மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய கோட்டாக்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் திட்டமிட்டு முடக்கிய பா.ஜ.க. ஆட்சி, அடுத்து அய்.அய்.டி. உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டைக் கைகழுவ ஆலோசிக்கிறது.
வேடிக்கை என்னவென்றால், இந்த நிறுவனங்களில் பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடுகள் முழுமையாகவே நிரப்பப்படாத நிலையில், எப்படி தீவிரமாக இந்த இடஒதுக்கீட்டை அமுல்படுத்தலாம் என்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் நியமித்த குழுவே இப்படி ஒரு விபரீத பரிந்துரையை அரசிடம் முன் வைத்திருப்பதுதான்.
இந்தக் குழுவின் தலைவர் டெல்லி அய்.அய்.டி. இயக்குநர் வி. இராம்கோபால் சர்மா. கான்பூர் அய்.அய்.டி. இயக்குநர், மும்பை மற்றும் சென்னை அய்.அய்.டி. பதிவாளர்கள் மற்றும் சமூகநலத் துறை, பழங்குடி மக்கள் நல்வாழ்வுத் துறை, வேலை வாய்ப்புத் துறை, மாற்றுத் திறனாளி நலத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் குழுவின் உறுப்பினர்கள்.
ஆசிரியர் நியமனங்களில் மட்டுமல்ல, மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்துவது குறித்து ஆராய வேண்டும் என்பதே அரசு நிர்ணயித்த வரம்பு.
தீவிரமாக இடஒதுக்கீட்டைப் பின்பற்றும் வழி இடஒதுக்கீட்டையே முழுமையாக ஒழித்து விடுவதுதான் என்ற விபரீத முடிவுக்கு வந்துள்ளது இந்தக் குழு. அது மட்டுமல்ல; மத்திய கல்வி அமைச்சகமே இதை ஏற்றுக் கொண்டு பரிசீலித்து வருகிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ப்பட்ட கேள்விக்கு அரசிடமிருந்து பதில் வந்திருக்கிறது.
இந்தப் பரிந்துரைக்கு குழுவினர் வைக்கும் காரணம் என்ன? அய்.அய்.டி. நிறுவனங்களில் கல்வி உயர்தரத்தை (Academic Excellence)க் காப்பாற்ற வேண்டும் என்பது ஒரு காரணம். அந்தத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் இடஒதுக்கீட்டின் கீழ் கிடைப்பதில்லை என்பது மற்றொரு காரணம்.
எனவே இடஒதுக்கீடுகள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்ட ஹோமி பாபா தேசிய நிறுவனம், டாடா அடிப்படை ஆய்வு மய்யம், விண்வெளி ஆய்வு மய்யம் போன்ற எட்டு உயர் கல்வி நிறுவனங் களோடு அய்.அய்.டி.களையும் சேர்த்துவிட வேண்டும் என்கிறது இந்தக் குழு.
ஒன்றிய ஆட்சியும் அதன் அமைச்சக அதிகாரிகளும் அய்.அய்.டி. இயக்குநர்கள் மற்றும் பதிவாளர்களும் இடஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கை மீது கடும் வெறுப்புக் கொண்ட பார்ப்பனிய மன நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்கலாம் என்று சட்டம் வந்ததே 2006ஆம் ஆண்டில்தான் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு வழங்கினால் திறந்த போட்டிக்கான இடங்கள் பாதிக்கப்படாத அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் வைத்த கோரிக்கையை அன்றைய காங்கிரஸ் ஆட்சி ஏற்று, அந்த அடிப்படையில் அய்.அய்.டி. மாணவர் சேர்க்கை 50 சதவீதம் உயர்த்தப்பட்டது.
2008-17 ஆண்டுகளுக்கிடையில் கூடுதல் அய்.அய்.டி.களும் திறக்கப்பட்டன. இப்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததால் அதற்கு ஏற்ற விகிதத்தில் உரிய தகுதியுடைய ஆசிரியர்கள் கிடைக்கவில்லை என்று கூறி இடஒதுக்கீட்டையே இரத்து செய்து விடலாம் என்கிறார்கள்.
