சக் கறிகளை வீட்டுக்கு முன்னாடிக் கயிறைக் கட்டி வெயிலுக்குக் காயப் போடுவோம் செல வூட்டுக்காரங்க சோறு ஆறப்போடுற தட்டுல காயப் போடுவாக எங்க வூடு தகர வீடுங்றதனால அந்த தகரத்தில காயப் போடுவோம் காக்கா வந்து தூக்கிட்டு போயிரும்றங்கிறதினால நான் சில சமயங்கள்ல காவலுக்கிருந்திருக்கேன் ஸ்கூல மத்தியானத்துக்கு மேல லீவும் போட்டிருக்கேன் இப்படி காய வச்ச கறிகளை சேத்து வைப்போம் அப்பயெல்லாம் எங்க வூட்ல நைட்டுல களிதான் அந்தக் களிக்கு இந்த காய்ஞ்சு போனகறிகளை கொழம்பு வப்பாக பகல்ல கூழுதான் இந்த கூழுக்கு காய்ஞ்சு போன கறிகளை வடைச் சட்டியில் வறுத்து அதோட வத்த உப்பு சேத்து அரச்சு தொவையல் கொடுப்பாக எங்க அம்மா அந்தக் கறித்தொவையலு அவ்வளவு அற்புதமா இருக்கும் மதிய நேரத்தில கூழு இல்லையன்னா கேப்பை மாவத் தட்டி ஒரட்டி போடுவாங்க எங்க அம்மா அப்போ ஒரட்டி போடுறதுக்கு தோசை சட்டியில் எண்ணெய்க்குப் பதிலா சேர்த்து வச்சிருந்த மாட்டுக்கறிக் கொழுப்ப தோசை சட்டியில போட்டு ஒரட்டிச் சுடுவாங்க
(ப. 17 -18)

செல வூடுகள்ல கொழுப்ப வடசட்டியில போட்டுக் காய்ச்சி பாட்டில்ல ஊத்தி வச்சிருவாக மதிய நேரத்தில கேப்ப மாவோடு மிளகாயக் கீறி ரொட்டி போடுறதுக்கு, காய்ச்சி எடுத்த கொழுப்ப ஒரு துண்டம் போடுவோம் அது எளகியவுடன ரொட்டி சுடுவோம் இன்னும் செல வூட்டுல செருப்பு தைக்கிறதுக்கு கொழுப்பை மூங்கி வெட்டி (டப்பா வடிவத்தில) கொழுப்ப போட்டு வச்சிருவாக செருப்பு தைக்கும் போது ஆர எடுத்து குத்தும் போது ஒரு செல செருப்புக்கள்ல போகாது அந்த மாதிரி செருப்புகள்ல கொழுப்பு தடவிக் குத்தம் போது ரெம்ப ஈசியா போயிடும் இதுக்குத்தான் அந்த கொழுப்பு செருப்பு தைக்கிற வூட்டுல எல்லாருமே ஆரம், கூட்டம் வச்சிருப்பாக.(ப.20)

இசையும் கலையும் இவர்களுடன் பிறந்தது. தொடக்கத்தில் கோயில்களில் வாசித்தவர்கள் இவர்களின் முன்னோர். நிலக்கொடையும் பெற்றவர்கள். பின்னர் நிலை மாறியது என்பதை,

பரம்பரை - கலை

எங்க தாத்தா கந்தன் அவுக காலத்துல ஒத்தப்புரம், கட்டக்குச்சி நாதஸ்வரம், சிங்கி, செல்லாண்டி அம்மன் கோயிலுக்கு வாராவாரம் செவ்வாய்க் கெழமை யன்னைக்கு வாசிப்பாக அதுக்கு சம்பளமா வூட்டுக்கு வூடு கம்பு, சோளம் கொடுப்பாக கோயிலுக்கு வாசிச்ச கலஞர்களுக்கு சாப்டூர் ஜமீன்தார் செல்லாயி புரத்துக்கு தெக்க ஒரு ஏக்கர் நெலங் கொடுத்தாங்கன்னு தாத்தா மகாலிங்கம் அடிக்கடி சொல்வாரு அதெல்லாம் நாயக்கருக பிடிங்கி திண்டுட்டாங்க(ப.22) எனப் பதிவு செய்கிறார்.

