maatruveli_nov13

தொடர்பு முகவரி: பரிசல் புத்தக நிலையம், எண்: 96 J பிளாக், நல்வரவுத் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி,
அரும்பாக்கம், சென்னை - 106.
செல்பேசி: 93828 53646, மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பள்ளத்தாக்குகளில் இருந்த கொடுந்தமிழ் நாடுகளாக வேணாடு, பூமிநாடு, கற்கா நாடு, குட்ட நாடு, குட நாடு ஆகிய ஐந்தையும் கூறுவர். தமிழ் மொழியின் வட்டார வழக்குகளுக்குக் கொடுக்கப்பட்ட அன்றைய பெயர்தான் கொடுந்தமிழ். மூலத் திராவிட மொழியில் ஒன்றாயிருந்த தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட சுமார் முப்பத்தேழு இன்றைய மொழிகள், அன்று ஒரே மூலத்திராவிட மொழி. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு தொடக்கம் படிப்படியாக இம்மொழிகள் ஒலிமாற்றமடைந்து, வட்டாரம் சார்ந்த தனித்த மொழிகளாக கி.பி. 11ஆம் நூற்றாண்டளவில் உருப்பெற்றன. இவற்றில் தமிழுக்கும் மலையாளத்திற்குமான உறவு நிலவியல் அடிப்படையில் நெருக்கமானது. இம்மொழிகளின் எழுத்து வடிவம் வட்டெழுத்து ஆகும். மூல பிராமி வடிவம் ஒன்றாக இருக்க, பின்னர் பல வட்டெழுத்து வடிவங்களும் உருவாயின. இவ்வகையில், ஒலி வடிவம், எழுத்து வடிவம் இரண்டிலும் மாற்றங்களை உள்வாங்கிய திராவிட மொழி களின் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாறு என்பது இன்றைய திராவிட மொழிகள் புழக்கத்தில் இருக்கும் அனைத்துப் பகுதிகளையும் சார்ந்ததாகவே கருத வேண்டும். இவற்றில் தமிழ், மலையாளம் சார்ந்த உறவு சார்ந்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பேராசிரியர் எளங்குளம் குஞ்ஞன்பிள்ளை “பண்டைய கேரளம்” (1961) என்ற தமது நூலில் தமிழகக் கேரளப் பண்பாட்டு வரலாற்றை ஒன்றாகவே கருதி பதிவு செய்துள்ள பின்வரும் செய்திகள் கவனத்திற்குரியவை.

“தொல்காப்பியத்தையும் அதன் முன்னும் பின்னுமுள்ள சங்க இலக்கியங்களை ஆராய்ந்தால் கி.பி. 500ஐ அடுத்த காலம் வரை கேரள மக்களில் நூற்றுக்கு எண்பது பேரும் ஒரு மதமும் இல்லாதவர் களாயிருந்தார்கள் என்பது புலனாகும். திராவிட வழிபாட்டு முறைகளை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். சமணர்களின் பத்மாவதி தேவியை (இவை பத்தினி தெய்வங்கள்) ஆராதிக்கவோ மறையோர்கள் ஆராதிக்கும் இடங்களின் பிரசாரத்தை ஏற்றுக் கொள்ளவோ, வெற்றி, நீடிய ஆயுள், இவற்றைப் பெற யாகங்கள் செய்யவோ, அவர்கள் தயங்கவில்லை. வேள்வித் தீயில் ஓமப் பொருள் களை ஆர்ப்பரிக்கும் போதெழும் புகையும் ஊன் சமைக்கும் அடுப்பிலிருந்தெழும் புகையும் அவர் களுக்கொன்றே (பதிற்.21). மறையோருரைப்படி வேள்வி செய்யும் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் மறுநாள் காலையில் நிணங் கலந்த பசிச் சோறை கையிலேந்திக் கொண்டு கொற்றவை மகிழ்விக்க அயிரை மலைக்குப் போவதைக் காணலாம். வேடர்கள், குறவர்கள் ஆகியோரின் குல தெய்வம் கொற்றவை. குருதி கலந்த சோறும், ஊனும், கள்ளுமே அவளுக்குகந்த உணவு. நிரை கவரச் செல்லும் வெட்சி வீரர்களின் வெற்றி கொற்றவை மனநிலையைப் பொறுத்திருந்தது. அயிரை மலைக் கொற்றவை சேரர்களின் குலதெய்வம்”-(1970:193-194)

இவ்வகையில் வாழ்ந்த சமூகம் வருணாசிரம முறைமை களை உள்வாங்கியதாக இல்லை. இனக்குழு, சிற்றரசன், வளர்ச்சி பெற்ற அரசன் என்னும் சமூகப் படிநிலையுடைய சமூகமாகவே இருந்தது. இச்சமூகத்தில் வருணாசிரம தரும நிலைபாடுகள் இல்லாமல் இருந்ததையும் பேரா.குஞ்ஞம் பிள்ளை பின்வரும் வகையில் பதிவு செய்துள்ளார்.

“தமிழகத்தில் வருணாசிரம தருமத்தை நிலை நாட்டுவது அவ்வளவு எளிதாக இல்லை. சாதியற்ற நிலைதான் திராவிடப் பண்பாட்டின் உயிர். குறிஞ்சி நிலத்தில் வசிக்கும் குறவன், முல்லை நிலத்தில் வந்து தங்கினால் இடையன் ஆவான். மருத நிலத்தில் வந்து வேளாண்மைத் தொழிலை ஏற்றுக் கொண் டால் வேளாளன் ஆவான். அதைப்போல வேளாண் குறிஞ்சி நிலத்தில் வந்து தங்கினால் குறவன் ஆவான். இதுவே வருணாசிரமம் நிலைபெற்றது வரை இருந்த நிலை. பாணனும் பார்ப்பானும் செல்ல யாதொரு தடையும் இருந்ததில்லை. பசுவின் கொழுத்த இறைச்சித் துண்டுகளை நிறைய இட்டு அரச குடும்பத்தினருக்குப் பக்குவம் செய்த சோறும், மதுவும் வேண்டுமளவு கொடுத்த பின்னர் தான் அவர்களை மன்னர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். தீண்டாமை, தொடாமை மட்டுமல்ல, சாதி வேற்றுமையின் வாசனையே இல்லாத நாடாயிருந் தன கேரளமும் தமிழ்நாடும். சமண பௌத்தத் கொள்கைகளுக்கல்லாமல், வருணாசிரமத்துக்கு எவ்வகையிலும் ஏற்றதாயிருக்கவில்லை இந்நிலை” (1973:182)

வருணாசிரம தருமம் புழக்கத்தில் இல்லாதிருந்த சூழலில், அது எவ்வகையில் இச்சமூகத்திற்குள் நுழைய வாய்ப்பு உருவானது. அதன் பிற்கால விளைவுகள் எவ்வாறெல்லாம் உருப்பெற்றன. அதற்கானப் பின்புலத்தையும் குஞ்ஞன் பிள்ளை பதிவு செய்துள்ளார். அப்பகுதி வருமாறு:

“சமணர்களாயிருந்த பல்லவர்களும் பாண்டியர் களும் மதம் மாறியதே சமண மதம் குன்றியதற்குக் காரணம். அதைத் தொடர்ந்து எத்தனையோ சமண முனிவர்கள் கொல்லப்பட்டார்கள். திருஞானசம்பந்தர் பாண்டிய அரசனை, அவனது கோப்பெருந்தேவி, மந்திரி ஆகியோரின் உதவியால், சைவனாக்கிய கதை யாவரும் அறிந்ததே. அன்று எண்ணாயிரம் சமணர் களைக் கழுவேற்றிய மகிழ்ச்சியைக் காட்டுவதற்கு இப்பொழுதுகூட மதுரைக் கோயில் விழாக் கொண் டாடுகிறார்கள் (கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, History of South India, 2nd Edition, p.413).கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோரும் ஞானசம்பந்தரைப் போன்ற முனிவர்களே. அவர்கள் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்களாதலால் அதை ஒரு புண்ணிய கருமமாகச் சைவர்கள் நினைத்தார்கள். பக்தர்கள் அதைக் கொண்டாடவும் தொடங்கினார்கள். திருஞானசம்பந்தர் உருவை எல்லாக் கோயில்களிலும் பிரதிஷ்டை செய்து ஆராதிக்கின்றார்களல்லவா? நாகப்பட்டினத்திலிருந்த பௌத்த விகாரத்தில் வைத்திருந்த புத்தரது பொன் பிரதிமையைக் களவு செய்து கொண்டு போய்த் திருவரங்கக் கோயிற் பணி செய்த புண்ணிய கருமம் மூலம் திருமங்கையாழ்வாரது புகழ் எங்கும் பரவிற்று. பக்தியாகிய மதுவை அதிகமாகக் குடித்தால் இப்படியெல்லாம் நடக்கும்” (1973: 188-189)

மேற்குறித்த விவரணங்கள் அடிப்படையில் ஏறக்குறைய கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையான தமிழ்ச் சமூக இயங்கு தளத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இவ் வரலாறு கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்.

அண்மையில் பேராசிரியர் இராஜன் குருக்கள் எழுதி வெளிவந்துள்ள “Social Formations of Early South India” (2010)” (2010) என்னும் நூல் 1961இல் பேரா.குஞ்ஞன் பிள்ளை செய்துள்ள ஆய்வுகளை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. பேரா.குஞ்ஞன் பிள்ளை அவர்களின் கருதுகோள்கள் நவீன கண்டுபிடிப்புகளான தொல்லியல், மானிடவியல் ஆகிய பின்புலத்தில் பேரா. இராஜன் குருவால் சிறப்பாக வெளிக் கொணரப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 

இயற்கை மரபு சார்ந்த வாழ்ந்த சமூகத்திற்குள் வருணா சிரமம் என்னும் வைதீக மரபு எவ்வகையில் உருப்பெற்றது. அதன் பரிமாணங்கள் என்ன? என்ற புரிதலைப் பெற முடியும். இதில் கேரளத்தின் அடுத்தகட்ட நிலை எவ் வகையில் உருப்பெற்றது. அது எவ்வகையில் இன்றைய கேரள உருவாக்கத்திற்கு வழிகண்டுள்ளது என்பது சுவையானது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்ட மலையாள நாட்டின் வரலாறுகள் அனைத்தும் புராணியத் தன்மை மிக்கது. பரசுராமர் மலையாள பூமியைக் கடலினின்று மீட்டு வந்தார் என்று ‘கேரள பாணினீயம்’ நூல் கூறுகிறது. இக்கதை பல்வகையில் விரித்தெழுதப்பட்ட புராணமே ‘கேரளோற்பத்தி’ என்னும் நூல். வைதீக மரபின் செல்வாக்கிற்குள் இந்நிலப்பகுதி உள்வாங்கப்பட்டது. தென்னை மரங்கள் நிறைந்த தேசம் என்பதே கேரளம் என்பதற்குப் பொருள். இத்தேசத்தில் உருவான பண்பாட்டுக் கலப்பு, அம்மக்களின் பண்டைய வரலாற்றுக்கு மாற்றான தன்மையை உருவாக்கியது. வருணாசிரமம் கோலேச்சியது. சாதிப் பிரிவுகள் ஆழமாக உருப்பெற்றன. மணிப்பிரவாள மொழியாக மலையாள மொழி ஆனது. இத்தன்மை சார்ந்து இலக்கண இலக்கிய நூல்களும் புராணங்களும் உருவாயின.

சைவ மரபைச் சேர்ந்த சேரமான் பெருமாள் நாயனார், வைணவத்தைச் சேர்ந்த குலசேகர ஆழ்வார் ஆகியோர் கேரளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், புறப்பொருள் வெண்பாமாலை எழுதிய ஐயரிதனார்; இறையனார் களவியல் எழுதிய ஆசிரியர் ஆகியோரும் பெரிய புராணம் கூறும் விறல் மீண்ட நாயனார் மற்றும் திருவருட்பா பாடிய வெண்ணாட்டு அடிகள் ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்தவர் களாக அறிஞர் மு.இராகவையங்கார் குறிப்பிடுகிறார் (Some aspects of Kerala and Tamil Literature:1973). 

மேற்குறித்த நிலையில் இருந்த கேரளம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக மாற்றங்களை உள் வாங்கத் தொடங்கியது. ஐரோப்பிய பாதிரியார்கள் அங்கு வந்தார்கள். கிறித்தவம் அவர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. அதற்குமுன் அராபிய மரபிலிருந்து உருவான இஸ்லாம் மதமும் அங்கு நடைமுறையில் இருந்தது. தமிழகத்திற்கும் கேரளத்திற்குமான உறவுகள் பெரிதும் குறையத் தொடங்கியது.

இன்று கேரளம் வேறு; தமிழகம் வேறு. இரண்டு பகுதிக்குமான நதி நீர் முரண்பாடு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் கேரளர்கள் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஈழப் போராட்டம் முறியடிக்கப்படுவதற்கு கேரள அதிகாரி ஒருவரின் திட்டமிடல் முக்கியப் பங்காற்றிய தாகக் கூறுவர். இவ்வகையான கேரளத்தின் 1950க்குப் பிற்பட்ட வரலாறு - சமூக வரலாற்றில் அக்கறையுடையவர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய பாடமாக அமைகிறது.

1957இல் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு தலைமையில் இடதுசாரி அரசு கேரளத்தில் அமைக்கப்பட்டது. பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய வரலாற்றில் இந்நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கேரள அரசின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத மத்திய அரசு, இ.எம்.எஸ் அமைச்சரவையைக் கலைத்தது. இப்பணியைச் செய்தவர் ‘சோசலிஸ்டாக’க் கருதப்பட்ட நேரு அவர்களே. எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதலிடம் கேரளமே. இத்தன்மை சார்ந்து பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் இம்மண்ணில் நிகழ்ந்தன.

நவீன சிந்தனை மரபுகள் உடனுக்குடன் உள்வாங்கப் பட்டது. நவீன இலக்கியம், நாடகம், திரைப்படம் ஆகியவை உருப்பெற்றன. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைவிட கேரளத்தில் மேற்குறித்தவை வளமாக உருப்பெற்று வளர்ந்து வந்தன. கேரள சினிமா உலக வரைபடத்தில் இடம்பெற்றது. கேரள அரங்கமும் இந்தியச் சூழலில் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. கேரளியர்கள் சுரணை மிக்கவர்கள் என்று நம்பப்பட்டது.

1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குறித்த அனைத்து வளங்களும் படிப்படியாக மாறத் தொடங்கின. வளைகுடா நாடுகளுக்குச் சென்ற கேரளியர்களின் பண முதலீடு, கேரளாவின் நுகர்வுப் பண்பாட்டில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் அலங் கோலமாகியது. இன்று கேரளம் பண்பாட்டு நெருக்கடியில் சிக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். சாதி, மத சக்திகளின் செல்வாக்கு வலுப்பெற்று வருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே கேரளம் இன்று இருப்பதாகக் கூறுகிறார்கள்.

சாதி, மதமற்ற தொடக்க கால கேரளம், வருணாசிரம - வைதீகமயமான இடைக்கால கேரளம், அவற்றைக் கேள்வி கேட்ட இருபதாம் நூற்றாண்டின் இடைக்கால கேரளம், மீண்டும் நவீன வருணாசிரம - சாதி - மதம் உருவாகும் கேரளம். இந்தச் சுழற்சி சமூகவியல் - வரலாற்று மாணவர்களின் கவனத்தைக் கோரும் ஒன்றாகும். சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சி என்னும் கருத்தாக்கங்களை எப்படிப் புரிந்து கொள்வது? கேரள வரலாறு சொல்லும் பாடம் என்ன? இந்தியாவின் பிற மாநிலங்களின் நிலைபாடுகள் என்ன? இவ்வகையான கேள்விகளை முன்வைத்து விவாதிப்பதற்குக் கேரள வரலாறு முன்னுதா ரணமாக இருக்கிறது. இந்தச் சிறப்பிதழில் அதற்கான கால்கோள் செய்யப்பட்டுள்ளது. தமிழகச் சூழலைப் புரிந்துகொள்வதற்குக் கேரள வரலாறு உதவக்கூடும். இக்கண்ணோட்டத்தில் இவ்விதழை உரையாடலுக்காக உங்கள் முன் வைக்கிறோம். விரிவான உரையாடலை எதிர்பார்க்கிறோம்.

ஆதார நூல்கள்

1960       வேங்கடராஜூலு ரெட்டியார், தென் மொழிகள், முதற்பகுதி (கன்னடம், தெலுங்கு, மலையாளம்), எஸ்.வாஸன் கம்பெனி, மயிலாப்பூர், மதராஸ்-4

1973       குஞ்ஞன் பிள்ளை. பண்டைய கேரளம் (சங்க காலத்தில் சமுதாய - பண்பாட்டின் வரலாறு) 1967இல் இரண்டாம் பதிப்பாக வந்த “ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டில் கேரளம்” என்னும் நூல் தமிழ்ப் பேராசிரியர் செ.ஜேசுதாசன் அவர்களால் ‘பண்டைய கேரளம்’ எனும் தலைப்பில் 1973இல் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்நூலின் மலையாள முதல் பதிப்பு 1961இல் வெளிவந்தது. இந்நூலைத் தமிழில் தமிழ்ப் புத்தகாலயம் 1973இல் வெளியிட்டுள்ளது.

1973       Raghava Aiyangar.M. Some aspects of Kerala and Tamil literature, Translated in to English by J.Parthasarathi, Published by Director, Department of Publications, University of Kerala. 

2012       Rajan Gurukkal, Social Formations of South India, Oxford University Press, First Edition 2010, Second Edition, 2012.

Pin It

கேரளத்தின் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சமூகம்,அரசியல், பொருளாதாரம்,கல்வி, கலை,இலக்கியம், பண்பாடு முதலிய துறைகளில் ஏற்பட்ட முக்கியமான அசைவுகள் குறித்த பார்வைகளை அறிமுகம் செய்தல் என்ற நோக்கத்துடன் இவ்விதழ்ப் பதிப்பு வெளி வருகின்றது. ஆனால் ’கேரளத்துவம்’ என்ற பெருங்கதையாடலுள் அனேகம் கிளைக்கதையாடல்கள் இருக்க அவை ஒரே சமயம் பல உருவங்களோடும் பல குரல்களோடும் இருப்பது இயல்பு. ஆகவே, ’கேரளம் இன்று’ என்ற தலைப்புக்குள் அடக்கி அளிக்க இயல்கிற கட்டுரை/ஆய்வுப் படைப்புகளைத் தேர்வு செய்தல் மிகமிக சிக்கலாகவே இருந்தது. இருந்தாலும் பிரதிநிதித்துவ இயல்புடையது என்ற புரிதலுடன் தேர்வுசெய்யப்பட்ட பல கட்டுரைகளில் இருந்து இதழ்ப்பதிப்பின் பக்கஎல்லை என்ற வரம்புக்குள் நின்று இங்கு சிலவற்றை மட்டுமே உள்ளடக்க முடிந்துள்ளது. கேரள சமூகத்தை ஒரு வெளிச்சமூகத்திற்கு அறிமுகம் செய்தல் என்பதே நோக்கம்.

’கேரளத்துவம்’/கேரளத் தன்மை எனும் கற்பிதம் நூற்றாண்டு களின் வளர்ச்சி வரலாற்றைக் கொண்டது.பல நூற்றாண்டுகளாக பல்வேறு பண்பாட்டு அசைவுகளை உள்ளிணைத்து கேரளத்துவம் உருப்பெற்றிருக்கவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு கூறுகளில் அதற்கு நேர்ந்த வளர்ச்சி மாற்றங்களை வரலாறு பதிவு செய்துள்ளது. போராட்ட இயல்பும் விமர்சனப் பார்வையும் கேரளவாழ்வில் அன்றாட நிகழ்வுகளிள் ஒன்று. கேரளத்துவம் என்றொரு சார்பற்ற இருப்பு உரிமை கோர இயலாதது எனினும் அச்சிந்தனைக்கு வழிநடத்தக்கூடிய சில கூறுகள்/ இடங்கள் இல்லாமலில்லை.அதனால் மட்டுமே ‘கேரள மாதிரி’ எனும் கருத்தாக்கம் உருப்பெற்றுள்ளது. இந்திய அளவில், ஒருவேளை சில தருணங்களில் பிற வளர்ச்சிபெற்ற நாடுகளுக்குக்கூட முன்மாதிரி யாகத் திகழும் சில நிகழ்வுகளைக் கேரளம் பங்களித்துள்ளது. கல்வி, உடல்நலம் போன்ற துறைகளில் கேரளம் கடந்த ஆண்டுகளில் அடைந்த முன்னேற்றங்கள் அதற்குச் சான்று.

வளைகுடா மலையாளிகள் கேரள வாழ்வின் புறச்சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய காலகட்டம் கடந்த நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள். பின் - நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலையாக்கம், சூழலியம்,நவ வரலாற்றியம் போன்ற நவீன சிந்தனைமுறைகளுக்கு கோட்பாட்டு அடித்தளம் இக்காலத்தில்தான் உருவாகி வளர்ந்தது. இவை மலையாளிகளின் கருத்து வெளியீட்டுமுறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கி யுள்ளது. இரசனையின் புது அழகியல் உருவாகி வந்தது. மொழியில் நிகழ்ந்த தேடல்களால் சொற்களின் மறுகரை தேடப்பட்டது.கேரளப் பண்பாட்டையும் வாழ்க்கையையும் படைப்பியல்புடன் அணுகும் முனைப்பு ஏற்பட்டது. ஓவியம், சிற்பம், திரைப்படம், நாடகம், இலக்கியம், இசை முதலிய அனைத்துத்துறைகளிலும் சோதனை முயற்சிகள் நிகழ்ந்த வண்ணமிருந்த காலம் இது. தாராளமயமாக்கம், உலகமயமாக்கக் கொள்கைகள் உலகமக்கள் மீது ஏற்றிவைத்த புதுப் பொருளாதாரச் சுமை பற்றி பெரும் விமர்சனங்கள் எழுந்தன. நீர் ஆதாரங்களின் சுரண்டல், சுழலியல், உலக வெப்பமாதலுக்கு எதிரான புதிய சிந்தனைகளுக்கு கேரளம் முகம்கொடுத்தது. சுருக்கமாக, கேரளத்துவத்தின் வரலாற்றுப் பரிமாணங்களைத் தேடும்வேளையில் மேற்குறிப்பிட்ட பொருண்மைகளின் மீதான பார்வைகள் தவிர்க்க இயலாதவை. இதுபோன்ற பார்வைகள் அளிக்க இயல்கின்ற மலையாள சமூகப் பண்பாட்டின் நிலவியல் இங்கு பதிவாக்கம் பெறுகின்றது.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் கேரளத்தில் நிகழ்ந்துள்ள கலை இலக்கியம் பண்பாடு அரசியல் பொருளாதாரம் ஆகிய சமூகக் களங்களில் நேர்ந்துள்ள மாற்றங்களைப் பதிவுசெய்ய ’மாற்றுவெளி’ விரும்புகிறது என இவ்விதழுக்கான பொருண்மை குறித்துப் பேராசிரியர் வீ.அரசு எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இவ் வாய்ப்பை எங்களுக்குப் பணித்தமைக்காக அவருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றோம்

இவ்விதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் ஆசிரியர்கள்; கெ.என்.கணேஷ், கெ.எம்.கிருஷ்ணன், பாலசந்திரன் சுள்ளிக்காடு, பி.பி.ரவீந்திரன்.,சி.கோபன், அஜயகுமார்,கெ.பி.கண்ணன், ஏ.டி.மோகன்ராஜ், கெ.ஏ.ஜெயசீலன் ஆகியோரின் ஒத்துழைப்புக்கும் மொழியாக்கம் மற்றும் வெளியீட்டனுமதிக்குமாக ஒவ்வொருவருக் கும் தனித்தனியாக நன்றியை தெரிவிக்கின்றோம். இவ்விதழில் இடம்பெற்ற கட்டுரைகளின் மொழிபெயர்ப்பாளர்கள்: த.விஜயலட்சுமி, வே.இரவி, பிரதீப்குமார், பி., பிரீத்தா.ச, லீமா மெட்டில்டா. அ, காவேரி.ந ஆகியோருக்கு நன்றிகள்.

இவ்விதழுக்காகத் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள் பல. அவை அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளன. கேரளப் பொதுக்கல்வி, பெண்ணியம், திரைப்படம், தலித்தியம் என்று பலபொருண்மைகளில் அமைந்த பல கட்டுரைகள் மொழிபெயர்க்கப் பட்டன. ஆனால் அவை அனைத்தும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தால் அக் கட்டுரைகளை மொழிபெயர்த்தளித்த பணிக்காக டி.எம்.சல்மா மகஜபீன், ஏ.சுஜானா பானு, க.கதிரவன், ஷைனி, கலைவாணி, ஆனந்த் சச்சின் ஆகியோருக்கு நன்றிகள்.

- ந.மனோகரன் & சஜிவ்குமார்.எஸ் ,அழைப்பாசிரியர்கள்

Pin It

வெகுசன இலக்கியம் எனும் கற்பிதம் அழகியல் மற்றும் சமூகவியல் அடிப்படைகளைக் கொண்டது. ஆகவே மிக இலகு வானது என்று நினைக்கப்படுகின்ற இக் கருத்தியல் மிகச் சிக்க லானது. ஒரு வரலாறு/ பண்பாடு/சமூகச் சூழலில் சித்திரிக்கப்படு கின்ற இலக்கிய வடிவங்கள், பிரதிகள்,இலக்கிய அமைப்புக்கள், இலக்கியம் படைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அல்லது வாசிக்கப்படுகின்ற முறைகள், இலக்கியப் படைப்புக்கள் முன்வைக் கின்ற உன்னதம்/மலிவு வகைப்பாடுகள் அல்லது இலக்கிய உற்பத்திகள், இலக்கியம் அமைப்பு என்ற நிலையில் சமூகத்தில் உற்பத்தி செய்யப்படும் முறை இவற்றின் அடிப்படைகளுடன் மட்டுமே வெகுசன இலக்கியத்தைக் குறித்த வரையறைகள் உருவாக்க இயலும்.

வெகுசன ரசனை எனும் கற்பிதம் கூட ஒரு சமூகத்தின் கலாச்சார வரலாற்றில் ஒரு கட்டமாதலால் குறிப்பாக இச்சிக்கல்களின் வெளிச்சத்தில் வெகுசன ரசனையை எனும் கருத்தியலைப் புரிந்துகொள்ள உதவுகின்ற இணைவுகளையும் கூறுகளையும் அறிதல் என்பதே ஒரு ஆய்வில் முதன்மை இலக்காக அமையும்.ஏனெனில் மிகக் குறைவான வகைப்பாடுகள், முடிவுகளை முன்னிறுத்தி விசாலமான, நுட்பமான கற்பிதங்களைக் கொள்கையாக்குதல் என்பதுதானே இலக்கியத் திறனாய்வின் பொதுமுறையியல்.

வெகுசன இலக்கியம் எனப் பொதுவழக்கில் குறிக்கப்படுகின்ற ஓர் இலக்கியவகைமை (இதுபோன்ற வகைப்பாடு தேவையற்றது என்ற கருத்தும் வலிமையடைந்து வருகிறது என்றாலு கூட) உண்டு. இவ்விலக்கியத்தின் அமைப்பைப் பகுப்பாய்வு செய்யுமுன் வெகுசனரசனை எனும் கருத்தியலைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். ஆனால் கொள்கையாக்கத்தின் நிலையில் நமது வெகுசன இலக்கியம் சிறு சிக்கலை உருவாக்குகின்றது. மலையாள வெகுசன இலக்கியத்திற்கு ஏற்ற ஒரு கொள்கை உருவாக்கத்தின் தேவையை இச் சிக்கல் கவனப்படுத்துகின்றது.

வெகுசன இலக்கியம் குறித்து கிடைத்துள்ள கொள்கை விளக்க மாதிரிகள் பெரும்பாலும் மேற்குநாடுகள் சார்ந்தவைதான். இம் மாதிரிகள் நமது வெகுசன இலக்கியத்தை ஆராயப் போதுமானவை தானா என்பது ஐயம்தான். இலக்கியத்தின் பரவல்முறை வெகுசன இலக்கியத்தை வரையறுக்க உதவும் மதிப்பீட்டுக் கூறுகளில் ஒன்று. இயல்பாகவே பரவல்/ பரப்புதல் முறை வேறுபாடுகள் வெவ்வேறு மட்ட வாசிப்பு சமூகத்தை முன்னிறுத்துகின்றது.

மேலைக் கொள்கைகள் புத்தக வடிவ வெளியீட்டுச் சூழலை முன்வைத்தே வெகுசன இலக்கியத்தைப் புரிந்துகொள்ள முயன்றுள்ளன. மறுமலர்ச்சி, தொழிற்புரட்சியின் உச்சகட்டத்தில் ஐரோப்பாவில் புத்தக வெளியீடு ஒரு பெருந்தொழிலாக உருவெடுத்தது. நில வுடைமை அமைப்பின் மாற்றாக இடம்பிடித்த முதலாளிய அமைப்பில் அறிவும் அறிவின் களஞ்சியங்களாகப் புத்தகங்களும் அமைப்பு வடிவைப் பெற்றன. இக் கட்டத்தில் தான் புத்தகமும் எழுத்தாளனும் சமூக முக்கியத்துவமுடைய ஒரு உறவின் அடிப் படையில் அமைப்பாக்கம் அடைந்தனர்.

அறிவுப் பரவலாக்க வழிகள் என்ற நிலையில் ஏராளமான நூலகங்கள் உருவாயின. அறிவு ஓர் பொது இடமாக மாற்றம் பெற்ற சூழலை இங்கிலாந்தின் பின்னணி யில் ஆராய்கின்ற டெரி ஈகிள்டனின் Criticism and Ideology, Function and Criticism போன்ற நூற்கள் இதுபற்றி விளக்குகின்றன.

புத்தகங்களின் மலிவுப்பதிப்புகள் குறித்த கருத்தும் அன்றே இருந்து வந்துள்ளது. இங்கிலாந்தில் அதுபோன்ற புத்தகசாலைகளுக்குப் பெயர்போன க்ராப் ஸ்ட்ரீட்கள் போன்ற வெளியீடுகளின் பெயரி லேயே பரவலாக அறியப்பட்டன. பென்னி நாவல்கள் அன்றும் இன்றும் வெளியீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன.இன்று போலவே அன்றும் ஒருவேளை இன்றை விடவும் அதிகமாக, அன்று சாதாரண வாசகரின் இலக்கிய வடிவமான நாவல்களே இப்போக் கின் நுகர்வுப் பொருளாக இருந்தது.

மக்கள் ரசனையைப் புத்தக வெளியீட்டில் ஒரு வகைமையாக இனங்காணும் முயற்சி 18,19 நூற்றாண்டுகளிலேயே ஐரோப்பாவில் ஏற்பட்டது.இலக்கியம், புத்தகம், படைப்பாளி, மக்கள் ரசனை எனும் கூறுகள் அமைப்பாக்கம் பெறும் வரலாற்றைப் பீட்டர் ஹாம், பீட்டர் விடோஸன் என்றிருவர் தொகுத்துள்ள Popular Fiction என்ற நூலில் காணலாம்.

முதலாளியச் சூழலில் நூலாசிரியர்/ படைப்பாளிகளுக்குக் கிடைத்து வந்த புரவலர் நிலைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. சமூகத்தில் செல்வந்தர்களும் அரசர்களும் அளித்துவந்த பொருளாதார ஆதரவு எனும் இடத்தைப் புத்தகவெளியீட்டாளர்கள் கைப்பற்றினர். அவர்கள் ஓர் அரசியல் பிரிவாக அதிகார நாற்காலிகளைக் கைப்பற்றி யிருந்ததை வரலாற்றில் காண்கிறோம். இந்நிகழ்வுகள் அக்காலக் கவிதைகளிலும் நிழலிடுவதுண்டு.

விடுதலைக்குப் பிற்பட்டகாலத்தில் மலையாளத்தில் தோன்றிய வெகுசன இலக்கியம் பற்றிக் கூறுவதற்கு முன்னர் ஐரோப்பிய புத்தகவெளியீட்டுச் சூழல் பற்றிக் கூறக் காரணம் ஒரே நிலைகளில் இவற்றிடையே உள்ள ஒற்றுமைதான்.

