"முற்போக்கு இலக்கியம் வாழ்வின் அடிநிலையிலிருக்கிற ஓடுக்கப்பட்ட மக்களையும், அவர்களைவிட சற்றுமேலே,  ஆனால் அடிமைத் தனங்களில் உழல்கிற மானிடர்களையும் சித்தரிப்பதும், அவர்களை கைப்பிடித்து முன்னே கூட்டிச் செல்வதுமாகவும் உள்ளதை இலக்காகக் கொண்டவை. அடிப்படையில் இந்த எழுத்தின் வேர்கள் சேற்றிலும், சகதியிலும், வியர்வையிலும், இரத்தத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான சொல்லிலும், செயலிலும் ஆழப்பதிந்திருக்கின்றன. வீரார்ந்த மூச்சோடு எதிர்க்குரல் கொடுக்கின்றன. இவை இந்த மக்களின் உயிர்த்துடிப்புள்ள மொழிiயை அப்படியே சொல்கின்றன. இந்த மக்களின் மொழி நீண்ட நெடுங்காலமாக இந்த மக்களால் பேசப்பட்டு, வளமைப்படுத்தப்பட்டு, செம்மையுற்று செழுமைப்படுத்தப்பட்டது. "என 'சுபமங்களா' இதழில் வெளிவந்த நேர்காணலில் முற்போக்கு இலக்கியம் குறித்து செ.யோகநாதன் தெளிவுபடுத்தியுள்ளார்.

 "எனது கதைகளில் நான் சில பிரச்சாரங்களை முன்வைப்பதாக ஒரு விமர்சனம் கூறப்படுகிறது. இதை சிறியதொரு திருத்தத்தோடு நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். எனது கதைகளை நான் பிரச்சாரத்துக்காகவே எழுதுகிறேன் என்பது தான் அது. எந்த எழுத்தும் ஏதோ ஒன்றைப் பிரச்சாரம் செய்கிறது என்பதுதான் உண்மை. காலங்காலமாய் பின்பற்றப்பட்டுவரும் கருத்துக்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் என்பன ஒரு சாரரின் நலன் கருதியே அமைந்திருக்கின்றன. இன்னொரு சாரரின் மேல் ஏறி உட்கார்ந்து அதை நியாயப்படுத்தியே வாழ்கின்றவர்கள் தங்களுக்கெதிரான கருத்துக்கள் அரும்புகிற போது-அந்தக் கருத்தினை சுமந்து வடிவங்கள் யாவற்றிற்கும் 'பிரச்சாரம்' என்ற முத்திரை குத்தி, அதை மழுங்கடிக்க முயல்கிறார்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரிய வரலாறல்ல ; உலக வரலாற்றின் உட்கூறும் இதுதான். குறிப்பாக இலக்கியத்துறை வரலாற்றின் பொதுப்பண்புதான் இது. "

 SeYoganathan"அரசியலென்ற கட்டுமானத்தின் மேலேதான் யாவும் அமைகின்றன. நாறிப் போய், இற்று விழுந்து கொண்டிருக்கின்ற சமூகத்தில் வலிமை வாய்ந்த சிற்றுளியாக இந்தக் கலை இலக்கியமென்ற மறைமுக அரசியல் இயங்க முடியும். அத்தகைய சிற்றுளிகளாக இன்றைய இலக்கியப் படைப்பாளி விளங்குவான். அவன் நாளைய நிர்மாணத்தை செதுக்குவதோடு இன்றைய நிர்வாண கலாச்சாரத்தை அடித்து துவைத்து அழிந்து போக வைப்பான். அத்தகைய படைப்பாளி 'தனித்திருந்து வாழும் தவமணியாக இராது' மக்கள் கூட்டத்தோடு நின்று அவர்களின் குரலில் கலந்து ஒலிப்பான்."

 "நான் சகலவித ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மானுட மேன்மையை நிலை நிறுத்த விரும்புகிறேன். இதை என் எழுத்தாக்குகிறேன். எழுத்து என் அரசியல். என் ஆயுதம், என் சுவாசம்." என 'காற்றின் குழந்தைகள்' என்ற சிறுவர்க்கான நூலில் தமது இலக்கியக் கொள்கையை,  படைப்பாளியின் பணியை எடுத்துரைத்துள்ளார்.

 செ.யோகநாதன் யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள சின்னஞ்சிறிய கடலோரக் கிராமமான கொழும்புத்துறையில் 01.10.1941 அன்று பிறந்தார். இவரது தந்தையின் பெயர் செல்லையா. இவரது தந்தை ஒரு நாடகப்பிரியர். இவரது பதினொன்றாவது வயதில் தாய் காலமாகிவிட்டார்.

 செ. யோகநாதன் சிறுவனாக இருந்த காலத்தில் 'ஈழகேசரி' இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். இதற்கான பரிசாக இவருக்கு வெ. சாமிநாதசர்மா எழுதிய 'காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாறு' என்னும் நூல் வழங்கப்பட்டது. காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றை கற்றுக் கொண்ட யோகநாதன், இளமையிலேயே மார்க்சியத்தின்பால் நாட்டம் கொண்டார்.

 பள்ளி மாணவனாக இருந்த போதே இவரது 'மணக்கோலம்' என்னும் முதல் சிறுகதை 'கலைச்செல்வி' இதழில் 1962 ஆம் ஆண்டு வெளியானது.

