எனக்குத் தத்துவம், சமூகவியல், இலக்கியம் எல்லாம் விருப்பமான துறைகள். வாழ்க்கையின் உள்ளார்ந்த நிகழ்வுகளை அறிய தத்துவத்துறையை விருப்பார்வோடு கற்றேன். இலண்டன் நகரில், எனது மருத்துவ மேல்நிலைப் படிப்பைப் படித்தேன். அப்போது முறையாகத் தத்துவப் பயிற்சி பெற முடிந்தது. இலண்டன் பல்கலையில் இளங்கலை தத்துவப் பட்டமும் பெற்றேன். அப்போது டெக்கார்டின் “I think therefore I am” என்ற சொற்றொடர் என் வாழ்க்கையின் திறவுகோலாக அமைந்தது. 'நான் சிந்திக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன்' என்ற பாதையில் எனது கலைத்துறை ஈடுபாட்டில், கலையின் மெய்யியலுக்கும் அழகியலுக்கும் உள்ள உறவை எனது ஆய்வாக மேற்கொண்டு வருகிறேன். Artamour: 2021)

மேற்கண்ட வரிகள், கொட்வின் றொஜர் கொண்ஸ்டன்ரைன் எனும் இதய மருத்துவரின் பதிவு. கொ.றொ.கொண்ஸ்டன்ரைன் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர், கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியர். இலங்கையின் நவீன ஓவியம் மற்றும் நிகழ்த்துகைக் கலை (Performance Art), நிறுவல் கலை (Installation) ஆகியவற்றால் சமகால காட்சி ஊடகக் கலைஞராக, இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞர். இவரது நவீன ஓவியங்கள், யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவூட்டும் நிறுவல் கலைப் படைப்பு, ஈழத்தின் அரசியல் - வாழ்வியல் மற்றும் போர்ச்சூழலை மையமாக வைத்து நிகழ்த்திய முதல் நிகழ்த்துகைக் கலை ஆகிய பல இவரது கலை சார்ந்த வாழ்வின் அடையாளங்கள்.

ஈழப் போர்ச்சூழலின் காரணமாக கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் இடம்பெயர்ந்து வாழும் வாழ்க்கை அனுபவத்தை உள்வாங்கியவர். இந்த இடம்பெயர் வாழ்க்கை, அவரது கலை ஆக்கங்களுக்கு மூலமாக அமைவதாகக் கருதுகிறார். யாழ்ப்பாணத்தில் மருத்துவம் பயிலும் மாணவராக இருந்தபோது, யாழ்ப்பாணத்தின் வீறார்ந்த கலைஞன், ஈழ நவீன ஓவிய மரபின் முன்னோடி, அ. 'மாற்கு மாஸ்டர்' என்று அன்போடு அழைக்கப்படும் ஓவிய ஆசானிடம் நவீன ஓவியம் பயின்ற, புகைப்படக் கலைஞரின் மகன் கொ.றொ.கொண்ஸ்டன்ரைன்.dancing womenதமிழ் இலக்கியத்தை முறையாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்; தத்துவப் படிப்பை இலண்டன் பல்கலையில் முடித்தவர், சமூகவியல் பாடத்தைக் கொழும்பு பல்கலையில் பயின்றவர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் பல்கலைக்கழக மருத்துவப் பயிற்சி பெற்ற மருத்துவர். இவர் இலௌகீக வாழ்க்கைக்காக மருத்துவத் துறையில் ஆத்மார்த்தமாகச் செயல்படுகிறார். ஆனால் இவரது வாழ்வின் அடையாளம் என்பது கலைத்துறை ஈடுபாடுதான் என்பதை அவரது பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன. கலைத்துறையிலும் கலையில் செயல்படும் 'மெய்யியலும் அழகியலும்' இவரது தேடல். இந்தத் தேடலின் விளைவாக 'இருபதாம் நூற்றாண்டு ஓவியம்: சில குறிப்புகள்'(1998, 2011) எனும் நூல் வெளிவந்தது. ஓவியம் குறித்த விளக்க விவரண உரையாடல்களைக் கொண்ட அந்நூலில் தொடர்ச்சியாக அமைவது 'கலையும் அழகியலும்' என்ற இந்த நூல். இந்த நூல் எதைப் பேசுகிறது என்பதைக் பின்கண்டவாறு தொகுத்துக் கொள்வோம்.