எங்க அப்பா முதல்ல பொம்பளை வேசம் கட்டி ஆடினாரு எங்க சுமார் நாற்பது வருசமா பொம்பளை வேசந்தான் போட்டாரு அப்ப மள்ளப்புரம் செட்டு ரெம்ப பேமஸ்ன்னு சொல்வாரு வயசு ஆக ஆக பொம்பள வேசத்தை விட்டுட்டு நாதஸ்வரத்த வாசிச்சாரு இந்த தொழில வச்சுத் தான் எங்களயெல்லாம் கரை சேக்க எங்க நாலு பேருக்கும் ஆட்டம் சொல்லிக் கொடுத்தாரு இந்த ஆட்டத் தொழில் எங்க இரத்தத்தில ஊறிக் கிடக்கு மூணு தலைமுறையா நாங்க இந்த ஆட்டத் தொழில செஞ்சிக்கிட்டு வந்தோம்.(ப.23)

பேச்சு மொழி

தங்கள் வீட்டில் பயன்பாட்டு மொழியாக தெலுங்கு இருப்பதையும் பிற சாதியினரிடம் தமிழில் பேசுவதையும் சென்றாயன்.

எங்க வூட்ல எல்லாருமே தெலுங்கு தான் பேசுவோம் மேச்சாதி ஆளுக்கிட்ட பேசும்போது தமிழ்ல பேசுவோம் நான் அஞ்சாவது படிக்கும்போது பள்ளிக்கொடத்துல மணி அடிச்சிட்டாக அப்ப அவசர அவசரமா பெறப்பட்டுக்கிட்டுருந்தேன் எங்க கந்தென் தாத்தா உருமிக்கு புது நூல் கயிறு போட்டுக்கிட்டு உருமிக்கு புதுத்துணிக்கு சாயம் காய்ச்சிக்கிட்டு இருந்தாரு திருவிழா சீசன் நெருங்கி வரதுனால அப்ப தாவரம் கொட்டக்காலுல ஒரு சொரக்குடுக்கை அதுல கயிறு கட்டியிருந்துச்சு எங்க தாத்தா கிட்ட - இதி ஏட்டி தாத்தா தொங்கேதி-ன்னு கேட்டேன் அதுக்கு எங்க தாத்தா மனி மனிசிலு வூருனோனிக போயேம் போது சொரகுடுகை தான் கொத்துனு வேசி போவல தெருவுன எங்கிலி திப்பும் போது ஆ சொரக்குடுக்கை திப்புவால வாரித் தெருவன திப்பக்கூடாது ஸ்கூல்ல ரெண்டாவது மணி அடிச்சாக எங்க தாத்தா சத்தம் போட்டு போறா பள்ளிக்கொடங்குன்னு சொன்னாரு. (ப.25)

