(பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் அவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். அறிவியல் நகரத்தின் தலைவராக இப்போது செயல்படுகிறார். நேர்மையான இக்கல்வியாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, அவரோடு மேற்கொண்ட உரையாடலை இங்குத் தொகுத்துள்ளோம்)

இந்தியாவில் செயல்படும் உயர் கல்வியை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?

நெடுநாளாகவே இந்தியாவில் உயர் கல்விக்கு அவ்வளவு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சென்ற ஐந்தாறு ஆண்டுகளாகத்தான் உயர்கல்விக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது. காரணம் இந்தப் புதிய அரசாங்கம், மன்மோகன்சிங் பிரதம மந்திரியான பிறகு உயர் கல்வி வளர்ந்தால்தான் நம்முடைய பொருளாதார வளர்ச்சி முன்னேற முடியும் என்று நினைக்கிறார்கள். உயர்கல்வி என்பது தனிநபர் வளர்ச்சிக்காகத்தான் என்று கருதுகிறார்கள். சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி எதுவும் உயர்கல்வியின்மூலம் அடையாது என்ற கருத்து இருந்தது. இது உலக வங்கியின் கருத்து. அதனால் உயர்கல்விக்குப் பணத்தை வீண் செய்யாதீர்கள், உயர்கல்வியை விரும்புகின்றவர்கள் தனியாகப் படித்துக் கொள்வார்கள், அரசாங்கம் இதில் ஈடுபடக் கூடாது என்று உலக வங்கி அறிவுறுத்தியது. இப்போது உலக வங்கியே இக்கருத்தை மாற்றிக் கொண்டது.

இந்திய அரசாங்கத்தின் பதினொன்றாவது திட்ட அறிக்கையின் மூலமாக உயர்கல்வித் துறைக்கு மிகப்பெரிய அளவிலான பொருளுதவியை அரசாங்கம் செய்துள்ளது. விவசாயத்திற்கு முதன்மையான முக்கியத்துவமும் உயர்கல்விக்கு இரண்டாவது முக்கியத்துவமும் கொடுத்திருக்கின்றனர். உயர் கல்வித்துறையில் மூன்று முக்கியமான குறிக்கோள்களைக் கூறுகின்றனர். ஒன்று Access, இரண்டாவது Inclution (or) Equity, மூன்றாவது Quality or Excellence. இந்த மூன்றும் சேர்ந்தால்தான் எல்லோருக்கும் கல்வி கிடைக்கும். நான் அதனோடு சேர்த்துச் சொல்வது Affordability. உயர்கல்விக்கான எல்லா வசதிகளையும் உருவாக்கித் தந்தாலும் மக்கள் அதனைப் பெற முடியாத பொரு ளாதாரச் சூழல் இருந்தால் அந்த வசதிகளால் என்ன பயன்?

இந்தக் குறிக்கோளின் அடிப்படையில் Access, Equity, Excellence and Affordability என்ற நான்கு கருத்துக்களை இன்றைக்குப் பரவலாக எல்லோரும் பேசுகின்றனர். Access என்பது Eligible Age Group. அதாவது 18 - 23 வயது வரைக்கும் நாலைந்து வருடம் கல்லூரிக்குப் போகக் கூடிய தகுதி என்று சொல்வார்கள். அந்த வயதில் எத்தனை சதவீதம் மாணவர்களால் கல்லூரிக்குப் போக முடிகின்றது? Gross Enrollment Ratio அடிப்படையில் பார்த்தோம் என்றால் இன்றைக்கு இந்தியாவில் சுமார் 12 சதவீதம் அதாவது 100 பேர் 18 - 23 வயதில் இருக்கிறார்கள் என்றால் அதில் 12 பேர்தான் கல்லூரிக்குப் போக முடிகின்றது. மற்றவர்கள் உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காமலும்/கிடைத்தும் முடிக்காமலும் நின்று விடுகின்றார்கள். பள்ளிகளில் இடைநிறுத்தம், அதாவது சிலபேர் 5 (அ) 8 (அ) 10 (அ) 12ஆம் வகுப்புகளில் படிக்கும்போது நிறுத்திவிடுகின்றனர். எனவே, ஒன்றாம் வகுப்பில் 100 பேர் சேர்ந்தார்கள் என்றால் கிட்டத்தட்ட 75 சதவீதம் இடைநிறுத்தம் ஆகிவிடுகின்றனர். 25 பேர்தான் +2 தேர்ச்சி பெறுகின்றனர். அந்த 25 பேரில் 18 - 23 வயதில் இருக்கின்ற வர்களில் எத்தனை பேர் செல்கின்றனர் என்று பார்த்தோமேயானால், 12 சதவீதத்திற்கும் கீழ் உள்ளனர். இதை உலக சராசரியோடு ஒப்பிட்டுப் பார்த்தோம் என்றால் 18 முதல் 23 வயதுவரை உள்ளவர்களில் 23 சதவீதம் பேர் உயர் கல்வி பயில்கின்றனர்.

கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கொரியா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் கிட்டத்தட்ட 75 சதவீதம் முதல் 80 சதவீதம் மாணவர்கள் உயர் கல்வி பயில்கின்றனர். அதாவது ஒரு நாட்டில் 18 முதல் 23 வயது வரை இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகின்றனர். அதில் 20 சதவீதம்தான் உயர்கல்வியில் இடைநிறுத்தம் ஆகிறார்கள். வளரும் நாடுகளான மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளைப் பார்த்தால்கூட 20% - 22% பேர் உயர்கல்வியைப் பெறுகின்றனர். நம் நாட்டில் மிகவும் குறைவாக இருப்பதற்குக் காரணம், உயர்கல்வி நிறுவனங்கள்தான். ஒரு காலத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் குறைவாக இருந்தன. அப்படி இருந்தால்கூட நகர்ப்புறத்தில் தான் இருக்கும். கிராமப்புறத்தில் இருக்காது. அதனால், கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறுவது குறைவாக இருந்தது. சிலர் பெண்களைக் கல்லூரிக்கு அனுப்புவதில்லை. சில சமூகத்தினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் பெண்களைக் கல்லூரிக்கு அனுப்புவதில்லை. இதுபோன்ற பலவிதமான சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணம் போன்றவைகளால் நிக்ஷீஷீss ணிஸீக்ஷீஷீறீறீனீமீஸீt ஸிணீtவீஷீ மிகவும் குறைவாக இருக்கின்றது. இதனைக் குறைந்தது 2020க்குள் 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் குறிக்கோள். இதைச் செய்ய வேண்டும் என்றால் அதிகமாகக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும். இது கிநீநீமீss.

அதேபோல Equity (or) Inclution என்று வரும்போது இப்போது இடஒதுக்கீட்டு முறையை வைத்துள்ளனர். எஸ்.சி., எஸ்.டி., பிற பிற்பட்டோர், பெண்கள், உடல் ஊனமுற்றோர் முதலானவர் களுக்கு இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முக்கியமான திட்டமாக Equity இருந்தாலும் Accessஐ நோக்கியே செயல்படுகிறது. இவற்றிற்கு எல்லாம் முக்கியமான கணக்கெடுப்பு (Statistical Data) இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். முக்கியமாகக் கிராமத்தில் உள்ளவர்களைவிட நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கு வசதிகள் அதிகம். அதேபோல ஆண்களைவிட பெண்களுக்கு வசதி வாய்ப்புகள் குறைவு. மேலும் பொருளாதார நிலை பணக்காரர்களைவிட ஏழைகளுக்குக் குறைவாக இருக்கின்றது. நிரந்தர வருமானம் பெறுபவர்களைவிட (Salary Employed) வருமானம் இல்லாதவர்களுக்கு (Unemployed (or) Informal people) வாய்ப்புகள் குறைவாக உள்ளன. மேலும் மதம், இனம், வசிப்பிடம், சாதி மற்றும் பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வி விகிதம் வேறுபடுகின்றது. இது Equity.

மூன்றாவதாக, Excellence என்று வரும்போது இதைப் பின்வரும் வகையில் பார்க்கலாம். அதாவது அடிப்படை வசதிகள், கற்றல் கற்பித்தலுக்கான கருவிகள் முக்கியம். மாணவர்கள் புரிந்து கொள்ளும் முறையில் ஆர்வத்தோடு தெளிவாகக் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேவை. மாணவர்களுடைய மனப்பாங்கு உயர்கல்விக்கு முக்கியமாகத் தேவைப்படுகின்றது. மேலும் அவர்கள் படிக்கின்ற படிப்பிற்கும் அன்றாட வாழ்க்கை முறைக்கும் உள்ள உறவுமுறை அடிப்படையில் சொல்லிக் கொடுக்கும் திறமை இருக்க வேண்டும். பாடத்திட்டத்தை மட்டும் கற்பித்தால் போதாது. பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களை எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் மனநிலையை உடையவர்களாக உருவாக்க வேண்டும். பாடத்திட்டத்தில் இருப்பது சில சமயம் இன்றைய சூழலுக்குத் தேவையில்லாததாகக்கூட இருக்கலாம். எல்லாத் துறைகளும் தொடர்ந்து வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கின்றன. அதனால் பாடத்திட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் படித்து மதிப்பெண் வாங்கினால் மட்டும் போதாது. எப்படி அன்றாட வாழ்க்கையில் இத்துறைகள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன; இந்தத் துறைகளுக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் தொடர்புடைய சமூக, பொருளாதார, பண்பாட்டு, இலக்கிய மாற்றங்கள் எவை; வாழ்க்கைக்கும் படிக்கின்ற படிப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்ற உணர்வைக் கொண்டு வருவது அவசியம். அப்படிக் கொண்டுவந்தால் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய, தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும்.

