“சஞ்சாரம்” நாவலுக்காக 2018-ல் சாகித்திய அகாடமி விருது, மாக்சிம் கார்க்கி விருது, பர்தியா பாஷா பரிஷத் விருது போன்ற தமிழக அரசின் விருதுகள் உட்படப் பல அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

s ramakrishnan novel sancharamரத்தினமும் பக்கிரியும் இணைந்து நாதஸ்வரம் வாசிக்கின்றனர். ரத்தினம் மூத்தவர் திருமணமானவர்; பக்கிரி இளையவர் திருமணமாகாதவர். தனக்கு ஏற்படும் எல்லாவிதமான அவமானங்களையும் ரத்தினம் சகித்துக் கொள்பவர். ஆனால் பக்கிரி தனக்கு ஏற்படும் அவமானங்களை உடனடியாக நேர் செய்து விட விரும்புபவர். சாதிய நோக்கிலும் தான் அடையும் அவமானத்தை நேர்செய்ய நேர்கையில் சில உயிர்கள் பலியாவதற்குக் காரணமாகி விடுகின்றனர். இவர்கள் இருவரையும் காவல்துறை தேடுகிறது. பல ஊர்களுக்குத் தப்பியோடுகின்றனர். இறுதியில் அகப்படுகின்றனர். தண்டனை பெறுகின்றனர். இவர்கள் தலைமறைவாக வாழும் வாழ்க்கையின் வழியாக நாதஸ்வரக் கலையும் நாதஸ்வரத்தில் கோலோச்சிய கலைஞர்களும் அவர்களின் பெருமைமிகு வாழ்வும் காட்டப்படுகின்றன. முதூர், அரட்டானம், டெல்லி, கரிசங்குளம், உறங்காப்பட்டி, ஒதியூர், மருதூர், அருப்புக் கோட்டை, சிந்தேரி, கலிபோர்னியா கொடுமுடி, பனங்குளம், சென்னை, லண்டன், சோலையூர், காரியாப்பட்டி, பொம்மக்காபுரம், நாரைக் குளம், திருச்சுழி, நடுக்கோட்டை, கோயமுத்தூர், வேப்பங்காடு, புதுக்குடி, மதுரை, தொடுமாக்கல், தென்மலை, எனப் பல ஊர்களில் இந்த நாவலின் கதை நிகழ்கிறது.

கலைஞர்களின் இயல்பு

நாதஸ்வரக் கலைஞர்களுக்கு சில குணாதிசயங்களும் பழக்க வழக்கங்களும் பொதுவாக உள்ளன. இக்கலைஞர்கள் மீசை வைத்துக் கொள்வது கிடையாது. உடை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். சில்க் ஜிப்பா வேஷ்டி அணிவதுடன் தங்க முலாம் பூசப்பட்ட நகைகள், மோதிரங்கள் அணிந்து கொள்வர். நாயனம் வாசிப்பவர்கள் அவர்களுக்கான தோற்றத்தில் வாசிப்பதுதான் இயல்பாகும். இவர்கள் வெற்றிலை போடுபவர்களாகவும் மது அருந்துபவர்களாகவும் உள்ளனர் என்று சஞ்சாரம் நாவலிலும் சுட்டப்படுகிறது. இந்நிலையை சஞ்சாரம் நாவலில் “எண்ணெய் தடவி வாரிய நீண்ட தலைமுடி, ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்திருந்தார். இரண்டு கைகளிலும் மோதிரங்கள் மினுங்கின; எதுவும் தங்க மோதிரமில்லை. அலங்காரத்திற்காக வாங்கிய கல் மோதிரங்கள். ஜிப்பாவின் பையில் வெற்றிலையைச் சுருட்டி திணித்திருந்தான். (சஞ்சாரம்பக் 15) என்ற பகுதியின் மூலமாக அறிய முடிகிறது. நாதஸ்வரக் கலைஞர்கள் தங்களுக்கான தோற்றத்துடன்தான் இசைப்பர். இன்றைய காலங்களில் சில்க் ஜிப்பா அணியாமல் வேஷ்டி - சட்டை அணிவதுண்டு. அணிகலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் இன்றும் வெற்றிலை போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கலைஞர்களின் தொழில் நிலை