தொழில் – புழங்குபொருள்கள்

எங்க, எங்க தாத்தா வூருக்குள்ள செத்துப் போன ஆட்டத் தூக்கிட்டு வந்து அத உறிச்சிக் கறிய கொழம்புக்கு வச்சிக்கிடுவோம் தோல நல்லா வெயில்ல காய வச்சிடுவோம் அதே மாதிரி மாட்டுத்தோல வெயில்ல காய வக்க மண்ணுக்குள்ள தோலை இழுத்து வச்சி ஊண்டுறதுக்கு சின்னச் சின்ன குச்சுகளை ஊசியா செதுக்கி வச்சிக்கிருவாரு உரிச்சிப் போட்ட தோல நல்ல வெயில்ல நாலு பக்கமும் இழுத்து வச்சு, கருங்கல்ல விழுகாம கம்பு வச்சு ஊண்டிருவாரு காலையில ஊண்டி வச்ச தோல சாயங்காலம்தான் எடுத்து சுருட்டி வூட்டு விட்டத்துல கட்டி வச்சிருவாக அத ரெண்டு நா கழிச்சு அந்த தோல்ல இருக்கிற ரோமத்த கத்திய வச்சு சொரண்டி எடுத்துக்கிட்டுத் தண்ணியில ஊற வச்சிருவாரு அவ்வளவு பெரிசையும் சட்டியில போட்டு ஊற வக்க முடியாது அதனால தவில், பம்பை, இந்த மாதிரி இசைக்கருவிக்குப் போதும்ங்கிற அளவுக்கு தோல வெட்டி சட்டியில தண்ணிய ஊத்தி ஊற வச்சிருவாக இன்னொரு சின்ன சட்டித் தண்ணியில புளியங்கொட்டைய ரெண்டு ரெண்டா ஒடச்சு ஊற வச்சிருவாரு இந்தத் தண்ணியில ஊற வச்ச புளியங்கொட்டைகள அம்மிக்கல்லுல போட்டு நல்லா வழுவழுன்னு அரைச்சு, அத ஒடஞ்ச மண் சட்டியில கொஞ்சம் போல தண்ணிய ஊத்தி நல்லா கொதிக்க விடுவாக அதுக்கு அப்புறமா, அரச்சு வச்சு புளியம் பசைய அந்த சுடுதண்ணியில போட்டுருவாக இப்ப பசை ரெடியா இருக்கும்.

இசைக்கருவிகள் செய்தல்

ஊற வச்ச தோல எடுத்து இசைக்கருவிக்குப் பொருந்தக்கூடிய வகையில அந்த வட்டக் கம்பியில இந்த தோலப் போட்டு இந்த புளியம்பசையப் போட்டு சுருங்கல் இல்லாம நல்லா வெரைப்பா இழுத்து ஒட்டிருவாக அதுக்கப்புறமா வெயில்ல காய வச்சிடுவாக அப்புறமா காய வச்ச தட்டு -தட்டுன்னு சொல்றது தவில், பம்பை, டொப்பி, தட்டு, வளந்தரைத் தட்டுன்னுக்கூட சொல்லலாம் - இப்படி காய வச்ச தட்டை எடுத்து அத துளைப் போட்டு இசைக்கருவிகள்ல மாட்டிக்கிருவாக முதயெல்லாம் தவில், பம்பைக்கு வாரு போட்டிருப்பாக அதக்கூட சும்மா விளையாட்டுக்கு உன்னைய நல்ல வாரு புடிக்கப் போறேன்னு சொல்லுவாக தில்லானா மோகனாம்பாள் படத்துல நாகேஷ பாத்து பாலய்யா சொல்வாரு இப்படி புடிச்சு வச்ச புதுத்தட்டுக சும்மா வின்னு வின்னுன்னு இருக்கும் மேளக்காரக மொத்தமா சேர்ந்து அடிக்கும் போது இந்த புது தட்டு மட்டும் தனியா சவுண்டு கேக்கும் அதனால அந்த தவில்காரரு டொப்பியை டொப்பின்னு சொல்றது தொம்தொம்ன்னு வரக்கூடிய பகுதியத் தான் தொப்பென்னு சொல்லுவாக அத லேசா கையில தண்ணிய்ய நனைஞ்சு பதம்படுத்துவாக கூட்டத்துல வாசிக்கும்போது வேர்வைய கையில் துடைச்சு அப்படியே டொப்பி மேலே தடவிக் கொடுத்து அடிப்பாக அதுக்கப்புறமா வின்வின்னு வர்ற சவுண்டு மாறி கும்கும்ன்னு பேஸ் சவுண்டு கேட்கும். (ப.24, 25, 26) என்று கூறுகிறார்.