உயர்கல்வித்துறை என்பது (கல்லூரி (அ) பல்கலைக் கழகம் எதுவாக இருந்தாலும்) தொழிற்சாலை அல்ல. தொழிற்சாலையில் சோடா பாட்டிலை உற்பத்திச் செய்வதுபோல் மாணவனை உருவாக்கக் கூடாது. Students are not like soda bottles. Students are human beings. They have mind; they have aspiration. They are going to work long time in the society. It is not a degree certificate. It is not only for the syllabus, that is an important and they are not factories. The institutions are not a conveyor belts.. அந்த மாதிரி இருக்கும்போது, அவர்களின் அறிவாற்றல், தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல், பிற்காலத்தில் சமூகத்திற்குப் பயன்படக்கூடிய பொக்கிஷமாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் சமூக, பொருளாதார விழிப்புணர்வு உள்ளவர்களாக வளர வேண்டும். அதனால் நமது கல்விமுறை தன்னம்பிக்கையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.

எல்லோருமே வேலைக்காகவே உயர்கல்வியைக் கற்கின்றனர். இதற்கு ஒரு பல்கலைக்கழகத்தையோ (அ) கல்லூரியையோ உருவாக்க செலவு செய்ய முடியாது. எனவே, சுயதொழில் செய்யக்கூடிய தன்னம்பிக்கையை அவர்களிடம் உருவாக்க வேண்டும். அதாவது அவர்களுக்கென்று தனித் திறமை இருக்க வேண்டும். ஒன்று, உற்பத்தி செய்யக்கூடிய தன்னம்பிக்கை இருக்க வேண்டும். இரண்டாவது sஷீயீt sளீவீறீறீ. அதாவது, மற்றவர்களோடு எவ்வாறு பழகவேண்டும், பேசவேண்டும், எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் என்ற பயிற்சியும் தேவை. மேலும் அறிவியல், இலக்கியம், கலை, மருத்துவம், பொறியியல் என்று எதைப் படித்தாலும் அவரவர் துறையில் பொதுவாகக் கண்டுபிடிப்பு மற்றும் உருவாக்கும் தன்மை இருக்க வேண்டும். அவர்கள் வெளியே வந்தவுடன் எங்களால் தரமான புதிய பொருட்களைக் குறைவான விலையில், சமூகத்திற்குத் தேவையான அளவு பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்க, படைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். உயர்கல்வித்துறையில் இவை முக்கியமாக வேண்டியது எனலாம். இவையெல்லாம் எல்லோரும் ஒப்புக்கொண்டதுதான். நான் எதுவும் புதியதாகக் கூறவில்லை. அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதுதான் பிரச்சினை. ஒரு துறையில் இருக்கின்றவர்கள் அந்தத் துறையில் மட்டும் பெட்டிப் பாம்பாகச் செயல்படக் கூடாது. ஒரு துறையில் ஆழ்ந்து படிப்பது முக்கியம் தான். அதேபோல் பிறதுறைகளோடு அத்துறையைத் தொடர்பு படுத்திப் புரிந்துகொள்வதும் அவசியம்.

அதாவது இலக்கியம் படிக்கின்றவர்களுக்கு அதில் ஆழ்ந்த அனுபவம், அறிவு, உணர்ச்சி இருக்கலாம். ஆனால் இலக்கியம் படிக்கின்றவர்கள் சமூகவியல், பொருளாதாரம், கலை, தொழில் நுட்பம் என அவர்களுக்கு விருப்பமான பிற துறைகளையும் படிக்கலாம். அதாவது சூழ்நிலை காரணமாகச் சிலர் இலக்கியம் (அ) பொறியியல் படிக்கச் சென்றுவிடுகிறார்கள். அதேபோல் பொறியியல் படிக்கின்றவர்கள் பொறியியலில் மட்டும் நின்று விடக்கூடாது. இலக்கியம், இசை போன்றவைகளைப் படிக்கலாம். காரணம் பிற்காலத்தில் பொறியியலுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு என்னவென்று கண்டுபிடிக்கலாம். மருத்துவத்திற்கும் அதேபோலத்தான். அதாவது ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வாறு முன்னேற்றம் வருகின்றது என்றால் Inner Discipline தான் அடிப்படை. மருத்துவத்திற்கும் பொறியியலுக்கும் இருக்கின்ற தொடர்பில்தான் பெரிய பெரிய வளர்ச்சிகள். கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. இப்போது நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனின் வாழ்க்கையைப் பார்த்தால் இயற்பியலில் ஆரம்பித்தார். பிறகு உயிரியல், கணிதம், மருத்துவம் போன்ற துறைகளிலும் செயல் படுகிறார். எனவே பல துறை அறிவு பெற்றதால் தான் அவரால் வெற்றியடைய முடிந்தது. அதாவது ஒரு மருத்துவமனைக்குப் போனால் அங்கு இருக்கின்ற கருவிகள் பொறியியலின் வளர்ச்சியால் ஆனது. அப்போது பொறியியலுடன் மருத்துவம், சமூகவியல், நரம்பியல், உடலியல் ஆகிய அனைத்தையும் பொறியியல் மாணவரும் மருத்துவ மாணவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