நாதஸ்வரக் கலையானது முந்தைய காலத்தில் மங்கள நிகழ்வுகளுக்கு முக்கியமான ஒன்றாகக் கருதப்பட்டது. சாதி வர்க்க நிலைப்பாடு மாறிய பின்பாக கலைஞர்கள் இழிவாக நடத்தப்பட்டனர். அவர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்காமலும் தொழிலாலும் கச்சேரிக்குக் கூப்பிடுவார்கள். அநாகரீகமான முறையில் நடந்து கொண்டும் அவமதித்துள்ளனர். இவற்றின் அடிப்படையில் உணரும் போது “முக்காலத்தைப் போல நிறைந்த வருமானம் இல்லையென்ற காரணங்காட்டிப் பல கோவில்களில் இவ்வித இசை மரபுகளைப் பரம்பரயாகக் காட்டிக் காத்து வந்த கலைஞர்களை வேலையிலிருந்து ஓய்வு பெறச் செய்வதோ அல்லது நீக்கம் செய்வதோ இயல்பாகிவிட்டது. (ஆலய வழிபாட்டில் இசை: பக் 21) என்ற நிலையைக் காணலாம். இவ்வாறாக சஞ்சாரம் நாவலிலும் தொழில் ஊதியத்தால் அவமதித்தல் முறையைக் காணலாம். திருவிழாவில் வாசிப்பதற்காக நாதஸ்வரக் கலைஞர்களை வரவழைத்தனர். ஊருக்குள் இரண்டு சாதியினருக்கு இடையில் சண்டை என்பது தெரியாமல் வாசித்த கலைஞர்களை அடித்தது மட்டுமல்லாமல், அவமதித்து அவர்களை ஊருக்கு வெளியே மரத்தில் கட்டிப் போட்டு அவமானப்படுத்தினர். அதிலிருந்து அவமானப்பட்டு உயிர் பிழைப்பதற்காகத் தப்பித்து ஓடினர்.

ஒரு கலைஞனுக்கு இவ்வகையான நிலை ஏற்படுதல் கூடாது என்ற நிலையை சஞ்சாரம் நாவலின் வழி ஆராயும் போது “நாயினக்கார நாயி எங்க வந்து திமிர காட்டுற என சிலர் ஆவேசமாகக் கத்தியபடியே இடையில் நுழைந்து தாங்களும் அடிக்க துவங்கினார்கள். பக்கிரி வலியைப் பொறுத்துக் கொண்டபடியே விழுந்து கிடந்தான்”. (சஞ்சாரம்: பக் 23) என்ற வரிகளால் அறியலாம். நாயனம் வாசிப்பவர்கள் அடித்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தற்காக அவர்களை இம்முறையில் நடத்தினர். மங்கல வாத்தியத்திற்காக மட்டும் இல்லாமல் ஊரில் பெரியோர்களாக மதிக்கக் கூடியவர்களை சிறப்பு செய்யவும் நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது. உள்ளூரில் வாசிக்கும் போது கலைஞர்களுக்கு ஊதியமானது குறைவான முறையிலே இருக்கும். ஆதலால், சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று அவற்றின் மூலம் அதிகமான பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் செல்வர். இவற்றில் புரோக்கரின் மூலமாக செல்பவர்கள் ஏமாற்றப்பட்டு சம்பளம் குறைவாகவே கொடுக்கப்படும். சஞ்சாரம் நாவலிலும் லண்டனுக்கு அழைத்துச் செல்வதாக கூட்டிப்போய் அங்கேயும் அலைக்கழிக்கப்பட்டு சரியான ஊதியம் கிடைக்காமல் சொந்த ஊருக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற எண்ணத்திலே இருப்பதாகக் காட்டப்படுகிறது. இவற்றை நாவலில் கூறுகையில் “நாதஸ்வரம் வாசிக்கத் துவங்கினார்கள். ஆனால் விருந்திற்கு வந்திருந்த ஒருவர் கூட அதைக் கேட்டதாகத் தெரியவில்லை. நம்மை ஏன் இப்படி கூப்பிட்டு வந்து அவமானப்படுத்துகிறர்கள் என கோபமாக வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் வாசித்தார்கள். (சஞ்சாரம்: பக்196) என்பவற்றால் அறியலாம்.