 தமது பள்ளிக் கல்வி முடிந்தவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார். அங்கு மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளரான பேராசிரியர் கலாநிதி. க. கைலாசபதி தொடர்பு ஏற்பட்டது.

 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் போதே 'யோகநாதன் கதைகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு 1964 ஆம் ஆண்டு வெளியானது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் போது பல்கலைக் கழக வெளியீடாக வந்த கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளில் செ. யோகநாதனின் சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன.

 இளமையில் தமிழரசுக் கட்சியின் இளைஞரணியான 'இளந்தமிழர் இயக்க’த்தில் சேர்ந்தார். 'செய் அல்லது செத்துமடி' என்பது அந்த இயக்கத்தின் இலட்சியம். இன உணர்வு, மொழி உணர்வு மிக்கவராகத் தமிழரசுக் கட்சியில் செயற்பட்டார்.

 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பினால் மார்க்சிய சிந்தனையும்,  முற்போக்கு எழுத்தாளர்கள் அறிமுகமும் ஏற்பட்டது. அதன் வாயிலாக கம்யூனிச கோட்பாடுகளையும், முற்போக்கு எண்ணங்களையும் நெஞ்சத்தில் ஏற்று செயல்படத் தொடங்கினார்.

 தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டத்தில் 1966 ஆம் ஆண்டு கலந்து கொண்டார். ஆலயங்களில் அனைத்து மக்களுக்கும் வழிபடும் உரிமை, பொது குளத்தில் யாவரும் குளிக்கும் உரிமை முதலியவற்றை இலங்கை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியது. 'தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்' ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளில், போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தது.

 பல்கலைக் கழக படிப்பு முடிந்தவுடன், கண்டியில் ஆசிரியராகவும், பின்னர் இலங்கை அரசு நடத்திய அரசு நிர்வாக அதிகாரிகளுக்கான தேர்வில் (Sri Lanka Administrative Service) தேர்ச்சி பெற்று அரசு உயர் நிர்வாக அதிகாரியாக முல்லைத் தீவு, பூநகரி முதலிய ஊர்களில் பணியாற்றினார். விவசாயிகள் நிறைந்த பிரதேசங்களில் பணியாற்றிய காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கைத் துயரங்களை நேரடியாகக் காணுகின்ற வாய்ப்பு கிட்டியது.

 யோகநாதன் கதைகள், கண்ணீர் விட்டோ வளர்த்தோம், தேடுதல், இத்தனையும் ஒரு கனவாக இருந்தால், அண்மையில் ஒரு நட்சத்திரம், அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், அவளுக்கு நிலவென்று பேர், கனவு மெய்ப்படும், ஒரு சொல், மாசறு பொன்னே, வீழ்வேனென்று நினைத்தாயோ?,  விநோதினி, இன்னும் இரண்டு நாட்கள், அன்னை வீடு, கண்ணில் தெரிகின்ற வானம், அசோகவனம், மூன்றாவது பெண்,  காற்றினில் ஏறி விண்ணையும் சாடலாம் என 18 சிறுகதைத் தொகுதிகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

 "இச்சிறுகதைத் தொகுப்பு,  ஈழத்தில் நடைபெறும் விடுதலைப் போரை மட்டுமின்றி, உலகம் முழுவதிலும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நடந்த,  நடைபெறும் - நடைபெறவிருக்கும் ஒடுக்கு முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் எதிரான, தேசிய விடுதலைப் போராட்டங்களின் அவசியத்தையும்,  அனுகூலத்தையும் நமக்கு எடுத்து விளக்குவதாக அமைந்துள்ளது." என 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பதிவு செய்துள்ளார்.

 தமிழீழப் போராட்டச் சூழலில் இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைகளையும்,  இலங்கை இராணுவத்தினரின் அட்டூழியங்களையும், அரச பயங்கரவாதப் போக்குகளையும், தமிழ் மக்களது அகதி வாழ்வின் அவலங்களையும், போராளிகளின் தியாகங்களையும், இனவொடுக்கல் நடவடிக்கைகளையும், சாதிப்பிரச்சனைகளையும், பெண்கள் மீதான கொடுமைகள் மற்றும் சுரண்டலையும், குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது உழைப்புச் சுரண்டல்களையும் செ. யோகநாதன் தமது சிறுகதைகளின் உள்ளடக்கமாகக் கொண்டு படைத்துள்ளார்.

 'சின்ன மீன் பெரிய மீன்' என்னும் சிறுகதையில், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளின் அதிகார மமதையையும், ஊழியர் விரோத போக்கையும், ஊழியர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதையும், பழிவாங்குவதையும் மிகவும் அழகாகச் சித்தரித்து உள்ளார்.

 'ஆறுகள் முன்னோக்கி ஓடுகின்றன' என்னும் சிறுகதையில் ஏழ்மை, வறுமை நிலையில் வாடும் உயர்சாதி குடும்பத்திற்கு ஆதரவாகச் செயல்படும் கீழ்சாதி மக்கள் குறித்தும், பணம், சொத்து இல்லையென்றால் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், அந்த சாதி மக்கள் உதவுவது இல்லை. கீழ்சாதியில் பிறந்த ஏழைகள் தான் உதவி செய்வதுடன், ஆதரவாகவும் செயல்படுவார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார். மேலும் வர்க்க ரீதியான ஒற்றுமை சமூகத்தில் நிலவுவதைச் சுட்டிகாட்டுகிறார்.