ஐரோப்பாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நிகழ்வுற்ற ஒரு வரலாற்றுக் கட்டத்தை நாம் மிகக் குறுகிய காலத்தில் கடந்துள்ளோம். கேரளச் சூழலில் வாசிப்பு ஒரு நிறுவனம் என்ற நிலையில் வளர்ச்சி பெற்ற வரலாற்றை இதனுடன் இணைத்தே வாசிக்க வேண்டும். மக்கள் ரசனையின் தொழிற் பாட்டை வரையறுக்க இது அவசியமாகும்.

ஐரோப்பாவைப் போலவே நூலகங்கள் சமகால வெளியீடுகள் வழியாகவே மலையாளியின் வாசிப்புப்பழக்கமும் வளர்ந்தது. விடுதலைக்குமுன்னரே தொடக்கமிடப்பட்டிருந்த நவீனக் கல்வி முறை பொதுமக்களிடையேஅடிப்படைக்கல்வி, எழுத்தறிவு பெற லாக விடுதலைக்குப்பிந்தைய காலத்தில் பெருமளவு பரவலாக்கம் அடைந்தது. கேரளத்தில் ஏராளமான வாசகசாலைகளும் நூலகங் களும் பற்பல சமகால வெளியீடுகளும் ஏற்பட்டது இக் காலத்தில் தான்.

இலக்கியப்பணி என்ற கருத்தியலும் கூடக் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் ஏற்பட்டது. நாடுவிடுதலை பெற்ற காலத்தி லேயே கேரளம்45%எழுத்தறிவு பெற்ற மாநிலமாக இருந்தது. அடுத்த ஆண்டுகளில் அதில் ஏற்பட்ட முறையான வளர்ச்சியும் நமது பண்பாட்டு வரலாற்றின் பகுதியாகும். மறுமலர்ச்சியின் இயல்புடைய இக்கலாச்சாரச் செயல்பாடு மலையாளியின் வாசிப்பு, வாசிப்புமுறை வரலாற்றுடனும் வெளிப்படையாக வெகுசன இலக்கியத்துடனும் தொடர்புடையது.

*****

ஒரேகாலத்தில் இலக்கிய உற்பத்தியில் வேறுபட்ட முறைமைகள் நிலவுகின்றன. இந்நிலை இலக்கியத்தின் அமைப்பு, இலக்கியப் பரவல்முறை, வாசிப்புமுறை,இலக்கியவரலாறு இவற்றைப் பாதிப்பதுண்டு, வெகுசன இலக்கியத்தை வரையறை செய்ய இக்கூறுகளை அறிதல் அவசியம். நமதுவெகுசன இலக்கியத்தை அணுக மேற்கத்திய மாதிரி மட்டும் போதுமானதல்ல. சமகால இதழ் வெளியீடுகளையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.மேலை மாதிரிகளில் வெகுசன இலக்கியத்தின் ஒவ்வொரு மாதிரியும் புத்தக வடிவ வெளியீடுகளே.

ஒவ்வொரு படைப்புமுறை சார்ந்த மக்கள் ரசனையின் குறியீடாகச் செயல்படுகின்றன. நீண்ட கால அளவிலான மக்கள் ரசனை அவற்றிற்குண்டு. அதனோடுஒப்பிட மலையாள வெகுசன இலக்கியம் குறைந்தகாலஅளவிலான மக்கள் ரசனையைக் கொண்டுள்ளது. மக்கள் ரசனையின் அளவுகோல்களை ஆராயும் போது நமது புத்தக வெளியீட்டுத்துறை சில சுவாரசியமான போக்கு களைக் காட்டுகின்றது. இலக்கியப் பிரிவில் இடம்பெறுகின்ற புத்தக வடிவிலான நூற்களின் ஒரு பெரும் சதவீத நூற்களுக்கும் ஒரு சிறப்பான வாசக வட்டம் இல்லை.

இவ்வாசகரைப் பொறுத்தவரை புத்தகவாசிப்பு ஒரு வேறுபட்ட செயல்பாடு மட்டும்தான். இது ஒரு பயிற்சியின் சிக்கல். புத்தகவடிவில் அதிகமாக விற்கப்படுவதும் வாசிக்கப்படுவதும் சுத்த/ நல்ல இலக்கியமென நாம் பொதுவாகக் கருதுகின்ற ஒரு சில படைப்பாளிகளின் நூற்கள் மட்டுமே என்று இன்றையப் போக்குகள் காட்டுகின்றன.

நவீன விற்பனைத் தந்திரங்களுக்கும் இதில் பங்குண்டு. இருப்பினும் மிகுந்த மக்கள் வரவேற்பைப் பெற்ற படைப்பாளியின் நாவல்கள் (உண்மையான வெகுசன இலக்கியம்) கூடப் பதிப்பு விஷயத்தில் ‘கஸாக்கின்றெ இதிகாச’த்தின் எண்ணிக்கையை நெருங்க முடிவதில்லை. புதிய பொழுதுபோக்கு ஊடகங்களின் வரவால் படிப்பகம் மற்றும் நூலகச் செயல்பாடுகளும் அருகியுள்ளன.

வேறு சில சமூக அரசியல் சூழ்நிலைகளும் இதற்குக் காரணம்தான். தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் பல்சுவைக் கதையாடல்களை வீடுகளுக்குள் கொண்டு சேர்ப்பதையும் குறிப்பிடலாம். சுதந்திரத் திற்குப் பின் மிகநீண்ட காலமாக இருந்துவந்த ஒரு பொதுஇடம் என்பது இன்று மெல்லமெல்ல அருகிவருகின்றது. இச்சூழலில்தான் மக்கள் ரசனை என்பதை ஒரு மறுவரையறை செய்யவேண்டியுள்ளது.

அடிப்படையான மக்கள் ரசனை ஒரு அழகியல்ரீதியான கூறு அல்ல. ஒரு இலக்கியப்படைப்பின் கலைமதிப்பை அளந்திட அதையரு மதிப்பீட்டுக் கூறாகக் கொள்ளவியலாது. இலக்கியம் ஒரு படைப்புச் செயல்பாடும் அமைப்புமாக நாம் புரிந்துகொள்ளும் சூழலில் மக்கள் ரசனைக்கோ, வெகுசன இலக்கியத்திற்கோ இடமில்லைதான். Cult Fiction என்ற நூலில் கிளைவ் புளூம் கூறுவது நமது வெகுசன இலக்கியத்திற்கு ஓரளவு பொருத்தமாக உள்ளது.

“ஆய்வாளர்களைப் பொறுத்தவரை இச் சொல்லின் பொருள் அங்கீகாரமுடைய இலக்கியப்படைப்புக்கு அளிக்கப்படுகிற மிகை முக்கியத்துவம் காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட பெருவழக்கி லுள்ள வெளியீடு என்பதும் பண்பாட்டாய்வாளர்களைப் பொறுத்த வரை பெரும்பாலும் எதையும் இழிவுபடுத்தி மலிவும் சாதாரணத்து வமும் கற்பிக்கின்ற பொதுமக்கள் பண்பாட்டின் முக்கியமான உதாரணமாகும்” கூடவே இலக்கியப் படைப்புக்கள் என்ற தோரணை யில் வாசிக்கப்படுவனவற்றை ஒருங்கிணைத்து இலக்கியம் என்ற சொல்லாட்சியின் கீழ் நிலைநிறுத்துகின்ற பண்பாட்டுச் செயல் முறைப் பணியிலிருந்து விடுதலை பெற்ற ஒரு வாசகவட்டமே இவ் வெகுசன இலக்கியத்தின் நுகர்வோர். அவர்களைப் பொறுத்தவரை இலக்கியம் ஒரு பொருட்டே அல்ல. இலக்கியவிமர்சனம் பண்பாட்டுவிமர்சனத்திற்கு வழிவிட்டு விலகும் என்ற ஆந்தனி ஹோப்கின் கருத்துகள் இங்கு மிகவும் பொருளுடையதாகின்றது.

வெகுசன இலக்கியங்களில் மக்கள் ரசனை எவ்வாறு கட்டமைக் கப்படுகின்றது? வாசகர்களின் கருத்தையும் மக்களின் உணர்வுத் துடிப்பையும் அறிந்து இலக்கியப் படைப்பில் ஈடுபடும் முறை ஐரோப்பாவில் கடந்த நூற்றாண்டில் இருந்திருக்கவேண்டும். சார்லஸ் டிக்கன்சின் ‘பிக்விக் பேப்பெர்ஸ்’ எழுதப்பட்டமுறையை நாம் அறிவோம். சந்தையின் தேவைகளுக்கேற்ப இலக்கியத்தையும் இலக்கியவாதியையும் மாற்றித் தீர்மானிக்கிற ஒருநிலை இது.

(மக்கள் ரசனையும் இதேபோல கட்டுப்பட்டுக்குள் வைத்துக் கட்டமைக்கப்படுவதன் சான்றுகள் நாமறிவோம்.ஏனெனில் சாமானிய மக்களின் ரசனைமாற்றம் சந்தையால் உருவாக்கப்படுவது தான். கிடைக்கப்பெறும் பொருளுக்கு அப்பால் ரசனையின் எல்லையை விரித்திட இயலாமைதான் பொதுமக்களின் பிரச்சினை). கேரளத்திலும் எதையும் கதையாக்குதல் என்ற போக்கு இருந்துள்ளது. பொதுமக்களால் பெரிதும் கவனிப்புப் பெற்ற பல சம்பவங்களின் மாதிரியிலமைந்த நாவல்களும் நெடுங்கதைகளும் எழுதப்பட்டன.

ஒரு தொழிலாகவேஇத்துறை செயல்பட்டுவருகிறது என்பதே பரவலான கருத்து. ஆசிரியர்/ இதழ் ஈடுபாடுகள், இதழ் உற்பத்தி செய்ய விரும்புகிற ரசனைக்கு ஏற்ப இயந்திரத்தனமாகக் கதைகள் படைக்கப்படுகின்றன. படைப்பாளியின் ஆளுமைக்கோ கலை நுட்பத்திற்கோ இடமேயில்லை. இயல்பாகவே படைப்பளிகள் நபர்கள் என்ற நிலையில் மறைந்துவிடுகின்றனர். ஒரு படைப்பாளி யைப் படைக்கவும் அழிக்கவும் ஒரு இதழாசிரியர்/ வெளியீட் டாளரால் இயல்கின்றது.

தொழிற்சாலைகளின் அதே அதிகார அமைப்பு இங்கும் செயல்படுகின்றது.எழுத்தாளர்கள் முகமற்ற தொழிலாளர்கள் அல்லது வெறும்பெயர்கள். ஒருவரே வெவ்வேறு புனைப்பெயர்களில் வெவ்வேறு படைப்புக்களை ஒரேநேரத்தில் செய்கின்றனர். சில பிரமுகர்கள் உதவியாளர்களை வைத்து இலக் கியப் படைப்பைச் செய்கின்றனர் என்றும் சொல்லப்படுவதுண்டு.

“ஆசிரியனின் மரணம்” என்ற கட்டுரையில் செயற்கையாக எழுத்தில் ஈடுபடும் கை பற்றி அவர்கள் கூறுவதை நாமிங்கு நினைக்கலாம். மேற்கில் கண்டடைந்த அளவு பரவலாகவும் ஆழமாகவும் மக்கள் ரசனைப் பற்றிய ஆய்வுகள் இங்கு நிகழவில்லை. மனிதவாழ்வின், செயல்பாட்டுத் தளங்களின் சிறப்பம்சங்களுடன் கதைவடிவில் எடுத்துரைக்கும் பாணியை ஆர்தர் ஹெய்லி, ரோபின் கூப்பர், இர்விங் வாலஸ், ஜெப்ரி ஆர்ச்சர் இவர்களின் எழுத்துக்களில் காணலாம்.

மலையாளத்தில்இவ்வளவு விரிவான வெளியீடோ உள்ளடக்கத்தில் புதுமையையோ நாடுகின்ற ஒரு பொதுவாசக சமூகம் இல்லைதான். இருப்பினும் பங்குச்சந்தை, நீதிநியாயத்துறை, விளையாட்டுப் பொழுதுபோக்கு இவைகுறித்த கற்பனையாக்கப் படைப்புகள் கெ.எல். மோகனவர்மா போன்றோரால் எழுதப்படுவது கவனிப் பிற்குரியது. அதுபோல அறிவியல் தொழில்நுட்பங்களைப் புனை வாக்கம் செய்கின்ற ராதாகிருஷ்ணனின் படைப்புக்களையும் குறிப்பிடவேண்டும்.

இந்த எழுத்தாளர்களை வெகுசன எழுத்தாளர்கள் என்ற நிலையில் குறிப்பிடவில்லை. மாறாக மக்கள் ரசனை என்ற கற்பிதம் எவ்வாறு வரையறைகளுக்கு அப்பாலும் பொருள்படுவதாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டவும்தான். இதிலிருந்து மக்கள் ரசனை வாசக எண்ணிக்கையிருந்து மட்டும் தீர்மானிக்க இயலாதது காணலாம்.

***

வாசிப்பு என்ற நிறுவனம் வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைய எழுத்தறிவு,வாசிப்பதற்கான ஓய்வுவேளை, சூழல் எனும் சமூக அமைப்புக்கள் இன்றியமையாதவை. வாசிப்புப் பொருட்களின் கிடைத்தல் என்பதும் முக்கியமான கூறுதான்.இன்று நாம் ஜனரஞ்சகம் எனப் பெயரிட்டழைக்கின்ற உரைநடைக் கதையிலக் கியங்கள் புதிதாக எழுத்தறிவு பெற்ற ஒரு பெரும் சமூகத்திற்கு வாசிப்பு ஊடகமாகவும் தூண்டுதலகவும் இருந்தது.(ஏனைய பிற இலக்கிய வடிவங்களை விட). மிகப் பொருத்தமாக இணைவுறும் கூறுகளான இவ்வரலாற்று உண்மையை - வாசிப்பு; எழுத்தறிவு - ஒரு அழகியலாகவே வளர்க்கின்ற செயல்பாட்டை இப் படைப்புக் களின் அமைப்பினின்றும் காணலாம்.

இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின்,கீழ், நடுத்தர மக்களின் எழுத்துப்பழக்கம், அழகியல் பற்றி ரிச்சார்ட் ஹொகார்ட் நடத்திய ஆய்வில்  இந்தஊடகம் பற்றிக் குறிப்பிடும் தகவல்கள் ஓரளவு நமது சூழலுக்கும் பொருத்தமானது.கதைகளுக்கே இவை முக்கியத்துவமளிக்கின்றன. அரசியல், சமூகப் பிரச்சினைகள், கலை இலக்கிய விவாதங்கள் இவற்றைக் கவனமாகப் புறக் கணிக்கின்றன.

நடுத்தர மக்களின் ரசனையைத் தாமே கட்டமைத்து அதற்கேற்ற தீனியைத் தயாரித்தளித்தல் என்ற தந்திரத்தை இவ் விதழ்கள் செயல்படுத்துகின்றன. சுவாரசியத்தைத் தக்கவைத்துச் செல்லும் பாணியில் எழுதப்படுகின்ற கதைநாவல்களும்,நிகழ்வுத் தொகுப்புகளும் .இவற்றின் சிறப்பம்சங்கள்.அறிவுசார் உள்ளடக்கமோ சவால்களோ இவற்றில் இல்லை. அழகியல் ரீதியாக வும் கருத்தியல் ரீதியாகவும் சில எளிமையான வடிவஒழுங்குகளை உருவாக்குவதே இவற்றின் பணி. சமகால நிகழ்வுகளைக் கதை களாகப் படைத்தல் இதன் போக்கு. உள்ளீடற்ற, வெற்றுத் தகவல் களின் வடிவில் நிறைவேறாத இச்சைகளின் கற்பனை நிறைவேற்ற மாக அவை வாசிக்கப்படுகின்றன.

வெகுசன இலக்கியம், வாசிப்பு வரலாற்றில் துப்பறியும் நாவல் களுக்கும் இடமுண்டு. மலையாளத்தில் எழுதப்பட்ட துப்பறியும் நாவல்களின் எண்ணிக்கைக்கு இணையாக ஆங்கிலம், பிற மொழி களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட துப்பறியும் நாவல்களு முள்ளன. எவ்வாறாயினும் மலையாளியின் எழுத்து/ வாசிப்புப் பயிற்சியை வளரச் செய்ததில் இந்நாவல்களுக்கும் பங்குண்டு.

பிரதி என்ற நிலையிலிருந்து மாறாக ஒரு வாசிப்புமுறை, அழகியல், கதாபாத்திரங்கள், சந்தர்ப்பம் எனும் நிலைகளில் மீண்டும் மீண்டும் தொடர்கின்ற நிலைவடிவங்கள்  எனும் இத் தன்மைகளுடன் வெகுசன இலக்கியம் வழக்கில் இருந்து வருகின் றது. மலையாளச் சூழலில் இவ்விலக்கியத்தின் வரலாறு மிகச் சுருக்கமானது. ஏனெனில் வெகுசன இலக்கியத்தின் முழுவரலாற் றுப் பதிவு என்பதை அதன் எண்ணிக்கைப் பெருக்கமே கேள்விக்குள் ளாக்கி விடுகிறது. அடிப்படையான மாற்றங்கள், வாசிப்புப்பயிற்சி யின் மீதான சவால் போன்ற கூறுகளை இவை தவிர்த்துக் கொள் கின்றன. ‘காலத்தைக் கடந்து வாழ்தல்’ என்ற “மேற்தட்டு இலக்கியக் கொள்கை”யின் பாதிப்பைக் கொண்ட படைப்பாளிகளும் படைப்புக்களும் இங்குக் குறைவுதான். இருந்தால் அதுகூட வரலாற்று ரீதியான காரணங்கள் மற்றும் சந்தைநிலவரங்களால் மட்டும்தான்.

வெகுசன இலக்கியத்தை நாம் “பைங்கிளி சாகித்யம்” என்று சொல்லிவருகின்றோம். முன்னர் குறிப்பிட்ட அழகியல்ரீதியான எளிமையாக்கம் இச்சொல்லில் அதன் எல்லாநிலைகளிலும் பொருள் படுகின்றது. முட்டத்து வர்க்கியின் புகழ்பெற்ற நாவல் “பாடாத்த பைங்கிளி”(1955) நாவல்தான் இச்சொல் வழக்கிற்கும் ஓரளவுவரை இவ்விலக்கிய வகையின் இன்றைய வடிவக் கட்டமைப்புக்குமான காரணம். சிக்கல்களே இல்லாத, நிறைவான கதை மற்றும் எதிர்பாராத முடிவுகளுக்கு இடமளிப்பதில் ‘பாடாத்த பைங்கிளி’ போல மற்றொரு உதாரணத்தைத் தேடமுடியாது.

‘பாடாத்த பைங்கிளி’ முதல் அனைத்து வெகுசன இலக்கியங் களும் எதார்த்தவாதத்தின் அடியற்றியே எழுதப்பட்டன. மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதைகூறல்முறை அது. இக்கதைகளில் பயன் படுத்தப்படுகின்ற எதார்த்தவாதத்தின் இயல்பு என்ன?எதார்த்தவாதம் ஒன்றும் உண்மையின் பிரதிநிதியல்ல.

மாறாக உண்மை எனும் தயாரிப்பு பற்றிவாசகன்/வாசகியை உணரச்செய்யும் செயல் முறையே அது. டாமியன் கிராண்ட் கூறிய பழையதொரு விளக்கப் படி, “தன் சுயம் இழந்து முற்றிலுமாகக் கீழடங்குகின்ற ஒரு உலகத் திற்கு ஒரு கடமையைச் செய்யவதும் நஷ்டபரிகாரம் செய்யவதும் தன் கடமை எனச் சொல்ல வைக்கின்ற இலக்கிய மனசாட்சியே ரியலிசம். படைப்பின் பிரதித்தன்மையை மறுத்தல், கதைசொல்லி யின் இடையீடற்ற தன்னிச்சையான போக்கில் கதையை முன்நகர்த்தல், முடித்தல் போன்ற ரியலிஸ்ட் சம்பிரதாயங்களை அப்படியே பின்பற்றி இந்நாவல்களில் கதை சொல்லப்படுகின்றது. கதையின் ‘உண்மைத்தன்மை’ யை உறுதிப்படுத்தவே இதுபோன்ற திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.

படைத்தல் குறிப்புகளை இயன்றவரை பூடகமாக்கல் என்பதே இத்தந்திரம். எதார்த்தத்தைப் பற்றிய ஒரு மாயைஉணர்வை  இது வாசகரிடம் உருவாக்குகின்றது. படைப்புடன் உணர்ச்சிகரமாக ஒன்றுபடுதலையும் இப் படைப்புகள் வேண்டி நிற்கின்றன. சிக்கல்களற்ற, நிறைவான முடிவுகளை முன்வைப்பவை இவை. மயக்கத்திற்கு இடமளிக்காத தெளிவான வருணனையில் வெளிப்படுபவை.காதல்கதைகள் வெகுசன இலக்கியத்தின் முதன்மைச் சுனை. நற்பண்புகளின் விளைநிலங்கள். இக்கதைகளின் முதன்மைப் பாத்திரங்கள். இந்நிலைக்கு மாறான அடிப்படைகள் எதுவும் புதிதாக உருவாகவில்லை.

ரியலிசம் உருவாக்குகின்ற மாயையே இக் கதைகளின் அழகியலை நிர்ணயிக்கின்றது. வாசிப்பைப் படைப்புச் செயலுடன் பூடகமாக இணைத்து ஆவலைத் தூண்டி இழுக்கும் நிலையில் அது நிறைவேற் றப்படுகிறது. வாசகரின் உணர்ச்சிகரமான தலையீட்டிற்கு இட முண்டு என்ற எண்ணத்தைத் தூண்டிவிட்டு விலக்கிநிறுத்துதல் என்ற தந்திரமே இங்குச் செயல்படுகின்றது. ரியலிசப் பிரதிகளில் ஆசிரியர் வாசகரைக் கைபிடித்து தன்னுடன் கதைவழியே நடத்திச் செல்வ துண்டு. ஒவ்வொரு காட்சியிலும் நிகழ்விலும் ஆசிரியருடன் வாசகரும் பங்கேற்கின்றனர்.

அவ்வக்காட்சிகளில் இடம்பெறாத கதாபாத்தி ரங்களுக்கு மறுக்கப்படுகின்ற அனுபவத்தளத்தை வாசகன் அனுபவிக் கின்றான். இந்த அதிக அனுபவம் சூழலை மேலும் நன்றாகப் ‘புரிந்து கொள்ள’ உதவுகின்றது. ஆசிரியனின் மரணம் வாசகனின் பிறப்புக்கு வழியமைக்கிறது என்று உரையாடும் வேளையில் ரோலான் பார்த் இதுபோன்ற சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுகின் றார். எதிர்பாராமைகளின் பங்காளியாக இருப்பதே வாசகனுக்கு இவ்வாய்ப்பைத் தருகிறது.

வாசகத் தலையீட்டின் வெளிப்பாடு ஒவ்வொரு படைப்பிலும் வெவ்வேறாக அமையலாம். உதாரணமாக, ‘பாடாத்த பைங்கிளி’ நாவல் புதிர்தன்மைக்கோ இறுதி வியப்புக்கோ இடமளிப்பதில்லை.அது நன்மை தீமைகள் குறித்த உணர்ச்சிகரமான போராட்டத்திற்கும் முடிவெடுத்தல்களுக்கும் இடமளிக்கின்றது. இதன் வாயிலாகவே இங்கு வாசக வெளிப்பாடு நேர்கின்றது. நன்மை தீமைகள் அடிப்படையான அளவுகோல்கள் அல்ல. அவை சூழல் மற்றும் செயலால் தீர்மானிக்கப்படுகின்ற தயாரிப்புக்களே. பாடாத்த பைங்கிளி போன்ற நாவல்களின் பாடுபொருள் சார்ந்த ஆற்றலும் வெற்றியும்கூட அதுதான்.

வறுமையை நன்மையுடன் இணைப்பது இப் படைப்புக்களின் பொதுப்போக்கு. நன்மை, வறுமையின் அதே இடத்தைப் பெறு கின்றது தீமை. சமூகவியல் ரீதியான முரண்களை நபர்சார் தளத்தில் எளிமையாக்கம் செய்து தீர்வு காண்பது என்ற விமர்சனத்தை வெகுகாலமாக எதிர்கொள்கின்றது வெகுசன இலக்கியம். ஒரு நிலையில் வரலாற்றை மறு உருவாக்கம் செய்கிறது என்று கூறலா மெனினும் உண்மையில் இவை வரலாற்றை இருட்டடிப்புத்தான் செய்கின்றன.

நபர் உற்பத்தியின் தோற்றத்துடன் தொடர்புடையன மேற்கின் நாவல்கள். நாவலின் வளர்ச்சியும் வரலாறும் மரணமும் கூடத் தனிநபர்வாதத்துடன் தொடர்புபடுத்தியே விவாதிக்கப்படு கின்றது. நாவல் நடுத்தர மக்களின், தனிநபரின் இலக்கியவடிவம். அதிமானிட இயல்புகளும் நல்லியல்புகளும் உடைய கதாநாயகர் களைக் கொண்ட ரியலிச நாவல்கள் நவீன நாவல்களுக்குவழிவிட்டுத் தந்தபோது நாவலின் இயல்பே மாறிவிட்டது என்ற பொருளில் நாவலின் மரணம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பழைய நாவல் வரையறைகான கதாபாத்திரங்கள் மிஞ்சியிருப்பது வெகுசன இலக்கியங்களில் மட்டும்தான்.பழைய தனிநபர்வாதத்தின் அபூர்வமான எச்சம் வெகுசன இலக்கியம்.

ஒவ்வொரு படைப்புக்களும் வாசித்தலை வெவ்வேறுபட்ட தளங்களில் நிகழ்த்திச் செல்லுகின்றன. கதைச்சூழலுடன் இயல் பாகப் பங்கேற்றலும் எதிர்வினையாற்றலும் வாசகன் கடமை. இதனால் கதைநாயகனுக்குக் கிடைக்காத ஒரு அனுபவத்தளத்தை வாசகன் பெறுகின்றான். அவ்விடத்தில் வாசகன்தன்னையே நிறுத்திப் பார்க்க படைப்பு பரிந்துரைக்கின்றது. உணர்ச்சிகரமான ஒருங்கிணைவு இச்சந்தர்ப்பத்தில் நேர்கிறது. அதாவது படைப்பினுள் தார்மீகமான தலையிடலைச் செய்ய வாசகன் நிர்பந்திக்கப் படுகிறான் வாசிப்புச் செயலினூடாகவே. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்ன செய்திருக்க வேண்டும்; என்ன செய்யவேண்டும் என்பது போன்ற திருத்தங்களை முன்மொழியும் நிலை ஏற்படு கின்றது. மாயை உணர்வின் சிறப்பியல்பே இது.

சில நாவல்களில் மாயை உணர்வின் மற்றொரு முறையிலான வெளியீட்டைக் காண்கிறோம். இன்றைய வெகுசன இலக்கியப் படைப்பாளிகளுள் முக்கியமானவரான சுதாகர் மங்களோதயம் எழுதியுள்ள ‘மயூர நிருத்தம்’ (1992) தகவல்களைக் கதாபாத்திரங் களிடமிருந்தும் வாசகரிடமிருந்தும் ஒரேபோல மறைத்து வைத்தல் எனும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் கதையமைப் பைப் பின்வருமாறு பகுத்துக் கொள்ளலாம்.

1. மணவிலக்குப் பெற்ற அப்பா

2. மகளின் திருமண நிச்சயம்

3. அம்மா பற்றிய கேள்விகள்- விசாரணைகள்

4.  நினைவுகளின் வழி விரியும் கடந்தகாலம்

5. அம்மாவின் வேற்றுறவு பற்றிய சந்தேகங்கள்

6.  கூடவே அவள் தனது அப்பாவிற்குப்பணிவிடை செய்வது பற்றிய சந்தேகம்

7.  தூய அன்புறவுகள்வெளிப்படுதல்

8. மணமகன் வாகனவிபத்து

9. சந்தேகங்கள் பரிதவிப்பாக மாறுதல்

ஒரு புதுமையான படைப்புமுறை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். கதாபாத்திரத்திரங்களின் பார்வை யினுடாகக் கதை நகர்த்தப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனநிலை வழியாகப் பயணிப்பதால் வாசிப்பு ஒவ்வொரு கட்டத் திலும் ஒரு தேடுதல், புரிதல், நியாயப்படுத்தலுமாகிறது. வெளிப் படாக் காரணம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றது.வாசிப்பில் நிகழத்துகின்ற ஒவ்வொரு கண்டடைதலும் ஒவ்வொரு பார்வையினூடாக வந்தடைகின்ற நியாயப்படுத்தலாகின்றது.

அத்துடன் வெளிப்படாத ஒருகாரணத்தை அது கதைக்குள் விதைக்கிறது. இந்தத் தற்காலிகமான ஊசலாட்டமே கதையின் இயங்குசக்தி. ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வைக்கு அப்பாலுள்ள தகவல்கள் வாசகனிடமிருந்து தொலை வாக்கப்பட்டுத் தற்கால முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு யதார்த்தம் பற்றிய அறிவல்ல மாறாக அறியாமையே உணர்ச்சிகரமான எதிர்வினையாற்றிட தூண்டுகின்றது. சிபாரிசு செய்யப்படும் திருத்தல்கள் வடிவில் இயல்பான எதிர்வினையாற்றல் அமைகின்றது. (Absent Cause) என்ற நூலில் ரோலான் பார்த் வாசிப்பு பற்றிக் கூறும்போது வாசகனின்தயாரிப்பு/ எதிர்கொள்ளல், பிரதிகளின் இயல்பு, வாசிப்புமுறை இவற்றிடையேயான உறவை ஆராய்ந்து பண்பாட்டிலிருந்து தோன்றும் பிரதிகளை நாம் Pleasure of the Text என்று அழைக்கலாம் என்கிறார். ஆயின் இப்படைப்புக்கள் ஏதேனும் பண்பாட்டுத்தேவையை நிறைவேற்றுவனவா என்ற கேள்வியையும் அவரே எழுப்புகின்றார்.

வெகுசன இலக்கியத்தின் மையம் காதற்கதைகள். அவ்விலக் கியத்தின் தன்மைபற்றிய பொதுபுத்தியின் குறியீடும் அதுதான். முட்டத்துவர்க்கியைத் தொடர்ந்து மத்திய திருவிதாங்கூர் கிறித்தவ சமூகத்தின் இலக்கியவடிவம் இது எனும் அடையாளப்படுத்தலும் இருந்தது. எனினும் இன்று வெவ்வேறு சமூகப்பின்னணிகளை அடிப்படையாகக் கொண்ட பல படைப்புக்கள் வெளியாகின்றன.

 ***

வெகுசன இலக்கியத்தில் பல கூறுகளும் முன்முடிவு செய்யத்தக்க வடிவ ஒழுங்குடன் (patterns) திரும்பத்திரும்ப இடம் பெறுவது இயல்பு. மேற்கோள்கள் என்ற கருத்தாக்கத்தின் வழி இந்நிலையைப் புரிந்து கொள்ளலாம். வகைமாதிரிகளின் வடிவில் திரும்பத்திரும்ப அமைகின்ற சந்தர்ப்பங்களையே இங்கு நாம் மேற்கோள் என அழைக்கின்றோம். ஒரேமாதிரியான சந்தர்ப்பங்கள் மாறுபாடின்றி மீண்டும் மீண்டும் இடம்பெறுதல் இவ்விலக்கியத்தின் தனிப்பண்பு. இப்படைப்புகளில் நிலைஉருவினரான கதாபாத்திரங்களாக, கொள்கைவாதியான அப்பா, பொறுமைசாலியான அம்மா, நியாய மான போலீஸ் அதிகாரி, வட்டிக்கடை கொங்கிணி, நல்லவனான இஸ்லாமியன், லஞ்ச ஊழல் பேர்வழியான அரசியல்வாதி, கிறித்தவப் பெயர்கொண்ட ஸ்டெனோகிராபர் பெண் போன்ற பாத்திரவார்ப்புகள் திரும்பத்திரும்ப நிகழ்வது காணலாம். ஒரே படைப்பாளியின் பல படைப்புக்களில் மேற்கோள்கள் இடம்பெறுவதுண்டு.

