தன்னைப் பற்றி அறியத் தொடங்கி, காலனியத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு உழைக்கும் ஓர் சமூகத்தின் சுயசரிதையாக எழுதி முடிக்கப்பட்ட கதைதான் ‘மலங்காடு’ எனும் வரலாற்று நூல். இந்த அரிய ஆவணத்தைத் தமிழில் முதலில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமூக விழுமியங்கள், கட்டமைப்பு, பண்பாடு எல்லாமே பஞ்சத்தால் எப்படி ஒரு சில பத்தாண்டுகளில் நூற்றாண்டுகளாய் மீள முடியாத நிலைக்கு மாறிடும் என்பதற்குச் சமகால சாட்சியமே மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

malangaadu19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டு காலனியச் சுரண்டல்களால் பல செயற்கையான பஞ்சங்கள் இந்தியா முழுவதும் நிலவி வந்தமை நாம் அறிந்ததே. இப்பஞ்சம் மக்களை நகரங்கள் நோக்கி நகரச் செய்தது. அதைக் கங்காணிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 1860களில் காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய தமிழகப் பகுதிகளில் இருந்து “மலையில் பணம் காய்க்கிறது, அதைப் பறிப்பதுதான் வேலை” என்று பாமர மக்களை ஏமாற்றிக் கூட்டிச் சென்றனர். வாழும் ஆசையோடு சென்ற பாமரர்களுக்குக் கிடைத்ததோ, சாட்டையின் கருந்தழும்புகளும், குருதி உறையும் வலியுமேயாகும். இவ்வாறாக, மக்களை வால்பாறைக்குக் கொண்டு வந்தனர். இந்த வலியோடும், உண்மையோடும் நூல் தொடங்குகிறது.

400, 500 கிலோ மீட்டர் நடந்தே சென்றவர்களுக்குக் கிடைத்த முதல் அனுபவமே மனிதன் என்ற அடையாள (உரிமை) இழப்புதான். மிஷல் ஃபூக்கோ சொல்வது போல, ‘கண்காணிப்பு’ எனும் அதிகார ஆயுதம், கங்காணிகள் மற்றும் வாச்சர்மாரைக் கொண்டு அவ்வளவு துல்லியமாகப் பேணப்பட்டது.

தொழிலாளர்கள் முதல் ஐந்து ஆண்டுகள் அங்கே பாதை அமைக்கவும், நிலங்களைச் சமன் செய்யவும் மிளகு முதலிய வாசனைப் பொருட்களைப் பயிரிடவும் செய்தனர். இந்த முயற்சி தோல்வியுறவே, சீனத் தேயிலைகள் பயிரிடப்பட்டன. நாலரை ஏக்கரில் பயிரிடப்பட்ட பகுதியின் பெயரும் 'நாலரை ஏக்கர்'தான். இதுபோன்ற வரலாற்றுச் செய்திகளைச் சமகாலத்தோடு பொருத்திச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். இன்று வரை அஞ்சி ஏக்கர், ஒன்பது ஏக்கர், 10ஆம் நம்பர், 12ஆம் நம்பர் என நில அளவுகள் வைத்தே இடங்கள் அறியப்பட்டு வருவதை மூணார் சென்றபோது அறிய முடிந்தது. இந்தத் தோட்டத்தில்தான் நீண்ட காலனியச் சுரண்டல் தொடங்குகிறது.

வெக்கை முதலிய படைப்புகள் கீழ்வெண்மணி என்னும் கள ஆய்வை மேற்கொண்டவர்களின் கருத்துகளாக இருக்க, செந்நெல் களத்தில் நின்றவர்களின் கருத்தாக, உள்ளதை உள்ளபடியே ஒரு புனைவும் இன்றி விளக்கியது போல், மக்கள் பகிரும் செவி வழி செய்திகள் மூலமாகவும் எரியும் பனிக்காடு நாவலின் கருத்துக்களின் வழியாகவும் அறியலாகும் செய்திகளைக் கடந்து இந்நூலின் ஆசிரியர் கள ஆய்வை களத்தில் ஒரு பகுதியாக இருந்து தோட்ட அடிமைத்தனத்திலிருந்து வெளியில் வந்து முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் எனும் நிலையில் கல்வியைக் கற்றுத் தருவதோடு அந்தக் களத்தையும் உள்ளபடியே விளக்குகிறார்.