சமூகத்தில் கட்டுமானப் பொறியியல் படிக்கின்றவர்கள் வெளியே செல்லும்போது மக்களுடைய தேவை என்னவாக இருக்கின்றது, அவர்கள் எந்த மாதிரியான வீடுகளை வாங்கியுள்ளனர், எந்த வகையான தொழிலாளிகள் இருக்கின்றனர், தொழிலாளிகளிடம் எவ்வாறு வேலை வாங்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையில் இருக்கின்றவர்களும் குறைந்தபட்சம் அவர்களோடு தொடர்புள்ள (அ) தொடர்பில்லாத இரண்டு, மூன்று துறை களிலாவது பரிச்சயம் இருக்க வேண்டும். ஒரே ஒரு துறையில் செல்வதால் மன, மூளை வளர்ச்சி நேரானதாக (Vertical division) ஆகிவிடும். இதனால் மாணவர்கள் அடைபட்ட பெட்டி போல இருக்கின்றனர். எனவே இந்த இடத்தில் பரந்த அறிவு தேவைப்படுகிறது. பரந்த அறிவின் மூலம் பல துறை அனுபவம் கிடைக்கும். இலக்கியம் படித்தவன் உயிரியல் படிக்கும்போது, உயிரியலுக்கும் இலக்கியத்திற்கும் எவ்வளவு தொடர்பு இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்கலாம். இலக்கியத்தில் வருகின்ற தாவரங்கள், உயிர் வகைகள் போன்ற வற்றை உயிரியலின் துணைகொண்டு அறியலாம். இப்பொழுது செயல்படுகின்ற உயிரியலுக்கும் சங்க இலக்கியத் தாவர, உயிரியலுக்கும் உள்ள தொடர்பையும் வளர்ச்சியையும் அறிய முடியும். எனவே பல துறை தெளிவு முக்கியமானதாகும். அதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். நம் நாட்டில் நெடுங்காலமாகப் பாடத்திட்டத்தைத் துண்டு துண்டாக செய்துவிட்டார்கள். இயற்பியல் படிக்கின்றவன் உயிரியல் படிக்க முடியாது, கணிதம் படிக்கின்ற வன்பொருளியல் படிக்க முடியாது, பொருளியல் படிக்கின்றவன் உயிரியல் படிக்க முடியாது என்று துண்டு துண்டாகப் பிரித்துவிட்டார்கள்.

இன்றைக்கு இருக்கின்ற உயர்கல்வித்துறையில் உலகம் முழுவதும் இருக்கின்ற போக்கு என்னவென்றால் Inner Disciplinarity ஏற்றவாறு பாடத்திட்டத்தை அமைப்பதாகும். அதாவது உயிரியல் என்று தேர்வு செய்தால் உயிரியல் பற்றி ஓரளவிற்கு அறிவாற்றல் வந்துவிடுகிறது. ஒரு வகுப்பில் 30 பேர் இருந்தால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆர்வம் இருக்காது. மருத்துவம், கணிதம், இயற்பியல், இசை, விளையாட்டு, உயிரியல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். சிலருக்கு வணிகம் (அ) சமூக சேவை செய்ய ஆர்வம் இருக்கும். இதைப்போல ஒரு மாணவனின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு, அவர்களாக முன்னேறுவதற்குப் பாடத்திட்டமும் Flexible Curriculum Design தேவை.