 'தாயாகி வந்தாள்' என்னும் சிறுகதையில்,  "என் தெருவில் ஒருவனைப் பிடித்துச் சென்றார்கள் பேசாதிருந்தேன். என் தெருவில் மூன்றாவது வீட்டில் ஒருவனைப் பிடித்துச் சென்றார்கள் பேசாதிருந்தேன். என் தெருவில் ஐந்தாவது வீட்டில், ஏழவாது வீட்டில் பிடித்துச் சென்றார்கள் பேசாதிருந்தேன். கடைசியில் என் வீட்டுக் கதவைத் தட்டி என்னை இழுத்துச் சென்றார்கள் ... " என செ. யோகநாதன் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சமூகத்தில் நடக்கும் அடக்கு முறைகளையும்,  ஒடுக்குமுறைகளையும், சுரண்டலையும், உரிமை பறிப்புகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கொடுமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். சமூகத்திற்காக நாம், நமக்காக சமூகம் என்ற உயர்ந்த சிந்தனையை வலியுறுத்துகிறார்.

 'இன்னும் இரண்டு நாட்கள்' இச்சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் செ. யோகநாதன். "கலாசாரமும்,  வாழ்வும் சிரழிந்து மானுட மேன்மைகள் சிதைவுறுகிற காலம் இது. கட்டுமானமே, இவ்விதம் ஆன சமுதாய அமைப்பில் – அதன் சீரழிவோடு கை கோர்த்து செல்வமும் செல்வாக்கும் சேர்க்கின்ற கூச்சநாச்சமற்ற சீரழிவு இலக்கியவாதிகள், மானுட மேன்மை கருதுகிற எந்தக் கலாச்சார அணியையும் மூர்க்கமாக எதிர்த்து, விமர்சித்து நிற்பார்கள் என்பதில் அதிசயமென்ன ? கொச்சையாயும்,  பச்சையாயும் எழுதுகின்ற இவர்களுக்கு உண்மை சுடும். உயர்ந்த சொற்கள் கரிப்பாகும். நெறிகள் தீயாய் வருத்தி வதைக்கும். "

 "அதனாலேயே எம்மை இவர்கள் கலகக்காரராகக் காண்கிறார்கள். விமர்சிக்கிறார்கள். திட்டுகிறார்கள். கலகம் செய்தால் தவறென்று அகிம்சா பிரகடனம் செய்கிறார்கள். ஆனால்,  கலகம் செய்வது நியாயமானது; தேவையானது என்று நாம் அடித்துச் சொல்கிறோம். ஏனெனில் கலகம் அழகை விதைக்கும். நியாயத்தை நிலைநிறுத்தும். உண்மையைத் தலை நிமிர்த்தும். உலகிற்கு நிம்மதி தரும். இதனால் தான் நமது ஆசான் காரல் மார்க்ஸ் 'கலகம் செய்' என்று கூறினார்.

 'சோளகம்’ என்னும் கதை கொழும்புத்துறைக் கிராமத்திலுள்ள ஏழை மீனவக் குடும்பமொன்றின் வாழ்வின் சோகங்களை எடுத்துக் கூறுகின்றது.

 'தோழமை என்றொரு சொல்' என்ற கதை மீனவ சமுதாயத்தின் வறுமையையும், கடல் வளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணக்காரர்களின் ஆதிக்கத்தையும், சுரண்டலையும், கொடுமையையும் தோலுரித்துக் காட்டுகிறது.

 காற்றும் சுழி மாறும், மலர்ந்த நெடு நிலா, ஒளி நமக்கு வேண்டும், அகதியின் முகம், காவியத்தின் மறுபக்கம், கனவுகள் ஆயிரம், காணி நிலம் வேண்டும், தலைவர்கள், கேட்டிருப்பாய் காற்றே, அரசு, சுந்தரியின் முகங்கள், ஆகாயத் தாமரை, சோளகம், மேலோர் வட்டம், இனிவரும் வசந்தங்கள்,  இன்னொரு திரைப்படம், கட்டுமரங்கள், சின்னஞ்சிறுமலர் மழையினில் நனைந்து,  சிறு பொறி பெருந் தீ,  இரவல் தாய்நாடு என 20 குறுநாவல்களை படைத்தளித்துள்ளார்.

இலங்கை அகதிகளின் துயர் நிறைந்த வாழ்வினை மனதை நெகிழ்த்தும் விதத்தில்- ஆனால் உணர்ச்சி வசப்படாது உண்மையாகச் சொல்லுகிறது 'அகதியின் முகம்' என்னும் குறுநாவல்.

"உலகத்தில் – ஒவ்வொரு நிமிடத்திலும் நோயாலும், வறுமையாலும் முப்பது குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உலகம் ஒவ்வொரு நிமிடமும் தன் இராணுவ நடவடிக்கைகளுக்காக பதின்மூன்று லட்சம் டாலரை செலவு செய்து கொண்டிருக்கிறது. "

"இந்திய அரசியலமைப்புச் சட்டம் 11 வயதுவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயமாகக் கல்வி வழங்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தண்டனைக்குரிய குற்றமாகக் குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறை என்ன? தன் பாட்டியிடம் கதைகள் கேட்டு, பள்ளியில் படித்து,  தன் சகாக்களுடன் கனவுகளில் மிதக்க வேண்டிய குழந்தை – இருண்ட அறைகளிலும், இரசாயண நெடி வீசும் தொழிற்சாலைகளிலும், பொறுக்கிகளின் வழி நடத்தலிலும், வறுமையின் சீரழிவிலும் பொசுங்கிப் போவதை சாதாரண விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா ? "