லண்டன் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்பட்ட மூணாறு தேயிலை உலகச் அளவில் சந்தைப்படுத்தப்பட்டதைக் கூறுகிறார். இதற்காக, ஜே.டி. முன்ரோ திருவிதாங்கூர் அரசர்களுடன் 2000 ஏக்கர் நிலத்தையும் எவ்வித கால வரையறையும் இன்றி, தந்திரமாக ‘கருப்பு ஒப்பந்தம்’ போட்டார். இந்த நிலம் 30 ஆண்டுகளில் 9000 ஹெக்டேரை எட்டியது எனும் வரலாற்று விவரத்தை அரசு மற்றும் கம்பெனி ஆவணங்களின் அடிப்படையில் ஆசிரியர் விளக்குகிறார்.

முதலாம் தலைமுறையினர், காடுகளை அழித்துத் தேயிலைகளைப் பயிரிடுவதையே அவர்களின் வாழ்க்கையாக அமைத்தனர். அவர்களுக்கு முறையான உணவு, ஓய்வு, உரிமை என்று எதுவுமே அளிக்கப்படாமல் அவர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்பட்டனர். எப்போதும் ஓய்வின்றி மலைகள் மீது ஏறி இறங்கும் குதிரைகளைக் காணும்போது தொழிலாளர்களுக்குத் தங்களைக் காண்பது போலத் தோன்றியது. காரணம் பேசுவதற்கும் அழுவதற்கும் இறப்பதற்கும் கூட கடிவாளம் (உரிமை) அதிகாரிகள் கைகளில் போனது. ஒரே ஒரு கம்பளி - அதை அணிந்து கொண்டே வேலைக்குச் செல்ல வேண்டும்; வீட்டிற்கு வந்தால் போர்த்திக் கொள்ளவும் அது மட்டுமே. மழைக்காலங்களில் நனைந்தால், அந்த ஈரச் சாக்கினைப் பிழிந்து அப்படியேதான் பயன்படுத்தியாக வேண்டும், வேறு வழியில்லை. கூன்வண்டுகளும், பூச்சிகளும், அட்டைகளும் காலனியர்கள் மற்றும் கங்காணிகளோடு சேர்ந்து அவர்கள் இரத்தத்தை மேலும் உறிஞ்சின. தப்பித்துச் செல்வதற்கும் வழியில்லை. ஒரு மலையில் இருப்பவர்களுக்குப் பக்கத்து மலையில் என்ன நடக்கிறது, மனிதர்கள் இருக்கிறார்களா என்று கூடத் தெரியாது. எப்படியாவது தப்பித்துச் செல்லலாம் என்றால், வேறொரு எஸ்டேட்டில் உள்ள காவலர்களிடம்(வாச்சர்) மாட்டிக் கொள்வார்கள்; நரகம் மேலும் நரகமாகிவிடும்.

ஓய்வெடுக்க விடாமல் உழைப்பை உறிஞ்சியதால், தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கோபம் உடல் பலம் இருந்தும், துப்பாக்கியால் மறைந்தது. அப்படி துப்பாக்கிக்கும் சாட்டையடிக்கும் பயந்துபோன வாழ்க்கையிலும் காதல் துளிர்க்கத்தான் செய்தது. முதலாம் தலைமுறையிலிருந்து அதிகமாகத் தப்பித்துச் செல்கிறார்கள் என்பதற்காக ஆங்கிலேயர்கள் கையாண்ட வேறோர் உத்தி, மக்களின் காதல் உணர்ச்சியை அவர்களின் தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டது.

