‘அய்.அய்.டி.’ உயர்கல்வி நிறுவனங்கள் ‘ஆரியப் பெருமை’களைப் பறைசாற்றும் அமைப்புகளாக வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றன. மக்கள் வரிப் பணத்தில் பெரும் பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களின் நோக்கமே இது தானா? ‘ஆரியர் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள்’ என்றும், சமஸ்கிருதத்தில் பொதிந்து கிடக்கும் இரகசியங்களை வெளிக் கொணர வேண்டும் என்றும், இந்திய சிந்தனையின் அடிப்படை யிலான அறிவுக் கட்டமைப்பை மீண்டும் புதுப்பித்துப் பரப்ப வேண்டும் என்றும், கோரக்பூர் அய்.அய்.டி. நிறுவனம் ‘காலண்டர்’ வழியாக ஆரியக் கொள்கைப் பரப்புரையில் இறங்கியிருக்கிறது. கோரக்பூர் அய்.அய்.டி. இயக்குனர் - ஒன்றிய நிதியமைச்சரின் முதன்மை ஆலோசகர், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைவர் இணைந்து அந்தக் காலண்டரை உருவாக்கி இருக்கிறார்களாம்.
ஆதாரங்களாக இதில் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துகள் ‘தரம் தாழ்ந்த சிந்தனைகள்’ என்று பல ஆய்வாளர்கள் மானுடவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“ஆரியர்கள் தான். பாரத தேசத்தின் பூர்வீகக் குடிகள், அவர்களுக்கு தொடக்கம் என்ற ஒன்றே கிடையாது. ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் மிலேச்சர்கள்” என்பதுதான். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கரின் கருத்து. ‘இந்திய’ நாகரிக வரலாற்றின் அடிப்படை வேதப் பண்பாடு அல்ல; திராவிட நாகரிகமே என்று முதன் முதலாக 1922இல் சர். ஜான் மார்ஷல் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் நடைபெற்ற அகழ்வாய்வு குழு தான் ஹரப்பா, மொகஞ்சாதாரோ உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து அறிவித்தது. அதற்கு முன்பு - “இந்தியாவின்” தொன்மையான பண்பாடு குறித்த எந்த விவாதமும் ஆய்வும் நடைபெற்றதில்லை.
மொழியின் அடிப்படையில் ஆய்வு செய்த அஸ்கோ பார்பொலா எனும் பின்லாந்துக்காரர் சிந்துவெளியில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முத்திரைகளை ஆய்வு செய்தார். ‘சிந்துவெளி எழுத்தை கட்டுடைத்தல்’ எனும் ஆய்வு நூலை எழுதினார். உரிய ஆதாரங்களோடு ‘இந்திய’ நாகரிகம் - திராவிட நாகரிகமே; அவர்கள் பேசிய மொழி திராவிடம் என்பதை நிலை நாட்டினார். 2010இல் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இதே கருதத்தை ஆய்வுரையாக முன் வைத்தார். அந்த மாநாட்டில் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் தொல்லியல் ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன். அவரும் இதே கருத்தைக் கொண்டவர். 1977லேயே மொழி எழுத்தியல் அடிப்படையில் ஆய்வு செய்த ‘சிந்துவெளி எழுத்து’ எனும் நூலை எழுதியதோடு 40க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் முன் வைத்தார் அய்ராவதம் மகாதேவன். சிந்துவெளி நாகரிகத்தோடு தென்னாட்டு திராவிட நாகரிகம் இணைந்து நிற்கும் புள்ளிகளையும் அவர் அடையாளப்படுத்தினார். திராவிட நாகரிகத் தொட்டிலான சிந்துவெளியில் ஒரு மனிதன் காளைகளின் கொம்பைப் பிடித்து அடக்கும் முத்திரைகள் இடம் பெற்றிருப்பதை அவர் எடுத்துக் காட்டினார்.