அதற்கடுத்து கல்வி அமைப்பு என்று வரும்போது, எந்த அளவிற்கு உயர்கல்வித் துறையில் அரசாங்கத்தின் ஈடுபாடு இருக்க வேண்டும்; தனியாரின் ஈடுபாடு இருக்க வேண்டும் என்ற விவாதங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 20% Gross Enrolment Ratio செய்ய வேண்டும் என்றால், அதாவது நம்முடைய மக்கள் தொகையில் 18 - 23 வயதில் எத்தனைபேர் இருக்கின்றனர் என்று பார்க்க வேண்டும். அந்தச் சதவிகிதத்திற்கு ஏற்றார்போல் எத்தனை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தேவையாக இருக்கின்றன என்று கணிக்க வேண்டும். இதில் எந்த அளவிற்கு அரசாங்கம் (ம) தனியாரின் ஈடுபாடு இருக்க வேண்டும் என்பது முக்கியம். அரசாங்கத்தின் முழு ஈடுபாட்டின் மூலமாக இதைச் செய்வது கடினம். முக்கியமாக உயர்கல்வித் துறையில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. குறிப்பாக IIT, NIT, Indian Institute of Science, Central Universities முதலியவை மத்திய அரசின் கீழும் மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகள் மாநில அரசின் கீழும் இயங்குகின்றன. இவை அனைத்திற்கும் உயர் கல்வித் துறையில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கின்றது. ஆனால் மத்திய அரசிற்கு இருக்கக்கூடிய நிதிவசதி மாநில அரசிற்கு இல்லை. புதிதாக கல்லூரி, பல்கலைக்கழகம் ஆரம்பிக்க மாநில அரசால் முடிவதில்லை. அதனால் 15 (அ) 20 வருடங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்களைத் தனியார் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். 1950களில் தனியார் நிறுவனங்களைத் தொடங்கியவர்கள் கொடையுள்ளம் கொண்ட வர்களாக இருந்தார்கள். இதனால் எத்திராஜ், பச்சையப்பன் முதலிய கல்லூரிகள் உருவாயின. அதாவது இவர்கள் தங்களது பூர்வீகச் சொத்துக்கள், தம் வாழ்வில் சம்பாதித்த சொத்துக்களை வைத்து முதலீடு செய்தனர். கல்வி நிலையங்களுக்குரிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். ஆசிரியர் நியமனம் மற்றும் ஊதியம் அரசைச் சார்ந்ததாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவர்கள் இலாபத்தைத் திரும்ப எதிர்பார்க்காமல் செய்தார்கள். அதேபோல் பனரஸ் இந்துப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிறித்துவ, இந்து, முஸ்லிம் அமைப்புகள் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தொடங்கின. இவ்வாறு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களுடைய சொந்த சொத்துக்களைப் போட்டு எந்தவிதமான பலன்களையும் எதிர் பார்க்காமல் ஆரம்பித்தார்கள். 1990க்குப் பிறகு கொடையுள்ளத் தோடு தொடங்காமல் நிறைய பேர் வணிக நோக்கில் கல்லூரிகளைத் தொடங்கினார்கள். இதில் முதலீடு செய்தவர்களில் ஒரு சிலரைத் தவிர பலர் நேர்மையான வழியைக் கடைப்பிடிப்பதில் தவறுகின்றனர். மாணவர்களிடம் அதிகமாகக் கட்டணம் (Capitation Fee, Donation) வசூலிக்கின்றனர். இந்த இடத்தில் தான் Affordability என்ற கேள்வி எழுகின்றது. இதனால் மருத்துவப் படிப்பு 50 இலட்சம் என்றும் MD படிப்பு ஒன்றரை கோடி என்றும் பேரம் பேசுகின்றனர். இதையும் நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தில் இல்லாமல் கருப்புப் பணத்தில் செய்கின்றனர். அதே போல பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், சில கலைக் கல்லூரிகளில் கூட இலட்சக்கணக்கில் மாணவர்களைப் பிழிந்து எடுக்கின்ற அளவிற்குப் பணம் வாங்குகின்றனர்.

வசூலிக்கும் முக்கால்வாசி பணம் கல்லூரியின் வளர்ச்சிக்கு இல்லாமல் தனியாரின் சொந்த செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. உலகத்தின் எந்த இடத்திலும் இதுபோன்று நடப்பது கிடையாது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இதுபோன்ற ஒரு தவறான வழியை உருவாக்கிவிட்டார்கள். ஆசிரியர்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுப்பது என்பது இவர்களிடம் குறைந்துவிட்டது. ஒரு சிலருக்கு மட்டும் நிறைய சம்பளம் கொடுப்பதைத் தவிர, ஆசிரியருடைய Academic autonomy, Academic dignity இல்லாமல் போய்விட்டது. பல தனியார் கல்லூரி (அ) தனியார் பல்கலைக் கழகங்களில் அந்த நிர்வாகத்தை நடத்துகின்றவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை (குறைந்த அளவே படித்திருந்தாலும்) துணை வேந்தர், இணை வேந்தர், முதல்வர் போன்ற பணிகளுக்கு நியமிக்கின்றனர். இதனால் நல்ல கல்வியாளர்கள் இது போன்ற நிர்வாகிகளிடம் சென்று வேலை செய்வதற்குத் தயங்குகின்றனர். அவர்களின் மதிப்புக் குறைந்துவிட்டது. அதனால் தரமான ஆசிரியர்கள் பெரும்பாலும் தனியார் கல்விக்கூடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுகின்றனர். அதோடு கள்ளப்பணம் புழங்குவதையும் கவனிக்க வேண்டும்.

நேர்மையாக இவர்கள் வாங்கும் பணத்திற்கு ரசீது கொடுத்து, அதற்குக் கணக்குக் காட்டி வருமான வரி கட்டி, அந்தப் பணத்தைக் கல்லூரியின் வளர்ச்சிக்குப் போட்டால் ஒன்றும் தவறில்லை. இதைப் போன்று ஒரு சிலர் செய்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் செய்வது இல்லை. இதனால் ஏற்படுகின்ற மறைமுகமான, மிகவும் வருந்தத்தக்க விளைவு என்னவென்றால் மாணவர்களின் மத்தியில் குறுக்கு வழியில் செல்வது, ஏமாற்றுவது மற்றும் கருப்புப் பணத்தைக் கையாள்வதில் ஒன்றும் தவறு இல்லை என்ற கருத்தை உருவாக்கி யுள்ளது. 30 இலட்சம், 50 இலட்சம் கொடுத்து மருத்துவப் படிப்பில் இடம் வாங்குகின்றவர்கள் மருத்துவராக வரும்போது எப்படி அவரை நேர்மையானவராக எதிர்பார்க்க முடியும்?