-       கலை என்பதை வரையறை செய்யும் முறைமைகள்; சமகாலக் கலையை எவ்வாறு அணுகுவது; கலை சார்ந்த அழகியலை, மெய்யியல் அடிப்படையில் எவ்வாறு புரிந்து கொள்வது; உருவம், உணர்வு வெளிப்பாடு; கலை வளர்ச்சிகள் இவற்றை எல்லாம் அணுகும் முறையியல்கள் எவையெவை என்பதை முதல் நிலையில் பேசுகிறது இந்நூல்.

-       மார்க்சியம், பெண்ணியம், சூழலியம் சார்ந்து கலைக்கான அழகியல் குறித்த உரையாடல் மற்றும் தொழில்நுட்ப மரபு சார்ந்து உருவாக்கப்பெறும் கலையுடன் அழகியல் குறித்தும் இந்நூல் பேசுகிறது.

-       உலகம் சார்ந்த கலை வரலாறு குறித்த பதிவுகள்; குறிப்பாகத் தொடக்கக் காலம், மத்தியக் காலம், பதினெட்டாம் நூற்றாண்டு எனக் கலையின் காலத்தோடு இணைந்த வரலாற்றைப் பதிவாக்குகிறது இந்நூல்.

-       கலை சார்ந்த மெய்யியல் உரையாடலில், பல்வேறு சமூக இயக்கங்களின் பங்களிப்பு மற்றும் பார்வைகள் குறித்துப் பேசப்படுகிறது.

-       நவீனகால உருவாக்கங்களான புகைப்படக்கலை, ஓவியக்கலை, சினிமாக்கலை, கட்டடக்கலை ஆகியவற்றின் அழகியலை மெய்யியல் மரபில் உரையாடலுக்குட்படுத்தும் மரபை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.

-       பிளேடோ, அரிஸ்டோடல், காண்ட், நீட்சே, ஹைடெகர், பார்த்தஸ், பாட்ரிலார்ட், ஆர்தர் டான்டோ, ஜக்ரொன்சியே ஆகிய மெய்யியல் துறை சார்ந்த அறிஞர்கள், கலையின் அழகியல் குறித்துப் பேசும் உரையாடல்கள் எவை எவை என்பதற்கான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது.

கலை சார்ந்த வரையறை, உலகம் சார்ந்த கலை வரலாறு, கலையின் மெய்யியல், கலையின் அழகியல் - மெய்யியல் அறிஞர்களின் கலை அழகியல் சார்ந்த பதிவுகள் என்ற முறையியலில் இந்நூல் அமைந்திருக்கிறது. கலை சார்ந்த பழங்கால வரையறை முதல் சமகால வரையறைகள் வரை இந்நூலில் பேசப்படுகின்றன. சமகாலக் கண்ணோட்டத்தை முதன்மைப்படுத்தியே அனைத்துச் செய்திகளும் முன்வைக்கப்படுகின்றன. மனஉணர்வு சார்ந்த விருப்பார்வம் (nostalagia) கலை குறித்த உரையாடல்களில் தவிர்க்க முடியாத ஒன்று. இந்நூல் அந்த ஆபத்தில் சிக்கவில்லை; மாறாக, கலை குறித்த அறிவு, கலைஞனுக்குத் தேவை என்பதையும் அது சமகால நுகர்வு, சமகாலப் பிற தேவைகள், சமூகக் கட்டமைப்புக்கும் கலையின் கட்டமைப்பிற்கும் உள்ள உறவு ஆகிய கூறுகளில் கலை சார்ந்த வரையறைகளை முன்வைக்க இந்நூல் திட்டமிடுவதைப் பார்க்க முடிகிறது. நூலாசிரியர் கலைஞனாகவும் ஆராய்ச்சியாளராகவும் இணைந்து சிந்திக்கும், செயல்படும் பாங்கைக் கண்டறிய முடிகிறது.