இந்தத் தருணத்தில் கங்காணிகள் (கலாசாரக் காவலர்கள்) காதலை எதிர்க்க, அவர்களை ஆங்கிலேயர்கள் கடிந்து, மக்களை காதல் செய்ய அனுமதித்தனர். இது தப்பித்துச் செல்லலாம் என்ற எண்ணத்தை மாற்றி, குடும்பம் என்ற வலைக்குள் சிக்க வைக்கச் செய்த சூழ்ச்சி.

இதுதான் ஆங்கிலேயர் மூளை என ஆச்சரியப்படுவதற்குள், ஆசிரியர் மேலும் ஓர் அதிர்ச்சியைத் தருகிறார். கங்காணிகள் ஒருபடி மேலே சென்று, தமிழ்நாட்டின் குலதெய்வங்களான கருப்பசாமி, மாடசாமி, முனியாண்டி, முனீஸ்வரன் போன்ற நாட்டார் தெய்வங்களை எல்லைத் தெய்வங்களாக்கி தொழிலாளர்கள் தப்பித்துப் போவதைத் தடுத்தனர். 1915-க்குப் பிறகு, ஐந்து தலைமுறைகளாகத் தெய்வத்தின் மீதும், 'கடன் வாங்கிவிட்டோம்' என்றதாலும் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். கம்பளிக் கடனையும், முன்பணமாகக் கம்பெனிக்காரர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட பணத்தையும் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்து கழிக்க முடியாமல், தலைமுறை தலைமுறையாய் அங்கேயே உழைத்து மடிந்தனர். ஏழைகளுக்குக் காவல்துறை, சட்டங்கள் எது மாறினாலும், அறத்தால் அவர்கள் எப்போதும் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அவ்வப்போது கங்காணிகள் துளியும் இரக்கமில்லாமல் நடக்கும்போது, மக்களிடமிருந்து வெடித்த வன்முறையை சில நபர்கள், “அதிகாரத்தைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்” என சண்டையைத் தணிக்கும் சாந்தக் குரலாக இருந்து கொண்டேதான் இருந்தனர். சேர, சோழ, பாண்டியர்கள் ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள்; வடநாட்டில் இருந்து வந்தவர்கள்தான் இவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, மக்களை அடக்கி ஆள முடியும் என நினைத்தனர் என்று கூறும்போது, வேலாயுதம் சொன்னார், "இப்போது நாம் ஆங்கிலேயர்களின் அடிமைகள். அந்தக் காலத்தில் பண்ணையார்களின் அடிமைகள் - அவ்வளவுதான் வித்தியாசம்." இப்படி மக்கள் ஏமாற்றத்திற்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டதை அவர்கள் குரல் வழியாகவே நம்மிடம் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர்.

கங்காணிகளின் கொடுமைகளை ஆங்கிலேயத் துரைகளிடம் நேரடியாகச் சொல்லிவிடலாமா என அவர்கள் துணிந்தபோது, அது மிக மோசமான முடிவாக அமைந்தது. காரணம், கோள் சொல்பவர்களை ஆங்கிலேயர்கள் முழுமையாக நம்பினர். இது 'மொழியாகிய தமிழ்' என்ற நூலில் நா. கோவிந்தராஜன், ஆங்கிலேயர்களுக்கும் மக்களுக்கும் இடையே துபாஷிகள் செய்த தந்திரங்களை நினைவூட்டுகிறது.

1920 முதல் கம்பெனி அனுமதியுடன் கங்காணிகள் முண்டாசும் கோட்டும் அணிந்து, தங்களை 'நவயுகக் காலனியாளர்களாகவே' மேல்நிலையாக்கம் செய்து கொண்டனர். புதிதாக மோட்டார் சைக்கிள், இயந்திரங்கள் வரும்போது, ஆங்கிலேயர்களும் கங்காணிகளும், தொழிலாளிகளும் ஆச்சரியத்தோடு பார்த்தனர். இயந்திரத்தைக் கண்டு களி கொள்ளும் மனம், தொழிலாளிகளைப் பார்த்துக் கருணை கொள்ளவில்லையே என ஆசிரியர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். வருவாயைப் பன்மடங்காக்கும் இயந்திரத்தின் மீது வரும் அக்கறை, அடிமைகள் மீது எப்படி வரும்? துன்பத்தில் இருப்பதோ தொழிலாளிகள், ஆனால் மீட்பர் எனும் இயந்திரம் வந்தது வியாபாரிகளுக்கே.

