book udayஎழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் கவிஞராக, சிறுகதை ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, கட்டுரையாளராக, குழந்தை இலக்கிய எழுத்தாளராக திகழ்ந்து வருகிறார். அவருடைய பல்வேறு படைப்புகள் இலக்கியத்திற்கான விருதுகளைப் பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பிலும் அவருடைய ஈடுபாட்டையும் அவரது தனித் திறமையையும் காட்டி வருகிறார். அவர் மீடியா வாய்ஸ் என்ற பத்திரிகையில் தொடராக தன்னுடைய நினைவுகளை எழுதினார். அவ்வாறு எழுதியவற்றைத் தொகுத்து நூலாகக் கொடுத்துள்ளார்.

‘நினைவு என்னும் நீள் நதி’ என்ற இந்த நூலின் அட்டையிலேயே குறிப்புகள் உள்ளன. இன்னும் சில நண்பர்கள், எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் என்று இந்தப் புத்தகம் எதைப் பற்றிப் பேசுகிறது என்பதைக் குறித்துள்ளார். தன்னுடைய சிறுவயதில் உடன் படித்த நண்பர்களைப் பற்றியும், தன் மனதிற்குப் பிடித்த ஆதர்சமான தோழமையான மரியாதைக்குரிய எழுத்தாளர்கள் குறித்தும் இந்நூலில் எழுதியுள்ளார். முன்னுரையில் அதற்கான காரணங்களையும் இறுதியாக அமைந்துள்ள வண்ணதாசன் குறித்த கட்டுரை தன்னுடைய வலைப்பூவில் வந்துள்ளதையும் கூறியுள்ளார்.

இந்த நூல் 24 நினைவுகளைப் பேசுவதாக அமைகின்றது. குறிப்பாக தன் நண்பர்களையும் சக எழுத்தாளர்களையும் ஒளிவுமறைவின்றி இயல்பான நடையில் தன் மனதுக்குள் தோன்றிய எண்ணங்களை அப்படியே வாசகர்களுக்கு விருந்தாக எழுதி வைத்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் இயல்பான நடையில் அமைந்துள்ளது.

அதுமட்டுமன்றி தன் தாத்தா பாட்டி அவர்களுக்கு இடையேயான வாழ்க்கைத் தொடர்பானவற்றையும் தனக்கு நேர்ந்த துன்பங்கள், இலக்கிய வட்டத்தில் தான் சேர்ந்தபோது அடைந்த அனுபவங்கள், தனக்கு உதவி செய்த நண்பர்கள் குறித்தும் மிக சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

தன் பணி அனுபவத்தில் என்ன நடந்தது என்பதையும் மிக நேர்மையாகப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையின் தலைப்புகளும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ‘வெயில் மழையெனப் பொழியும் நிலவெளியிலிருந்து’ என்ற முதல் கட்டுரையில் தன்னுடைய ஊர் குறித்தும் இறுதியில் புதுமைப்பித்தனைப் பற்றியும் சொல்லி வாசகர்களை அக்காலத்திற்கு உடன் அழைத்துச் செல்கிறார். ஆசிரியரின் இயல்பான நடையால் நாம் அவருடன் அவர் வாழ்ந்த உலகத்திற்குச் செல்கிறோம்.

கோவில்பட்டியில் நடந்த அரசியல் குறித்தும் இலக்கிய அரசியல் குறித்தும் அங்கு நடைபெறும் வேலைவாய்ப்பு இன்ன பிறவற்றையும் நம்முன் காட்டுகிறார். 'புரட்சியின் கண்ணீர்’ என்ற கட்டுரையில் கந்தசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட புரட்சி என்பவரின் பெயர் வந்த நோக்கம், அவருடன் ஏற்பட்ட நட்பு 'ஜான் ரீடு எழுதிய உலகைக் குலுக்கிய பத்துநாட்கள்’ என்ற நூலைப்பற்றி அவர்கள் பேசிக் கொண்ட விதங்கள், இறுதியில் புரட்சி வரவே வராதா? என்று கேட்ட புரட்சியின் கேள்விக்கு என்ன பதில் தந்தார் என்பதையும் கட்டுரையில் பதில் அளித்துள்ளார்.