¨¨¨

கலையின் உருவம், மனித அழகு உணர்வுகளைச் சார்ந்து செயல்படுகிறது. அளவிட முடியாத அழகு (Sublime) என்பதற்கும் அழகியலுக்கும் உள்ள தொடர்புகள், எவ்வாறு கலையில் செயல்படுகின்றன என்பது குறித்தும் நூலாசிரியர் தமது உரையாடலை முன்வைக்கிறார். கலையின் உருவம் என்பது அழகியல் சார்ந்து எவ்வாறு செயல்படுகிறது, அழகியல் மரபே உருவமாகக் கட்டமைக்கப்படுகிறதா என்பதை வரலாற்றுரீதியாக நூல் பேசுகிறது. அரிஸ்டோடல், டொல்ஸ்டாய் வரையறைகள் தொடங்கி, நவீன காலம் வரை உருவம், அழகியல் சார்ந்த உரையாடல்கள் எவ்வாறு நிகழ்ந்துள்ளன என்ற விவரங்களை முன்னிருத்தி, உருவம், அழகு, மெய்யியலாளர்கள் என்ற புள்ளிகளைப் பேசுவதை நூலின் சிறப்பாகக் கருதலாம்.

சமகாலத்தில் கலை, அழகியல், கலை சார்ந்த மெய்யியல் என்பது குறித்த உரையாடல்கள் என்பவை, நவீன அறிவியல் வளர்ச்சி மரபுகளோடு இணைத்து மதிப்பிடும் தேவையுண்டு. இந்த வகையில் நவீன அறிவியல் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அழகியல் கூறுகளை, ஹெகல் போன்ற மெய்யியலாளர்களின் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பதைக் காண்கிறோம். இதில் அனுபவம் என்பதும் ஒழுக்கநெறி என்பதும் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பது குறித்துப் பேசுவதை சிறப்பாக அமைகிறது.

இவ்வகையில் நூலின் தொடக்கம் என்பது கலைக்குள் செயல்படும் அழகியலைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைகளை முன்வைப்பதாக அமைகிறது. இதன் விரிவான பல்துறை உரையாடல்களாகவே நூல் தொடருகிறது. எடுத்துக்கொண்ட பொருண்மை சார்ந்த புரிதலை வாசகன் பெறுவதற்கான கால்கோளாக நூலின் தொடக்கம் அமைவதைக் காண்கிறோம்.

கலையின் அழகியல் பற்றிய உரையாடலில் மார்க்சியம் முன்னெடுக்கும் மெய்யியல் மரபுகள் சார்ந்த அழகியல் வரையறைகளை மார்க்சிய அழகியல் என்று சொல்லுகிறோம். தொடக்க காலம் முதல் 'பிரதிபலிப்புக் கோட்பாடு' சார்ந்தே மார்க்சிய அழகியல் பேசப்பட்டது. இன்றைய சமூகத்தில் மாற்றங்கள் வந்துவிட்டன. இன்று திறந்த பொருளாதார வளர்ச்சி என்பது உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் எங்கெல்ஸ் முன்னெடுத்த சமூக அடிக்கட்டுமானம், சமூக மேற்கட்டுமானம் எனும் வரையறைகளை நவீன கால வளர்ச்சி சார்ந்து, அல்தூசர் போன்றவர்கள் முன்னெடுக்கும் கோட்பாடுகள் சார்ந்து, கலையின் அழகியலை முன்னெடுக்கும் முறைமைசார் குறித்து இந்நூல் பேசுகிறது. இதில் மாக்சிம் கார்க்கி முன்னெடுத்த சோசலிச எதார்த்த வாதம், ஜார்ஜ் லூகாஸ் பேசிய சோசலிச விமர்சன எதார்த்தவாதம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இன்றைய சூழலில் மார்க்சிய மெய்யியல் சார்ந்து, கலையின் அழகியலை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதையும் இந்நூல் பேசுவதைக் காண்கிறோம். இன்றைய சூழலில் இந்த உரையாடல் மிக முக்கியத்துவம் பெறுவதைக் கவனப்படுத்துவது அவசியம்.

சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண் உயிரிகள் குறித்து, காலம் காலமாக நடைமுறைப்படுத்தப் பெறும் சமூக ஒடுக்குமுறைகள் மிகுதி. இதனை அடிப்படையாகக் கொண்ட பெண்ணியத்தை அடையாளப்படுத்தும் பால்நிலை சார்ந்து, கலை ஆக்கம், கலை விமர்சனம், கலை நுகர்வு, கலைக் கொள்கை ஆகிய பிற எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பது இன்றைய முதன்மையான உரையாடலாக உள்ளது. இத்தன்மையை நடைமுறைப்படுத்த பால்நிலையின் தன்னிலைக் கட்டமைப்பு என்பது எவ்வாறு கலையின் அழகியலோடு தொடர்புடையதாக அமைதல் வேண்டும் எனும் வரையறை முக்கியமானது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் பெண்ணியக் கலையாக்கம், கலையாக்கத்தின் அழகியல், பெண்ணியக் கலை ஆக்கம் சார்ந்த விமர்சனம், ஆண் ஆதிக்கம் சார்ந்த ஆண்நிலை நோக்கிலிருந்து விடுபடல், பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட உடல் அரசியல் ஆகியவை தொழிற்படும் தேவையுண்டு. இந்த அடிப்படைகளை இந்நூலாசிரியர் உரையாடலுக்கு உட்படுத்துவதைக் காண்கிறோம். இதனால் இந்நூல் சமகாலத் தன்மையை தனக்குள் உள்வாங்கியிருப்பதைக் காண்கிறோம். இவ்வாறு பெண்ணியம் சார்ந்த கலை சார்ந்த அழகியல் கூறுகளை இந்நூல் பதிவு செய்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில், சுற்றுச்சூழல் சார்ந்த சூழலியல் என்பது கவனத்திற்குரிய துறையாக வளர்ச்சி பெற்றது. காண்ட் முன்னிறுத்திய இயற்கை அழகு சார்ந்து இத்துறை விவாதத்திற்குட்பட்டது. நிலக்காட்சி - அதாவது, காடு, கடல், புயல் போன்ற நிகழ்வுகளின் சித்திரத் தன்மை ((Picturesque)) அழகியலாக உள்வாங்கப்பட்டது. வளர்ச்சியடைந்த அறிவுசார் மனித வாழ்க்கைப் போக்குகள் இயற்கை அறிவைப் பெறுவதில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் மூலம் உருவான காட்சிப்புலம், தொடு உணர்வு, மண நுகர்ச்சி, இயற்கை ஒலி ஆகியவை சூழலியல் சார்ந்த கலைசார் அழகியலாக உருப்பெற்றுள்ளன.

தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்து உருவான பல்வேறு கருவிகள் சார்ந்து, புகைப்படக்கலை, திரைப்படக்கலை ஆகியவை உருப்பெற்றுள்ளன. முன்னரே இருக்கும் ஓவியம் போன்ற கலை வடிவங்களைத் தொழில்நுட்பம் மாற்றீடு செய்கிறது. புகைப்படக்கலை என்பது ஒன்றை புலப்படும் கூறுகளிலிருந்து புலப்படாத கூறுகளை நோக்கிய தேடல் இக்கலையில் உண்டு. நவீன அறிவியல் மரபும் இக்கலை வடிவமும் இணைந்து அழகியல் மரபை உருவாக்குவதை இக்கலை வடிவில் காணமுடியும்.

ஓவியம் என்பது உலக அளவில் பல பரிமாணங்களில், பல்வேறு கண்ணோட்டங்கள் சார்ந்து உருப்பெறும் கலை. இதில் ஒரு கூறைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மரபு இருக்கிறது. ஒவ்வொரு பண்பாட்டு மரபு, ஒவ்வொரு மனிதக் கூட்டத்தின் வாழ்முறை, இன்னபிற கூறுகளில் ஓவியம் வேறுபடும். அத்தன்மை சார்ந்தே ஓவியத்தின் அழகியலை உரையாடலுக்குட்படுத்த முடியும். இதன் பரிமாணம் மிக விரிவானது. திரைப்படக்கலை என்பது ஊமைப்படம், பேசும்படம் எனும் மரபுகளில், தொழில்நுட்பக் கலைகள் சார்ந்த அழகியலை முன்னெடுக்கிறது. இதில் எடுத்துரைப்பு முதன்மையானது. கருவிகள் சார்ந்த எடுத்துரைப்பு உருவாக்கும் கலை அழகியல், திரைப்படத் துறைக்குரியது. கட்டடக்கலை என்பது மனித வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது; கலைஞன், கற்பனை, இரசிகப் பண்பு ஆகிய அனைத்தும் பயன்பாடு சார¢ந்த அழகியல் மரபாக அமைகிறது.