"குழந்தைகளை இவர்கள் வேலைக்கு வலிந்து அழைப்பதற்கு அடிப்படையான காரணம் ஒன்று இருக்கிறது. குழந்தைகளின் விரல்கள் இயல்பிலேயே வெகு சுறுசுறுப்பானவை. நுட்பமாய் இயங்குபவை. களைப்பறியாதவை. நிறைய உழைக்கும் ஆற்றல் கொண்டவை. இளமையும், புத்துணர்வும் மிக்க இந்த விரல்களிடமிருந்து,  எவ்வளவு ஆற்றலை இந்தத் தொழிற்சாலைகள் உறிஞ்ச முடியுமோ அவ்வளவுக்கு உறிஞ்சிக் கொள்ளுகின்றன. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இவர்கள் ஒன்றுக்கும் பயனில்லாத வெறும் மனிதச் சக்கைகள் தான் .. "என 'இன்னொரு திரைப்படம்' என்ற குறுநாவலில் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சனையை தோலுரித்துக் காட்டுறார்.

'மேலோர் வட்டம்' என்னும் குறுநாவலின் என்னுரையில்,  "உண்மையில் சொன்னால் இந்த ஆளும் வர்க்கம் - இந்த மேலோர்வட்டந்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஆனால், வெளியிலோ எல்லாமே மக்களால் தீர்மானிக்கப்படுகிறார் போல தோற்றம். அது மாயத் தோற்றம். "என்பதைச் சுட்டிகாட்டியுள்ளார். இன்றைய அரசியல் நடைமுறையை தோலுரித்துக் காட்டியதுடன், மக்களாட்சி என்ற பெயரில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதை அம்பலப்படுத்தியுள்ளார்.

'காணி நிலம் வேண்டும்' என்னும் குறுநாவலில், "மலைநாட்டின் லயங்களிலே வாழ்ந்த ஒரு பகுதித் தொழிலாளர்கள் நிம்மதி தேடி, சுதந்திரமெனும் நிழல்நாடி தமிழ்ப்பிரதேசங்களுக்கு 'காணி நிலம் வேண்டி' இடம் பெயர்ந்தனர். தமிழ்ப் பிரதேசத்திற்கு வந்தும் காணி நிலம் வேண்டி தொடர்ந்து போராட வேண்டியவர்களாகின்றனர் மலை நாட்டு மக்கள். இலங்கையின் பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களிலே தமது நிலப்பசி தீர்வதற்காக ஓயாது முனைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விரிவாகக் கூறியுள்ளார். மலைநாட்டு மக்களின் பிரச்சனையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 'காணிநிலம் வேண்டும்' என்னும் குறு நாவல்.

மேலும், "இருக்கின்ற சமுதாயத்தினை மாற்றி புதிய சமுதாயம் ஒன்று உருவாவதன் மூலம் நான் என்னைச் சூழவுள்ள சூழலின் கொடுமைகளையெல்லாம் வேரோடும் வேரடி மண்ணோடும் நிர்மூலமாகும் என உணர்ந்திருப்பதாலேயே என் கதைகளின் அடித்தளங்களும் அத்தகையவனவாய் விசாலித்துள்ளன. "

 "நான் என்றுமே கதை எழுதுவதற்காகக் கதை எழுதுபவனல்ல. என்னைச் சுற்றி நிலவுகிற கொடுமைகளையெல்லாம் என்னைப் பாதிக்கின்றன. எங்கே மனிதன் நிம்மதியோடிருக்கின்றான்? அடித்தட்டு மக்கள் எல்லாவிதத்திலும் ஓடுக்கப்படுகிறார்கள். நமது சகோதரிகளின் மேலே சகல நிர்ப்பந்தங்களும் நுகத்தடிபூட்டி அவர்களின் குரலைக் கூட வெளியே வராதவாறு நசுக்கிக் கொண்டிருக்கின்றன. இளைஞர்களும், மாணவர்களும் நாறிப் போன அமைப்புகளால் தவறாக திசைதிருப்பப்பட்டு விரக்தியின் எல்லைக்கு இழுத்து விடப்பட்டிருக்கின்றனர். தேசிய இனங்களின் விடுதலை உணர்வை ஆயுதப்பலத்தாலும், அச்சுறுத்தல்களாலும் ஒடுக்கி அடக்கி விடலாமென நினைக்கின்றார்கள் பேரினவாதிகள். நான் இத்தகைய சூழலைக் கொண்டவனாயிருப்பதால்,  இவற்றிற்கு எதிராகப் போராடும் கடமைப்பாடுடையவனாகின்றேன். என்னுடைய எதிர்ப்பின் ஓர் ஆயுதமான இந்த எழுத்தினைக் கையாளுகின்றேன். "எனத் தமக்கு எழுத்து என்பது சமூக விடுதலைக்கான ஆயுதம் என்பதை 'காணி நிலம் வேண்டும்' என்னும் குறுநாவலின் முன்னுரையில் பிரகடனம் செய்துள்ளார்.