மாறுதலடைந்து வருகின்ற சமூகச்சூழல்களால் மனித உறவுகளில் ஏற்படும் மாறுதல்கள் இலக்கியப் பதிவாக்கம் பெறுவது இயல்பு.இதன் எளிமையான மேலோட்டமான மாதிரிகள் வெகுசன இலக்கியம். நவீன சமூகமும் அப்படியரு உற்பத்திதான். அச்சமூகத்தைப் பிரதிபலிக்க முயற்சிக்கும் வெகுசன இலக்கியம் சாதிப்பவர்/அடைபவர், தியாகிகள் என இருவகையான மனித மாதிரிகளை முதன்மைப்படுத்துகிறது. இவை ஆண், பெண் குறித்த வேறுபட்ட கற்பிதங்களைக் கட்டமைக்கின்றன. இரு பிரிவிலும் அடிப்படை நன்மையால் வளர்ச்சியடைபவருண்டு. ஆனால் போட்டிப் பொறாமைகள் நிறைந்த உலகில் சாமார்த்தியசாலிகளான ஆண்கள் சுரண்டல்/ஊழலின் வழியினைத் தேர்பவராகவும் பெண்கள் உடலின் வழியே வெற்றியடைபவராகவும் சித்திரிப்புப் பெறுகின்றனர்.

நமது உன்னத இலக்கியங்களில் இடம்பெறுவதை விடவும் அதிக அளவு பெண்கள் வெகுசன இலக்கியங்களில் மையம் பெறுவது மற்றொரு உண்மை. பெண்ணுடலைச் சமூக அந்தஸ்துடன் இணைக்கும் நிலையை இவற்றில் காணலாம். இந் நாவல் கதைகள் இடம்பெறும் வார இதழ்களில் பெண்ணுடலின் சித்திரிப்பு இக் கருத்தை உறுதிசெய்யும்.

இச் சித்திரிப்புகளின்வழி வெளிப்படும் பாத்திரங்கள் ஒரு முன்மாதிரி வடிவைக் கொண்டிருப் பதோடு உடல் வரைவுக் காட்சியும் கூட மீளுருவாக்கம் பெறு கிறது.பெண்ணுடலின் கவர்ச்சியை மையப்படுத்தும் படைப்புகள் மறைமுகமான சொல்லல் முறையைப் பின்பற்றுவதுண்டு. ஓரள வேனும் அறமதிப்புகளைக் கடைபிடிக்க முயலும் ஒரு நடைமுறைச் சமூகத்தின் உறுப்பினராக இருக்கின்ற நம் வாசக சமூகத்தின் முன் வைக்கப்படுவது என்ற நிலையில் பாலியலை மறைத்தும் மாற்றுருவிலும் அளிக்கவேண்டியது அவசியம்தான்.

இலக்கியத்தின் பரவல்முறை இங்கும் முதன்மை பெறுகின்றது. ஏகாந்தவாசிப்புச் சூழலில் இடம்பெறுகின்ற புத்தக வடிவிலான கதைகளும் பொது இடங்களில் வாசிக்கப்படுகிற வார இதழ்களில் வெளியாகிற கதைகளும் வேறுபட்ட அறமதிப்புக்களை முன்வைப்பவை. புனிதம் குறித்த கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குவன, பாலியல் வேட்கை களை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் நியாயப்படுத்தல், பெண்ணுடல், பழிவாங்கல், ஆன்மீகம்/மூடநம்பிக்கை எனும் உள்ளடக்கங்களை முன்னிறுத்துவதுடன் வெகுசன சமூகத்தின் மாறுபட்டஇலக்கிய நுகர்வுத்தன்மையைக் காட்டுகின்றது இன்றைய மலையாள வெகுசன இலக்கியம்.

துணை நூற்கள்

Barthes, Roland. Pleasures of the Text

Bloom, Claive. Pulp Fiction : Popular Reading and Pulp Theory,

London, Macmillan, 1996.

Grout Damian, Realism

Haggart Richard, Uses of Library

Pin It

இருபதாம் நூற்றாண்டில் மலையாளப் பண்பாட்டின் வளர்ச்சியை மரபு நவீனம் எனும் முரண் இருமைகளின் அடிப்படையில் நிர்ணயிப்பதுண்டு. சிருங்காரச் செய்யுட்கள், நெடுங்கவிதைகள், பெருங்காவியங்களிலிருந்து நவீனக் கவிதை, சிற்றிலக்கியங்கள், புராணக் கதைகளிலிருந்து நாவல், நாட்டார்கதைகளிலிருந்து சிறுகதை, கூடியாட்டத்திலிருந்து நவீன நாடகம், வாய்மொழிக் கதையாடலில் இருந்து வரைவுமொழிக் கதையாடலுக்கும் பின்னர் ஒலி-ஒளிக் கதையாடலுக்குமான நகர்வுகள் இம்முரண்களின் பயனாக்க வாய்ப்பைச் சுட்டிக்காட்டுகிறது. மன்னராட்சிப் பண்பாட்டிலிருந்து தேசீய அரசியல் கற்பிதத்திற்கும் முதலாளியப் பண்பாட்டை நோக்கிய பயணத்தையும் பார்க்கிறோம். இம் முரண்களின் அடிப்படையில் இன்று நிறையவே விவாதங்கள் கிளம்பியுள்ளன.

வரலாறு,சமூகவியல் பார்வைகள் இன்றைய இலக்கிய வரலாற் றாய்வின் போதாமையை வெளிக்காட்டுகின்றது. காலனியம், தேசீயம்,இந்தியப் பண்பாட்டிற்குக் கேரளத்தின் கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள், பிற நாட்டுப் பண்பாட்டு வடிவங்கள், அடையாளங்க ளோடு நிகழும் எதிர்வினையாடல்கள் இவற்றைப் பொருட்படுத்தா மலேயே நாம் இலக்கியவரலாற்றாய்வை இதுவரை செய்து வந்திருக்கிறோம்.மொழி, பண்பாட்டுத் துறைகளில் இக் கூறு களுக்குப் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில்லை. முற்போக்கு விமர்சனப் பார்வைகள் ஓரளவுவரை இந்தக் குறை பாட்டைக் களைந்துள்ளன. எனினும் பாரம்பரியம், மன்னராட்சி, நவீனத்துவம், முதலாளியம் போன்ற இருமைகளுக்கிடையில் அவர்களும் சிக்கிக்கொள்கின்றனர்.

இலக்கிய வடிவங்கள்,சிந்தனைகளில் வருகின்ற மாறுதல்கள் மேற்குறித்த எளிய சமன்பாடுகளுக்குள் அடங்குவதில்லை. சம்பு இலக்கியத்தின் சொல்லல் வடிவத்தை விட ஆரம்பகால நாவல்களின் கூறல்முறை ஆற்றல் வாய்ந்ததா? குஞ்ஞன் நம்பியாரின் நகைச்சுவையை சஞ்சயன், ஈ.வி. கிருஷ்ணபிள்ளையின் நகைச்சுவை யுடன் எவ்வாறு ஒப்பிடலாம்? இடைக்கால உரைநடையைவிட மிஷனரிகளின் உரைநடை எப்படி உயர்ந்தது? இவற்றில் மரபின், நவீனத்துவத்தின் கூறுகளை எவ்வாறு காணவியலும்? சஞ்சயனின் நகைச்சுவையில் இருப்பதைவிட நவீனத்துவத்தை குஞ்ஞன் நம்பியாரின் நகைச்சுவையில் காணமுடியும். சம்புகாவியங்களின் சமூகவிமர்சனம் பிற்கால நாவல்களில் இடம்பெற வேண்டுமென்ப தில்லை. மறுமலர்ச்சிக் காலத்தில் எழுதபட்ட முக்கியப்படைப்பு களில் கூட நவீனத்துவத்திற்காக எந்த விட்டுக்கொடுத்தல்களும் இடம்பெறவில்லை. பெரும்பாலும் பார்வைகள் பன்முகமானவை. முரண்களை அதேபோல வெளியிடுவன அல்லது சமரசப்படுத்தும் முறையில் அமைவன. மாறுபட்ட பார்வைகளை உள்வாங்கிபடைப் பாக்குகின்ற எழுத்தாளனின் சிக்கல்களை இப்படைப்புகளில் காணலாம்.

‘இந்துலேகா’வில் ஆங்கிலேயர்களோடு பண விவகாரங்கள் நடத்துகின்ற, மக் ஷாமன் துரையின் துரைசானியிடம் கைகுலுக்கு கின்ற சூரிநம்பூதிரி காலனியத்துடன் நேரடித் தொடர்புடையவர். ஆனால சீரழிந்து வரும் பாரம்பரியத்தின் குறியீடும் அவர்தான். தன் முறைப்பெண்ணைச் சூரி நம்பூதிரி ’சம்பந்தம்’ செய்துவிட்டதை அறிந்து ஊரைவிட்டுப் போகிற மாதவன் நவீனத்துவத்தின் பிம்பம். ஆங்கிலக் கல்வியும் பின்னர் கிடைகின்ற சிவில்சர்வீஸ் உத்யோக மும்தான் மாதவனை நவீனனாக்குகின்றது. ‘போதேரி குஞ்ஞம்பு’ வின் ‘சரஸ்வதி விஜய’த்தில் ஒழுக்க நடவடிக்கையின் பேரில் வெளியேற்றப்படுகிற அந்தர்ஜ்ஜனத்தின் மகளை கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய செறுமன் திருமணம் செய்கிறான். இதே காலகட்டத்தில் எழுதப்பட்ட ‘ராமராஜபஹதூர்’-இல் இல்லத்திலிருந்து வெளி யேற்றப்பட்ட அந்தர்ஜ்ஜனத்தையும் அவள் மகளையும் பாதுகாக் கின்ற ‘பெரிஞ்சக் கோடன்’ தேசத் துரோகியாகச் சித்திரிக்கப் படுகிறான்.

பாலியல் பற்றிப்பேசும்வேளையில் எழுத்தாளர்களின் சிக்கல் இன்னும் அதிகரிக்கின்றது. ‘இந்துலேகா’வில் சூரி நம்பூதிரிப்பாடிற்கு இந்துலேகாவிடம் தோன்றும் ஆசை காமவெறி. இதிலிருந்து கொஞ்சமும் வித்தியாசமானதல்ல இந்துலேகாவிற்கு மாதவனிடம் தோன்றும் ஆசை. மாதவன் ஊரைவிட்டுப் போனபின் இந்துலேகா வின் நிலைமை பற்றிய வருணனை அதை இன்னும் தெளிவுபடுத்து கின்றது. ஆனால் சூரி நம்பூதிரி காட்டுவது காமவெறியாகவும் இந்துலேகாவின் ஆசை காதலாகவும் பதிவு பெறுகிறது. குமாரனாசானின் படைப்புக்களில் இந்த இருமை இன்னும் தெளிவுபெறுகிறது. நளினிக்குத் திவாகரனிடமும் வாசவதத்தைக்கு உபகுப்தனிடமும் தோன்றும் உணர்ச்சி ஒன்றுதான். ஆனால் முதலாவது தெய்வீகமாகும்போது வாசவதத்தைத் தண்டிக்கப்படு கிறாள்.

காலனியம் தேசீயம்இவற்றோடும் இந்த இருமுகத்தன்மை வெளிப்படுவதுண்டு. ‘இந்துலேகா’ வின் பதினெட்டாவது அத்தியாயம் அதற்குச்சான்று. கோவிந்தப் பணிக்கர் பாரம்பரியத்தின் அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க கோவிந்தன் குட்டி மேனோன் நவீனத்துவத்தின் பேரில் பிரிட்டீஷ் ஆட்சியை நியாயப் படுத்துகின்றான். மாதவனின் இருமுகத்துவமே பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் தேசிய உணர்வாக வெளிப்பட்டது. அதற்குப் பின் அது அவ்வளவாக வளரவில்லை. ஆசானின் ‘துரவஸ்தா’வில் ‘குரூர மகம்மதர்’ நடத்திய அக்கிரமங்கள் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. பிரிட்டிஷ் ஆட்சி “ஏறநாடு” பகுதிகளில் நடத்திய கொடுமைகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சந்து மேனோனின் ‘சாரதா’வில் வழக்கறிஞர்களின் ‘கிளப்’,தாசன் மேனோனின், ‘சூயார்த்யாஸ்’, ‘கார்ப்பா ஸம்தலிஷ்டம்’, ரீஸ் இந்த்ரவலியன் சூடிக்கெட்டு’, இவற்றின் வழியாக ஆங்கிலேய சட்டதிட்டங்கள் அரங்கினுள் நுழைவதுண்டு.அதன் இருண்மையையும் அந்நியத் துவப் பண்பையும் விலக்கிவிட்டால் ‘சாரதா’வின் உள்ளடக்கம் சட்ட அமைப்பை நியாயப்படுத்துவதுதான். ‘சரஸ்வதி விஜய’ த்தில் குபேரன் நம்பூதிரி கலக்டரைநேரில் சந்தித்து அவரைத் தோற்கடித்து திரும்ப முயலும் வேளையில் அவருக்கு வரும் கைது வாரண்டு சட்ட அமைப்பின் அடையாளம். கடும் தண்டனைக்கு விதிக்கின்ற அதே சட்ட அமைப்பில் நீதிபதிப் பதவி கிறித்தவனாக மாறிய செறுமனுக்கு வழங்கப்படுகிறது. யேசுதாசனுக்கு நீதிபதிப் பதவியும் மாதவனுக்கு ஐ.சி.எஸ் பதவியுமளித்து- காலனியம் வாழ்த்தும் அதிகாரமாக மாறுகிறது.

இருபதாம் நூற்றாண்டின்முதல் ஐம்பதுஆண்டுகளில் தேசிய இயக்கம் ஆற்றலுடன் திரண்டிருந்த போதும் உன்னத இலக்கிய வடிவங்களில் காலனியத்திற்கு எதிரான விமர்சனங்கள் இடம்பெற வில்லை. தேசிய இயக்க ஆதிக்கத்தில் ‘விதேசி’ களுக்கெதிரான போராட்டம் பற்றிய பதிவுகள் வள்ளத்தோள் கவிதைகளிலுண்டு. தேசவிடுதலை பற்றிய கற்பனாவாத அழகியலைத் தாண்டி காலனிய யதார்த்தங்கள் குறித்த எண்ணங்கள் வள்ளத்தோள் கவிதைகளில் உள்ளனவா என்பதை சோதனையிட வேண்டும். பி. கேளு நாயர் முதல் போதேஸ்வரன் வரையானவர்களிடம் காணலாகும் தேசிய உணர்வைக் காலனிய எதிர்ப்பை முன்னிறுத்தி மதிப்பிடவேண்டும். பின்னர் வந்த ‘சங்கம்புழா’ கவிதைகள் சமூக முரண்கள் குறித்த கற்பனை உணர்வைத் தாண்டுவதேயில்லை.

இலக்கியவடிவங்களில் காலனிய, தேசியக்கூறுகள் கட்டாயம் இடம்பெற வேண்டுமென வாதாடுவதல்ல இங்கு நோக்கம். இலக்கிய வடிவங்கள் மலையாளியின் சுயஇருப்பைக் காட்டு கின்றன. அவற்றின் குறியீடுகள் மலையாளச் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளின் விளைவு. தன்னுணர்வின் வளர்ச்சியில் அன்னியக் கூறுகளான காலனியமும் தேசீயமும் தோன்றாமலிருக்க வழி யில்லை. இவற்றை எதிர்கொள்ளும் நிலைகள் அரசியல் அடிமனமாக இலக்கியப்படைப்புக்களில் வெளிப்படும். காலனியம் தயாரித் தளிக்கின்ற சூழலின் நுட்பங்கள் படைப்பாளியின் மனோபாவத்தை யும்,படைப்புவடிவங்களையும் பாதிக்கும். சொற்களின் அமைப்பில், குறியீட்டு வடிவங்களில், கதையாடல் முறைகளில் அரசியல் அடிமனம் பாதிப்பைச் செய்யும்.

காலனிய நவீனத்துவத்தின் நுழைவும் எதிர்ப்புணர்வின் இயல்பையும் புரிந்துகொள்ள இலக்கியவெளிப்பாடுகளின்மீது கண்ணியமான மறுஆய்வுகள் அவசியம். அதற்குமலையாளிகளின் மனோபாவப் பரிணாமத்தின் பண்பாட்டு நிலவியல் (சிuறீtuக்ஷீணீறீ நிமீஷீரீக்ஷீணீஜீலீஹ்)தேவை. எதிர்வரும் பகுதிகள் அப்படியரு பண்பாட்டு நிலப்படத்தை (சிuறீtuக்ஷீணீறீ விணீஜீ) உருவாக்குவதற்கான முயற்சியாக அமைகின்றது.

ஷீ ஷீ ஷீ

ஆங்கில ஆட்சிக்குமுற்பட்ட கேரளப் பண்பாட்டின் நிலவியல் எல்லைகள் மேற்குத் தொடர்ச்சி மலையும் அரபிக்கடலும்தான். மலைநாடு அல்லது மலைமண்டலத்திலிருந்து வாணிகர்களும், தீர்த்தயாத்திரை செய்வோரும் மேற்குத்தொடர்ச்சிமலைகடந்து வேற்றுநாடுகளுக்கும் வேற்றுநாட்டிலிருந்து பிராமணர்கள், செட்டிகள், கௌண்டர்கள் கேரளத்திற்கும் வந்திருந்தனர். கடல்வழிவந்த அரேபியர்,சீனர், பாரசீகர், பின்னர் ஐரோப்பியரும் தத்தம் தொடர்பை மேற்கொண்டிருந்தனர். மலையாள மொழியும் பெண்வழிச் சொத்துரிமையும் புடவைக் கொடையும் அடங்கிய மலைநாட்டு வழக்கம் இவ்வுறவுக்குத் தடையாகவில்லை. மன்னராட்சி அமைப்பில் ஒவ்வொரு நாட்டிற்கும் தமதாகிய வழக்கங்கங்களையும் ஒழுக்கங்களையும் வாய்மொழி வரைவு மொழி வடிவங்களையும் பின்பற்றும் உரிமை உண்டு என்ற எண்ணமே அதற்குக் காரணம். தென் திருவிதாங்கூரில் ‘குஞ்ஞுத்தம்பி ராமன்தம்பி’ கதைப்படி திருவிதாங்கூர் ஆளும் உரிமையைத் தம்பிமார்கள் கோரி நிற்க நாட்டுவழக்கத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறார் ஆறுமுக முதலியார். நாட்டுவழக்கப்படி ஆட்சிஉரிமை மார்த்தாண்டவர்மாவுக்கு உரியது.

ஐரோப்பியரின் வருகை இந்நிலையில் மாறுதலைக் கொணர்ந் தது. கடல்வழி வந்த வேற்றுநாட்டவரின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்டிருந்தனர் ஐரோப்பியர். வாணிகம், மதப்பிரச்சாரம், காலனியாக்கமும் இணைந்த ஒரு புதிய முற்றுகைக் கொள்கையை அவர்கள் கொண்டிருந்தனர். இதன் பலனாக ஆடம்பரப்பொருட் களும் பின்னர்க் கச்சாப்பொருட்களும் ஐரோப்பியச் சந்தைகளில் நிறைக்கப்பட்டது.இதற்கு உதவிகரமாக காலனிகளின் சூழலியல் அமைவுகளில் கூட மாற்றங்கள் உருவாக்கப்பட்டது. காலனிகளின் உற்பத்திஅமைப்புக்களையும் அதன் பண்பாட்டுச் சூழமைவையும் தங்கள் அதிகார வடிவங்களுக்குப் பொருத்தமாகத் தகவமைத்துக் கொள்ள அவர்கள் முயன்றனர். வணிக உடன்படிக்கைகள், அரசியல்கட்டுப்பாட்டுத் தந்திரங்கள் மதப்பிரச்சாரம் என ஆரம்பித்த முயற்சிகள் பின்னர் அதுஒரு சட்டஅமைப்பின் பரவல் புதிய கிறித்தவ- காலனிய அறமதிப்பின் வளர்ச்சி கல்வி- மாநகர மொழி யின் ஆதிக்கம். புதிய கருத்துருவங்களின் வளர்ச்சி என்பவற்றிற்கு இட்டுச்சென்றது. ஆங்கில ஆட்சியின் கீழ் இம்முயற்சிகள் யாவும் முழுமையடைந்து வருவதைக் காணலாம்.

நகர/மாநகர கருத்துருவாக்கங்களை இந்தியர்களிடையே பரப்புவதற்கான பரிமாற்ற வடிவங்களைப் படைப்பதற்கான முயற்சி காலனிய வளர்ச்சியின் முக்கியப் பங்காற்றியது.பல்வேறு மதத்தவர் களிடையே வழங்கிவந்த பண்பாட்டுவடிவங்களை, பரிமாற்றமுறை களை விலக்கிவிட்டு கத்தோலிக்க-காலனிய வடிவங்களைச் சுமத்தும் முயற்சியை உதயம்பேரூர் சன்னஹதோஸ் வழிக் காண்கிறோம். ஆனால் அம்முயற்சி முதலில் வெற்றி பெறவில்லை. கிறித்தவர்களில் ஒரு பிரிவினர் இதுபோன்ற ஆதிக்க முயற்சிகளை எதிர்த்தனர். கேரளத்தில் செயல்பட்ட கார்மலீத்தா மிஷனரிகளும் புரொட்டஸ்டண்டுகளும் ஒருமாற்றுச் சிந்தனைக்கும் புதிய பரிமாற்ற வடிவங்களுக்கும் முயன்றனர். இந்து- பிராமணப் பண்பாட்டைக் கற்று வடமொழியில் பயிற்சிபெறும் முயற்சிகள் இதன் பகுதிதான். இம்முயற்சி புதிய பரிமாற்ற வடிவங்களைத் தரப்போதுமானதல்ல என்பதை விரைவிலேயே கண்டுகொண்டனர். சாதியில் ஒடுக்கப் பட்ட முக்குவர் (மீனவர்)களிடையே கிறித்தவப் பாதிரிகள் அடைந்த வெற்றி புதிய திசையைக் காட்டியது. இதன்விளைவாக மலையாளமொழியில் பயிற்சி பெறுவதற்கான முயற்சிகள் ஏற்பட்டன. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகள் நெடுக இம் மொழிகற்றல் முயற்சிகள் நடந்துள்ளன.

அர்ணோஸ் பாதிரியும் பவுலினோஸ் பாதிரியும் பயன்படுத்திய வடமொழிக் கலப்பு மிகுந்த மேற்சாதி ஆதிக்கமொழியிலிருந்தும் சம்புஇலக்கியம் மற்றும் அன்றைய இலக்கியங்களின் எழுத்துவடிவ மொழியினின்றும் மாறுபட்டு வாய்மொழியை எழுத்தாக்கல் எனும் பரிமாற்றத் தந்திரத்தைக் மிஷனரிகள் கடைப்பிடித்தனர். ஒடுக்கப் பட்ட மக்களிடையே கிறித்தவத்தைக் கொண்டுசெல்ல இம்மொழி வசதியளித்தது. மலையாளம் போன்ற சிக்கலான பண்புகள் கொண்ட மொழியைப் பயிலும் கட்டாயத்தை எதிர்கொண்ட மிஷனரிகள் மிக எளிமையான கற்றலுக்கேற்ற/கற்பித்தலுக்கேற்ற ஒரு மொழிவடிவத் தைத் திட்டமிட்டனர். பிரிட்டிஷ் காலனிய ஆரம்பத்தில் கேரளத் திற்கு வந்த நவ இவாஞ்சலிச மதபோதகர்கள் இந்த எளிய உரை நடையை வடிவமைத்து வளர்த்தனர். மிஷனரிப் பள்ளிகளில் இந்த உரைநடையில் அமைந்த பாடநூற்களும் பைபிளும் கற்பிக்கப் பட்டது. டிரம்மண்ட், பெய்லி, குண்டர்ட் முதலியோர் அகராதிகள் தயாரித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெளியான நூற்கள், நாளிதழ்களின் மொழிநடையை ‘மிஷனரி உரைநடை’ வெகுவாகப் பாதித்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவ இவாஞ்சலிஸ்டு களின் பாதிப்பால் காலனியப் பண்பாட்டுச் செயல்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. முதலாளியப் பண்பாட்டு ஆதிக்கத்தை ஆதரித்து உள்வாங்கும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை உருவாக்குவது ஆங்கில காலனியத்தின் வெளிப்படை இலக்காக இருந்தது. சார்லஸ் கிராண்ட், பென்றிக், மெக்காலே முதலியோர் தலைமையில் பண்பாட்டு ஆதிக்கத் தந்திரங்கள் கடைந்தெடுக்கப்பட்டன. ஆங்கிலக் கல்வி, வட்டாரமொழிகளின் விளிம்புநிலையாக்கம், இவாஞ்சலிய அறமதிப்பீடுகளின் ஊடேற்றம், வட்டார/ நாட்டார் சடங்கு, வழிபாடுகளின் அழிவு இவற்றிற்குத் துணைநிற்கின்ற புதிய நிறுவன அமைப்புக்களின் தோற்றம் வளர்ச்சியும் ஏற்பட்டது. மிஷனரிகளின் செயல்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டு மிஷனரி களின் மதப் பிரச்சாரம் ஒரு பண்பாட்டுப்பணி இயல்பை அடைந்தது. கேரள மிஷனரிகள் ‘செமினாரி’ப் போதனாமுறையைக் கைவிட்டு சமயம்சாராக் கல்வி, ஐரோப்பியப் பண்பாட்டு அறமதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். வடமொழிக் கல்வியின் இடத்தை ஆங்கிலம் கைப்பற்றியது. ஆங்கிலம் ‘குமஸ்தா மொழி’த் தகுதியி லிருந்துஉலகளாவிய கருத்துப்பரிமாற்றதிற்கான மேட்டிமை மொழி யாகக் கருதப்பட்டது. ஆங்கில இலக்கியத்தின் தழுவல் படைப்புகள் மலையாளத்தில் ஏற்பட்டது. அவை பள்ளி, கல்லூரிக் கல்வியறிவு பெற்று வளர்ச்சியடைந்துவந்த நடுத்தரமக்களின் பண்பாடாக உருவெடுத்தது.

மிஷனரி- காலனியப்பண்பாடு மலையாளி மனோபாவத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி மிகச் சில ஆய்வுகளே நிகழ்ந்துள்ளன. மிஷனரி-காலனியப் பண்பாட்டால் மலைநாட்டு வழக்கத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. வட்டார வழக்கங்களும் நடைமுறைகளும் உற்பத்தி உறவுகளை மட்டுமல்ல பண்பாட்டுப் புதுமைகளையும் பாதிப்பதுண்டு. மொழிநடை, வழக்காறுவடிவங்களிலும் இப் பாதிப்பு உண்டு. அதிகார வடிவங்களாக இருந்த வடமொழி, பிராமணப் பண்பாட்டில் கூட மலைநாட்டு வழக்கம் பாதிப்புச் செய்துள்ளது. கோயிற்கலைகள், ஆட்டப்பிரகாரங்கள், சோதிடம், வாஸ்து எனப் பல சான்றுகள் காட்டலாம். மிஷனரி- காலனியப் பண்பாடு வட்டாரத்தன்மைக்கு மாற்றாக உலகளாவிய இயல்பு களுடைய காலனியப் பொருளாதாரச் சமூக ஒழுங்குகளுக்கு முதலிடம் அளித்தது. வேளாண் உறவுகளுக்கும் சமூகத்தொடர்பு களுக்கும் ஒரு பொதுப்பண்பு உருவானது. நீதிமன்றங்கள், காவல், பல்வேறு மட்ட அலுவலர்கள்,கல்வி எனப் பொது நிறுவனங்களும் அதிகாரவடிவங்களும் வளர்ச்சியுற்றன. ஊர் நடப்பு, பழக்கவழக்கங் களின் இடத்தைச் சட்டங்களும் நாட்டறிவின்/ மரபறிவின் இடத்தை காலனிய அறிவுவடிவங்களும் கையகப்படுத்தின. நடுவர்களின் இடத்தை நீதிமன்றங்கள் அடைந்தன. பிராமண வடமொழி மரபுகள் போகப்போகக் காலனிய புறப்பண்பாட்டிற்கும் ஆங்கிலத்திற்கும் வழிக்கண்டது.

இம்மாற்றங்களின் பின்னணியில் கேரள மறுமலர்ச்சிச் செயல்பாடுகளைப் பார்வையிட வேண்டும். பிராமண வடமொழி மரபுகளின் பாதிப்பில் இருந்துவந்த மக்களுக்கு மிஷனரி- காலனியப் பண்பாடு புது அனுபவமாக இருந்தது. புது அனுபவமாதலால்தான் புதிய அதிகாரவடிவமாக இருந்தும் கூடக் கருத்துநிலையில் கவர்ச்சிகரமாக இருப்பதால் வரவேற்கப்பட்டுள்ளது. பிராமண- வடமொழி ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தவருக்கு அது மீட்சியின் திசைவழியைக் காட்டியது. மிஷனரி-காலனியப் பண்பாடு பரப்பிய கிறித்தவ அற வடிவங்கள் மன்னராட்சிப் பண்பாட்டை விமர்சிப்பதற்கான அடிப்படைகளை அளித்தது. நிலவுடமை, மருமக்கத்தாயத்திற்கு எதிரான விமர்சனங்கள் காலனியம் அறிவூட்டிய தனிச்சொத்து, ஆண்பெண் உறவுக் கற்பிதங்களிலிருந்து எழுந்தது. ‘புடவைக் கொடை, சம்பந்தம்’ இவற்றிற்கு எதிரான மனோபாவம், பெண் சமத்துவம் பற்றிய கருத்தியல் அடிப்படையி லிருந்துதோன்றவில்லை, காலனியக் கட்டத்தில் வளர்ச்சிபெற்று வந்த சொத்துடமை,வாரிசு உரிமை நிலைமைகள் உருவாக்கிய அழுத்தத்திலிருந்தே தோன்றின. மன்னராட்சி நடைமுறைகள், வழக்கங்களுக்கு எதிரான போராட்டங்களின் உற்பத்தி நிலையம் கூடக் காலனிய மதிப்பீடுகளும் அறங்களுமே. ஒடுக்கப்பட்ட மக்களிடையே சமயப் பண்பாட்டு ‘மிஷன்’ செயல்பாடுகள் புது அறிவு மண்டலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

சாதி அமைப்புமுறைக்கும்மன்னராட்சிக்கும் எதிரான போராட்டத் திற்கான புறச்சூழல் இங்கு இருக்கவில்லை என்பதல்ல பொருள். சுரண்டல் அமைப்புகளுக்கு எதிரான இயல்பான போரட்டங்களே அன்று நிகழ்ந்தவை. இப் போராட்டங்களுக்கு இருவகையான சின்னங்களுண்டு. ஒன்று, ஒடுக்கப்பட்டவர்களின் பண்பாட்டுச் சூழலில் நின்றும் எழுந்த வடிவங்கள். ‘மாப்பிளாக் கலகங்கள்’ பயன்படுத்திய சின்னங்கள் சான்று. இரண்டு, காலனியப் பண்பாட்டின் பகுதியாக மலையாளிகளின் பண்பாட்டுச் சூழலுக்குள் நுழைந்த சின்னங்கள். ஆங்கிலக் கல்வி, சமயம், அறமதிப்பீடுகள், பழக்கவழக்கங்கள், தனிநபர் இயல்புகள், நடை உடை பாவனைகள் போன்ற பல்வேறு விஷயங்களில் அவை பாதிப்புச் செய்தன. சாணார் கலகத்தில் பாதிப்புச் செலுத்தியது மதமும் உடைஉடுத்தும் முறையும் தான். மருமக்கத்தாயத்திற்கு எதிரான உணர்வுகளுக்குக் காரணம் புதிய அறமதிப்புக்களும் வாரிசு உரிமை முறையும் ஆகும். காலனிய ஆட்சிமுறையும் போராட்டங்களுக்கான இடத்தை அளித்துள்ளது. திருவிதாங்கூர் மைய ஆட்சி அமைப்பில் நாயர்- நம்பூதிரி பிரிவினரின் உயர்சாதிஆதிக்கம் இல்லாமல் போனது. அதேவேளை மாதவராவ் காலத்தில் நிறுவப்பட்ட ஆங்கிலக் கல்வியும் நிறுவனங்களும் உயர்சாதியினருக்குப் புதிய வாய்ப்புக்களையும் அனுபவங்களையும் திறந்தளித்தது. இதன்விளைவான அழுத்தங்களே மலையாளி மெம்மோரியல் போராட்டங்களின் பின்னணி. காலனியத்தில் பொருளாதார ரீதியாக உயர்வடைந்த ஆனால் பண்பாட்டு நிலையில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்த ஈழவர்களின் அனுபவங்கள் ஈழவா மெம்மோரியல் போராட்டங்களில் காணலாகின்றது.

