இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 103 ஆவது சட்டத்திருத்தம் அதாவது EWS பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது நம்பகமான தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதா? குறிப்பாக, நாட்டின் அரசு, தனியார் கல்வி நிலையங்களில் மேற்குறிப்பிட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக தரவுகள் சொல்கின்றனவா? கல்வித் துறையில் மட்டும் கவனம் செலுத்தும் பொருட்டு, இதற்கான தரவுகள் மனிதவளத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும் தேசிய நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பில் (NIRF - National Institutional Ranking Framework) இடம்பிடித்துள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளை ஆராய்ந்த போது, 2016-17 ஆண்டின்படி மட்டும், இத்தகைய கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீட்டுக் கொள்கை இல்லாதபோதும் கண்டிப்பான சேர்க்கை விதிகள் இருந்தபோதும், EWS இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 10%-ஐ விட மும்மடங்கு கூடுதலாக 30%ஆக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த சட்டத்தின் நோக்கம் என்ன?

EWS பிரிவினருக்கு மட்டும் நாட்டின் அரசு, தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளிலும் 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தத்தை 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றியது. இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பொருளாதார நிலையை மட்டும் ஒற்றைக் காரணியாக கருத்தில் கொள்ளும் இந்தச் சட்டத் திருத்தம், ஆண்டு வருமானத்தையும் சொத்து மதிப்பையும் மட்டும் பொருளாதாரத்தை கணக்கிடுவதற்கான அளவுகோல்களாகக் கொள்கிறது. ஆண்டு வருமானம் 8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. சொத்து மதிப்பு என்பது கிராமப்புறங்களில் 5 ஏக்கர் விவசாய நிலங்கள் என்றும், நகர்ப்புறங்களில் ஆயிரம் சதுர அடி கொண்ட வீடு அல்லது அறிவிக்கப்பட்ட நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 900 சதுர அடி கொண்ட மனை என்றும், அறிவிக்கப்படாத நகராட்சி பகுதியில் 1800 சதுர அடி கொண்ட மனை என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.iit delhiஎதன் அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட வருமான உச்ச வரம்பும் சொத்து மதிப்பு உச்சவரம்பும் வரையறை செய்யப்பட்டன? அரசின் நலத்திட்ட உதவிகளில் முறைகேடுகள் நடப்பதுபோல இத்தகைய மிகவும் பரவலான உச்சவரம்பு அளவுகோல்களால் முறைகேடுகல் நடைபெறாதா? சொத்து மதிப்பை உண்மைக்குப் புறம்பாக சேர்ப்பது அல்லது நீக்குவது உள்ளிட்ட மோசடிகள் இதில் நடைபெறாமல் பாதுகாக்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? உயர்சாதியில் 80% முதல் 95% மக்களை இந்த இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்களாக இத்தகைய உச்சவரம்பு அளவுகோல்கள் மாற்றுகின்றன. எனவே, வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவே 10% EWS இட ஒதுக்கீடு என்று முன்வைக்கப்படும் வாதங்களுக்கு மாறாக உயர்சாதியினர் அனைவரையும் இதில் சேர்க்கும் விதமாக இந்த அளவுகோல்கள் அமைந்திருக்கின்றன. ஆண்டுக்கு 8 இலட்சம் வருமான உச்சவரம்பு என்பது மாணவர் சேர்க்கையில் ஏழை மாணவர்களுக்கான உச்சபட்ச குடும்ப வருமானமாக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கல்வி நிறுவனங்களும் ஏற்கெனவே கடைபிடித்துவரும் உச்சவரம்புகளை மீறிய அதிகபட்ச வரையறையாகும்.