செத்துப் போன ஆடு, மாடு ஆகியவற்றின் தோலிலிருந்து இசைக்கருவிகள் செய்வது அருமையான தொழில்நுட்பம். சென்ராயன் தன் சூழலில் பார்த்து அதை மிக இயல்பாகப் பதிவு செய்கிறார். இசைக்கருவிகள் உருவாக்கம் எனும் நாட்டுப்புற மரபுத் தொழில் நுட்பமாக இதை கருதலாம்.

தொழிலும் சாதியும்

எங்க தாத்தா உருமி வாசிச்சாரு தேவராட்டத்துல உருமி வாசிக்கிறவருக்குக் கொடுக்கிற மேளத்துல உருமி வாசிக்கிறவருக்குக் கொடுக்கிறதில்ல ஏன்னா மரியாதை நையாண்டி அவரு நாயக்கரு இவரு சக்கிலியரு.(ப.28)

இடைநிலைச் சாதியினரின் துக்க வீடுகளில் ராஜா - ராணி ஆட்டம் ஆடும் இவர்களுக்கு சாப்பாடு போடும் இடம் மாட்டுக்கொட்டகையாக இருக்கிறது. ஆட்டக்காரக, மேளக்காரக சாப்பிடறதுக்குப் போனாக நானும் பசங்களும் அவுக கூட போயி மாட்டுக் கொட்டத்துல சாப்பாடு போட்டாக ஒரு பக்கம் குப்பையைக் கூட்டியும் கூட்டாமலும் கிடந்தது ஒரு பக்கம் சாணியா கிடந்தது மோத்திர வாட கப்புன்னு அடிக்குது அங்க தான் அவுகளுக்கு சாப்பாடு போட்டாக நானும் பசங்களும் அங்க தான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஆட்டம் பார்த்துட்டு மதியம் ரெண்டு மணிக்கு மேல பள்ளிக்கூடத்துக்கு வந்திட்டோம் அப்ப நான் அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருக்கேன்.(ப.38)

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ரெண்டு எங்கப்பாகிட்ட ஆட்டம் பழகினோம்.

எனத் தன் இளமைப் பருவத்து நினைவை அதனுள் இருக்கும் சாதி ஆதிக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

ஆட்டம் பழகுதல்

1992 இல் சிறுவனாக, தன் தந்தையிடம் ஆட்டம் பழகியதை, சாயங்காலம் ஆனா எட்டு ஒன்பது மணிக்கு மேல வூட்டுக்கு கெழக்க இருக்கிற கருப்பாயி தோட்டத்துல ஆட்டம் பழகினோம் அப்ப ஆடுற எடத்துல மட்டும் முள்ளு இல்லாம செதுக்கிவுட்டு களமாக்கிட்டு காலையில ஸ்கூலுக்கு போவோம் ஒன்பது மணிக்கு மேலே நானும் அண்ணே வாசி, கோணய்யன்னு நாலு பேர் ஆட்டம் பழகினோம் மொத நாள்ல பாட்டு கீட்டு பாடச் சொல்வாரு நல்லா கத்தச் சொல்வாரு எது வரைக்கு கத்திப்பாட முடியுமோ அது வரைக்கும் கத்தி பாடுறானு சொல்வாரு அப்புறம் நாளாக ஆட்டம், கதை, அப்புறம் ஒரு நடிகன் எப்படி கூட்டத்தில் பேசணும் அடவு முறைகளை எடுத்து வைக்கணும் இப்ப ராஜா பாட்டுன்னா ஆடும்போது கை நீட்டி பேசும்போது ஒரு ராஜாவுக்குண்டான தோரணை, பாவனை நடிப்பு இருக்கணும்ன்னு சொல்லிக் கொடுப்பாரு.(ப.41)

ஆத்தாங்கரைப்பட்டியில பள்ளர்க வூடு அதிகம் கொஞ்ச சக்கிலிய வூடு இருக்கு இங்க பள்ளர்க மேச்சாதி மாதிரி அவுக குழாயில சக்கிலிய ஆளுகல தண்ணி பிடிக்க விடமாட்டாக வூருக்கு கெழக்க நாயக்கருக இருக்காக அந்த வூருக்கு பேரு சுப்புலாபுரம் (ப.43)

சாதிச் சூழல் – சூழல்

அவுக என்ன சாதியோ அந்த சாதித் தலைவர் பத்தி பாடணும் அப்படித் தான் ஆட்டத்துக்கு அட்வான்ஸ் கொடுக்கும் போது சொல்லித்தான் கொடுப்பாக.