இங்குத்தான் ‘இந்துலேகா’வின் பதினெட்டாவது அத்தியாயத் தில் மாதவனின் இடம் கவனிப்புப் பெறுகின்றது. ஐரோப்பியர்கள் மதிக்கும் நிலையில் நீளமான முன்குடுமி வைத்துக்கொண்டு ஆனால் ஐரோப்பியர் போல துப்பாக்கியைக் கையிலேந்தி வேட்டையாடு கின்ற மாதவன் வளர்ச்சியடைந்து வந்த நடுத்தரவர்க்கத்தின் உண்மை யான பிரதிநிதிதான். காலனிய அடையாளங்களை உள்வாங்கி அதனடிப்படையில் இந்தியமரபை மீட்டுருவாக்குகின்ற நடுத்தட்டு அறிவுஜீவிகள் உருவாயினர். அவர்களால் வளர்க்கப்பட்ட கருத்துக் களே சமூகச்சீர்திருத்த இயக்க முதன்மை நீரோட்டங்களை உருவாக்கியது. இந்து சமயத்தின், முக்கியமாக அத்வைத சிந்தனை யின் மறுவெளியீடு, அதில் பிராமணரல்லாதோருக்கும் கீழ்ச்சாதி யினருக்கும் இடமளிக்கும் முயற்சிகள் அதற்கு இந்தியப் பாரம்பரியத் திலும் மேலைச்சிந்தனையிலும் நின்று தருக்க நியாயங்களைக் கண்டடைதல் என்பன சமூகச் சீர்திருத்தத்தின் ஆதாரப் பணிகளாக அமைந்தன. ஸ்ரீ நாராயண குரு இடைக்கால நடைமுறையான கோவில் பண்பாட்டிற்குள் நின்றுகொண்டே கீழ்சாதியினருக்கான இடத்தை அளித்தது. குமாரனாசான் புத்தமதத்தில் சமூகநீதியை, ஒழுக்கநெறிகளைக் கண்டறிய முயன்றதும் இதன் பகுதிதான். காலனியப் பண்பாட்டுத்தளம் இந்துசமயத்தை நிராகரிக்க முயன்றது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்ரீநாராயணகுருவின் அமைப்புக்குள் இதுபற்றி விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு பிரிவினர் இந்துசமயத்தைப் புறக்கணித்து மாற்றுச் சமயங்களைத் தேட முயல மறுபிரிவினர் பகுத்தறிவுவாதத்திற்கும் கடவுள் மறுப்புக்கும் சென்றனர்.

காலனிய நவீனத்துவத்தின் பலனான புதிய பரப்புகள் இருபதின் ஆரம்பம் முதல் வலுப்பெற்ற தேசீய- புரட்சி இயக்கங்களுக்கு அழைத்துச்சென்றது. இறுதியில் பரவலான காலனிய எதிர்ப்பாக உருமாறியதெனினும் இவ்வியக்கங்களின் வழித்தடங்கள் ஒன்று மட்டுமல்ல. ஒருவழி காலனியத்திற்கும் மன்னராட்சிக்கும் எதிரான இயல்பான எழுச்சி. மாப்பிள்ளை கலகங்களில் வெளிப்பட்ட இந்தவழி 1921இல் காலனிய ஆட்சிக்கெதிரான ஒருங்கிணைவு பெற்ற எழுச்சியாகவும் இருந்தது. கிலாபத், தேசியத்தின் வட்டார அடையாளமற்ற கோஷங்கள் அதில் இடம்பெற்றன. ஆனால், இவ்வழியை உள்வாங்கிக் கொள்ள தேசீயத் தலைமைக்கு இயல வில்லை. முஸ்லீம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடிகிற சின்னங் களைக் காலனிய நவீனத்துவத்திற்குஏற்கமுடியவில்லை. காலனியம் வெளிப்படையான முஸ்லீம் எதிர்ப்புத்தன்மையைக் கொண் டிருந்தது. தேசியவாதிகள் இந்தியப் பண்பாட்டுச் சின்னங்களைப் பெரும்பாலும் இந்துசமய மரபுகளிலிருந்தே திரட்டினர். இஸ்லாமியப் பண்பாட்டுச் சின்னங்களையோ அரபி மலையாளத்தின் மொழிநடையையோ இசை மரபையோ கூட உள்வாங்கிக்கொள்ள நவீன நடுத்தர வர்க்கத்தால் இயலவில்லை.

இரண்டாவது வழி மாதவன் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரட்டைத்தன்மை. காலனிய நிறுவனங்கள்/ அமைப்புகள், கல்வி ஆகிய துறைகளின்வழியே கடந்து சென்றிருந்த நடுத்தர வர்க்கத்தால் மிஷனரி- காலனியப் பண்பாட்டை விமர்சனப்பூர்வமாக மதிப்பிட இயலவில்லை. காலனியச் சுரண்டல் வடிவங்களை விமர்சிக்கும் போதே அவர்கள் வளர்த்தெடுத்த பண்பாட்டுமதிப்பீடுகளை நிலைநிறுத்தவும் விரும்பினர். இதன் அடிப்படையில் தனதாகிய மரபுகளை மீட்டுருவாக்கவும் முயன்றனர். காலனிய நவீனத்துவத் தின் வர்க்கரீதியான அடிப்படைகளைச் சோதனையிடுவதற்குப் பதிலாக வர்க்க ஒத்துழைப்பின் அடிப்படையிலான எதிர்ப்பு வடிவங்களை அவர்கள் உருவாக்கினர். கேரளத்தில் தேசீய இயக்க ஆரம்பகாலத் தலைவர்களிடையே மகாத்மாவுக்குஅளிக்கப்பட்ட இடம் இதன் செல்வாக்குத்தான். காந்தீய பாதிப்பில் ஏற்பட்ட ஒத்துழைப்பு வடிவப் போராட்டத்தின் மிகச்சிறந்த உதாரணம் வைக்கம் சத்தியாக்கிரகம்.

மூன்றாவதாக, காலனிய நவீனத்துவத்தையே போராட்ட வடிவமாக வளர்த்துக் கொண்டவர்களின் வழி. காலனியப் பண்பாட்டு வெளியின் பகுதியாக வளர்ச்சியுற்ற அறிவியலுணர்வு, பகுத்தறிவுவாதம், கடவுள்மறுப்பு போன்றவை இந்திய மன்னராட்சி மரபுகளைப் புறக்கணிக்க ஒரு பிரிவினரைத் தூண்டியது. மரபு ரீதியான சிக்கல்களுக்குத் தேசிய நடுத்தர வர்க்கம் கடைப்பிடித்த பாராமுகம் அல்லது நடுநிலைத் தன்மை இவர்களை நடுத்தர வர்க்க தேசிய அரசியலிலிருந்து விலகச்செய்தது. இவர்களே பிற்காலத்தில் தீவிர காந்திய மறுப்பாளர்களாகி புரட்சி இயக்கங்களுக்கு வழிக் கண்டனர். காலனிய நவீனத்துவத்தின் பொருந்தவியலாக் கூறுகளை வலிமை யாக விமர்சித்தனர். எனினும் நவீனத்துவத்தை முழுமையாக விமர்சிக்கவோ தமதாகிய வழித்தடங்களை படைத்தளிக்கவோ இவர்களால் இயலவில்லை. அதன் விளைவான உள்ளமைவுச் சிக்கல்களை இவர்களின் செயல்பாடுகளில் நெடுகக் காணவியல் கின்றது.

முப்பதுகளில் தேசீயவாதக் கருத்துகள் பரவலான மக்கள் கவனத்தைப் பெற்றது. உப்புச் சத்தியாக்கிரகத்தில் மக்கள் பங்கேற்பு, மக்கள் மத்தியில் காந்தீயப் போராட்டமுறைகளின் பாதிப்பு, அது கிளப்பிய விவாதங்களும் இக்காலகட்ட நிகழ்வுகளுக்கு வழிவகுத் துள்ளது. மலபார் பகுதிகளில் ஏற்பட்ட உழவர் புரட்சிகள், திருவிதாங்கூரில் தொழிலாளர் போராட்டங்கள் போன்ற நடுத்தர மக்கள் போராட்டங்களும் தேசீயத்தின் வட்டாரத்தன்மையை நிர்ணயிப்பதில் பங்காற்றியுள்ளது. இவை காரணமாக அரசியல்தளத் தில் இருவேறு போக்குகள் எழுந்தன. ஒன்று, காலனிஆட்சியும் தேசீயமும் எழுப்பிய அரசியல் சூழலில் உருவான புதிய அரசியல் இடங்களுக்கான வலியுறுத்தல்கள். திருவிதாங்கூரில் நடைபெற்ற போராட்டங்களை ஒட்டி உருவான திருவிதாங்கூர் ஸ்டேட் காங்கிரஸ்,கொச்சியில் கொச்சின் காங்கிரஸ்,கொச்சின் ஸ்டேட் காங்கிரஸ், மலபாரில் தேர்தல் அரசியல் போன்றவை இதில் அடக்கம். இரண்டாவது, தேசீயப்பண்பு கொண்ட உழவர், தொழிலாளர் போராட்டங்கள். இவை மெதுவாக வர்க்கப்போராட்ட அரசியலுக்குக் கொண்டு சென்றது. ஏற்கனவே வளர்ந்துகொண் டிருந்த வர்க்க கண்ணோட்டமுடைய நடுத்தரமக்கள் முதல்பிரிவுள் இணைந்துகொள்ள காலத்திற்கேற்ற மாற்றங்களில் நாட்டமுடை யோர் வர்க்கப்போராட்ட அரசியலில் இணைந்தனர்.

முப்பதுகளில் பல்வேறுபுதிய சமூக அசைவுகள் நடந்தேறின. அடித்தட்டு/ ஒடுக்கப்பட்ட மக்கட்பிரிவினர் அவர்தம் சமூக பொரு ளாதார விடுதலையை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டனர். அனைத்துப் பிரிவைச் சார்ந்த மகளிரும் பண்பாட்டு அரசியல் இயக்கங்களில் கலந்துகொண்டதோடு அடுப்பங்கரைக்கு வெளியே பொதுச்சமூகத்தில் ஊடாட்டம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் மலபார், திருவிதாங்கூர்-கொச்சி இடையே அரசியல் பண்பாட்டுத் தொடர்புகள் வளர்ந்தன. திருவிதாங்கூர் யூத்லீக் தொண்டர்கள் பய்யன்னூர் கடற்கரையில் உப்புக் காய்ச்சியபோது திருவிதாங்கூர் ஸ்டேட் காங்கிரஸ்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலபாரில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலங்கள், போராட் டங்கள், மாநாடுகள் ஆகியவை மக்கள் திரண்டு செயல்பட இடமளித் தன. நிறைய கோஷப்பாடல்கள் எழுதப்பட்டு பாடப்பெற்றது. நிறையப் பேச்சாளர்கள் உருவாயினர். நிறைய கழகங்கள், மன்றங்கள், குழுக்கள் போன்றன தோன்றி அவை பொதுமக்கள் புழங்குமிடங் களாயின. மலையாள நாளிதழ்கள்,வார இதழ்கள் கருத்துப் பரிமாற்ற வடிவங்களாயின. படிப்பகங்கள் கிராமப் பண்பாட்டு மையங்க ளாயின.

மன்னராட்சிக்கால வட்டாரத்தன்மை தளர்ச்சியடைந்ததன் பலனாக வட்டார சாதிப்பிரிவுகள் மக்கள்தொகைக் கணக்கிற்கேற்ற பெருஞ்சமூகத்தின் பகுதிகளாயின. மன்னராட்சியின் எச்சமாகிய மற்றொரு பிரிவு காலனியத்துள் தம்மைக் கரைத்துக் கொண்டது. சாதிஅமைப்புக்கு எதிராகப் போராடிவந்த இயக்கங்கள் புதியசூழலில் பெரும் சாதி இயக்கங்களாயின. அவை காலனிய அரசியல் சூழலுள் தம் இடத்தைக் கோரிப் பெறமுயலும் வற்புறுத்தல் குழுக்களாயின. மன்னராட்சிக்கு எதிராகப் போராடிவந்த ஏராளமான தொண்டர்கள் அதிருப்தியால் இவ்வியக்கங்களிருந்து விலகி வர்க்க இயக்கங்களில் இணைந்தனர்.

 

மேற்குறித்த மாறுதல்களால்கேரளத்தில் ஒரு பொதுவெளி உருவானது. அதில் அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், சாதிச் சங்க அமைப்புகள், மன்றங்கள், குழுக்கள், கழகங்கள், நாளிதழ்கள், வார/மாத இதழ்கள், வெளியீடுகள் அனைத்திற்கும் பங்குண்டு. மலையாளத்தில் வாசிக்கிற மற்றும் எழுதுகின்ற மக்கள் அதிகரித்து வந்தனர். ஏராளமான கதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதப் பட்டன. ஏராளமான தழுவல்களும் மொழிபெயர்ப்புக்களும் வெளியாயின. அறிவியலும் ஆன்மீகமும் காந்தீயமும் மார்க்சீயமும் எழுதப்பட்டது. வார/ மாத இதழ்களின் வழி நடைபெற்ற உரையாடல்கள், விமர்சனங்கள், விவாத குரல்கள் நிறைந்த சூழல் உருவானது.

கேரள மக்கள்தொகை பல்வேறு நிலவியல் பரப்புகளுக்குப் பரவிச் சென்றிருப்பதும் கவனத்திற் கொள்ளவேண்டும். காலனிய காலத்தில் மேற்குத் தொடர்ச்சிமலை ஆங்கிலேயர், ஒருசில உள்நாட்டு முதலாளிகளின் தோட்ட/எஸ்டேட் எனும்பெயரில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டது. அவ்விடங்களின் முதுகுடிகளான பழங்குடிமக்கள் அங்குவளர்ந்துவந்த காலனிய-மிஷனரிப் பண்பாட்டிலிருந்து வெகுவாக விலகியே வாழ்ந்தனர். முப்பதுகள் தொடங்கி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெருமளவில் குடியேற்றங்கள் ஏற்பட்டன. குடியேற்றங்கள் பழங்குடியினருட னான தொடர்புக்கு வழிவகுத்தன. இதேகாலத்தில் இதுவரை அவ்வளவாக உரையாடப்படாத சில குடியேற்றமும் நிகழ்ந்துள்ளது. கடற்கரைப் பகுதியை ஒட்டி வளர்ந்துவந்த நகரங்களுக்கு வேலை தேடுதல், வணிகத் தேவை, புது முதலீடு நோக்கங்கள் காரணமாக ஏற்பட்ட குடியேற்றம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கப்பூர், மலயா, இலங்கைப் பயணங்கள். பின்னர் பாரசீகம், ஏதேன் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கான பயணம். எண்ணிக்கையில் குறைவெனினும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறி யுள்ளனர். இந்தியாவில் பெருநகரங்களில் தொழில்தேடிச் சென் றோரின் எண்ணிக்கை ஏராளம். மும்பை,டெல்லி,சென்னை போன்ற நகரங்களில் வலிமையான எண்ணிக்கையுடைய மலையாளிச் சமூகம் வளர்ந்துவருவதுடன் அவர்கள் பண்பாட்டுமையங்கள், இயக்கங்கள், கழகங்கள்,பள்ளிகளையும் நிறுவியுள்ளனர்.

உலகளாவிய நிலையில் மலையாளிகள் பரவிச்சென்று வாழ்ந்து வருதலினால் ஏற்பட்டுள்ள பண்பாட்டுப் பலன்கள் முறையாக இன்னும் ஆராயப்படவில்லை.வெளிநாட்டு மலையாளிகளின் வைப்புநிதிகள், குடும்ப உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஆசைகள், நோக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் முதன்மையானவை. உற்பத்தியை விடவும் நுகர்வில் மையம் கொள்ளும் வாழ்க்கை முறை, சந்தைகளின் பெருக்கம், நகரமயமாதலும் வெளிப்பட்டு வருகின்றது. சந்தைப் பண்பாட்டின் வளர்ச்சி, வல்லரசுகளின் புதுக்காலனியப் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கும் கலைவடிவம் முதல் பாலியல் வரையான அனைத்தும் விற்பனைச்சரக்காகச் செய்யும் வாய்ப்புக்களைப் பெருக்கியுள்ளது. கிராமச் சமூகங்கள், அவர்களின் உற்பத்திமுறை உறவுகளில் ஏற்பட்ட தகர்ச்சியின் மூலமாக வேர்களை இழந்த,தொழிலற்றோரும்,ஓரளவோ, முழுமையாகவோ தொழிலுடையோருமான நடுத்தர மக்களின் பண்பாட்டுவெளியாக சந்தைஅமைப்பு மாறிவருகின்றது. குற்றவாளிகள்முதல் கலாச்சாரக் காவலர்கள் வரை எதுவாகவும் ஆகமுடிகின்ற இந்தப் புது-நடுத்தர வர்க்கத்திற்குக் கைவந்துள்ள ஆதிக்கம் பண்பாட்டின் இயல்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

இப் போக்குகளுக்குஒரு மறுபக்கமுண்டு. புது நடுத்தரவர்க்கத்தின் ஆதிக்கம் கேரளத்தின் பொதுவெளிகளில் மாற்றத்தை ஏற்படுத்து கிறது. சாதி,மத,இனப் போக்குகளுக்கு பண்பாட்டுவெளியில் கிடைத்துள்ள அங்கீகாரம் ஒரு வெளிப்படையான மாற்றம். தேசீயத்தின் பின்னணியில் உருவான வர்க்க ஒத்துழைப்பு அணுகு முறையே இன்று சாதி,மத, இனப் பிரிவினை வளர்ச்சியைத் தூண்டி யுள்ளது. காலனிய நவீனத்துவத்தைச் சார்ந்து நடத்திய மன்னராட்சி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அடிப்படையான மாறுதல்களை அளிக்க இயலவில்லை என்பதயே இது காட்டுகின்றது. காலனிய நவீனத் துவமும் தேசீயமும் அளித்த வாழ்க்கைமுறையும் மதிப்பீடுகளும் தகர்வுற்ற இடைவெளியில் சாதி,மத, இனப் பிரிவுகள் நுழைந்து கிராமச் சமூகங்களின் உடைவும் சிதிலமான நகரப் பண்பாட்டின் வளர்ச்சியும் இப் போக்கிற்கு ஊக்கமளித்துள்ளது. காலனிய நவீனத்துவத்தின் மதிப்பீடுகளை விமர்சன இயல்புடன் ஆராய்ந்து புதிய வாழ்வியல் மதிப்பீடுகளையும் பண்பாட்டு வடிவங்களையும் படைப்பதில் ஏற்பட்ட தோல்வி பிரிவினைவாதங்களுக்கு இடமேற் படுத்தியுள்ளது. பெண்கள், மதச் சிறுபான்மையர், புதுப் பொரு ளாதார மாற்றங்களால் ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவின் எதிர்பார்ப்புக் களையும் உணர்ச்சிகளையும் உள்வாங்கிட தேசீயவாதிகளாலும் புரட்சிஇயக்கங்களாலும் முழுமையாக இயலாமல் போனது சமூகநிலையில் தேய்வுக்குவழிவகுத்தது. இவற்றின் பலனாக சந்தைமயச் சூழலோடு அரை நிலவுடமைச் சமூக இயல்புடைய குடும்ப உறவுகளும் ஒழுக்க வடிவங்களும் சாதி, மதச் சிந்தனைகளின் மறுவாழ்வும் இன்று நடைபெற்றுவருகிறது.

இன்று கேரளச் சமூகத்தின் சீரழிவும் சிதிலமாதலும் வேறெந்தக் காலத்தையும் விட வெளிப்பட்டு நிற்கின்றது. இன்று நம் பண்பாட்டு வெளிகளில் உயர்ந்துவருகின்ற குரல்கள் முப்பதுகளிலும் நாற்பது களிலும் எழுந்தவையல்ல. தேசீயமும் புரட்சி இயக்கங்களும் வளர்த்தெடுத்த சமூகவாழ்வு,விருப்பத்திற்கான இடங்கள் முழுமை யாக நிராகரிகப்பட்டு மத சிந்தனை, சடங்குத்தன்மையோடு சந்தைப் பண்பாட்டுடனும் நம்மை மடத்தனமாகப் பணியச் செய்கின்ற சக்திகள் வலிமையடைந்து வருகின்றன. ஒடுக்கப்பட்டோரின் பெயர்களைச்சொல்லியே இனப்போராட்டங்களையும் இனம்சார் பார்வைகளையும் மறுக்கின்ற போக்கும் வலிமையாகத் தென்படு கிறது. மதச்சார்பின்மையும் இதுபோலக் கேள்விக்குள்ளாக்கப் படுகின்ற கற்பிதம்தான். இச்சூழல்களில் பண்பாட்டுவெளியில் நிகழ்கின்ற மாறுதல்களை ஆராயவேண்டும்.

ஷீ ஷீ ஷீ

நாவல், நாடகம்,சிறுகதை, கவிதை, கட்டுரை யாவும் அச்சு முதலாளியத்தின் உற்பத்திகளே. படைப்புக்களுக்குக் கலைத்தன்மை இருக்கலாம். வாய்மொழிவடிவில்தான் அவற்றின் உணர்ச்சி வெளியீடு தீவிரப்படுகிறது. நாவலுக்கான வாய்ப்புக்களை பெரும்பாலும் எழுத்துமொழியில் மட்டுமே காணமுடியும். பாடல்கள் சிறுகதை இவற்றிடையேயும் ஆட்டம், நாடகம் இவற்றிடையேயும் இவ்வேறுபாடுகளுண்டு. வாய்மொழி வடிவில் பிரதிகள் இருந்தாலும்கூடப் பாடுபவரின் மனநிலையே அங்கு முக்கியம்.எழுத்துமொழியின் அடிப்படையுடன் அமைகின்ற நாடகம் போன்ற வடிவங்களில் பிரதியே முதன்மைப் பெறுகின்றது. மனநிலைக்கான வாய்ப்புக் குறைவுதான். வாய்மொழி மரபின் பாகமான கதை சொல்லலும் ஆடல் பாடலும் அச்சுவடிவிற்கு மாறும்வேளை மாறுபட்ட தோற்றத்தைப் பெறுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வளர்ந்துவந்த மலையாள மொழிக்குஇரண்டு வடிவங்களிருந்தன. ஆரம்பத்தில் மதப்பிரச்சாரத் திற்கும் பின்னர்க் கல்வி, நாளிதழ்களில் புழங்கிவந்த மொழி ஒருவகை. வடமொழியின் பாதிப்புமிகுந்த மன்னராட்சிக்கால மரபிலக்கியங்களில் தொடர்ந்துவந்த மலையாளமொழி மற்றொரு வகை.இவை இரண்டுமன்றி வட்டார வாய்மொழி வழக்காறுகளும் பல்வேறு நிலைகளில் எழுத்துமொழிக்குள் புகுந்து வந்தது. மறுமலர்ச்சிக் கால மலையாள இலக்கியங்களில் இவை இரண்டும் இணைவதைக் காணலாம்.சி.வி.யின் மார்த்தாண்டவர்மா நாவலில் அரசர், அனந்தபத்மநாபன், சுபத்திராவின் மொழிக்கும் எட்டு வீட்டாரின் மொழிக்கும் இடையே காணலாகும் இடைவெளி இதை வெளிப்படுத்தும். பைத்தியக்காரன் சாணானின் மொழியில் வட்டார வாடையும் வீசுகின்றது.கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வந்த வாய்மொழி வடிவங்களின் விகாசத்தால் இங்கு ஒரு புதிய மலையாளம் உருவெடுக்கவில்லை. பதிலாக மன்னராட்சிக்கால இலக்கிய மலையாளம் மற்றும் மிஷனரி மலையாளத்தின் பாதிப்புப்பெற்ற மேட்டிமை/உயர் மலையாளமே உருவானது. மேட்டிமை/உயர் மலையாளத்துள் நுழைந்த வட்டார வாய்மொழி வடிவங்கள் கடுமொழியாகவும் மொழிவளர்ச்சியில் கொச்சை வடிவங்களாகவும் கருதப்பட்டன. ஏ.ஆர். தம்புரான் முதல் குட்டிக்கிருஷ்ண மாரார் வரை ஒழுங்குபடுத்திய நம் மொழிநடை இதன் விளைவுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின்இறுதியில் தோன்றிய நாவல் எனும் இலக்கியவடிவத்தின் வளர்ச்சியை அன்று வளர்ந்துவந்த சமூகச் சிக்கல்களுடன் பொருத்திக் காணவேண்டும். சம்பு இலக்கியங் களின் சமூக, அறச்சூழல் மன்னராட்சிக்கால மதிப்பீடுகளின் பகுதியான தர்ம அதர்ம புத்தியாக இருந்தது. தர்ம அதர்மங்களின் சக்கரச் சுழற்சியைப் பதிவுசெய்யும் நிகழ்வுகளே சம்பு இலக்கியத்தின் பாடுபொருள். மன்னராட்சிப் பண்பாட்டிற்கு அதீதமான புதிய சிக்கல்கள் சம்புஇலக்கியத்தின் கூறல்முறை பொருட்படுத்த வில்லை. இவற்றை ஆராய தர்ம அதர்மப் புத்தியைக் கடந்த சொற்களும் குறியீடுகளும் அவசியமானது. ஆங்கிலக் கல்வியின்வழி நேர்கோட்டுத்தன்மையான சமூகவளர்ச்சி கருத்துக்கள் உருவாக்கம் பெற்றன. இதன்பலனாக இதிகாசம்புராணம் மரபிலிருந்து வேற்று மைப்பட்ட சமூக-வரலாற்றுக் கதையாடல்கள் இடம்பெறலாயின. பெரும்பான்மை நாவல்களும் நிகழ்கால, கடந்தகால சமூகத்தின் தகவல்களைப் பாடுபொருளாகக் கொண்டது இச் சூழலில்தான்.

கவிதையிலும் இம்மாற்றத்தைக் காணலாம்.மன்னராட்சிக் காலத்தின் முக்கிய வெளியீட்டு வடிவமாகவும் பொழுதுபோக்கும் கவிதையாக இருந்தது.தர்ம அதர்ம விவேகத்தோடு மனித உணர்ச்சிகளையும் மெய்ப்பாடுகளையும் வெளியிடுவதற்கான வழியும் அதுவே. குமாரனாசானின் கைகளில் கவிதை புதிய அனுபவங்களைச் சித்திரித்தது. சமூக ஏற்றத்தாழ்வுகளும் அதற்கான சீர்திருத்தவழிகளும் மனிதநேயம்,ஆண் பெண் உறவுகள் குறித்த புதிய கற்பிதங்கள் அதிலிடம் பெற்றன. தர்ம அதர்ம விவேகத்தைத் தாண்டி பாலியல்பின், காதலின் எல்லைகளைச் சோதனை செய்யவும் அவர் கவிதைக்குள் இடமளித்தார். அங்குக் கற்பு போன்ற மதிப்பீடு களும் மறுபரிசோதனை செய்யப்பட்டது. சமூகச் சீர்திருத்த இயக்கங் களின் பின்னணியில் அவை எழுப்பியகுரல்களோடு இணைத்து வாசிப்பதற்கான தூண்டுதல் ஆசான் கவிதைகளின் கருத்துப்பரிமாற் றத்திற்கு வலிமை சேர்த்தது. அதேவேளை, காலனிய அறமதிப்பீடு இந்திய அறமரபு இவற்றிடையேயான மோதல்களும் அக்கவிதை களில் காட்சியளிப்பதுண்டு.

புதிய காலனிய அறச்சூழலின் பரிமாற்ற வடிவம் எனும் நிலையில் தமது கவிதைகளில் ஒடுக்கப்பட்டோருக்கான இடத்தைக் கண்டடைந்தது ஆசான் அடைந்த வெற்றிகளுள் ஒன்று.அது ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும்அமைந்தது. துரவஸ்தா, சண்டால பிட்சுகி போன்ற காவியங்கள் சமூகவரலாற்றில் பெரிதும் கவனிப்புப் பெற்றன. மன்னராட்சியின் தர்ம அதர்ம விவேகத்தை அவை வேருடன் களைய முயன்றன. இக்கவிதைகளின் அடிச்சுவட்டில் பல கவிதைகளும் கவிஞர்களும் தோன்றினர். சகோதரன் அய்யப்பன், பண்டிட் கறுப்பன், பள்ளத்துராமன் போன்ற ஒடுக்கப்பட்டோரினக் கவிஞர்களின் வரவு இம்மாற்றத்தின் அறிகுறிதான்.இதே காலத்தில் பெண்களும் எழுத்துலகில் தம் வரவைப் பதிவு செய்தனர். சமூகச்சீர்திருத்த இயக்கப் பணிகள் நிமித்தமாக முதன்முறையாக வீட்டுச்சூழல் பொது விவாதங்களில் இடம்பெறலாயிற்று.தர்ம அதர்ம புத்தியைத் தாண்டிப் பெண் மனம் குறித்த விவாதங்களோடு பெண் அறம் குறித்தக் கருத்து முரண்களும் வெளிப்படையாகவே பேசப்பட்டது எனினும் பெண்கள் பொதுவெளிகளில் புழங்குவதன் அவசியம் குறித்து கருத்துவேற்றுமை இல்லை. இச்சூழலில் தரவத்து அம்மாளு அம்ம, அம்பாடி இக்காவம்ம, டி.கெ. கல்யாணி அம்ம, லலிதாம்பிகா அந்தர்ஜ்ஜனம்,கெ. சரஸ்வதி அம்ம போன்ற ஆரம்ப காலப் பெண் படைப்பாளிகள் எழுதினர். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தமக்குரிய புதிய இடங்கள் தேடவும் ஆண் பெண் உறவுகளை மறுவரையறை செய்யவும் அவர்கள் முயன்றனர். சாரதா, மஹிளா, வனிதா, ஸ்ரீமதி போன்ற மகளிரிதழ்கள் பெண்களின் கருத்து வெளியீட்டு முயற்சிகளுக்கு வலிமையளித்தன.

சமூக சீர்த்திருத்தவாதிகள் இலக்கியத்தை பிரச்சார ஊடகமாகவே பிரக்ஞையுடன் பயன்படுத்தினர். அச்சு வழியான கருத்து வெளியீட்டு வாய்ப்புக்களைப் பயன்கொண்டு தமது கருத்துக்களையும் உணர்ச்சி களையும் அதிகமான மக்களிடம் கொண்டுசேர்க்க அவர்களால் இயன்றது. மக்கள் சமூகத்தேவைகளுக்காகக் கூடுமிடங்களில் ஊர்வலங்கள், மாநாடுகள்,பொதுக்கூட்டங்கள் போன்ற காட்சி கேள்வி வடிவங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தினர். அச்சுவடிவில் வெளிப்பட்ட இலக்கியவடிவங்கள் மன்னராட்சிக் கால வெளியீட்டு வடிவங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. தனிநபர் திறனையும் சிக்கலான வெளியீட்டு உத்திகளையும் நம்பிய கோயிற்கலைகளை விட ஒரு பிரதியும் எவராலும் நடித்துவிட இயலும் அமைப்பையும் உடைய நாடகம் பிரச்சார ஊடகமாகப் பேரெடுத்தது. வி.டி.பட்டதிரிப்பாடு எழுதிய ‘அடுக்களையிலிருந்து அரங்ஙத்தேக்கு’ நாடகம் இலக்கியத்தின் பிரச்சாரத்தன்மையை நிறுவிக்காட்டிய பிரச்சார இலக்கியம் எனும் வகைமைக்கு வித்திட்ட படைப்பாகும். நிகழ்ந்துவந்த சமூகமாறுதல்களே மேற்தட்டு வெளியீட்டு வடிவங்களின் முக்கிய அரங்கினரும், ரசிகர்களுமான நம்பூதிரி சமுதாயத்திலிருந்தே இப்படியரு புதிய வெளியீட்டிடம் கண்டடைய வாய்ப்பளித்தது.

மன்னராட்சிக்கால சமூகமும் மிஷனரி-காலனியப் பண்பாடும் மதிப்பிட்ட வீட்டுச்சூழலில் இருந்து மற்றொரு இடமாக அரங்கை மகளிருக்குப் பரிந்துரைத்த வி.டி.யின் நாடகம், மன்னராட்சியின் மையமான பிராமண-வடமொழி மரபுகளின் மீது உள்ளார்ந்த கலகத்தை முன்வைத்தது. இதனுடன் உப்புச்சத்தியாகிரகம்,பிற போராட்டங்களில் ஏற்பட்ட பெருமளவிலான மகளிர் பங்கேற்பும் பல்வேறு பொதுத்துறைகளில் அவர்தம் தொண்டுகளும் நிறைந்த ஒரு காலகட்டத்தையும் அந்நாடகம் முன்னிறுத்துகின்றது. பெண்கள் மட்டுமே இணைந்து எழுதி நடித்தத் ‘தொழில் கேந்திரத்திலேக்கு’ என்ற நாடகத்தில் இவ்வளர்ச்சி முழுமைப் பெறுகின்றது.