தனக்குக் கிடைத்த சூழ்நிலையையும் ரயில்வே நிலைய உதவி அதிகாரி என்ற வேலையையும் பதிவு செய்து, அங்கு இருந்த ராமசாமியின் உதவியை இந்தக் கட்டுரையில் அவர் பேசியுள்ளார். விழுப்புரம் கோட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருக்கும் வேளானந்தல் ரயில்வே ஸ்டேஷனில் அவர் பணி புரிந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தில் பணிபுரிந்த அனுபவங்களையும் எழுதியுள்ளார்.

'வெங்காச்சி சொல்லியது’ என்ற கட்டுரையில் விடுமுறையில் அவ்வப்போதும் சில நேரங்களில் ஆச்சி வீட்டிற்குச் சென்ற விதத்தினையும் சொல்லியுள்ளார். தன்னுடைய ஊரில் இருந்த வெம்மையையும் நெல்லையில் இருக்கின்ற சூழலாலும் ஆச்சியின் வீட்டுக்குச் செல்வது வழக்கமாக இருந்ததும் எழுதப்பட்டுள்ளது.

அங்கே சென்று தாமிரபரணியில் நீராடிய செய்தியையும் தனக்குக் கிடைத்த அனுபவங்களையும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க முடிகின்றது. மொழியின் சிறப்பையும் சிறப்பாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

'சின்னப்பாண்டியின் அறம்’ பற்றிய நட்பை விரிவாகப் பேசியுள்ளார். கத்திரிக்காய் என்று தனக்குப் பட்டப்பெயர் வைத்து அழைத்ததையும் ஆசிரியர் சொல்லத் தவறவில்லை. இந்தக் கட்டுரையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவினைக் குறிப்பிட்டுள்ளார்.

படிப்பில் மெதுவாக இருக்கும் சின்னப்பையன் விளையாட்டில் அசுரனாக விளங்கிய சிறப்பினையும் கூறியுள்ளார். பிறகு இலக்கிய நண்பர்கள் வட்டத்தைக் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நாறும்பூநாதன், முத்துச்சாமி, மந்திரமூர்த்தி, ராமலிங்கம்பிள்ளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

தன் நண்பன் பெட்டிக்கடை வைத்திருந்ததையும் அங்கு சென்று சிகரெட் வேண்டுமென்று கேட்டபோது சின்னப்பாண்டி அடைந்த மன வருத்தத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

'சந்திரனின் காதலிகள்’ என்ற கட்டுரையில் இளமைக் காலங்களை மிக சுவாரஸ்யமான நடையோடு எழுதியுள்ளார். தன்னுடன் இருந்த நண்பர்கள் என அனைவரும் ஆளுக்கொரு பெண்ணை விரும்ப வேண்டும் என்ற சூழலையும் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்கள் பலவாறு பேசிக் கொள்கின்றனர். இப்படி இளமைக்காலத்தை நினைவுபடுத்தி எழுதியுள்ளதை அறிய முடிகின்றது. 'கு.அழகிரிசாமியின் ஆவி’ இந்தக் கட்டுரையில் குமாரபுரம் ஸ்டேஷனில் நடந்த கதை, நண்பர்கள், இயற்கை நடப்பு, சூழ்நிலை, அமைதி என எல்லாவற்றையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

'அப்பா என்றொரு மனிதர்’ என்ற கட்டுரையில் அப்பாவின் இயல்பினை மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார். அப்பாவின் மீது கொண்ட அன்பு, அப்பாவின் செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களையும்; ஆசிரியர் வழியில் நாமும் நம் அப்பாக்களை நினைக்க வைப்பதாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.

இது ஒரு சிறுகதையைப் படிக்கின்ற உணர்வினை நமக்குத் தருகின்றது. இயல்பான கட்டுரையாகவும் அமைகின்றது. இதனைப் படிக்கும்போது அவரவரது அப்பா கண்டிப்பாக நினைவுக்கு வருவார் என்பது திண்ணம். 'கந்தசாமியின் கணக்கு’ என்ற கட்டுரையில் நண்பர்கள் தேர்வு எழுதுவதற்காகத் திருவனந்தபுரம் செல்கின்றார்கள்.

தேர்வு எழுதாமல் ஊரைச் சுற்றிவிட்டு திரும்பிச் செல்லும்போது கந்தசாமியிடம் மட்டுமே பணம் இருக்கின்றது. நாகர்கோவிலில் உள்ள திரையரங்கில் உமர்முக்தார் திரைப்படம் ஓடுகின்றது.