எப்படியோ, ஆங்கிலேயர்களுக்கான ‘குட்டி லண்டனாக’ மாற்ற ரயில் பாதைகள் போடப்பட்டன, எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அதை உருவாக்கிய தொழிலாளர்களுக்கு அது நரகம் ஆனது. தொழிற்புரட்சியால் விளைந்த இயந்திரங்களை இறக்குமதி செய்த ஆங்கிலேயர்கள் ஏனோ தொழிலாளர் சட்ட நெறிமுறைப் புத்தகங்களை அவர்கள் நாட்டிலேயே வைத்துக் கொண்டனர். அதுவரை தத்துவப் பார்வையில் விவாதிக்கப்பட்டிருந்த காலத்தை அகவயமானதாக (Subjective) மாற்றினர். கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டு கண்காணிப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது. ரயிலில் கருப்புக் கோட்டு அணிந்து வந்த 'நிறுவை கண்காணிமார்' கைகளில் கடிகாரத்தை அணிந்திருந்தனர். உழைப்பைச் சுழற்சி முறையில் உறிஞ்சித் தள்ளினர். தற்போதும் சுழற்சி முறையில் இரவும் பகலும் யாருக்காகவோ உழைத்துக்கொண்டே இருக்கிறோம்.

முதல் இரண்டு தலைமுறைகள் தமது வாழ்க்கையை உழைத்தே பழக்கப்படுத்திக் கொண்ட நேரத்தில், இயற்கையும் இவர்களுக்கு இழைத்த துரோகமே 1924 ஆம் ஆண்டு பெய்த வரலாறு காணாத மழை. எஸ்டேட்டுகளில் வெள்ளம் வந்து, ரயில்களும் ரயில் பாதைகளும் மாட்டுப்பட்டி நகரமும் மண்மூடிப் போயின. கொத்துக் கொத்தாக எத்தனை மக்கள் மாண்டனர் என்பது இன்றுவரை யாரும் அறியாத காலனின் கணக்குகள். ஆனால் அதை அறிந்த காலனிய காலன்கள் வெறும் 33 பேர் என்றே கணக்கு எழுதினர்.

ஆங்கிலேயர்களின் கொடுமைகளை எடுத்துரைக்கும் ஆசிரியர், எந்தவிதப் போராட்டமும் இல்லாமல், சாதியப் பாகுபாடு இன்றி அடிப்படைக் கல்வியை (ஐந்தாம் வகுப்பு வரை) ஆங்கிலேயர்களே வழங்கினார்கள் என்பதையும் நேர்மையுடன் பதிவு செய்கிறார். தொழிலாளர்கள் அனைவருமே சுரண்டப்பட்டதால், அவர்களுக்குள் சாதி, மத பேதங்களால் அவ்வப்போது ஏற்பட்ட சிறிய சலசலப்புகள் பெரிதாகவில்லை. மக்கள் விடுமுறைகளை மத நல்லிணக்கத்துடன் கொண்டாடினர்.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் இடைவிடாது போராடத் தொடங்கியபின் சம்பளம் ஒரு அணாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்வதற்கு ஏறத்தாழ 50 ஆண்டுகள் தேவைப்பட்டன. பிரசவ விடுமுறை வெறும் ஒரு வாரம் மட்டுமே அளிக்கப்பட்டது. குழந்தைக்குப் பால் கொடுக்கக்கூட விடாமல் பெண்களை வேலை வாங்கியதால், பசி, தாகம், அட்டைக்கடி ஆகியவற்றால் குழந்தைகள் இறந்தன. இதனால் ‘பிள்ளைக் கஞ்சிப் போராட்டம்’ ரோசம்மா அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முதல் வெற்றியாக, குழந்தைகளைப் பராமரிக்க ஒரு தனிப் புள்ளகுடிசும் (creche) மேற்பார்வையாளரும் அமைக்கப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களுக்கு கலை ஒரு முக்கிய ஊடகமாக இருந்தது என்பதை இளையராஜாவும் அவரது அண்ணனும் செய்த கள மற்றும் கலைப்பணியை ஆசிரியர் சுட்டுகிறார். ஆனால், 'முதலாளித்துவத்துடன் காங்கிரஸ் தொழிற்சங்கம் சமரசம்' செய்தது என்ற குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, 1958-ஆம் ஆண்டு நடந்த 'அக்டோபர் புரட்சி' பற்றிய குறிப்பு, தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் பிளவுகளையும் தீவிரமான போராட்ட வரலாற்றையும் வெளிப்படுத்துகிறது.