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்களே பார்ப்பன மனுவாதிகள்தான்! அதைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதும் அவர்கள் தான்.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அய்.அய்.டி. மற்றும் அய்.அய்.எம். உயர் கல்வி நிறுவனங்களில் உயர் பதவி உள்ளிட்ட அனைத்து பேராசிரியர் நியமனங்களிலும் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தாக்கீது பிறப்பித்தது மத்திய கல்வி அமைச்சகம் தான்.
இப்போது ஓராண்டிலேயே தனது கொள்கையை மாற்றிக் கொண்டு இடஒதுக்கீட்டையே நீக்கி விடலாம் என்ற முரண்பட்ட முடிவுக்கு வந்திருக்கிறது.
இடஒதுக்கீட்டை முழுவதுமாக நியமனங்களில் ஒழித்து விட்டால் தற்போதுள்ள 10 சதவீத ‘உயர்ஜாதி ஏழைகளின்’ இடஒதுக்கீட்டுக்கான தேவையே இல்லாமல் போய் விடும். ‘ஏழைகள்’ என்ற சான்றிதழும் தேவையில்லாமல் 100 சதவீதம் பார்ப்பனர்களே அனைத்துப் பதவிகளையும் கைப்பற்றி விடுவார்கள்.
இந்தியாவுக்குள் செயல்படும் அய்.அய்.டி.களுக்கான ‘தகுதி’யை சர்வதேச அளவில் பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் இதிலே மக்கள் வரிப் பணத்தில் படித்தவர்கள் உடனே வெளிநாட்டில் வேலை பார்க்க ஓடி விடுகிறார்கள். இதுதான் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது.
மற்றொன்று இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் அப்பிரிவு மக்களுக்கு கிடைக்க விடாத நடைமுறைகளை இவர்கள் பின்பற்றி வருவதாகும். இடஒதுக்கீட்டில் ‘தகுதி’யான விண்ணப்பதாரர்கள் கிடைக்காவிட்டால் இதர பிரிவினரிடமிருந்து இடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என்ற நடைமுறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
இரண்டாவதாக, மொத்தப் பணியிடங்களைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்பாமல், துறைவாரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நடைமுறை.
மூன்றாவதாக, உலகத் தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களிலிருந்து ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள், நேரடியாக அய்.அய்.டி.களில் சேரலாம் என்ற நடைமுறை. இவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனைகள் நீக்கப்பட்டு விட்டன. எந்த எழுத்துத் தேர்வும் தேவையில்லை என்று அறிவித்து விட்டார்கள்.
2018 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் (இப்போது கல்வி அமைச்சகமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமர்ப்பித்த அறிக்கையின்படி மொத்தமுள்ள 23 அய்.அய்.டி.களில் பட்டியல் மற்றும் பழங்குடிப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் சேர்ந்து பணி நியமனங்கள் பெற்றிருப்பது 9 சதவீதம் மட்டுமே! இந்தப் பின்னணியில் சமூக நீதி ஆதரவாளர்களிடமிருந்து கேள்விகள் எழுந்தன.
இதற்குக் கண்துடைப்பாக இடஒதுக்கீட்டை மேலும் தீவிரமாக அமுல்படுத்தக் குழு போடுவதாக அரசு அறிவித்தது. அந்தக் குழு தான் இப்போது இட ஒதுக்கீட்டையே நீக்கி விடலாம் என்று பரிந்துரைக்க பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியும் அதை பரிசீலிப்பதாக அறிவித்திருக்கிறது.
உதட்டளவில் இடஒதுக்கீடு ஆதரவைப் பேசிக் கொண்டு நடைமுறையில் ஒழித்துக் கட்டும் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் வன்மையான கண்டனத்துக்கு உரியது; போராடிப் பெற்ற உரிமைகளை இழந்து விடவே கூடாது.
- விடுதலை இராசேந்திரன்