ஊழல் என்பது ஒரு தலைமுறையோடு முடிவது அல்ல. அது தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஒரு சமூகத்தையே பாதிக்கக்கூடிய அளவிற்கு ஒரு புற்று நோய் போல் இருக்கும். பொதுப் பணித்துறையில் ஊழல் செய்தால் ஒரு கட்டடம் இடிந்து விழுவதுடன் நின்று போகும். ஆனால் கல்வித்துறையில் அப்படி அல்ல. கல்வித் துறையில் ஊழல் செய்யும்போது அது ஒரு தற்காலிகமான கெட்ட விளைவுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு சமூகத்தின் வேரையே அழிக்கக்கூடிய அளவு விஷக்கருவியாகப் பயன்படுகின்றது என்றால் அத்தகைய கல்வித்துறையால் சமூகத்திற்கு என்ன பயன்? இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்வது என்பதற்கான முயற்சிகள் இன்றைக்கு நடந்து கொண்டு வருகின்றது. ஆனால் மத்திய அரசாங்கம், உயர் கல்விக்குப் பணம் போடுவதைவிட ஊழல் நடக்காமலும் தகுதி இல்லாதவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துவதைத் தடுப்பதற்கும் (Governance, Management Administration) நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும். தர மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கட்டட அமைப்பின் தகுதி, ஆசிரியர்கள் இருக்கின்றார்களா இல்லையா, கணிப்பொறிகள் இருக்கின்றதா என்று பார்த்துவிட்டு உடனே தரமதிப்பீடு செய்கின்றனர். அது மட்டுமில்லாமல் தரமதிப்பீடு செய்யும்போது கல்லூரி/பல்கலைக்கழக நிர்வாகம் ஊழலில் ஈடுபட்டுள்ளதா? பொது மக்களிடையே அவற்றுக்கான மதிப்பு போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் ஊழல் செய்தது தெரியவந்தால், உலகத்திலேயே மிகச்சிறந்த கட்டிடங்கள் மற்றும் கணிப்பொறிகள் வைத்திருந்தால்கூட அவர்களுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்து உருவாகி யுள்ளது. இது செய்ய முடியாத காரியம் இல்லை. நினைத்தால் கண்டிப்பாகச் செய்ய முடியும்.

கல்விக் கென்று நிதி ஒதுக்க வேண்டும் என்று நினைத்தால் செய்யலாம். பத்தாவது திட்டத்தில் உயர்கல்விக்கு 8500 கோடி ஒதுக்கியிருந்தனர். இப்பொழுது பதினொன்றாவது திட்டத்தில் 91 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கின் றனர். பத்தாவது திட்டத்தைவிட பத்து மடங்கு அதிகரித்திருக் கிறார்கள். மாநில அரசாங்கத்தில் கூட உயர்கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உணர்வுபூர்மான கொள்கை இருந்தால் கண்டிப்பாகப் பணம் கிடைப்பது எளிது. கல்விக்குச் செலவு செய்வதற்குப் பணமில்லை என்பது பிரச்சினையே இல்லை. எந்தத் துறைக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதுதான் முக்கியம். அதேபோல மாநில அரசாங்கமும் இலவசத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கு மளவுக்கு உயர்கல்விக்கு முக்கியத்துவம் தருவதில்லை. மத்திய அரசாங்கத்தில் உயர்கல்விக்கு 14 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கின் றனர். மாநில அரசாங்கங்கள் மத்திய அரசுடன் (நாங்கள் 75 சதவீதம் தருகிறோம், நீங்கள் 25 சதவீதம் போடலாம் என்று) கலந்தாலோ சித்து முடிவு செய்யலாம்.