1963-ல் எஸ்டேட் இந்திய வம்சாவளியினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும், ஆங்கிலேயர்கள் 1969 வரை அங்கேயே இருந்தனர். இதற்கு 'எஸ்டேட்டின் காலச்சூழல், இடம் போன்றவற்றால் ஏற்பட்ட பற்று' காரணமாக இருக்கலாம் அல்லது 'வேறு ஏதேனும் தெரியாத காரணமாக இருக்கலாம்' என்று ஆசிரியர் கூறுகிறார். 110 ஆண்டுகாலத் தங்கள் சேகரங்களை அவர்கள் நிதானமாகத்தானே ஏற்றுமதி செய்திருக்க முடியும்!

கேரள அரசாங்கத்தின் அலட்சியத்தால் மலையாளம் இன்றளவும் அந்நிய மொழியாகவே நீடிப்பது, தமிழ்த் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்கும் நிர்வாகப் போக்கினைக் காட்டுகிறது. கேரளப் பொதுச் சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் தொழிலாளர்களுக்குத் தெரியாமல் போனது. குறிப்பாக, 2004 வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளுக்காக மட்டுமே மலையாளச் செய்தித்தாள்களைத் தேடிச் செல்லும் நிலை இருந்தது. சாதி, வருமானம், இருப்பிடம் போன்ற அத்தியாவசியச் சான்றிதழ்களை மறுப்பது, இருப்பிடச் சான்றுக்குப் பதிலாகத் தற்காலிக வசிப்பிடச் சான்றைத் தருவது, வேண்டுமென்றே பெயர்களை மாற்றுவது போன்ற தேவிகுளம் வில்லேஜ் ஆபீஸின் செயல்பாடுகள், காலனிய ஆட்சிக்குப் பின்னும் அரசு அலுவலகங்கள் 'அடித்தட்டு வர்க்கத்தை வேட்டையாடும்' இடங்களாகவே நீடிக்கின்றன என்ற உண்மையைச் சுட்டுகின்றன. கேரள மாநில உருவாக்கத்திற்கு முன்பே மூன்று தலைமுறைகளாக 9,000 ஏக்கர் மலைக்காடுகளை கேரளத்தின் அழகியல் முகமாக மாற்றியவர்களை, அதன் பிறகும் இரண்டு தலைமுறைகளாக உழைத்து வருபவர்களை நோக்கி, “நீ கேரளத்தில் வாழ்ந்ததற்குச் சான்றுகள் எங்கே?” எனக் கேட்பது வேடிக்கையாக உள்ளது. தகவல் மற்றும் கல்வி மறுப்பால் 'வரலாறற்றவர்களாக' திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மக்களின் அவலத்தை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. அதிகாரம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை ‘மனிதத்தன்மை நீக்கம்’ (De-Humanize) செய்யும் என்ற மிஷல் ஃபூக்கோவின் கருத்தின் வழி தொழிலாளிகளின் மனநிலையைத் தத்துவார்த்த ரீதியாகப் புரிந்துகொள்ளலாம்.