தொல்லியல், மொழி, எழுத்து அடிப்படையில் ‘இந்திய’ நாகரிகம், திராவிட நாகரிகமே என்று உறுதிப்படுத்திய நிலையில் இறுதியாக வந்த ‘மரபணு’ ஆய்வு இதை மேலும் உறுதிப்படுத்தியது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மரபணு ஆய்வாளர் டேவிட் ரெய்ச்சி 2018 மார்ச் மாதம் வெளியிட்ட ஆய்வின் முடிவுகளுக்கு இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். சமஸ்கிருதத்தின் தொன்மை வடிவத்தோடு குதிரைகளோடு இங்கே குடிபெயர்ந்து வந்தவர்கள் தான் ஆரியர்கள் என்ற ஆய்வு உறுதிப்படுத்தியது. ‘மரபணு’ வழியாக இது நிரூபிக்கப்பட்டது. அண்மைக்காலம் வரை தாய் வழியாக மகளிடம் கடத்தப்படும் உயிர் அணுக்கள் அடிப்படையிலேயே ஆய்வுகள் நடந்தன. இந்த ஆய்வுகள் ஒரு செய்தியை மட்டும் உரத்துக் கூறிக் கொண்டிருந்தன. 12,500 ஆண்டுகளாக, வெளியிலிருந்து எந்த மரபுஅணு சேர்க்கையும் நடைபெற வில்லை என்பதே அந்த செய்தி. இப்போது நடந்துள்ள புதிய ஆய்வுகள் ‘இந்தியா’வின் ஆண்கள் வழி பரம்பரை மரபு அணுக்களை சோதனைக்கு உட்படுத்தின. அப்போது தான் குட்டு உடைந்தது. ஆண் மரபு அணுக்களில் வெளியிலிருந்து வந்த மரபு அணுக்கள் கலந்து விட்டன என்று கண்டறியப்பட்டு விட்டது. இந்த உண்மை ஆரியர்களே இம்மண்ணின் மக்கள். அவர்கள் குடியேறியவர்கள் அல்ல என்ற வாதத்தை தகர்த்து எறிந்துவிட்டன.
ஆரியர்கள் ஊடுறுவியவர்கள் என்ற உண்மையை பார்ப்பனப் பண்டிதரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனே இவ்வாறு கூறுகிறார். “இந்தியாவின் அன்றைய பூர்வீகக் குடிகளுக்கும் ஆரியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையும் ஆரியப் பண்பாட்டின் ஊடுறுவலையும் இராமாயணம் பேசுகிறது.”
- ஆரியர்கள் வந்தேறிகள் என்பதற்கு இப்படி ஏராளமாகப் பட்டியலிட முடியும். நாம் குருதி அடிப்படையில் ‘இனவாதம்’ பேசுகிறவர்கள்கள் அல்ல; ஆரிய - திராவிட இரத்தக் கலப்பு ஏற்பட்டிருப்பது உண்மை என்று கூறும் பெரியார் இதற்குப் பிறகு ஏன் பண்பாட்டுக் கலப்பை மறுக்கிறார்கள். தாங்களே உயர் பிறவிக்காரர்கள் என்று கூறிக் கொண்டு பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’கள் என்று இழிவுபடுத்தி அவர்களின் சுயமரியாதையை வாழ்வுரிமையை மறுக்கிறார்கள்? இது தான் பெரியாரும் பெரியார் இயக்கமும் இன்றைக்கும் கேட்கும் கேள்வி!
இப்போதும் ஆரியர்களே இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று அறிவுத் துறையில் உயர்ந்தவர்களாக கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களே ஏன் ஆணவத்தோடு பிறவிப் பெருமை பேச வேண்டும்? - இது ஆரிய நாடு என்று நிலைநாட்டத் துடிப்பது ஏன்? இதை எதிர்ப்பவர்களை மனித சமத்துவத் துக்காகப் போராடுகிறவர்களை ‘பிராமண துவேஷிகள்’, ‘வேத துவேஷிகள்’, ‘இந்து வெறுப்பாளர்கள்’ என்று தூற்றுகிறார்கள்.
இதுதான் ஆரிய நீதியா?
இனவெறி பேசும் இந்தக் காலண்டரை தீயிட்டுப் பொசுக்க வேண்டாமா?
- விடுதலை இராசேந்திரன்