தேர்தலுக்குப் பின் கருத்து கணிப்புகள் (Exit Poll) என்ன சொல்கின்றன என்பதை 29-4-2026 மாலை தொலைக் காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பின. கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றன என்பதைவிட, அந்த கருத்துக் கணிப்புக்குள் ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது என்பது அப்போது புரிந்தது.

திமுகழகம் ஆட்சியை அமைக்கும், அதிமுக இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதைத் தெளிவாய்க் கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

குறிப்பாக 'அக்னி நியூஸ் சர்வீஸ்' கணிப்பின்படி திமுகழகம்-169, அதிமுக-64, தவெக- 01. இதில் தவெக 01 என்ற இடத்தில் இருந்த காரணத்தாலும், திமுகழகம் 169 என்ற இலக்கத்தில் முதலிடத்தைப் பெற்ற காரணத்தாலும் இந்த கணிப்பு ஏறத்தாழ அனைத்து ஊடகங்களாலும் புறம் ஒதுக்கப்பட்டு விட்டன. இரண்டாம் இடத்தில் எதிர்க்கட்சியாக வந்திருக்கும் அதிமுகவை ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இதற்குள் இருக்கும் அரசியல் என்ன?

அதிமுக பாஜகவின் பிடியில் சிக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் எதிர்கட்சியாக இனிஉருப்படியாகச் செயல்பட முடியாது என்பதல்ல, செயல்பட விடாமல் சிதைத்துவிடும், பாஜக. அதன்பிறகு அந்த இடத்தில் வைக்க ஓர் அடிமை தேவைப் படுகிறது பாஜகவுக்கு. அதுதான் தவெக. அது சவலைப் பிள்ளைதான் என்றாலும் ஆர்எஸ்எஸ்/பாஜகவின் அசைவின்படி தவெகவைத் தூக்கிப் பிடிக்க வேண்டும், பேசுபொருளாக்க வேண்டும், மக்கள் நினைவில் நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில், முடமாகிப்போன அந்தக் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசின ஊடகங்கள்.

'அக்சஸ் இந்தியா' நிறுவனம் திமுக, 92-110 என்றும், தவெக, 98-120 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கருத்து கூறியதை வைத்து விஜய் முதல்வராக ஆகிவிட்டதைப் போல ஒரு ஊடகம் ஊசிப் பட்டாசு கொளுத்தியதும் உண்டு.

அதாவது அதிமுகவைக் காலி செய்துவிட்டு, தவெகவை நெரிக்கப் பார்க்கிறது பாஜக, திமுகவிற்கு எதிராக.

தொடமுடியாத சூரியன், திமுக. தொட்டால் கருகும் தாமரை இலையோடு மட்டுமல்ல, விசிலோடும்தான்!

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.