"தேசங்களும் தேசங்களும்,  சண்டையிட்டதன் பயனாக உருவாகிய அகதிகள், இன்றைக்கு ஒவ்வொரு தேசங்களின் உள்ளேயும் - அந்தத் தேசங்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளால் உருவாகி இன்னும் பல தேசங்களுக்குள் தலைவலி தரும் பிரச்சினையாய் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். கதியற்றவர்களான இந்த மக்கள் பூமிப்பந்தில் நுழையக் கூடிய இடத்திலெல்லாம் இன்று தமது வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எப்படியிருந்த போதிலும் இது தாங்கவொண்ணாக் கொடுமை செறிந்த வாழ்க்கை. மானிடத்தை,  தன் அடையாளத்தை இழந்து தவிப்படையச் செய்ய வைக்கிற ஈவிரக்கமற்ற கொடூரம். அகதிகளாய் இன்னொரு தேசத்தில் துன்பக் கேணியில் வாழ்கிற மக்கள் தமது சமூக கலாச்சார வேர்களையெல்லாம் மெல்ல மெல்ல இழந்து போய்விடுகிறார்களென்பது வரலாறு துல்லியமாகவே பதிவு செய்து வைத்திருக்கின்ற கசப்பான செய்தி. ஒரு தலைமுறை காலமாக ஈழமக்கள் இவ்விதம் அகதிகளாய்ப் பூமிப்பந்தெங்கும் சிதறிப் பரவுகின்ற கொடுமை மனதை சுட்டெரிக்கிற தொடர்கதையாகிவிட்டது. "

என 'தஞ்சம் புகுந்தவர்கள்’ என்னும் நாவலின் முன்னுரையில் அகதிகளாக உலகம் முழுவதும் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் அவலமான நிலையை படம் பிடித்துக் காட்டுகிறார்.

கிட்டி, மீண்டு வந்த சோளகம்,  அசுரவித்து, நியாயப்படுத்தப்பட்ட கொலைகள், வனமலர், மிஸ் கமலா, தஞ்சம் புகுந்தவர்கள், தனியாக ஒருத்தி, ஜானகி, தனிமை கண்டதுண்டு, இரவினில் வரும் பகல், நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, துன்பக் கேணியில் முதலிய நாவல்களை எழுதியுள்ளார்.

குழந்தைகள் கதைக் களஞ்சியம், சூரியனைத் தேடியவன், காற்றின் குழந்தைகள், சின்னஞ் சிறுகிளியே, தங்கத்தாமரை, நான்கு நண்பர்கள், எல்லோரும் நண்பர்கள், மந்திரமா ? தந்திரமா ?,  அற்புதக் கதைகள், அதிசியக் கதைகள், நான்கு கதைகள், அன்புமலர், வெண்புறா முதலிய சிறுவர்க்கான கதைத் தொகுதிகளை எழுதி வழங்கியுள்ளார்.

 ' இன்னும் கேட்கும் குரல்- விபுலானந்தர்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூலையும், பெண்களும் சினிமாவும், சார்லிசாப்ளின் கலையும் வாழ்வும் ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

'மீண்டும் வந்த சோளகம்' நாவல் ஈழத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதியொன்றில் வாழும் மீனவ சமூகம் பற்றியது. அச்சமூகத்தில் நிலவும் பழமைப் பிடிப்பையும்,  அதற்கெதிரானப் புதிதாக முளைவிடும் முற்போக்கு சக்தியையும் இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது.

பரவைக் கடல் என அழைக்கப்படும் வளைகுடாக்கடல் பகுதியில் மீன் பிடித்து வாழும் மக்களின் வாழ்க்கையில் ஆண்டு தோறும் வரும் சோளகம் என்னும் கத்தரி வெயில் காலம் நிகழ்த்தும் கொடுமைகளை நாவல் விவரிக்கிறது. சோளகம் வரும்போது காலைப்போதில் கடலே வற்றி விடுகிறது. வழமையான மீன் பிடிநின்று விடுகிறது. காலங்காலமாக அம்மக்கள் பயன்படுத்தும் வள்ளங்களே ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்கத் தகுதியற்றவை. வள்ளங்களோ முதலாளிக்குச் சொந்தமானவை. கடலும் முதலாளிக்கே காணியானது. மீனவர்கள் உழைத்து உருவாக்கும் மீன் உற்பத்தியில் பெரும்பங்கு முதலாளிக்கும், கோவிலுக்கும் சென்றுவிடுவதால் நல்ல மீன்பிடி உள்ள மாதங்களிலேயே வயிற்றைக் கழுவக் கஷ்டப்படும் அம்மக்கள் சோளகத்தை 'இன்னும் வருவது கொலோ' என்று எதிர்நோக்கி நொந்து வாழ்கிறார்கள். காலங்காலமாக இருளில் தவிக்கும் இம்மக்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்காக கதாப்பாத்திரங்கள் விளங்குகிறது.

'தனியாக ஒருத்தி' என்னும் சமூக நாவலின் முன்னுரையில், “இளம் பெண்கள் கடைகளில் விற்பனைப் பெண்களாய் (Sales Girls), வெளிநாட்டுக்கு ஆடை, தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்கின்ற நிறுவனங்களில் தையல்காரர்களாய், பீடி சுற்றுபவர்களாய், அச்சுக் கோர்ப்பவர்களாய் இருப்பவர், தாங்கள் செய்கின்ற பணிகளுக்கு குறைந்த அளவு சம்பளம் பெறுபவர்கள். இந்தத் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என்பன இவர்களை சுரண்டுவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. உடல் ஆரோக்கியத்தையும் அரித்துத் தின்று அவர்களை சக்கைகளாய் வெளியே வீசி எறிகின்றன. சர்வதேச சந்தைகளில் நிறையப் பணத்தைப் பெற்றுக் கொடுக்கின்றன. இவர்கள் உருவாக்கும் ஆடைகள், அந்த ஆடைகளின் ஆயுட்காலத்தைவிட இவர்களின் ஆரோக்கிய ஆயுட்காலம் குறைவாக இருக்கின்றது."என்று கூறுகிறார். நமது சமூகத்தில் இளம் பெண்களின் உழைப்பு குறைந்த கூலிக்கு பன்னாட்டு கம்பெனிகளால், கார்ப்பரேட் நிறுவனங்களால் சுரண்டப்படுவதையும், அவர்களின் உடல்நலப் பாதிப்புகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