தேர்தல் வருமானம்

தேர்தல் வருவதை எண்ணி அரசியல்வாதிகளைக் காட்டிலும் இசைக்கலைஞர்கள் அதனை ஆவலுடன் எதிர்ப்பார்பார்கள். ஏனென்றால், அந்தப் பொழுதில் தான் அவர்களுக்கு வேண்டிய அதிகமான வருமானம் கிடைப்பதும் அவர்கள் விரும்பியதை வேண்டியதை, வாங்கிட சாப்பிட முடியும் என்ற ஆசையில் அதனை எண்ணிக் காத்திருப்பார்கள். சஞ்சாரம் நாவலிலும் தேர்தல் வருவதை எண்ணிக் காத்திருப்பார்கள். தேர்தலை ஒட்டி நாயனக்காரர்களை புக் செய்திருந்தார்கள். அவர்கள் தலைவர் நாமினேஷன் செய்ய வரும்போது வாசிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அவர்கள் தலைவர் வண்டி வந்தவுடன் வாசிக்க நினைத்த போது, வண்டி நிற்காமல் சென்றுவிட்டது. நாங்கள் வேகமாக வந்ததற்கு இவ்வளவுதான் மதிப்பா என்று எண்ணி காலை உணவு சாப்பிட சென்றிருந்தார்கள். அப்போது தலைவர் வண்டி கிளம்பியவுடன் ஒருவர் வந்து, 'எங்கே போய் தொலைஞ்சிங்க?' என்று திட்டினார். அன்றைய நாள் முழுவதும் ஒவ்வோர் இடமாக அலைய விட்டனர். மேலும் சஞ்சாரம் நாவலின் வழி நோக்குகையில் “அறிவு கெட்ட நாயி கொடுத்த காசை முழுங்கிட்டு ஏமாற்றப் பாக்குறயா? 'அடிக்காதீங்கண்ணே', 'செருப்பாலே அடிப்பேன் நாயே என தன் செருப்பை ஓங்கி அடித்தான் குமார்” (சஞ்சாரம். பக் 106] என்ற வரிகளால் அறியலாம். அரசியல்வாதிகள் கொடுத்த பணத்திற்காக இவ்வாறாக அவமானப்படுத்தப்பட்டார்கள். இன்றைய காலத்திலும் சாதி அடக்குமுறையால் அவமானப்படுத்தப்பட்டும் ஊதிய நிலையிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர்.