அப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று நண்பர்கள் முடிவு செய்கின்றனர். கந்தசாமியிடம் பேசி பணத்தை வாங்குகிறார்கள். பிறகு ஊருக்கு வந்த பிறகு பணம் தருவோம் என்று நண்பர்கள் சொல்கின்றனர். ஆனால் ஊர் வந்த பிறகு பணம் கொடுத்தார்களா? இல்லையா? என்பதை இந்தக் கட்டுரை காட்டுகின்றது.

பத்தாவது கட்டுரையில் ராக்கையா எம்ஜிஆர் என்பவர், எம்ஜிஆர் மீது எந்த அளவு அன்பு வைத்திருந்தார் என்பதை இவரது எழுத்தின்வழி அறிந்து கொள்கிறோம். எம்ஜிஆர் ரசிகன், பாடம், திருமணம் எனப் பலவற்றை இதன்மூலம் அறியமுடிகின்றது.

'நாகுவின் கோல்’ என்ற கட்டுரையின் மூலம் நம்மை இளமைப்பருவத்திற்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். குறிப்பாக விறகுக்கட்டை வைத்துக்கொண்டு கிரிக்கெட் ஆடிய அனுபவம் எனக்கும் உண்டு. அந்த அனுபவத்தை இங்கு நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடிகின்றது.

முதன்முதலில் உண்மையான ஹாக்கிபேட்டை எடுத்துக்கொண்டு சென்ற விதத்தினை அறிகின்றோம். தன் தந்தை துரைராஜ் குடும்பத்தில் வேலை செய்ததையும் குறிப்பிட்டுள்ளார். துரைராஜ் அவரது பணி, தன்னுடைய விளையாட்டு, ஹாக்கி மீது கொண்ட ஈடுபாடு போன்றவற்றையும் குப்புசாமி நாயுடு அகில இந்திய ஹாக்கி மைதானம் தோன்றிய விதத்தையும் இந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

நாகுவின் கோலால் இவருடைய ஹாக்கி சிறுவர் அணி வெற்றி பெற்றதையும், அதை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்பதையும் இந்த இடத்தில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

'கவாஸ்கரின் ஸ்கொயர்கட்டும் கண்ணனின் காதலும்’ என்ற கட்டுரையில், கல்லூரியில் நண்பன் கண்ணன் நளினா மீது காதல்கொண்டு இருக்கின்றார். கிரிக்கெட் விளையாட்டு, பரிசு, பாராட்டு என்பவற்றைக் கண்ணன் பெறுகின்றார். நளினா வீடு அருகிலிருக்கும் சுந்தரேசனின் வீட்டிற்குச் செல்கிறார்.

அந்தப் பெண் மீது ஆசைப்படுகின்றார். கிரிக்கெட் விளையாடுகின்றார். அதற்காக கண்ணன் கவாஸ்கர் ஸ்கொயர்கட் எல்லாம் செய்கின்றார். இறுதியில் அந்தப் பெண் அவர்கள் குடியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறுஇடம் செல்கிறார் என்ற செய்தி கேட்டு வருத்தப்படுகிறார்.

இப்படித் தன் இளமைக்காலக் கல்லூரி வாழ்க்கையை ‘கவாஸ்கரின் ஸ்கொயர் கட்டும் கண்ணனின் காதலும்’ என்ற கட்டுரையில் சிறப்பாக எழுதியுள்ளார்.

'பரியும் நரியும்’ என்ற கட்டுரையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நகைச்சுவையோடு எழுதியுள்ளார். ரயில்வேயில் வாடிக்கையாளர்கள் சில பொருட்களைப் பார்சல் செய்து அனுப்புவார்கள். அப்படியே ஒருவர் போமரியன் நாயை அனுப்பினார்.

ஆனால் பெட்டியில் தெருநாய் இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார். தன் நண்பன் தன்மீது வைத்திருந்த அன்பையும் புலியையும் பார்சல் செய்ய வந்த செய்தியையும் இந்தக் கட்டுரையில் அறிய முடிகின்றது. 'அன்பின் பேராற்றில்’ என்ற கட்டுரையில் இலக்கிய நண்பர்களான பவா, கருணா என்பவர்களின் அறிமுகத்தையும் அவருக்கு அவர்கள் செய்த அன்பினையும் மரியாதையும் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

இது ஆசிரியரின் நன்றி மறவா பண்பினைக் காட்டுகின்றது. மேலும் பதவி உயர்வு பெற்ற காரணத்தாலேயே அங்கிருந்து விருத்தாச்சலம் செல்ல நேர்ந்ததையும் அறிந்துகொள்ள முடிகின்றது. மிகச் சிறந்த ஒரு கட்டுரையாக இந்தக் கட்டுரையை நாம் பார்க்க முடிகின்றது.