போனஸ் குறைப்புக்கு எதிராக அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து பெண்கள் மட்டுமே முன்னெடுத்த ‘பொம்பள ஒருமை (பெண்கள் உரிமை)’ போராட்டம், கேரளாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திருப்புமுனையாகும். 'கொழுந்தெடுப்பது நாங்க, கொள்ளையடிப்பது நீங்க' என்ற முழக்கத்துடன் தினக்கூலியை ₹236-லிருந்து ₹401-ஆக உயர்த்த வைத்த இப்போராட்டம், சுயேச்சையான போராட்டங்களின் வெற்றியைச் சுட்டுகிறது. இப்போராட்டத்தின்போது, பெண் போராளிகளை ஆண்கள் ஜீப்பில் அழைத்து வருவதும், அருகே இருந்த கடைகளிலிருந்து வழங்கப்பட்ட உணவும் இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு துணை நின்றன.

காலனியக் காலகட்டத்திற்குப் பிறகு, சுதந்திர மண்ணில் சுதேசிகளால் ஆட்சியும், அரசும், தொழிற்சங்கங்களும் (இடது/வலது) முதலாளித்துவத்திடமிருந்து தொழிலாளியை விடுவித்தார்களா என்றால், இல்லை. சில நல்ல மாற்றங்கள் வந்தாலும், தொழிலாளர்கள் இன்னும் நிலையான வாழ்க்கையும், நிலைத்த அடையாளமும் இல்லாமல் எஸ்டேட்டுகளில் உழல்கின்றனர். படித்து அரசு வேலைக்குச் செல்வோர் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். எஸ்டேட் வேலை இல்லையென்றால் ஜீப், ஆட்டோ, ரிசார்ட், சிறிய கடைகள் என எஸ்டேட்டைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை வட்டமிடுகிறது என்ற கசப்பான எதார்த்தத்துடன் நூல் முடிவடைகிறது.

'மலங்காடு' நூல் ஒரு நாவல் என்ற வரையறையைத் தாண்டி, காலனியச் சுரண்டலுக்கு உள்ளான உழைக்கும் சமூகத்தின் சுயசரிதையாக, அழுத்தமான ஒரு சமூக வரலாற்று ஆவணமாக நிலைபெற்றுள்ளது. ஆசிரியர் வரலாற்றுச் சான்றுகளுடன் மக்கள் கதைகளைப் பொருத்தி, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது நூலின் பெரும் பலம். வரும் பதிப்புகளில், தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியின் வரைபடத்தைச் சேர்ப்பது, தமிழக வாசகர்களுக்கு அதன் நில அமைப்பையும் வரலாற்றுப் பின்னணியையும் எளிதில் புரிந்துகொள்ள உதவும். மேலும், மெட்ராஸ் பிரசிடென்சி, திருவிதாங்கூர் சமஸ்தானம், பிரிட்டிஷ் கம்பெனி தொடர்பான முக்கியமான சில ஆவணங்களை 'பின்னிணைப்பு' பகுதியாகக் கொடுத்தால், சுயசரிதை வரலாற்று கதையின் ஓட்டத்தைத் தடை செய்யாமல் வாசகர்களுக்கு மேலும் ஆழமான வரலாற்று நம்பகத்தன்மையை அளிக்கும்.

திணைக் கடவுள் முருகன் என்பதால், பழங்குகள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் போன்ற அனுமானங்கள் ஏற்புடையனவாக இல்லை. 150 ஆண்டு கால சமூகப் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதில் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேறியவர்களின் நிலையையும் பண்பாட்டுக் கூறுகளையும் பதிவு செய்வதில் சில போதாமைகளை ஏற்படுத்தியது.

எனினும் இது போன்ற குறைகள், இந்நூலின் மகத்தான வரலாற்றுப் பங்களிப்பில் நெருடாமல் கரைந்து போகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் நூற்றாண்டுக் கால வரலாற்றைத் தமிழ்ச் சமூகத்திற்குக் கொண்டுவந்துள்ளார் ஆசிரியர்.

- பிடல் காஸ்ட்ரோ மு, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.