இத்தகைய இடர்கள் அனைத்தையும் தாண்டி 10% இட ஒதுக்கீடு என்பது உறையவைக்கும் ஒரு உண்மையை வெளிக்கொணருகிறது. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக பறைசாற்றிக் கொள்ளும் இந்தியாவில், சமூக கல்வி நிலைமைகளில் தேக்கம் அடையாத 80% உயர்சாதியினர் ஏழைகளாக உள்ளனர் என்பதாக இந்த சட்டம் வரையறை செய்கிறது என்பது தான் அது. இட ஒதுக்கீடு என்பதையே அலட்சியமானதாகவும் அநீதியானதாகவும் இதுவரை பார்த்தும் பரப்பியும் வந்த உயர்சாதியினரும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய EWS இட ஒதுக்கீடு தேவை என்பதை இந்தச் சட்டம் சொல்கிறது. இந்தப் புதிய இட ஒதுக்கீடு சட்டம் தேவையானதா, அவசியமானதா, சரியானதா அல்லது பொருத்தமானதா என்பதையெல்லாம் கடந்து, இது ஒரு உண்மையை உறுதிப்படுத்துகிறது. அதாவது இட ஒதுக்கீடு என்பது இதுநாள் வரை பரப்பப்பட்டது போல தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பு தரும் முறைமை அல்ல, மாறாக தங்கள் இழிசெயல்களால் வரலாற்றில் கோலோச்சியவர்களைக் கூட இட ஒதுக்கீட்டால் பயனாளிகளாக்கும் வகைபில் EWS இட ஒதுக்கீட்டு சட்டம் மாற்றியுள்ளது.

10% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆதரவாக சொல்லப்பட்ட தர்க்கம் என்னவெனில், இதுநாள் வரை கடைபிடிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளால், உயர்சாதியில் உள்ள ஏழைகள் தங்கள் ஏழ்மை நிலை காரணமாக உயர்கல்வி நிறுவனங்களில் சேர இயலவில்லை என்பதாகும். இது நடைமுறை உண்மையோடு ஒத்துப்போகிறதா இல்லையா என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவதே முதன்மை நோக்கமாகும். குறிப்பாக, EWS பிரிவினர் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட குறைவான எண்ணிக்கையில் தான் இருக்கிறார்களா என்ற கேள்வி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களை மட்டும் கணக்கில் கொண்டு அதற்கான தரவுகள் திரட்டப்பட்டு இங்கு முன்வைக்கப்படுகின்றன.

ஆய்வு முடிவுகள்:

2018ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பை (NIRF) உருவாக்குவதற்காக இந்தியாவின் 445 உயர்கல்வி நிறுவனங்கள் மனிதவளத்துறை அமைச்சகத்திடம் அளித்த தரவுகளின் அடிப்படையில் EWS பிரிவு மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறித்த தரவுகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2016 ஆம் ஆண்டு முதல் ஐந்து அளவுகோல்களின் அடிப்படையில் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை NIRF தரவரிசைப்படுத்துகிறது. இந்திய உயர்கல்வி நிறுவனங்களை இந்தக் கட்டமைப்பு எட்டு வகையாகப் பிரிக்கிறது. அனைத்து ஆண்டுகளிலும் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களின் எண்ணிக்கை, இளநிலை முதுநிலை மாணவர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த தரவுகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களின் (EWS) விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

2016-17ஆம் ஆண்டில் NIRF தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் EWS மாணவர்களின் எண்ணிக்கை விழுக்காடு பட்டியல் 1இல் கொடுக்கப்பட்டுள்ளது. NIRF பட்டியலில் உள்ள 445 உயர்கல்வி நிறுவனங்களில் 16 இலட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களில் சுமார் 28% மாணவர்கள், அதாவது 4 இலட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் EWS பிரிவு மாணவர்கள். கட்டடக்கலை படிப்புகளில் 13% விழுக்காடு தொடங்கி கல்லூரிகளில் 33% வரை EWS மாணவர்கள் படிக்கிறார்கள். கட்டடக்கலை, மருத்துவப் படிப்புகளைத் தவிர, ஏனைய அனைத்து படிப்புகளிலும் EWS பிரிவு மாணவர்கள் 10% இடங்களை விட இரு மடங்குக்கும் அதிகமான இடங்களை நிறைத்துள்ளனர். எனவே, EWS இட ஒதுக்கீட்டுச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே 10%க்கும் மும்மடங்கு இடங்களில் படித்து வருகிறார்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது. வருமான உச்சவரம்பு 5.5 இலட்சமாக இருந்தபோதே இத்தனை சதவிகித மாணவர்கள் படித்த நிலையில், EWS பிரிவினருக்கான உச்ச வரம்பு 8 இலட்சமாக தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டியல் 1: 2016-17ஆம் ஆண்டில் NIRF தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் EWS மாணவர்களின் எண்ணிக்கை