¨¨¨

கலை மரபின் வரையறைகள், அது சமூகம் சார்ந்து இயங்கும் கருத்துநிலைசார் மரபுகள்; அறிவியல் வளர்ச்சி சார்ந்த கருவி சார்ந்த எடுத்துரைப்புகள் ஆகிய பரிமாணங்களை இதுவரை முன்னெடுத்த இந்நூல் தொடர்ந்து கலையின் அழகியல் குறித்த வரலாற்றை முதன்மைப்படுத்திப் பேசுவதைக் காண்கிறோம்.

கலை வரலாற்றின் தொடக்கமாக, மேலைத்தேய மெய்யியல் மரபின் தந்தையாகக் கருதப்படும் பிளேடோவின் பதிவுகள் அமைகின்றன. அவரது 'குடியரசு' நூலில் கலை வரலாறு, கலையின் தன்மை, கலை நிகழ்வில் பங்கேற்போர் யார்? ஆகிய பல கூறுகள் குறித்துப் பேசுகிறார்; புலனறிவு சார்ந்த சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்; நீதிபோதனைகள் குறித்தும் பேசுகிறார். இவ்வகையில் கலை வரலாறு பற்றிப் பேசிய முன்னோடியாகக் கருதப்படும் மனிதர் கவிதை, ஓவியம், கல்வி ஆகிய துறைகள் சார்ந்த அவரது பதிவுகளிலிருந்து கலையின் அழகியலைத் தருவித்துக் கொள்ள வேண்டும். கிரேக்க மரபு அடிப்படையாகக் கொண்டுதான் உலகக் கலை வரலாறு உருப்பெறுகிறது. பிளேட்டோவைத் தொடர்ந்து அரிஸ்டோடல் மரபு உருவாகிறது. இவர் கிரேக்க மெய்யியல் பள்ளியை உருவாக்கியவராகக் கருதப்படுகிறார். மேலைத்தேய கலை அழகியலின் மூலங்களைப் பதிவு செய்த முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது 'கவிதையியல்' (Poetics) துன்பியல், இன்பியல் பற்றிப் பேசுகிறது. பின் உருவான ஆக்கங்களில் இம்மரபைச் சார்ந்துதான் அழகியல் குறித்துப் பேசப்பட்டது என்றும் அறிகிறோம்.

உலக வரலாறு பற்றிப் பேசும்போது, அதனைக் கிரேக்க வரலாற்றிலிருந்து தொடங்குவது மரபு. பின்னர் ரோமானியர்கள் வரலாறு பேசப்படும். பின்னர் வரலாற்றுக்குப் பிந்தைய காலத்தை ஐநூறில் தொடங்குவது மரபு. இதற்கு முன் இருந்த மரபு தொல்பழம் வரலாற்று மரபு. இதில் உலகஅளவில் கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் முதன்மையான இடமுண்டு. கலை வரலாறு பேசும்போது வரலாற்றுக்குப் பிந்தைய காலம் ஐநூறாம் ஆண்டு தொடங்கி, படிப்படியான அறிவியல் வளர்ச்சி, அரசுருவாக்க மாற்றம், நாகரிக வளர்ச்சி, புதிய கலை மரபுகள் உருப்பெறும் வரலாறுகள் பேசுவது மரபு. இந்தப் பின்புலத்தில் வரலாற்றுப் பிந்தைய காலம் 500 முதல் 1500 வரையான ஒரு காலகட்டமாகக் கருதுவர். இக்காலங்களில் உருவான சமூக நிகழ்வுகள் பல்வேறு புதிய பரிமாணங்களை உள்வாங்கியவை.