அரசாங்கம், ‘பொருளாதார வசதியில்லை. அதனால் உயர்கல்வியில் எங்களால் ஈடுபடமுடியவில்லை. எனவே நாங்கள் உயர் கல்வியைத் தனியாரிடம் கொடுக்கின்றோம்’ என்று நழுவுவதற்கு அவசியம் இல்லை. வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு கல்வி வளர்ச்சி நிதியை மத்திய அரசாங்கத்தில் உருவாக்க வேண்டும். அதிலிருந்து எந்தக் கல்வி நிறுவனத்துக்குக் கடன் தேவைப்படுகின்றதோ அவர்கள் வாங்கிக்கொள்ளலாம். அதை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செய்யலாம். அந்த நிதியிலிருந்து கடன் வாங்கி 20, 30 வருடத்திற்குள் திருப்பிக் கொடுப்பதைப் போலச் செய்யலாம். அதேபோல மாநில அரசாங்கமும் கல்வி வளர்ச்சி நிதி என்று மாநில அளவில் ஆரம்பிக்கலாம். அந்த நிதியை உபயோகப்படுத்தி கல்லூரிகளை ஆரம்பிக்கலாம். இவற்றையெல்லாம் ஆரம்பித்து ஆசிரியர்களுக்கு ஒழுங்காகச் சம்பளம் கொடுத்து ஊழல்களைத் தவிர்த்தாலே போதும். பணத் தட்டுப்பாடு என்ற பிரச்சினைக்கு இடமே இல்லை. இவையெல்லாம் முடித்தபிறகு சமுதாயத்தில் Attitude என்று ஒன்று இருக்கின்றது. அது என்னவென்றால் முக்கியமாகப் பெற்றோர் களுக்குத் தன் பிள்ளை பொறியாளராக அல்லது மருத்துவராக வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பிட்ட படிப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கலாம். அந்த நிலையிலிருந்து இப்போது தான் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சந்தை அமைப்பு சமூகத்தினுடைய வளர்ச்சி இதெல்லாம் மாறி வருவதைப்போல மாணவர்களுக்கு ‘எந்த நிலைமையில் இருந்தாலும் எங்களால் சமூகத்தில் வாழ முடியும்’ என்ற தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் முக்கியமே தவிர பொறியாளர் அல்லது மருத்துவராக வேண்டும் என்பது முக்கியம் அல்ல. இதைப் பெரியவர்களுக்கும் புரியவைக்க வேண்டும். அதே போல இந்தியா முழுவதும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அறிவியல், நிர்வாகம், கட்டடக் கலை, ஒப்பனைக்கலை ஆகிய பலதுறைகளில் வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறிப்பாகக் கிராமப்புற பெற்றோர்களுக்குத் தெரிவது இல்லை. தன் பிள்ளைகள் பொறியியல் படிப் பிற்குச் செல்ல வேண்டும் (அ) இவை இல்லையென்றால் வேறொரு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை இல்லாமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனி இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். இதை ஒரு சில நாட்களில் செய்துவிட முடியாது. மக்களிடம் வானொலி, தொலைக்காட்சி மூலமாக விவாதிக்க வேண்டும். மேலும் பட்டிமன்றம் போன்றவற்றை வைத்து அதில் மாணவர்கள், பெற்றோர்களுக்கிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினால் தான் உயர்கல்வித் துறையில் சமச்சீரான வளர்ச்சியைக் (Balanced development) காணமுடியும்.

பிரித்தானியர் தங்கள் நலன் சார்ந்து ஏற்படுத்திய கல்வி முறையை இன்றும் நாம் பின்பற்றுகிறோம். நம் சூழலுக்கு ஏற்ற மாதிரியான கல்வி முறையை நாம் உருவாக்க முடியாதா?

இந்த Compartmentalization பிரித்தானியர் செய்ததுதான். இயற்பியல், வேதியியல் என்ற பிரிவுகளைச் செய்தது மெக்காலே கல்விமுறைதான். பிரித்தானியர் முறையைத் தொடர்ந்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் உருவாயின. உலகத்தில் எந்த இடத்திலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேஷ் தவிர வேறு எங்கேயும் இந்த முறை கிடையாது. இந்த முறை உயர்கல்வித் துறைக்கு மிகப் பெரிய சாபக்கேடு எனலாம். காரணம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 600, 700 கல்லூரி களுக்கு அங்கீகாரம் வழங்குகிறார்கள். பல்கலைக்கழகம் பணம் வாங்கிக்கொண்டு அங்கீகாரம் வழங்குவதோடு சரி. அவர்கள் என்ன பாடத்திட்டம் வைத்திருக்கிறார்கள்? எப்படி நடத்து கிறார்கள்? தேர்வுமுறைகள் எவ்வாறு உள்ளன? என்பது பற்றிக் கவனிப்பதில்லை. நான் முதலில் கூறியதைப்போல you are converting a college or university into a factory. சோடா பாட்டிலில் அடைத்து வைக்கின்றதைப் போல, மாணவர்களை உருவாக்குகிறார்கள். இதனால்தான் இந்த முறை ஒரு சாபக்கேடு என்று சொல்கிறேன். இதை மாற்றி அமைக்கப் பல வழிமுறைகளை இன்றைக்கு ஆராய்ந்து வருகின்றனர்.

உயர்கல்வியில் சமத்துவ நிலையை அடைவதற்கு இட ஒதுக்கீட்டு முறை போதுமானதா? வேறு என்ன வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்?

மிகச் சிக்கலான கேள்வி. ஒதுக்கீடு செய்வது என்பது நிரந்தர தீர்வு அல்ல. தற்காலிகமான தீர்வே. புண் ஆறுகின்றவரைக்கும் கட்டு போடுவதைப்போல ஒதுக்கீடு செய்தால் இன்றைக்குப் பெண்களோ ஒடுக்கப்பட்டவர்களோ, சிறுபான்மையினரோ தங்களுக்கு என்று ஒரு இடம் இருக்கின்றது என்பதால் அவர்கள் சேருவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது.

