கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடக்கின்ற மோதல் என்று பத்திரிக்கைகள் இதனை தவறாக எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சார்ந்த இந்துத்துவ சக்திகள் இஸ்லாமியர்களைக் கொல்வதற்காக எடுத்திருக்கும் கலவரத் திட்டம்.

அமைதியாக நடந்து கொண்டிருக்கும் சிஏஏ போராட்டத்தால், உலகமெங்கும் இந்தியாவின் மானம் காற்றில் பறக்கிறதே - பாஜகவின் பயங்கரவாதச் செயல் உலகம் முழுவதும் தெரிகிறதே - டெல்லியின் ஷாஹின்பாக்கின் முழக்கம் இந்தியாமெங்கும் ஷாஹின்பாக்குகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறதே என்கிற வெறுப்பில் - சமீபத்தில் நடந்த தேர்தலில் தோற்றுப் போன அவமானத்திற்குப் பழிவாங்குவதற்காக - இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்யும் நோக்கில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் இணைந்து நடத்துகிற பயங்கரவாதச் செயல் இது.

delhi attack on muslimபாஜக உறுப்பினர் கபில் மிஸ்ரா, "மவ்ஜ் புர் சவுக் பகுதியில் 24ம் தேதி மாலை 3 மணிக்கு கூடுங்கள். போராட்டக்காரர்களை நாம் எதிர்க்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் கூடுங்கள். ஜாபர் பேட் பகுதியில் போராடும் மக்களுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்" என்று இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவே அழைப்பு கொடுத்திருந்தார் அவரது ட்வீட்டில்.

இவரின் இந்துத்துவ தீவிரவாதிகள், "நாங்கள் கண்டிப்பாக வந்து இஸ்லாமியர்களைத் தாக்குவோம்" என்று கமெண்ட் கொடுத்திருக்கின்றார்கள்.

கலவரக்காரர்கள் பெரும்பாலும் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் கிடையாது. பின்னால் அடையாளங் காணப்படுவோம் என்று உணர்ந்து லோக்கல் இந்துத்வாக்கள், இந்துக்களின் கடைகளையும், வீடுகளையும் குறிபார்த்து காவிக் கொடியை வைத்து விட்டுச் செல்வதே அவர்களின் முதற்கட்ட பணி.

அதன் பின்னர் இறக்கி விடப்பட்ட மற்ற பகுதிகளைச் சார்ந்த இந்துத்துவ தீவிரவாதிகள் அந்தந்த கடைகளை, வீடுகளை குறிபார்த்துத் தாக்குவது என்று திட்டமிட்டு களமிறங்கி இருக்கிறார்கள்.

சிஎன்என் ஷாஹிலின் தகவலின்படி "கலவரக்காரர்களை தங்கள் பகுதிகளில் இதற்கு முன்னர் எவரும் பார்த்ததில்லை" என்றும் - "அவர்கள் எந்த ஏரியா என்றே தெரியவில்லை" என்றும் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் படி பார்க்கும்போது வெளிப்பகுதியில் இருந்து ஆட்களை இறக்கி கலவரம் செய்துவிட்டு தப்பி ஓடுதலே இவர்களின் பயங்கரவாதத் தந்திரம்.

அவ்வளவு பெரிய மசூதியின் மினராவில் ஏறி எல்லாரும் தெரியும்படியாக சேதப்படுத்துபவன் அந்த ஏரியா ஆளாக இருந்தால் அனைவருக்கும் அடையாளம் தெரிந்து விடாதா என்ன?

கலவரங்களை ஏற்படுத்திவிட்டு எங்கேயாவது ஓடிவிட்டு, பின்னர் அடையாளம் தெரியாத நபர்கள் என்று அவர்களைத் தப்பிக்க வைத்து விடலாம் என்று ஆளும் பாஜக - ஆட்டி வைக்கும் ஆர்எஸ்எஸ் - காவல் துறை என்று எல்லாரும் சேர்ந்து திட்டமிட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தும் இனப்படுகொலை இது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளர் சாக்‌ஷி சந்த் மற்றும் குழுவினர் தங்களது நேரடி அனுபவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

"நெற்றியில் திலகமிட்டிருந்த சில இளைஞர்கள் கூட்டம் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தைத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் கபீர் நகர் சாலையின் ஒரு பக்கத்தில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்கள் இருந்ததைப் போலவே, சாலையின் எதிர்ப்பக்கத்தில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களும் (இந்துத்துவ தீவிரவாதிகள்) இருந்தனர். 

இடையிலிருந்த ஒரு சிறிய மேம்பாலத்தில் காவலர்கள் நின்று தடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு செல்ல முயன்ற ஊடகச் செய்தியாளர்கள் 'கல் எறியப்பட்டுக் கொண்டிருக்கிறது, வராதீர்கள்' என்று தடுக்கப்பட்டனர். கல் எறிபவர்கள் தலையில் கவசங்கள் அணிந்திருந்தனர்.

கபீர் நகர் பகுதியிலிருந்து வந்த ஒருவரை அவரது மத அடையாளம் கேட்டு (வேட்டியை அவிழ்த்துப் பார்த்து) முஸ்லிம் எனத் தெரிந்து அடித்துக் கொண்டிருந்தனர்.

அடிபட்டு முகத்தில் இரத்தம் வழிய வழிய ஒருவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு போனார்கள்.

அதே இடத்தில் ஒரு பேக்கரியின் பெயர்ப் பலகையை ஒருவர் உடைக்க சுற்றி நின்று இந்துத்துவ பயங்கவரவாதிகள் கைதட்டி மகிழ்ந்தனர்."

என்று எப்படி இந்துத்துவ தீவிரவாதிகள் கலவரத்தைத் திட்டமிட்டு ஒரு ஆர்மியைப் போல நடத்துவதை விவரித்தார்கள்.

தனது குழந்தையை அழைத்து வரச் சென்ற ரூபினா என்கிற 3 மாத கர்ப்பிணியான இஸ்லாமியப் பெண், இந்துத்துவ தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாளர்களான போலிஸார்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியும் இந்துத்துவ தீவிரவாதிகள் அந்தப் பெண் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. அந்தப் பெண் அடி தாங்காமல் மயங்கி விழுந்த பிறகுதான் இந்த மிருகங்கள் விலகி இருக்கின்றார்கள்.

இது குஜராத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் சூலாயுதத்தால் குத்திக் கிழித்து எடுத்ததற்கு அடுத்த கட்ட சம்பவம். 

rss man on masjidநிச்சயமாக இது இனவெறுப்பின்பால் நடந்த பயங்கரவாதம்.

பள்ளிவாசல் மினராவில் ஏறி அனுமன் கொடி ஏற்றுவதும், தர்காவுக்குள் குண்டு வீசுவதும், காவலர்களை சுடுவதும், வேட்டியை அவிழ்த்துப் பார்த்து கையில் கிடைத்த இஸ்லாமியர்களை அடித்துக் கொல்வதும் என இஸ்லாமியர்களின் பிணக் குவியலில் இந்துத்துவாக்கள் தங்களது கடவுளை உருவாக்குவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பிணக்குவியலின் மேல், சாபங்களின் மேல் எழும் அந்தக் கடவுள் சாத்தானாக மாறிக் கொண்டிருக்கின்றான்.

அகிம்சைக்கு இவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்பதை சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அவர்கள் சிதைப்பதெல்லாம் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

- ரசிகவ் ஞானியார்