புராண இதிகாசமரபுகள் கற்பித்த கடந்தகாலக் கற்பனைகளி லிருந்து மாறுபட்ட வரலாற்று அறிவின் வளர்ச்சி மற்றொரு முக்கிய மாறுதலாகும். கேரளவரலாற்றை எழுதும் பல்வேறு முயற்சிகள் இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. நிலவுடைமை முறையும் மருமக்கத்தாயமும் சாதியமைப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அதேகாலத்தில் அவற்றின் உறைவிடங்கள் தேடும் முனைப்புக்களும் ஏற்பட்டன. இவ்வரலாற்றறிவின் பகுதிகள் கேரள வரலாறு தொடர்பான பல இலக்கிய வெளிப்பாடுகளிலும் இடம்பெற்றது. உள்ளூர் பரமேஸ்வர அய்யரின் ‘உமாகேரளம்’, குஞ்ஞிக்குட்டன் தம்புரானின் ‘கேரளம்’, அப்பன் தம்புரானின் ‘பூதராயர்’ போன்ற வற்றில் இடம்பெறுகின்ற கடந்தகால வரலாறு புராணத் தொன்மங் களை விலக்கி உண்மைகளைப் பதிவாக்க முயல்வதுண்டு. இந்திய வரலாறு தொடர்பான கதையாடலில் வெளிப்படுகின்ற அந்நியர் ஆதிக்கத்திற்கெதிரான போராட்டங்களைச் சித்திரிக்கின்றன. சர்தார் பணிக்கர் போன்றோரின் நாவல்கள்.வள்ளத்தோள் தேசீய இயக்கத்தோடு நேரடியாகத் தொடர்புறும் கவிதைகளைப் பாடினார். இக்காலத்தில் வளர்ச்சிபெற்றுவந்த வரலாற்றுணர்வும் தேசீயத்தின் எழுச்சியும் இன்னும் ஆராயவேண்டியுள்ளது.

காலனிய எதிர்ப்பியல்பையுடைய வலிமையானதொரு போராட் டமே மாப்பிளாக் கலகம். எனினும் அது இலக்கியத்தில் பெரிய பாதிப்புக்கள் எதையும் அளிக்கவில்லை. உப்பு சத்தியாக்கிரகம் போன்ற மக்கள் போராட்டங்களும் பிரச்சார இலக்கியத்தை மட்டுமே படைத்தது. மன்னராட்சிப் பண்பாட்டையும் சாதிய அமைப்பையும் எதிர்த்து வன்மையாக கண்டித்து எழுதிவந்தவர்கள் காலனியத்திற்கு எதிரான குரலை அவ்வாறு ஒங்கி ஒலிக்கவில்லை. காலனிய ஆட்சி அமைப்பின் கொடுமைகளையோ அடக்குமுறைகளையோ இவர்கள் திறந்துகாட்டவில்லை. அதற்குமாறாக அந்நியர் ஆதிக்கம் என்ற எளிய தலைப்பின்கீழ் அதற்கெதிராகப் போராடியவர்கள் பற்றிய வரலாறுகளைப் படைப்பதில் ஈடுபட்டனர். அலக்ஸாண்டர், ஹ¨ணர்கள், துருக்கியர், மொகலாயர்,ஐரோப்பியருக்கெதிரான போரட்டத்தின் வீரகதைகளைச் சித்திரித்து தேசீய உணர்வை வளர்ப் பதில் கவனம் செலுத்தினர். முப்பதுகளில் நடைபெற்ற இந்திப்பிரச் சாரத்தின் மூலமாகஇந்தி, வங்காள மொழிப் படைப்புக்கள் ஏராளமாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன. பங்கிம் சந்திரர், தாகூர் போன்றோரின் படைப்புக்களின் பிரசாரமும் தேசீய கருத்துருவாக் கத்தை முன்னிறுத்தியது.

புரட்சி அரசியலின் பாதிப்பால் ‘வரலாறற்ற மக்கள்’, பற்றிய சிந்தனைகள் இதே காலத்தில் எழுந்தன. ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபவ வெளிப்பாடுகள் போகப்போகப் புரட்சி அரசியலின் பாகமாக மாறிவிட்டதை கேசவதேவ், தகழி, பொன்குந்நம், வர்க்கி போன்றோரின் படைப்புக்கள் பதிவு செய்கின்றன. மன்னராட்சி ஒழிப்பு, முதலாளிய-காலனிய சமூகத்தின் வளர்ச்சிப் பின்னணிகளில் வெளியேற்றப்பட்டஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், நகரத் தொழிலாளர்கள், மீனவர்கள் முதலியோரின் வாழ்க் கைக்கு இவர்கள் நெருங்கிச் சென்றனர். காலனிய நவீனத்துவம் தோற்றுவித்த நடுத்தரமக்கள் வாழ்க்கையும் இலக்கியத்தில் பேசப் பட்டது. மாறுதலுக்குள்ளான வேளாண்உறவுகளும், மருமக்கத்தாய குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்ட கிராம வாழ்க்கைச் சிக்கல்களும் பல்வேறு இலக்கிய வடிவங்களில் சித்திரிப்புப் பெற்றன.

மன்னராட்சி, முதலாளிய, காலனிய அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்முகம் இலக்கியங்களில் தென்பட்டது. காலனியம் சமூகத்தில் ஊடுருவிச் செய்த மாற்றங்களும் அதிகரித்து வந்த ஒடுக்கப்பட்டோர் போராட்டங்களும் இப்படைப் புக்கு உந்து தலாக அமைந்தன. கொல்லம்-ஆலப்புழைப் பகுதிகளில் நிகழ்ந்த முந்திரிப் பருப்பு, கயிற்றுத் தொழிலாளர் போராட்டங்கள், மலபார் பகுதியில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்கள், தேசீய இயக்கத் திலும் புரட்சி இயக்கங்களிலும் அதிகரித்து வந்த இப்பிரிவினரின் பங்கேற்பு என்பன இவ்விலக்கியப் படைப்பாக்கங்களுக்குச் சூழல் அளித்தது. மன்னராட்சியிலிருந்து முதலாளியத்திற்கான மாறுதல், காலனியத்தின் இயல்புகள் குறித்தும் தீர்க்கமான பார்வைகள், அனுபவங்கள் இவற்றின் அடிப்படையில் இப்படைப்புகள் உருவாக வில்லை. அனுபவ அடித்தளம் கொண்ட படைப்புகள் பாடல், நாடகம்,கதா பிரசங்கம் போன்ற காட்சிவடிவ படைப்புகளாக வெளியிடப்பட்டன. முக்கிய எழுத்தாளர்கள் வளர்ந்து வந்த சமூக முரண்களை புனைவுரீதியாகவே அணுகினர். காலனிய நவீனத்துவ அழகியலை அறிந்து அதற்கெதிரான தனது வடிவங்களை வெளி யிட்டு வளர்ப்பதற்குப் பதிலாக எளிய இருமைகளை அவர்கள் சமூக முரண்களாக கண்டனர். உயர்ந்தோர் தாழ்ந்தோர், ஏழை பணக்காரன், மரபு நவீனம், கிராமம் நகரம் நல்லவன் கெட்டவன் போன்ற இருமைகள் அப்படைப்புகள் நெடுக காணலாம். காலனிய முதலாளியச் சிக்கல்கள் இதுபோல் எளிய குறியீடுகளாக்கப்பட்ட காரணத்தால்அவற்றின் இயல்புகளைத் திட்டவட்டமாகக் கற்பிக்க வும் முரண்களை உட்கொள்ளவும் தடையானது.

ஆரம்பகால மறுமலர்ச்சிப்படைப்பாளிகள் காலனியத்தை எதிர்கொண்ட இரட்டைத் தன்மையின் தொடர்ச்சியே முப்பதுகளின் பின் கற்பனாவாதம். வள்ளத்தோள் கவிதைகளில் காணப்படும் வெளிநாட்டவன் காலனியமே என்று சொல்வதற்கிலை. இதிகாச, புராண மரபின் தொடர்ச்சியாக இந்தியப் பண்பாட்டை நாசப்படுத்து கிற எவருமாகலாம். காந்தி அதர்மத்தை அடிப்பவரும் தர்மத்தை வாழவைப்பவரும் புது அவதார புருஷனுமாகலாம். இங்கு தேசீயம் தர்ம அதர்ம அறிவாக அடிமனதில் இணைந்துள்ளது. சங்ஙம்புழாக் கவிதையில் வாழைக்குலை எடுத்துச்செல்லும் நிலவுடமை(ஜமீன்) யாளன் காலம் காலமாகக் கடந்துவரும் சுரண்டல்வாதியின் மறு உருவம்தான். இருஇடங்களிலும் காலனியம், நிலவுடமை என்ற உண்மைக்குப் பதிலாக ஒடுக்கும் ஆங்கிலேயன், சுரண்டுபவன் எனும் கற்பிதமே வெளிப்படுகிறது. இரு இடங்களிலும் யதார்த்த உணர்வைக் காணமுடிகின்றது. ஆனால் யதார்த்தத்தை யதார்த்தத் தாலேயே விவாதிப்பதற்குப் பதிலாக கற்பனவாதத்தால் உரையாடு கின்றனர். இதுபோன்ற கற்பனாவாதமே தேசீயம், புரட்சி இயக்கங் களின் மறு வடிவாய் திகழ்ந்தது.

யதார்த்தத்தை வெளியிடும்படைப்புகளோ வடிவங்களோ இக் காலத்தில் உருவாகவில்லை என்று கூறவில்லை. முப்பது நாற்பது களில் வளர்ந்துவந்த மக்களாட்சிப் பொதுவெளியின் உட்துடிப்பு களை அறுபதுகள் வரையான படைப்புக்களில் காணலாம். மலையாளி ஆளுமையும் தன்னிருப்பும் உருவாகிவந்த காலமும் இதுதான். மன்னராட்சிகாலப் பண்பாட்டின் பகுதியாக வளர்ந்துவந்த மலையாளி ஆளுமையின் கூறுகள்- எழுத்தச்சன், செறுசேரி, பூந்தானம், நம்பியார் அடங்கிய பாரம்பரியத்தின் கலைவெளியீட்டு வடிவங்கள், சொல்லோவியங்கள் காலனிய நவீனத்துவத்தின் பாதிப்புக்களை உள்வாங்கி புதிய வடிவங்கள் மேலாதிக்கம் பெற்ற காலமும் இதுவே. நாவலும் சிறுகதையும் கவிதையும் நாடகமும் மலையாளி ஆளுமையைப் படைத்தளிப்பதில் கணிசமான பாதிப்பைச் செய்துள்ளது. மொழியமைப்பும் அதற்கேற்ப மாறியது. இரண்டு மூன்று தலைமுறை படைப்பு வெளிப்பாடுகள் கல்வி வடிவங்கள் காரணமாக வளர்ந்துவந்த மேட்டிமைமொழி மெதுவாக மலையாளி நடுத்தர வர்க்கத்தின் வெளியீட்டு மொழியானது. முப்பதுகளின் பின் ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டு வெளிப்பாடுகளும் இதே மொழியில்தான் நடந்தேறியுள்ளது. ஒடுக்கப்பட்டோரின் ஆசைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் கூட இந்த நடுத்தர வர்க்க மொழியிலேயே வெளியிடப்பட்டது என்று பொருள். ஒரு சில படைப்புகளில் பேச்சுமொழிப் பதிவுகள் பாத்திர உரையாடலாக இடம்பெற்றுள்ளது நீங்கலாகப் பிறஒடுக்கப்பட்டோர் கூறுகள் எதுவும் பதிவு பெற்றதில்லை. அதுவும் கூட நடுத்தர வர்க்கத்தால் பண்படுத்தப்பட்டது. அதிகார இயல்புடைய மதிப்பீடுகள் மற்றும் குறியீடுகளுக்கேற்ப அவை சீர்திருத்தம் பெற்றன. கதை மாந்தர்களின் பாலியல்வேட்கை காதலென்றும், உடல்மீதான தண்டனைகள் தனிநபர் கொடுமைகளெனவும் ஆண்மேலாதிக்கத்தை ஆண்மைத் தனமாக அதிகாரப் பிடிவாதத்தை கடும் நெஞ்சுறுதியாக மாற்றி வாசிக்கப்பட்டது.

முப்பதுகளின் பின்உண்டான உலகளாவிய காலனிய வீழ்ச்சிப் பின்னணியில் மன்னராட்சிப் பண்பாட்டின் மீதான வெறுப்பை மட்டுமல்ல பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேரூன்றிய காலனிய நவீனத்துவ அழகியலின் மீதான எதிர்வினையாற்றல்களும் நாம் செய்திருக்கவேண்டும். மிஷனரி-காலனியப் பண்பாட்டின் பாதிப்பில் உருவாகி பின்னர் ஒழுங்குபடுத்தப்பட்ட மேட்டிமை மொழி நமக்குத் தேவையாக இருந்ததா? கேரள வாய்மொழி மரபின் தனித்துவம் மிக்க வேற்றுமை இயல்புகளுடைய சொற்களஞ் சியத்தை முழுமையாக இம்மொழியால் பயன்கொள்ள இயல வில்லை. மன்னராட்சிப் பண்பாட்டின் அடிப்படையில் வளர்ந்த மொழியின் வாய்ப்புகளையும் முழுமைப்படுத்த இயலவில்லை. வாய்மொழியில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்த சொற்கள் தவிர காலனிய நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்ட சொற்கள் அனைத்தும் ஆங்கிலச் சொற்களின் வடமொழிச் தற்சமங்களாகவே இருந்தன. இச் சொற்களின் மிகைப் பயன்பாடு நவீன அறிவுத்துறைச் சொல்லாடல்களைக் கடினப்படுத்தியது. பொதுமக்களால் புரிந்து கொள்ளவியலாத இருண்மைத்தனம் மிக்கனவாக நவீன அறிவுத் துறைச் சொல்லாடல் கருதப்பட்டன. இது இலக்கிய விவாதங்களை யும் ஒரளவு பாதித்தது. அதுபோலவே யாப்பு, அணி நீங்கிய கட்டற்ற கவிதை பரவலாயிற்று. சிக்கலான, புதுமையான கருத்துக்களைச் சித்திரித்து உணர்ச்சியைத் தூண்டும் கவி மேலான அறிவுஜீவியாகக் கருதப்பட்டான். கவிதைக்கு ஏற்பட்ட உன்னதத்தன்மை அதை வெகுமக்களின் இலக்கியமான பாட்டிலக்கியத்திலிருந்து அகற்றி யது. கவிஞர்கள் பண்பாட்டின் உயர்படிகளில் நிற்கப் பொதுமக்கள் நாடோடிப் பாடல்களையும் நாடக, சினிமாப் பாடல்களையும் ரசித்தனர்.வெகுமக்களின் ‘மட்டரக’ ரசனைக்கு இடமளித்த பாட்டுமுறை வலிமையான பிரச்சார வடிவமானது

நாவல், சிறுகதை, நாடகம் போன்ற வடிவங்கள் மலையாளியின் அழகியல் விகாசத்திற்கு எவ்வாறு உதவியது என்றும் அவற்றை எவ்வாறு தன்னாட்டுத்தன்மை அடையச் செய்வது என்பது பற்றியும் நிகழவேண்டிய தேடல்களின் போதாமையும் இங்கு கவனத்திற் குரியது. இலக்கிய விமர்சனத்தின் பணி இத்திசையில் நீட்சிப் பெற்றிருக்க வேண்டும். இலக்கிய வடிவம்,அமைப்பு,தனிப்பட்ட இலக்கியவாதிகளின் படைப்புகள் குறித்த விவாதங்களைக் கடந்து ஒரு இலக்கிய வகைமையின் சூழல் ஏற்பமைவு குறித்த விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட வகைமைகள் வெளியீட்டு முறைக்கு இன்றியமையாத கூறுகள் அல்ல,அவை காலனிய நவீனத் துவத்தின் உருவாக்கங்கள் எனும் மதிப்பீட்டின் அடிப்படையில் விவாதங்கள் ஏற்படவில்லை. இதன்விளைவாக நவீன அழகியலுக்கு உருவமளித்த மிஷனரி-காலனியப் பண்பாடும் முதலாளியச் சமூகத்தின் கருத்தியல்களும் இலக்கிய விமர்சனத்தின் தூண்டுதல் கூறுகளாயின.மாரார் போன்ற ஒரு சிலர் தவிர பிறர் மேற்கத்திய விமர்சன வடிவங்களை அப்படியே ஏற்றுக்கொண்டனர். இத்தகு இலக்கிய விமர்சனம் தனிப்பட்டமுறையில் சில படைப்பாளிகள் குறித்து விவாதித்திருக்கலாம். எனினும் இலக்கிய வகைமைகளை நியாயப்படுத்தும் அமைப்பையே கொண்டிருந்தன. நாவலாசிரியர் களும் சிறுகதாசிரியர்களும் கவிஞர்களும் அவரவர்களின் இலக்கிய வகைமைக்குள் நின்றே புதிய நுட்பங்கள் தேடினரேயன்றி அவ் வகைமையைத் தன்னாட்டுத் தன்மையுடன் மிளிரச் செய்திட முயல வில்லை.

முற்போக்குவாதிகளின் இலக்கிய விமர்சனத்திற்கும் இக்குறை பாடு உண்டு. அவர்கள் இலக்கிய விமர்சனத்தைச் சமூக முரண்களின் அடிப்படையில் மதிப்பிட்டனர்.ஆனால் எழுத்தாளர்களின் சமூகப் பொறுப்பு,படைப்பின் உள்ளடக்கம்,சமூக இயல்பு இவற்றையே அவர்கள் விமர்சனங்களில் முதன்மைப்படுத்தினர். நமதுநாட்டின் யதார்த்தங்களைச் வெளியிட குறிப்பிட்டஇலக்கிய வடிவம் உகந்ததா என வினா எழுப்பவோ அவசியமான மாற்றங்களைக் கொணரவோ அவர்களால் இயலவில்லை. ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டினின்றும் அனேக வடிவங்களை வளர்த்தெடுக்க வாய்ப் பிருந்தும் அதற்கு அவர்கள் முனைப்புக் கொள்ளவில்லை.

காலனிய நவீனத்துவம்அளித்த பண்பாட்டுச் சூழலைக் கடந்து செல்ல இயலாததால் ஏற்பட்ட பாதிப்புக்கள் கணிசமானவை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலவிய பிரச்சனைச் சூழலுக் குத் தொடர்ச்சி ஏற்படவில்லை. ‘இந்துலேகா’வின் பதினெட்டாவது அத்தியாயத்தில் கொள்கைநிலையிலும் தொடர்ந்து முழுமை பெறாத சாரதாவில் நடைமுறை நிலையிலும் குறிப்பிடப்பட்ட காலனிய நிறுவனங்களும் சான்று. பின்னர் பல படைப்புக்களிலும் காலனிய நிறுவனங்கள் இடம்பெற்றன (அலுவல் ஆதிக்கம், நீதிமன்றம், அரசியல் அமைப்பு, கல்வி). எனினும் அவையாவும் கற்பனைத் தன்மையின் வார்ப்புக்களாகவே அமைந்தன. இந்நிறுவனங்களின் இயல்பும் அவற்றில் அகப்பட்ட மனிதர்களின் எதிர்வினையும் ஆராயப்படவில்லை. பஷீரின் ‘மதிலுகள்’, ‘சப்தங்கள்’ என்பவை இக்குறைபாட்டிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன. பிறவற்றில் அதிகாரக் குறியீடுகள் சில இருமைகளாக (அச்சம்/அன்பு, வெறுப்பு/விருப்பு) எளிமையாக்கம் பெறுகின்றன. இத்துடன் முழுமையாகவே இவ்வமைப்புக்களை ஏற்றுக்கொண்ட மனிதர்களைத் தகழியின் ஏணிப்படிகள், மலையாற்றூரின் யந்திரம் முதலிய நாவல்களில் காணலாம்.

இந்துலேகா எழுப்பும்சிக்கல்கள் காலனிய ஆட்சியமைப்பு சார்ந்தது மட்டுமல்ல. இன்னும் விரிவாக மேற்கத்தியப் பண்பாடு, முதலாளிய அடிமைத்தனத்தின் முளைகளும் அதிலுண்டு. பல பிற்காலப் படைப்புக்களிலும் இவை பல முறைகளில் சித்திரிப்புப் பெற்றுள்ளது. கிராமச் சமூகங்களின் உடைவும் பெருகிவரும் சந்தை மயமாதலில் சிதைவுறும் மனித உறவுச் சித்திரிப்புக்கள் இடம் பெறுகின்றது. ஆரம்பகாலக் கதாசிரியர்கள் முதல் எம்.டி.வாசுதேவன் நாயர் வரையான படைப்பாளிகளிடம் தென்படும் நகர-கிராம இருமைகள் இந்த உள்ளடக்கத்தின் குறியீடுகள்தான். இடசேரி, வைலோப்பிள்ளி கவிதைகளில் கிராமச் சமூகத்தின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், கலகமனமும் காணலாம். முழுமையாக இக்காலப் படைப்புகள் நகரத்தின் வெற்றியைச் சித்திரித்தன. ஒரு மக்களினத் தின் போராட்ட உணர்வும், எதிர்ப்பும் நகரமென்ற யதார்த்தத்துள் மூழ்கிமறையும் சித்திரங்களே அதிகம். ‘உறூப்’பின் கதைகளில், நாவல்களில் இடன்பெறுகின்ற இச்சித்திரங்கள் ‘எம்.டி’யின் படைப்புகளில் நிறைவுபெறுகின்றன. சிதைந்த கிராம வாழ்வின் அச்சுறுத்தல்களில் இருந்து தப்பிக்க நகர மனிதப்பெருக்கத்தில் கரைகின்றனர். நகர்மயமான அவன் திரும்ப கிராமத்திற்கு வரும் போது அது மிக அந்நியமாகிவிடுகிறது. பின்னர்அவன் மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கின்ற கற்பனைக் கிராமத்துடன் ஏக்கவுணர்வில் வாழ்கிறான். நகரத்துடனான கரைதல் ஒரு மோசமான நம்பிக்கை. ஆனால் அவசியமும்தான். இந்த அவசியமே முதலாளியத்தின், அது கற்பிக்கும் வாழ்க்கைமுறையின் வெற்றியாகின்றது.

காலனியத்திடம் இரட்டைமனநிலையில் ஆரம்பித்து காலனிய நவீனத்துவச் சூழலில் வளர்ந்தஇலக்கியவாதி முதலாளியப் பண்பாட்டின் வெற்றிகளை விவரிப்பவனாக அடையாளம் பெறு கிறான். மன்னராட்சிப் பண்பாட்டின் மீதான வெறுப்பு இயல்பாக அவ்விடத்தில் கொண்டுசேர்க்கின்றது. இப் பயணம் காலனிய வீழ்ச்சிக்காலத்தில், காலனிய எதிர்ப்புப் போரட்டங்கள் நடைபெற்ற சூழலில் என்பது கவனிக்கத்தக்கது. நகரம் நோக்கிய பயணத்தைச் சித்திரித்தவர்கள் நகர வாழ்வின் போராட்டங்களையும் சித்தரிப்ப துண்டு.இது முழுமையடைவதில்லை. நகரம் ஒரு தொன்மம். அது யதார்த்தமாகும் வேளை மட்டுமே முதலாளியப் பண்பாட்டின் அடக்குமுறை வடிவங்கள் இனம் காணப்படும். அப்போதுதான் மொழி,பண்பாடு, வெளிப்பாடு அனைத்திலும் எதிர்வடிவங்கள் தோன்றும். காலனிய விடுதலை என்பது அரசியல்செயல்பாடு மட்டுமல்ல. மனதின் காலனியவிடுதலை அது. முப்பதுகளின் பின் வளர்ந்துவந்த அழகியலின் முக்கியச் சின்னமாக இடம்பெற வில்லை.

முதலாளியத்திற்கு எதிரான படைப்புக்களைமுற்போக்கு இலக்கியவாதிகள் படைத்திடவில்லையா எனும் வினாவிற்கும் முழுமையான பதில் இல்லை. கேசவதேவ், தோப்பில், பாஸி போன்றோர் எதிர்வினை ஆற்றியுள்ளனர். முதலாளியப் பண்பாட்டின் பரப்பு, நோக்கம் பற்றிய ஆழ்ந்த விமர்சனங்கள் அரிதாகவே உள்ளன.முதலாளியத்தின் வெளிப்படையான சுரண்டல் வடிவங் களும் அவற்றை நியாயப்படுத்தும் அமைப்புக்களுமே இங்கு முக்கியமாக விமர்சிக்கப் பெறுகின்றன. அவை பற்றிய மேலோட் டமான சித்திரிப்பேயன்றி, காலனியத்தின் பாதிப்பு, உள்ளூர் முதலாளியத்தின் வளர்ச்சி தொடர்பான கடுமையான விமர்சனங்கள் ஏற்படவில்லை. பிற்காலத்தில் ‘கேசவ்தேவ்’ எழுதிய ‘அயல்கார்’, ‘தகழி’யின் ‘கயர்’, ஈ.எம். கோவூரின் நாவல்களில் ஓரளவு வரை இதற்கான முயற்சிகள் இடம்பெறுவதுண்டு. அவை கூட உள்ளூர் முதலாளியத்தின் வளர்ச்சி,ஆசைகள்,விருப்பங்கள், கண்டிப்பு, கபடம் இவற்றைச் சுற்றியே வந்தன என்பதல்லாமல் சமூகத்தின் சுழல்முறை குறித்த சித்திரிப்புகள் வளர்ச்சி பெறவில்லை. ஆகவே தான் சின்வா ஆச்சிபி நாவல்களும் மார்க்கேஸின் ‘ ‘நூற்றாண்டுத் தனிமை’ போன்றவை அளிப்பது போன்ற அனுபவத் தீண்டல் நமக்கு ஏற்படவில்லை.

முற்போக்கு இயல்புடையஇலக்கியவாதிகளும் முதலாளியத் தோடு இரட்டை அணுகுமுறையையே கொண்டிருந்தனர். முதலா ளியச் சுரண்டலை வெளிப்படையாக எதிர்ப்பதுடன் முதலாளிய வளர்ச்சித் தந்திரங்களை மறைமுகமாக அங்கீகரிப்பதும் இப்படைப் புக்களின் சிறப்புத்தன்மை. முதலாளியம் மறுக்கப்படத்தான் வேண்டும். ஆனால் முதலாளியப் பண்பாட்டின் பகுதியான நகர மயமாக்கம், சந்தைமயமாக்கம், தொழில் நுட்பங்கள், அலுவல் ஆதிக்கம், மதிப்பீடுகளைப்புறக்கணிப்பது எளிதல்ல. அவைமன்ன ராட்சிக்கு எதிரான வடிவங்கள். மன்னராட்சிக்கு எதிரான பண்பாட்டுச் சூழல் காலனிய நவீனத்துவச் சூழலில் படைக்கப்பட்டது. ஆகவே நவீனத்துவ வடிவங்களை மறுபரிசோதனை செய்யவேண்டும் என்ற பிரக்ஞை வளரவில்லை. ஆதலால் காலனிய விடுதலையின் பண்பாட்டுச் செயல்முறைகள் வடிவம் பெறவில்லை.

கேரளத்தில் மன்னராட்சிக்கும் முதலாளியத்திற்குமான எதிர் வினைகள் பிரச்சாரத்தன்மை கொண்ட இலக்கிய வெளிப்பாடுகளாக அடங்கின.காலனிய நவீனத்துவத்தின் பகுதியாக வளர்ந்துவந்த படைப்புவடிவங்கள், இயக்கங்களை விமர்சிக்கவும் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தின் பகுதியாக வெகுசனப் பண்பாட்டிற்காகப் போராட்டங்கள் நடத்துவதற்கான முயற்சிகள் எதுவும் ஏற்பட வில்லை. பண்பாட்டுத்துறையில்ஏற்படவேண்டிய காலனிய விடுதலையின் இன்மை பிரச்சாரத்தனம் மிக்க புரட்சி இலக்கியத்தையும் காலனிய நவீனத்துவத்தின் உருவ, உணர்ச்சி களிடம் முழுமையான பணிந்தடங்கலையுடைய முதன்மைநீரோட்ட வடிவங்களையும் படைத்தது. அதனால் இலக்கியப் படைப்புகளில் வெளிப்பட்ட ரியலிசம்கூடக் கற்பனையானதும் தற்சார்பானதுமாக அமைந்தது. தனது சூழலில்கூடப் பன்முகத்தொடு எதிர்வினையாற்று கின்ற நடுத்தரவர்க்கத்தின் அழகியலே அங்கு வெளியிடப்பட்டது.

ஷீ ஷீ ஷீ

மேற்கூறிவந்த நிலவரங்களின் பண்பாட்டுப் பாதிப்புகளைப் பரிசோதிக்க வேண்டும். காலனிய நவீனத்துவம் உருவாக்கிய பண்பாட்டு வெளிகளில் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கிய மானவை.

ஒடுக்கப்பட்டோரின் அனுபவங்களையும் ஆசைகளையும் முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளைக் கற்பனாவாத ரியலிஸ்டுகளும் முற்போக்குவாதிகளும் மேற்கொண்டனர். பெரும்பாலான படைப்புக்களில் சுரண்டப்பட்டோர் லட்சிய அடையாளங்களாக இடம்பெற்றனர். சுரண்டப்பட்டோரின் பார்வையிலிருந்து அவர்கள் மீதான பொருளாதாரச்சுரண்டல் மற்றும் சமூகத் தாக்குதல்கள் இவற்றைக் கடந்து அன்றாட வாழ்க்கை வடிவங்களின் பண்பாட்டுப் பகுதிகள் முன்னிலைப்படுத்து வதற்கான முயற்சிகள் நடக்கவில்லை. முற்போக்கு இலக்கியப் படைப்புக்களில் மையப்படுத்தப்பட்டிருந்த பிரச்சாரக்கூறு ஒடுக்கப் பட்டோர் பண்பாட்டின் பல்வேறு பகுதிகளைச் சித்திரிப்பதில் அவர்களைப் பின்னிடச்செய்தது. இதன்விளைவாக ஒடுக்குவோரும் ஒடுக்கப்பட்டோரும் நடுத்தர வர்க்க வாழ்க்கைவடிவங்களின் ஒரே அரங்கில் வெளிப்பட்டனர். ஒடுக்கப்பட்டோர் இசை, ஆடல், வெளியீட்டு வடிவங்கள், சொல்வழக்காறுகள் என அனேக வாய்ப்பு களுடைய பண்பாட்டு வடிவங்கள் இலக்கியச் சித்திரிப்பினின்றும் அன்னியமாயின.

ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டை உள்வாங்கிக்கொள்வதில் கற்பனாவாத ரியலிசத்திற்கு எல்லைகளிருந்தது. இதே காலத்தில் செயல்பட்டுவந்த ‘ஜீவல் சாகித்ய பிரஸ்தான’த்தாலும் அதிக தூரம் முன்னெடுக்கவில்லை. ஒடுக்கப்பட்டோர் மொழி, வெளிப்பாடு களின் வளர்ச்சி பண்பாட்டுத்தள வர்க்கப் போராட்டத்தின் பகுதி யாகவும் கருதப்படவில்லை. ஒடுக்கப்பட்டோர் அனுபவவெளிப் பாட்டுக்கான களமற்ற நிலையில் பொதுவுடைமை இயல்புடைய இலக்கியங்கள் ஒடுக்கப்பட்டோர் விடுதலையை வரவேற்கின்ற நடுத்தரவர்க்கத்தின் பார்வையில் உருவாக்கம் பெற்றன. அடிப்படை யாகக் கலை ஒரு பிரச்சாரக்கருவி எனும்கொள்கை, ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டு வடிவங்களைப் பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்துகிற நிலைக்குத் தள்ளியது. அங்கும் கற்பனாவாத ரியலிஸ்டுகளின் வார்ப்பு மாதிரிகளே பயன்படுத்தப்பட்டன. ஐம்பதுகளில் கேரளத்தில் வெளியிடப்பட்ட நாடகங்கள், கதாபிரசங்கங்கள் உதாரணம். இவற்றின் மொழிகூட மேட்டிமை இயல்புடையதாகத்தான் இருந்தது. மொழிநடை, உள்ளடக்கம் இவற்றில் வித்தியாசப் பட்டிருந்த இ.கெ. அயமு, கெ.டி. முகமது இவர்களின் நாடகங்கள் கூடக் கற்பனாவாதத்துள் நழுவிவிழுவது காணலாம். மலபார் புரட்சி இயக்கத்தின் போக்கினை யதார்த்தமாகச் சித்திரிக்க முயன்ற செறுகாடின் படைப்புக்கள்தான் சற்றேனும் இப்பொதுப் போக்கி னின்றும் விலகியிருந்தவை. அவரது தன்வரலாறாகிய ‘ஜீவிதப்பாத’ இப்படைப்புமுறையின் உச்சமாகக் கருதப்படக் காரணமும் வேறல்ல.