அதே சமயத்தில் தொலைநோக்கில், இடஒதுக்கீடு தேவை யில்லாத நிலையை உருவாக்க வேண்டும். கல்விக்குப் பத்து ரூபாய் செலவு செய்தால் எஸ்.சி. எஸ்.டி. சிறுபான்மையினர் அதிகமாக இருக்கிற இடங்களில் நூறு ரூபாய் செலவு செய்யலாம். ஆரம்பத் தில் இருந்தே அவர்களைத் தயார் செய்தால் இடஒதுக்கீடு தேவை யில்லாது போய்விடும். அவர்கள் மற்ற மாணவர்களுடன் சரிசம மாகப் போட்டி போடத் தயார் செய்ய வேண்டும். நகரச் சூழலில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரோடு விவசாயியின் பிள்ளையும் கல்லூரியில் சேரும்பொழுது சிக்கல் ஏற்படுகின்றது. இந்த இடத்தில் விவசாயி பையனுக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. அவனுக்குப் பாடத்தை மட்டும் சொல்லித் தராமல் அவனுடைய முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு ஒரு வருடம் அதிகமாக ஆனாலும் பரவாயில்லை, அவர்களுக்கு என தனிக் கவனம் தேவை. உடனடித் தீர்வுதான் இடஒதுக்கீடு. அது நீண்ட காலத்திட்டமாகாது. இடஒதுக்கீடு தேவைப்படாத அளவுக்கு அவர்களுக்குத் தனிக் கவனமும், வசதிகளும் செய்து கொடுப்பதுதான் நமது கடமை.

தனியார் கல்வி நிறுவனங்கள் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு காலத்தில் இந்தியாவில் கருப்புப் பணம் நிறைய அதிகரித்தது. தேர்தல்களில் செலவு செய்வதற்காக லஞ்சம் வாங்குவது அதிகமானது. எனவே இவையெல்லாம் சேர்ந்து கருப்புப் பணம் அதிகமானவுடனே அக்கருப்புப் பணத்தை முதலில் ரியல் எஸ்டேட், தொழிற்சாலை என்று செலவு செய்தார்கள். அதை ஓரளவிற்குத்தான் செலவு செய்ய முடியும். கல்வித்துறையில் செலவழித்த கருப்புப் பணத்தைச் சுலபமாக வெள்ளைப் பணமாக மாற்ற முடியும். கருப்புப் பணத்தை வைத்து மேலும் கருப்புப் பணம் ஈட்ட முடியும் என்ற ஒரே ஒரு காரணத்தினால்தான் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்கள். மேலும் தாராளமயமாக்கம், தனியார் மயமாக்கம் எனும் கொள்கை 1990களில் வந்தபோது இதைத் தவறாகப் பயன்படுத்தித் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அரசாங்கத் திடம் பணம் இல்லாததனால் மட்டும் இது வந்தது இல்லை. மளிகைக் கடை வைத்திருக்கும் ஒருவர் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கலாம் என்று என்னிடம் வந்தார். உங்களுக்குப் பொறியியல் கல்லூரி பற்றி என்ன தெரியும் என்று கேட்டேன். அதெல்லாம் ஆட்களை வைத்துப் பார்த்துக்கொள்ளலாம் என்றார். பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கலாமா? அல்லது உயர்நிலைப் பள்ளி ஆரம்பிக்கலாமா என்று சொல்லுங்களேன் என்றார். இப்படிப் பணம் சம்பாதிப்பதற்கான வழியாகக் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்கின்றனர். இவர்கள் எல்லாம் கல்லூரி களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் நிறுவனங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டாயப் படுத்துகின்றனர்.

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில் அவர்களின் உழைப்பை உள்நாட்டிலேயே பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அரசாங்கம் எந்த அளவிற்கு உருவாக்க முடியும்?

இல்லை. Man power utilization அரசாங்கத்தினால் ஓரளவிற்குத் தான் பண்ணமுடியும். கல்வித்துறையில் தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய கல்விமுறை இருந்தால் அவர்களே வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அளவிற்கு ஒரு சூழ்நிலை உருவாகும். உயர் கல்வித் துறையில் வெளிநாட்டிற்குச் செல்வது என்பது கூட இங்கு வேலை இல்லை என்பதால் போவதில்லை. வெளிநாட்டிற்குப் போனால் இந்தியாவை விட அதிகச் சம்பளம் பெறலாம் என்பதால்தான். அந்த அளவிற்கு இங்கு யாரால் பணம் கொடுக்க முடியும். இந்த நாட்டில் ஏழைகள் அதிகம். பேராசை என்பது பெருமளவிற்கு வளர்க்கப்பட்டுவிட்ட நிலைமையில் மற்றவர்களைப் பார்த்து பேராசை கொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

Pin It