Type of Institution

EWS மாணவர்கள் %

College

33.5

Pharmacy

30.8

Engineering

26.7

University

27.8

Law

19.2

Management

23.8

Architecture

12.9

Medical

14.1

All

28.3

வகைப்படுத்தப்பட்ட 8 வகையான கல்வி நிறுவனங்களில் எத்தனை நிறுவனங்களில் 10%க்கும் குறைவாக EWS மாணவர்கள் இருக்கிறார்கள், எத்தனை கல்வி நிறுவனங்களில் 20%க்கும் அதிகமான EWS மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டது. அதன்படி (பட்டியல் 2), மூன்றில் இரண்டு பங்கு அதாவது 66% NIRF தரவரிசை கல்வி நிறுவனங்களில் 10%-க்கும் அதிகமாகவே EWS மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 50% உயர்கல்வி நிறுவனங்களில் 20%-க்கும் அதிகமான EWS மாணவர்கள் பயில்கிறார்கள். மருத்துவம், கட்டடக்கலை, மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட படிப்புகளில் ஏழை மாணவர்களின் எண்ணிக்கை பொதுவாகவே குறைவாகவே உள்ளது. அதே வேளையில், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருந்தியல் படிப்புகளில் EWS மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

பட்டியல் 2: 2016-17ஆம் ஆண்டில் NIRF தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் EWS மாணவர்களின் பங்கு

Type of Institution

EWS மாணவர்கள் %

0-10%

11-20%

21 and above %

Total %

College

23

16

61

100

Pharmacy

26

20

54

100

Engineering

30

20

50

100

University

32

14

54

100

Law

50

20

30

100

Management

54

10

30

100

Architecture

60

10

30

100

Medical

64

8

28

100

All

34.2

15.7

50.1

100

பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களை ஒப்பிடும்போது மருத்துவம், கட்டடக்கலை, மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் NIRF தரவரிசைப் பட்டியலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இடம்பிடித்துள்ளன. எடுத்துக்காட்டாக 100 பொறியியல் கல்வி நிறுவனங்கள் இருக்கும் பட்டியலில் சுமார் 10 சட்டப்படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. மிகுந்த போட்டி நிலவும் இந்த நான்கு படிப்புகளிலும் EWS மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு அந்தப் படிப்புகளுக்காக ஆகும் செலவு மிக அதிகமாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் செலவும், அந்தந்த நிறுவனங்களின் அதிகமான கல்விக் கட்டணங்களும் அடங்கும். எடுத்துக்காட்டாக, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பயிலும் மாணவரின் ஓராண்டுக் கல்விக் கட்டணம் இரண்டு இலட்சம் ரூபாய் ஆகும். அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் மேலாண்மை முதுநிலைப் படிப்புக்கு ஓராண்டு கல்வி கட்டணம் பத்து இலட்ச ரூபாய் ஆகும்.

அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் என்று வகைப்படுத்திப் பார்த்தாலும், EWS மாணவர்களின் விகிதாச்சாரம் ஏறக்குறைய ஒரே அளவிலேயே உள்ளன. பட்டியல் 3 இல் உள்ளபடி, NIRF தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ள 70% தனியார் கல்வி நிறுவனங்களில் 10%க்கும் அதிகமான EWS மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். 56% தனியார் கல்வி நிறுவனங்களில் 20%க்கும் அதிகமான EWS மாணவர்கள் பயில்கின்றனர். இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்களில் மிக அதிகமான கல்வி கட்டணம் விதிப்பது வழக்கம். அதையும் மீறி அங்கு பயிலும் EWS மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிலேயே உள்ளது.         

