ஜனநாயகத் திருவிழா எனப்படுகிற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் (2026) நடந்து முடிந்திருக்கிறது.

திராவிடமாடல் ஆட்சியின் இரண்டாம் கட்டம் தொடங்குவதற்கான ஒப்புதலை ஏறக்குறைய 50 விழுக்காட்டிற்கும் மேலான வாக்காளர்கள் வழங்கியிருப்பது, மே நான்காம் தேதி காலையில் உறுதியாகிவிடும்.

2021 ஆம் ஆண்டு திமுகழக ஆட்சி அமைந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த ஆட்சிக்கு திராவிடமாடல் என்று பெயர் சூட்டுவார் என்பதோ, சுயமரியாதை - சமத்துவம் - சமூகநீதி ஆகிய கோட்பாடுகளைத் தனது ஆட்சியின் அடையாளமென அவர் குறிப்பிட்டுச் சொல்வார் என்பதோ, ஒன்றியம் என்கிற சொல்லாடலை வைத்து பாஜகவின் ஏக இந்திய அரசியலுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவார் என்பதோ யாருமே நினைத்துக்கூடப் பார்க்காதது.

அந்தவகையில், அமையவிருக்கிற திராவிடமாடல் 2.0 முன்னைவிட வேகமாகவே இருக்கும் என்பதில் அய்யமில்லை. எனவே, அடுத்த அய்ந்தாண்டுகள் திமுகழகத்தின் செயல்பாடுகளுக்குச் சமூகதளத்தில் வலிமை சேர்ப்பதற்கும், திமுக எதிர்ப்பு என்ற பெயரில் இனப்பகைவர்களால் வடிவமைக்கப்படுகிற சூழ்ச்சியான வேலைத் திட்டங்களையும், தமிழ்நாட்டு இளைஞர்கள் - மாணவர்களிடமும் அம்பலப்படுத்தி அவர்களை அணிதிரட்டும் பணியை நாம் செய்தாக வேண்டும்.

இன்றைக்கு உயர்கல்வி படித்தவர்களாக, உயர்பதவி வகிப்பவர்களாக இருக்கிறோமே! நம்முடைய முந்தைய தலைமுறை கல்வி மறுக்கப்பட்ட கைநாட்டுகளாக, உழைப்புச் சுரண்டப்பட்டவர்களாக, தோளில் போடுகிற துண்டைக்கூட கக்கத்திலும், இடுப்பிலும் கட்டிக்கொண்டு கூனிக்குறுகி அடிமைகளாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர் என்கிற கொடுமையை, அதிலிருந்து மீண்டு நாம் இன்றைய நிலையை அடைவதற்கு ஒரு கொள்கையும், கொள்கை காத்த இயக்கமும், தலைவர்களும் தொண்டாற்றி இருக்கிறார்கள் என்கிற வரலாற்றையும் நாம்தான் கற்றுத்தர வேண்டும்.

நமது இன்றைய வாழ்க்கையைப் பறித்து, நமது சந்ததிகளை மீண்டும் அடிமைகளாக்கி மேலாதிக்கம் செய்திடவே பிரிவினைகள் தூண்டப்படுகின்றன. புதிது புதிதாக அரிதாரம் பூசப்பட்ட தலைவர்கள் அடையாளம் காட்டப் படுகிறார்கள். இதன்மூலம் நமது கைகளை எடுத்தே நமது கண்களைக் குருடாக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம் என்பதை எடுத்துச் சொல்லி நமது பிள்ளைகளை எச்சரிக்கை செய்தாக வேண்டும்.

சுருக்கமாக சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி குறித்தும், அதில் பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் உள்ள பங்கு குறித்தும் கற்றுத்தர வேண்டும். இதை இன்றைய சமூகச் சூழலுக்கும், நம் பிள்ளைகள் வளர்ந்திருக்கிற அறிவியல் தொழில் நுட்பக் காலத்திற்கும் ஏற்ற வகையில் வடிவமைத்துச் செயல்படுத்துவது குறித்து நாம் சிந்தித்தாக வேண்டும்.

இதுதான் இப்போதைய நம்முடைய இரண்டாம் பாக அரசியலின் பெருங்கடமை ஆகும்!

- காசு. நாகராசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.