பள்ளர்க தெருவுக்க போனா கிருஷ்ணசாமி பாட்டு, ஜான் பாண்டியன் பாட்டு, இமானுவேல் சேகரன் பாட்டு. தேவ மாருகளுக்குப் போனா முத்துராமலிங்கத் தேவர் பாட்டு, தென்மாவட்டங்களுக்குப் போனா கட்டத்துரை பாண்டியன் பாட்டு, மதுரை பகுதிகள்ல கருவாயத் தேவரு பாட்டு, பறைய தெருவுக்கு போனா திருமாவளவன் பாட்டு, நாயக்கரு போனா வீரபாண்டி கட்டபொம்மன் பாட்டு பாடச் சொல்வாக இப்படி அவுக அவுக தலைவர் பத்தி பாடச் சொல்வாக. (ப.54)" எனப் பதிவு செய்கிறார்.

இரவு கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதும், நிகழ்த்தும் போதும் ஏற்பட்ட அனுபவங்களை பல இடங்களில் கூறுகிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் சாதி சார்ந்து நிர்ப்பந்திப்பதை,

"ஒரு ஆட்டக் கலைஞரு நிலைமை எப்படி இருக்கின்னா எழவு சொல்லிப் போற தோட்டி ஊரு வேலைகளை செய்யுற தோட்டி எழவு வூட்டுக்கு முன்னாடி ராஜா மாதிரி ராணி மாதிரி வேசம் போட்டுக்கிட்டு மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்லுறதும் இதே தோட்டிதான்.

ஆக ஒரு தோட்டியான் ராஜாவாகவும், ராணியாகவும் வேசம் போட்டு அதிலயாவது ராஜா எங்கிற தோரணையோட ஏழவு ஆட்டு ஆட முடியுமா இல்லை அவுகளுக்கு மேச்சாதி ஆளுக மரியாதை கொடுப்பாங்களா அதுவும் இல்லை ராஜா வேசத்தை போட்டு இருக்கிற கலைஞனை மேச்சாதி ஆளுக ஏண்டா கொக்காலோலி, கோத்தாலோலி, நல்ல பாட்டைப் பட்றா வெண்ணெய், இப்படி மட்டுமா பேசுவாக

இன்னும் கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம் பேசுவாக அப்ப ராஜா வேசம் போடக்கூடிய அந்த தோரணை, அதுக்குண்டான மரியாதை கெளரவம், எல்லாமே அடிபட்டு போய்டும் இப்படி வூரு சனமே வேடிக்கை பார்க்கக்கூடிய எடத்துல இந்த மாதிரி பேசக் கூடாத வார்த்தைகள்ல பேசுனாஅந்த ஆட்டக்காரவுங்களோட மனநிலை, எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க." (ப.86-87) என்று கூறுகிறார். ஆட்டக்காரர்களுக்கு நன்கொடை அளிப்பது போல இழிவு செய்வது, பாம்பு, தேள் போன்றவற்றைத் தருவது தொடங்கி ஆட்டக்காரர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுவது போல இப்படிப் பதிவு செய்கிறார்:

