ஏறத்தாழ மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் அமைதி சீர்குலைந்த நிலைக்கு வந்துவிட்டது.
குறிப்பாகக் கல்வியைக் கூறலாம். கல்வி நிலையங்களும் அப்படித்தான் இருக்கின்றன.
சென்னை ஐஐடி வளாகத்தில் மே 4, 2011 அன்று நிதின் ரெட்டி தொடங்கி, நவம்பர் 9, 2019 வரை 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
காரணம் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள், உளைச்சல்கள் என்று தெரிய வருகிறது. கடைசியாக அவ்வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி 18 வயதான பாத்திமா லத்தீப். இவர் முதுகலை முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தவர்.
ஐஐடி வளாகம் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த செய்தி.
கடந்த காலங்களில் இறைச்சி சாப்பிடக்கூடாது என்றும், அப்படிச் சாப்பிடும் மாணவர்கள் தனிமைப் படுத்தப் பட்டார்கள் என்றும், இதுபோன்ற சாதி, மதவாதச் சிந்தனைகளும் நடைமுறைகளும் ஐஐடி வளாகத்தில் இருந்தன என்பதை அறிவோம்.
இன்றும் அதே போக்குதான் தொடர்கிறது என்பதற்குப் பாத்திமா லத்தீப் சான்றாக இருக்கிறார்.
இவரின் அம்மா பேசும்பொழுது வட இந்தியாவில் படிப்பதற்கு வாய்ப்பு இருந்தும்கூட அங்கு அனுப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை. காரணம் அங்கு மதவாதம் தலைதூக்கி ஆடுகிறது. என் மகள் முஸ்லீம் என்பதால் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலை இல்லை என்பதனால், பாதுகாப்பாக இருப்பாள் என் மகள் என்று சென்னை ஐஐடிக்கு அனுப்பி வைத்தோம். இப்பொழுது பிணமாக இருக்கிறாள் என்று சொன்ன செய்தி சிந்திக்கத்தக்கது.
பாத்திமா லத்தீப் தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். சுதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் கொடுத்த மனஉளைச்சலினால் தற்கொலை செய்து கொள்வதாக தன் மரண வாக்குமூலமாகத் தந்திருக்கிறார் பாத்திமா.
அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற பார்வையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை மாணவர்களிடமும் திணிக்கும் வேலையை பாஜக செய்து கொண்டிருக்கிறது. இது ஆபத்தானது.