'இன்னும் மீதமிருக்கும் கிராமியப்பாடல்’ என்ற கட்டுரையில் திருச்சி எழுத்தாளர்கள் பற்றியும் பயிற்சி பற்றியும் அறியமுடிகின்றது. நண்பர்களின் தொடர்புகள் குறித்தும் நூல் குறித்தும் அவர்களுக்கும் தனக்குமான அன்பு, உறவு குறித்தும் இதன்வழி நாம் அறிகின்றோம். Ôஎன் தோழர் மாமா சக்தி பயில்வான்’ என்ற கட்டுரையில் தன் அப்பாவின் நண்பரான சக்தி பயில்வான் குறித்த பதிவினை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

செங்கொடி ஊர்வலம், சமூகப்பிரச்சினையைத் தீர்த்து வைத்தவிதம் எனப் பலவற்றை ஆசிரியரின் ஆற்றொழுக்கான நடையின்வழி அறிகின்றோம். நண்பர்களின் சிந்தனைகளையும், தன் இளமைக்காலம் குறித்தும் சமூகப் பாதுகாப்பு போன்றவற்றையும் இதன் மூலம் அறிகின்றோம்.

'என்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு’ என்ற கட்டுரை நாடகக்காரரான ராமசுப்புவின் வாழ்க்கை, செயல்பாடு, முரண்பாடு என்பதையும் விளக்கியுள்ளார். தன்னுடைய பணி மூத்த எழுத்தாளருடன் இருந்த தொடர்பு என்பன பற்றியும் தெளிவாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

ஒளிவுமறைவற்ற வாழ்க்கையை எழுதியுள்ளார். 'என் பெரியப்பா புதுமைப்பித்தன்’ என்ற கட்டுரையில் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் குறித்தும் இறுதியில் தமிழ்ச்சமூகத்திற்குத் திரைப்படப் பாடலாசிரியர் புலமைப்பித்தனைத் தெரிந்த அளவிற்குப் புதுமைப்பித்தனைத் தெரியவில்லையே என்று வருத்தப்படுகின்ற சூழ்நிலையை நாம் பார்க்க முடிகின்றது.

தன்னுள் புதுமைப்பித்தன் ஏற்படுத்திய மாற்றங்களை இந்தக் கட்டுரையில் எழுத்தாளர் பதிவு செய்துள்ளார்.

'காலத்தின் கலைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ’ என்ற கட்டுரையில் அவரது வாழ்க்கை, படைப்பு, விமர்சனம், நூல் குறித்தும் மிக விரிவாக விளக்கமாக எழுதியுள்ளார். மண்ட்டோவின் கதாப்பாத்திரங்கள், இறுதிக்காலம், அவர்காலச்சூழல் என்பனவற்றைத் தனக்கே உரிய பாணியில் சிறப்பாக எழுதியுள்ளார்.

'கனிவின் சிகரம் கமலாலயன்’ எனக்கு மிகவும் பிடித்த நண்பராகவும், தோழமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாகவும் தன்னுடைய இன்ப துன்பங்களைப் பேசுகின்ற ஒரு முக்கியமான நண்பராகவும் எழுத்தாளர் கமலாலயன் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் வாழ்க்கைப் போராட்டங்கள், இலக்கியத்தோடு இணக்கமாக இருக்கின்ற சூழ்நிலைகளையும் அவரது படைப்புமொழி, வேறுபணி போன்றவற்றைக் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.

இயக்கத்தில் இணைந்து போராடிய காரணத்தாலேயே அவர் பணியிலிருந்து வெளியேறிய சூழ்நிலையையும், பிறகு அறிவொளி இயக்கம் முதலான பணிகளில் பணிபுரிந்தவிதத்தையும் ஆசிரியர் விளக்கியுள்ளார். 'எதுக்கு உதயசங்கர் கவலைப்படறீங்க. நாம செய்யறத செய்ஞ்சுகிட்டே இருப்பம்... எல்லாத்தையும் காலம் பாத்துக்கிடும்...” அதுதான் கமலாலயன். என் அருமைத் தோழர் கமலாலயன்... என்று சொல்கின்ற அந்த வார்த்தைகள் இருவருக்கும் இடையேயான உறவைக் காட்டுவதாக இருக்கின்றது.