மேலும், தேவரு, நாயக்கரு, ரெட்டியாரு, கவுண்டரு, மூப்பமாரு, பிள்ளைமாரு, செட்டியார் இவுகளுக்கு ஆட்டத்துக்குப் போனா மாட்டுக் கொட்டத்துல தான் சாப்பாடு போடுவாக இவுக இருக்கிற ஊர்களில டீக் கடையில தனிக் கிளாஸ் இருக்கும் அதுல தான் டீ வாங்கி குடிக்கணும் இந்த மாதிரி வூருகள ஆட்டக்காரக கொட்டுக்காரக பேசும் போது சிந்தையா ஒரு குறியீடு சொல்லுவோம் டீக்கடையில தனி கெலாஸ் அப்படியின்னு வெளிப்படையா சொல்ல முடியாததுனால டீக்கடையில ஆளு இருக்கும்போது எங்களுக்கான குறியீடுகளை வச்சு பேசுவோம் "சம்பளத்துக்கு -கீஞ்சி,ஈவாரு, சாப்பாடுக்கு -தூகளு, தேவ மாரை கரவெட்டி, சித்காய், பள்ளர - குல்ல, அடுசுவாடு, பறையர - மாலவாடு, மாலைப்பாடு, சக்கிலியர்-மாதியவாரு, நாயக்கமாரை - புல்லிலுவாரு பிள்ளைமார - கிள்ளடை " இப்படி எங்களுக்குள்ள குறியீடுகளை வச்சு பேசிக்கிருவோம். (ப.92)

எதிர்ப்புணர்வு

வறுமையும், சாதி இழிவும் சேர்ந்து அழுத்தும் வாழ்வை வெறுக்க முடியாது. அதே வேளை ஏற்கவும் முடியாது. தங்களுக்குள் அவை பற்றிய ‘எதிர்ப்புணர்வு’ இருந்து கொண்டே தான் இருக்கும். சில நேரங்களில் கனன்று கங்கு பொறியாகவும் மாறும், இதனை ஓர் இடத்தில், இப்படித் தான் ஒரு நாள் கோழிக்குஞ்சு தேவரு புல்லா அடிச்சிப்புட்டு பொண்டு பிள்ளைக கையை பிடிச்சு இழுக்க வந்தான் ஏன்னா சக்கிலியன்னா செத்த பாம்புகூட கொத்த வருமாம் அப்ப சித்தப்பா ஒருத்தரு அவரு வூட்டுக்கு முன்னாடி முள்ளு வெட்டிக்கிட்டு இருந்தாரு அப்ப இந்த தேவரு வாய்க்கு வந்தபடி அசிங்க அசிங்கமாய் பேசினான் சித்தப்பாவும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாரு அவ கேட்டுக்கிறமாரி தெரியல கையில வச்சிருந்த அரிவாளை வச்சி ஒரே வெட்டு வெட்டிட்டாரு இன்னமும் அந்தக் கையில் தழும்பு இருக்கு இந்தவெசயம் கேள்விப்பட்டு மேச்சாதி ஆளுக எங்களையெல்லாம் அடிக்க வந்தாக எங்க சித்தப்பா அப்ப வூரை விட்டுப் போனவரு தான் இனியும் இந்த வூருக்கு சரியா வர்றதில்ல.(ப. 134-135) என பதிவு செய்கிறார்.

சென்றாயப் பெருமாளின் இந்தத் தன்வரலாறு, கே.ஏ.குணசேகரனின் ‘வடு’ போல, தலித் கலைஞனின் தன் வரலாறாக அமைகிறது. சாதி எனும் சதி, நவ காலனியமாக நிலை கொண்டிருப்பதன் மிக அண்மைச் சான்றாக இந்நூல் நுவலும் செய்திகள் உள்ளன. கலையை வாழ்வாதாரமாகக் கொண்ட குழுவினர் சாதி இழிவு காரணமாக கலையிலிருந்து வெளியேறுதல் தவிர்க்க முடியாதது என்பதையும் சென்றாயனின் இந்த வாழ்பனுபவம் தமிழ்ச் சமூகத்திற்கு தரும் செய்தியாகக் கொள்ளலாம்.

- இரா.காமராசு, பேராசிரியர் – தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.