இலக்கியவாதியின் சமூகப்பொறுப்பு, போராட்ட ஆர்வத்தால் மட்டும் புதிய படைப்புவடிவங்களும்,அவர் பொறுப்புணர்வுடன் அக்கறை காட்டுகிற வர்க்கங்களின் பண்பாட்டுச் சூழலைச் சித்திரிக்க முடியாது என்பதன் சான்றுகள் இவை. எவருடைய போராட்டம் சித்தரிக்கப்பட வேண்டுமோ அவர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத் திற்குப் பொதுவெளிகளில் இடம்தேடுவதற்கான முயற்சியாகப் பிரசாரம் மாறும்போது மட்டுமே பலன் தருவதாகின்றது. இப் போராட்டத்தின் போதாமையே மலையாளத்தில் சோஷலிச எதார்த்தவாதம் வீழ்ச்சியடைவதற்கான காரணம்.இதனால்தான் அதிகார நிலைப்பாடுகளில் கருத்துவேறுபட்ட கற்பனாவாத ரியலிஸ் டுகளையும் கூடப் புரட்சி இயக்கங்கள் தம்முள் இணைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தப்பின்னணியில்தான் வள்ளத்தோள், சங்ஙம்புழா முதல் பலபேர்களை ஒவ்வொரு காலகட்டத்தில் புரட்சி இயக்கங்கள் உள்ளிணைத்துக் கொண்டன.

இதனால் புதுச்சூழல்வளர்ச்சி பெற்றது. முதலாளிய-காலனிய மறுப்பு பண்பாட்டுப் போராட்டத்திற்குப் பதிலாக நிலவிவந்த பண்பாட்டு வெளியைப் புரட்சியின் பக்கம் திருப்புவதற்கான போராட்டமே கேரளத்தில் நடந்தது. பண்பாட்டு வெளியில் புழங்கு கின்ற அடையாளங்கள்,குறியீடுகளுக்கு ஏற்ப பண்பாட்டியக்கப் பணியாளர்கள் எடுக்கின்ற அரசியல் நிலைபாடுகளுக்கேற்ப இந்த ஏற்றத்தாழ்வு நடைபெற்றது. இதன் காரணமாகக் கேரளப் பண் பாட்டுச் சூழலுக்கு இருவேறு இயல்புகள் ஏற்பட்டன. காலனிய நவீனத்துவத்தின் பலனாக ஏற்பட்ட பண்பாட்டுவெளிப்பாடுகள் மலையாளி ஆளுமையின் முக்கியக் கூறாகக் கருதப்பட்டது. கலாமண்டலம், முப்பெரும்கவிகள், நாவல், சிறுகதை இவையெல் லாம் ஆளுமை உருவாக்கத்தில் இன்றியமையாதனவாயின. அது போலவே செறுசேரி, எழுத்தச்சன், குஞ்ஞன்நம்பியார். முதன்மை நீரோட்டப்படைப்புக்களில் இடம்பெற்றதால்தான் கேரளத்தின் வாய்மொழிப் பண்பாடும் வெகுசன உணர்ச்சிகளும் ஆளுமையின் பாகமாக ஆகின. பண்பாட்டுவெளியில் நடந்த போரட்டங்களின் லட்சியம் அவற்றிற்கு வலிமை சேர்ப்பதாக இருக்கவில்லை. ஆகவே, முற்போக்குவாதிகளின் படைப்புகளும் கற்பனாவாத ரியலிச இயல்பையே முதன்மையாகக் கொண்டிருந்தது.

கற்பனாவாத ரியலிசத்தின் வளர்ச்சி ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டுவடிவங்களை இருட்டடிப்பு செய்தது. இடசேரி போன்ற சிலரது படைப்புகள் தவிர பொதுசமூகத்தில் நடுத்தர வர்க்க பண்பாட்டு வடிவங்களே ஆதிக்கம் செலுத்தின. நடுத்தர மக்களின் சிக்கல்கள் சமூகத்தின் போராட்டங்களைச் சித்திரிக்கவும் ஒருங் கிணைப்பதற்குமான கருவியாகச் செயல்பட்டது. ஒடுக்கப்பட்டோர் சித்திரிப்பு முன்னர் நடுத்தட்டுவர்க்க கதைசொல்லியின் பார்வையில் விரிந்தது எனில் இப்போது படைப்பில் நடுத்தரவர்க்க முதன்மைக் கதாபாத்திரப் பார்வையின் வாயிலாக முன்வைக்கப்பட்டது. நடுத்தரவர்க்க முதன்மைக் கதாபாத்திரம் ஒடுக்கப்பட்டோர் தனித்துவங்களைப் பொதுநிலைப்படுத்தி சமூகத்துடன் இணைக்கும் கூறாகச் செயல் புரிந்தது.

ஒடுக்கப்பட்டோர் தனித்துவத்தின் இருட்டடிப்பு மற்றொரு போக்கிற்கும் வழியமைத்தது. இருபது, முப்பதுகளில் வளர்ந்துவந்த ஆண்பெண் உறவுகள் குறித்த கருத்தமைவுகளில் மீண்டும் மாறுதல் ஏற்பட்டது. மருமக்கத்தாயத்திலிருந்து மக்கட்தாயத்திற்கான மாற்றம் மக்கட்தாய, ஆண்மேலாதிக்க பண்பாட்டு ஆதிக்கத்திற்கு வழிவகுத் தது. பொது சமூகத்தில் பெண்களின் ‘தனது’ இடங்கள் ஒழிந்தன. இதன் பாதிப்பு இலக்கிய ஆக்கத்திலும் தோன்றியது. பெண்சார் படைப்புகள் உருவாகவில்லை என்பதல்ல மையநீரோட்டப் படைப்பு வடிவங்கள் ஆண்மேலாதிக்கச் சூழலில் பெண்ணின் பணிதலைத் தீவிரப்படுத்தின. ‘சங்ஙம்புழா கவிதைகள்’, ‘தகழி’யின் ‘செம்மீன்’, ‘கேசவதேவ்’வின் ‘ஒரு சுந்தரியுடெ ஆத்மகதா’, ‘உறூப்’பின் ‘உம்மாச்சு’, இவற்றில் தொடங்கி ராஜலக்ஷ்மி, எம்.டி.கெ.சுரேந்திரன் இவர்களின் படைப்புகள் வழி வளர்ந்த சித்திரிப்புகள் பெண்ணின் வீட்டுச் சூழலையும் பாலியலையும் லட்சியப்படுத்திக் காட்டின. பொது சமூகத்தில்பெண் கருத்தியலை முன்னிறுத்தும் படைப்புகள் உருவாகவேயில்லை என்பதுடன் மாதவிக்குட்டியின் படைப்புகள் இச்சூழலுடன் எதிர்வினையாற்றி யதையும் குறிப்பிட வேண்டும். ஆண் பெண் உறவுகளில் இச்சைக் குக் காதல், அற வேடங்களை, மண உறவுக்கு சமூக உடன்படிக்கை வடிவை அளித்த காலனியநவீனத்துவத்தின் கற்பிதங்கள் இலக்கியங் களிலும் இடம்பெற்றன. மக்கட்தாய அமைப்பு தனிக்குடும்பமாக மாறிவந்த நடுத்தர வர்க்கச் சித்திரிப்பே இங்கும் முதன்மைபெற்றது.

ஐம்பது, அறுபதுகளில்வளர்ந்துவந்த மலையாள இலக்கியம் தனக்குரிய உருவமும் உணர்ச்சியும் பெறவில்லை என்று கூற வில்லை. மொழி, சொற்களஞ்சியம், அழகியல்,சமூக அடையாளங் களில் வளர்ந்துவந்த கேரள நடுத்தரவர்க்கத்தின் அனுபவங்களும் விருப்பங்களும் எதிர்ப்பார்ப்புக்களும் பதிவாயின. காலனிய நவீனத்துவத்தின் மொழியான ‘மேட்டிமை’ மொழி, நடுத்தர வர்க்கத்தின் சொல்வழக்காறானது இக்காலத்தில்தான். உருக்குலை கின்ற கிராமங்கள், நகரமயமாக்கம், அரசியல் உறவுகள், சமூக முரண்கள், பாலியல்முதலியவை குறித்த எண்ணங்கள் முழுக்க முழுக்க மக்கட்தாய-முதலாளிய பார்வையுடைய நடுத்தரவர்க்கத் தால் முன்வைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டோர், சுரண்டலுக்காளா னோர், பெண்கள் இவர்களுக்குரிய இடங்கள்கூட நடுத்தரவர்க்கத் தின் அழகியல்/கருத்து அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டது. இதன்பலனாகக் காலனிய நவீனத்துவத்திலிருந்து வேறுபட்ட மலையாளி அழகியல் வளர்ச்சிபெறவில்லை. காலனிய மறுப்புப் போராட்டங்களில் முன்வரிசையில் நின்ற கேரளத்தால் காலனிய விடுதலைக் குரலை ஓங்கி ஒலிக்க இயலவில்லை.

ஷீ ஷீ ஷீ

எழுபதுகளின் ஆரம்பத்தில்இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அறுபதுகளில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் நடுத்தரவர்க்க அழகிய லுள் சிறைபட்டுக் கிடந்த மலையாள இலக்கியப் படைப்பாளிகளின் மனதை உலுக்கி புதிய மாற்றங்களுக்கானஅடித்தளமியற்றியது. இந்திய, உலக அளவில் நிகழ்ந்த பற்பல போர்கள், பொருளாதாரச் சிக்கல்கள், இந்தியத் தேசீய அரசியல் விரிசல்கள்,வட்டாரத்தன்மை, வர்க்கத்தன்மையின் தோற்றம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது காங்கிரஸில் குருஷ்சேவின் வெளியிடல்கள், தொடர்ந்து உருவான உலகளாவிய உரையாடல்கள், இதன் தொடர்ச்சியாகவும் உட்பூசல்களாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு முதலியவை மலையாளப் பண்பாட்டுச் சூழலில் பாதிப்பை உருவாக்கியது. 1957இல் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைப்பை ஒட்டி கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்காமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணித் தந்திரங் களும் புதுயுகத்திற்குத் தொடக்கமிட்டது. கூட்டணித் தந்திரத்தின் பகுதியாகச் சாதி மதக்கட்சி/ குழுக்கள் கம்யூனிஸ எதிர்ப்புக் கூட்டணி யில் இடம்பெற்றன.இந்தியா சீனப் போரின் பின்னுண்டான அரசியல் மறு/எதிர் தரப்பு அடையாளம் கம்யூனிஸ்டுகளின் தனிமைப்படுத்த லுக்கு வலுச்சேர்த்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உருவாகி வந்த உட்பூசல்களும் உலகச்சூழலும் ஒரு பிளவை அவசியப்படுத்தியது. இப் பிளவு புரட்சி இயக்க ஆற்றலை அழிவுக்குச் செலுத்தியது. ‘சீனப் பாதை’யைத் தேர்வு செய்த ஒரு பிரிவு வெளியேறிச் சென்றது இதற்கு வலியூட்டியது. அழிவு பெற்ற புரட்சி இயக்கங்கள் சில தமது அரசியல் வாழ்வைத் தேடிய முயற்சியில் ஐக்கிய முன்னணி அரசியலில் இடம்பிடித்தன. அறுபதுகளின்பொருளாதாரச் சிக்கல் பின்னணியில் இத் தந்திரம் வெற்றி பெற்றது. அரசியல் போராட்டங்கள் கூட்டணி அடிப்படையிலான பலப்பரீட்சையாகிவிட்ட சூழலில் புரட்சி இயக்கங்களால் தமது அரசியல் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாமல் போனது. பெற்றெடுத்த அரசியல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கூட்டணியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது சாதிமத கட்சி/குழுக்கள், தனிநபர் கட்சி/குழுக்கள் போன்ற வற்புறுத்தல் குழுக்களின் பங்களிப்புக்குப் பெரிய இடத்தையும் வலிமையையும் சேர்ந்தளித்தது.

புரட்சி இயக்கங்கள் தமதாகிய அரசியல் திட்டத்தின் அடிப்படை யில் செயல்பட இயலாமல் போனதும் அவர்களிடையே ஏற்பட்ட தொய்வும் புரட்சி இயக்கங்களிடம் நபரளவில் உடன்பட்டு ஒத்துழைப்புச் செய்து வந்த பண்பாட்டுப்பணியாளர்களிடையே அதிருப்தியும் கருத்துவேற்றுமையும் உருவாக்கியது. குருஷ்சேவின் வெளியிடலின்பின் அடிப்படையான சோஷலிசத் தந்திரங்கள் பற்றி எழுந்த வினாக்களும் இவர்களைப் பாதித்தது. சோவியத் சோஷலிசக் கொள்கைகள் மீது எழுந்த விமர்சனங்கள் பல பண்பாட்டுப் பணியாளர்களைச் சீனப்பாதைக்குத் திசைதிருப்பியது. மாவோவின் பண்பாட்டுப் புரட்சி கோஷங்கள் சோவியத் அரசியல் ஏகாதிபத்தியத் திற்கான மாற்றுமருந்தாக அனேகர் கண்டனர். கேரளத்தில் கூட்டணித் தந்திரம் உருவாக்கிய அரசியல்செயல்திட்டங்களுக்கு மாற்றாகவும் சீனப்பாதை பரிந்துரைக்கப்பட்டது. அறுபதுகளின் இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியர்களால் உருவாக்க முடிந்ததை விடவும் அதிகஅளவிலான பாதிப்பை மாவோயிய-புது இடதுசாரிப் பாதையை அங்கீகரித்த பண்பாட்டாளர் களால் படைக்க இயன்றது.

மாவோயிய-புதுஇடதுசாரிகளின் வேகமும் அதிகநாள் நீடிக்க வில்லை. மாவோயிய பாதையின் அரசியல் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் கடுமையாக அடக்கப்பட்டது. அடக்குமுறைகளைக் தாண்டி முன்னடப்பதற்கான வலிமையும் அரசியல் தந்திரங்களும் இல்லாத காரணத்தால் மாவோயியர்கள் வீழ்ச்சியடைந்தனர். சீனப் பண்பாட்டுப் புரட்சிக்கு நேர்ந்த வீழ்ச்சியும் நடைமுறைப்பாதைக்கு சீனா திரும்பிச் சென்றதும் இறுதி நம்பிக்கையையும் அணைத்தது. பற்பல குழுக்களாகச் சிதறிக்கிடந்த மாவோயியர் மீண்டும் பண்பாட்டுச் செயற்திட்டங்களின் ஊடாக ஒருங்கிணைந்தனர். புது மார்க்சியம் வளர்த்தெடுக்க முயன்ற சமூக முரண்கள் குறித்த கருத்தியல்களை அவர்கள் பேசினர். பாலினசமத்துவம், ஒடுக்கப் பட்ட சாதியினர், பழங்குடிகள் போன்ற பல புதிய இடங்களை ஆதாரமாகக் கொண்டு செயல்வடிவங்களைத் தீட்ட முயன்றனர். எனினும் உறுதியற்ற அரசியல் செயல்பாடின்மை காரணமாக அவற்றால் அரசியல் உறவுகளைப் புரட்டி உருவாக்கும் போராட்ட வடிவமாக மாற இயலவில்லை.

மாவோயியப் பாதையின்தோல்விக்கான அரசியல் காரணங்களை அலசுவதல்ல. மாறாக, பண்பாட்டுச் சூழலில் இவ்வரசியல் செயல் முறைக்குமான உறவை இங்குக் குறிப்பிடவேண்டும். சிலவட்டாரங் களில் ஏற்பட்ட செல்வாக்கைத் தவிர மாவோயியர்களால் ஒடுக்கப் பட்டோரிடையே குறைந்த செல்வாக்கையே பெற இயன்றது. புரட்சி இயக்கங்களிடம் உடன்பட்டு அவர்களின் அரசியல் செயல்பாடு களை விமர்சனபூர்வமாக அணுகிய நடுத்தர மக்களிடையே அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். நடுத்தர வர்க்க அழகியலின் அடிப் படையில் சமூகமுரண்களைக் கண்ட இவர்கள் முரண்களுக்குக் கற்பனையான பரிகாரங்களைச் சிபாரிசு செய்தனர். இந்தக் கற்பனைதான் உலகளாவிய புரட்சிப் போராட்டங்களை உள்வாங்கிக் கொள்ள இவர்களுக்கு உதவி செய்தது. புரட்சிப் போராட்டங்கள் நிலவிவருகின்ற சமூக முரண்களின் அடிப்படையில் திட்டவட்ட மான அரசியல் செயல்பாடுகளின் வழியே நடத்தபெற வேண்டும். அதற்கு அயல்நாடு மாதிரிகளின் இயந்திரத்தனமான செயல்படுத் தலும் யதார்த்தத்தின் மீதான நேர்மையும் உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறையும் உதவாது. ஆனால் கற்பனாவாதத்தில் வேர்விட்ட நடுத்தரவர்க்கப் பண்பாட்டில் வளர்ந்துவந்தவர்களின் செயல்பாடு களும் வித்தியாசமானதாக அமையவில்லை. இவர்களால் கடுமை யாக விமர்சிக்கப்பட்ட முற்போக்கு இயக்கங்களுக்கு முப்பது, நாற்பதுகளில் முதலாளிய-காலனிய எதிர்ப்புப் போராட்டங்களின் மன்னராட்சி எதிர்ப்புப் போராட்டங்களின் அனுபவமாவது இருந்தது. ஆனால் மாவோயியர்களுக்கு அதுகூட உரிமை கோருவதற்கில்லை.

பண்பாட்டுத் துறையில் மாவோயிய, முற்போக்குஇயக்கங்களின் ஈடுபாடுகள் புதிய பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது. வியட்நாம் போர், கியூபா, லத்தீன் -அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் புரட்சிப் போராட்ட நிகழ்வுகள், மக்கள் சீனத்தின் அனுபவங்கள் என்பவை விடுதலைக்குப் பிற்பட்ட கேரளப் புதிய தலைமுறையிடம் ஆழ்ந்த செல்வாக்கைப் பெற்றது. இப் புதிய போராட்டத்தின் பகுதியாக எழுந்த இலக்கிய, பண்பாட்டு வடிவங்களை முற்போக்கு இலக்கிய வாதிகள் மலையாளிக்கு அறிமுகம் செய்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் படைப்பிலக்கிய வெளியீட்டு வடிவங்களில் நிகழ்ந்த மாறுதலின் பின் நிகழ்ந்த மிகத் தீவிரமான மாற்றமாக அமைந்தது அது. நெரூதா, பிரக்கெட், சார்த்தர், லோர்க்கா முதல் மார்க்கோஸ் வரை இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலும் அதன் பின்னும் எழுதிவந்த இலக்கியவாதிகளின் பாதிப்பு மலையாளியின் படைப்பு, உள்ளடக்க வடிவங்கள் பற்றிய மறுசிந்தனைக்குத் தூண்டியது. காலனிய நவீனத்துவம் படைத்த வடிவங்கள் வெளிப் படையான மாற்றங்களுக்கு வழிக் கண்டது. கவிதையிலும் நாடகத் திலும் ஏற்பட்ட இம்மாற்றம் நாவல், சிறுகதை போன்ற வடிவங் களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ந்த புதிய இலக்கிய அழகியலுக்கு இப்புதிய வடிவங்களே அடித்தளமிட்டது.

இப்புது வடிவங்கள் உருவாக்கிய மாற்றங்கள் பற்றி முழுமை யான விவாதங்கள் இன்னும் நடைபெறவில்லை. ஒன்றுக்கொன்று பொருத்தமானதெனத் தோன்றலாமெனினும் முழுமையாக வேறுபட்ட இரு தளங்களை இவ்வடிவங்களில் காணலாம். ஒன்று, அறுபதுகளின் சிக்கல்களின் மீது மனவெறுப்பும் மறுப்பும் கொண்ட நடுத்தரவர்க்கத்தின் வெளிப்பாடு.புரட்சி இயக்கங்கள் கேரளத்தில் வளர்ச்சிப் பெற்றபோது அவற்றுடன் பொருந்த இயலாதோரும் குருஷ்சேவின் வெளியிடல்கள் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் நேர்ந்த பிளவின் பின் வலிமைபெற்ற எதிர்-கம்யூனிஸ்டுகளான நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் இப்போக்கின் பின்னணியில் செயல்பட்டனர். போருக்குப்பின் உலகநாடுகளில் வளர்ந்துவந்த இருத்தலியல் சிந்தனைகள் இக்காலத்தில் கேரள நடுத்தர வர்க்க இலக்கியவாதிகளிடம் மிகுந்த பாதிப்புச் செலுத்தியது. அதுவரைத் தமது இருப்பைப் பாதித்துவந்த தேசீயம், புரட்சி இயக்கம், கற்பனைப் படிமங்கள் இடிந்துவிழ, அது வரலாறு, சமூகத்தின் அசைவுகளுக்கு அப்பாற்பட்டதல்ல எனப் புரிந்துகொள்ளும்போது நடுத்தர வர்க்கம் தனிநபருக்குள் ஒடுங்கிக் கொள்கிறது. தனிநபர் பற்றிய தேடல் நடுத்தர வர்க்கத்தின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது. ஊர்ப்புற வாழ்வினின்றும் பெயர்ந்து நகரவாசியாகிவிட்ட இலக்கியவாதிக்கு ஊர்ப்புறவாழ்வு இழப்பின் ஏக்கமாகின்றது. இந்த ஏக்கத்தின் ஊடாக அவன் மன்னராட்சியை, தேசிய இயக்கத்தை,கம்யூனிசத்தைக் காணத்தொடங்குகிறான். இவ்வழிகள் அனைத்தும் அவனது கடந்தகால ஊர்ப்புறத்திலும் அரசியல் அடிமனத்திலும் உண்டு. அவற்றையெல்லாம் அவன் நிராகரிக்கின்றான். எப்போதும் அவன் ஊரோடு ஒன்றிவிட முயன்று இறுதியில் தப்பித்துக் கொள்கிறான்.

தனது இறந்தகால- நிகழ்காலத்தோடும்இப்புதிய மனோபாவப் பதிவுகளை மிகச்சரியாக அயலிடவாழ்க்கை வாழ்ந்த இலக்கியவாதி களான ஓ.வி. விஜயன், எம். முகுந்தனின் படைப்புகள் பதிவு செய்வ துண்டு.ஓ.வி. விஜயனிடம் ஒருவேளை தானே மறக்க முயல்கிற இடதுசாரிக் கடந்தகாலமுண்டு.முகுந்தனிடம் ‘மய்யழி’யின் தேசீயப் போராட்டத்தை நினைவுகூர்கிற ஒரு சிறார்ப்பருவமுண்டு. நடுத்தர வர்க்க அறிவுஜீவி பாதுகாத்து வருகின்ற கற்பனைப் படிமங்கள் தகரும்வேளை தொன்மங்கள், படிமங்களுக்கு அப்பாலுள்ள ஊரையும் ஊர்ப்புற வாழ்வையும் தேட அவன் உந்தப்படுகிறான். இத்தேடல் இறந்த- நிகழ்-எதிர்காலம் பற்றிய கற்பனாவாத கற்பனை களை அடைவதில்லை. அக் கற்பனைகள் என்னவென்றுகூட அறியாமல் வாழ்கிற, சமகாலச் சிக்கல்களை அவர்கள் அறிந்த வழியில் எதிர்கொள்கிற மக்களிடம்தான் சென்றடைகிறது. தனது அறிவுத்தளத்தில் இருந்து இம்மனிதர்களைச் சிறுதொலைவில் நின்று காண மட்டுமே ஒரு நடுத்தரவர்க்க அறிவுஜீவியால் இயலும். ஆனால் அவனது அடிமனதுள் அவர்களுண்டு. அவர்கள் அவனது பிரக்ஞையின் அடையாளக் குறிகள். அவனது இச்சைகளின் நிறைவேற்றம். அதற்குப்பின் அவன் இழப்பின் ஏக்கத்திலிருந்து யதார்த்தத்திற்கு, ஊரிலிருந்து நகரத்திற்குத் திரும்பி விடுகிறான்.

அறுபதுகள் வரைசெல்வாக்குச் செலுத்திய கற்பனாவாத யதார்த் தத்தின் முகவேடங்களைக் கிழித்தெறிய இயன்றதே இவர்களின் வெற்றி. சமூக முரண்கள் பற்றிக் கருத்தாக்கம் செய்யப் பெற்ற இருமைகளில் இருந்து இவர்கள் விலகினர். சமூக உறவுகளின் சிக்கல்,ஆண்,பெண், வீட்டுச்சூழல்,பொதுஇடம்,சாதி, மதம், வர்க்கம், பாலியல் போன்றவேற்றுமைப்பட்ட குரல்கள் இனம்காண முயன்றனர். இக்குரல்கள் மையக் கதாபாத்திரத்தின் அனுபவத் தளமாகவெளிப்பட்டது. இந்நிலையில் யதார்த்தம் நபர்சார்ந்தது.

கவிதையிலும் புதுஅழகியலின் செல்வாக்குப் பதிவானது. கற்பனாவாத அழகியலின் யாப்பு அணிக் கட்டுப்பாடுகள் சார்ந்த செயற்கை உற்பத்திகள் மறைந்தன. நாட்டார் மெட்டுக்கள் முதல் யாப்புக்கட்டுப்பாடற்ற வெளியீட்டுவடிவங்கள் வரை சோதனை செய்யப்பட்டது. யதார்த்தத்திடம் நேர்மையாக உறவுகொள்ளும் எதிர்வினைகள் கவிதையிலேயே மிகுதியும் வெளிப்பட்டது. இறந்த எதிர் நிகழ்காலங்களிடையேயான எடுத்துரைப்பின் தேவையில்லா மல் போனதால் கவிதை வடிவிலான எதிர்வினைகள் மிகையான வேகத்தையும் ஆற்றலையும் அடைந்தன. வெறுப்பு, இச்சை, எதிர்ப்பு யாவும் வெளியிடுவதற்கான ஊடகமாயிற்று கவிதை. நவீன கவிதை வரலாற்றில் முதன்முதலாக வாய்மொழியின் சொற்காட்சிகளின் வாய்ப்புக்களை இவ்வேளையில் கவிஞர்கள் ஆராய்ந்தனர். நாடகங் களும் கற்பனாவாதத்தில் ஊன்றிநின்ற மெலோடிராமாக்களைக் கடந்து மேடையின் எல்லைக்கு வெளியேயுள்ள வெளியீட்டு வடிவங்களைச் சோதனை செய்தன.

இப் பின்னணியில்தான் நாம் புது அழகியலின் இரண்டாம் தளத்தைப் பார்வையிடுகிறோம். மேற்குறிப்பிட்ட இலக்கியவாதி களின் சுயம்சார்ந்த தேடல்களுக்கு மாறாக இலக்கியப் பண்பாட்டு வடிவங்களின் சமூக, அரசியல் தளங்களை உயர்த்திக் காட்டும் முயற்சியாக அமைந்தது அது. உலகளவிலான புரட்சி இயக்க படைப்புகள் மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்யப்பெற்றன. மாயகோவ்ஸ்கி, பிரெக்கட், நெரூதா, லோர்க்கா, சார்த்தர், கப்ரால், ஸென்கோர் முதலிய பெயர்கள் பெரிதும் அறியப்படலாயிற்று. அவர்களிடமிருந்து ஆவேசத்தைப்பெற்று இந்தியச் சூழலோடு எதிர்வினையாற்றிய கவிதைகளும் வெளியீடுகளும் தோன்றின. கவிதை,நாடகம் தவிர திரைப்படம், ஓவியம்,சிற்பம் முதலிய அனைத்துத்துறைகளையும் இரசிக்கின்ற பண்பாடுவளர்ந்தது. பலநாடக குழுக்களும் திரையிடல் அமைப்புகளும் தோன்றின. ஏராளமான சிறுபத்திரிகைகள் தோன்றி அதன்வழியாகக் கருத்துப் பரிமாற்றம் நடத்துகின்ற பண்பாட்டு ஆர்வலர்களின் அமைப்புகள் உருவாயின.

முற்போக்கு மையங்களே இம் மாற்றங்களுக்கு முன்னணியில் செயல்பட்டன. எனினும் மூன்று நெறி அடிப்படைகளை இக்கால பண்பாட்டு நடவடிக்கைகளில் காணலாம். ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிப் பணியாளர்கள் மற்றும் அதனுடன் சார்புடையோர்; இரண்டு, மாவோயிய சார்புடைய பண்பாட்டுப் பணியாளர்கள்; மூன்று, அலுவல்ரீதியான கம்யூனிஸ்ட் கட்சிகளைச் காத்திரமாக விமர்சித்து வந்த ராடிக்கல் ஹ¨மனிஸ பின்புலம் கொண்ட அறிவுஜீவிகள். இவர்கள் தேசாபிமானி ஸ்டடி சர்க்கிள்,ஜனகீய ஸாம்ஸ்காரிக வேதி என இரண்டு பண்பாட்டு அமைப்புகளைப் படைத்தனர். இதில் முதலாவது அமைப்பு கம்யூனிஸ்ட்தலைமையிலும் இரண்டாவது மாவோயியர் மற்றும் ராடிக்கள் ஹ¨மனிஸ அறிவுஜீவிகளின் தலைமையிலும் இயங்கியது. இன்றைய கேரளத்தில் நிலவி வருகின்ற பண்பாட்டுவெளியில் இவ்வமைப்புகளின் செல்வாக்கை மறுக்க முடியாது.

எழுபதுகளிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் ஏற்பட்ட இம்முன்னேற்றங்களால் மலையாளப்பண்பாட்டுருவாக்கத்தின் முக்கியச் சிக்கல்களுக்கு எவ்வளவுதூரம் விடைகாண முடிந்தது என்பதைச் சோதனை செய்ய வேண்டும். காலனிய நவீனத்துவத்தின், இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் வளர்ந்துவந்த சமூக இயக்கங்களின் பாதிப்பில்வளர்ந்த கற்பிதங்கள் எழுபது எண்பது களின் சிக்கலான யதார்த்தங்களை முன்னிறுத்த உதவாது என்பது உறுதிப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்டோர் பண்பாட்டு வடிவங்கள் குறித்த தேடல், கேரளத் தனித்துவம் பற்றிய விவாதங்கள், வெகுசன காணொலி வடிவங்களை மறுவடிவு செய்வதற்கான முயற்சி முதலிய புதிய நுட்பங்கள்தேடும் முயற்சிகள் நடந்தன. பண்பாடு என்பது கலையும் இலக்கியமும் மட்டுமல்ல அது ஒரு போராட்டமுகம் எனும் உணர்வும் உருவானது.

அறுபதுகள் வரை ஆதிக்கம் செலுத்தியிருந்த கற்பனாவாத ரியலிசத்திலிருந்து மிகையானமுன்னேற்றத்தை அடைய புதுஅழகிய லால்இயன்றது. நடுத்தரவர்க்க அறிவுஜீவிகளால் அப்பணி முன்னெடுக்கப்பட்டது. அதற்கான பண்பாட்டு அரசியல் சூழலை உருவாக்குவதில் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பங்களித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியோடு நேரடித் தொடர்புடையோர் தவிரச் சமூகப் போராட்டங் களில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை குறைவு. மாவோயிய-ராடிக்கல் அறிவுஜீவிகளின் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்குக் கிடைத்த வரவேற்பு அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு கிடைக்காமல் போனது, புதிய பண்பாட்டுச் செயல்பாடுகளின் பலனைக் குறைத்தது. அதிகார அமைப்புகள், மைய நீரோட்ட அரசியல் இவற்றிடம் நடுத்தர வர்க்கத்தின் எதிர்வினை என்ற நிலையில் முன்னகர இயலாததும் ஆதிக்க அமைப்புகளின் இயல்பு குறித்து நிலவிவந்த கருத்துமயக்கங்களும் புதிய பண்பாட்டு இடங்களின் இயல்பைத் தீர்மானிப்பதில் தடைகள் ஏற்படுத்தியது. எண்பதுகளில் உலகஅளவில் முதலாளியத்தில் ஏற்பட்ட அமைப்புசார் மாற்றங்களும் தேசிய அரசியலிலும் பொருளாதார அமைப்பிலும் எற்பட்ட புதிய போராட்டவடிவங்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட பிழைகளும் பண்பாட்டுச் சூழலை உருவாக்கத் தில் சில போதாமைகளை வகுத்தது.