'பாஞ்சனின் சிரிப்பு’ என்ற கட்டுரையில் ஆசிரியர் தன் இளமைக்கால நினைவுகளை அசைபோட்டுள்ளார். பெற்றோர், நண்பர்கள் கிண்டல், நட்பு அவரோடு ஊர் சுற்றியவிதம் எனப் பலவற்றை நாம் அறிகின்றோம்.

பாஞ்சனின் அம்மா இறந்தபோது அவர் அடைந்த வருத்தம் எனப் பலவற்றை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பாஞ்சன் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்த இயல்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி’ என்ற கட்டுரையில் பூமணியினுடைய வேலை, அவரது படைப்பு, பிறகு, வெக்கை எனும் நாவல் குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார். அவரை எழுதத் தூண்டிய விதத்தையும் தான் கொடுத்த கையெழுத்துப்பிரதி மற்றும் அதற்காக அவர் பெற்ற அறிவுரை, பகுத்தறிவு என ஆசிரியர் இங்கே பலவற்றைப் பதிவு செய்துள்ளார்.

'என் மலையாள ஆசான் டி.என்.வி.’ என்ற கட்டுரையில் தன்னுடன் பணிசெய்த தன் மூத்த நண்பரான வெங்கடேஸ்வரன் குறித்தும் அவர் வாழ்க்கை வரலாறு, பணி, இயக்கம், இலக்கிய படைப்பின்மீது கொண்ட ஆர்வம் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளார்.

மலையாள மொழி கற்றுக்கொள்ள உதவி செய்தமையும், தனக்கு ஆசானாக விளங்கிய கதையையும் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்கின்ற அளவிற்குத் தான் வளர்ந்துள்ளமைக்குக் காரணம் என்றும்கூறி தன் நன்றி மறவா பண்பினை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

நேர்மையான முறையில் டிஎன்வி என்பவரை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

நூலின் கடைசி கட்டுரையான 'மனதை வசப்படுத்தும் கவிஞன் வண்ணதாசன்’ என்னும் கட்டுரையில் வண்ணதாசனுடைய எழுத்துநடை அவரது படைப்பு அவருக்கும் இவருக்குமான நட்பு, உற்சாகம் தந்த வார்த்தைகள் எனப் பலவற்றை பதிவு செய்துள்ளார்.

இயல்பான நடையில் வண்ணதாசனுடைய கதாபாத்திரங்கள் அவருடைய நாடகத்தில் பயன்படுத்திய பெயர்கள் எனப் பலவற்றை நாம் அறிகின்றோம். அவருடனான நட்பு எப்படிப்பட்டது என்பதையும் அறிகின்றோம். உற்சாகம் தந்த வார்த்தையையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

‘எப்போதெல்லாம் வண்ணதாசனை வாசிக்கிறேனோ, எப்போதெல்லாம் அவரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ செய்கிறேனோ அப்போதெல்லாம் திருநெல்வேலியின் ஸ்பரிசம் என் மனதை வருடும்.

தாமிரபரணியின் தாமிரவாசம் என் உடலில் தோன்றும். மீண்டும் என் பால்யகாலம் தன் வண்ணங்களின் விகசிப்பை எனக்குள் ஏற்படுத்தும்.' என்பதின் மூலம் இங்கே நாம் இவருக்கும் அவருக்குமான அன்பினையும் தெரிந்துகொள்ள முடிகின்றது.

தனக்குள் இருந்த நினைவினை ஒரு கை அள்ளி இந்த நூலில் உதயசங்கர் வாசகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். மிக அழகான எளிய நடையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவர் எழுத்தின் அனுபவத்தையும் அவரது வாழ்வில் நேர்ந்த எதிர்பாராத முடிச்சுகளையும் சொல்வதாக இந்தக் கட்டுரை நூல் அமைந்துள்ளது.

எழுத்தாளருக்கும் என்.சி.பி.எச் பதிப்பகத்தார்க்கும் வாழ்த்துகள். எழுத்தாளரின் நினைவு இன்னும் தொடரட்டும் என்று வாழ்த்துவோம்.

நினைவு என்னும் நீள் நதி,
உதயசங்கர்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
முதல் பதிப்பு - ஜூலை 2013,
ரூ.120/-

 - மயிலம் இளமுருகு