மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள், 2026 தேர்தலில்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார், "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு", ஏற்றுக்கொள்வோம்.

dmk symbolஇந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடு படித்தவர்கள் மிக்க மாநிலம் தமிழ்நாடு. பகுத்தறிவாளர், சுயமரியாதை உடையோர் மிகுந்த மாநிலம். தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வழியில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றியவர் நம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். கொளத்தூர் தொகுதியில் அவர் தோற்கடிக்கப் பட்டார் என்பது வியப்பான, வேதனையான செய்தி.

மாற்றம் வேண்டும் என்பது சரிதான். அது வெளிச்சத்தைத் தராமல் இருட்டுக்குள் தள்ளுமானால் அதற்குப் பெயர் மாற்றம் இல்லை. அதிலும் சினிமாவால் சீரழியும் மாற்றம் மிகவும் அபாயகரமானது. அது இன்று நடந்திருக்கிறது.

முதல் தடவையாக வாக்களித்திருக்கும் இளைஞர்கள் கூட்டமும், சினிமா என்ற மாய பிம்பத்தில் வீழ்ந்திருக்கும் இளைஞர்கள் கூட்டமும்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்று சொல்வதைப் பார்க்கிறோம். இதை முற்றிலும் ஒதுக்கிவிடவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. இதற்குப் பின்னணியில் ஓர் அரசியல் இருப்பதாகத் தெரிகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாள் டில்லியில் இருந்து தமிழ்நாடு வந்த பாஜகவின் பியூஸ் கோயல், "நாளை ஆட்சிமாற்றம் ஏற்படும். நாம் ஒரு வசதியான பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்போம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால் கூட, நான் டெல்லியிலிருந்து இவ்வளவு தொலைவு வந்திருக்க மாட்டேன்" என்று பேசியிருக்கிறார். அப்படியானால் ஆட்சிமாற்றம் நடக்கும் என்பது துல்லியமாக அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதுகுறித்துத்துத்தமிழ்நாட்டிற்கு வந்த பியூஸ் கோயல் "ஆட்சி அமைப்போம்" என்று கூறியதன் பின்னணி என்ன? நாற்காலியில் விஜய், அதிகாரத்தில் யார்?

 அஸ்ஸாம், மேற்குவங்கம், புதுச்சேரி மாநிலங்கள் பாஜகவிடம் போய்விட்டன. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி என்றாலும் அக்கட்சியும் பாஜகவின் இன்னொரு அடையாளம்தான். எஞ்சியிருப்பது தமிழ்நாடு ஒன்றுதான்.

தமிழ்நாட்டிற்குள் ஆர்எஸ்எஸ்/பாஜக நுழைய முடியாது என்பது பாஜகவுக்கு நன்கு தெரியும். எடப்பாடியை பலவீனப்படுத்தி ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்ட பாஜகவுக்கு இப்போது ஒரு கைப்பாவை தேவைப்பட்டது தமிழ்நாட்டில். சிக்கினார் விஜய் பாஜகவிடம்.

கரூர் 41 பேர் மரணம் குறித்த சிபிஐ வழக்கில் தமிழ்நாடு காவல்துறை போட்ட FIR ஐ அது வாங்கிக் கொண்டது என்றாலும் இதுவரை 'சார்ஜ்சீட்' போடவில்லை. 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிடுவதில் தகிடுதத்தம். வருமானவரி வழக்கு என்பதும் இதில் அடங்கும்.

ஆர்எஸ்எஸ் இன் முக்கிய புள்ளிகளான குருமூர்த்தி, வேம்பு, ரங்கராஜ் பாண்டே, நிர்மல்குமார், சோதிடர் ராதன் பண்டிட் போன்றோர் தவெகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால் தவெகவின் நூல் யாரிடம் இருக்கிறது என்பது புரிகிறது.

இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மோசடி செய்யப் படுகின்றது என்று 2009ஆம் ஆண்டே குற்றம் சாட்டியவர் பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி.

1982 இல் முதன்முதலில் கேரளாவில் சோதனை செய்யப்பட்ட போதே, இயந்திரத்தில் கோளாறு இருந்ததாகக் கூறி காகித வாக்குச் சீட்டுக்கு மாற்றப்பட்டது. அது அரசியல் ரீதியான விமர்சனமாக 2009ஆம் ஆண்டிற்குப் பிறகே வலுப்பெற்றது. இதுவரையும் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது குறைகளைச் சொல்லி வருகிறார்கள்.

இப்படி அனைத்தையும் கணக்கிட்டுப் பார்க்கும்போது விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக்கப்பட்டதும், முதல்வர் நாற்காலி யார் பிடியில் இருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் தேர்தலைத் தமிழ்நாட்டு மக்களை விட, வாக்கு இயந்திரங்களே பெரிதும் தீர்மானித்து இருக்கிறது என்பதை நம்பலாம் அல்லவா?

தெளிவாகச் சொல்லலாம், திமுகழகம், தலைவர் ஸ்டாலின் தோல்விக்குக் காரணம் மக்கள் இல்லை. "மக்களே போல்வர் கயவர்" என்கிறார் பெரும் புலவர் திருவள்ளுவர்!

- எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.