நடுத்தரவர்க்க அழகியலின்உரிமையாளர்களான ஆண்,பெண் இலக்கியவாதிகளே பண்பாட்டுத் துறைக்குத் தலைமை தாங்கினர். வெகுசனத்தளம் சார்ந்த ஒரு புதிய அழகியல் குறித்த கருத்து வேற்றுமை அவர்களிடையே நிலவியது. பலவேளைகளிலும் அவர்களது வாய்மொழியும் வரைவுமொழியும் சுயம்சார்ந்த சிலைதகர்ப்பு ஆவலை மீறி அப்பால் செல்லவில்லை. தீவிரமான வெளியீட்டு வடிவங்கள் உருவாகவில்லை என்பதல்ல . ஆனால் புழக்கத்திலிருந்த அழகியலுக்கு எதிராக வெகுசன வாய்மொழி, அனுபவங்களைப் பயன்படுத்திப் புதிய சொற்சித்திரங்கள் தீட்டுவதில் அவர்கள் வெற்றிபெறவில்லை. ‘பேபி’யின் ‘நாட்டு கத்திக’ போன்ற சொற்பமான வேற்றுமைக் குரல்களை மட்டுமே கேட்க முடிந்தது. புதிய நுட்பங்கள் நோக்கிய தேடல் பெரும்பாலும் பழமைக்கான திரும்புதலாகவும் சிதிலமடைந்த பண்பாட்டுச்சூழ லில் இழப்பின் ஏக்கத்தை நியாயப்படுத்தலாகவும் மாறுவதைக் காணலாம். காவாலத்தின் படைப்புக்களும் ‘கேரளத்துவம்’ குறித்த விவாதங்கள் உதாரணம். இதே காலகட்டத்தில் வழக்கத்திற்கு வந்துகொண்டிருந்த வட்டாரத்தன்மை, சாதீயத்திற்குக் கருத்தியல் ஆதரவையும் இவை அளித்தன.

இம் மாற்றத்தின் முக்கிய காரணம் புதிய ஒரு பண்பாட்டியக்கத் திற்கு உருவமும்உணர்ச்சியும் ஊட்டுகின்ற காரண ஆற்றலின் இன்மையே. இருபதாம் நூற்றாண்டின் முன்பாதியில் காலனிய நவீனத்துவ அழகியலில் சமூக சீர்திருத்தம்,தேசீயம், புரட்சி இயக்கங்கள் எனும் கூறுகள் புதிய இடங்களைக் கண்டடைந்தன. ஒடுக்கப்பட்டோருக்காகவும் காலனிய அதிகார மையங்களுக்கும் எதிரான சங்கேதங்களை அன்றைய அழகியலில் கொணர இவ்வியக் கங்களால் இயன்றது. எழுபது எண்பதுகளில் வளர்ந்த அழகியலின் பின்னணியில் உலக அளவில் நடந்த புரட்சிப்போராட்டங்களின் கருத்துருவங்களும் நெருக்கடி நிலை போன்ற ஆட்சியதிகார அமைப்பின் ஒடுக்குதல் வடிவ அனுபவங்களும் இடம்பெற்றன. கேரள உற்பத்தி வர்க்கம் இவ்வனுபவங்களை உட்கொண்டு அதன் அடிப்படையில் புதிய சங்கேதங்களைப் படைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்களே முப்பதுகள் முதல் வளர்ந்துவந்த பிரச்சார இலக்கியத்தையும் கற்பனாவாத யதார்த்தத்தையும் உட்கொண்டு மக்களிடையே பயன்தரும் கருத்துப்பரிமாற்றத்தை கொணர்ந்தனர். ஆனால், புதுஅழகியலை உட்கொள்ள அவர்களால் இயலவில்லை. புதுஅழகியலின் மொழிநடை, கருத்துப் பரிமாற்றமுறை, கருத்துக் களின் பொருட் திரட்சி, மதிப்பீடுகள் போன்ற அனேக கூறுகள், நிறைவான கருத்துப் பரிமாற்றத்திற்குத் தடையானது. கேரளப் புரட்சி இயக்கத்தில் ஏற்பட்ட விரிசல்களும் ஒவ்வொரு பிரிவும் கொண்டிருந்த தீவிரப் பிரிவினைவாத அணுகுமுறையும், கருத்துப் பரிமாற்றத்தில் போதாமையை வளர்த்தது. பண்பாட்டுப் பணி களுக்குத் தலைமை தாங்கிய நடுத்தரவர்க்க ராடிக்கல் அறிவுஜீவிகள் அடித்தள மக்களிடம் கலந்துரையாடும் திறன் பெற்றிருக்கவில்லை. இயக்கத்தில் பங்குபெற்ற குழுக்கள் தமது அரசியலைப் பரப்பு வதற்கான பிரச்சாரக் கருவியாக அதைப் பயன்படுத்தியதும் முக்கியக் குறைபாடானது.

ஆற்றலின் இன்மைக்குக் காரணமாக எண்பதுகளில் மலையாளப் பண்பாட்டுச்சூழலைப்பாதித்த இரு முக்கிய நகர்வுகளைக் குறிப்பிட்டாக வேண்டும். கேரளத்தில் வேலையற்ற இளைஞர் பெருந்திரளாக வளைகுடா நாடுகளுக்குப் பெருக்கெடுத்தனர். அவர் மலையாளிக்கு அந்நியமான பண்பாட்டு வடிவங்களுடன் திரும்பி வந்தனர். இவர்களும் பிற ‘அயலக’மலையாளிகளும் நேரடியாக உலகமயமாதல் பண்பாட்டுடன் இணைந்து விட்டிருந்தனர். காணொலி ஊடகங்கள் முதலிய பண்பாட்டு உற்பத்தி வடிவங்கள் அதிவேகமாகப் பரவிவந்தன. கவியரங்கங்கள், சொற் காட்சிகளின் இடத்தை ஆடியோ வீடியோ காசெட் கம்பனிகள் கீழடக்கிக் கொண்டன. கவியரங்க கவிஞர்கள் காசெட் கவிஞர்களாயினர். கவிதைகள் மட்டுமல்ல, நாடகம்,சொற்பொழிவு எனப் பிற சொல்லல்வடிவங்களும் காசெட்டுகளாயின. தொலைக்காட்சியின் பரவலும் கேபிள் இணைப்புகளின் வருகையும் மற்றொரு தளத்தை யும் படைத்தது. பண்பாட்டுப் பொதுக்கூட்டங்களின் இடத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிடித்துக் கொண்டன. சினிமா, தொடர்கள், விவாதங்கள் போன்ற பொதுவிடத்தின் வெளியீட்டு வடிவங்களைத் தொலைக்காட்சி ஆக்கிரமித்துக் கொண்டது. ஆங்கிலக் கல்வியின் கட்டுப்பாடற்ற பரவலும் காணொலி ஊடகங்களின் வலிமையான பாதிப்பும் காரணமாக உலகமயமாதல் பண்பாட்டின் கலப்பு வடிவங்கள் வளர்ந்து வருகின்றன. இன்று அவை மொழியிலும், உணர்ச்சி வெளிப்பாடுகளிலும், ஊடகவடிவங் களிலும் இடம்பிடித்து வருகின்றன. காலனிய நவீனத்துவத்தின் விளைச்சலான மேட்டிமை மொழியின் இடத்தில் ஊடகங்கள் எழுத்து, காட்சியின் வாயிலாகப் பரப்புகின்ற கலப்புமொழி வளர்ந்து வருகின்றது. இக் கலப்புப் பண்பாட்டின் பகுதியாக ஒன்றிரண்டு பத்தாண்டுகள் முன்புவரை வெகுசனப் பண்பாட்டின் சொல்லும் காட்சியுமாக இருந்த வடிவங்கள் உலகமயமாதலின் பொருட்காட்சி சாலை வடிவங்களாகின்றன. மக்களின் பாடல்கள், கலைகள், வெளியீடுகள் அனைத்தும் இந்நிலைமைக்கு ஏற்ப மாறிவருகின்றன.

இரண்டாவது, மலையாளியின் பண்பாட்டுவெளியின் பல்வேறு கூறுகளை அடிப்படைவாத பிரிவினைச் சக்திகள் உள்ளதுக்கிக் கொண்டுவருகின்றன. வட்டாரக் கலைகள், வெளிப்பாடுகளை இப்போதே இந்துத்துவ சக்திகள் கையடக்கி வருகின்றன.அதன் எதிர்வினையாக இசுலாமியர்களும் கிறித்தவர்களும் அவரவர்களின் பண்பாட்டிடங்களைத் தக்கவைத்துக் கொள்ளத் தீவிரமாக முயன்று வருகின்றனர். சமூகச்சீர்திருத்தவாதிகளென அறியப்பட்டிருந்த பண்பாட்டுப் பணியாளர்கள் அந்தந்தச் சமய நடைமுறைகளின் பகுதியாக மாறிவிட்டனர். ஸ்ரீ நாராயணகுரு முதல் சகோதரன் அய்யப்பன் வரையும் அய்யங்காளி முதல் கெ.பி. கறுப்பன் வரையான ஆளுமைகளுக்கும் இந்தக் கதிக்கு ஆளாகின்றனர். அவர்கள் எழுப்பிய சிக்கல்களை எதிர்கொள்வதற்குப் பதிலாகச் சிதைந்து கொண்டிருக்கும் சமூகத்தில் தமது சாதிசமய அடையாளங்களை வளர்த்து நிலைநிறுத்துவதும் இப்போக்கின் முக்கிய லட்சியம். ஒடுக்கப்பட்டோரின் மொழி, அனுபவங்களில் இருந்து வளர்ந்து வந்த புதிய பண்பாட்டிடங்களின் வாய்ப்புக்கள் இன்று பாரம்பரியம், மீட்டுருவாக்கவாதத்தின் இடங்களாகப் பதிவாகி வருகின்றது. பல்வேறு சாதியினரின் தனித்துவம், நிலைபேற்றிற்கு அவை தனது வடிவங்களை நிலைநிறுத்த வேண்டியது அவசியம். அதனால் மலையாளி ஆளுமையின் பொதுவெளிக்கு வித்தியாசமான நீரோட் டங்கள் வருவதற்குப் பதிலாக அவை வெவ்வேறு தனியறைகளாகப் பரிணமித்துப் பொதுவெளியைச் சிதைத்து இவ்வறைகளில் ஒடுங்கிவிடுகின்றன.

இம்மாற்றம் இன்று பரவலாகக் காணமுடிகின்றது. மலையாளி ஆளுமையின் பகுதியான கானகங்கள்,பழங்குடிகள், விழாக்கள், வெகுசனக் கலைவடிவங்கள், வாத்தியகோஷங்கள், ஆலயங்கள் யாவும் இந்துத்துவத்தின் சின்னங்களாக மாறிவருகின்றன. இச் சின்னங்களைப்பயன்படுத்தி செய்யப்படுகின்ற தீவிரப் பிரச்சாரங்கள் மக்களின் சிந்தனையாற்றலைக்கூடத் தகர்த்து வருகின்றது. இதற் கெதிராக, மலையாளி ஆளுமையாக எழுப்பப்பட்ட வடிவங்களுக் கெதிராகப் பிறமதப்பிரிவுகளும் இயங்கி வருகின்றன. சந்தனக்குடம் திருவிழா, நில விளக்கு இதற்கெதிராக முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் நடத்திய பிரச்சாரம் ஒரு உதாரணம் மட்டுமே. மக்கத்தாய முதலாளி யப் பண்பாட்டின் பகுதியாக வளர்ச்சிபெற்ற குடும்பஅமைப்பே இதன் முதன்மை இருப்பிடம். பிறப்பு, சோறூண்,திருமணம், பிற சடங்குகள், குடும்ப தேவதைகள், நிகழ்த்துச் சடங்குகள் முதலியவற் றில் மக்கத்தாய முதலாளிய கால மலையாளி காட்டிவந்த நடைமுறை இயல்பும் பெண்களின் பணிவும் இன்று மதவாத சக்திகளுக்கு உகந்த இடங்களை உருவாக்கி வழங்குகின்றது. இழப்பின் ஏக்கம் மீட்டுரு வாக்கமாகவும் ஒடுக்கப்பட்டோர் பழமரபுகள், சமயவெளிப்பாடாக வும் நிகழ்த்துச் சடங்காகவும் மாறிவருவதுமலையாளியின் அனுபவங்களிலும் விருப்பங்களிலும் நுண்மையான சலனங்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறிதான்.

இந்நிலைமை எழுபதுகள்முதல் வளர்ந்துவந்த அழகியலின், பண்பாட்டியக்கங்களின் பலவீனத்தைத் திறந்து காட்டுகிறது. காலனிய நவீனத்துவத்தின் விளைவான நடுத்தர வர்க்க அழகியலைத் தகர்க்க புதுஅழகியலால் ஓரளவுவரை இயன்றது எனினும் காரண ஆற்றல், லட்சிய நிர்ணயம் இவற்றின் இன்மை அதனை நெருக்கடிக் குள் செலுத்தியது. புது அழகியலின் மொழி, வெளியீடுகளுக்கும் மிஷனரி-காலனியப் பண்பாட்டின் மொழியைவிட அதிகமான பரிமாற்றத்திறன் கைவரவில்லை. ஒடுக்கப்பட்டோரின் குரல்களில் இருந்து ஒரு புதிய தேசிய உணர்வுவெளி வளர்ச்சிபெறவில்லை. மக்கட்தாய-முதலாளிய கட்டத்தின் பகுதியாக மீண்டும் வலிமை பெற்ற குடும்ப அமைப்பு, பெண் பணிவு இவற்றிற்கான மாற்றுக் களைப் படைத்திட இயலவில்லை. நடைமுறையீன் கீழ் ஒதுங்க மட்டுமே முடிந்தது. பண்பாட்டுப் போராட்டம் குறித்து எழுந்துவந்த பிரக்ஞை அதற்கேற்ற புதிய பண்பாட்டு நடவடிக்கைகளுக்குக் கொண்டு சென்றது.

புதுஅழகியலின் தோல்விஅதற்கு முன்பு தோன்றிய யதார்த்தவாத இயக்கங்களின் தோல்வியைப் போலவே முக்கியமானது. இன்று புது அழகியலும் அதில் இடம்பெறுகின்ற இலக்கியவாதிகளும் கலைஞர் களும் மலையாளப் பண்பாட்டு வெளியின் வழிபாட்டுச் சிலைகளாகி விட்டனர். அவர்கள் ஊடகங்கள் கருத்துப் பரிமாற் றத்தை ஆளுகின்ற பண்பாட்டின் சிலைகள். அவர்களின் படிம அடையாளமாக்கம் அவர்களின் செயல்பாட்டுக்கே தடையாக இருக்கின்றது. இதன் பலனாகக் கவித்துவம் வற்றிப்போன கவிஞர்களுண்டு. எழுத முயலாத எழுத்தாளர்களுண்டு. ஊடகங்களில் மட்டும் வாழ்கின்ற பண்பாட்டுக் காவலர்களுண்டு. சிலர் தமது அரங்குகள் புறக்கணித்து அரசியல், சினிமாவில் காலூன்றியுள்ளனர். புதியபண்பாட்டு வெளியைப் படைப்பதற்குப் பதிலாகச் சந்தை ஆதிக்கம் அல்லது நடைமுறை வழக்கத்தின் இரைகளுமாகி விட்டனர் அவர்களில் பெரும்பான்மையும். பொதுவாகஇன்றைய சூழலில் நேர்மையுடன் எதிர்வினையாற்ற இயலாத பிரிவினராகி விட்டனர் அவர்கள்.

ஷீ ஷீ ஷீ

புது அழகியலின்தகர்ச்சி எல்லாவற்றையும் இருளில் ஆழ்த்துவ தொன்றுமல்ல. நமதுபண்பாடு எதிர்கொள்ளும் நெருக்கடியை அது காட்சிப்படுத்துகின்றது அவ்வளவுதான். காலனியநவீனத்துவத்தின் இயல்புகளைத் திறந்து காட்டியுள்ளது. அதன் எதிர்விளைவுகள் பல வடிவங்களில் இன்றைய பண்பாட்டு சூழலில் எதிரொளிர்கின்றது. காலனிய நவீனத்துவத்தால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட இடங்களில் முதன்மையானது பெண்சார் படைப்புகள்.

நடுத்தர வர்க்க அழகியலில் வளர்ச்சிபெற்ற பெண்களின் பணிவு பற்றிய கற்பிதங்கள்,ஆடவர் நோக்கிலான வெளியீடுகளுக்கு எதிராக பெண்சார் படைப்புகள் எழுந்தன. ‘பெண்ணெழுத்து விவாதம், அதிக அளவிலான பெண் இலக்கியவாதிகளின் வரவு, பெண் பணிவு, பாலியல் பதவி பற்றி அவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் பெண்கள் அவர்களின் இடத்தைத் திரும்பக் கையகப்படுத்தலுக்கான அறிகுறி களாகும். காலனிய நவீனத்துவமும் புதுஅழகியலும் வளர்த்தெடுத்த பெண் படிமங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. பெண்ணுடல் குறித்த பலதரப்புப் பார்வைகளும் மறுவாசிப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் மலையாள இலக்கியத்தின் மிகமுக்கிய நகர்வாகப் பெண்ணியப் படைப்புகளைக் கருதலாம்.

இன்றையப் பெண்ணியப்படைப்புகளின் போதாமைகள், எல்லைகளை அறிதல் வேண்டும். பெண்ணியப்படைப்புகள் பெரும்பாலும் நகர்மையச் சூழலைச் சார்ந்திருக்கின்றன. இச்சூழலில் நின்றே ஒடுக்கப்பட்டபெண்களும் பார்வையிடப்படுகின்றனர். பண்பாட்டுச்சூழலில் பொதுவாக ஏற்பட்டிருக்கின்ற நடுத்தரவர்க்க மையம் காரணமாக ஒடுக்கப்பட்டபிரிவைச் சார்ந்த பெண்ணியப் படைப்புகள் குறைவாகவே உள்ளன. அதனால் பெண்ணியப் படைப்புகளிலும் பலகுரல்களின் இருப்பு பற்றி எதுவும் ஆராயப்பட வில்லை. பெண்களின் வாய்மொழி வெளியீடுகளில் சுட்டப்பெறும் அனுபவங்களும் கவனத்தில் கொள்ளப்பெறவில்லை. உலகமய மாதல், சாதிமத சக்திகள் வலிமையாக நுழைந்துவிடுகின்ற குடும்பச் சூழலும்போதுமான அளவு விவாதிக்கப்படவில்லை. பெரும்பாலும் ஆண், பெண் குறித்த தெளிவற்ற படிமங்களும் வார்ப்புக்களுமே விவாதிக்கப்படுகின்றன. இன்றையச் சமுகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற பால்சார் பதவி, பெண்ணுடல் இவைகுறித்த படிம மாயைகளை விலக்கிக் கடந்துசெல்ல புதிய சங்கேதங்கள் குறியீடுகள் மொழிநடை அவசியம். ஒடுக்கப்பட்டோரிடம் ஒன்றிணைய அவர்களின்உணர்ச்சியாக மாற புதிய மொழியால், குறியீடுகளால் இயலவேண்டும்.பெண்ணியப் படைப்புக்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால் இது.

இலக்கிய விமர்சனத்துறையிலும் கவனிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலனிய நவீனத்துவ, புதுஅழகியலின் தோல்வி படைப்பின் முறையியல்குறித்த மறுசிந்தனைக்குத் தூண்டியது. வழக்கமான இலக்கிய விமர்சனத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது. யதார்த்தவாத இலக்கிய வடிவங்களின் தோல்வி, எழுத்தாளன் சமூகம் இவற்றிடையேயான உறவு பற்றிய புதிய வினாக்களை எழுப்பியது. எழுத்தாளனின் தோற்றுவாய் பற்றிய விசாரணை மட்டுமல்ல,வெளியீடு சுவைப்போர் இடை யிலான உறவு, சொல்லின் கருத்துப் பரிமாற்றச் சிக்கல்கள் இவை பற்றியெல்லாம் அக்கறை கொள்கின்றது. யதார்த்தவாதத்திற்கு வெளிப்படையான காரணசக்திகளிருந்தன. ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச்சூழலில் அதற்குக் கருத்துப் பரிமாற்றத் திறனும் இருந்தது. இருந்தாலும் ஒரு நிலையான அவையை நிறுவ இயலாமல் போனது. புது அழகியலால் ஒரு புதிய பண்பாட்டு உருவாக்கத்திற் கான வாய்ப்புகளை முழுமையாகச் சோதனை செய்ய இயல வில்லை. அவர்கள் படைத்த கருத்துப் பரிமாற்ற வடிவங்களுக்கும் நிலையான செல்வாக்கு ஏற்படவில்லை. இது மலையாளியின் தன்னுணர்வின் வளர்ச்சி, அழகியலின் பரிணாமம் குறித்த புதிய வினாக்களை முளைவிடச் செய்கிறது. மலையாளிக்கே உரித்தான பண்பாட்டுருவாக்கத்தின் இன்மையில் இதுபோன்ற வினாக்களுக்கு விடைகாண புதுமார்க்சியர்கள், ஃபூக்கோ, லெக்கான், தெரிதா, பக்தின், புதுவரலாற்றாளர்கள் ஆகியோரிடம் தஞ்சமைடைய வேண்டிய கட்டாயத்திற்காளாகின்றனர்.

இலக்கியத்தை மொழியுடன் வரலாற்றுடன் பண்பாட்டுச் சூழலில் எழுகின்ற மாறுபட்டகுரல்களுடன் தொடர்புபடுத்திக் காணும் அணுகுமுறையை ஒரு முன்னேற்றமாகக் கருதலாம். மொழி, மனப்பான்மை, வரலாறை கட்டமைக்கின்ற முக்கிய கண்ணிகள் மன்னராட்சியிலிருந்துமுதலாளியத்திற்கான மாற்றம் மற்றும் காலனியம், பின்காலனியச் சூழலில் புதியதோர் பண்பாட்டுச் சூழலை உருவாக்க இயலாமல் போனதன் விசாரணைகளையே இதுவரை மேற்கொண்டோம். முதலாளியத்தில் பிற்காலத்தில் எழுந்த பண்பாட்டுமுரண்களின் மீதான எதிர்வினைகளே மேற்கண்ட சிந்தனையாளர்களின் பங்களிப்புக்கள். இவ்வெதிர்வினைகளுக்கு புனித/படிம உடைப்பு இயல்புண்டு. ஆனால், முதலாளியக் காலத்தி லிருந்து முன்னகர்தலுக்கான சங்கேதங்களை அளிக்க அவர்களால் இயல்வதில்லை.எதிர்பார்ப்பு - வாய்ப்புக்குமிடையேயான பொருத்த மின்மை கவலைக்குரியதாக மாறுகின்ற நிலவரத்தை இவர்களின் படைப்புகளில் காணலாம். இன்றைய முதலாளியப் பண்பாட்டு நெருக்கடியிலிருந்து உயர்ந்துவருவதே ஞான/அறிவு மரபின் மறுப்பு. ஞான/அறிவு மரபுக் கொள்கை முதலாளியப் பண்பாட்டின் பாகம்தான். அதனை மறுத்தல் முதலாளியப் பண்பாட்டைப் புறக் கணித்தல்தான். இம்மறுப்பிற்கு அதனை நடைமுறைப்படுத்துகின்ற சக்தி வேண்டும். சக்தியின் வாய்ப்பைக்கூட மறுப்பதனூடாக முதலாளியத்தின் பண்பாட்டுச்சீரழிவுகள் நிலைபேறடைகின்றன.

இம் முடிவை மலையாளியின் பண்பாட்டுச்சூழலுள் கொணரும் வேளை உருவாகின்ற பிரச்சினைகள் பரிசோதிக்கப்பட வேண்டும். மலையாளிப் பண்பாட்டுருவாக்கத்தின் அடித்தளத்தில்புதுச் சிந்தனை யாளர்களின் அணுகுமுறைகள் விமர்சனப்பூர்வமாகப் பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் அது ஒரு புதுக் காலனியப் பின்நவீனத்துவத்திற்கு வழிவகுக்கக்கூடும். காலனிய நவீனத்துவத்தில் வெளிப்பட்டது போன்றஇரட்டைத்தன்மை புதுச் சிந்தனையாளர்களை விமர்சனங்களின்றிப் பின் தொடர்வதாலும் ஏற்படக் கூடும். சிதிலமடைந்து வருகின்ற சமூகத்தில் சாதி, மதத் தன்னுணர்வுகளை நியாயப்படுத்தும் திறன் புதுச் சிந்தனையாளர் களின் சில கொள்கைகளில் இடம்பெறுவதுண்டு.

இதன் பொருள் பின் நவீனத்துவ விமர்சனவடிவங்களை நிரா கரிக்கவேண்டும் என்பதல்ல. கடந்த நூற்றாண்டுகளில் மன்னராட்சி, மிஷனரி-காலனியப் பண்பாடு,முதலாளியப் பண்பாடு இவற்றின் பாதிப்பில் வளர்ந்துவந்த வாய்மொழி-வரைவுமொழி வடிவங்களின் கட்டுடைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. இவற்றில் குரல் வேறுபாட்டை இனம் காண்பதும் புதுப் பண்பாட்டு ருவாக்கக் கூறுகளைக் கண்டடைவதும் அவசியம். அத்துடன் காலனிய நவீனத்துவத்திலிருந்து புதுக்காலனிய உலகளாவிய பண்பாட்டுக்கு நகர்கின்ற முதலாளியப் பெருங் கதையாடல்கள் இன்றும் சமூகத்தில் வலிமையான பாதிப்பைச் செலுத்தி வருகின்றன. அதிகாரம், அறிவு, சமூக வேற்றுமை, பாலியல் குறித்த புதியவிளக் கங்களுடன் அவர்கள் வருகின்றனர். இந்தியமரபின் பெருங்கதை யாடலும் பண்பாட்டுச் சூழலில் வலிமையானது. மலையாளி ஆளுமை என்பது பெருங்கதையாடலின் பகுதியாக அமைவதுடன் அதன்விளைவாக மலையாளி தன்னை இருலுள் ஆழ்த்திக் கொள்ளவும் செய்கிறான்.

இதனை எதிர்த்து நிற்பதற்கான இரு வாய்ப்புகள் தென்படு கின்றன. ஒன்று, ‘பேபி’யின் ‘மாவேலி மன்ற(ம்)’ த்தின் வடிவம். இதில் பெருங்கதையாடல் மீதான தடுப்பு என்ற நிலையில், நமதாகிய கடந்தகாலம் குறித்த தேடலின் பலனாக உருவாகி வரும் திணைசார் தன்னுணர்வுக்கான வழியேற்படுகிறது. இத் திணைசார் தன்னுணர்வு உலகமயமாதலுக்கான சாவாலாகமுன்னிற்கிறது. மொழி,பண்பாடு, வாழ்க்கைமுறை, விருப்பங்கள் இவை அனைத் திலும் இவ்வெதிர்ப்புணர்வு வெளிப்படுகின்றது. இன்னொன்று, ‘ஆனந்த்’இன் ‘கோவர்தனன்றெ யாத்ரகள்’ சார்ந்தது. ஒடுக்கப்படு கிறவனின் எதிர்ப்பு கால இட எல்லைகள் கடந்து ‘யாதுமூரே’ இயல்புடன் அனைத்து ஆதிக்கத்திற்கும் எதிர் நிற்றல். இங்கு ஒடுக்கப்பட்டோரின் வாழ்வு ஆதிக்கத்திற்கு எதிரான சவாலாகின்றது.

மலையாளியின் பண்பாட்டுருவாக்கம், ஆளுமையாக்கத்தின் வேளையில் இவ்விருவித வினையாடல்களுக்கும் இடமுண்டு. திணைசார்பும் உலகளவுதலும் பின்னி இணைகின்ற ஒரு பண்பாட்டுப் போராட்ட இடம் நோக்கி இவை விரல் சுட்டுகின்றன.

Pin It

மலையாளக்கவிதைமொழியில்நெடுங்காலம் செல்வாக்குச் செலுத்திய பாய்ச்சல்களில் முக்கியமானவை செறுசேரி,எழுத்தச்சன், குஞ்சன் நம்பியார்,சங்ஙம்புழாக் கவிதைகள். கவிதையின் எல்லை வரம்புகள் மீறிப் பேச்சுமொழிவரை இக்கவிதைகளின் செல்வாக்குப் பரவியது. இவர்களின் கவிதைமொழியின் அடிவேர்கள் கேரள நாட்டார் பாடல்களில் உள்ளன. தொழிற்பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், வீரக்கதைப் பாடல்கள் முதலிய வெகுசனக் கவிதைகளின் அடிநீரோட்டம் இக்கவிதைகளின் வழியாக ஓடிப் பரவியுள்ளது. இக்கவிதைகள் அந்தந்தக் காலகட்ட சமூகவாழ்வை தொனிக்கச் செய்வதுடன் அவ்வாழ்வில் கணிசமான பண்பாட்டுப் பங்களிப்பை யும் செய்துள்ளன.

ஆனால் இவர்களில் எவரும் நாட்டார் பாடல்களின் நுட்பம், சூழல், மனிதனின் எளிய கற்பனைகளுக்கு மறுஉருவளித்து விட்டுத் தப்பிச் செல்லவில்லை. மாறாக, தங்கள் கண்ணோட்டம், வாழ்க்கைப் பார்வையை அடிப்படையாகக் கொண்டே இக் கவிதை மரபை உட்செரித்து, தங்களுக்கு உடன்பாடுடைய விழுமியத்தில் ஊன்றிநின்று அந்தந்தக் காலகட்டத்திய மொழிரீதியான சிக்கல் முதலிய சமூகமுரண்களைப் புரிந்து கொள்ள முயன்றதுடன் அவற்றுடன் மாறுபட்ட நிலையில் தன்னியல்போடும் படைப்பியல் போடும் எதிர்வினையாற்றினர். இத் தனித்துவம்தான் கேரளப் பண்பாட்டிலும் வாழ்விலும் செல்வாக்குச் செலுத்திட அவர்களைத் தகுதிப்படுத்தியது.

*****

நமது நாட்டார் பாடல்களைப் பகுத்தாராயும்போது சில இயல்புகள் கவனத்திற்கு வரும். உடலசைவு, உழைப்போடு உறவுடையதும் மனநிலைக்கேற்ப உருவாகிவிடும் வாய்ப்புடையது மான பல்வேறு தாளங்கள், மொழி, உச்சரிப்புமுறை, குரல் ஏற்ற இறக்க அழுத்தங்கள், படிமக்குறியீடுகள், பழமரபுகள், வாழ்க்கைப் பார்வை, வெளியிடலின் அவசியம் போன்ற கூறுகளின் சமூக இயல்பு அவற்றுள் முதன்மையானது.

பரம்பரை பரம்பரையாகப் பாடப்பட்டு, அந்தந்தத் தலைமுறை களின் கால தேச குல வேற்றுமைகளுக்கேற்ப மொழிவேற்றுமை, வேறுபட்ட கற்பனை, வாழ்க்கைமுறை, மனோநிலைகளால் உருவ உணர்ச்சிக் கலப்பு நேர்ந்துவிட்டிருக்கின்ற நாட்டார் பாடல்களின் காலக்கணிப்பு இயலாத ஒன்று.

இருப்பினும் நிலவுடைமை வழக்கமும், வடமொழி இலக்கியத்தின், மொழியின், பிராமணக் கலாச்சாரத்தின் செல்வாக்கு உச்சத்தை அடைந்தபின் நாட்டார்பாடல் களின் வளர்ச்சி நின்றுபோனதைக் காணமுடிகின்றது. இன்று வழக்கத்திலிருந்து வருகின்ற நாட்டார்பாடல்களில் மறைந்திருக்கின்ற இறுதிச்சமுதாய காலகட்டமும் இதுதான். (போர்த்துகீஸ், அரேபியரின் காலனியக் காலம்வரை நாட்டார் பாடல்களில் பதிவாகியுள்ளது காணலாம்)

இக்காலத்தில் நாட்டார் பாடல்களின் வளர்ச்சி மட்டும் நிலைக்க வில்லை. சமூக அமைப்பின் கீழ்த்தட்டுக்குத் தள்ளப்பட்டுவிட்ட புலையர்,செறுமர், பாணர் முதலிய அனேக சாதிகளாகப் பிரிந்து கிடக்கின்ற அடித்தள இனத்தின் பேச்சுமொழி, பண்பாடு, கலை களின் வளர்ச்சியும் நின்றுபோனது. அந்த நிலைத்துவிட்ட வடிவில் தான் இன்றும் அவை வழங்கிவருகின்றன. பழங்குடிகளின் மொழியும் பண்பாடும் இதற்கு வெகுகாலம் முன்னரே வளர்ச்சி நின்று போனது.