இடைக்காலம் என்று சொல்லப்படும் இக்காலங்களில் மதம், அதிகாரம்மிக்க சக்தியாக வடிவம் பெற்றது. கிறித்தவம் பேரலையாக வடிவம் பெற்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் மதவாதம் தீவிரவாதமாக வடிவம் பெற்றது. இதன் விளைவு, கலைகளில் மதச் செல்வாக்கு கூடியது. மனிதன் X கடவுள் என்ற இரட்டைத்தன்மை வலுப்பெற்றது. அழகியல், மெய்யியல் சார்ந்த வரையறைகளில் மேல் குறித்த இரட்டைத்தன்மை முதன்மை பெற்றது. அழகியல் என்பது புறம், அகம் எனும் பாகுபாடுகளை முன்னெடுத்தது. கிரேக்கக் கலைநெறிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய கலைக் கோட்பாடுகள் உருப்பெற்றன. கலையின் அழகியல், மெய்யியலாளர்களின் கவனத்திற்கு வந்தது. அவர்கள் மெய்யியல் சார்ந்து கலை மரபுகளை வரையறை செய்யத் தொடங்கினர். இதன் அடுத்தகட்ட தொடர்ச்சியாக, பதினெட்டாம் நூற்றாண்டளவில் அநுபவவாதம் சார்ந்து அழகியல் முன்னெடுக்கப்பட்டது. நவீன புத்தொளி மரபு உருவானது. அழகுணர்வு பற்றிய பழைய வரையறைகள் மாறின. இயற்கையாக உருவாகும் மரபு என்பதெல்லாம் கேள்விக்குட்படுத்தும் மெய்யியல் உரையாடல்கள் உருப்பெற்றன. கலையின் அழகியல் சார்ந்த, மெய்யியல் விளக்கங்கள் பல்வேறு மெய்யில் அறிஞர்களால் முன்னெடுக்கப்படும் சூழல் உருவானது. இந்த நூல் மேல் குறித்த வரலாறு மற்றும் மெய்யியல் புரிதல்களை கலையின் அழகியல் சார்ந்து பேசும் மரபுகளைக் கவனப்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கம் முதல் இருபதாம் நூற்றாண்டு முடிய ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளில் கலையின் அழகியல் பற்றிப் பேசிய மெய்யியலாளர்கள் பின்வருமாறு அமைகின்றனர். இமானுவேல் காண்ட், ஹெகல், நீட்சே, மார்ட்டின் ஹைடெகர், ரோலண்ட் பார்த்ஸ், ஜுன் பாட்ரிலார்ட், ஆர்தர் டான்டோ, ஜக்ரொன்சியே ஆகியோர் அமைகின்றனர். இவர்கள் கலை சார்ந்த அழகியலுக்கும் மெய்யியலுக்கும் உள்ள தொடர்புகளை நவீனகால சிந்தனை மரபுகளோடு முன்னெடுத்துப் பேசியவர்கள் என்று கருத முடியும். விரிவு கருதி, மேற்குறித்த மெய்யியலாளர்களின் கருத்துநிலை மரபைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

-       காண்ட் அடிப்படையில், காலம் - வெளி எனும் இயற்பியல் கூறுகளை மனித மனம் சார்ந்த செயல்பாடுகளோடு இணைத்துப் பேச முயன்றவர்; புதுவகையான அறிதல் முறைகளை முன்னெடுத்தவர். மனித மனதின் எதார்த்தம், இச்சை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலையின் அழகியல் கூறுகளை மெய்யியலாக வெளிப்படுத்த முயற்சி எடுத்தவர். இவரது தாக்கம் பிற்காலத்தில் பலரிடமும் உருப்பெற்றதை அறிகிறோம்.

-       ஹெகல், கலை வரலாறு எழுதியல் மரபு, புதிதாக உருப்பெற்ற காலங்களில், மனிதனின் வகிபாகம் குறித்துப் பேசியவர். கருத்துமுதல்வாதம் எனும் மெய்யியல் கோட்பாட்டைக் கட்டமைத்தவர். இவர் கார்ல் மார்க்சின் மீது செல்வாக்கு செலுத்தியவர். இவரது கலை சார்ந்த அழகியல் என்பது மனிதன் x கடவுள் என்ற நிலையில், மதவாதம் முன்னிருத்தும் கடவுளைப் பேசாமல் மனிதன் பற்றிப் பேசியவர். பிற்காலங்களில் மனிதனை முதன்மைப்படுத்தும் கருத்துநிலைகளுக்கு மூலமாக அமைந்தவர்.