பட்டியல் 3: 2016-17ஆம் ஆண்டில் NIRF தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் EWS மாணவர்களின் எண்ணிக்கை

% EWS

தனியார் கல்வி நிறுவனங்கள்

அரசு கல்வி நிறுவனங்கள்

அனைத்தும்

0-10

32.2

35.1

34.2

11-20

11.6

17.7

15.7

21 அதற்கும் மேலே

56.2

47.2

50.1

மொத்தம்

100

100

100

NIRF தரவரிசையில் இடம் பிடித்துள்ள முதல் 100 பொறியியல் கல்வி நிறுவனங்களும் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த 100 கல்வி நிறுவனங்களும் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டன. முதலாவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் (பெரும்பாலும் ஐஐடி-களும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி. களும்), இரண்டாவது பொதுக் கல்வி நிறுவனங்கள், மூன்றாவது தனியார் கல்வி நிறுவனங்கள். முதல் பிரிவில் சுமார் 70% ஐஐடி, என்.ஐ.டி. களில் 10% க்கும் அதிகமான அளவிலேயே EWS மாணவர்கள் பயில்கிறார்கள். 62% தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களில் 20%க்கும் அதிகமான EWS மாணவர்கள் பயில்கிறார்கள். EWS மாணவர்கள் ஐஐடிகளிலோ, என்.ஐ.டி.களிலோ, அல்லது முன்னணி தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களிலோ குறைவான எண்ணிக்கையில் இல்லை என்பதை பட்டியல் 4 தெளிவாக்குகிறது.

பட்டியல் 4: 2016-17ஆம் ஆண்டில் NIRF தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களில் பயிலும் EWS மாணவர்களின் எண்ணிக்கை

% EWS

தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்கள்

மற்ற அரசு கல்வி நிறுவனங்கள்

தனியார் கல்வி நிறுவனங்கள்

0-10

31.6

33.3

25

11-20

26.3

20

12.5

21 அதற்கும் மேலே

42.1

46.7

62.5

மொத்தம்

100

100

100

ஆய்ந்து அறியப்பட்ட முடிவுகள்:

நாட்டின் முன்னணி 445 கல்வி நிறுவனங்களில் பயிலும் EWS மாணவர்களின் எண்ணிக்கை 28 விழுக்காடாக இருக்கிறது. இது புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டம் வழங்கும் 10% இடங்களை விட மூன்று மடங்கு அதிகமாகும். NIRF தரவரிசையில் உள்ள சுமார் 50% கல்வி நிறுவனங்களை கவனத்தில் கொண்டால் 20%க்கும் அதிகமான எண்ணிக்கையில் EBC பிரிவு மாணவர்கள் பயில்கிறார்கள். இட ஒதுக்கீடு இல்லாமலேயே EWS பிரிவினர் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் கணிசமான இடங்களில் பயில்கிறார்கள் என்பது புலனாகிறது. அதிக கட்டணம் வசூலிக்கப்படும் முன்னணி கல்வி நிறுவனங்களிலேயே இந்தப் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை 28% அளவுக்கு உள்ளதென்றால், மற்ற கல்வி நிறுவனங்களில் கட்டணம் குறைவாக உள்ள நிலைமையில் இவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும். இந்த ஆய்வு முடிவுகள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. இந்தப் புதிய இட ஒதுக்கீடு சட்டம் உண்மையின் மீதும் நியாயத்தின் பாற்பட்டும் வழங்கப்பட்ட நீதியான சட்டம் தானா என்பது தான் அது. இது நியாயம் தான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது என்பது தான் தரவுகளின் அடிப்படையில் கிடைத்த உண்மையாகும்.

பீமேஷ்வர் ரெட்டி ஏ, சன்னி ஜோஸ், பிடிங்கா அம்பேத்கர், விக்ராந்த் சாகர் ரெட்டி, வி எஸ் நிஷிகாந்த்

நன்றி: EPW ஆங்கில இதழ் (2019, ஜூன்8 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: தமிழ் நாசர்