எந்த மக்கள் பிரிவினின்று நாட்டார் பாடல்கள் உருவாகி வந்தனவோ அப்பிரிவினரின் பேச்சுமொழியுடன் அவை வேற்றுமைப் படவில்லை. அதாவது அவர்களின் பேச்சுமொழிக்கும் கவிதை மொழிக்கும் வேற்றுமை இருக்கவில்லை.

தமிழ், மலையாளம், வடமொழி முதலிய மொழிகளின் கலப்பை நாட்டார்பாடல்களில் காணமுடிகின்றது. ஆனால் காலவேறுபாடு, குலவேறுபாடு,தேச வேறுபாடு இவைக்கேற்ப பேச்சுமொழியின் உச்சரிப்பு மாறுபாடுகள் அவற்றைத் திட்டமிட்டன, கட்டுப்படுத்தின.

கோல், தடி, தப்பு, உடுக்கு, குடம், வில் போன்ற தாள வாத்தியங்களின் ஒத்திசைவுடன் பாடப்பட்ட நாட்டார்பாடல்களும் விதைப்பு, நடவு, அறுவடை, கதிரடிப்பு, வேட்டை/காவல் வேளைகளில் பாடும் பாடல்களும் அவற்றின் தாளங்கள் பாடும்முறை மக்களுக்கு மனப்பாடம்.சிலவேளை குழுவாகவோ, அல்லது ஒருவரால் நடத்தப்படுகிற குழுவாகவோ, அரிதாகச் சிலவேளைகளில் ஒருவர் தனித்தோ, இருவரின் உரையாடல் வடிவிலோ இப்பாடல்கள் பாடப்பட்டன. மந்திரவாதம், தோற்றம் முதலிய தேவதை வழிபாட்டுப் பாடல்களில் திராவிடத் தெய்வங்களும் ஆரியத் தெய்வங்களும் இரு பழமரபுக்கதைகளும் இடம்பெறுவதுண்டு. இருப்பினும் மக்கள் வாழ்வு சார்ந்த கற்பனைகளில்தான் அவற்றின் கதையாடல் நிகழ்கிறது.

தேவதை வழிபாட்டுப் பாடல்கள், மந்திரவாதப் பாடல்கள், இயற்கைப் பாடல்களில் மனிதன் இயற்கை இடையேயான முரணும் இணைவும் மறைந்துள்ளது. அதிகாரிகளின் கொடுமைகளும் மக்களின் துன்பங்களையும் வெளியிடும் பாடல்களில், பகைஅச்ச நிவர்த்திக்காக ஏவப்படுகின்ற துர்மந்திரவாதங்களில்(செய்வினை/ஏவல்), மனித உறவுகள், பிரிவு, புணர்வு பற்றிய பாடல்களில் மனிதர்களிடையான சச்சரவும் இணக்கமும் இடம்பெறுகின்றது. தொழிற்பாடல்களில் இவ்விரு நிகழ்வும் காணலாம். வீரக்கதைப் பாடல்கள் சான்றாண்மைமிக்க வாழ்வுகுறித்து, வாழ்க்கை மதிப்பீடுகள் குறித்து ஒரு மக்களினம் பேணிவரும் கற்பனைகளை வெளிப்படுத்துகின்றன.

நாட்டார் பாடல்களின் கலைத்தன்மை பற்றி நபர்சாராத்தனம் (Inpersonality) , முன்னிற்கும் இயற்கை, பழமரபுச் சடங்குகள், வாழ்க்கை நிலையுடன் ரத்த உறவுடைய படிமக்குறியீடுகள், வெறும் தத்துவமாக மட்டும் விலகிக்கிடக்காத வாழ்க்கையுடனான தொப்புள்கொடி உறவைத் துண்டித்துக்கொள்ளாத முழு உடல் போல நிறைந்து பொலிவுடைய சமூகவாழ்வின் பிரக்ஞை, உள்ளுறைத்தன மிக்க வாழ்வியல் கண்ணோட்டம் என்றிவற்றை நமது நாட்டார் பாடல்களின் கலைமதிப்பாகக் கொள்ளலாம். இங்குக் களங்கமற்ற அகஇணைவு தாளம் இசை மொழி இத்யாதி சமூக ஊடங்களின் வழி நிறைவேறும் வேளை அவை ஒரு மக்களினத்தின் மானசீகவாழ்க்கை யின் ஒலிச்சித்திரமாக மாறுகின்றது.

சுருக்கமாக, நாட்டார் பாடல்கள் மக்களிடமிருந்து உருவாவது மக்களால் உயிரொளியூட்டப் பெறுவது மக்களுக்காக நிலை பெறுவது.

******

மலையாளக்கவிதைமொழியின் நெருக்கடிக்கட்டங்களில் எல்லாம் படைப்பியல்பு மிக்க கவிஞர்கள் நாட்டார் பாடல்களின் இச்செழுமையான பாரம்பரியத்திற்குப் பயணம் செய்துள்ளனர். நாட்டார் பாடல்களின் தாள இசை மொழி இத்யாதி மரபுகளைத் தனது மேதமையோடும் கற்பனையோடும் மிகத்திறம்பட இணைத்த கவிஞர் சங்ஙம்புழா. அவரைத் தழுவி எழுதிய கவிஞர்களால் மலடாக்கப்பட்ட மொழிக்கு மீண்டும் உயிரோட்டமளித்தனர் இடசேரியும், வைலொப்பிள்ளியும்.

நாட்டார் பாடல்களில் இருந்துதனது கற்பனைக்குப் பொருத்தமான தாளம் இசை மொழி இத்யாதிகளை மட்டுமே சங்ஙம்புழா உள்வாங்கியிருந்தார். ஆனால் இடசேரி நாட்டார் மரபுகளில் ஊறிய தனது பட்டறிவின் உந்துதலால் நாட்டார் பாடல்களின் சமூக, மானிடவியல், தொன்மை வடிவ ஆழம்வரை வேரோடவிட்டிருந்தார்.

நாட்டார் பாடல்களின் சொற்கள்,பொருட்கற்பனைகளின் பக்குவ இணைவின் அழகியல்மரபுகளைத் தேடிச்சென்றார் வைலொப் பிள்ளி. பகுத்தறிவு, அறிவியல் உணர்வுசார்ந்த ஒரு வாழ்க்கைப் பார்வையும் பண்பட்ட கலை அணுகுமுறையும் காரணமாக அவரால் இடசேரி அளவுக்கு நாட்டார் பாடல்களின் பழமைச்செறிவை அடைய இயலவில்லை. அதுமட்டுமல்ல வள்ளத்தோளின் பின்னிழு விசையும் ‘சங்ஙம்புழா’விற் பக்கவாட்டுக் கவர்ச்சியும் வைலொப் பிள்ளியின் கவிதைக்கு எவ்விதமான தாண்டவ நிலையிலும் ஒரு மென்னசைவுத் தன்மையை நன்கொடை செய்திருந்தன.

*****

மலையாளத்தின் கற்பனாவாதம் அதன் பலவீனத்தைச் சங்ஙம்புழா’விடமும் ஆற்றலை ‘வைலொப்பிள்ளி’யிடமும் அடைந்து உச்சியைஎட்டி மெதுவாக வீழ்ச்சியடைந்தது. இறுதியில் நம் கவிதைமொழி மீண்டும் உணர்ச்சியும் பொருண்மையும் இழந்து ஆற்றலற்றது. இந்த இருளுள் ஆழ்ந்த கட்டத்தில்தான் நவீனத்துவம் குறித்த மேலைக் கற்பனைகளின் வெளிச்சத்தில் சில புதியகவிஞர்கள் தேடுதலைத் தொடங்கினர். தத்துவவாதங்களின் புதிய மேலைப் பொருள்கோடல்கள், நவீன மேலைக் கலைநுட்பங்கள் போல நாட்டார் பாடல்கள் நோக்கியும் இத்தேடல் பரவியது. எம்.கோவிந்தன், காவாலம் நாராயணப்பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் போன்றோர் முதன்மையாக நாட்டார்பாடல்களில், பழமரபுக்கதை களில், நிகழ்த்துக்கலைகளில் கவிதைக்கூறுகளைத் தேட ஆரம்பித்தனர்.

இவர்களில் எம்.கோவிந்தன் வடமொழிச் சொற்களைக் கூடுமானவரை தவிர்த்த தமிழ் கலந்த பழைய மலையாளச் சொற்கள் நிறைந்த ஒரு மொழியைக் கண்டடைந்தார். சொல்லிணைவு, அணிப்பயன்பாடு, சிக்கனம், குரலிசை, தாளம் இவற்றில் நாட்டார் பாடல் முறைமைகள் கோவிந்தன் கவிதைகளில் பயன்படுத்தப் பட்டன. இதிகாச, பழமரபுக் கதைகள் இடம்பெற்றன. தமிழ்ச் சொற்கள், வழக்காறுகள், மந்திர வாக்கியங்கள், விடுகதைகளின் குரலிசைப்புகளும் மொழிப்பயன்பாடுகளும் கோவிந்தன் தனது தனித்துவமாக வளர்த்துக் கொண்டார். ஆனால் கவிதையனுபவத்தின் ரத்தஓட்டத்திற்குப் பதிலாக அறிவுத்தந்திரத்தின் முதுமையையே அவரது படைப்புக்களுக்கிருந்தது. பலவேளைகளிலும் செயற்கைத் தன்மை வெளிப்படையாகவே இடம்பிடித்தது.

கவிபுதுமொழி படைக்கவேண்டும். அம்மொழி அவனது பாரம்பரியத்தின் வேர்களோடு இருக்கவேண்டும்.கற்றறிவு கொண்டு ஒருவர் செயற்கையாக உருவாக்குவதல்ல கவிதைமொழி.அது படைப்பு. நேர்மையில்லாத பேச்சுமொழிகூடச் செயற்கையாகி விடுவதுபோல, அனுபவச்செறிவும் சிந்தனையாழமும் கனவுத் தன்மையும் கலவாத கவிதைமொழி செயற்கையானதாகி விடுகிறது. தன்னுடையது ‘தனது’மொழியில் அமைய வேண்டும். அதில் நாட்டார் பாடல் மரபு இடம்பெற வேண்டும். அது சுத்தகேரளத் தன்மையுடன் இருக்க வேண்டும் போன்ற முன்விதிகளுடன் நாட்டார் தன்மை பாவனை செய்யும் கவிதைமொழியைக் கோவிந்தன் செய்து வைத்திருந்தார். அதனால்தான்அம்மொழி மலையாளக் கவிதையில் ஒரு திருஷ்டிபொம்மை (நோக்குகுத்தி) யாகிப்போனது.

நாட்டார் பாடல்கள் பழமரபுக்கதைகளின் மரபுபாவணைகள் ஏதுமின்றிக் கவிதையில் இணைந்திருப்பதற்கு ‘இடசேரி’யின் ‘பூதப்பாட்டு’ஐ விட நிறைவான உதாரணம் வேறில்லை. மொழிவிளையாட்டும் கவிதையாக்கமும் வெவ்வேறு தொழில்கள். ஒன்று தந்திரம்/நுட்பம்; இன்னொன்று மேதமையால் மட்டுமே நிறைவேறுவது. ஒன்றின் ஆதாரம் பாண்டித்யம்/அறிவு என்றால் அடுத்ததின் உயிர்ஞானம்.

கடமனிட்டபாலகிருஷ்ணனின் கவிதைகள் நாட்டார் பாடல் களின் புற இலக்கணங்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வில்லை. நாட்டார் பாடல்களின் சடங்கு நம்பிக்கைகளின் பழமரபுக் கதைகளின் சூழல் அவருக்கு அவர் வாழ்ந்த நிகழ்காலமும் தனது தனிமனித பண்பாடுமாக இருந்தது. அத்துடன் கவிதையின், சமூகத் தின், மொழியின் நிகழ்காலம் குறித்த படைப்புணர்வு அவரிடம் மிகுதியாகவே காணப்பட்டது. அதனால் அவருக்குப் புதிய நாட்டார் பாடல்கள் எழுதவேண்டிய தேவையோ நாட்டாராக பாவணை செய்ய வேண்டிய கட்டாயமோ ஏற்படவில்லை.

கவிதையைக் கவிதையாக்குவது அதனுள் கலந்திருக்கின்ற உணர்ச்சியின் உண்மைதான். அது கடந்தகால பிரக்ஞையின், நிகழ்கால அனுபவத்தின் எதிர்கால ஞானத்தின் இணைவுப்புள்ளி. அதுமுக்காலத்தின் குரல்களையும் ஏககாலத்தில் ஒலிப்பது.

கடந்த காலப்பிரக்ஞை, வரலாறோ பழமரபுக்கதையோ தனிநபர்சார் இழப்பின் ஏக்கமோ ஆகலாம். நிகழ்கால அனுபவம், சார்ந்திருக்கின்ற மானுட இருப்பின் முழுமை குறித்த அனுபவ அறிதலோ தனிநபர் சார்ந்த இன்பதுன்பமோ ஆகலாம். தீர்க்கதரிசனத் தன்மை வாய்ந்த எதிர்கால ஞானம், தனிநபர் சார்ந்த கனவாகலாம். சமயரீதியான விழிப்பு, தியானத்தன்மையான முழுமைஉணர்வோ சூன்ய உணர்வோ ஆகலாம். இவற்றில் எது எதன் இணைவெனத் தீர்மானிப்பது கவிஞனின் உலகியல் பார்வைதான்.

முக்காலபிரக்ஞைகளின் இவ்விணைவு கடமனிட்டாவின் நான்கு வரிகளில் இடம்பெறுவது காண்போம்:

 பாதாளப் படிகள் ஏற

பறையப்படை துள்ளிவருது

பறையறையும் தாளம் துள்ளி

பறையப்படை பாடி வருது.

இனக்குடிவாழ்வுவரை ஆழ்ந்து செல்கின்ற இனக்குழு நினை வின் வீரியமும் ஒடுக்கப்பட்ட நிகழ்காலத் துக்கத்தின் அணை உடைப் பும் வெறும் கண்களின் காட்சிக்குத் தோன்றாதது அகக்காட்சிக்குத் தென்படுவதுமான வரலாற்றுச் சக்திகளின் வருங்கால இயல்பும் ஒரேகாலத்தில் ஒரே படிமத்தில் இந்நான்கு வரிகள் உள்ளடக்குவது காணலாம்.

இனி ஒரு நாட்டார் பாடல்,

முண்டகவயலில் நண்டுக்குஞ்சு

முண்டகன்அறுத்தபின் என்ன செய்வாய்?

அப்பனின் மடியில் ஏறியிருப்பேன்

அப்பன்செத்தால் பின் என்ன செய்வாய்?

அம்மையின்மடியில் ஏறியிருப்பேன்.

அம்மைசெத்தால் பின் என்ன செய்வாய்?

அண்ணனின்மடியில் ஏறியிருப்பேன்

அண்ணன்செத்தால் பின் என்ன செய்வாய்?

அண்ணியின்மடியில் ஏறியிருப்பேன்

அண்ணிசெத்தால் பின் என்ன செய்வாய்?

என்விதிபோல நான் ஆவேன்.

இந்தநண்டுக்குஞ்சின் ஆன்மாவுள் பார்த்தால் நிராதரவான, பரிதவிக்கின்ற ஒரு புலையச்சிறுவனின் உருவம் காணலாம். காட்சியை இன்னும் சற்று விசாலப்படுத்திக் கொண்டால் ஒரு இனத்தின் காட்சி காணலாம். மேலும், காதுகொடுத்தால் மனிதகுல வரலாற்றில் இறந்தநிகழ் எதிர் காலங்களில் ஒலிக்கின்ற ‘எப்படி வாழ்வோம்’ என்ற கேள்வியும் அதற்குச் சாமானிய மனிதன் அளித்துவந்த பதிலும் கேட்கலாம்.

உண்மையான உணர்ச்சியின் இருப்புதான் கவிஞர் கடமனிட்டாவின் கவிதைக்கு இயற்கைத்தன்மையை அளிக்கின்றன. கவிதைக்கும் காலகட்டத்திற்கும் இடையேயான முரண் உறவுதான் அக் கவிதைகளுக்கு ஒரேவேளையில் நவீனத்துவத்தின் சொற்சிக்கனத் தையும் கற்பனாவாதத்தின் தன் இணைவு வழக்கத்தையும் நாட்டார் பாடல்களின் எளிய நம்பிக்கை வாய்ப்புகளையும் இடம்பெறச் செய்கின்றது.

நாட்டார்பாடல்களில் நிபுணத்துவம் பெற்ற கவிஞர் காவாலம் நாராயணபணிக்கர். கேரளத்தின் அடித்தள வர்க்க நாட்டார் பாடல்களின் மொழிவழக்காறு, தாளம்,வாய்த்தாரை, இவற்றை யெல்லாம் தம்கவிதைகளில் திறம்படப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு விஷயங்களுக்கு இது பயன்படுகின்றது. ஒன்று இவை எல்லாம் மனதில் ஆழ்ந்துபோன மக்களோடு உரையாட அல்லது இவற்றைப்பற்றிச் செவிவழியறிவு மட்டும் உடைய கல்வியறிவுடை யோரை ஆச்சரியத்துடன் ரசிக்கவைக்க. இரண்டாவதுதான் நோக்க மெனில்தவறில்லை.

கல்வியறிவுடையோர் சுவைத்திட ஆடுகின்ற கதகளி,திற, தெய்யம் முதல் காபரே வரையான் பொழுதுபோக்கு களில் இதுவும் அடங்கும். ஆனால், ‘ஏனு, மாளு, கடாத்தி, மட்டி, புட்ளு, மரண்ட்,நெப்பதிரு, புத்தம், தூசி, முஞ்ஞி, கொணவதியாரம்’ போன்ற காவாலம் பயன்படுத்துகின்ற சொல்வழக்காறுகளை இன்றும் பேச்சுமொழியில் பயன்படுத்துகின்றவர்களும் அவர் மையப்படுத்துகின்ற கற்பனைகளும் பழமரபுகளும் சடங்குநிகழ்த்துகளும் இன்றும் ரத்தத்தில் ஊறிய விரிந்ததொரு மக்களினத்துடன் உரையாடுவது இக் கவிதைகளின் நோக்கம் எனில் அவை சந்தேகத்திற்குரிய இடத்திற்கு மட்டுமே தகுதியுடையன.

இம்மக்கட்பிரிவின் இன்றையவாழ்க்கை அவரது நாட்டார் பாடல்களில் காணப்படுவதுபோல எளிமையானதாக இன்றில்லை. கேரள உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுவிட்ட சிக்கல்மிக்க வளர்ச்சி இவர்கள் வாழ்வையும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது. இன்று அவர்கள் வாழ்வு வெறும் ஒரு நிலவுடைமையின் அதிகாரத்துடன் மட்டும் தொடர் புடையதல்ல. முதலாளியத்தின் வல்லரசுவாத அமைப்புச் சிக்கல்களுடன் அது பிணைந்துள்ளது. அவர்களில் ஒரு பெரும்பிரிவு அரசியல்ரீதியாகவும் தொழிலாளர் இயக்கங்கள் வழியாகவும் ஒருங்கிணைந்துள்ளனர்.

வாக்குரிமை,கல்வியுரிமை, கோவில் நுழைவு உரிமை என்பனவற்றை அடைந்துள்ளனர். நிலச்சீர்திருத்தம் அவர்களில் ஒரு பிரிவினரை வாழ்ந்த நிலத்தின் உடைமைகளாக்கியுள்ளது. சில பலன்களுக்காக நெடுங்காலம் தொடர்ந்த அரசியல் பொருளாதாரப் போராட்டங்கள் வழி அவர்கள் கடந்து சென்றுள் ளனர். அவர்களைச் சுரண்டவும் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் புதிய தந்திரங்களை வகுத்துக் கொண்டுள்ளனர். இன்று அவர்கள் வாழ்வு மிகுந்த நெருக்கடியும் போராட்டங்களுமுடையது. இப்படி, அவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அவர்களின் பிரக்ஞை எளிமையானதுமாக இருக்கிறது என்று கூறும்போது முன்னெச்சரிக்கை தேவை.

நாட்டார் பாடல்களும் நாட்டார்கலைகளும் இன்று அவரிடையே புழக்கத்திலிருப்பது வாழ்க்கைகுறித்த எளிமையுணர்வின் வெளிப்பாடாகவா-அதாவது கலைப்படைப்பு என்ற நிலையிலா- அல்லது சடங்குநிகழ்த்து என்ற நிலையிலா என ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது.

இனி, இந்த எளிமையுணர்வை நிலைனிறுத்தவே இன்று அவர்களின் நாட்டார்கலைகளும் நாட்டார்பாடல்களும் அவர்களுக்கு உதவுகின்றன எனில், வாழ்க்கையின் சிக்கலான உண்மைகளைப் புரிந்துகொள்ளப் போதுமான விதத்தில் வளர்ச்சி பெறுவதிலிருந்து அவர்களின் பிரக்ஞை தடுக்கப்பட்டுள்ளது. பழையப் பாடல்களும் கலைகளும் சடங்குத்தனமான முக்கியத்துவத்துடன் எளிமையான ஒரு வாழ்வின் பிரக்ஞையைச் சமர்ப்பணம் செய்து, இன்றும் மக்களிடையே இருந்துவருகின்றதென்றால் அது மக்களின் பிரக்ஞை வளர்ச்சிக்குத் தடையே என்பதில் சற்றும் ஐயமில்லை.

மக்களின் பிரக்ஞை வளர்ச்சிக்கு மட்டுமே இன்றுள்ள நாட்டார் பாடல்கள், கலைகளின் படைப்பியல்பு வளர்ச்சி உதவக்கூடும். தனி நபர்களுக்கு உதவாது. ஆனால், தொழிற்பிரிவு முதலிய வாழ்க்கை நிலைமாற்றத்தால் மனிதனின் சமூக இயல்பிற்கு அடிப்படையான மாறுதல்கள் நேர்ந்துள்ள நவீனகாலத்தில் கலைஞர்களிடம் இருந்து கலைப்படைப்புகள் தோன்றியதல்லாமல் நாட்டார்பாடல்களோ கலைகளோ உருவானதைக் கேள்விப்பட முடியவில்லை. சமூக வளர்ச்சியின் ஒரு உச்சகட்டத்தில் மனித உணர்வு மிக உன்னதமான தளத்தில் ஒருங்கிணைந்திருந்தால் அன்று ஒருவேளை, மீண்டும் உண்மையான மக்கள் கலை உருவாகியிருக்கலாம்.

சாதாரண மக்களிடம் உரையாட நாட்டார்பாடல்கள், நாட்டார் கலைகள், கற்பனைகள்,சங்கேதங்கள், பழமரபுகள் அவற்றிலுள்ள எளிய மனிதக் கற்பனையை இக் காலத்தில் ஒருவர் மீட்டுரைக் கின்றார் அவர் நிச்சயமாக மக்களின் பிரக்ஞை வளர்ச்சியை தடுக்கின்றார். ஒரு மக்களினத்தின் சமூகப்பண்பாட்டு வளர்ச்சி வரலாற்றிலிருந்து சார்பின்றிவெளியேற்றி எடுத்த பாரம்பரிய உணர்வு யதார்த்தத்தில் பாரம்பரியமான உணர்வல்ல. ஏனெனில், சமகாலத் தன்மையுடைய இறந்தகாலக்கூறு எதுவோ, அதுபற்றிய உணர்வே பாரம்பரிய உணர்வு. இனி இந்த சரியான பரம்பரை உணர்வைப் பகுத்தாராயும்போது இன,குடிவழி முரண்கள் அதில் அடங்கி நிற்கின்றன.

எனவே,இரண்டாவதாகக் கூறியது போல, யாரிடமிருந்து காவாலம் நாராயணப்பணிக்கர் தனது மையங்களை அடைந்தாரோ, அம் மக்களிடம் உரையாடுவதே இக்கவிதைகளின் நோக்கமெனில் இவை அவர்களின் பிரக்ஞை வளர்ச்சியைத் தடுக்கின்றன. (சிக்க லான வாழ்வியல் உண்மைகளைப் புரிந்துகொள்ளத் தகுதிப்படுத்தும் நிலையில் நாட்டார் பாடல்களை நாட்டார்கலைகளை வளர்த்தெடுப் பது இனி அசாத்தியம்தான். குழந்தைப் பருவத்திற்குத் திரும்பிச் சென்றபின் மீண்டும் நன்றாக வளர மனிதனால் இயலாதது போல) மேலும், கால உயிர்ப்பின் இன்மையில் அவரது கவிதைகள் வெறும் விளையாட்டாகவே பரிணமிக்கின்றன. ஒருபொழுதுபோக்கு அல்லது சடங்கின் முக்கியத்துவம் மட்டுமே அவற்றிற்குண்டு.

 மன ஆற்றலின் குரல் முழக்கி தமது துயரங்களுக்கு மாந்த்ரீக பரிகாரம் தேடிய ஒரு மக்களினத்தின் மந்திரவாதப்பாட்டின் தாள ஒழுங்கில் அவர் எழுதும்போது, அந்த மக்களினத்தின் நேர்மையை பகடி செய்கின்ற விளையாட்டாக, அல்லது இதயமற்ற ஒரு சடங்காகக் கவிதைத்தொழில் மாறுகின்றது.

“மண்ணும்நாற்றும் கதிரும் எதுவும்தனதாகஇல்லாதவனை

மண்ணே அடியேன்

மண்ணில் அரும்பிய முளையே அடியேன்

முளையில் எழுந்த நாற்றே அடியேன்

நாற்றுப் போர்த்த நிறமே அடியேன்

கதிரே அடியேன்

கும்பக்குட வயிறா, டேய் மாப்பிளா சங்ஙாதி

நீமண்ணை நம்பி மண்ணிலுணர்ந்தாயா

மணவாளச்சங்ஙாதி”

என வீரமுழக்கம் செய்விக்கும்போது உண்மையில் அவன் கோமாளி யாக்கப்படுகிறான். ஏனெனில், மண், கதிர், நாற்றின் உரிமை உண்மையில் நிலவுடமைக்குச் (மாப்பிளா சங்ஙாதி) சொந்தமானது. அதாவது மண், நாற்று, கதிர் யாவுமான புலையனின் உடமையும் இந்த மாப்பிளா சங்ஙாதிதான். தனக்கு எதுவும் உரிமையில்லை யெனினும் அதையறியாமல் எல்லாம் தனதே என நம்பி ஆறுத லடைகின்ற அந்த அடிமையின் பழைய நம்பிக்கையே இங்கு அவனிடம் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் முரசு முழக்கமாகப் பாராட்டப் பெறுகிறது இக்கவிதை.

தனக்கு உரிமையற்ற மண்ணோடு அந்நியனின் களஞ்சியத்தில் நெல் குவிப்பதற்காகச் செய்யும் கூலி வேலையோடு தன்னைக் கரைத்து மூழ்குதல் வர்க்கப் போராட்டத்தின் முரசொலி அல்ல. நிலவுடைமைச் சமூகத்தில் அடிமையின் பெருமூச்சு அது. அவனது இருப்பின் யதார்த்தம் குறித்த அறியாமை காரணமாகவே , உழைத்து விளையச் செய்கின்ற வயல் தனதல்ல என்ற உண்மையை உணர அவனால் இயலாமல் போகிறது.

நிலவுடைமையாளன் மண்ணில் வேலை செய்வதில்லை என்ற உண்மையில் அவன் சீற்றம் கொள்கிறான். ஏன் நிலவுடைமையாளன் வேலை செய்வதில்லை என்று யோசிக்கும் திறன் அவனுக்கு இல்லை. நிலவுடைமையாளன் செய்யவேண்டிய வேலை கூட அவனே செய்வதாக, அவனது உழைப்பின் பலனாகவே நிலவுடைமை வேலை செய்யாமல் இருக்கிறான். இந்நிலைமைக்குக் காரணம் அவருடைய நிலவுடைமை அதிகாரமே என்பதை அவன் புரிந்து கொள்வதில்லை. அதைப் புரிந்து கொள்ளும்போது மட்டுமே அவனது வர்க்க உணர்வு பொருளாதார அமைப்பை அடிப்படையாகக் கொண்டமையும். அதற்கான வழிகளைக் கவிதை மூடிவிடுகின்றது.

மலையாளக் கவிதை மொழி,கவிதை உணர்வின் இயல்பான வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் நாசகரமான பாதிப்பைச் செலுத்திய ஒன்று வடமொழி இலக்கியத்தின் புதுச்செவ்வியல் மரபு. பிராமண மேலாதிக்கத்தின், நிலவுடைமைத்தனத்தின், பண்பாட்டு ஆதிக்கத்தின் தண்டணை ஊடகமாக இருந்தது அது. இன்றைய மலையாளியின் கவிதை உணர்வை பாதிக்கின்ற பெரியதொரு அழிவுக்கூறு திரைப்பாடல்கள். இவ்விரண்டு துறைகளிலும் காவாலம் நிறையவே பங்களிப்பு செய்துள்ளார்.

நாட்டார்பாடல்கள், கலைகளின் மீட்டுருவாக்கம், வடமொழி இலக்கியத்தின் புதுச்செவ்வியல் மரபு, திரைப்பாடல்கள் எனும் மூன்று கூறுகளும் கேரளமக்களின் இலக்கிய உணர்வு, வாழ்க்கைப் பிரக்ஞை இவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதில் முதன்மையானவை. இவை மூன்றும் மக்களின் சடங்குத்தனமான, வாழ்க்கையுடன் உறவற்ற யதார்த்த உணர்வைப் பிராமண மேலாதிக்கம் சார்ந்த நிலவுடைமைப் பண்பாட்டையும் முதலாளியச் சந்தைப் பண்பாட் டையும் மக்களிடையே இறுக்கி உறுதிப்படுத்தும் பண்பாட்டுக் கருவிகளாகத் தொழிற்படுகின்றன.

இம்மூன்று துறைகளிலும் இன்று அதிகமான பங்களிப்புகள் செய்துவரும் ஒரு கலைஞர் திரு. காவாலம் நாராயணப் பணிக்கர். அதனால்தான் அரசியல் துறையிலும் சிந்தனைத்தளத்திலும் மக்களின் பிரக்ஞை விகாசத்தை அச்சப்படுகிற சக்திகள் யாவும், அதாவது நடைமுறைத்தன்மையை, நிலவுடை மையை, முதலாளியத்தை முன்னிறுத்தும் சக்திகள் அனைத்தும் அவரது கலைப் பண்பாட்டுத் தலைமையை ஒரு பெருங்கொடை யாகக் கருதுகின்றன.

நாட்டார் பாடல், பாரம்பரியம், தெய்யம், திற, பொராட்டு நாடகம், படயணி, பால்காவடி முதலிய நமது இலக்கிய கலைத் துறைகளில் முழங்கி ஒலிக்கின்ற வார்த்தைகளின் உட்பொருள் ஆராய்கிற ஒரு தேடுநன் நடுங்கச் செய்யுமொரு உண்மையைக் காண்பான்.இம்மீட்டுருவாக்கத்திருப்பணி முயற்சிகள்யாவும், நீதிநியாய உணர்வு முதல் மொழிஉணர்வு வரை பரவிக்கிடக்கின்ற பண்பாட்டு நெருக்கடியும்விலைவாசி உயர்வு முதல் வல்லரசுச் சுரண்டல் வரையான பொருளாதார நெருக்கடியும்உள்ளடக்கிய மிகையான சிக்கலை, சமகால மனிதவாழ்நிலையை மறைக்க நம் காட்சிகளுக்கு முன் தொங்கவிடப்பட்ட நூலாம்படைகள்.

ஆனால் வெளிப்படையாகத் தீமையற்றதெனத் தோன்றுகிற இவ்வார்த்தை களின் கருப்பையில்தான் மக்களின்பிரக்ஞை விகாசத்தை அஞ்சுகிற பாசிசத்தின் இரும்புலக்கை வளர்கின்றதெனும் உண்மையை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்?

Pin It