ஆடலரசன் வீற்றிருக்கும் பெருமைமிகு தில்லை மூதூன் கண் தமிழார்வலர்களின் சரணாலயமாகத் திகழ்வது மெய்யப்பன் தமிழாய்வகமாகும். இவ்வாய்கத்தை உருவாக்கியவர் பேராசியர் ச.மெய்யப்பனாவார். இவர் தமிழார்வத் துடிப்பு கொண்டு எளிமையும், எழுச்சியும் மிக்க தம் எழுத்தாலும், சிறந்த பதிப்பாலும் சான்றோர் உள்ளதுள் நின்று நீடு வாழ்பவர். தமிழே நினைந்து, தமிழே சொல்லி, தமிழே வாழ்வெனக் கருதும் பேரன்பினராகத் திகழ்ந்த இவர் ஒரு புத்தகப்பித்தர் எனலாம். புத்தகங்களின் மீது கொண்ட காதலாலும், அன்னைத் தமிழுக்கு அரும்பணியாற்ற வேண்டும் என்ற வேணவாவினாலும் பணியாற்றும் காலத்திலிருந்தே தமிழ்த் தொடர்பான பல்வேறு புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், ஓய்வே இல்லாமல் அல்லும் பகலும் தமிழகத்திலும், தமிழ் வழங்கும் இடங்களிலும் தேடித் தேடி சேகரித்த தமிழ்ப் புத்தகங்களைப் பொதுமக்களும் ஆய்வாளர்களும் பயன்படுத்தும் வகையில் ச.மெய்யப்பனார் தம் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி, அதன் சார்பில் மெய்யப்பன் தமிழாய்வகம் என்னும் உயர்ஆய்வகம் தொடங்கினார்.
இந்நூலகம் வடக்குவீதி புதுத்தெருவில் 2000-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. அரசு விடுமுறை நாள்கள் மற்றும் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை தவிர, மற்ற நாள்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை செயல்படுகிறது. வெளியூல் இருந்து வரும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ள நவீன வசதியுடன் கூடிய அறைகள் இங்குள்ளன. இங்கு தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலுருந்தும் கூட, மாணவர்கள் வந்து பயன் பெறுகின்றனர்.
தமிழகத்தின் மிகச்சிறந்த ஆய்வு நூலகங்களுள் ஒன்றான இவ்வறிவு தோட்டத்தில் ஆய்வு வேட்கையருக்குப் பசி தீர்க்கும் வகையில் ஒவ்வொரு துறையிலும், பெரிதும் முயன்று 40000-க்கும் மேற்பட்ட நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 13 வகையான கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், நிகண்டுகள், ஆவணங்கள், ஆய்வுக்கோவை, ஆய்வடங்கல், வரலாற்றுத் துறைநூல்கள் போன்ற நூல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்க்கை வரலாற்று நூல்கள் மட்டும் ஏறத்தாழ 1500 உள்ளன குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்துள்ள திருக்குறள் உரைகளில் சுமார் 180 உரைகள் திரட்டி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, மொழி, இனம், வரலாறு, கலை, நாகரிகம், பண்பாடு தொடர்பான நூல்கள் 2000 சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இலக்கியம், இலக்கணம், திறனாய்வு, நாட்டுப்புற இலக்கியம், சிற்றிலக்கியம், ஒப்பாய்வு, இதழியல், நாடகம், கவிதை, சிறுகதை, நாவல், பக்தி, அறிவியல், சுயமுன்னேற்றம், பயண நூல்கள், பொது அறிவு நூல்கள் தொகுத்து வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதோடு இவர்களுடைய பதிப்பான மணிவாசகர், தென்றல், மெய்யப்பன் போன்ற வெளியீடுகளும் வைத்துள்ளனர்.
குறிப்பாக தேசியக்கவி பாரதியார், புரட்ச்சிகவி பாரதிதாசன், தமிழ்க்கடல் மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவணர், பன்மொழிப்புலவர் க.அப்பாதுரை, க.சுப்பிரமணியப்பிள்ளை, மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், தமிழ்த்தென்றல் திரு.வி.க, ரா.பி. சேதுப்பிள்ளை, மு.வரதராசன், வையாபுரிப்பிள்ளை, மு.அருணாச்சலம், மயிலை சீனிவேங்கடசாமி, பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம், சாமி.சிதம்பரம், ராமகிருட்டிணன், கண்ணதாசன், வைரமுத்து, புதுமைபித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களின் நூல்கள் முழுமையும் இங்கு கிடைக்கின்றன.
இவ்வாய்வகம் 60 ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளது. செட்டிநாடு களஞ்சியம் என்னும் நூலை உருவாக்கியுள்ளது. வருடந்தோறும் பிற பதிப்புகளின் சிறந்த இரண்டு ஆய்வு நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கும் திட்டம் இருப்பதால் புதிய நூல்களும் உடனுக்குடன் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.
பதிப்புப் பணி
பதிப்புச் செம்மல் என அனைவராலும் போற்றப்பட்ட, தமிழ்வேள் ச.மெய்யப்பனார் 1961இல் மணிவாசகர் நூலகம் என்னும் பெயரில் தொடங்கி, 1983இல் மணிவாசகர் பதிப்பகம் எனப் பெயர் மாற்றம் செய்து, பல்வேறு நூல்கள் வெளியிட்டுள்ளார். இந்நூல்கள் தமிழ் உணர்வையும் தமிழ் ஆர்வத்தையும் தூண்டித் தமிழ் வளர்ச்சிக்குத் துணை செய்யும் நோக்கில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
வெளியிட்டுள்ள நூல்களை, சிற்றிலக்கிய வரிசை, திருக்கோயில் வரிசை, நகரக் கோயில் வரிசை, நாட்டுப்புறவியல் வரிசை, திருக்குறள் வரிசை, ஒப்பாய்வு நூல் வரிசை, களஞ்சிய வரிசை, வாழ்க்கை வரலாற்று நூல் வரிசை, வள்ளலார் வரிசை, இலக்கண வரிசை, சங்க இலக்கிய வரிசை, தமிழ் இயக்க நூல் வரிசை, ஆராய்சி நூல் வரிசை, தத்துவ நூல் வரிசை, அறிவியல் நூல் வரிசை, அரசியல் நூல் வரிசை, உலக நூல் வரிசை, பக்தி இலக்கிய நூல் வரிசை, சுற்றுலா நூல் வரிசை, மானிடவியல் நூல் வரிசை, அடிகளார் நூல் வரிசை, பாட நூல் வரிசை, அகராதி வரிசை, செம்பதிப்பு வரிசை, வெற்றிச் சிந்தனைகள் என வரிசைப்படுத்தலாம்.
இப்பதிப்பக வெளியிடுகளில் 60 நூல்கள் பல்வேறு பரிசுக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மெய்யப்பன் பதிப்பகத்தின் வழி வெளிவந்த நான்கு நூல்கள் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுள்ளன. தமிழக அரசின் பரிசு நாற்பத்தேழு நூல்களுக்கு கிடைத்துள்ளன. தமிழ்ப் பல்கலைகழகப் பரிசினை ஒன்பது நூல்கள் வாங்கியுள்ளன. இந் நூல்கள் அனைத்தும் ஆய்வுலகத்தினர் பயன்கொள்ளும் வகையில், இந்நூலகத்தில் ஒருங்கே வகைப்படுத்தி வைக்கப் பெற்றுள்ளன.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மெய்யப்பன் தமிழாய்வகம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தகவல் - பொது