vijay in assemblyபேரறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியபின் 1968 ஆம் ஆண்டு சட்டமன்ற அவை நடவடிக்கையில் கலந்து கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டி.என்.அனந்தநாயகி அவர்கள் அண்ணாவைப் பார்த்துக் கேட்டார், "நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறீர்கள். அதற்கான செலவு எவ்வளவு? அது உங்கள் சொந்தப் பணமா? அரசுப் பணமா? அல்லது உங்கள் கட்சிப் பணமா?" "நாளை இந்த அவையில் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு அண்ணா போய்விடுகிறார்.

மறுநாள் பேரவையில் அனந்தநாயகி மீண்டும் அண்ணாவின் சிகிச்சைப் பணம் குறித்து கேள்வியை எழுப்புகிறார்.

அப்போது அறிஞர் அண்ணா, " என் சிகிச்சைக்கான செலவுத்தொகை ஒரு லட்சத்து இருபத்து ஐயாயிரம் ரூபாய். அந்தப் பணம் அரசின் செலவல்ல. கட்சியும் கொடுக்கவில்லை. எனக்காகச் செலவு செய்தவர் என் தம்பி எம்.ஜி.ஆர்தான். நேற்று அவர் இந்த அவைக்கு வரவில்லை. அதனால் நான் பதில் சொல்லவில்லை. இன்று வந்திருக்கிறார், அவர் முன்னால் சொல்லிவிட்டேன்" என்றார். இதுதான் அவை மரபு, நாகரிகம், ஒழுக்கம், பண்பாடு.

சில நாள்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, அவையில் இல்லாத அவரை 'எங்கே அப்பாவைக் காணோம்' என்று ஒரு சைகையும், தலைவர் ஸ்டாலின் அவர்கள் முந்தைய தேர்தல் பிரச்சாரத்தின்போது தற்செயலாகக் காட்டிய சைகையை அவையில் கேலியாகக் காட்டியும் முதல்வர் விஜய், தன்னை ஒரு நடிகனாகவே காட்டி அசிங்கப்பட்டுப் போனார்.

அமைச்சர் நிர்மல்குமார் சொல்கிறார், ஆளுநர் என்பவர் ஒரு 'மேனேஜர்' தான் என்று. இல்லையில்லை... மத்திய, மாநில வளர்ச்சிக்கு இணைப்பாக இருப்பவர் ஆளுநர். குடியரசுத் தலைவருக்கு இணையாக மாநிலத்தில் இருப்பவர் ஆளுநர் என்று, நிர்மல்குமாரை மறுத்துப் பேசுகிறார் செங்கோட்டையன். இவர் ஆர்.என்.ரவியை ஏற்கிறாரா ?. இருவரும் தவெக அமைச்சர்கள்தான்.

எல்லாம் சரி, இவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்னென்னத் திட்டம் வகுத்திருக்கிறார்கள்? எப்படி முடிவெடுக்கப் போகிறார்கள்? எப்படி நடைமுறைப் படுத்த இருக்கிறார்கள்? மக்களைக் குறித்து முதல்வர் விஜய் எதுவும் பேசுவதில்லையே! ஏன்?

வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்பது போல, பேசுகிறேன் என்று எழுதிக் கொடுத்துள்ள பேப்பரை வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல ஓங்கி ஓங்கிப் பேசுவார் எப்போதாவது சட்டமன்றத்தில். மற்றபடி அவர் பேசாமடந்தையாகத்தான் இருப்பார்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.