கல்வியும் அதிகாரமும் மறுக்கப்பட்டு நூற்றுக்கு மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள் அனைத்து அதிகாரங்களிலும் ஈராயிரம் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் அவலநிலை இங்கு இருந்துவருகிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன்னர்தான் இடஒதுக்கீட்டிற்கானக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
சரியாகச் சொல்ல வேண்டுமானால் இடஒதுக்கீடு என்பது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே திராவிட இயக்கம் முன்வைக்கும் சமூகநீதி. தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. மத்திய அரசில் 49.5 சதவிகிதம் தான் இருக்கிறது.
மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பதற்கான நெடிய போராட்டத்தைத் தொடர்ந்து 1990இல் மண்டல் குழுவின் பரிந்துரை, சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டது. அப்போது நாடு முழுதும் கலவரத்தைத் தூண்டிவிட்டார்கள், இரதயாத்திரை நடத்தினார்கள் பார்ப்பனிய சங் பரிவாரங்கள்.
தொடர்ந்து இந்திரா சகானி வழக்கு என பல்வேறு தடைகளையும் தாண்டி 50 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த இடஒதுக்கீடு என்பது முறையாகப் பின்பற்றப்படாமல் மிகக் குறைந்த அளவிலேயே பார்ப்பனரல்லாத மக்களைச் சென்றடைந்திருக்கிறது. இதனை அண்மையில் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்டப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இடஒதுக்கீடு என்பது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமாக முறையாக அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில், இருக்கின்ற இடஒதுக்கீட்டையும் குழிதோண்டிப் புதைக்கும் வேலையைப் பார்ப்பனிய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஏனெனில் மனு (அ) நீதி சமூகநீதிக்கு எதிரானது.
பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் துறைக்கு விற்பதன் மூலம் சமூக நீதி சிதைக்கப்படுகிறது. தொழில் வணிகம் செய்வது அரசின் நோக்கமல்ல என்று காரணம் சொல்லி, தொழில் உற்பத்தித் துறையில் இருந்துவந்த கொஞ்சநஞ்சப் பிரதிநிதித்துவத்தையும் பறித்துவிட்டனர்.
நிர்வாகம் மட்டும் அரசிடம் இருக்கும் இந்த நிலையிலும் இடஒதுக்கீடு என்பதைத் தகர்ப்பதற்கானப் பணியைத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதான் தனியார் துறையில் இருந்து வரக் கூடியவர்களை மத்திய அரசின் முதன்மையானத் துறைகளுக்குக் கூட்டுச் செயலாளர்களாக நேரடியாக நியமனம் செய்யும் அறிவிப்பு.
இந்தத் துறைகளின் செயலாளர்கள் எல்லாம் IAS, IPS, IFS, IRS போன்ற சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் சமூகநீதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி, படிப்படியாக உயர்பதவி பெறுவார்கள்.
இந்த முறையை அப்படியே அப்புறப்படுத்திவிட்டு தனியார் துறைகளில் இருந்து நிபுணர்கள் என்ற பெயரில் மத்திய அரசு நேரடியாகக் கூட்டுச் செயலாளர்களை நியமிப்பது அரசமைப்புச் சட்டப்படியும் ஏற்கத்தக்கதல்ல சமூகநீதி அடிப்படையிலும் ஏற்கத்தக்கதல்ல.
சமூக நீதி என்பது அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்டப்பட வேண்டிய மாபெரும் பயணத்தில் இன்னும் பாதித் தொலைவு கூட வராத நிலையில் வழியில் பாறாங்கற்களைப் போட்டிருக்கிறார்கள் பார்ப்பனிய பாஜகவினர்.
எப்போதும் இவர்களால் உழைப்பால் முன்னேற முடிவதில்லை. அனைத்து இடங்களிலும் இடஒதுக்கீட்டைத் தங்களுக்கென உறுதி செய்துகொள்பவர்கள் முதலில் இவர்கள்தான்.
மற்றவர்களெல்லாம் இடஒதுக்கீட்டின் மூலம் வந்தாலும் ஒரு போட்டியைச் சந்தித்து அதன் மூலம் தேர்வு பெற்றுத்தான் வருகிறார்கள். ஆனால் போட்டியைத் தவிர்த்துவிட்டு நேரடியாகத் தங்களுக்கான இடங்களைப் பிடித்துக் கொள்வது, ஈராயிரம் ஆண்டுகளாக, பார்ப்பனர்கள் மட்டும்தான்.
உண்மையில் இவர்கள் போட்டியைக் கண்டு அஞ்சுபவர்கள். ஆகையினாலேதான் இவர்கள் மற்றவர்களுக்குக் கல்வியை மறுத்திருக்கிறார்கள். அறமற்றவர்கள். நேர்மையற்றவர்கள்.
ஏன் தனியார் துறைகளில் இருந்து ஆட்களை அல்லது நிபுணர்களை மத்திய அரசு நிர்வாகத்திற்குக் கொண்டு வரவேண்டும்? இந்தியாவின் சர்வீஸ் கமிஷன் கொடுக்கும் நிர்வாகப்பயிற்சியைவிட எந்த தனியார் நிறுவனம் நல்ல பயிற்சியைக் கொடுத்திருக்கிறது? இந்த தனியார் நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு, ஒருவர் காலை ஒருவர் வாரி முன்னேற, கொள்ளை இலாபம் சம்பாதிப்பதற்கான வழிகளைத்தான் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. இவர்கள் அரசு நிர்வாகத்திற்கு வந்தால் மக்களின் நிலை என்னாகும்?
2019-ல் இதேபோல் தனியார் துறையில் இருப்பவர்கள் 9 பேரைப் பல்வேறு துறைகளுக்குக் கூடுதல் செயலாளர்களாக மத்திய அரசு நியமித்தது.குறிப்பிடத்தக்க நியமனங்கள்:
Kakoli Ghosh (Ministry of Agriculture), Amber Dubey (Civil Aviation), Arun Goel (Commerce), Rajeev Saksena (Economic Affairs), Sujit Kumar Bajpayee (Environment, Forests).
இவர்கள் பெயரைப் பார்த்தாலே இவர்கள் எல்லாம் யார் என்பது நமக்கு விளங்குகிறது. ஒவ்வொருவர் நியமனத்திற்குப் பின்னரும் பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. இவர்களெல்லாம் பணமோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள், இடைத்தரகர்கள், மூத்த IAS அதிகாரிகளைவிட குறைவானப் பணி அனுபவம் கொண்டவர்கள்.
நேரடியாகத் தங்களுக்கு விருப்பம் உள்ளவர்களையம் தங்கள் சொற்படி நடப்பவர்களையும் கையெழுத்துப் போடுபவர்களையும் தேர்வு செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இதே போல் 30 பேரை நியமனம் செய்ய இருக்கிறார்கள்.
வர்ணாஸ்ரம தர்மத்தை நோக்கித்தான் நேரடியாக அவர்கள் தங்கள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்கள் இந்த ஆபத்தை உணர்ந்து, பெரியார் வழியில் சமூக நீதிக்கானப் போராட்டத்தில் பார்ப்பனரல்லாத மக்களாக ஒன்றுதிரண்டு ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு எதிராக நின்றிட வேண்டும்.
- மா.உதயகுமார்