ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி "மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும் என்றும், 8ஆம் வகுப்புக்கு மேல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்திருக்கிறார். சமஸ்கிருத மொழி வலிந்து திணிக்கப்பட்டால் வேற்றுமையில் ஒற்றுமை வெற்று முழக்கமாகவே இருக்கும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

Smriti Iraniஎனது தாய் மொழி குஜராத்தி என்றாலும் எனக்கு இந்தி தெரியாவிட்டால் என்ன நேர்ந்திருக்கும் என நினைத்து வியப்படைந்திருக்கிறேன், இந்தியை மறப்பது இந்தியாவுக்கு பெரிய இழப்பு ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி பேசியது, சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள முடியாமல் போனதற்காக நான் வெட்கப்படுகிறேன். சமஸ்கிருதம் படிக்காததால் அந்த மொழியை என்னால் பேச முடியவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதையும் புறம்தள்ளி விட முடியாது. 

மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ 2014 ஜூன்  தில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது "​இந்தி நமது ஆட்சி மொழியாகும். மேலும் நமது நாட்டின் தேசிய மொழியாகும்" என்று தெரிவித்தார். ​இந்தி இந்தியாவின் அலுவல் மொழி தானே தவிர அது தேசிய மொழி ​அல்ல என்பது கூட இவருக்கு தெரியவில்லை.

ஆசிரியர் தினத்தை இனி ‘குரு உத்சவ்’ என்று அழைக்க வேண்டுமென்று கூறியதற்கு "வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது பாஜக" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும், "தூங்கும் வேங்கையை இடறுவது போன்றது" என்று மதிமுக பொதுசெயலாளர்  வைகோவும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ​"​அறிவியல் தொழில்நுட்பத்துக்கு மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான்​"​ என்று பேசியது, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா.வில் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டு வர முயற்சிப்பதாக கூறிய கருத்து, மத்திய உள்துறை அமைச்சகமும், அரசும், அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி புரிந்து வரும் அலுவலர்கள் இனி​ ​இந்தியில் கையெழுத்து போட வேண்டும்என்றெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் சமஸ்கிருத மற்றும் இந்தி மொழியை திணிப்பதற்கு பொய்யையும் புரட்டையும் அள்ளி தெளித்தார்கள்.  

சமஸ்கிருதம் தமிழுக்கு செய்த நாசங்கள் கொஞ்சமா நஞ்சமா? தமிழில் இருந்த ஊர் பெயர்களை எல்லாம் சமஸ்கிருதமாக்கினார்கள். குடமூக்கு கும்பகோணம் ஆனது, திருச்சிற்றம்பலம் சிதம்பரம் ஆனது, திருமறைக்காடு வேதாரண்யம் ஆனது, திருமுதுகுன்றம்  விருத்தாசலம் ஆனது, புளியந்தோப்பு  திண்டிவனம் ஆனது,  குரங்காடுதுறை கபிஸ்தலம் ஆனதும் சமஸ்கிருதத்தினால்தானே? மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையை நீதிக்கட்சி வென்று எடுத்தது. இன்று வழக்கத்தில் இல்லாத இந்த செத்த மொழிக்கு சிங்காரம் செய்ய முயல்வது ஏன்?

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It