"உலக வரலாற்றில் இலக்கியம் பெருத்த மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. 'தாய்’, 'வீரம் விளைந்தது’ போன்ற மகோன்னதமான நூல்கள் பூமிப்பந்தின் பல்வேறு பகுதிகளிலும் இளந்தலைமுறையிடேயே உன்னதமான கருத்துக்களை விதைத்து, செயல் திறனுள்ளவர்களாக மாற்றியிருக்கிறது. இலக்கியத்திற்கு மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி எப்போதும் இருந்து வந்திருக்கிறது,  இருக்கும். அத்தோடு உலகில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகள் தோன்றவும், வளரவும் மாற்றத்திற்கான எதிர்க்குரல் கொடுக்கவும் நமக்கு முந்திய இலக்கியங்களே அடியெடுத்துக் கொடுத்திருக்கின்றன. இந்த வரலாற்று நிகழ்வே இலக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கருத்தை உறுதி செய்கிறதல்லவா ? "என நூல்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை பதிவு செய்துள்ளார்.

'வெள்ளிப் பாதரசம்' ஈழத்துச் சிறுகதைகள் முதல் தொகுதி. இத்தொகுதியில் இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம், கனகசெந்திநாதன், அழகு சுப்பிரமணியன், வரதர், வ.அ. இராசரத்தினம், அ. ந.கந்தசாமி, த ரபேல்,,  டொமினிக் ஜீவா, தாளையடி சபாரத்தினம், சிற்பி, எஸ்.பொன்னுத்துரை, யாழ்வாணன், ப. ஆப்டின், தெளிவத்தை ஜோசப், நீர்வை பொன்னையன், பத்மா சோமகாந்தன், செங்கை ஆழியான், சி. பன்னீர் செல்வம், க.சட்டநாதன்,  யோகா பாலச்சந்திரன், அ.யேசுராசா, லெ.முருகபூபதி, சந்திரா தியாகராசா, சாந்தன், அல் அசூமத், தாமரைச் செல்வி என 27 படைப்பாளிகளின் 37 சிறுகதைகள் இடம் பெற்று உள்ளன.

'ஒரு கூடைக் கொழுந்து' ஈழத்துச் சிறுகதைகள் இரண்டாவது தொகுதி, இத்தொகுதியில் சம்பந்தன், அ.செ. முருகானந்தன், பித்தன், செ. கணேசலிங்கன், நவம், சு.வே. இ. நாகராஜன், அருள் செல்வநாயகம், என்.எஸ். எம். ராமையா, அ.முத்துலிங்கம், நா சோமகாந்தன், நந்தி, என்.கே. ரகுநாதன், கே.வி. நடராஜன், பவானி ஆழ்வாப்பிள்ளை, பொ. தம்பிராசன், பாலுமகேந்திரா, அ.ஸ.அப்துல் ஸமது, அன்னலட்சுமி ராஜதுரை, மருதூர்க்கொத்தன், சாரல்நாடன், நெல்லை க. பேரன், ஜோர்ஜ் சந்திரசேகரன், நயீமா சித்தீக், மலரன்பன், திக்குவல்லை கமால், நீர் கொழும்பூர் முத்துலிங்கம், மு. சிவலிங்கம், குந்தவை, மொழிவரதன், மாத்தனை பெ. வடிவேலன், கோகிலா மகேந்திரன், கவிதா, மொயின் சமீம், கே. கோவிந்தராஜ், ரஞ்சகுமார், பௌஸியா யாஸீன், பாலரஞ்சனி சர்மா என 38 படைப்பாளிகளின் 53 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், ஈழத்திலே மறந்துவிட்ட எழுத்துலகச் சிற்பிகளை அத்தொகுதிகளில் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளார். உலகத் தமிழர்களுக்கு ஈழத்து இலக்கிய வளத்தினை முழுமையாக அறிவதற்கும், ஈழத்துச் சிறுகதைப் போக்கினையும், செழுமையையும் அறிந்து கொள்வதற்கும் இத்தொகுதிகள் உதவி செய்யும்.

 இச்சிறுகதை தொகுப்பாசிரியர்கள் : செ. யோகநாதன், அவரது மனைவி யோ.சுந்தரலட்சுமி ஆவர்.

 குங்குமம், தினமணிகதிர், தமிழரசு, அரும்பு, கண்ணன், செம்மலர், தாமரை, கணையாழி, ரத்னபாலா, அமுதசுரபி, புதிய பார்வை, ஆனந்தவிகடன், குமுதம், இதயம் பேசுகிறது, இந்தியா டுடே, அரங்கேற்றம், அலைகள், குங்குமச்சிமிழ், தளம், தாய், தாயகம், மனஓசை, விடுதலைக் குயில்கள், இனி, மங்கை, இளையமித்திரன் முதலிய தமிழக இதழ்களிலும்,  ஈழநாடு, குமரன், மல்லிகை, கலைச்செல்வி, ஈழகேசரி முதலிய ஈழத்திலிருந்து வெளிவந்த இதழ்களிலும் செ. யோகநாதன் சிறுகதைகள், குறுநாவல்கள், சிறுவர்க் கதைகள் எழுதியுள்ளார்.