-       ஹெகல் மரபைத் தொடர்ந்து மனிதர்களின் மனவலிமை (Will Power) சார்ந்து, மனிதனே எல்லாம் எனும் கருத்துநிலையை முன்னெடுத்தவர் நீட்சே. இவர் மாமனிதனைக் (Super Man) கண்டெடுத்துப் பேசியவர். நீட்சே மாமனிதனைப் பற்றிப் பேசும்போது மநு பற்றிப் பேசியவை ஒருவகை வரலாற்றுப் பிழை; ஆனால் மனிதனை மாமனிதன் என்று கட்டமைக்க மேற்கொண்ட மெய்யியல் பார்வை கவனத்துக்குரியது. கலை வரலாறு சார்ந்த அழகியலையும் அவ்வாறே கட்டமைக்க முனைந்தார்.

-       'இருப்பும் காலமும்' (Being and Time) என்ற நூலின் மூலம் மெய்யியல் உலகில் புதிய கண்ணோட்டத்தை முன்னெடுத்தவர். கலையின் அழகியலைச் சிக்கலான கருத்தியலாகவே வெளிப்படுத்தியவர். கணிதம், அறிவியல் ஆகியவற்றை ஆய்வு செய்யும் தர்க்கப் போக்கை, அழகியல் பற்றி ஆய்விலும் முன்னெடுக்க முயன்றவர். அகவயப் பார்வைக்கு முதன்மை கொடுத்தவர். கலை என்பதை ஒரு கருவியாகப் பாவித்து அதன் செயல்பாடுகளைக் கொண்டு மெய்யியல் பார்வை வரையறை செய்ய முயற்சி மேற்கொண்டவர் மார்ட்டின் ஹைடெகர்.

-       பின் நவீனத்துவ மெய்யியல் உரையாடல் மரபுகளில் ஜக் லாகன், ஜக் தெரிதா மற்றும் மைகல் ஃபூக்கோ கவனத்துக்குரியவர்கள். இவர்களின் சிந்தனை மரபுகளால் செல்வாக்கு பெற்றவர் ரோலண்ட் பார்த்ஸ். சமகாலக் கலை அழகியல் குறித்து உரையாடல் நிகழ்த்துபவர் ஆர்தர் டான்டோ.

இந்நூல், மேற்குறித்த மெய்யியலாளர்களின் கலை சார்ந்த அழகியல் கோட்பாடு பற்றிய விரிவான உரையாடல்களை முன்வைக்கிறது. இந்நூலின் தனித்தன்மைகளாகப் பின்கண்ட கூறுகளை முன்வைக்கலாம்.

-       கலையின் அழகியலை, மெய்யியல் நோக்கில் பேசும் தமிழ் நூல்கள் மிகமிகக் குறைவு. இந்நூல் அவ்வகையில் தனித்தன்மைகளைக் கொண்டுள்ளது.

-       கலையின் பல பரிமாணங்கள் குறித்து அறிய விரும்பும் எவருக்கும் இது அரிய கையேடு. விரிந்து பரந்த செய்திகளை வரலாற்றுக் கண்ணோட்டத்தில், ஒரு நூலில் பேசும் தன்மை அரிது. ஆனால், இந்நூலில் அது நிகழ்ந்திருக்கிறது.

-       பரவலாக அறியாத செய்திகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் பாங்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான நீண்டகால கடின உழைப்பு சார்ந்த அனுபவ வெளிப்பாட்டைக் காண்கிறோம்.

மருத்துவர், ஓவியக் கலைஞர், மெய்யியல் சார்ந்து தேடல்மிக்க ஆய்வாளர் கொ.றொ.கொண்ஸ்டன்ரைன் தமிழுக்கு புதிய துறையில் வளமான நூல் ஒன்றைக் கொடையளித்துள்ளார். இதற்காக உலகம் முழுதும் வாழும் தமிழ்ச் சமூகம் இவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.

வீ.அரசு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.