கலைஞர்களுக்குக் கிடைத்த சன்மானங்கள்

இசைக்கலைஞன் வாசிக்கும் இடங்களுக்கு ஏற்ப சன்மானங்கள் கிடைக்கின்றன. இசைக்காக மடம் ஒன்று செயல்பட்டு இசையை அது இலவசமாகக் கற்றுக் கொடுப்பதாக நாவலில் சுட்டப்படுகிறது. முந்தைய காலங்களில் மடங்களின் மூலம் மாணவர்களுக்கு வேண்டிய கலைகளை இலவசமாகக் கற்றுக் கொடுத்தனர். சஞ்சாரம் நாவலில் கிராமத்தில் இசை வாசித்த போது “நாலைந்து படி குருணை அரிசி, ரெண்டு சுரைக்காய், ஒரு பெட்டி நிறைய கேப்பை, சோளம் எல்லாமும் கொடுத்து 'எங்களாலே முடிஞ்சது' என்று சொன்னார்கள்” (சஞ்சாரம் பக் 248) இவ்வாறு ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றாற் போன்று சன்மானம் வழங்கப்படும். பணக்காரக் குடும்பங்களாக இருந்தால் பணமும் அதனுடன் மாமிசமும் கொடுப்பர். இன்றைய காலத்தில் அவ்வாறான சன்மானம் என்பது கிடையாது. அதிகமான இடங்களில் ரேடியோவின் மூலமாகவே அனைத்து இசைக் கருவிகளையும் வாசிக்க வைக்கின்றனர். கலைஞர்களின் வாழ்வானது இன்னல்கள் நிறைந்தவையாக உள்ளன.

கால மாற்றத்தால் நிகழும் கொடுமைகள்

கோயில் திருவிழாவிற்கு முதன்மையாக இருந்தவர்கள் இன்று கரகாட்டத்திற்கு வாசிக்கச் சென்று விடுகின்றனர். வேலைக்கு ஏற்ற சரியான ஊதியம் இல்லாததால் பரம்பரைத் தொழிலை விட்டு வேறு வேலைக்குச் செல்கின்றனர். கலைஞர்களுக்கான மரியாதை கிடைப்பதில்லை. சமூகத்தில் தாழ்ந்த சாதியினர் என்ற அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். கால மாற்றத்தில் பல இசைக்கருவிகள் தோன்றிய நிலையில் நாதஸ்வரத்தின் மகிமை குறைந்து வரும் நிலையே சஞ்சாரம் நாவலின் வழி பார்க்கையில் இறுதியில் கொடுமுடியில் ரத்தினமும் பக்கிரியும் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். இவற்றை நாவலின் வழி நோக்கும் போது “முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு எதுவும் தெரியாதவன் போல் 'என்ன விஷயம்?' என்று கேட்டான் பக்கிரி” வழி நோக்கும் போது “ரத்தினம் நடந்த எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாப்ல உன்னை அரஸ்ட் பண்ணி கூட்டிக்கிட்டுப் போக வந்திருக்கோம்” என்றான் போலீஸ்காரன்.

"நீ கொட்டகைக்கு ஏன் தீ வச்?

“எதுக்குடா உனக்கு இந்த வேண்டாத வேலை”

“சோற்றுல உப்பு போட்டுத் திங்குறேன்ல அதான்” (சஞ்சாரம்: பக்373) இந்த வரிகள் மூலம் அவர் உணர்வுகள் மற்றும் மனவேதனையை அறிய முடிகிறது.

துணை நூற்பட்டியல்

முதன்மைச் சான்று, எஸ். ராமகிருஷ்ணன் : சஞ்சாரம் 2017 இரண்டாம் பதிப்பு, தேசாந்திரி பதிப்பகம், சென்னை.

பி.எம். சுந்தரம், ஆலய வழிப்பாட்டில் இசை 1990, முதற் பதிப்பு இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

டாக்டர் பி.எம் சுந்தரம்: மங்கல இசை மன்னர்கள் 2001, முதற்பதிப்பு தியாகராய நகர், சென்னை.

மாணிக்கவாசகர்: திருவாசகம் 2021 முதற்பதிப்பு, பிரேமா பிரசுரம்,

இராச வசந்த குமார் : தேவாரம் முதற்பதிப்பு 2014, பன்னிரு திருமுறை ஆய்வு மையம், கற்பகம் பல்கலைக்கழகம், கோவை.

கட்டுரையாளர்கள்:

ஆய்வாளர்: பா.சாயாதேவி, முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர், பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்

& நெறியாளர்: முனைவர் து. வேணி, தமிழ்த்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.