 'சஞ்சயன்' என்ற பெயரில் பல மொழிபெயர்ப்புகள் செய்து உள்ளார். இதே பெயரில் 'முப்பது கோடி முகங்கள்' என்ற தொலைக்காட்சித் தொடருக்கு உரையாடல் எழுதியுள்ளார். மேலும், 'கண்ணாடி வீட்டினுள் இருந்து ஓருவன்' என்ற இவரது கதை மலையாள மொழியில் திரைப்படமாகியுள்ளது. பாலுமகேந்திரா, லெனின் ஆகிய திரைப்பட இயக்குநர்களுடன் இணைந்து திரைத்துறையில் பணியாற்றி உள்ளார்.

 செ.யோகநாதனின் சில படைப்புகள் ஆங்கிலம், ருஷ்யன், ஜெர்மனி, சிங்களம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 பெங்களூரில் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி, தெலுங்கு,  மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய எட்டு மொழிகளின் குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் தமிழக அரசின் பிரதிநிதயாக கலந்து கொண்டு கட்டுரை அளித்தார்.

 செ. யோகநாதன் எழுதிய 'தேடுதல்' குறுநாவல் தமிழக அரசு இலங்கைக்கு கொண்டு செல்ல தடை விதித்தது.

 நாவல், குறுநாவல் சிறுகதை, குழந்தை இலக்கியம், நவசினிமா, வாழ்க்கை வரலாறு, கட்டுரை, மொழிபெயர்ப்பு முதலிய துறைகளில் பல நூல்களை எழுதி அளித்துள்ளார்.

 செ. யோகநாதன் 1980 ஆம் ஆண்டு தமிழகம் சென்று பதினாறு ஆண்டுகள் வாழ்ந்தார். தமிழகத்திலிருந்து பல முன்ணனி வார, மாத இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், சிறுவர்க்கான கதைகள் எழுதினார். பல நூல்கள் எழுதி வெளியிட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினார்.

 அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் 1962 ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் நடத்திய குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளார்.

 இவரது 'இரவல் தாய்நாடு' என்னும் குறுநாவல் கணையாழி இதழின் பரிசைப் பெற்றது.

 'சுந்தரியின் முகங்கள்' (1985), 'அவளுக்கு நிலவு என்று பேர் ' (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகள் சிறந்த படைப்பிலக்கியத்திற்கான தமிழக அரசின் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளது.

 'காவியத்தின் மறுபக்கம்'- 'சிரித்திரன்' இதழ் நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசுப் பெற்றது.

 கோவை லல்லி தேவசிகாமணி அறக்கட்டளையிடமிருந்து சிறந்த நாவலாசிரியருக்கான முதற்பரிசை பெற்றுள்ளார்.

 'ஒளி நமக்கு வேண்டும்' என்னும் இவரது குறுநாவலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு 1974 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மேலும் இந்நூல் யுனெஸ்கோ அமைப்பு மூலம் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 'அகதியின் முகம்' அக்னி – கணையாழி நடத்திய தி. ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்றது.

 'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே' நாவல் 1993 ஆம் ஆண்டு சிறந்த நாவலாக 'இலக்கியச் சிந்தனை அமைப்பு' தேர்வு செய்து ரூ5000/- பரிசு வழங்கிச் சிறப்பித்தது.

 செ.யோகநாதன் எழுதியுள்ள 'தோழமை என்றொரு சொல்' கதையை யுனெஸ்கோ நிறுவனம் தேர்வு செய்து 13 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதுகளை இரண்டு முறையும், பாரத ஸ்டேட் வங்கி விருது ஒரு முறையும், இலக்கிய சிந்தனை அமைப்பு விருதுகளை நான்கு முறையும், திருப்பூர் தமிழ்ச்சங்க விருது ஒரு முறையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய விருதையும் செ. யோகநாதன் பெற்றுள்ளார்.

 "எனக்கு அறிமுகமான நாட்களிலிருந்தே யோகநாதன் இலக்கியத்தின் சமுதாயத் தோற்றத்திலும் பணியிலும் அசைக்கவியலாத நம்பிக்கை உடையவராய் இருந்து வந்திருக்கிறார். முற்போக்கு அணியைச் சார்ந்து நின்றிருக்கிறார். அதன் தூசிப் படை வீரர்களில் ஒருவராகவும், சில வேளைகளில் சமர் புரிந்திருக்கிறார். கடந்த பத்தாண்டுக் காலத்தில் முற்போக்கு இலக்கியத்திற்கு யோகநாதனின் பங்களிப்பு விதந்துரைக்கத்தக்கது. சோசலிச தத்துவத்தைப் பொதுவாகவும், கலை இலக்கியத்திற்கு அதன் தொடர்பு, பொருத்தப்பாடு ஆகியவற்றைச் சிறப்பாகவும், கற்றுச் சிந்தித்து தெளிந்து அவற்றைத் தனதாக்கிக் கொண்டுள்ள விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். தத்துவத் தெளிவும் சிருஷ்டித் திறனும் கலையுணர்வும் ஒருங்கிணைந்து வைரம் பாய்ந்த எழுத்தாளர் அவர் . கவின்பெறு கருத்தே கலைக்கு உயிர் என்ற அறிவுத் தெளிவுடையவர் யோகநாதன். பொருளின் பொலிவிற்கு சொல்லாட்சியும்,  வடிவக்கட்டுறுதியும் வேண்டப்படுவன என்பதை விளங்கிக் கொண்டவர். யதார்த்த இலக்கிய நெறி குறிப்பிடத்தக்க அளவிற்கு யோகநாதனை வழி நடத்துவதினாலேயே இவரது ஆக்கங்கள் தனிச் சிறப்புடையனவாய் மிளர்கின்றன. யோகநாதன் நமக்குக் கிடைத்தயோகம். "என 'ஒளி நமக்கு வேண்டும்' குறுநாவல் தொகுப்பின் முன்னுரையில் மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர், பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி புகழ்ந்துரைத்துள்ளார்.

 "தமிழ்த்தேசிய உணர்வுக் காலகட்டத்தில் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு காத்திரமான பங்களிப்பாக அமைவன யோகநாதனின் கதைகளாகும்"என ஈழத்து இலக்கியப் படைப்பாளி செங்கை ஆழியான் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

 "சமுதாய விமர்சனமாகவும்,  சமுதாயத்தினை மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்ற ஆயுதமாகவும் படைப்பிலக்கியத்தை கருதுகிறவர் எழுத்தாளர் செ. யோகநாதன் "என்று திருமகள் நிலைய பதிப்பாளர் அ. இராமநாதன் புகழ்ந்துரைத்துள்ளார்.

 "இலங்கையின் சமுதாய வளர்ச்சியில் தமிழர்களின் சமுதாயப் பிரிவில் ஏற்படும் மாறுதல்களை யோகநாதன் கூர்மையாகக் காண்கிறார். இலக்கியத்தைச் சமுதாய ஆய்வான கலைப்படைப்பாகச் செய்து வழங்குகிற யோகநாதன் சிறுகதைகளுக்கு,  நிகழ் காலத்தை மாற்றுகிற ஆற்றலும், வருங்காலத்தை உருவாக்குகிற சக்தியும் உண்டு. " எனப் பேரா. நா. வானமாமலை பாரட்டியுள்ளார்.

 "சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, கலைவிமர்சனம், குழந்தை இலக்கியம் முதலிய பல இலக்கியப் பிரிவுகளிலும் தனது எழுத்தாற்றலையும், ஆழ்ந்த அனுபவ ஞானத்தையும் வெளிப்படுத்தி வருபவர் நண்பர் செ. யோகநாதன் ". என 'எழுத்து விவசாயி' வல்லிக் கண்ணன் கருத்துரைத்துள்ளார்.

செ.யோகநாதன் 28.01.2008 அன்று யாழ்ப்பாணத்தில் தமது 66 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

 "நான் வாழ்க்கையிலிருந்தே இலக்கியத்தை உருவாக்குகின்றேன். இன்னும் சொன்னால் சாதாரண மனிதரே எனது எழுத்தின் அடிநாதமாக இருக்கிறார்கள். இவர்களுக்கெதிரான ஒடுக்குமுறை, அநியாயங்கள் என்பனவற்றை என் எழுத்தின் மூலம் நான் எதிர்க்கிறேன். இவர்களிடமிருந்து கற்றதை இவர்களுக்கு நான் செழுமைப்படுத்தி படிக்கக் கொடுக்கிறேன். இவர்களின் விடிவுக்கான உந்து சக்திகளில் என் எழுத்தும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பது என் படைப்பு ஆர்வத்தின் விருப்பம். இதையே முற்போக்கு இலக்கியக் கோட்பாடு அழுத்தமாக வலியுறுத்துகின்றது. "என செ. யோகநாதன் 'ஒளி நமக்கு வேண்டும்' நூலின் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

 “எந்த ஒடுக்குமுறையும், அது சமூக ஒடுக்குமுறையாக இருந்தாலென்ன, தேசிய இன ஒடுக்குமுறையாக இருந்தாலென்ன, அது எதிர்த்துப் புறந்தள்ளத்தக்க ஒன்றுதான். இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியது ஒரு எழுத்தாளனின் இன்றியமையாக் கடமை என்றே எண்ணுகிறேன். தம்மைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வை அவதானித்துப் பயின்று அவர்களின் சிந்தனையைத் தூண்டிச் செயற்படுத்தும் விதத்திலே எழுத்து அமைய வேண்டும். அதுவும் மக்களின் மொழியிலே எழுதப்பட வேண்டும். மக்களுக்கு எதிரான சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எழுத வேண்டும். இலக்கியமென்பது வெறுமனே தனக்கு எதிரிலே நடந்தவற்றைப் பதிவு செய்கிற ஒன்று என்பதை நான் என்றுமே ஒப்புக் கொண்டதில்லை. அதற்கும் மேலாகப் போய் வாசகன் மனதில் ஒரு செய்தியை அல்லது செயலக்கான ஊக்கத்தை அது பதிவு செய்தாக வேண்டும். படைப்பாளி தனது மக்களின் வாழ்வையும், உணர்வுகளையும், காலத்தையும் பதிவு செய்கின்றவன். இப்படிப் பதிவு செய்தே தனது எழுத்தை அவர்களின் போராட்டத்துக்குரிய ஆயுதமாக மாற்றிவிடுகிறான். "என 'கிட்டி’ நாவலின் முன்னுரையில் செ. யோகநாதன் எழுத்தாளனின் கடமையை வலியுறுத்தியுள்ளார்.

- பி.தயாளன்

Pin It